Published:Updated:

கொடூரமான நகைமுரண்!

கொடூரமான நகைமுரண்!
பிரீமியம் ஸ்டோரி
கொடூரமான நகைமுரண்!

கொடூரமான நகைமுரண்!

கொடூரமான நகைமுரண்!

கொடூரமான நகைமுரண்!

Published:Updated:
கொடூரமான நகைமுரண்!
பிரீமியம் ஸ்டோரி
கொடூரமான நகைமுரண்!

‘தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்’ என, காணொளிக் காட்சி வழியாக தமிழிலேயே வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், மகிழ்ச்சி அடையும் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் இல்லை என்பதை முதலில் பிரதமர் அறிவாரா?

‘இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்' என மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கிவிட்டு, கடந்த ஆண்டுபோலவே கடைசி நேரத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் மோடியின் அமைச்சரவை சகாக்களும், தமிழக பா.ஜ.க தலைவர்களும்.

கொடூரமான நகைமுரண்!தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவு அளிப்பவர்கள்போல, கடந்த ஆண்டு அவசரச் சட்டம் கொண்டுவந்தது பா.ஜ.க அரசு. `தமிழர்களின் கலாசாரத்தைக் காக்க, எங்கள் அரசு எடுத்த முயற்சி மாபெரும் வெற்றி' என தமிழக பா.ஜ.க-வினர் தாரைத்தப்பட்டைகள் முழங்கக் கொண்டாடும்போதே அவசரச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை போட,

பா.ஜ.க-வின் நாடகம் அம்பலமானது. ஆம், ‘காட்சிப்படுத்தப்படக் கூடாது எனத் தடை செய்யப்பட்டிருக்கும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்காமல், அவசரச் சட்டம் கொண்டுவந்தால் உச்ச நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது’ என்பது சாமானியனுக்குக்கூட தெரியும்போது, மத்திய அரசுக்கு அது தெரியாமல் போய்விட்டது என்பதை யாரால் நம்ப முடியும்?

அவசரச் சட்டத்துக்குத் தடை விதித்து ஓர் ஆண்டுகாலம் வரை பலன் தரக்கூடிய உறுதியான எந்த முயற்சியையும் எடுக்காமல், ‘இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்' என, சென்ற இடங்களில் எல்லாம் உறுதியளித்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர். அவருடைய கட்சியின் இன்னொரு தலைவரோ, `ஜல்லிக்கட்டைத் தடை செய்தால் என்ன... ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் நடத்துங்கள்' எனக் கொம்புசீவிவிட்டார். இன்னொரு மூத்த தலைவரோ, `நீதிமன்றத் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால், தமிழக பா.ஜ.க ஆதரவு கொடுக்கும்' என உசுப்பேற்றினார். ஆனால், அதே பா.ஜ.க-வின் முக்கியப்புள்ளியான சுப்பிரமணியன் சுவாமி, `ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் தமிழ்ப் பொறுக்கிகள். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால், தமிழ்நாடு அரசைக் கலைக்க வேண்டும்' என, தமிழ்நாட்டுக்கு எதிராக வாய்க்கொழுப்போடு சமூக வலைதளத்தில் பதிவுசெய்தார்.

இவர்களுக்கு, எல்லா விஷயங்களைப்போலவே ஜல்லிக்கட்டும் ஒருவகை அரசியல். அவ்வளவுதான். ஆனால் தமிழ் மக்களுக்கு, ஜல்லிக்கட்டு என்பது பண்பாட்டுடன் தொடர்புடையது.  ஏறுதழுவுதலைப் பாடாத இலக்கியமே இல்லை. அத்தகைய வரலாற்றுப் பின்புலம் உள்ள விளையாட்டை நடத்துவதற்கு உரிய வழிவகை செய்யாமல் அரசியல் பூச்சாண்டி காட்டும் மத்திய அரசை என்ன செய்வது?

இந்த ஆண்டு பொங்கல் என்பதே, தமிழக விவசாயிக்கு இல்லை. கருகும் தமிழகப் பயிர்களைக் காப்பாற்ற, காவிரி நீரைத் திறந்துவிட வலியுறுத்தித் தொடுக்கப்பட்ட வழக்கில், `காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது... அதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அடுத்த சில நாட்களிலேயே அந்தர் பல்டி அடித்து, ‘இப்படி ஓர் உத்தரவைப் போடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை!' எனச் சொல்லி தமிழ்நாட்டுக்குப் பெரும் அநீதியை இழைத்து, காவிரிப் பிரச்னையை முடிவு இல்லாமல் நீட்டிக்க வழி செய்துவிட்டது.

தமிழ் உழவனின் வெற்றியைக் கொண்டாடும் பெரும்பொங்கல், தமிழனின் வீரத்தைப் பேசும் மாட்டுப்பொங்கல் என, தமிழனின் பாரம்பர்யங்களுக்கு எல்லாம் ஒரு பக்கம் மொத்தமாக உலைவைத்துவிட்டு, இன்னொரு பக்கம் `பொங்கல் வாழ்த்து’ சொல்வது எவ்வளவு கொடூரமான நகைமுரண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!