மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

#MakeNewBondsபாக்கியம் சங்கர் - படங்கள்: அருண் டைட்டன்

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

`நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை… ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை' என்ற கந்தர்வனின் கவிதையை வாசிக்கும் போதெல்லாம் அம்மாக்களும் அக்காக்களும்தான் மனதில் வந்து போகிறார்கள். சாணம் மெழுகிய அடுப்பங்கரையில் தீப்பெட்டி ஒட்டுவதற்காக எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கும் துத்தநாகம் ஒரு சட்டியில் என்றால், கொப்புலு… கொப்புலு… எனப் பக்கத்துச் சட்டியில் சோற்றுப்பானை கொதித்துக்​கொண்டிருக்கும். பள்ளி முடிந்து வந்ததும் இருப்பதைத் தின்று, எனக்கும் ஒரு கவளம் ஊட்டிவிடுவாள் அக்கா. பிறகு, தீப்பெட்டி ஒட்டுவதற்கான பசையில் துத்தநாகம் எனும் விஷத்தைக் கொஞ்சமாகக் கலந்து, தீப்பெட்டி ஒட்ட உட்கார்ந்துவிடுவாள். அம்மாவும் அக்காவும் ஒட்ட ஒட்ட, அண்ணனும் நானும் வரிசைக்கிரமமாகக் காயவைப்போம். எங்கள் காம்பவுண்டில் மொத்தம் ஏழு குடித்தனங்கள் என்பதால், ஏழு வீட்டுப் பெண்களும் சூழ உட்கார்ந்துகொண்டு தீப்பெட்டி ஒட்டியபடியே பேட்டையின் கதைகளைக் கதைத்துக்கொண்டிருப்பார்கள். “நாகம்மா… இந்தத் தேசிங்குப் பையனுக்கு ஒரு கல்யாணம் கில்யாணம் பண்ணி உட்டுறலாம்ல. இப்படியே சுத்திக்கினு இருந்தா... கேஸ்காரனா ஆகிடப்போறான்டி'' என, தீப்பெட்டியின் தலையில் வெட்டுப்புலி ஸ்டிக்கரை ஒட்டியபடி சொன்னாள் அம்மா.

“நான் மட்டும் சொல்லாமையா இருக்கேன். அதுகூடச் சுத்துற புள்ளைங்க எல்லாம் கெளரதயா கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்துதுங்க. இவன் என்னதான் ஆகப்போறானோ தெரியலை” நாகம்மாவின் கண்களில் அவளை அறியாமல் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டாள். “ஏண்டி நாகம்மா, பால்காரம்மா பொண்ணு கோமளா வூட்டுக்காரன், போதையில அவளை அடிச்சுத் துரத்திட்டானான்டி'' என, தீப்பெட்டியின் உள்பகுதியை ஒட்டிக்கொண்டே பத்மா அத்தை சொன்னதும், “குடும்பத்தையே உள்ளங்கையில வெச்சுத் தாங்கிக்கினு இருந்துச்சு. பொம்பளையை அடிக்கிறவன் கையை அம்மியில வெச்சு நசுக்கிடணும்டி'' அம்மா கொதிப்படைந்தாள். இதை நாகம்மாளும் வழிமொழிந்தபடி பசையைக் கிண்டிக்கொண்டிருந்தாள். பத்மா அத்தை சிரித்தபடியே தொடர்ந்தாள், “அடிச்ச கம்னாட்டிக்கு, போதை தெளிஞ்சிருச்சுபோல, கோமளாவாண்ட போயி, `வூட்டுக்கு வா… தனியாப் படுத்தா ஒரு மாதிரி இருக்குது'னு வழிஞ்சிக்கிறான். இவளும் கண்ணைக் கசக்கினு வந்துட்டா.  நான் கேக்குறேன்... இவனுங்களுக்குக் கூடப் படுக்கவும் ஆக்கிப் போடவும்தான் பொம்பளையா… அறுத்துடணும்டி” என்று பத்மா அத்தை பேசவும், கங்காதர மாமா நுழையவும் சரியாக இருக்கும். `இவள் செய்தாலும் செய்துவிடுவாள்' என்ற பாணியில் முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாகச் சென்றுவிடுவார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19இப்படித்தான் எங்கள் பெண்கள் இருந்தார்கள். கதவு இடுக்கில் மறைந்து நின்று பார்த்தறியாதவர்கள். நிமிர்ந்த நடையில் நேர்கொண்டு பேசுபவர்களாகத்தான் பேட்டையில் பெண்களை நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். இமைப்பொழுதும் சோராது எல்லா இன்னல்களையும் பார்த்து, நடுநிசியில் தலைவனின் வேண்டுதலுக்கு இணங்கி, காதலாகிக் கசிந்து உருகுபவர்கள். தாங்கும் நிலம் என நமது கீழ்மைகளை எல்லாம் பொறுத்துப்போகிறவர்கள். பொதுவெளியில், “எதுவா இருந்தாலும்… அவராண்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுச் சொல்றேன்” என்று சபையில் நமக்கான கௌரவத்தை நிலைநாட்டுபவர்கள். பெத்தக் கடனைத் தீர்ப்பதற்காகக் கடன்பட்டு, அதைத் திருப்பிக் கொடுப்பதற்காக தன் வாழ்வையே அடகுவைக்கும் அற்புதங்கள்தான் நம் பெண்கள். எளிமை​யானவர்கள் எதையும் செய்வார்கள் என்ற பொதுப்புத்தி, இந்தச் சமூகத்தில் வேரோடியிருக்கிறது. எதையும் என்றால் அனைத்தும் எனப் புரிந்துகொள்ளுதல் நலம். அதுவும் எளிமையான அதாவது ஏழ்மையான பெண்கள் என்றால், பாரினில் பெண்ணை உயர்த்த வந்தோர்கள் ஒரு கை பார்த்துவிடத் துடிக்கிறார்கள். பெண்கள் இந்தச் சமூகத்தில் தன்மானத்தோடு வாழ்வதே சாதனையாக மாறிவிட்டது எத்தனை கொடுமை!

“பொம்பளைங்க பூமி மாதிரிய்யா. நீ மழையா இருந்தா... அங்கே பூ பூக்கும். பூகம்பமா இருந்தா... வெடிச்சுச் சிதறும். காணாப்போயிடுவ. பொம்பளைங்களைக் கோபப்படுத்தாதைய்யா…” என்று போத்தலைக் கவிழ்க்கும்போது எல்லாம் இதைச் சொல்லத் தவறியதே இல்லை கோவிந்தசாமி. உண்மைதான். பெண்களின் மௌனத்தை நாம் `அடக்கம்' எனப் புரிந்துகொள்கிறோம். உண்மை அது அல்ல. அடர்ந்த காட்டில் நாம் பார்த்திராத ஓர் ஆதி மரத்தின் பழுத்த இலை போன்றது அவர்​களின் மௌனமும் கோபமும் ரசனையும். அவற்றை நாம் உணரலாமே தவிர, புரிந்துகொள்ள முடியாது. உணர்ந்துகொள்ள முயற்சித்தால், நீங்கள் ஒரு நல்ல கணவர் அல்லது நல்ல தோழர்.

இல்லாமல்லியை, இப்படித்தான் நான் உணர்ந்துகொண்டேன். பர்மாபஜாரின் வனிதையர்குல மாணிக்கம். வடிவான பரத்தையருள் ராணி அவள். வாழ்வை அச்சு அசலாக என்னைப் பார்க்கவைத்த மாகாளி இல்லாமல்லி. பெண் எனும் ரசனையின் நிழலை, அவளிடமே நான் உணர்ந்தேன். இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். நம் பொதுப்புத்தியில் ஓர் ஆணைப் பற்றி விசாரிக்கும்போது... அவர், இந்த மாதிரியானவர்; இந்த வேலை செய்துகொண்டி ருக்கிறார்; மிகவும் கோபக்காரர் அல்லது மென்மையானவர் என்று பட்டியல் நீளும். அதே நபரிடம் ஒரு பெண்ணைப் பற்றி விசாரித்துப் பாருங்கள், “வேலைக்குப் போற வரைக்கும் இருக்கிற இடம் தெரியாமத்தான் இருந்தா. இப்போ ஜீன்ஸு கூலர்ஸுனு ஒரு மாதிரிதான் இருக்கா” என்று அந்தப் பெண்ணின் நடத்தையை நம்மிடம் ஒரு மாதிரியாகக் கடத்தும் அற்பக் கிசுகிசுக்காரர்கள் இந்தச் சமூகத்தில் பெரும்பான்மை என்பது வெட்கக்கேடான விஷயங்களில் ஒன்று.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

“இப்படி உடம்பை வித்துத்தான் சாப்பிடணுமா?”
“உங்களுக்கு லைட் இருந்தா ஓ.கே-வா… இல்லைன்னா ஓ.கே-வா?”
“நா கொஞ்சம் கூச்ச சுபாவம்… ஸோ..!”


இந்தக் காட்சியை அப்படியே சொல்லி, நடித்துக்காட்டினாள் இல்லாமல்லி. அடக்க முடியாமல் இருவரும் சிரித்தோம். மீன்பாடி வண்டியில் அமர்ந்தபடி செய்தித்தாளில் படர்ந்து இருந்த மிக்ஸரும் சமாசாரமும் காத்துக்கொண்டிருக்க, இல்லாமல்லியே ஆரம்பித்தாள். “நான் ஒண்ணு சொல்லவா, நாங்க எல்லாம் உடம்புக்கு ஒத்தாசை பண்றவங்கடா” என்று போத்தலைக் கவிழ்த்தாள். அப்போது தொப்பிக்காரர் வந்து லத்தியால் தட்டினார். முந்தியில் முடிந்திருந்த காசை எடுத்துக் கொடுத்தாள் இவள். லத்திக்காரர் அசடுவழிந்து சிரித்தார். அதே பாவனையில் இலாவும் சிரித்தாள். லத்திக்காரரின் முகம் சுருங்கி, கிளம்பினார். நானும் சிரித்தேன். “சல்லிப்பயலுக...” என வெடித்துச் சிரித்தாள். தலைவன்
ஜி.நாகராஜனின் ‘மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ எவ்வளவு சாஸ்வதமான வாக்கியம் என உணர்ந்த தருணம் அது. பஜாரில் பெரிய பெரிய உணவகங்களில் மீதமாகிப்போன உணவுகளை வீணாக்காமல் அதை பாலித்தீன் பைகளில் பொட்டலமாக்கிவிடுவார்கள். அதற்குப் பெயர்தான் ‘பொக்னாச்சோறு’. அதை 20, 30 ரூபாய் என, இரவு 11 மணிக்கு மேல் தருவார்கள். இலாவின் கண்சிமிட்டலுக்கு, பொக்னாக்கள் காத்திருக்கும். பஜாரில் பங்களாக்களின் வாசல்களில் அண்டியிருக்கும் பராரிகளுக்கு இலாதான் பொக்னாச்சோறு வாங்கிக்கொடுப்பாள். சில பொட்டலங்களில் மீன் துண்டுகளும், மட்டன் கோலா உருண்டைகளும் அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது கிடைக்கும். வேலையில்லா இரவுகளில் இலாதான் இந்த மனிதர்களுக்கு ஆயன். “நீ உடம்பு ஒத்தாசை பண்றதைவிட, இவங்க எல்லாருக்கும் மனசார ஒத்தாசை பண்றல்ல… நீ தெய்வம் இலா” என்று நெகிழ்வேன். “ரொம்ப ஃபீலிங்கைக் கொட்டாதடா. மொக்க சினிமா டயலாக்காகீது. மூடிக்கினு சாப்பிடு” என்று சிரிப்பாள். அவளின் சிரிப்புதான் பஜாரில் அத்தனை பேரையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது.

ஒருநாள் மிகுந்த போதையில் இந்தக் கேள்வியை இலாவிடம் கேட்டுவிட்டேன். “என்னதான் இருந்தாலும், இது தப்பான பொழப்புதானே  இலா?” சட்டெனக் கோபமானவள். தீர்க்கமாக என்னைப் பார்த்துவிட்டு, “டேய், ஆம்பளைங்க என்ன பண்ணாலும் தப்பே இல்லை. பொம்பளைங்க நாங்க எது பண்ணாலும் தப்பு. என்கிட்ட வந்துட்டுப் போறவனுங்க எல்லாரும் ஆம்பளைங்கதான்டா. பொம்பளைங்க இல்லை” இப்படியான முட்டாள்தனமான கேள்விகளைத்தான் நாம் பெண்களிடம் சதாசர்வ காலமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

பார்த்தவரையில், ஆண்தான் மிகுந்த பயம் உள்ளவனாக இருக்கிறான். தனித்து வாழும் ஆண்களின் அறைகளுக்குச் சென்றால் உங்களுக்குப் புரியும். தனிமை குறித்த ஆற்றாமை, அறையின் சுவர் எங்கும் நுரைத்துத் ததும்பும். ஆனால், தனித்துவிடப்பட்ட அல்லது பணிக்கப்பட்ட நிறையப் பெண்களை நான் அறிவேன். அவர்களின் அறை, இசையாலும் சுதந்திரத்தாலும் ஆனவை. அவை ஒருபோதும் ஆற்றாமையை வெளிப்படுத்துவது இல்லை. தனது தனிமையின் அமைதியை அது பாடலாகப் பாடுகிறது. `நாளை... இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா… இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா…' மொட்டைமாடி நிலவொளியில் மிகவும் சன்னமாக அது பாடுகிறது. தனியாக வாழும் பெண்களைப் பற்றி நம் பொதுப்புத்தியில் அர்த்தமற்ற அறிவுதான் இருந்துகொண்டிருக்கிறது. தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்கள்தான் எல்லோருக்குமாக வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்வு, மிகவும் காத்திரமானது. ஆகவேதான் `தென்றலே, என் தனிமை கண்டு நின்றுபோய்விடு' என அவர்களால் பாடவும் முடியும்; எல்லோருக்காக வாழவும் முடியும்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

இந்த `எல்லோருக்காக வாழ முடியும்' என்ற சொற்களால்தான், என் உடன் பிறந்து, செந்தில்வேல் என்ற நாமகரணத்துடன் வளர்ந்து, பிறகு சுதாவாக மாறிய சுதாம்மாவைச் சொல்லவேண்டியிருக்கிறது. ஓர் ஆண்பாலுக்குள் இருக்கும் பெண்பாலைப் பார்த்து வளர்ந்தவன் நான். பிராயத்தில், சுதாம்மா சேலை கட்டி விளையாடியபோது மகிழ்ந்து சிரித்தாள் அம்மா. பிறகான நாட்களில் சேலைகளோடும் வளவிகளோடும் அவர் காட்டிய ஆர்வம் அம்மையைப் பயமுறுத்தியது. பேட்டையில் இது ஒரு பேச்சாக மாறத் தொடங்கியபோதுதான் எனக்கும் புரிபட்டது. ஓர் ஆண்பிள்ளை, ஒருபோதும் பெண்ணாக மாற முடியாது; மாறவிடவும் மாட்டோம் என்பதாக அம்மை சுதாம்மாவோடு போராடத் தொடங்கினாள். வீட்டில் அக்காவுடன் சேர்த்து நால்வராகப் பிறந்தோம். அந்த நால்வரில் ஒருவர் திருநங்கையாக இருப்பதை எங்கள் மனம் ஏற்கவில்லை என்பதே உண்மை. இந்தச் சமூகம் இன்னமும் பெண்மையையே புரிந்துகொள்ளாதபோது, திருநங்கைகளை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? இப்படி உடன்பிறந்தவர்களோடு  அந்நியமாகும் திருநங்கைகள் எல்லோரும் தனது தீர்க்கமான திடத்தால் தனது வீட்டில் இருந்து, தனது நிலத்தில் இருந்து, சொந்தங்களில் இருந்து ஒரு வனவாசத்தை மேற்கொள்கிறார்கள். வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் ஆண் எனும் வடிவத்தைத் துறந்து, ஒரு பறவையின் சுதந்திரத்தைப்போல முழுப்பெண்ணாகத் தன்னை உணரத் தொடங்குகிறார்கள். தன்னில் இருக்கும் ஆண் எனும் சொல்லை முற்றாகப் பெயர்த்தெடுத்து, ஓர் ஆதிசக்தியாக உருவெடுக்கிறார்கள். தாயாகக் கனிந்து நம் முன்னால் உலவுபவர்கள்தான் திருநங்கைகள் என்பது, அப்போது எனக்குப் புரியவில்லை. காலங்காலமாக மனதில் படிந்திருக்கும் ஆண் எனும் திமிர் பிடித்தவனாகவே நானும் இருந்திருக்கிறேன். ராமனுக்காவது 14 வருடங்கள் வனவாசம். மீண்டும் வீடு அடைந்துவிடலாம். திருநங்கைகளுக்கு, இந்தக் கணக்கு எல்லாம் கிடையாது. ராப்பொழுதுகளில் அம்மையின் விசும்பலில்தான் நான் சுதா என்கிற ஒரு மனுஷியின் பிரிவை உணர்ந்தேன். எனது கீழ்மைகளை நினைத்து உறங்காத அந்த இரவை, என்ன செய்துவிட முடியும்? அம்மையும் அக்காவும் விடாமல் செய்த முயற்சிகளால் சுதாம்மா கிடைத்தார். என் அப்பாவுடன் சேர்ந்து மூன்று ஆண்களும் சுதாம்மாவைத் தேடவில்லை. எழுத்து எல்லா பக்குவங்களையும் கொடுப்பது இல்லை. செந்தில்வேல் என்கிற என் சகோதரனை சுடிதாரில் ஒரு முழுப்பெண்ணாகப் பார்த்தபோது, அவளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. புரட்சிகளைப் பேசும் எழுத்தாளன்தான் என்றாலும், நான் அற்ப ஆண் என்பதை மறுப்பதற்கு இல்லை. சுதாம்மாவுக்குச் செய்த கீழ்மைகளுக்குப் பிரதிபலனாக, அவர் மங்கல நாண் எடுத்துக் கொடுக்க, எனது திருமணம் நடந்தது. நான் இப்போதும் நினைக்கிறேன், எங்களைப்போல சராசரியாகப் பிறந்திருந்தால், ஒரு குடும்பத்துக்கான வாழ்வை அவர் வாழ்ந்திருப்பார். இப்போது பல குடும்பங்களை வாழ்வித்து வாழ்பவர். `சுதாம்மா' என்று எனது பிள்ளைகள் கூப்பிடும்போது, நான் மனதார ஆசீர்வதிக்கப்படுவதாக உணர்கிறேன். அவர்கள் எனது பிள்ளைகள் அல்ல... சுதாம்மாவின் பிள்ளைகள். சுதாம்மாவுக்கு இப்போது ஏகப்பட்ட பிள்ளைகள். அவர் வாழ்வு, எல்லோருக்குமாக மாறியிருக்கிறது.

இப்படி பெண்களால்தான் வாழ முடியும். நாம் அனைவரும், மீசையை முறுக்கிக்கொண்டிருக்கும் அவர்களின் குழந்தைகள் என்பதைப் புரிந்து கொள்வோம். இன்னமும் பேரன் பேத்திகளுக்​காக உழைத்துக்கொண்டே இருக்கிறாள் அம்மை. ஆட்டு எலும்பை அம்மியில் நசுக்கி, ரசம் வைத்து என் குழந்தைக்கு அமுதூட்டுகிறாள். `கீரையோடு கொஞ்சம் பருப்பு போட்டு கடஞ்சு கொடு… வவுத்துப் புண்ணு ஆறும்' என்கிறாள். எந்நேரமும் நம்மைப் பற்றியே சிந்திக்கும் பெண்களைப் பார்த்து, `அது அவர்களின் கடமை!' எனக் கயவாளித்தனம் பேசுகிறோம். அதுவே அவர்களைப் பற்றி எப்போதாவது நாம் சிந்திக்க நேர்ந்தால், அது தியாகமாக மாறிவிடுகிறது. பசித்த வயிற்றைப் பார்க்கும்போது எல்லாம் அன்னபூரணியாக மாறிவிடும் இல்லாமல்லியும், தனித்துவிடப்பட்ட அநேகத் திருநங்கைகளுக்கு, தன்னால் முடிந்த அளவுக்கு சுய வாழ்வாதாரத்தை அமைத்துக்கொடுக்கும் சுதாம்மாவும்தான் எனக்கான முன்னத்தி ஏர்கள்.

குடும்பம் என்ற பெரிய பொறுப்பை அல்லது சுமையை, மிக லாகவமாக பெண்கள் தலையில் சுமத்திவிட்ட சமர்த்தர்கள் ஆண்கள். இந்த லாகவம் பெண்களுக்குத் தெரியாது என நினைப்பது, நமது அறியாமைகளில் ஒன்று. `என்  பொண்டாட்டி மாதிரி ரசம் வைக்கிறதுக்கு, ஒருத்தி பொறந்து வரணும்' என்று நான் பேசும்போது எல்லாம் வெள்ளந்தியாகச் சிரிக்கிறாள் மனைவி. அந்தச் சிரிப்பு, எனக்கான ஆசீர்வாதமே அன்றி வேறு ஒன்றும் அல்ல!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19


ஆண்மை அறிசொற்கு ஆகிடனின்றே…

(தொல்காப்பியம், சொல்லதிகாரம் நூற்பா – 4)

ஆண்மை திரிந்தவர்களை, `ஆண்மை' என்ற  சொல்லாடலால் அழைக்கக் கூடாது எனக் கூறுகிறது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

பாலினம் அல்லது பால் பாகுபாடு என்பது சமூகத்தில் தனித்து இயங்கும் ஒரு யதார்த்தம் அல்ல. சமூக முழுமையின் ஒரு பகுதியாகத்தான் அவற்றைப் பார்க்க வேண்டும் என்கிறது மார்க்ஸியம். ஆண்கள், பெண்களின் பங்கு மற்றும் இடம் என்பவை வெறும் செயற்பாட்டு ரீதியானவை மட்டும் அல்ல. சமூகப் பொருளாதார அமைப்பின் அங்கங்களாக அம்சங்களாக பொருளாதார அதிகாரம், சமூக மேலாதிக்கம் பண்பாட்டுக் கடமைகள், உரிமைகள் ஆகிய இவற்றைப் பிரதிபலிப்பவையாகவும் இவற்றின் மீது தாக்கம் செலுத்துபவையாகவும் ஆண்மை - பெண்மை மற்றும் பாலின பேதம் என்பவை அமைந்துள்ளன.

- ச.தமிழ்ச்செல்வன்

(பெண்மை என்றொரு கற்பிதம்)

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

“நான் எதையும் மூடலைப்பா. நீங்களும் உங்க மருமகனும்தான் மறைக்கிறேள்; மூடிக்கிறேள். பொதுவா உலகம் பூராவுமே மறைச்சுக்கிறது; மூடிக்கிறது. அப்படிங்கிறதுதான் உண்மையா இருக்கு. எல்லா பொண்ணுங்களும் எல்லா மாடுகளும் எல்லா மிருகங்களும் உங்களுக்கு ஒண்ணா இருக்கணும். ஒழுங்கா தீனி தின்னணும், குட்டி போடணும். வேற மாதிரி இருக்கக் கூடாது... இல்லையா?

- தஞ்சை ப்ரகாஷ்

(பற்றி எரிந்த தென்னைமரம் - சிறுகதையில் இருந்து)

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

ன் மனக்குரலை நீ நம்பினால், பெரும்புனல் புனைவாய் எனைத் தொடர்வாய்; நம்பாமல் போனால், குறத்தியாக என்னைத் தொடர்வாய். என் மூலத்தைப்போல மூதாதையரின் மூலமும் மர்மம்தான். அவர்களின் தொடர்ச்சியை உன்னில் காண்கிறேன்.

என் தொடர்ச்சியை, குறத்தியில் காண்.

- கௌதம சன்னா

(குறத்தியாறு காப்பியத்தில் இருந்து)

ட்சுமியைப் பராமரிக்கும் வேலையை, அம்மாவே ஏற்றுக்கொண்டாள். அம்மா செய்த ஒரே வேலை அது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

வேளாவேளைக்குத் தீனிபோடுவது, தண்ணீர் காட்டுவது, வெள்ளிக்கிழமைகளில் வெந்நீர் வைத்து இளஞ்சூட்டில் லட்சுமியைக் குளிப்பாட்டுவது என மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னைக் கரைத்துக்கொண்டாள். பசு தொடர்பான காரியங்களில் அம்மா ஈடுபட்டிருக்கும்போது நான் பலமுறை பார்த்திருக்கிறேன், பரவசத்துடன் இருப்பாள். லட்சுமி ‘அம்மா’ என்று தன் தேவைக்கு அழைக்கும்போது எல்லாம், ‘ஏன்டிம்மா...' என ஓடுவாள்.

அவளுக்கு வயது 67.

- பிரபஞ்சன்

(மனுஷி - சிறுகதையில் இருந்து)

ஆண்பால் பெண்பால் அன்பால் - 19

கனவில் (In Dreams)

இருண்ட, நிலைத்திருக்கும்படியான ஒரு பிரிவை உன்னோடு சரிசமமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
ஏன் அழுகிறாய்?
உன்னுடைய கையைக் கொடு
வாக்குறுதி கொடு
நீ மீண்டும் வருவாயென்று
நீயும் நானும் உயரமான இரண்டு மலைகளைப்போல் நாம் இனியும் நெருங்க முடியாது
ஒரு வார்த்தை செய்தி அனுப்பு போதும் எனக்கு எப்போதாவது நள்ளிரவில் நட்சத்திரங்கள் வழியாய்.


- அன்னா அக்மதோவா கவிதைகள்

(தமிழில்: லதா ராமகிருஷ்ணன்)