Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 18

ஆண்பால் பெண்பால் அன்பால் - 18
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 18

#MakeNewBondsஜெ.தீபலக்‌ஷ்மி, படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 18

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

பெண்களுக்கு முதன்முதலாக அறிமுகமாகும் ஆண், அவளது அப்பாதான். அப்பாக்களைத் தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான ஆண்-பெண் உறவுகளைப் பற்றி பேசுவது சாத்தியமற்றது. அப்பாவுடன் நெருக்கமான உறவு அமையப்பெற்ற மகளாக இருந்தாலும், அப்பாவை மரியாதையான தூரத்தில் தள்ளிவைத்து நேசிக்கும் மகளாக இருந்தாலும், தந்தை-மகள் உறவு ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து மீள்வது இங்கே எந்த மகளுக்கும் எளிதானது அல்ல.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 18

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பள்ளித் தோழி ஒருத்திக்கு, அவளது அப்பாதான் உலகம். `அப்பா, சூப்பரா டிரெஸ் செலெக்ட் பண்ணுவார். அவர்தான் ஹோம்வொர்க் சொல்லிக்கொடுப்பார். அவரோடு சினிமாவுக்குப் போனேன். அவரோடு இன்னிக்கு சண்டை' என, எப்போதும் அப்பா புராணம் பாடுவாள். அவள் வீட்டுக்கு ஆர்வத்துடன் செல்வேன். அவளது அப்பாவை, எனக்கும் என் சக தோழிகளுக்கும் ரொம்பவே பிடித்தது. நகைச்சுவையாகப் பேசுவார். எங்களுடன் கேரம் விளையாடுவார். வீட்டில் அவர் குரல் மட்டும்தான் சத்தமாக ஒலிக்கும். எங்களை விழுந்து விழுந்து கவனிப்பார். சோபாவில் இருந்த இடத்தைவிட்டு அசைய மாட்டார். `ஏய்… குழந்தைங்க வந்திருக்காங்க பார். அதைக் கொண்டா... இதைக் கொண்டா' என உத்தரவு மட்டும் பறந்துகொண்டிருக்கும்.

சமையல் அறையில் இருந்து விறுவிறுவென வியர்வை வழிய எதையாவது கொண்டுவந்து வைக்கும்போது மட்டும்தான் அவள் அம்மாவைப் பார்க்க முடியும். `அம்மா, சூப்பரா சமைப்பாங்க. வேற ஒண்ணும் தெரியாது' என, தோழி சிரிப்பாள். உடன் சேர்ந்து அந்த அப்பாவும் சிரிப்பார். அப்படிச் சிரித்த ஒருநாளில், அந்த அப்பா மீதான என் அபிமானம் அத்தனையும் சடசடவெனச் சரிந்தன. சில நாட்களுக்கு முன்னர், முகநூலில் அந்தத் தோழியிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவள் அப்பாவைப் பற்றி விசாரித்தேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 18

`என் மேல உயிரா இருந்து என்ன பிரயோஜனம்? குழந்தை பெத்துக்க வீட்டுக்குப் போனப்போ, எங்க அம்மாவைப் படுத்துறபாடு பார்க்க சகிக்கலை. அம்மாவுக்கு மூட்டுவலி, சுகர், ஆஸ்துமானு அவ்ளோ பிரச்னைகள். என்னையும் குழந்தையையும் பார்த்துக்கிட்டு, அப்பாவுக்கும் இன்னும் விழுந்தடிச்சுக்கிட்டு எல்லாம் பண்றாங்க. ஆனா, எங்க அப்பா கொஞ்சம்கூட அம்மாவின் கஷ்டத்தை இன்னும் உணரவே இல்லைனு நினைக்கும்போது ரொம்பக் கஷ்டமா இருக்குப்பா' என்று வருத்தப்பட்டாள். திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தாயும் ஆன பிறகு, தனக்கு என கஷ்டங்கள் வரும்போதுதான் மகள்களுக்கு அம்மாவின் அருமையும் அம்மா வாழ்ந்த அடிமை வாழ்வும் தெளிவாகின்றன.

தன் வாசகர்களோடும் நண்பர்களோடும் அளவளாவிவிட்டு, நள்ளிரவுக்கு மேல் சாப்பிட வரும் என் அப்பா ஜெயகாந்தனுக்கு, தூக்கத்தில் இருந்தாலும் எழுந்து அம்மா தோசை சுட்டுத் தருவார். அம்மா கஷ்டப்படக் கூடாது என, சில நாட்கள் அக்கா எழுந்து சுட்டுத் தருவாள். அக்காவுக்குத் திருமணம் ஆனதும் அந்த இடத்துக்கு வந்த நான், ‘இப்பவே சுட்டு ஹாட்பாக்ஸில் வெச்சுடலாமேம்மா!’ என வற்புறுத்துவேன். தன் சிரமத்தைக் குறைக்கும் இந்தச் சிறு மாற்றத்தை ஏற்றுக்கொள்ளக்கூட அம்மாவுக்கு வெகுகாலம் பிடித்தது.

என் தோழி ஒருத்தி, உடன் வேலைபார்க்கும் தலித் பையனைக் காதலித்தாள். `அம்மாதான் கொஞ்சம் முரண்டு பிடிப்பாங்க. அப்பா, நிச்சயம் என் விருப்பத்துக்குத் தடை சொல்ல மாட்டார். அவர் என்மேல் உயிரையே வெச்சிருக்கார்' என்று ஒருநாள் அப்பாவிடம் போய் கான்ஃபிடன்டாக தன் காதலைப் பற்றி பேசினாள். அவள் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட அவளது அப்பா, பதில் ஏதும் சொல்லாமல் ஓங்கி ஓர் அறை விட்டார். அவளை அடுத்த நொடியில் இருந்து மூன்று மாதங்களுக்கு வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துவிட்டார் பாசக்கார அப்பா. யாருக்கும் தெரியாமல் மூன்றே மாதங்களில் ஒரு மாப்பிள்ளைக்கு மணம்முடித்தும் அனுப்பி விட்டார். திருமணம் ஆன பிறகு, மனச்சிதைவுக்கு ஆளாகி மணமுறிவு வரை போனது அவள் வாழ்க்கை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 18

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் எல்லோருமே இங்கே எளிதில் புனிதர்களாக மாறிவிடுவதைக் கவனிக்க முடியும். மகள்களைத் தேவதைகளாக உருமாற்றிப் புனிதப்படுத்துபவர்கள் அவர்களே! அவர்களைப் போற்றிக் காக்கவேண்டியவர்களாக உருவகித்து, எந்நேரமும் கண்காணிப்பில் வைத்திருப்பவர்களும் அந்த அப்பாக்கள்தான். தன்மானத்துக்கு இழுக்கு வந்துவிட்டால் தேவதைகளையும் பலிகொடுக்கிறவர்களாக இருப்பவர்களும் அந்த அப்பாக்கள்தான். எப்படியாவது மகள்களைப் பொத்திப் பொத்தி சமூகத்திடம் இருந்து பாதுகாப்பதிலேயே தங்கள் வாழ்வைத் தியாகம் செய்வார்கள். எந்நேரமும் முதுகிலேயே சுமப்பார்கள். மகள்களைச் சுயமாக எந்த முடிவையும் எடுக்கவிடாமல், சுயமாக எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவிடாமல் வெற்று மன்னாந்தைகளாக மாற்றுவதும் இதே அப்பாக்கள்தான்.

அமீர்கான் நடித்த `தங்கல்' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். கடுமையான பயிற்சி கொடுத்து மல்யுத்தப் போட்டிகளுக்காக தன் இரண்டு மகள்களையும் தயார்செய்வார் அமீர்கான். அது அந்தப் பெண்களுக்குப் பிடிக்காது. தன் தோழியின் திருமணத்துக்குச் சென்றவர்கள், தோழியிடம் தன் தந்தையின் பிடிவாதம் குறித்தும், அவருடைய பயிற்சிகள் குறித்தும் வருந்திப் புலம்புவார்கள். ஆனால் கல்யாணக் கோலத்தில்  உள்ள தோழியோ, `எனக்கு இப்படி ஒரு அப்பா கிடைச்சிருக்கக் கூடாதானு ஏக்கமா இருக்கு' என சோகமாகச் சொல்வாள்.

இருவரும் ஒன்றும் புரியாமல் யோசிக்க, தோழி தொடர்ந்து பேசும் வசனம் மிகவும் முக்கியமானது. `என் அப்பா, எனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி, விரட்டிடணும்னு நினைக்கிறார். ஆனா, உங்க அப்பா அப்படி இல்லை. அவர் உங்களுக்காகச் சிந்திக்கிறார். நீங்க பலசாலியா ஆகணும்னு விரும்புறார். இந்த உலகத்தில் நிறைய சாதிக்கணும்னு போராடுறார்' என்பாள். இரண்டு பெண்களின் அப்பா குறித்த பார்வையே மொத்தமாக மாறும். தன் அப்பா, தங்களை வெறும் வீட்டுப்பாவைகளாக அல்லாமல் சாதனை மங்கைகளாகப் பார்க்கிறார் என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரியவரும். இந்தக் காட்சியைத்தான் மொத்தப் படத்திலும் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.

கல்லூரி முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தேன். என் தோழிகள் அனைவருக்கும்  திருமண ஏற்பாடு, காதல் எதிர்ப்பு, விரும்பிய படிப்பு, வேலைக்கு மறுப்பு எனத் தடைக்குமேல் தடைகளால் பாசமான அப்பாக்களின் சாயம் வெளுக்கத் தொடங்கிய நேரம். ஆனால், அதே வயதில் எனக்குப் பிடித்த எதையும் படிக்கவும், பிடித்த வேலைக்குப் போவதற்கும் உற்சாகம் கொடுத்து உறுதுணையாக இருந்தவர் அப்பாதான். எனக்கான நண்பர்கள், புத்தகங்கள், இசை எனப் பிடித்தவற்றைச் சேர்த்துக்கொண்டு வாழ்வை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளத் தொடங்கினேன். தங்கள் சுயநலத்துக்காக, போலி கௌரவத்துக்காக என பிள்ளைகள் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்காத பெற்றோர் மீது பெருமையும், அதுவரை இல்லாத அளவுக்குத் தன்னம்பிக்கையும் வந்தது. இங்கே குடும்பங்கள் தன் பிள்ளைகளுக்குத் தரவேண்டிய கடைசி நம்பிக்கை அதுவே.

எனக்கு அப்பாவின் மீது அன்பும் மரியாதையும் நிறையவே என்றாலும், அவரோடு அதிக நெருக்கமாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவே இல்லை. என் வாழ்க்கைத் துணைவர் ஜோவிடம், தொடக்கத்திலேயே சொன்னது இதுதான். `எனக்கு எங்க அப்பா பிடிக்கும்னாலும் அவ்ளோ க்ளோஸ் இல்லை. எனக்கு நீ லவ்வர், ஹஸ்பெண்ட் மட்டும் இல்லை. அப்பாவாவும் இருக்கணும்' - இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பூரித்துப் போகாதவர் யாராவது இருக்க முடியுமா? இயல்பிலேயே மனமுதிர்ச்சியும் நிதானமும் கைவரப்பெற்ற என் கணவருக்கு, என் அப்பா ரோலை எடுத்துக்கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 18

ஆனால், நான் அவரிடம் கோரிய அந்த எமோஷனல் சப்போர்ட், பெரும்பாலும் நான் பெறுபவளாகவும் அவர் தருபவராகவுமே எங்களுக்குள் இருந்த உறவை மாற்றியது. அந்த மாற்றம், எங்கள் இருவருக்கும் இடையே மிக அதிகமான சிக்கல்களை உருவாக்கியது.

`நான் சொல்றதை மட்டும் கேட்டு நட. எல்லாமே ஒழுங்கா இருக்கும்!' என்று அவர் சொல்ல ஆரம்பித்தார். அதை எல்லா நேரங்களிலும் ஏற்பது என்ற அழுத்தம், இயல்பாகவே எனது ஈகோவைச் சீண்ட ஆரம்பித்தது; இருவருக்குமே மன அழுத்தத்தையும் கொடுத்தது. முதன்முதலாக `அப்பா, அம்மாவாக என்னைப் பெற்றவர்கள் மட்டும்தான் இருக்க முடியும். வாழ்க்கைத் துணை என்பது, சமமான ஒரு மரியாதைப் பகிர்வு உள்ள உறவு' என்பது புரிந்தது.
 
பெற்றோரின் இடத்தில் வேறு ஒருவரை நிரப்பினாலோ அல்லது அந்த இடத்தை இன்னொருவர் எடுத்துக்கொண்டாலோ, அந்த உறவு ஒரு கட்டத்தில் authoritative-ஆக மாறி, பூசல்களை உருவாக்கும். நல்லவேளையாக எனக்கு இரு மகள்கள் பிறந்ததுமே தன்னால் வழி பிறந்தது. `இங்கே பாரும்மா, இனிமே இவங்களுக்குத் தான் நான் அப்பா. இனி உனக்கான அப்பா ரோல் எனக்குக் கிடையாது' என எனக்குத் தெளிவுபடச் சொல்லிவிட்டார்.

வாழ்க்கைத் துணையோ, காதலரோ, நண்பரோ, நம் அப்பா அல்லது அம்மாவுக்கான மாற்று அல்ல. அந்த உறவில் எல்லாமே சரிசமமான அன்பின் மரியாதையின் பகிர்தல் மட்டுமே என்பதை செல்லமகள்கள் உணர வேண்டும். `எனக்கு ஒரு தாய் மடி கிடைக்குமா?’ என, அம்மா மாதிரியே மனைவியை எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தமோ, அதே அளவு அபத்தம் அப்பா போலவே கணவன் தங்களை அரவணைக்க வேண்டும் என்பதும். ஏனென்றால், பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல், சுயமாக இயங்குவதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் அடையவேண்டுமானால், இந்த எண்ணத்தை அறவே அகற்ற வேண்டும்.

சிறுவயது முதலே ஆண்கள் மீதும் அவர்களுடைய உலகத்தின் மீதும் அதீதமான ஆர்வம் எப்போதும் இருந்தது. ஓர் ஆணாகப் பிறக்கவில்லையே என்ற ஏக்கமும் எப்போதும் இருந்தது. முதன்முதலாக ஓர் ஆணின் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது யு.கே.ஜி படிக்கும்போது.

நான் பையன் அல்ல, என் பெயரை விஷ்ணுகுமார் என்று எல்லாம் என் இஷ்டப்படி மாற்றிக்கொள்ள முடியாது என்ற எண்ணங்கள்கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். யு.கே.ஜி., இரண்டாம் வகுப்பில் உருவான இனம் புரியாத உணர்வுகளை எல்லாம் `காதல்' என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியாது. ஆனால், அந்த வயதிலேயே எதிர்பாலின ஈர்ப்பும், வசீகரமான முகமோ, குரலோ, சிரிப்போ இருக்கும் பையன்களைக் கண்டால் அவ்வளவு பிடிக்கும்.
 
ஆனால், அதிர்ச்சி தரும் வகையில் பள்ளிக்காலத்தில் சொல்லிக்கொள்ளும்படி எனக்கு நெருக்கமான ஓர் ஆண் நண்பன்கூட இருந்ததே இல்லை. அதற்கு, பல காரணங்கள் இருந்தன. அதில் முக்கியமானது நான் படித்த பள்ளியின் அதீத சாமியார்த்தனம். பையன்களும் பெண்களும் அருகருகே உட்காரக் கூடாது. ஒருவரிடம் மற்றொருவர் பேசக் கூடாது. நோட்ஸ் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று ஏராளமான தடைகள் இருந்தன. அதனாலேயே எல்.கே.ஜி தொடங்கி என்னோடு படித்த ஏராளமான பையன்களைப் பற்றி பெயருக்கு மேல் எதுவுமே தெரியாமல் 10-ம் வகுப்பு வரை வளர்ந்திருக்கிறேன்.

