Published:Updated:

சரிகமபதநி டைரி - 2016

சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி - படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, ப.பிரியங்கா

சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி - படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, ப.பிரியங்கா

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016
சரிகமபதநி டைரி - 2016

`தமிழ் தியாகைய்யர்' எனப் போற்றப்படும் பாபநாசம் சிவனின் பேரன்தான் பாபநாசம் அசோக் ரமணி என்பது உலகறிந்த விஷயம். அறியாத விஷயம், தாத்தாவின் ஆயிரம் பாடல்கள் வரை பேரனுக்கு தலைகீழ் பாடம். அதுமட்டுமின்றி, சிவன் எழுதிய அனைத்துப் பாடல்களையும் சகக்கலைஞர்களைப் பாடவைத்து, சி.டி-யில் பதிவுசெய்யும் திட்டமும் வைத்திருக்கிறார். இது ஐந்து வருட புராஜெக்ட்!

பார்த்தசாரதி சாமி சபாவின் ‘சங்கீத கலாசாரதி’ விருது, இவருக்கு டிசம்பரில் வழங்கப்பட்டது. சிவன் இருந்த சமயத்தில் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர் அசோக் ரமணி. பேரன் மிருதங்கம் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கும்பகோணம் ராஜப்பய்யரிடம் சேர்த்துவிட்டார் தாத்தா. ஆனால், வாய்ப்பாட்டில் இவருக்கு அதிக ஆர்வம். எஸ்.ராமநாதன்,

கே.வி.நாராயணசாமி, கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போன்ற பலரிடம் பாட்டு பயின்று, 1987-ம் ஆண்டில் கிருஷ்ணகான சபாவில் முதல் கச்சேரி. பயணம் தொடர்கிறது.

சரிகமபதநி டைரி - 2016

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரத கான சபாவில், இரண்டு மணி நேரத்துக்கு முழுக்க முழுக்க பாபநாசம் சிவனின் பாடல்களையே பாடினார் அசோக் ரமணி. ஊரைக் கூட்டி, அரங்கம் நிரப்பி, ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்வது இல்லை இவர். அமைதியாகப் பாடிச் செல்லும் ஞானவான். அல்வா துண்டுகள் மாதிரி குட்டிக்குட்டிச் சங்கதிகளுடன் நாரதாவில் இவர் செய்த பைரவி ஆலாபனை ஒரு சோறு பதம்!

வித்யா பாரதி திருமண மண்டபத்துக்குள் (பார்த்தசாரதி சாமி சபா) நுழைந்தபோது, அரங்கம் முழுவதும் ஸ்ப்ரே செய்துவிட்டது போல் ‘காம்போதி மணம்’ பரவியிருந்தது. வயலினில் வி.சஞ்சீவ், மிருதங்கத்தில் திருச்சி சங்கரன், கடம் கிரிதர் உடுப்பா என, செம ஜமாவுடன் காம்போதியில் வர்ணம் பாடிக்கொண்டிருந்தார் சிக்கில் குருசரண்.

அசப்பில் ‘சகுந்தலை’ படத்து ஜி.என்.பி மாதிரி காணப்படும் குருசரணுக்கு, வேறு ஒரு கோணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் குக் சாயல். வசீகரமான தனது குரலை, பழுதுபடாமல் பாதுகாத்து வருகிறார். சற்றும் தொய்வு ஏற்படாதவண்ணம் கச்சேரியைச் சுறுசுறுப்புடன் நகர்த்திச் செல்கிறார். இசையின் தரம் குறையாமல் காத்துவருகிறார்.

சரிகமபதநி டைரி - 2016

சரணின் சங்கராபரணம், சத்தும் சுவையும் மிக்கது. ராகத்தை ஆழங்கால் உழுது அழகழகான சங்கதிகளை அறுவடைசெய்தார். கில்லாடி மெக்கானிக் மாதிரியாக ராகத்தின் ஒவ்வொரு பார்ட்டையும் பார்ட் பார்ட்டாகக் கழற்றி, மறுபடியும் அதை முழுமையாக வடிவமைத்தது, சங்கராபரணத்துக்குள் சென்று சங்கராபரணத்தைக் கண்டறிந்ததுபோல் இருந்தது. ஜொலித்த சங்கராபரணத்துக்குப் பிறகு, இவர் பாடிய சாவேரியில் கால் நனைக்க மட்டுமே இயன்றது.

சிம்மம் மாதிரியாக சீறி, உறுமி, கர்ஜித்தார் திருச்சி சங்கரன், ‘தனி’யின்போது! கிரிதர், கடத்தில் கிடுகிடுக்கவைத்தார்.

யலினும் வயோலாவும் அபூர்வ ஜோடி அமைத்து வந்து அமர்ந்தன. பிரம்ம கான சபா நிகழ்வு, ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில்.

சரிகமபதநி டைரி - 2016

வயலினுடன் விட்டல் ராமமூர்த்தி. 16.5 அங்குல நீளத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்​பட்ட வயோலாவுடன் வி.வி.எஸ்.முராரி. 30 வருடங்களுக்கு முன்னர் தனது வயோலா அரங்கேற்றத்துக்கு எம்.பாலமுரளிகிருஷ்ணா வந்திருந்து வாழ்த்தியதை, இன்று வரை தனது நினைவுப் பெட்டகத்தில் பொக்கிஷமாக வைத்திருக்கிறார் முராரி.

பைரவியில் வர்ணமும் மாயாமாளவகௌள ராகத்தில் தேவ தேவவும், ஜெயந்தஸ்ரீயில் மருகேலராவும் முடிந்து, வாகதீஸ்வரியில் ‘பரமாத்முடு...’. சமாதியில் அமர்வதற்கு முன்னர் தியாகராஜர் பாடிய கடைசிப் பாடல் இது. விட்டல் வயலினில் ராகத்தை ஆரம்பித்துவைக்க, நான்கு கட்டை சுருதியில் (Base-ல்) வயோலா இணைந்தபோது, யாரோ பக்கத்தில் உட்கார்ந்து பாடுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திச் சிலிர்க்கவைத்தது.

விரிவாக்கத்துக்கு இவர்கள் எடுத்துக்கொண்டது, சக்கரவர்த்தி ராகமான கரகரப்ரியா. இருவரும் மாறிமாறி ராகத்தை டெவலப் செய்து, ‘சக்கநி ராஜ...’ ராஜபாட்டையில் பயணித்து முடித்த தருணம் நம் கண் எதிரில் எழும்பி நின்றது பளிங்கால் ஆன பளபளப்பு மாளிகை.

சரிகமபதநி டைரி - 2016

இந்தப் புதுக் கூட்டணி, மக்கள்நலக் கூட்டணிபோல சிதறிவிடாமல் இருக்க வேண்டும். அடுத்த டிசம்பரில் வயலின் - வயோலாவுக்கும் சபாக்கள் வாய்ப்பு தரவேண்டும். நம்ம ஜனத்துக்கு ரசிப்புத்தன்மை அதிகம். ஏதாவது புதுசுன்னா ரொம்ப இஷ்டம்!

சொல்லாமல் கடந்துபோனால், சாமிக் குத்தமாகிவிடும். மேற்படி கச்சேரியில் பத்ரி சதீஷ்குமார் - வி.சுரேஷ் மிருதங்கம், கடத்தில் வ-வயோ ஜோடிக்கு சாமரம் வீசியவண்ணம் இருந்தார்கள்.

‘`சே
ஷாத்ரி... ” என்று பின்வரிசைக்காரர் யாரையோ அழைப்பதுபோல் இருந்தது, வெறும் பிரமைதான். சேஷாத்ரி என்பது, ஒரு ராகத்தின் பெயர். மதுவந்திக்கு ரொம்பவும் நெருக்கம். சங்கீத கலாநிதி ஏ.கன்யாகுமாரியின் கண்டுபிடிப்பு. திருப்பதி ஏழுமலையான் மீது அண்ணமாச்சாரி இயற்றிய ஏழு பாடல்களுக்கு, சேஷாத்ரி உள்ளிட்ட ஏழு ராகங்களில் மெட்டு அமைத்திருக்கிறார் கன்யா.

சரிகமபதநி டைரி - 2016

சீனியர் சீடர் எம்பார் கண்ணனுடன் மியூஸிக் அகாடமியில் கன்யாகுமாரியின் வயலின் டூயட். பைரவி மெயின். ஆலாபனையை கண்ணன் தொடக்கிவைக்க, கன்யாகுமாரி ஜோடனைகள் செய்ய, இறுதிச்சுற்றில் இருவரும் இணைந்து முடித்து, தீட்சிதரின் ‘பாலகோபால பாலயாஸுமாம்...’ மிக நேர்த்தியாக டேக் ஆஃப் ஆனது.

மோகனம் - சண்முகப்ரியா என்று இரு ராகங்களில் ராகம், தானம், பல்லவி. தனது மாதா, பிதா, குரு(க்கள்), தெய்வத்தின் பெயர்களில் கன்யாகுமாரி அமைத்துக் கொண்டுவந்த ஸ்பெஷல் பல்லவி. மோகனத்தில் இருந்து சண்முகப்ரியாவுக்கும், சண்முகப்ரியாவில் இருந்து மோகனத்துக்கும் கன்யாகுமாரி கண் இமைக்கும் நேரத்தில் மாறிமாறி தாவிச் சென்றது ஜோர்.

வழக்கமான மைக்குடன் அல்லாமல், contact மைக்குடன் வயலின் வாசித்தார் கன்யாகுமாரி. சாக்ஸாபோன், மாண்டலின், வீணை, புல்லாங்குழல், புல்புல்தாரா என ஏதேதோ கருவிகளின் ஓசைதான் கேட்கிறதே தவிர, நமது காதுகளுக்கு நெருக்கமான வயலின் நாதம் விலகிப்போய்விடுகிறது. இது கன்யாகுமாரிகாருவின் மேலான கவனத்துக்கு!

சரிகமபதநி டைரி - 2016

ருடம் கடந்து சென்றுகொண்டிருக்க, அமிர்தா முரளியின் சங்கீத லெவலில் நல்ல முன்னேற்றம். குரலும் ஒரு மாதிரி பண்பட்டு வருகிறது. எந்தக் காரணம்கொண்டும் சம்பிரதாயம் மீறாத போராளி. ரயிலில் இடம்பிடிக்கும் அவசரத்தில் ஓடாத நிதானம். இரண்டு தம்புராக்களுடன் பாடும் ‘சுருதி மாதா’ கட்சி.

மியூஸிக் அகாடமியில் கேதாரகௌள, மனோஹரி, இத்யாதி ராகப் பாடல்களைவிட, அமிர்தா முரளி பாடிய தீட்சிதரின் சதுர்தஸ ராகமாலிகைப் பாடலான ‘ஸ்ரீவிஸ்வநாதம்’ அட்டகாசம். குழிக்கரை விஸ்வநாதர் மீது அமைந்துள்ள இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு ராகத்தில் இருக்கும். மொத்தம் 14 ராகங்கள். பல்லவியில் இரண்டு. அனுபல்லவியில் நான்கு. சரணத்தில் எட்டு. முடிவில் மறுபடியும் பல்லவிக்கு வருமுன் ரிவர்ஸில் 14 ராகங்களும் வரும். ராகங்களையும் வரிகளையும் மறக்காமல் இதைப் பாடுவது, கம்பி மீது நடப்பது மாதிரி. ஒருமுறைகூட பேலன்ஸ் தவறவில்லை அமிர்தா!

தி
ருவனந்தபுரத்தில் உள்ள ரக்த கணபதியை மோகன ராகத்தில் துதித்தார் டாக்டர் கணேஷ். சூப்பர் பொருத்தம். மோகனத்திலும் பின்னர் ஆரபியிலும் குருநாதர் மகாராஜபுரம் சந்தானத்தின் நுனிவிரல் பிடித்துப் பயணம் செய்தார் கணேஷ். சத்தான சந்தான சங்கதிகள் இவர் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி!

சரிகமபதநி டைரி - 2016

சிம்மேந்திரமத்யமம் ராக ஆலாபனையில் ஒரிஜினல் டாக்டரைக் காண முடிந்தது. முதல் ஒற்றைக் கீற்றிலேயே ராகத்தை அடையாளப்​படுத்தி, ஒவ்வொரு ஸ்தாயியாக நிறுத்தி, நிதானமாக படகுசவாரி செய்து பஞ்சமம் வரை டிராவல் செய்தபோது ஸ்வீட்டான சி.மே.சங்கதிகள் அரங்கத்தில் பன்னீராகத் தெளித்தன. வயலினில் பாரதி (வயலின் எம்.சந்திரசேகரின் மகள்) வில்லில் ஐலேசா போட்டுக்கொண்டே கணேஷைத் தொடர்ந்தார்.

தியாக பிரம்ம கான சபாவுக்காக வாணிமகால் மினி ஹாலில் இந்தக் கச்சேரியைச் செய்த கணேஷ், நாம சங்கீர்த்தன மேடைகளிலும் நாமாவளிகள் பாடிவருகிறார். இது சும்மா தகவலுக்காக!

- நிறைவு

சீஸன் துளிகள்...

 மியூஸிக் அகாடமியில், சுமார் ஒரு மணி நேரத்துக்கு இளைஞர் பரத்சுந்தர் பாடிய தோடி ராகப் பல்லவியைக் கேட்டவர்கள் எல்லோரும் மெச்சினார்கள். ‘எந்த சீனியருக்கும் சளைத்தது அல்ல இவரது பாட்டு’ எனச் சான்றிதழ் கொடுத்தார்கள். அகாடமியும் இவருக்கு ‘சப்-சீனியர் பெஸ்ட் வோக்கலிஸ்ட்’ பரிசுக் கொடுத்துப் பாராட்டியது.

 இன்னோர் இளைஞர் குன்னக்​குடி பாலமுரளிகிருஷ்ணா, அகாடமியில் பிரமிக்கத்தக்க வகையில் பாடிய ஹம்சானந்தி, அவருக்கு பல்லவிக்கான தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தது. யூ டியூப்பில் இவரது ஹம்சானந்தத் துளிகள், வைரலாகப் பரவிற்று!

 அ
காடமியில் சீனியர் ஸ்லாட்டில் மூத்தவர்களை​ எல்லாம் ஓரங்கட்டிவிட்டு ஆகச்சிறந்த பாடகராகத்  (Senior Best Vocalist) தேர்வுசெய்யப்பட்ட ராமகிருஷ்ணன் மூர்த்தியும் இளைஞர்தான். Senior outstanding vocalist-ஆகத் தேர்வான கே.காயத்ரியும் இளைஞிதான். அதேபோல், சப்-சீனியர் outstanding vocalist பரிசு பெற்ற ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனும் டிட்டோ!

ஆகவே மக்களே... கர்னாடக இசையின் எதிர்காலம்குறித்து யாரும் கவலைகொள்ள வேண்டாம்!