Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32

`பூமியில் உள்ள உயிரினங்களின் இரண்டாம் அறிவு நாவு’ என்பது ஆசான் தொல்காப்பியர் பதிவுசெய்த பரிணாமக்கொள்கையின் செய்திகளில் ஒன்று. முதல் அறிவு, தொடு உணர்வாகிய உற்றறிதல். நாவால் சுவைத்து அறிதல் இரண்டாம் அறிவு. சுவைகளின் வழியாக உணவின் தன்மைகளை அறிந்துகொள்ளும் முறைமைகள் இந்த அறிவில் புதைந்துள்ளன.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிக எளிமையான சான்றுகளுடன் தொடங்கு​வோம். ஓர் உணவுப்பொருளை வாயில் இட்டதும் அதன் ஐம்பூதத்தன்மை முதலில் உணரப்படுகிறது. குளிர்ச்சியோ வெப்பமோ அதிகம் இருந்தால், நாக்கு துடிக்கிறது; அந்தப் பொருளை எப்படியாவது வெளியே தள்ளிவிடத் தவிக்கிறது. `என்னால் தாங்கிக்கொள்ள இயலாத பருவ​நிலையில் உள்ள பொருட்களை உள்ளே அனுப்பாதே’ என்பது நாக்கு உரைக்கும் செய்தி. அதிகக் குளிர்ச்சி, சூடு ஆகிய தன்மைகளுடன் இருக்கும் பொருட்களை அப்படியே வயிற்றுக்குள் திணிப்பது, உடலின் பருவநிலையில் தவறான மாற்றங்களை உருவாக்கிவிடும்.

அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம் வகைகளை உண்ணும்போது, உடலுக்குள் வெப்பம் பரவுவதை உணரலாம். மிகையான சூட்டுடன் இருக்கும் பானங்களைப் பருகும்போது உடல் வியர்ப்​பதையும் கண்களில் நீர் பெருகுவதையும் அறியலாம். இயல்புக்கு மாறான ஐம்பூதத் தன்மையுடன் உள்ளே வரும் எல்லா பொருட்​களையும் உடல் தனது தன்மைக்கு மாற்றுவதற்காகக் கடினமாக உழைக்க வேண்டி​யுள்ளது. இவ்வாறான இயல்புக்கு மாறான பருவநிலைகொண்ட உணவுப் பழக்கங்கள் நீண்ட காலமாகத் தொடர்ந்தால், உடலின் ஐம்பூதச் சேர்க்கை எதிர்மறையான மாற்றங்களுக்கு உள்ளாகும்.

அதிகக் குளிர்ச்சி உள்ள பொருட்களை நீண்ட காலமாக உட்கொண்டால், உடலின் உள்வெப்பம் மிகுந்துகொண்டே இருக்கும். இந்த உள்வெப்பம்தான் உடலின் நோய் எதிர்ப்பாற்றல். காய்ச்சல் என்பதும், நோய் எதிர்ப்பாற்றலின் வடிவம்தான். சளி பிடிக்கும்போது எல்லாம் உடலில் மெல்லிய வெப்பம் பரவுவதைக் கவனிக்கலாம். இந்த வெப்பம் மிக அடிப்படையானது. உணவைச் செரிக்கவும் உள்வெப்பம் தேவை. ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் உணர்ந்துபாருங்கள், உடலின் உள்ளே மெல்லிய வெப்பம் உருவாகிக் கொண்டிருக்கும். ஏதேனும் விருந்து போன்ற சூழல்களில் கூடுதலான உணவு உண்டால், வயிற்றுப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும். நமது இயக்கத்துக்கும் வெப்பம்தான் அடிப்படை பூதம். வெப்பம் குறைந்த உடலின் இயக்கமும் குறையும். உடலுறவு எனப்படும் புணர்ச்சிக்கும் வெப்பம் இன்றியமையாதது.

வெப்பம் எனும் பூதம், உடலின் தேவைகளுக்கு ஏற்ப உருவாகிறது. தேவைகள் முடிந்த பிறகு தானே மறைகிறது. ஒவ்வொரு முறை அதிகக் குளிர்ச்சி உள்ள பொருள் உள்ளே வரும்போதும், அந்தக் குளிர்ச்சியைக் கட்டுப்படுத்தி இயல்பான பருவநிலையைப் பராமரிப்பது வெப்பத்தின் பணி. ஒருவேளை இந்தப் பணியை உடலின் வெப்பம் எனும் பூதம் செய்யத் தவறினால், உடல் குளிர்ந்துபோகும். குளிர்ச்சியில் இருந்து வெப்பத்தால் மீட்டெடுக்கப்படாத உடலில் உயிர் தங்காது. ஆக, உடல்நலனுக்கு மட்டும் அல்ல உயிர் வாழ்க்கைக்கும் உடலின் உள்வெப்பம் தேவையானது.

செயற்கையான வகைகளில் குளிரூட்டப்படும் உணவுகள், உடலின் உள்வெப்பத்தைத் தூண்டிக்கொண்டுதான் இருக்கும். உணவுப் பழக்கங்களில் அதிகக் குளிர்ச்சி உடைய பொருட்களை நீண்டகாலம் உட்கொண்டால், உடலின் உள்வெப்பம் தொடர்ந்து தூண்டப்படும். இதன் விளைவாக, உடலின் ஐம்பூத இயல்பு மாறிவிடுகிறது. குறிப்பாக, வெப்பம் எனும் பூதம் தனது வலிமையை இழக்கிறது. தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் எதுவும் வலிமை இழக்கும் என்பது இயற்கை விதி.

இவ்வாறான குளிர்ச்சி உணவுகளைக் கட்டுப்பாடு இன்றி உட்கொள்வோரின் உடல்கள், கபம் அல்லது நீர்த்தன்மை மிகுந்தவையாக மாறிவிடும். அதாவது, வெப்பம் தனது செயல் ஆற்றலைத் தணித்துக்கொள்வதால், உடலில் நீர்த்தன்மையை அதிகரிக்கிறது. எப்போதும் சளியுடன் வாழும் நிலை இவ்வாறான உடல்கொண்டோருக்கு உருவாகிறது. நுரையீரல் குளிர்ச்சி அதிகரித்தால், உடலின் எல்லா மைய உறுப்புகளும் பலவீனமடையும். நீண்டகாலத்தில் நிகழும் மாற்றங்கள் இவை என்றாலும், காரணங்களைப் புரிந்துகொள்ளாமல் இருந்தால் இந்த மாற்றங்களைத் தவிர்க்க இயலாது.

அதிகமான சூடு உடைய பொருட்களை அடிக்கடி உட்கொண்டால், உடலின் நீர்த்தன்மை வற்றுகிறது. உடலின் உள்ளிருக்கும் நீர்தான் தூய்மைப் பணிகளின் அரணாக உள்ளது. உடல் கழிவுகள் வெளியேறுவதற்கு நீர் தேவை. நீரில்தான் உயிர்கள் தோன்றுகின்றன. உடலின் உள்ளே இருக்கும் நீர்த்தன்மைதான், உடல் முழுவதுக்குமான செல்களின் வாழ்க்கைக்கான உணவு தரும். செல்களின் உள்கட்டமைப்பில் நீர்த்தன்மை மிகுந்திருப்பதைக் கவனிக்கலாம். உடலில் நீர்தான் பெரும்பகுதியாக இருக்கிறது. நீரின் முக்கியமான இயல்பு என்னவெனில், அதிகமாகத் தேங்கவும் கூடாது; அதிகமாக வெளியேறவும் கூடாது. அதிகமான தேக்கம் நோயாகும்; வெளியேற்றம் பலவீனமாகும்.

சூடான பொருளைத் தொடும்போது உடலின் உற்றறிவு, ‘இது அதிகச் சூடானது’ என்பதை உணர்த்துகிறது. அதன் அறிவுறுத்தலை மீறி வாய்க்குள் அந்தப் பொருளைத் திணிக்கும்போது நாக்கு எச்சரிக்கை செய்கிறது. `என்னால் தாங்க இயலாத சூட்டுடன் இந்தப் பொருள் உள்ளது’ என்பதை, தனது துடிப்பினாலும் எரிச்சல் எனும் உணர்ச்சியினாலும் வெளிப்படுத்துகிறது. இந்த இரு அறிவுகளையும் மீறி, வயிற்றுக்குள் அதிகச் சூடான பொருட்களைத் தள்ளும்போது உடல் தொல்லைக்கு உள்ளாகிறது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32

உள்ளே வரும் இயல்பு மீறிய உணவுகளுக்காக உடல் எதிர்வினையாற்றவேண்டியுள்ளது. அதிகமான சூட்டைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு முறையும் தனது நீர்த்தன்மையைத் தூண்டுவது உடல் வழக்கம். நீண்ட காலம் இவ்வாறான எதிர்வினை நீடித்தால், உடலின் பருவநிலையில் மாற்றங்கள் உருவாகின்றன. உடலின் கழிவு வெளியேற்ற மண்டலங்கள் கூடுதலாகப் பணியாற்றவேண்டிய நிலை உருவாகிறது. இதனால் அதிக வியர்வை, அடிக்கடி அல்லது இயல்புக்கு மீறிய அளவில் சிறுநீர், விந்து நீர்த்தல், மாதவிலக்கு உதிரப்போக்கில் மாற்றங்கள் உள்ளிட்டவை நிகழ்கின்றன.

இப்போதெல்லாம், உணவகங்களில் உண்ணும் வழக்கம் மிக அதிகமாக உள்ளது. இயல்புக்கு மாறான வகையில் சூடாக இருக்கும் உணவுகளின் எல்லா தீமைகளையும் உணவகங்களில் அதிகமாக உண்போரிடம் காணலாம். ஒருபுறம் குளிரூட்டிகளால் உணவகம் முழுவதும் செயற்கையான குளிரில் இருக்கும். மறுபுறம் அங்கு பரிமாறப்படும் உணவுகளின் வெப்பம் கூடுதலாக இருக்கும். இந்த முரண்பாடு உடலின் இயற்கை விதிகளுக்குப் பொருந்தாது.

தேநீர், குளம்பி (காபி) பழக்கங்களைப் பாருங்கள். சுடச்சுட இவற்றை அருந்துவது ஒரு பழக்கமாக இருக்கிறது. இந்தப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டியது இல்லை. ஆனால், எத்தனை முறை இதைச் செய்கிறோம் என்பது கவனிக்கப்படவேண்டியது. ஒரு நாளில் 10 முதல் 20 முறை தேநீர் போன்ற சூடான பானங்கள் அருந்துவோர் இப்போது அதிகம். இந்த பானங்களின் உள்ளே இருக்கும் பொருட்களால் உருவாகும் உடல் மாற்றங்களைப் பற்றி நான் கூறவில்லை. அவற்றின் மிகையான வெப்பத்தினால் உருவாகும் சிக்கல்களே அதிகம் என்கிறேன்.

வயிறு அதிகமாகச் சூடானால் நாக்கில் புண்கள் வருவது உண்டு. உடல் தனது அகநிலையை நம்மிடம் வெளிப்படுத்தும் முறைகளில் இதுவும் ஒன்று. உடலின் உள்வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரித்தால், நாக்கில் கோழை படருவது உண்டு. புண்கள், கோழை படருதல் ஆகிய இரு நிலைகளும் உடலின் அகப் பருவநிலையைக் காட்டும் இரு வேறு அறிகுறிகள். இவை இரண்டும் பொதுவான ஒரு தகவலைக் கூறுகின்றன. `உடலின் உள்ளே ஐம்பூதச் சேர்க்கையில் மாறுபாடு உருவாகியுள்ளது’ என்பது அந்தச் செய்தி. நாக்கின் தகவல்களை முறையாகப் புரிந்துகொண்டால், உடலின் உள்ளே நிகழும் பல மாற்றங்களை மிக எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

செரிமான ஆற்றல் அதிமாகப் பாதிக்கப்​பட்டால், நாக்கில் சுவை மரத்துப்போகும். எந்த உணவின் சுவையையும் தெளிவாக உணர முடியாது. மற்றவர்களுக்குக் கூடுதல் சுவையாகத் தெரிவது, மரத்துப்போனவர்களுக்குக் குறைந்த சுவையாகத் தெரியும். பிறருக்கு அதிகச் சூடான பானம், இவர்களுக்கு மிதமான சூடாக இருக்கும். குளிர்ச்சியும் இவ்வாறு குறைவாகவே உணரப்படும். செரிமானச் சிக்கலின் மிக முக்கிய அறிகுறி இது.

நாக்கில் கசப்புச் சுவை உருவானால், பித்தம் மிகுந்துள்ளது எனப் பொருள். சுவையே இல்லாத கோழை நாக்கில் ஊற்றெடுத்தால், உடலில் கபம் மிகுந்து வெளியேற வழியின்றித் தேங்கிவிட்டது எனப் பொருள்.

நாக்கு எனும் இரண்டாம் அறிவு, சுவைகளின் வழியாகவும் பொருட்களின் பருவநிலைகளின் வழியாகவும் உடலுக்குப் பணியாற்றுகிறது. எவருடைய நாக்கு, சுவைகளையும் உணவுப்பொருளின் பருவநிலைகளையும் தெளிவாக உணர்கிறதோ, அவருடைய உடல் சிறப்பான இயக்கத்தில் உள்ளது எனப் பொருள்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32

பசிக்கும் வரை உண்ணாமல் இருத்தல் நாவின் உணர்வைச் சீராக்கும் மிக எளிய வழி. ஏதேனும் ஒரு காரணத்துக்காக நோன்பு இருந்துவிட்டு உணவு உட்கொள்ளும் அனைவருக்கும் நாவின் சுவை உணர்வு மிகச் சிறப்பாக இருக்கும். நோன்பு இருக்கும்போது உடலின் வெப்ப ஆற்றல் இயற்கையான வழிகளில் தூண்டப்படுகிறது. தேங்கிக்கிடந்த காற்று, நீர் ஆகியவை உள்வெப்பத் தூண்டலால் வெளியேற்றப்படுகின்றன. விளைவாக, உடலின் பருவநிலை சீரடைகிறது.

பசிக்கும்போதெல்லாம் நீர் அல்லது நீர் உணவுகளை அருந்துவது நோன்புக் காலத்தின் வழக்கங்களில் ஒன்று. இந்த வழக்கத்தினால், உடலின் நீர்த்தன்மையில் பற்றாக்குறை உருவாகாமல் இருக்கிறது. ஒருபுறம் பசியினால் தூண்டப்படும் வெப்பம். மறுபுறம் உணவாக வழங்கப்படும் நீர்மங்கள் என்ற இனிய முரண்பாடு, உடலின் கழிவுகளை அகற்றி வீசுகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று மூலங்களின் கழிவுகளும் நோன்பில் வெளியேறுகின்றன.

நோன்பின்போது நன்கு பசிக்கையில் பருகும் பழச்சாறு நாவில் அமுதமாகிறது. நல்ல பசியில் இருக்கும்போது இனிப்பான பழச்சாறு நாவில் பட்டதும், உடல் எங்கும் கிளர்ச்சி அடைவதை உணர முடியும். இனிப்புச் சுவையில், உடனடி இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல் உள்ளது. மயக்கம், படபடப்பு, சோர்வு, நீண்ட நேரப் பட்டினி ஆகியவற்றின்போது இனிப்புச் சுவையுள்ள பானங்களைத் தருவது இதனால்தான். இனிப்பு, உடனடி செயல்பாட்டுக்கான ஆற்றல்களைத் தனக்குள் பொதித்துள்ள சுவை.

பட்டினிக்குப் பிறகு பருகும் பானத்தில் கசப்பு இருந்தால், நாக்கு அதைப் புறக்கணிக்கும். புளிப்பு இருந்தால், அதை ஒதுக்கிவைக்கும். துவர்ப்பு இருந்தால், சிறிது சங்கடத்துடன் அனுமதிக்கும். உவர்ப்பு இருந்தால் மிகக் குறைவாக அனுமதிக்கும். மீறி அனுப்பினால், தொண்டைக்குழிக்கும் கீழே இறங்கியதும் வாந்தியாக வெளியேற்றப்படும். இனிப்பான பானத்தையோ நாக்கு வாரி அணைத்து உள்ளிழுக்கும்.

நாக்குக்கு எல்லாம் தெரியும். நாக்குக்குத் தெரியாத எதுவும் வயிற்றுக்குத் தெரிவது இல்லை. நாக்குதான் இந்த உடலாகிய கோயிலின் வாயிற்காவலர். இந்தக் காவலரை மீறி எந்தத் தீங்கும் உள்நுழைந்துவிடாத வகையில் ஒவ்வோர் உடலும் படைக்கப்பட்டுள்ளது.

`சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்வுகளையும் அவற்றின் வகை அறிந்து தெளிந்தவர்களுக்குத்தான் இந்த உலகம்’ என்பது ஆசான் வள்ளுவர் வாக்கு.

ஐந்து அறிவுகளையும் வகைப்படுத்திய அவர், சுவையை முதன்மைப்படுத்தினார். ஒவ்வோர் அறிவின் பின்னாலும் இருக்கும் மறைபொருட்களை அறிந்துகொள்ளும்போது அண்டம் நமக்கு எதிரே விரிந்து தனது இயல்புகளை வெளிக்காட்டுகிறது. அது ஒரு பெரும் பயணம்.

நாக்கின் உணர்வு அறிந்து உணவு உட்கொள்ளும் எளிய வழக்கத்தை மேற்கொண்டால், அந்தப் பயணத்தைத் தொடங்கிவிடலாம்.

- திரும்புவோம்...