பள்ளிப் படிப்பு முடியும் வரை, பையன்களைப் பற்றிய மர்மங்கள் விலகாமல் நிலைத்திருந்தன. உடன் படித்த பையன்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். அவர்களால் ஒருபோதும் எங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது இல்லை. பையன்கள், பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கப் பழக்கும் இடமாகவே எங்கள் பள்ளிகள் இருந்தன. நான் படித்த பள்ளி மட்டும் அல்ல, இன்றைய பெரும்பாலான பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன. இதுதான் இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடுகளில் ஒன்று.

பையன்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பள்ளிகள் இல்லாமல் ஒன்றாகக் கல்வி கற்பிப்பது எவ்வளவு நல்ல விஷயம். எவ்வளவோ ஆரோக்கியமான நட்புகளுக்கும் புரிதல்களுக்குமான அருமையான வாய்ப்பை இந்த இடங்கள் வழங்கக்கூடியவை. ஆனால், அதற்கான வாய்ப்புகளை மறுக்கும் இடங்களாக மட்டும் அல்லாமல், ஆண்-பெண் புரிதலை இன்னும் மோசமாக மாற்றக்கூடிய இடங்களாக நம் கல்விச்சாலைகள் மாறிவிட்டன.

கோஎஜுகேஷன் முறை வந்த பிறகு தாறுமாறாக அதிகரித்திருக்கவேண்டிய ஆண்-பெண் புரிதல், ஏனோ அதற்குப் பிறகுதான் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுவிட்டது. முன்னெப்போதையும்விட இப்போதுதான் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. பெண்களை, சமூகமும் ஆண்களும் பார்க்கும் விதத்தில் சொல்லத்தகுந்த மாற்றங்களும் உருவாகவில்லை.

இருபாலர் பள்ளிகளில் மட்டும் அல்ல... இன்று புற்றீசல்போல எங்கும் கடை பரப்பி இருக்கும் பொறியியல் கல்லூரிகளிலும் இதுதான் நிலை. கல்லூரிப் பேருந்தில்கூட ஒன்றாகப் பயணிக்க முடியாது. பாடத்தில் சந்தேகம் வந்தாலும் பகிர்ந்துகொள்ள முடியாது. கல்லூரிக்கு வெளியே பேசினாலும்கூட தண்டனை தரும் விநோத நிர்வாகங்கள்தான் நம் கல்லூரிகளையும் பள்ளிகளையும் இயக்குகின்றன. ஆணும் பெண்ணும் பேசுவது என்பது தண்டனைக்கு உரிய குற்றமாக மாற்றி வைத்திருக்கும் சமூகத்தில், வலுவான ஆண்-பெண் உறவுகளுக்கு எந்த அளவுக்கு இடம் இருக்கும்? ஆண்-பெண் உடல் குறித்த பாலியல் கல்வி குறித்தே எந்நேரமும் பேசும் நாம், ஆண்-பெண் மனங்கள் குறித்த கல்வியைப் பற்றி எல்லாம் எப்போது சிந்திக்கப்போகிறோம்?

அப்பா, பெண்கள் குறித்து சுதந்திரமான சிந்தனைகள் கொண்டிருந்தார். அவரோடு வளர்ந்த என் மனதிலும் அது ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், அப்பாவின் கருத்துக்களுக்கு நேர் எதிராக வீட்டுச்சூழல் இருந்தது. அப்பா-அம்மாவின் இயல்பான உறவு எப்படி இருக்கும் என்றே தெரியாது. எனக்கு நினைவுதெரிந்தது முதல், அப்பா, தனது உதவியாளரும் காதலியுமான இன்னொரு பெண்மணியுடன்தான் வீட்டில் இருந்தார். அந்தப் பெண்மணிதான் சிறு வயது முதல் என்னைக் கவனித்துக்கொண்டார் என்றாலும், எல்லாரும் ஒரே வீட்டில் இருந்தது வளரும்போது சொல்லவியலாக் குழப்பங்களை ஏற்படுத்தியது.

அப்பாவும் அம்மாவும் தனியாக உட்கார்ந்து பேசிப் பார்த்ததே இல்லை. சாப்பாட்டு மேஜைக்கு அப்பா வரும்போது மட்டும்தான் அம்மாவுக்கும் அப்பாவுக்குமான உரையாடல் நிகழும். மற்ற வீடுகளில் பெற்றோர் சகஜமாகப் பேசிக்கொள்வதையும், உரிமையுடன் ஒருவரை ஒருவர் கோபித்துக்கொள்வதையும், இருவரும் சேர்ந்து குழந்தைகளைக் கண்டிப்பதையும் ஆச்சர்யத்தோடு பார்ப்பேன்.

இந்தச் சூழல், பெற்றோர் மற்றும்  அவர்களுடைய உறவு குறித்து எல்லாம் எனக்குள் ஏராளமான குழப்பங்களை ஏற்படுத்தியது. அம்மா வேலைக்குப் போகிறவராக இருந்தாலும், வீட்டில் சமையலும் மற்ற வேலைகளும் அவருடைய பொறுப்பாகத்தான் இருந்தன. இன்னோர் அம்மாவோ, அப்பாவுக்காகத் தன் கனவுகளைத் துறந்து (அவர் முன்னணி நாடக நடிகையாக இருந்தவர், பன்முகத் திறமைகள் வாய்ந்தவர்) அப்பாவைக் கடவுளாகவே பாவித்துப் பணிவிடைகள் செய்துகொண்டு இருப்பார். ஆணாதிக்கத்தைக் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலை, இவர்கள் இருவருக்கும் இயல்பாகவே வாய்த்திருந்தது. அப்பா ஆண் என்பதால்தான், அவரது செய்கைகளைப் பொறுத்துப்போகவேண்டி இருந்தது என்பதை இவர்கள் எப்போதும் ரகசியமாக வைத்திருக்கவில்லை. அம்மா அதை எப்போதும் வெளிப்படையாகவே என்னிடம் சொல்வார்.

அக்கா மூத்த பெண் என்பதால், மிகவும் பொறுப்பாக நடந்துகொள்வாள். இனிய சுபாவம்கொண்ட அவள், எங்களை அன்பாகக் கவனித்துக்கொள்வாள். திருமணம் ஆகும் வரை எனக்கு ஒரு தாய் போல் இருந்ததில், அக்காவுக்கும் மாமிக்கும் பெரும் போட்டியே நடந்தது. ஆனால், அக்கா திருமணம் முடிந்து சென்றதும், கடைக்குட்டியாக இருந்தாலும் பெண் என்ற தகுதி அடிப்படையில் அக்காவுடனான ஒப்பீடுகள் வீட்டில் தொடங்கின. அக்கா செய்ததை எல்லாம் நானும் செய்ய வேண்டும் என்ற அதே எதிர்பார்ப்புகள் என் மீதும் திணிக்கப்பட்டன. `அண்ணன் சாப்பிட்ட தட்டை எடுத்துட்டுப் போ. ஆம்பளைங்க துடைப்பத்தை எடுத்தா, வீட்டுக்கு ஆகாது. அவன் ரூமைக் கூட்டு...' எனச் சொல்லத் தொடங்கினர். இந்தப் புது மாற்றம், எனக்குள் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை, வீட்டுப் பெண்மணிகள் அறிந்திருக்கவே இல்லை.

`பெண் என்பதாலேயே நீ இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்ற கருத்தாக்கத்தை பெண்ணின் தலையில் திணிப்பது எவ்வளவு ஆபத்தானாதோ, அதைவிடவும் ஆபத்தானது `ஆண் என்பதாலேயே வாழ்க்கை உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்' என்ற பிம்பத்தை பையன்களிடம் ஏற்படுத்துவது. அது நாம் பையன்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். கெட்டிக்காரி, சமத்து என நம் பெண் குழந்தைகளைப் பாராட்டி வளர்த்தாலும், பெருமை பேசினாலும் யதார்த்தத்தில் `நீ ஆணுக்கு ஒரு படி குறைவுதான்’ என்ற எண்ணம் வளராமல் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம். அப்படி ஓர் எண்ணத்தை சமூகம் நம் பெண் குழந்தைகள் மேல் திணித்தாலும், அதை முழுமையாகக் களைவதும் இன்றியமையாதது.

குடும்பங்களுக்குள்ளும் பாலினப் பாகுபாடுகள் இருக்கக் கூடாது என, இன்றைய பெண்கள் போராடத் தொடங்கியுள்ளனர். சமையல், வீட்டுவேலை, குழந்தை பராமரிப்பு... முதலான விஷயங்கள் பெண்களுக்கு மட்டுமானவை அல்ல என்பதை ஆண்களும் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அப்பா-அம்மா உறவுக்கான இலக்கணங்கள் மாறத் தொடங்கிவிட்டன. பெற்றோராகிய நாம், அளவற்ற அன்புடன் வளர்க்கும் இரண்டு நண்பர்கள் என்று நம் குழந்தைகள் புரிந்துகொள்ளும்படி வாழ்வதுதான் ஆண்-பெண் புரிதலை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் முதல் படியாக இருக்கும். அங்குதான் நமக்கான வெளிச்சம் இருக்கிறது.
 
- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ளியற்ற, ஜன்னல் குறுகிய அந்தச் சமையல் அறையில் இருந்து, கடலில் வசிக்கும் ஆக்டோபஸ் ஜந்துவின் எண்கால்கள்போல் ஆதிக்கக்கரங்கள் நீண்டு வளைத்துப்போட்டன. கால்கள் இறுக இறுகக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், கால்களைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக்கொண்டனர் பெண்கள். நான்கு புறங்களும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்துகொண்டு, அதை ராஜ்யம் என நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலாவ், நாளை பூரி மசாலா என பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகளை எடுத்தனர். பேடி அதிகாரம்.

 அம்பை எழுதிய `வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' சிறுகதையில் இருந்து...

``10 வயசு தொடங்கி சுடுறேன். 40 வருஷங்கள்ல ஒரு நாளைக்கு 20 மேனிக்கு எத்தனை தோசை அம்மம்மா?''

ஒரு வருடத்துக்கு 7,300 தோசைகள். 40 வருடங்களில் 2,92,000 தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். எத்தனை முறை சோறு வடித்திருப்பாள்? எத்தனை கிலோ அரிசி சமைத்திருப்பாள்? இவள் சிரிக்கிறாள்.

- அம்பை எழுதிய `வெளிப்பாடு' சிறுகதையில் இருந்து...

தோ மர்மமான ஒன்றை (இரவு படுத்துக்கொண்டதும் தொண்டையை அடைத்துக்கொள்ள வைக்கும் உணர்வை, என் உடம்பே எனக்கு மாறுதலாகப்படும் தவிப்பை) அம்மா மெள்ள விளக்கப்போகிறாள் என்று அவள் முகத்தையே பார்க்கிறேன். வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப்போகிறேன் உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப்போகிறேன். அம்மா என்னைப் பார்க்கிறாள். நான் ஒரு கணம் அவள் கண்முன் ராதுவாய் மாறுகிறேனா எனத் தெரியவில்லை.

``உனக்கு இந்த இழவுக்கு என்னடி அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்'' சுளீரென்று கேள்வி. யாரைக் குற்றம் சாட்டுகிறாள்? ஒலி இல்லாக் கேவல்கள் நெஞ்சை முட்டுகின்றன.

- அம்பை எழுதிய `அம்மா ஒரு கொலை செய்தாள்' சிறுகதையில் இருந்து...