Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

#MakeNewBondsபிருந்தா சேது - படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

#MakeNewBondsபிருந்தா சேது - படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 20
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

`உயிரோடு இருக்கும்போது மனிதன்
மென்மையாக மிருதுவாக இருக்கிறான்
உயிர் போன பிறகு அவன்
கடினமாக விறைப்பாக இருக்கிறான்
உயிரோடு இருக்கும்போது
பிராணிகளும் தாவரங்களும்
மென்மையாக மிருதுவாக இருக்கின்றன
உயிர் போன பிறகு அவை
வாடி உலர்ந்துபோகின்றன
எனவே இவ்வாறு சொல்லப்படுகிறது...
கடினமும் விறைப்பும் சாவின் கூறுகள்;
மென்மையும் மிருதுவும் வாழ்வின் கூறுகள்.
எனவே,
மிகக் கடுமையாக இருக்கும்போது போரில்
வெற்றிபெற முடியாது;
மிகக் கடினமாக இருக்கும்போது
மரம் முறியாமல் இருக்க முடியாது
வலியதின் பெரியதின் இடம் கீழே இருக்கிறது;
மெலியதின் மிருதுவின் இடம்
மேலே இருக்கிறது.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தாவோ தே ஜிங் (76) லாவோட்சு

தமிழில்: சி. மணி

இயற்கையில் ஒரு மரம் இப்படித்தான் இருக்கிறது; இந்த அடுக்கில்தான் பயணிக்கிறது... மெலியது மேல் இருந்து வழி நடத்தும்படி.

குடும்பங்களால் உருவாக்கப்பட்டி ருக்கிறது சமூகம். குடும்பம் ஒரு நிறுவனமாக இருக்கிறது. ஆண் அதிகாரம் நிரம்பியவனாக இருக்கிறான். கடினம் மேல் இருந்து ஆள, அந்த அடுக்கு குழந்தைகள் வரை படிப்படியாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. ஆனால், சமூகத்தின் இத்தனை கனத்தை குழந்தைகள் எப்படித் தாங்குவார்கள்?

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20`உங்கள் குழந்தைகள் உங்களின்
குழந்தைகள் அல்ல;
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால 
வாழ்வின் மகன், மகள்கள்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்.
ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை.
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம்...
உங்களின் சிந்தனைகளை அல்ல!

- கலீல் ஜிப்ரான்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

நம்மைவிடவும் உடல் பலத்திலும் மன பலத்திலும் குறைந்த, பொருளாதாரத்திலும் நம்மைச் சார்ந்திருக்கும் குழந்தைகளை நாம் எப்படி நடத்த வேண்டும், எவ்வாறு கொண்டாட வேண்டும்! ஆனால், அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம்? நம் செல்ல எடுபிடிகளாக, ப்ரியத்துக்கு உரிய அடிமைகளாக, நம் கனவுகளைச் செயலாக்கவந்த வேலைக்காரரர்களாக! ஒருநாளில் நாம் குழந்தைகளிடம் பேசும் சொற்களைக் கவனித்தாலே இது விளங்கும்.

ஆண் - பெண் இருபாலர் பயிலும் அரசுப் பள்ளி அது. உரை நிகழ்த்தப்போயிருந்தேன்.

‘என் வீட்டில் என்னைவிட பலவீனமான ஒருவர் இருக்கிறார். அவருக்கு நான் உதவி செய்ய வேண்டுமா, அல்லது அவர் எனக்கு உதவ வேண்டுமா?’ எனக் கேட்டதற்கு, எல்லோரும் ஒட்டுமொத்தக் குரலாக, ‘நீங்கள்தான் உதவ வேண்டும்’ என்றார்கள்.

‘ஆண் பலசாலியா... அதே வயதுள்ள பெண் பலசாலியா?’

‘ஆண்தான்.’

‘அப்போ, தன்னைவிட பலத்தில் குறைந்த பெண்ணுக்கு வீடு மற்றும் வெளிவேலைகளில் ஆண் உதவிசெய்ய வேண்டுமா... இல்லை, பெண்தான் தன்னைவிட பலசாலி ஆணுக்கு வேலை செய்ய வேண்டுமா?’

பலத்த அமைதி.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

இருப்பவர்தானே இல்லாதவருக்குத் தர வேண்டும்; தர முடியும்? அது பணமோ, பலமோ, அன்போ அல்லது அதிகாரமோ. ஆனால், இங்கு எல்லாம் தலைகீழ். அதிக பலம் உள்ளவர், பலம் குறைந்தவரை வேலைவாங்குவதாக, படித்தவர் படிக்காதவர்களைக் கீழாக நடத்துவதாக, பணம் அதிகம் உள்ளவர், இல்லாதவரிடம் இருந்து உழைப்பாகவோ, பொருளாகவோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பிடுங்கிக்கொள்வதாக.

அதே பள்ளியில், பெண் பிள்ளைகளிடம், `யார் எல்லாம் ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டும் என நினைக்கிறீங்க?' எனக் கேட்டேன்.  கிட்டத்தட்ட எல்லாருமே கை  உயர்த்தினார்கள். காரணம் கேட்டபோது,  `அந்த மூன்று நாட்களின்’ வலி - வேதனைகள், இரவு 6 மணிக்கே வீட்டுக்குள் அடைபட வேண்டிய நிர்ப்பந்தம், எங்கும் எந்த நேரமும் போக முடியாத சுதந்திரமற்ற தன்மை, தன் வேலைகளையும் பார்த்துக்கொண்டு, வீட்டிலும் அதிக வேலைகள் செய்ய வேண்டியிருப்பது... முதலான பல காரணங்களை அவர்களால் சொல்ல முடிந்தது.

ஆண் பிள்ளைகளிடம், `பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும் என யார் எல்லாம் விரும்புறீங்க?’ எனக் கேட்டேன். ஒருவர்கூட கை உயர்த்தவில்லை; முகத்தைச் சுளித்தார்கள்.

இயல்பில் நம் குழந்தைகள் யாருக்கும் ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பது குறித்து எந்தப் பிரச்னையும் இல்லை. ஆணாகப் பிறந்ததால் மட்டுமே கிடைக்கக்கூடிய மிக அதிக வசதிகளும், பெண்ணாகப் பிறந்ததால் மட்டுமே நிகழும் இழிநிலைகளும்தான், ‘ஆணை’ பெரியதாகவும் பிரமிப்பாகவும் காட்டுகின்றன. ஆணுக்கு இருக்கிற எல்லா சுதந்திரங்களும் வாய்ப்புகளும் கிடைக்குமானால், எந்தப் பெண்ணுமே, `நாம் ஆணாகப் பிறக்கவில்லையே...’ என ஏங்க மாட்டாள்.

பெண் உடல் பற்றி ஆணின் பார்வை குறித்தே நாம் அதிகம் உரையாடுகிறோம்;  விவாதிக்கிறோம். ஆனால், பெண்கள் தங்கள் உடலை எப்படிப் பார்க்கிறார்கள், அதன் ஆரோக்கியத்துக்கு என்ன செய்கிறார்கள்? பசியை மதிக்கிறார்களா, என்ன சாப்பிடுகிறார்கள், எல்லோருக்கும் போக மீந்த உணவுகளையா... அப்படி மீந்ததை வாங்கிக் கொள்ள பெண் உடல் என்ன குப்பைத்தொட்டியா? பெண் தன் உடலை, மனதை மதிக்கக் கற்றுக்கொள்வதே, அடிமைத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முதல் நகர்தல்.

ஒவ்வொரு நிகழ்விலும் இரண்டு செயல்கள் இருக்கின்றன. ஒருவர் இன்னொருவரை அடிமைப் படுத்துகிறார் என்றால், காலை எடுத்துவைத்துத் தலையை மிதித்தல் ஒரு செயல்; ‘இந்தா மிதிச்சுக்கோ...’ எனத் தானாகவே தன் தலையை அவர் காலடியில் வைத்தல் இன்னொரு செயல். நான் இப்படித்தான் பார்க்கிறேன்... நம் சம்மதம் இல்லாமல் யாரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது.

நான் கராத்தே கற்றுக்கொள்ளப் போகும்போது, முதலில் பெரும் மனத்தடையாக இருந்தது, கராத்தே உடைதான். ஃப்ராக் ஜம்ப் எனச் சொல்வார்கள். தவளைபோல குதிப்பது. பன்னிரண்டு பவர் எக்ஸர்சைஸில் அதுவும் ஒன்று. அந்த உடையையும் போட்டுக்கொண்டு ஃப்ராக் ஜம்ப்பை என்னால் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை. கராத்தே அல்லாத, வெளி ஆட்கள் பார்க்கிற பார்வை இருக்கிறதே... அது இன்னும் தாங்கவே முடியாதது.

நீச்சலில் பெரும் விருப்பம் இருந்தும், நீச்சல் உடையைப் போடக் கூச்சப்பட்டு, கற்றுக்கொள்ளாமல் இருக்கிற பெண்கள் இங்கு நிறையவே உண்டு. நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பிய என் தோழி கேட்ட முதல் கேள்வி, `கற்றுத்தரும் மாஸ்டர் ஆணா... பெண்ணா, தொட்டுத்தான் நீச்சல் கற்றுத்தருவாங்களா?' என்பதுதான். ‘கார் ஓட்ட மற்றும் நீச்சலடிக்கக் கற்றுக்கொள்வதை நம் சினிமாக்கள் அப்படித்தான் காட்டுகின்றன. உடம்பு விஷயத்தில், உடைகள் விஷயத்தில் பெண்களுக்குள்ளாகவே இருக்கிற பிரச்னைகள் இவை. இன்றும் சைக்கிள் ஓட்டும்போது, தாவணி போட்ட பிள்ளைகள் குறுகி அமர்ந்து, தாவணி விலகிவிடாமல் கைகளை இடுக்கிக்கொண்டு ஓட்டுவதைப் பார்க்கிறேன். சைக்கிள் தரும் சிறகுகளை, தாவணி மூச்சுமுட்ட இறுக்கிச் சுற்றிவிடுகிறது.

உடை விஷயத்தில் ஆண்களின் அடாப்டபிளிட்டி பாராட்டத்தக்கது. தோற்றம் பற்றிய, முடி பற்றிய, உடை பற்றிய எதிலும் நம் பெண்கள், ஆண்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. போலவே, தன் வயிற்றுப் பசியை மதிக்கும் தன்மை. தெருவில் இறங்கி, கொஞ்சம் எல்லா டீக்கடை பஜ்ஜி கடைகளைப் பாருங்கள். எல்லாவற்றிலும் ஆண்கள் கூட்டம்தான். ஏன் பெண்களுக்குப் பசிக்காதா? ஆண்தான் வழிவிட்டு, ` ‘வாம்மா ராசாத்தி...’ எனப் பெண்களுக்கான உரிமைகளைத் தர வேண்டுமா?’ `இது என்னுடையது’ என எல்லாவற்றையும் பெண் பார்க்க வேண்டும்தானே, எடுத்துக்கொள்ள வேண்டும்தானே?

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

பெண்ணைவிட ஆணுக்கு சிறுநீரகப்பையின் அளவு பெரியது. அதனாலேயே பென்ணைவிட ஆணால், அதிக அளவு சிறுநீரை அடக்கிவைக்க முடியும். பொதுவாழ்வில் பெண்கள் பங்கெடுக்கத் தொடங்கிய பிறகும்
50 விழுக்காடுக்கும் மேல், பெண்கள் வேலைக்குப் போகிறவர்களாக ஆன பிறகும், பேருந்துப் பயணத்திலோ, பொது இடங்களிலோ சிறுநீர்க் கழிக்கும் வசதி இல்லாமல் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. மாதவிலக்கு நாட்களில் இன்னும் மோசம்.

பள்ளியில் பத்தாவது படிக்கும் போதுதான் ‘கருப்பை, பூப்பெய்தல், கர்ப்ப காலம்’ என்பது பற்றி எல்லாம் பாடமாக வந்தன. அவையும் யாராலோ எதனாலோ எதிர்க்கப்பட்டு, ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ ஆக்கப்பட்டன. எட்டாவது படிக்கும்போது வயதுக்குவந்த நான், என் உடம்பில் நிகழ்வதை அறிந்துகொள்ளவே இரண்டு வருட இடைவெளியில், பத்தாவது படிக்கும்போதுதான் அறியும் வாய்ப்பு கிடைக்கிறது. பிறகு அதுவும் மறுக்கப்படுகிறது. இது எந்த அளவு என்னை என் உடம்பில் இருந்தே அந்நியப்படுத்தும் செயல்? என் உடம்பில் எனக்கு நிகழும் மாற்றத்தைப் பற்றி அறிய, மனதளவில் அதற்கு முன்னர் இருந்துதானே நான் தயார்ப்படுத்தப்பட வேண்டும்?

நானே என் உடம்பைப் பற்றி அறிய இயலாத நிலையில், என் சம வயதுச் சிறுவன் எவ்வாறு அறிவான்? பெண்களுடைய சிக்கல்களும் மாதவிடாய்க் கோளாறுகளும் உடல் சிரமங்களும் வலியும் அவனுக்கு எப்படிப் புரியும்?

ஒரு பறவை தன் குஞ்சுப் பறவைக்குப் பறக்கக் கற்றுக்கொடுக்கிறது. இரை தேட எங்கெங்கு போக வேண்டும் எனக் கற்றுத்தருகிறது. இதுபோலத்தானே செக்ஸ் (உடற்கூறு பற்றிய கல்வி) பற்றிய ஆண்-பெண் உடல் குறித்த பிள்ளைகளின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்குப் பதில் தர பெற்றோர்களால்தானே முடியும்.

கடந்த டிசம்பர் மாத இறுதியில், என் மகள், தோழியின் மகள், நான் உட்பட ஏழு பெண்கள் சேர்ந்து கோவாவுக்கு மலைப் பயணம் (ட்ரெக்கிங்) போனோம். இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் நிறைய பேர் வந்திருந்தனர்.

இரவில் சாதாரணமாக நடப்பது என்பதே சாத்தியம் இல்லாத இந்த வாழ்வில், இரண்டு நாட்கள் கடற்கரை ஓரமாகவே நடந்தது அவ்வளவு மகிழ்வைத் தந்தது. அடுத்த நான்கு தினங்கள் புலி, சிங்கம், சிறுத்தை, ராஜநாகம் உலவும் மலைக்காடுகளுக்குள் நடந்தோம்; கூடாரங்களில் தங்கினோம். இருள் என்றால் அப்படி ஓர் இருள்; நிஜமான இருள்; தொட்டால்தான் உருவம் புரிகிற இருள். அப்படியே நிமிர்ந்துபார்த்தால், மேலே கோடிக்கோடி எண்ணிக்கையில் நட்சத்திரங்கள்.

காடுகளில் நடக்கும்போது ஒவ்வொரு காலடியையும் கவனமாகப் பார்த்துப் பதிக்க வேண்டும். இல்லையேல் அதலபாதாளத்தில் சறுக்கிவிடும். சறுக்கிவிட்ட அதே காட்டுக் கொடிகளே, பிடித்துக்கொள்ளவும் உதவும். நொடிக்கு நொடி விழிப்புஉணர்வுடன் இருக்க இந்த உலகின் பூரண அழகும் விளங்கியது. 

எங்கோ தொலைவில் புலி உறுமும் சத்தம், உள்ளங்காலுக்குள் குறுகுறுக்கப் பயணித்தது, பூமி ஒரு மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சியாக மாற அதன் ஒவ்வொரு நிறத்தையும் நடந்தே கடந்தது, இயற்கையின் முன் நாம் எவ்வளது தூசு, நான் `பெண்’ மட்டுமே அல்ல, இயற்கையின் ஓர் அங்கம் என உணர்ந்ததும் அப்போதுதான்.

பெண் பயணப்படும்போதுதான், அதற்குப் பழக்கப்படும்போதுதான், தன் சுமைகளை ஒவ்வொன்றாக விடும்போதுதான் லேசாகி, காற்றாகி, பறக்க முடிகிறது; தொலைதூரங்களை அடைய முடிகிறது. பயணங்கள் இதை அழகாக, இயல்பாகச் செய்துவிடுகின்றன.

எல்லா குழந்தைகளையும்போலவே டிரைவர் ஆவதுதான் என் முதல் கனவு. அதுவும் லாரி டிரைவர் ஆவது. பெரியவர்களால் குடிகாரனாகவும் பொறுக்கியாகவும் பார்க்கப்பட்ட டிரைவர் பொன் அண்ணன் எங்கள் கதாநாயகன். எனது ஆறு, ஏழு வயதில் லாரி சக்கரத்தில் கால் வைத்து ஏறி அமர்ந்ததும், குதித்து இறங்கியதுமே எங்கள் வயதுப் பிள்ளைகளிடம் பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது.

சைக்கிள் விட்டுப் பழகியதும், டபுள்ஸ் ஓட்ட ஆசை வந்தது. அப்போது நான் எட்டாவது படித்தேன். ஒன்றாம் வகுப்பு பிரகாஷ் பின்ஸீட்டில் அமர ஒப்புக்கொண்டான். ஓடிவந்து ஏறினால், என்னால் பேலன்ஸ் பண்ண முடியாது. அவன் ஏறிய பிறகு சைக்கிளை அழுத்தி மிதிக்க, நான் ஒரு பக்கம் போனால், சைக்கிள் அதுபாட்டுக்கு சாலையோரம் இருந்த ஜல்லிக்குவியலில் சென்று சரிந்தது. விழுந்து வாரிய பிறகும், நான் டபுள்ஸ் ஓட்டக் கற்றுக்கொள்ளும் வரை வந்தான் அவன். நிற்கிற லாரியில் மோதியது என்பது எல்லாம் என் சைக்கிள் வீர வரலாற்றில் இன்றளவும் பேசப்படுகிற ஒன்று.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

அப்போது ஸ்வேகா ஸ்கூட்டர் மிகப் பிரபலம். அது பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டால் சைக்கிள்போல மிதித்து ஓட்டிக்கொண்டு வந்துவிடலாம். அப்படி, டூ வீலர் ஓட்டக் கற்றுக்கொண்டாகிவிட்டது. அடுத்து முதலில் ‘கை’ கியர்; பிறகு ‘கால்’ கியர் என ப்ளான். பக்கத்து வீட்டு அங்கிள் பஜாஜ் எம்-80 வைத்திருந்தார். அப்படி இப்படி எனப் பொய் சொல்லி, அவர் வண்டியை வாங்கினேன். காற்றில் பறப்பதுபோல இருந்தது. அப்படியே ஜாலியாக ஏழு எட்டு கிலோ மீட்டர் போயாகிவிட்டது.

இதற்கு மேல் போனால் வழி தெரியாது என்ற நிலையில், திரும்பி வரும்போது, முன்னாடி போய்க்கொண்டிருந்த ஆத்தூர் பஸ், ஸ்டாப்பிங்கில் நிற்க எனக்கு வண்டியை நிறுத்தத் தெரியவில்லை. லெஃப்ட் கை இறுக்கிப் பிடித்தால், அது க்ளட்ச்! வண்டி இன்னும் ஸ்மூத்தாகப்போக, ‘பஸ் அடியில போய் செத்தாண்டா சேகரு’  என்ற அபாயக் கட்டத்தில் எமகிங்கரர்கள் மாதிரி இரண்டு ஆட்டோக்காரர்கள் இருபுறம் இருந்தும் புயல்போல வந்து ‘கால்ல பிரேக்கைப் புடி’ என கத்திக்கொண்டே  வண்டியை இறுக்கிப் பிடித்து நிறுத்தினார்கள்.

கராத்தே மாஸ்டரிடம் ‘வாசலில் இருக்கிற பைக் உங்களோடதா மாஸ்டர், கத்துத்தருவீங்களா? எப்படி ஓட்டணும்னு சொல்லி, பைக்கைக் கொடுத்துட்டீங் கன்னாகூடப் போதும். நான் பார்த்துக்கு வேன்.’ அவர் காதில் வாங்கினாரா, வாங்கியும் மறந்துவிட்டாரா தெரிய வில்லை. ப்ளாக் பெல்ட் பட்டமும் வாங்கியாகிவிட்டது. சில மாதங்கள் கழித்து, திடீரென ஒருநாள், ‘மூணு புதன்கிழமை... பெசன்ட் நகர் வாங்க மேடம். பைக் கத்துக்கலாம்’ என்றார்.

அத்தனை வருடங்களின் கனவு, ஒரு பைக் ஓட்டுவது. பைக்கில் அமர்வது என்பதே அதுவரை நிகழாத ஒன்று. இதோ ஓட்டவே போகிறேன். `பெண்களுக்கு மோட்டார் நாலெட்ஜ் குறைவு’ என வாதாடினார் என் தோழி. `இல்லை, முடியும்’ என்பது என் வாதம். 1,2,3,4 என்று நம்பர் வைத்துக்கொண்டு, பாக்யராஜ் டான்ஸ்போல 1… 2... 3… 4... என்று ஒரு நம்பருக்கு ரெண்டு மூன்று செயல்கள் வைத்துக்கொண்டு ஓட்டினேன்.

தனியாக வரும் பெண்களிடம் தகாத முறையில் நடப்பது பற்றி மட்டும்தான் எப்போதும் பேசுகிறோம்; ஆண்களால் உண்டாகும் ஆபத்துகள் குறித்தே அஞ்சுகிறோம். ஆனால், தனியாக எத்தனையோ பெண்கள் உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்திட காரணமாக இருப்பதும் ஆண்கள்தான்.

ஃப்ரீ திங்கர் அசோஸியேஷனில், `ஓர் எழுத்தாளர், பெண்ணாக இருப்பதால் இலக்கிய சமூகம் எப்படிப் பார்க்கிறது?' என்பது பற்றி பேசப் போயிருந்தேன். என் அருகே ஒருவர் வந்து அமர்ந்தார். சட்டென எழ முயன்று, உடனே அதைத் தவறு என்றும் உணர்ந்து அமர்ந்தேன். அவர் ஓர் ஆண்; அது அல்ல என் பிரச்னை. அவர் பெண்கள் அணியும் உடையை அணிந்திருந்தார். பொதுப்புத்தியில் வளர்ந்து இருந்த என்னால், அதை உடனடியாக ஏற்க முடியவில்லை. நான் சகஜமாகச் சற்றுநேரம் பிடித்தது. பிறகு அவரோடு பேசப் பேச, என்ன அற்புதமான மனிதர் என உணர்ந்தேன்.  

நாம் ஒரே விதமாகச் சிந்திக்கப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். பெண்கள், திருநங்கை - திருநம்பிகளைப் பார்க்கிற பார்வையில்தான், பொதுப்புத்தியில்தான் ஆண்கள், பெண்களைப் பார்க்கிறார்கள்.

என் மகளை, நான் இப்படி வளர்த்திருக் கிறேன். அப்படி வளர்த்திருக்கிறேன். அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன் எனப் பெருமையோடு பூரிப்பவர்களை அடிக்கடி பார்க்கிறேன். ஆனால், இவர்கள் மகள்களை அல்ல; மனைவியை என்ன செய்திருக்கிறார்கள்,  என்னவாக ஆக்கி யிருக்கிறார்கள் என்பதில்தான் பெண்ணைப் பற்றிய, ஆண்களின் பார்வையும் மதிப்பீடும் இருக்கின்றன.

ஆணுக்கு இயல்பாக இந்த வாழ்க்கை வழங்கிய பல விஷயங்கள், பெண்ணுக்கு மறுக்கப்படுவது போலவே, பெண்ணுக்குக் கிடைக்கிற பலவும் ஆணுக்குக் கிடைப்பது இல்லை. பெண்கள் கையில் என்றென் றைக்குமாக கரண்டியைத் திணித்ததைவிட கொடுமை, ஆண் உறுதியானவன், அழ மாட்டான் என்ற கருத்துத் திணிப்புகள்தான். மனத்தின் ஈரம் கண்களில் வெளிப்படாத ஒருவர், உலகத்தில் வாழும் ஜீவராசியாக இருக்கவே முடியாது.

`அப்படியே நில்’ எனச் சொன்னால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அவரவர் வலிமைக்கு ஏற்ப நிற்க முடியும். அதையே, நம் பாதங்களைச் சுற்றி சாக்பீஸால் நெருக்கி வரைந்து நிற்கச் சொன்னால், நொடி நேரமும் மணிநேரமாகக் கனக்கும்; நிற்க இயலாது.

ஆணோ, பெண்ணோ தன் இயல்பில் சுதந்திரமாக வளரவிட வேண்டும். அவர்களைச் சுற்றி சமூகம் வரைந்துவைத்திருக்கிற அந்த மாயக்கோடு அழியும்போது இங்கே மாற்றம் பிறக்கும்!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

‘பெரியவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள்தான். ஆனால், சிலர்தான் அதை நினைவுவைத்திருக்கிறார்கள்!’

- லிட்டில் ப்ரின்ஸ்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

‘நம்ம சொசைட்டியில் கடிகாரம்தான் ஒரு மனிதரின் (பெண்ணின்) நடத்தையைத் தீர்மானிக்கிறது!’

- `பிங்க்’ திரைப்படத்தில் அமிதாப்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

perfection is not just about control. It’s also about letting go.’

- நட்டாலியா போர்ட்மேன்

 `ப்ளாக்ஸ்வான்’ திரைப்படத்தில் இருந்து...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 20

பெண்ணியம் என்று தனியாக ஏன் சொல்ல வேண்டும்?

`ஒரு பெண்பிறவியாக இருப்பதன் துயரம்தான், இந்த அரசியலின் அடிப்படை. மனித சமூகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒன்றைக் கீழ்நிலைப்படுத்தி, அடக்கிவைத்திருப்பதுதான் உலகின் வரலாறு. இந்த வரலாற்று உண்மையை ஒப்புக்கொண்டால்தான் நாம் தீர்வுகளை நோக்கிச் செல்ல முடியும்!’

`நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’ நூலில் இருந்து... 

- சிமாமந்தா எங்கோசி அடிச்சி.

தமிழில்:பிரேம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism