Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30

யிர், மனம், உடல் ஆகிய மூன்றையும் புரிந்துகொள்வோருக்கு, துன்பம் இருப்பது இல்லை. இந்த மூன்றையும் அறிதல்தான், ‘தன்னை அறிதல்’ எனப்படுகிறது. `உடல்' எனும் எளிய பாடத்தைப் படித்துவிட்டால், மனதுக்குள் நுழைவது மிக எளிதாகிறது. மனதின் இயக்கத்தை உணர்ந்துவிட்டால், உயிரின் இயல்புகள் தெளிவாகப் புரிகின்றன. உடலைப் புரிந்துகொள்ளுதல் என்பது, மருத்துவக் கொள்கை அல்ல; அதுதான் இறையியலின் அடிப்படை. எவர் எல்லாம் உடல்களைப் பற்றிய மெய்யறிவைப் பெறுகிறார்களோ, அவர் எல்லாம் இறைநிலையை எட்டுகிறார்கள். இதனால்தான், அகத்தியர் முதல் வள்ளலார் வரை வந்த சித்தர்களும் இறையியலாளர்களும் மருத்துவர்களாகவும் இருந்தனர்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30

உடலின் இயக்கங்களையும் நுணுக்கங்களையும் புரிந்துகொள்ளும்போதெல்லாம், பிரபஞ்சத்தின் குணம் தெளிவாகிறது. ஏனெனில், ஆசான் திருமூலர் உரைத்தவாறு, அண்டம்தான் பிண்டம்.

அண்டத்துக்கும் பிண்டத்துக்குமான உறவுச்சங்கிலிகள் பல. அவற்றுள் முதன்மையானது என நான் கருதுவது, கல்லீரல். மனதின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் உறுப்புகளில் கல்லீரல் ஈடுஇணையற்றது. மூளை, நரம்புக் கோளாறுகளுக்கும் கல்லீரல் பாதிப்புக்குமான உறவை நவீன மருத்துவமும் விளக்கிக்கொண்டுதான் உள்ளது.

அண்டத்துக்கும் உடலுக்குமான உறவை எளிதில் புரிந்துகொள்வதற்கு, ஓர் ஒப்புமையை முன்வைக்கிறேன். உள்ளுறுப்புகளுக்கும் புற உறுப்புகளுக்குமான உறவைப் பாருங்கள். நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், மண்ணீரல் ஆகிய ஐந்து உள்ளுறுப்புகளின் பிம்பங்கள், மனித முகத்தில் அமைந்துள்ளன.

உள்ளுறுப்புகளுக்கும் அவற்றுக்கான புற உறுப்புகளுக்கும் பிரிக்க இயலாத உறவுகள் உள்ளன. உதடுகளில் வண்ணம் மாறத் தொடங்கினால், மண்ணீரலில் சீர்கேடு உள்ளது எனப் பொருள். கல்லீரலில் பாதிப்பு உருவானால், அது கண்களில் தெரியும்... பார்வைத்திறனில் குறை ஏற்படும். நுரையீரல் சிக்கல்கள் நாசியில் வெளிப்படும். சிறுநீரகத் தொல்லைகள் செவிகளின் வழியாக வெளிப்படும்.

உள்ளுறுப்புகளை அண்டம் எனக் கொண்டால், புற உறுப்புகள் யாவும் பிண்டங்கள். உள்ளுறுப்புகளின் இயக்கங்களை நம்மால் காண இயலவில்லை. ஆனால், அவற்றின் தன்மைகளை புற உறுப்புகளால் அறிந்து கொள்ளலாம். ஐம்பூதக் கொள்கையின் வழியே கூறுவதானால், நுரையீரல் – காற்று, இதயம் – வெப்பம், கல்லீரல் – வெளி (ஆகாயம்), சிறுநீரகங்கள் – நீர், மண்ணீரல் – நிலம். இந்த ஐம்பூத உறவை அக்குபஞ்சர் பாடங்கள் இப்போது பதிவு செய்துள்ளன. நான் முன்வைக்கும் மரபுக் கொள்கைகளுக்கும் அக்குபஞ்சருக்கும் பல வேறுபாடுகள் உண்டு. ஆனாலும், இவ்வாறான மருத்துவச் சிந்தனையை வளர்ப்பதில் அந்தத் துறையினர் ஆற்றும் செயல் மதிக்கத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30

கல்லீரலுக்கும் ஆகாயத்துக்குமான உறவு இறுக்கமானது. எவர் எல்லாம் மனதின் வழியான சிந்தனைகளில் ஆழ்கிறார்களோ, அவர் எல்லாம் கல்லீரல் செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. இசை, ஓவியம், நடனம் உள்ளிட்ட பிற கலைகள் அனைத்திலும் ஈடுபடுவோர் தம்மையும் அறியாது, கல்லீரல் இயக்கத்தைப் பெருமளவு சார்ந்துள்ளனர். தெளிந்த சிந்தனைகொண்டோரின் கண்களில் அழகும் மிடுக்கும் தெரிகின்றன. கண்கள்தான் ஒரு மனிதரின் சிந்தனைப்போக்கை வெளிப்படுத்து கின்றன. கண்களைப் பார்த்துப் பேசுதல் மிக முக்கியமானது. ஏனெனில், கண்களுக்கு பொய் தெரியாது. மனம் நினைப்பதை உதடுகள் மாற்றலாம்; கண்களால் மாற்றவே முடியாது. கல்லீரலின் வெளிப்புறமாக விளங்கும் கண்கள் மனதுக்கான முதல் உறவுக் கொடியாகவும் இருக்கின்றன. கல்லீரலுடன் இணைந்துள்ள பித்தப்பை சுரக்கும் பித்தம் எனும் நீர்மம், செரிமானத்துக்கானது மட்டும் அல்ல, சிந்தனைத் திறனுக்குமானது. சிந்தனை வயப்படும் பணிகளில் ஈடுபடுவோர், பித்தச் சுரப்பியைத் தூண்டும் வகையில் நடந்துகொள்கிறார்கள்; இரவு கண்விழிக்கிறார்கள்; அதிகமாக டீ, காபி அருந்துகிறார்கள்; சில பழக்கங்களுக்கு ஆட்படுகிறார்கள். இவ்வாறானோர் பலர், வறுத்த கடலையைக் கொறிப்பதை விரும்புகிறார்கள். இந்தப் பழக்கங்கள் யாவும் பித்தத்தை அதிகரிக்கச் செய்பவை.

பித்தம் கூடுதலாகச் சுரக்காமல், வெளியே (ஆகாயத்தில்) பறந்து சிந்திக்க இயலாது. தர்க்கபூர்வமான செயல்களுக்கு பித்தம் அதிகரிக்கத் தேவை இல்லை. ஆனால், தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளுக்குப் பித்தமே மூலநீர். பித்தம் சுரக்க, வெப்பம் தேவை. வெப்பத்தின் அளவு கூடினால், பித்தமும் கூடுகிறது. குளிர்ச்சி கூடினால், பித்தம் குறைகிறது.

புளிப்புச் சுவைகொண்ட பொருட்கள் பித்தத்தைத் தூண்டுகின்றன. சுவைகளில் புளிப்பு என்பது, நீரும் வெப்பமும் திரிந்த நிலையைக் குறிக்கும். புளியம்பழங்களைப் பாருங்கள், அவை பிஞ்சுகளாக இருக்கையில் கடும் புளிப்புடன் இருக்கின்றன. இந்த நிலையில், வெப்பமும் நீரும் கூடுதலாக உள்ளன. முற்றத் தொடங்கியதும் புளிப்புச் சுவை குறைகிறது. இப்போது காற்று மிகுந்து வெப்பம் குறைந்துள்ளது. பழுத்த புளியம்பழங்கள் இனிப்புச் சுவையையும் இணைத்துக்கொள்கின்றன. நீர்மிகுந்த பின்னர் உருவாகும் மாற்றம் இது. ஏனெனில், நீர் எனும் பூதம், இனிப்புச் சுவைக்கானது. நன்கு பழுத்த புளியம்பழங்களில் நீர், வெப்பம் ஆகியவை கூடுதலாகவும், பிரிக்கவியலாத வகையில் கலந்தும் உள்ளன.

இனிப்பான பழச்சாறுகள், நேரம் செல்லச் செல்ல புளிப்பானவையாகின்றன. இனிப்பாக இருக்கும் வரை அவற்றில் நீரின் குணம் கூடுதலாக இருக்கிறது. இந்த நீரோடு வெப்பம் கலக்கத் தொடங்கினால், அவை புளிப்பாக மாறுகின்றன. குளிர்சாதனப் பெட்டியில் பழச்சாறுகளை வைக்கும்போது, நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கின்றன. ஏனெனில், வெப்பம் செயல்படுவது தடுக்கப்படுகிறது. நீரும் வெப்பமும் கலக்கத் தொடங்கிவிட்டால், புளிப்புச் சுவை பிறந்துவிடும்.

உணவு அல்லது பானங்கள் வழியாக புளிப்புச் சுவை உடலுக்குள் செல்லும்போது, பித்தம் தூண்டப்படுகிறது. பித்தம் அதிகமாக இருப்போர் இதைப் புரிந்துகொள்வது நல்லது. புளிப்புச் சுவை கொண்ட உணவுகளைக் குறைவாகக்கொள்வது நல்லது. குறிப்பாக, பித்தம் கூடுதலாக இருக்கும் நிலையில், புளிப்புச் சுவைகொண்ட  உணவுகளைக் குறைப்பது மிகவும் தேவையானது.

எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் சாத்துக்குடிச் சாறு அருந்தும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. இந்தப் பழங்களில் உள்ள சில வகை வேதிச் சத்துக்களை முன்வைத்து பல செய்திகள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு எல்லாம், புளிப்புச் சுவை உடைய சாறுகளை மிகுதியாக உட்கொள்ளும் பழக்கம் உடலில் பித்தச்சுரப்பை உயர்த்தும். இதன் விளைவாக வேறு பல உடல் தொல்லைகளும் வந்து சேரும். நவீன உணவு மருத்துவக் கொள்கைகள் ஐம்பூதக் கொள்கையோடு துளியும் தொடர்பு இல்லாதவை. உணவுப் பொருட்களில் என்னென்ன வேதி, உயிர்வேதிப் பொருட்கள் (Chemical and Bio Chemical Ingredients) இருக்கின்றன என்பதுதான் நவீனத்தின் அடித்தளம். எந்த உணவில் எந்த பூதச் செயல்பாடு உள்ளது எனப் பார்த்து அணுகுவது, நம் மரபு உணவுக் கொள்கையின் அடித்தளம். இவை இரண்டும் வேறு வேறானவை.

வெப்பம், நீர் ஆகியவை திரிந்த நிலையில் உள்ள பொருள் என்பதால், புளியை உணவில் சேர்க்கும்போது எச்சரிக்கையும் கவனமும் தேவை. புளிக்கரைசல் எதற்குப் பயன்படுகிறது எனப் பாருங்கள். உணவு கெடாமல் இருப்பதற்காக, புளி கரைக்கப்படுகிறது. உணவு கெடுதல் என்றால், `உணவின் மீது நுண்ணுயிரிகள் உற்பத்தியாகி, அந்த உணவைச் சிதைத்துச் செரித்தல்’ எனப் பொருள். புளி சேர்க்கப்பட்ட உணவு கெடாமல் இருக்கிறது என்றால், அந்த உணவில் நுண்ணுயிரிகள் எளிதில் உருவாக முடியாது. இவ்வாறான உணவை நாம் உட்கொள்ளும்போது, வயிற்றுக்குள்ளேயும் இதேநிலைதான் நீடிக்கும். அதாவது, புளி சேர்க்கப்பட்ட உணவைச் செரிக்க இயலாமல், உடலின் செரிமான மண்டலம் திணறும்.

எந்த உணவில் உடனடியாக நுண்ணுயிரிக் கூட்டம் உருவாகிறதோ, அந்த உணவு மிக எளிதில் செரிக்கும். எது விரைவாகக் கெட்டுப்போகிறதோ, அதுவே சிறந்த செரிமானத்தன்மைகொண்ட உணவு.

உணவில் புளியை அதிகமாகச் சேர்ப்பதால், செரிமானக் கோளாறுகள் உருவாகின்றன. பித்தச்சுரப்பு, செயற்கையாகத் தூண்டப் படுகிறது. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை. புளியே கூடாது என்ற எல்லைக்குச் சென்றுவிடுவது தவறு. அதே வேளை, புளியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமான கருத்து.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30

கல்லீரலை அதிகமாக வெப்பமாக்குவதில், புளிப்புச் சுவைக்குப் பங்கு உண்டு. மதுபான வகைகள் அனைத்தும் புளிப்புச் சுவையின் அடிப்படையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. கல்லீரல் கூடுதலாக வெப்பம் அடைந்தால், பித்தத்தின் அடர்த்தியில் சிதைவு உருவாகும். பித்தம் சிதைந்தால், செரிமானம் சீர்கெடும். இதன் விளைவாக எந்த நோயும் உடலுக்குள் நுழையும் நிலை வரும். ஏனெனில், செரிமானம் என்பதுதான் நம் உடலின் பாதுகாப்பு அரண். அந்த அரணைச் சிதைக்கும் வகையில் எந்தச் செயலிலும் ஈடுபடாதிருப்பது நல்லது.

இனிப்பான பழங்கள் உடலின் நீரைப் பெருக்கும். புளிப்பான பழங்கள், உடல் வெப்பத்தை உயர்த்தி நீரைச் சுருக்கும். உடலின் தேவை அறிந்து இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வெயிலில் உழைப்போருக்கு, கரும்புச் சாறும் இளநீரும் ஊட்டம் அளிக்கும். பனிமூட்டம்மிக்க பகுதிகளில் குறைந்த அளவு புளிப்புச் சுவை கொண்ட பழங்கள் தேவையான வெப்ப ஆற்றல் தருபவை. சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்புச் சுவை கொண்ட பழங்கள் இவ்வாறான மென்குளிர் பகுதிகளில் நன்கு விளைகின்றன. நவீன சிந்தனைகளின் விளைவாக, இவற்றில் ஒட்டு வகைகளை உருவாக்கி, வெப்ப மண்டலங்களிலும் வளர்க்கப்படுகின்றன. இயற்கையாகப் படைக்கப்பட்ட உணவு வகைகளின் இயல்புகள், அந்தந்த நிலங்களுக்கு ஏற்றவையாக மட்டுமே இருக்கும் என்பதை மனதில்கொள்ளுங்கள்.

புளியமரங்கள், வெப்ப மண்டலங்களிலும் மென்குளிர் மலைகளிலும் இருக்கின்றன. இந்த இரு நிலங்களிலும் வாழும் உயிரினங்களுக்கு, புளி தேவையானது என்பது இதன் பொருள். அளவு அறிந்து உண்ணும்போது புளியும் உடலுக்கு மருந்தாகும்.

நோயுற்ற நிலையில் இருப்போர் புளிக்குப் பதிலாக தக்காளி சேர்த்துக்கொள்வது நல்லது. உடலுக்குப் புளிப்புச் சுவை தேவையானது. ஆனால், அந்தப் புளிப்புச் சுவையை எந்தப் பொருள் வழியாக அளிக்கிறோம் என்பதில் கவனம் தேவை.
சிந்தனைகளின் வழியாகப் பித்தத்தைத் தூண்டுவதும், கல்லீரல் வெப்பத்தை உயர்த்தும். ஆனால், சிந்தனைகளின் பிறப்பு இயல்பான வழியில் இருந்தால், பாதகம் இல்லை. செயற்கையான வழிமுறைகளைக் கையாண்டு சிந்தனையை ஆழப்படுத்துவதும், தூண்டுவதும் சிக்கல்களை இழுத்து வரும்.

இரவுகளில் இளைப்பாறிவிட்டு, அதிகாலை எழுந்து சிந்தனைச் செயல்களில் ஈடுபடுவது பொருத்தமான நடைமுறை. அதிகாலையில் வீசும் காற்று, வானில் இருந்து இறங்கும் இளவெப்பத்தையும் குளிரையும் ஒருங்கிணைத்திருக்கும். இந்தக் கலவை, மனதின் செயல்பாடுகளை மேம்படுத்தவல்லது. வெப்பத்தையும் குளிர்ச்சியையும் பிரிக்கவே இயலாத வகையில் அதிகாலை புலர்கிறது. இது, நிலத்தின் மீது இறங்கும் பித்தம்தான். இந்தப் பித்தத்தில் மூழ்குவோருக்கு வானில் இருந்து இறங்கும் சேதிகள் எளிதாகக் கிடைக்கின்றன. அதனால்தான் அதிகாலை விழிப்பும் குளியலும் கல்வியும் நம் மரபில் வலியுறுத்தப்பட்டன.

திருப்பாவையும் திருவெம்பாவையும், அதிகாலைக் கண்விழிப்பை முன்வைத்து பாடப்பட்டவை. அவற்றை இயற்றிய ஆண்டாளும் மாணிக்கவாசகரும் இறைநிலையை எட்டியோர். பித்தநீரில் நீந்தி அண்டத்தை அறிதலும் இறையை உணர்தலும் மனிதகுலத்துக்கு வழங்கப்பட்ட கொடை. இறைவனையே `பித்தன்’ என சுந்தரமூர்த்தி நாயனார் பாடினார் என்றால், அதில் உரிமைகொண்ட கோபமும் உள்ளது, அதைக் கடந்த அர்த்தமும் உள்ளது.

- திரும்புவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism