Published:Updated:

விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!
பிரீமியம் ஸ்டோரி
விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

Published:Updated:
விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!
பிரீமியம் ஸ்டோரி
விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!
விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

``ஓ யெஸ்!” - இதுதான் முதல் பதில்.

“எங்கே... எப்போனு சொல்லுங்க சந்திக்கலாம்” என்றனர் இருவரும் உற்சாகமாக.

சென்னை - கிரீன்பார்க் ஹோட்டல்.

வழுக்கியபடி வந்து நிற்கிறது போர்டிகோவில் ‘போர்ஷே’ கறுப்பு நிற கார். ‘`ஹை... நான்தான் ஃபர்ஸ்ட்!” - ஜாலியாக வந்து இறங்குகிறார் விக்ரம். அடுத்த சில விநாடிகளிலேயே சீறி நுழைகிறது பி.எம்.டபிள்யூ. அதுவும் பிளாக். ‘`இன்னும் அட்டெண்டன்ஸ் எடுக்கலியே, விஜய் பிரசென்ட் சார்!” எனக் கலக்கலாக விஜய்.

‘ஹாய், ஹலோ’க்கள் பரிமாறியபடி இருவரும் ஹோட்டலுக்குள் நுழைய, அதிர்கிறது கிரீன்பார்க்.

செல்போன் கேமராக்கள் பளிச்சிட, ஆட்டோகிராஃப்கள் துரத்த... தப்பித்து லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்கள். கண்ணாடிச் சதுரமாக இருக்கும் லிஃப்ட்டில் விஜய் தலை கோத, விக்ரம் லுக் விட... இருவருமே சிரிக்கிறார்கள்.

விஜய் - விக்ரம், தமிழ்த் திரையின் இளைய தலைமுறைத் துருவ நட்சத்திரங்கள். ஒருவர், பன்ச் டயலாக்குக்கும், கலகல காமெடிக்கும், குத்துப்பாட்டுக்கும், பிரபலமான அதிரடி ஆக்‌ஷன் ஹீரோ. இன்னொருவர், தன் பர்ஸில் கிரெடிட் கார்டுகளுக்கு நடுவே தேசிய விருதுகளுக்கும் இடம் வைத்திருக்கும் நம்பிக்கை நாயகன். இந்த சூப்பர் ஹீரோக்களுக்குள் ஓர் ஒற்றுமை, இருவருமே சென்னை லயோலா கல்லூரித் தயாரிப்பு.

‘`லயோலான்னா என்ன ஞாபகம் வரும்?”

ஒரே வேகத்தில் இருவரும் சொல்கிறார்கள்... ‘`கார் பார்க்!”

விக்ரம் படித்தது, ஆங்கில இலக்கியம்;

விஜய், விஷுவல் கம்யூனிகேஷன்.

விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`க்ளாஸ்ல இருந்த நேரத்தைவிட, பார்க்கிங் ஏரியாவில்தான் எல்லோரும் டாப் அடிப்போம். எதுக்குன்னே தெரியாம எப்பவும் சிரிச்சுட்டே இருப்போம். படிப்பைத் தவிர, சைட் அடிக்கிறதுதான் பொழுதுபோக்கு. மேடை நாடகங்கள் நடிக்க ஆரம்பிச்சேன். ரெகுலரா ஜிம் போக ஆரம்பிச்சேன். அப்பவே எனக்கு சினிமா கனவு. உங்களுக்கு எப்படி விஜய்?”

“நான் பிறந்ததே சினிமா குடும்பம்தானே! அப்பா, அப்போ பரபரப்பான கமர்ஷியல் டைரக்டர். குழந்தை நட்சத்திரமா நிறையப் படங்களில் நடிக்கவெச்சார். குட்டி விஜயகாந்த்னா, அப்போ என்னைத்தான் கூப்பிடுவாங்க. நானும் சினிமாதான் எதிர்காலம்னு முடிவுபண்ணிட்டேன். லயோலாவுல சேர்ந்ததும் இன்னும் ஆர்வம் பத்திக்குச்சு!”

“எனக்கு விஸ்.காம் டிபார்ட்மென்ட்னா கொஞ்சம் பொறாமை விஜய். ஏன்னா... லயோலாவில் அது மட்டும்தானே கோ.எட். ஆளுக்கொரு ஃபிகரோடு உலக சினிமாக்களைப் பற்றி பேசிக்கிட்டு ஜாலியா பைக்ல அலைவீங்கள்ல.”

“அய்யய்யோ, நமக்கு எல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லீங்ணா! சொல்லப்போனா, காலேஜ்ல நான் இருக்கிற இடமே தெரியாது. அமைதியான பையன்னு சொல்ல வரலை. அதென்னவோ ஒரு காம்ப்ளெக்ஸ். ஆனா, அங்கே நான் சம்பாதிச்ச விஷயம், நண்பர்கள். லயோலாவில் என்னோடு படிச்ச பசங்கதான் இப்பவும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்” என்கிறார் விஜய்.

“நல்ல விஷயம்ல! இன்னிக்கு டைரக்டர் ‘தரணி’யா இருக்கும் ரமணி எல்லாம் என் செட். பத்துப் பதினைஞ்சு வருஷங்கள் கழிச்சுப் பார்த்தா, அவன் டைரக்டர். நான் ஹீரோ. நேரம் கிடைச்சா, கார்ல கிளம்பிப்போய் காலேஜுக்குள்ள ஒரு ஜாலி ரவுண்ட் அடிச்சுட்டுப் போவோம்.”

“ஃபீலிங்ஸு?” என விஜய் சிரிக்க, ‘`ய்யா... ய்யா!” எனப் புன்னகைக்கிறார் விக்ரம்.

“ஆமா... புதுப் படத்துக்கு ரெடியாகியாச்சா?” என விக்ரம் விசாரிக்க, ‘`மூணு மாசம் ரெஸ்ட்ல இருக்கேங்க. நிறையக் கதைகள் கேட்டுட்டே இருக்கேன். இன்னும் எதிலும் தெளிவா மனசு ஃபிக்ஸ் ஆகலை. ஒரு விஷயம், ஃபைனல் ஷேப்புக்கு வந்துட்டிருக்கு. இதோ... ஒரு வாரம், பத்து நாள்ல ரெடியாகிடுவேன். யப்பா, உடம்பை கும்முனு ஏத்தியிருக்கீங்களே, ‘பீமா’வுக்குப் புது கெட்டப்பா விக்ரம்?”

“ஆமா. ஷூட்டிங் கிளம்பவேண்டிய நேரம் வந்தாச்சு. ஊரெல்லாம் மழை பெய்ஞ்சு ஜில்லுனு இருந்தப்போ ரெஸ்ட்ல இருந்துட்டு, சம்மர் ஆரம்பிக்கிற டைம் பார்த்து வேலை ஆரம்பிக்குது. நம்ம ராசி அப்படி” என்று சிரிக்கிற விக்ரம், “நாம எல்லாம் ஒரு படம் முடிச்சுட்டுத்தானே அடுத்த படம் போறோம். சல்மான்கானை சமீபத்தில் பார்த்தேன். ‘என்ன பண்றீங்க?’னு கேட்டார். ‘மஜா’ முடிச்சுட்டு அடுத்த படம் பண்ணப்போறேன்’னு சொன்னேன். ‘மை காட்! ஒரு படம்தான் நடிக்கிறீங்களா? நான் இப்போ 21 படங்கள் நடிச்சுட்டிருக்கேன்’னு கேஷுவலா சொன்னார் சல்மான். நான் ஷாக்காகிட்டேன்” என்றதும், அட்டகாசமாகச் சிரிக்கிறார் விஜய்.

விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

“தமிழ் சினிமாவில் இது நல்ல கல்ச்சர். ஒரு படம் ஆரம்பிச்சா, அதை மொத்தமா முடிச்சுக் கொடுக்கிறதால், கடைசி ஃப்ரேம் வரைக்கும் அதில் தெளிவா கான்சென்ட்ரேட் பண்ண முடியுது. அதுவும் விக்ரம் மாதிரி ஆட்களுக்கு இன்னும் வசதி. உடம்பை ஏத்தி இறக்கி, கெட்டப்பையே மாத்திப்பாங்க. படத்துக்குப் படம் பளிச்சுனு அந்த வித்தியாசம் தெரியும். நம்ம கதையே வேற, சட்டையை மட்டும் மாத்திட்டு அடுத்த படத்துக்கு நடிக்கப் போயிடுவேன்” - தன்னைப் பற்றி தானே ஜோக் அடித்துக்கொண்டு சிரிக்கிறார் விஜய்.

“நான் உங்க ரசிகன் தெரியுமா விஜய்!” என்று விக்ரம் ஆரம்பிக்க, ‘`ண்ணா... நான் எதுனா தப்புப் பண்ணியிருந்தா, நாம பேசித் தீர்த்துக்கலாங்ணா” என்கிறார் விஜய் கொஞ்சலாக.

‘`யெஸ் விஜய், நான் எல்லாம் ஒவ்வொரு படத்துக்கும் எடையை ஏத்துறது, குறைக்கிறதுன்னு படம் சிறப்பா வரணும்னு என்னென்னவோ பண்றேன். ஆனா, நீங்க ஜாலியா புது மாப்பிள்ளை மாதிரி வந்து நின்னு ‘அப்படிப் போடு... போடு’னு ஒரே டான்ஸ்ல அசத்திடுறீங்க. அப்புறம் உங்க ஸ்பெஷல் காமெடி. ரொம்பப் பிரமாதமா பண்றீங்க” - விக்ரம் சொல்லச் சொல்ல மலர்கிற விஜய், ‘`ஸ்டேட் அவார்டு, நேஷனல் அவார்டுனு அடிச்சுத் தூள் பண்ணிட்டு இருக்கிறது இப்போ நீங்கதான். எனக்குப் பிடிச்ச உங்க படங்களை லிஸ்ட் போடணும்னா கிட்டத்தட்ட எல்லா படங்களையும் சொல்லணும். ‘ஜெமினி’யில் ‘ஓ போடு...’னு ஆடிட்டு, சடார்னு ‘காசி’ மாதிரி ரொம்ப வித்தியாசமான கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் பின்னிப் பிரிச்சுடுவீங்க. ‘பிதாமகன்’லாம் சான்ஸே இல்லை. படம் பார்க்கும்போதே என்னை மறந்துட்டேன். ‘விக்ரம், நிச்சயம் நேஷனல் அவார்டு வாங்குவார்’னு அப்பவே பேட்டியில் சொன்னேன்.

‘அந்நியன்’ மாதிரி ஒரே படத்தில் வித்தியாசமான மூணு கேரக்டர்கள் பண்றது எல்லாம் ரொம்பப் பெரிய ரேஞ்சுங்ணா! ஒரே படத்தில் மூணு கெட்டப், மூணு கேரக்டர், மூணு பாடிலாங்வேஜ். அதுவும் மாறி மாறிப் பேசுவீங்களே அந்த சீன்... ஹேட்ஸ் ஆஃப்!” என விஜய் சொல்ல, ‘`தேங்க்ஸ் எ லாட்!” எனப் பேச ஆரம்பிக்கிறார் விக்ரம்.

“இதுதான் உங்ககிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் விஜய். ஈகோவே இல்லாமப் பேசறதிலும் பழகுறதிலும் நீங்க கில்லிதான். எனக்குத் தெரிஞ்சு விஜய்க்குத்தான் ரசிகர்கள் அதிகம்னு நினைக்கிறேன். ‘காதலுக்கு மரியாதை’ வந்ததுமே விஜய் மேல ஒரு ஸ்பெஷல் அட்ராக்‌ஷன் வந்திடுச்சு. எனக்கு உங்க டயலாக் டெலிவரி பிடிக்கும். ஆமா, இப்பல்லாம் ஒவ்வொரு படத்துக்கும் உங்க அழகு ச்சும்மா கூடிட்டேபோகுதே, அந்த ரகசியம் என்னன்னு சொல்லுங்களேன்?”
“ண்ணா, ண்ணா!” என வெட்கம் காட்டுகிறார் விஜய்.

“எனக்கு ‘சச்சின்’ பிடிச்சது. ‘கில்லி’ மாதிரி பவர்ஃபுல் ஆக்‌ஷன் படம் பண்ணிட்டு, சாக்லேட் பாய் மாதிரி பெர்ஃபார்ம் பண்ணியிருந்தது பார்க்க க்யூட்டா இருந்தது. கேஷுவலா சின்னச்சின்னக் குறும்புகள் பண்ணி அசத்துறீங்க விஜய். ப்ளீஸ், அந்தத் தொழில் ரகசியம் சொல்லுங்களேன்” என்று மனதாரப் புகழ்கிறார் விக்ரம்.

என்ன சொல்வது எனத் தெரியாமல் சிரிக்கிற விஜய், ‘`நீங்க சினிமாவுக்கு வந்தது எதுக்காக?” என்கிறார் விக்ரமிடம்.

“நிஜம் சொல்லணும்னா, கார் வாங்கணும், ஹேப்பியா இருக்கணும், எல்லோரும் திரும்பிப் பார்க்கணும்கிற சின்னச்சின்ன ஆசைகளுக்காகத்தான் சினிமாவுக்கே வந்தேன். வந்து ஒரு ரவுண்ட் முட்டி மோதிப் போராடி ஒரு இடம் கிடைச்சதுக்கு அப்புறம், நம்ம நடிப்புக்கும் உழைப்புக்கும் ஒரு மரியாதை கிடைக்குது பாருங்க, அதுதான் இந்த கார், பணம் எல்லாத்தையும்விடப் பெருசுன்னு இப்போ புரியுது.”

“நான் இன்னும் சுத்தம். எனக்கு படிப்பே வரலை. வாழ்க்கையில் படிப்பு தேவைப்படாத ஏரியாவில் ஒண்ணு சினிமா. அப்படி, இப்படி உள்ளே வந்த பையன் நான்!” - ஸ்டைலாகச் சிரிக்கிறார் விஜய்.

“காலேஜ் நாட்களில் நான் நிறைய நாடகங்கள் நடிச்சேன் விஜய். லயோலா மாதிரி இடத்தில் படிக்கும்போது, நம்மை வளர்த்துக்க நிறைய ஸ்கோப் கிடைக்கும். ஆனா, அவ்வளவு கனவுகளோடு சினிமாவுக்கு வந்தாலும் ஆரம்பத்தில் பெரிய ‘பிரேக்’ எதுவும் கிடைக்கலை. ரொம்ப நாள் கழிச்சு, பாலாவைச் சந்திச்சேன். அப்ப ஏற ஆரம்பிச்சது என் கிராஃப். என் திறமைக்கு நல்ல தீனி கிடைக்க ஆரம்பிச்சது. கெட்டப் சேஞ்ச் பண்றது எல்லாம் ஒரு விஷயமே இல்லை. நீங்க நிச்சயமா பாலா டைரக்‌ஷன்ல ஒரு படம் பண்ணணும் விஜய். இது பெர்சனலா என் ஆசை. ஏன்னா, அந்த கெமிஸ்ட்ரி, அந்த மேஜிக் தனியா இருக்கும். அதுக்கு முன்னால், நான் உங்ககிட்ட கொஞ்சம் டான்ஸ் டிப்ஸ் கேட்டு வாங்கிக்கிறேன். ஓ.கே-வா?” என்ற விக்ரமை, புன்னகையால் எதிர்கொள்கிறார் விஜய்.

“எவ்ளோ அழகாப் பேசறீங்க! எனக்குப் பளிச்சுனு சொல்ல வரலை. தேங்க்ஸ் விக்ரம். டான்ஸ், டான்ஸ்னே என்னை ரொம்பப் புகழ்றீங்க. நான் ஓரளவு டான்ஸ் ஆடுறதுக்குக் காரணம், என் பெர்சனல் ஆர்வம் மட்டும்தான். ஸ்கூல் டைமில் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ‘அஞ்சலி’ படத்தில் வரும், ‘இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது...’ பாடலுக்கு முதல்ல ஸ்டேஜ்ல ஆடினோம்.

விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

குரூப் டான்ஸர்தான். அதுக்குக் கிடைச்ச உற்சாகம்தான் என்னை டான்ஸ்ல தீவிரமாக்குச்சு. இப்பவும் நான் டி.வி-யில் பார்ப்பது சினிமா பாடல்கள்தான். தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ்னு சேனல் சேனலா மாத்திப் பார்த்துட்டே இருப்பேன்” என்ற விஜய், ‘`எங்கேயோ ஃபங்ஷன்களில் `ஹலோ', `ஹாய்'னு சொல்லிட்டிருந்த நாம, எங்கே முதன்முதலா சந்திச்சோம்னு ஞாபகம் இருக்கா?” என்கிறார்.

‘`ஃபிஷர்மென் கோவ்!” என்கிறார் விக்ரம் மின்னலாக. “நல்லா ஞாபகம் இருக்கு விஜய். நான் என் ஃபேமிலியோடு, நீங்க உங்க ஃபேமிலியோடுனு வந்த இடத்தில் தற்செயலாச் சந்திச்சோம். என் மனைவி ஷைலாவும், உங்க மனைவி சங்கீதாவும் ரொம்ப ஃப்ரெண்டாகிட்டாங்க. நாம எல்லாரும் பீச்ல ஜாலியா உட்கார்ந்து பேசிட்டிருந்தோமே!”

“ஆமா, ரொம்ப நல்ல மீட்டிங்ல!” என்ற விஜய், “சும்மா தெரிஞ்சுக்கணும்னு கேக்குறேன். சினிமாவில் உங்களை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணினவங்க யாரு?” என்றார் விக்ரமிடம்.

“இது கஷ்டமான கேள்வி விஜய். ஒவ்வொருத்தர்கிட்டயும் கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்லணும்னா கமல் சார். சச்சின் டெண்டுல்கர் படிச்ச ஸ்கூல்ல படிக்கிற பசங்க எப்படி கிரிக்கெட் விளையாட ஆசைப்படுவாங்களோ, அதே மாதிரி நான் கமல் சார் ஊர்க்காரன் என்பதால், எனக்கும் அவர் மாதிரி நடிக்கணும்னு ஆசை வந்திருக்கலாம். ஆனா, என்னை ரொம்பப் பாதிச்ச இன்னொரு முக்கியமானவர் பாலா. என்னை எனக்கே அடையாளம் காட்டின நண்பன். அப்புறம் ரஜினி சார். நான் எப்போ ஒரு நல்ல படம் பண்ணாலும் உடனே கூப்பிட்டுப் பாராட்டுவார். இன்னிக்கு தமிழ் சினிமாவின் உயரம் அவர். அவர் என்னைப் பாராட்டும்போது எல்லாம் ஜில்லுனு இருக்கும்” என்கிறார் விக்ரம் பரவசமாக.

‘`எனக்குப் பிடிக்காத நடிகர்னு யாருமே இருக்க முடியாது. எல்லோருடைய படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். உதாரணமா, ஒரு நக்கல் கேரக்டர் நடிக்கணும்னா சத்யராஜ் சார் ஞாபகம்தான் வரும். ‘அமைதிப்படை’ படம் எல்லாம் நக்கல் நடிப்போட சிகரம். அந்த மாதிரி கமல் சார்னா, இப்போ வரைக்கும் பிரமிப்புதான். எப்பவும் ஆச்சர்யம் தர்ற பெர்சனாலிட்டி. எல்லாரையும்விட ஒரு படி மேலே இம்ப்ரெஸ் பண்ணினவர்னா, இங்கே ரஜினி சார். இந்தியில் அமிதாப்.

‘விஜய் - விக்ரமைப் பார்க்கிறபோது, நானும் கமலும் நட்போட அந்தக் காலத்தில் பழகினது, நடிச்சது எல்லாம் ஞாபகத்துக்கு வருது’னு ஒரு தடவை ரஜினி சார் சொன்னப்போ, மனசுக்குள்ள பெரிய சந்தோஷம். ரஜினி சார் பண்ற மாதிரியான கமர்ஷியல் ரூட் எனக்கு பிடிக்கும்.  தெளிவான என்டர்டெயின்மென்ட் ஏரியா. நாமளும் ஏதோ நல்ல ரூட்லதான் போயிட்டிருக்கோம்னு மனசுக்கு ஒரு தெம்பு வரும்!”

“இந்தியில் அமிதாப் - ஷாரூக் - ஹ்ருதிக்னு செம ஸ்டார் காம்பினேஷன்ல படங்கள் பண்றாங்க. தமிழில் அப்படி வாய்ப்பே இல்லையா?” என்று இடையில் புகுந்தோம்.

“அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் வேணுமே! ‘ஷோலே’ போல, ‘பிதாமகன்’ போல, ‘தளபதி’ போல ஒண்ணு சிக்கினா செய்யலாம்” என்ற விஜய், “என்ன சொல்றீங்க விக்ரம்?” என்கிறார்.

“நான் ரெடி விஜய்! நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம். ஆனா, ஒரு கண்டிஷன், அந்தப் படத்தில் நீங்க டான்ஸ் ஆடக் கூடாது. குத்துப்பாட்டு எல்லாம் எனக்குத்தான்” என விக்ரம் காமெடி பண்ண, “அய்யய்யோ! நமக்கு தெளிவா வர்ற ஒரே விஷயமே அதுதாங்ணா. சரி, அப்படின்னா அந்தப் படத்தில் நீங்க ஸ்பெஷலா மெனக்கெட்டு ஏதாவது கெட்டப் சேஞ்ச் பண்ணி நடிக்கக் கூடாது... ஓ.கே-யா?” என்று கேட்க, இருவரிடமும் வெடிச்சிரிப்பு.

“ஏது... பேசறதைப் பார்த்தா, நாம இப்போ கொஞ்சம் சீனியராகிட்டோம் போல. சிம்பு, தனுஷ், பரத், ஆர்யா, விஷால்னு இன்னொரு செட்டே உள்ளே வந்தாச்சே! ஜாலியா டீம் சேர்த்து கிரிக்கெட் மேட்ச் ஆடுறாங்க பார்த்தீங்களா?” என்று விக்ரம் சொல்ல, ‘`ஹைய்யோ... பயங்கரமான கேங் அது!” என இன்னும் பெர்சனலாகப் பேச ஆரம்பிக்கிறார் விஜய்.

“செம கேங் அது. அடி பின்றாங்கப்பா நம்ம மக்கள்!” - விக்ரமின் தோள் மீது சாய்ந்து கேமராவுக்கு போஸ் தந்தபடியே சொல்ல ஆரம்பிக்கிறார் விஜய். பேச்சு, இளம் நடிகர்கள் ஜமா சேர்ந்து கிரிக்கெட் ஆடுவது பற்றி தொடர்கிறது.
“என்னையும் மேட்சுக்குக் கூப்பிட்டாங்க. முதல்ல எனக்கு கிரிக்கெட் ஆடத் தெரியாது. அப்புறம் மனசுக்குள்ள ஒரு ஜெர்க் வேற. என்னன்னா... சினிமாவுல நாம ஹைஸ்பீடுல எகிறி எகிறி அடிக்கிறதைப் பார்த்து, என்னென்னவோ கற்பனை பண்ணிவெச்சிருப்பாங்க ஜனங்க. பேட் பிடிச்சா, நாம அடிக்கிறது எல்லாம் ச்சும்மா சிக்ஸரும் பெளண்டரியுமா போகும். பௌலிங் பண்ண வந்தா, கில்லி மாதிரி நாம வீசுற பாலுக்கு எல்லாம் விக்கெட் விழும்னு எதிர்பார்ப்பாங்க. ஆனா, நாம போயி பேட் பிடிச்சு நின்னு முதல் பால்லயே புட்டுக்கிச்சுன்னா, மொத்தமும் காமெடியாகிடுமே. அதான், நைஸா எஸ்கேப் ஆகிட்டேன்” என விஜய் சொல்ல, ‘`நம்ம கதையும் அதேதான்!” எனச் சிரிக்கும் விக்ரமின் கன்னக்குழியில் ததும்பி வழிகிறது குறும்பு.

“நான் இப்பவும் தெருவில் ஜாலி கிரிக்கெட் ஆடுற பார்ட்டிதான் விஜய். ஆனா, சீரியஸ் மேட்ச் ஆடுற அளவுக்கு டச் இல்லை. ஒரு முக்கியமான விஷயம் தெரியுமா? நான் சும்மா டி.வி-யில் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தாலே அன்னிக்கு நம்ம டீம் நிச்சயம் தோத்துடும். அப்படி ஒரு ராசி எனக்கு!” எனச் சிரிக்கிற விக்ரம், ‘`ஆனா, நீங்க ஆட வந்திருந்தீங்கன்னா... நிச்சயம் நானும் மேட்சுக்கு வந்திருப்பேன்!’’ என்கிறார் அழகாக.

“பசங்க செம கேங் ஆகிட்டாங்க விக்ரம். ஜிம்கானா க்ளப்ல தினமும் பிராக்டீஸ் நடக்குதாம். அப்பாஸ், சிம்பு, பரத், ஆர்யா, விஷால், ஸ்ரீகாந்த், விக்ராந்த்னு ஜாலி பண்றாங்க. என் கசின் விக்ராந்தும் பிரமாதமா கிரிக்கெட் ஆடுறான். அவன் ஏற்கெனவே நல்ல ப்ளேயர். கிரிக்கெட்டை விட்டுட்டுத்தான் சினிமாவுக்கு வந்தான். ‘யப்பா, இப்ப சினிமாவை விட்டுட்டு மறுபடியும் கிரிக்கெட் பக்கம் போயிடாதப்பா’னு சொன்னா, சார் சிரிக்கிறார்” என்கிறார் விஜய்.
“கேம்ஸ் இருக்கட்டும், இப்போ ட்ரீம்ஸ் பற்றி பேசலாம். இப்ப நாம நிறைய ஹீரோயின்களோடு டூயட் பாடுறோம். உங்க ட்ரீம் ஹீரோயின் யார் விஜய்?” என்று விக்ரம் கொக்கி போட, ‘`ஆஹா, இந்த விளையாட்டுக்கு நான் வரலை சாமி!” எனக் குறும்பாகச் சிரிக்கிறார் விஜய்.

“எனக்கு அப்பட்டமான கிளாமர் அவ்வளவா பிடிக்காது. ஹோம்லியான... ரம்யமான ஒரு வசீகரம்தான் என் சாய்ஸ். அப்பவும் இப்பவும் எப்பவும் என் ஃபேவரிட் ஜெயப்ரதா. ‘சலங்கை ஒலி’ படம் இப்பவும் பார்த்துட்டே இருக்கலாம். ‘மௌனமான நேரம் மனதில் என்ன பாரம்?...’னு பார்வையிலேயே கிறங்கடிப்பாங்க!’' என்று விக்ரம் எடுத்துக்கொடுக்க,

‘`எனக்கு ஸ்ரீதேவிங்ணா!” என ஆரம்பிக்கிறார் விஜய். “திகைச்சுப் பார்க்கவைக்கிற அழகு. ஆனா, பச்சப்புள்ள மாதிரி பேச்சு, சிரிப்புன்னு ஸ்கோர் பண்ணிடுவாங்க. தமிழ், தெலுங்குன்னு இல்லாம, மொத்த இந்தியாவும் கொண்டாடிய பெண்ணாச்சே! ஆமா... எவ்ளோ சினிமா பார்ப்பீங்க விக்ரம்?”

“புதுசா என்ன டி.வி.டி வந்தாலும் வாங்கிடுவேன். ஆனா, தமிழ்ப் படம்னா... அதென்னவோ தியேட்டர்ல போய்ப் பார்க்கத்தான் பிடிக்கும்!”

“யெஸ் விக்ரம். அதுவும் ரஜினி - கமல் படம் ரிலீஸ் ஆனா, நான்தான் முதல் ரசிகன். இதோ இப்போ, ‘சிவாஜி’, ‘தசாவதாரம்’ ரெண்டும் ரெடியாகுதே. அது எப்போ ரிலீஸ் ஆனாலும் சரி, நிச்சயமா ஏதாவது ஒரு தியேட்டர்ல முதல் நாள், முதல் ஷோ பார்த்திடுவேன்” என்று விஜய் சொல்ல, ‘`எனக்கும் ஒரு டிக்கெட்!” என்கிறார் விக்ரம், ஸ்டைலாக!

“ஷூட்டிங் டைம் தவிர, விக்ரம் சாரை மீட் பண்ணணும்னா எங்கே பிடிக்கலாம்” என விஜய் ஜாலியாக விசாரிக்க, ‘`அந்த விதத்தில் நான் ஜாலி விஜய். பெசன்ட் நகர்ல என் வீடு. இப்பவும் அங்கே குட்டிப்பசங்களோடு தெருவில் கிரிக்கெட் ஆடுவேன். பீச்ல வாக்கிங் போவேன். முதல் தடவையா பார்க்கிறவங்க, டக்குனு ஹார்ட் அட்டாக்கே வந்த மாதிரி திகைச்சுப் பார்ப்பாங்க. ரெண்டு வாரம் கழிச்சு ‘அதோ வர்றார் பார் விக்ரம். ரெகுலரா வருவார்’னு பழகிடும். இதுதான் என் ஃபார்முலா!”

விஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

“அதெல்லாம் கத்துக்கணும்ங்க.”

“ஓ... அப்படின்னா, சம்மர் கோர்ஸ் ஜாயின் பண்றீங்களா?” எனச் சிரிக்கும் விக்ரம், ‘`காலேஜ் டைமில் எவ்வளவு ஃப்ரீயா இருந்தேனோ, அப்படியேதான் இப்பவும். லேண்ட்மார்க், லைஃப் ஸ்டைல், காபிடே, ரெஸ்டாரன்ட், பீச்னு என்னை எங்கே வேணும்னாலும் பார்க்கலாம். பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர்ல பெட்ஷீட் போத்தி, தொப்பி போட்டுப் படுத்துக்கிட்டு யாராவது படம் பார்த்தா, அடுத்த முறை நிச்சயமா `ஹலோ' சொல்லுங்க. ஏன்னா, அது நான்தான்” - விக்ரம் சொல்ல, சிரிக்கிறார் விஜய்.

“சென்னையில் பொதுவா வெளியே நிறைய சுத்த முடியலை விக்ரம். ரிலாக்ஸ்டா இருந்தேன்னா, சத்தமா மியூஸிக் வெச்சுக்கிட்டு கூடவே நானும் சேர்ந்து பாடிட்டே தனியா டிரைவ் போவேன். இப்போ ‘ஆதி’யில் பயன்படுத்திய அந்த யெஸ்லோ கலர் பைக் நம்மகிட்டதான் இருக்கு. அப்பப்போ ஈ.சி.ஆர் ரோட்டில் ஜாலி டிரைவ் போவேன்.”

“அது, அந்த பைக் இப்போ தமிழ்நாட்டுக்கே தெரியுமே!”

“நீங்க வேற விக்ரம், அடையாறுலயே அதே கலர்ல இப்போ ஆறேழு பைக் ஓடுது. தவிர, நான் உஷாரா ஹெல்மெட் போட்டுத்தான் போவேன். எப்போவாவது ‘சோழா’வில் ‘பெஷாவர்’ ரெஸ்டாரன்ட்டுக்கு ஃபேமிலியோடு போவோம். இல்லைன்னா, நண்பர்கள் வீடுதான்!”

“நான் கட்டுப்பாடா இருக்கிறது என் குழந்தைகளோடு இருக்கும்போது மட்டும்தான் விஜய். ஒரு அப்பாவா அவங்களோடு நான் நிக்கிற நேரத்தில், என்னை ஒரு ஸ்டாரா யாரும் பார்க்கிறதை விரும்ப மாட்டேன். முதல்ல, அவங்க பிரைவசி கெட்டுடும். என் பொண்ணு அக்‌ஷிதா ரொம்ப ஷார்ப். ‘விக்ரமின் மகள்’கிற அடையாளத்தைவிட, ‘அக்‌ஷிதாவின் அப்பா’னுதான் என்னை யாரும் பார்க்க விரும்புவாங்க. ஆனா, என் பையன் த்ரூவ் இருக்காரே... அப்படியே உல்டா. எங்கேயோ தியேட்டர்ல போய் டிக்கெட் கிடைக்கலைன்னதும், ‘விக்ரமோட சன் வந்திருக்கேன்னு போய்ச் சொல்லுங்க, போங்க!’னு பந்தாவா சொல்லியிருக்கார்!”

“பசங்ககிட்ட அது ஓர் ஏக்கம் இருக்குல்ல. என் பையன் சஞ்சய்யும் அப்படியேதான். ‘அப்பா, இன்னிக்கு ஈவினிங் என்னை ஸ்கூலுக்கு வந்து பிக்கப் பண்ணிக்கோ’னு சொல்வான். கார் எடுத்துட்டுப் போய்க் கூப்பிட்டா, எல்லோரும் பார்க்கிற மாதிரி என்னோட ஒரு நடை நடந்து வருவான் பாருங்க... சாருக்கு அதில் அப்படி ஒரு பெருமை! சரி, சாப்பாடு எல்லாம் எப்படி விக்ரம்?”

“டைனிங் டேபிள்ள கபீம்குபீம்தான். சாதாரணமா பதினைஞ்சு இட்லிகூடச் சாப்பிடுவேன். ஒரு படத்துக்கு கும்முனு ரெடியாகணும்னா, வேளாவேளைக்கு தெளிவா சாப்பிட்டு, மணிக்கணக்குல ஜிம்ல வொர்க்அவுட் பண்ணி தயாராவேன். வெயிட் குறைக்கணும்னா, வெறுமனே ஜூஸ் மட்டுமே குடிச்சு வாரக்கணக்கில் உயிர் வாழவும் தயாரா இருப்பேன்.”

“அது நம்மால முடியாதுங்ணா. எனக்கு கடல் உணவுன்னா இஷ்டம். வீட்டுல செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அசைவம் சமைக்க மாட்டாங்க. நான் கெஞ்சிக் கூத்தாடி முதல் நாளே ரெண்டு துண்டு மீனாவது ஃப்ரிஜ்ல எடுத்துவெச்சு, தனியா எனக்காகப் பொரிச்சுத் தரச்சொல்லி சாப்பிடுற பார்ட்டி.”

“எப்பவுமே உடம்பை ஸ்லிம்மா வெச்சிருக்கீங்களே, அதென்ன ரகசியம் விஜய்?”

“எனக்கு இப்பவும் ஒரு விநோத பழக்கம் உண்டு. தினமும் சாயங்காலம் 6 மணிக்கே ஹெவியா ஒரு பிடி பிடிச்சிருவேன். அதுக்கு அப்புறம் எதுவுமே சாப்பிட மாட்டேன். என்ன வசதின்னா, நைட் தூங்கப்போறதுக்கு முன்னாடியே எல்லாம் டைஜஸ்ட் ஆகிடும். இது ரொம்ப வருஷப் பழக்கம். மற்றபடி நாம ஆடுற குத்தாட்டத்துக்கே எல்லா எனர்ஜியும் போயிடும்ல” எனச் சிரிக்கிறார் விஜய்.

“நைஸ் டிப். நானும் 6 மணிக்கே சாப்பிடப் பார்க்கிறேன். என்ன... இன்னும் ஒரு தடவை எக்ஸ்ட்ராவா சாப்பிடவேண்டியிருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” - ஜோக்கடிக்கிறார் விக்ரம்.

“அப்பப்போ பையனோட ஹோம்வொர்க் பண்ண உட்காருவேன் விக்ரம். படிக்கிற காலத்திலேயே நமக்கு கணக்கு வராது. இப்ப இருக்கும் சிலபஸைப் பார்த்தா, அது எல்.கே.ஜி., யு.கே.ஜி-யா இல்லை எம்.ஏ.,

எம்.எஸ்.ஸி-யான்னே புரியமாட்டேங்குது. ஹெல்ப் பண்றேன்னு உட்கார்ந்து நான் சொதப்ப ஆரம்பிச்சா, ‘எங்க அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியலை’னு, போறவங்க வர்றவங்ககிட்ட எல்லாம் சொல்லிருவான். பசங்களைக் கவனிக்க, பொறுமை வேணும்ல. மிஸஸ் விக்ரம் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். நிறைய சோஷியல் சர்வீஸ் எல்லாம் பண்றாங்கன்னு...” என்றதும் விக்ரம் முகத்தில் புன்னகை.

‘`ஷைலா இல்லைன்னா, எங்கேயோ மாசச் சம்பளத்துக்கு வேலைபார்க்கிற கென்னியாவே என் வாழ்க்கை முடிஞ்சுபோயிருக்கும் விஜய். என் கிராஃப் இன்ச் இன்ச்சா ஏறினது ஷைலாவால்தான். உலகம் எப்பவுமே என்கிட்ட இருந்து மட்டும்தான் தொடங்குதுன்னு நினைச்ச என்னை, அது எதிர்ல இருக்கும் மனுஷங்ககிட்ட இருந்தும் தொடங்குதுனு எனக்குப் புரியவெச்சது ஷைலா. டிரக் - அடிக்ட்டான மனுஷங்களுக்காக ரெகுலரா கவுன்சலிங் பண்றாங்க. ரோட்ல யாரையாவது ‘அய்யோ பாவம்!’னு பார்த்துட்டா, உடனே கையில் என்ன இருக்கோ குடுத்துடுவாங்க. ‘அவன் ஏமாத்துறாம்ப்பா’னு நான் சொன்னா, ‘ஏமாத்துறதுக்காக பிச்சை எடுக்கிற அளவுக்குக் கீழே இறங்கிட்டார்ல. அதைவிட அவருக்கு பனிஷ்மென்ட் எதுவும் இல்லை. அவர் நம்மை ஏமாத்தலை. தன்னைத்தானே ஏமாத்திக்கிறார். அதுக்காக நாம நம்மால முடிஞ்சதைச் செய்யாம வரக் கூடாது’னு சொல்வாங்க.

சினிமா, வீட்டுக்குள்ள வரக்கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருப்பாங்க. அதே மாதிரி வீட்டையும் சினிமாவுக்குள்ள நுழைக்க மாட்டாங்க. ஓ.கே., இப்போ ஹானரபிள் சங்கீதா மேடத்தின் ஸ்பெஷல் என்னன்னு சொல்லுங்க விஜய்” என விக்ரம் கேட்க, தொடர்கிறார் விஜய்.

“சங்கீதாவே ஸ்பெஷல்தான். எனக்கு நூறு மார்க் போடுவீங்கன்னா... நான் ரெண்டு ஜீரோ, எனக்கு முன்னால் இருக்கிற ஒண்ணு சங்கீதா! தொழில்ல எந்தக் கவலை இருந்தாலும் வீட்டுக்குள்ள போனா துளிகூட இருக்காது. அப்படியே சந்தோஷம் தொத்திக்கும். ரெண்டு நாள் அவங்க ஊர்ல இல்லைன்னாலே எனக்கு வாழ்க்கை ‘டல்’ அடிக்க ஆரம்பிச்சுடும். சினிமான்னாலும் சரி, வீடுன்னாலும் சரி என் காஸ்ட்யூம் எல்லாம் அவங்க செலக்‌ஷன்தான். என் டேஸ்ட் என்னன்னு அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

சஞ்சய்யோட குட்டி சைக்கிளை நான் வீட்டு ஹாலில் ஓட்ட, பஞ்சாயத்துக்கு அம்மாவைக் கூட்டிட்டு வருவான் சஞ்சய். அவனுக்காக, சும்மா லேசா திட்டிட்டு, ‘சரி... சரி... இன்னும் ஒரு ரவுண்ட் மட்டும் ஓட்டிட்டு சஞ்சய்கிட்ட குடுத்திரணும்’னு சொல்வாங்க பாருங்க. அப்ப என்னையும் கிட்டத்தட்ட சஞ்சய் வயசுக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க” - சிரிக்கிறார் விஜய்.

“யப்பா, நாம ரெண்டு பேரும் எஸ்கேப்” எனச் சிரிக்கிற விக்ரம், `‘பாட்டு, உங்க ஜீன்ல கலந்திருக்கு. உங்க அம்மாவே பெரிய சிங்கர். ஒரு பாட்டு பாடுங்க விஜய்’' என்று விக்ரம் கோரிக்கை வைக்க, `‘ண்ணா, நீங்க காலேஜ்ல எனக்கு சீனியர்தான். அதுக்காக ராக்கிங் பண்றீங்களே... எனக்காக நீங்க ஒரு பாட்டு முதல்ல பாடுங்க” என விக்ரம் தொடுத்த அம்பை அவரிடமே திருப்பினார் விஜய்.

“உயிரே... உயிரே... வந்து என்னோடு கலந்துவிடு...’' - ‘பம்பாய்’ பாடலை உருகி உருகி, கண்கள் மூடி விக்ரம் பாடி முடிக்க, ‘`ஹரிஹரன் சார், ஆட்டோகிராஃப் ப்ளீஸ்” என்று விஜய் கேட்க, சிரிப்பில் அதிர்கிறது அறை. கை குலுக்கிப் பாராட்டும் விஜய்யைப் பாட அழைக்கிறார் விக்ரம்.

“இப்போது ‘என்னோட லைலா வர்றாளே ஸ்டைலா...’ பாடலை விஜய் பாடுவார். இந்தப் பாடலை விஜய் ரசிகர்கள் மற்றும் சங்கீதா, சஞ்சய், திவ்யா ஷாஷா ஆகியோருக்கு டெடிகேட் செய்கிறேன்” என்று விக்ரம் கலாய்க்க, கலகலப்பாகப் பாட ஆரம்பிக்கிறார் விஜய்...

“நெஞ்சுல கூலா ஊத்துது கோலா, தாகமே அடங்கல அடங்கல...” விஜய்யின் குரலுக்குத் தோதாக, டேபிளில் விக்ரமின் விரல்களும் விளையாட ஆரம்பிக்க, கச்சேரி... ஏ க்ளாஸ்!

- ரா.கண்ணன், த.செ.ஞானவேல்

படங்கள்: பொன்.காசிராஜன், என்.விவேக்.

2-4-2006, 9-4-2006 இதழ்களில் இருந்து...