Published:Updated:

ஆசை - சிரிச்சா போச்சு!

ஆசை - சிரிச்சா போச்சு!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - சிரிச்சா போச்சு!

பரிசல் கிருஷ்ணா, படங்கள்: ப.சரவணகுமார்

ஆசை - சிரிச்சா போச்சு!

பரிசல் கிருஷ்ணா, படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
ஆசை - சிரிச்சா போச்சு!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - சிரிச்சா போச்சு!
ஆசை - சிரிச்சா போச்சு!

`நான் யாரையாவது போய்ப் பார்ப்பதைவிட, என்னை எல்லோரும் வந்து பார்ப்பது போன்ற ஆசை இது. ஆம்! வி.ஜி.பி பொழுதுபோக்குப் பூங்காவில் ஒரு மணி நேரமாவது சிலை மனிதனாக நிற்கவேண்டும்’ - இது சென்னை மண்ணடியில் இருந்து செண்பகராஜன் அனுப்பிய `ஆசை' மின்னஞ்​சல்.

ஆசை - சிரிச்சா போச்சு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செண்பகராஜனின் ஆசைக்காக வி.ஜி.பி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, உடனடியாக அனுமதி கிடைத்தது.

குடும்பத்துடன் சனிக்கிழமை காலை விகடன் அலுவலகம் வந்தார் செண்பகராஜன். ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில், 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிகிறார் செண்பகராஜன். மனைவி மகேஸ்வரி. மகன் வருண் சுந்தர், கணிப்பொறியியல் முடித்திருக்கிறார்.

செம உற்சாகத்தில் இருந்தார். “எத்தனை புக் இருந்தாலும் ஆனந்த விகடனைப் படிக்கிற மாதிரி வராது சார்” என்றவர், பையில் வைத்திருந்த ஒரு பெரிய பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தைக் காண்பித்தார். பழைய விகடன் பக்கங்கள் பைண்ட் செய்யப்பட்டு இருந்தன. ``இந்த மாதிரி ஆனந்த விகடன் பக்கங்கள் பலவற்றைச் சேர்த்து பைண்டிங் பண்ணி வெச்சிருக்கோம்” என்றார்.

``எங்​களுக்கும் வி.ஜி.பி-க்கும் ஏதோ பூர்வஜென்மத் தொடர்பு இருக்கும்போல சார்” என்றார் செண்பகராஜன்.

“ஆமாம் சார். என் மனைவி டி.வி., ரேடியோ, பத்திரிகைனு எதுல போட்டின்னாலும் உடனே எழுதிப் போட்டுடுவாங்க. அப்படி ரெண்டு தடவை வி.ஜி.பி-க்குப் போக பரிசு கிடைச்சிருக்கு. இப்ப இந்த ஆசையை எழுதிப் போட்டதும் உடனே நீங்க கூப்பிடுட்டீங்க” என்றார் மெல்லிய புன்னகையுடன்.


செண்பகராஜனின் ஆசையை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, வரவேற்கத் தயாராக இருந்தார் வி.ஜி.பி பொழுதுபோக்குப் பூங்காவின் மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ்குமார்.

தாஸ் என்பவர், பெரிய மீசையுடன் சிலை மனிதராக கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். பக்கத்தில் உள்ள அறையில் அடுத்த ஷிஃப்ட்டுக்கு சிலை மனிதராக மாறப்போகும் பாபு காத்திருந்தார். பாபு, அங்கு 32 வருடங்கள் சிலை மனிதராகப் பணிபுரிகிறார். இவர் கின்னஸ் சாதனையாளர்.

செண்பகராஜனை அறைக்குள் அழைத்துச் சென்று, சிலை மனிதனுக்கு உண்டான உடைகளை அணிவிக்கத் தொடங்கினார் பாபு. “சிலர் கோபமா பேசுவாங்க.. திட்டுவாங்க. `சிரிச்சா, காசு தர்றேன்'னு காசை கண்ல காட்டுவாங்க. நம்ம கையில 10 ரூவாகூட இருக்காது. ஆனாலும் சிரிச்சுடக்​ கூடாது” என்று செண்பகராஜனுக்கு, சில டிப்ஸ்களை வழங்கினார்.

புகைப்படம் எடுப்பதற்காக, ஏற்கெனவே சிலை மனிதனாக நின்றுகொண்டிருக்கும் தாஸ் அருகில் செண்பகராஜனை நிறுத்தினோம். வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும், ‘`ஐ... ரெண்டு சிலை மனிதன்!'’ என்று உற்சாகமாகி, புகைப்​படங்கள் எடுத்துக்கொள்ள ஆர்வமானார்கள்.

``ஒரே இடத்துல இதுவரை ரெண்டு சிலை மனிதன் நின்னதே இல்லை. பார்க்கிற​வங்களுக்கு இது நிச்சயம் அபூர்வமாக இருக்கும்” என்றார் பாபு.

ஆசை - சிரிச்சா போச்சு!

தாஸ் இறங்கிவிட, பொசிஷனுக்கு வந்து நின்றார் செண்பக​ராஜன். ஒரு குடும்பம் வந்து ‘ஐ... ஸ்டேச்யூ மேன். ஹேய்.. கமான் ஸ்மைல்” என்று ஆங்கிலத்தில் அதட்டிக்கொண்டும் கலாய்த்துக்கொண்டும் இருக்க... உறுதியாக சிலைபோலவே நின்றுகொண்டிருந்தார் செண்பகராஜன். புத்தாண்டு விடுமுறை என்பதால், கூட்டம் அதிகம்.

வருண், அப்பாவை பல்வேறு கோணங்களில் தன் அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தார். “யாருக்குமே இவர் இங்கே வேலை செய்றவர் இல்லைனு கண்டுபிடிக்க முடியலைல?” என மகேஸ்வரி தன் கணவரை ஆச்சர்யமாகப் பார்த்துப் பாராட்டிக்கொண்டிருந்தார்.

ஆசை - சிரிச்சா போச்சு!

“சிவாஜிகணேசன் இங்கே ஷூட்டிங் வந்திருந்தப்ப... ரொம்பக் கிட்டக்க வந்து நின்னுட்டாருங்க. எனக்கு கையும் ஓடலை... காலும் ஓடலை.  `ஏம்ப்பூ... நீ சிரிக்கவே மாட்டியாமேப்பூ?’னு அவர் கணீர் குரல்ல கேட்டு பேச்சு கொடுத்தார். அசரவே இல்லையே நான்'' என நினைவுகளில் மூழ்கினார் பாபு. ``அர்ஜுன், கோவை சரளா, மதன்பாப்னு பலரும் வந்திருக்காங்க. மதன்பாப் அவர் பாணியில் சிரிச்சுட்டே இருந்தார். ‘ஊரையே சிரிக்கவைக்கிறேன். நீ சிரிக்க மாட்டேங்கறியேப்பா’னுட்டுப் போயிட்டார். விக்ரம் பண்ணினதுதான் மறக்கவே முடியாது. விக்ரம்... தூரத்துல இருந்து ஸ்பீடா பைக்கை ஓட்டிட்டு வந்து, செவுத்துல கொண்டுபோய் மோதினார். நான் பதறுவேன்னு எதிர்பார்த்தார்போல. நான் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியா நின்னேன். கடுப்பானவர் கொஞ்ச நேரத்துல விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டார்” என்றார் பாபு.

“ `மருந்து போட்டிருப்பாங்க, குடிச்சிருப்பாங்க’னு எல்லாம் எங்களைப் பற்றி சிலர் சொல்றப்ப, ரொம்பக் கஷ்டமா இருக்கும். கீழே ‘தவறான வார்த்தைகளால் பேசக் கூடாது’னு போர்டு இருக்கு சார். படிக்கத் தெரியாதவங்க, நம்ம காதுபடவே `ஏதோ எழுதிருக்குடா. அமைதியா இருப்போம்’னு அமைதியா இருப்பாங்க. ஆனா, படிக்கத் தெரிஞ்சவங்கதான் போர்டைப் பார்த்த பிறகும் ஏதாவது தப்பான வார்த்தைகளைப் பேசிட்டு, திட்டிட்டு போவாங்க. ஆனா, குழந்தைகள் நம்மளைப் பார்த்து குஷியாகிறதுமா சிரிக்கிறதுமா சந்தோஷப் படும்போது, அந்தக் கஷ்டம் எல்லாம் பறந்தேபோயிடும்” என்ற தாஸின் முகத்தில் அப்போதுதான் சிரிப்பை முதல்முறையாகப் பார்க்க முடிந்தது.

ஆசை - சிரிச்சா போச்சு!

எந்தப் பேச்சையும் கேட்காமல் சிலை மனிதனாக காரியத்தில் கண்ணாக இருந்தார் செண்பகராஜன். பெரிய நண்பர்கள் குழு ஒன்று வந்து செண்பகராஜனைப் பார்த்து, ‘ஆலுமா... டோலுமா...’ என்று பாடிக்கொண்டிருந்தது. ஓர் இளைஞர் மட்டும் ‘டேய்... இவரு புதுசா இருக்காருடா. வேறொரு மீசைக்காரர்ல இருப்பாரு!’ என்று சரியாகக் கணித்தார். பிறகு சுற்றும் முற்றும் பார்த்தவர், போட்டோகிராஃபரையும் வீடியோ கேமராவையும் பார்த்துவிட்டு ``ஐ... கண்டு பிடிச்சுட்டேன். ஆனந்த விகடன்தானே? இது ஆசை பகுதியா?” என்றவர் சக நண்பர்களிடம் ஆசை பகுதியைப் பற்றி சொன்னார்.

“நாங்க இவரை சிரிக்கவெச்சா, எங்க போட்டோ போடுவீங்களா? மதுரை மக்கள் பாஸ் நாங்க... சவால் விட்டா செஞ்சுருவோம்” என்றவர்கள், உடனடியாக தீவிர முயற்சியில் இறங்கினர்.

எப்படியாவது சிரிக்கவைத்துவிடுவது என்று இறங்கி அடிக்க ஆரம்பித்தது மதுரைக் குழு. இன்னும் சத்தமாகப் பாட்டு பாடியும் விசில் அடித்தும் ‘`ண்ணே... முடியலண்ணே... சிரிச்சுருங்கண்ணே!’' என காமெடி செய்வதுமாக 20 நிமிடங்கள் அந்த இடத்தை அதகளப்​படுத்தினர்.

ஆசை - சிரிச்சா போச்சு!

``சார்... அவரை இறங்கச் சொல்லுங்க. கீழே வந்து அவர்கூட நாங்க ஒரு போட்டோ எடுத்துக்கிறோம். அதுலயாவது அவரைச் சிரிக்கச் சொல்லுங்க” என்று இறுதியாக சமாதான உடன்படிக்கைக்கு வந்தனர்.

செண்பகராஜன், செங்கோலுடன் வெற்றி பெற்றவராக கீழே இறங்கி வந்தார். வந்ததுமே பாபு அவரைப் பாராட்டினார். “சிரிச்சுடுவீங்கன்னே நினைச்சேன். பரவாயில்லை. சமாளிச்சுட்டீங்க” என்றார்.

``இந்தப் பசங்க வந்ததுமே சிரிச்சுடுவேன்னுதான் நானும் நினைச்சேன். ஆனால், தாஸ் அண்ணன் `எல்லாமே மனக்கட்டுப்பாடுதான். சிரிக்கக்​கூடாதுனு வைராக்கியமா இருந்தா முடியும்’னு சொன்னதை மனசுல வெச்சுக்கிட்டேன்” என்றார் செண்பகராஜன்.

மதுரை மக்கள் குரூப் கீழே நின்றுகொண்டு, செண்பகராஜனை கைதட்டி வரவேற்றது. “பின்னீட்டீங்கண்ணே... பார்ட் டைமா அப்பப்ப நீங்க வந்து நின்னுக்கலாம்” என்றவர்கள், `‘ஒரு போட்டோண்ணே... என்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போதும் அவர் சிரிக்காமல் நிற்கவே, “ண்ணே... இப்ப நீங்க சிரிக்கிறீங்க. நாங்க அமைதியா இருக்கோம்” என்றனர். உடனே ‘அடிக்க மாட்டேன் வாங்க’ விஜயகாந்த் ஸ்டைலில் அண்ணாந்து பார்த்துச் சிரித்தார் செண்பகராஜன்.

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...

ஆசை ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

இ-மெயில்: aasai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism