Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33

ம.செந்தமிழன் - படங்கள்: தேனி ஈஸ்வர்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33

ம.செந்தமிழன் - படங்கள்: தேனி ஈஸ்வர்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33

`துவர்’ எனும் சொல்லுக்கு `சிவப்பு' என்றோர் அர்த்தம் உண்டு. செம்மண் நிலத்தை, `துவர் நிலம்’ என்று அழைப்பது உண்டு. துவரை எனும் பருப்பு வகைத் தாவரம், பெரும்பாலும் செம்மண் நிலப்பகுதிகளில் விளையக்கூடியது. துவர்ப்பு சுவைகொண்ட உணவு மற்றும் மருத்துவப் பொருட்களில் கணிசமானவை, சிவப்பு வண்ணத்தின் சாயலைப் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம்.

ஆவாரை, நாவல், ஆலங்குச்சி, வேலங்குச்சி, நெல்லிக்குச்சி, பூலாங்குச்சி (புதர்ச் செடி வகை), துவரைச் செடி, மாதுளை, கொய்யா இலை, கடுக்காய், கொடுக்காய்ப்புளி ஆகியவை நமது மரபு மருத்துவத்தில் முதன்மைப் பட்டியலில் உள்ளவை. இவை அனைத்தும் சிவப்பு, வெளிர்சிவப்பு வண்ணம் கலந்தவை. கொய்யா இலையும் கடுக்காயும் தமது வளர்ச்சிப்போக்கில் சிவப்பு வண்ணத்துக்கு மாறி, பச்சையாக மாறுபவை. துவர்ப்புச் சுவைக்கும் சிவப்பு வண்ணத்துக்குமான உறவு இயற்கையின் போக்குகளில் ஒன்று. இந்தப் போக்குக்கு, விதிவிலக்குகள் இருக்கலாம். ஐம்பூதக் கொள்கைக்கும் சுவைகளுக்குமான உறவைக் காணும் பயணத்தின் தொடக்கத்துக்கு எனது ஒப்பீடு பயன்படும் என நினைக்கிறேன்.

துவர்ப்புச் சுவை என்பது, வெப்பமும் காற்றும் இணைந்து உருவாவது. உடலில் உள்ள நீரைக் கட்டுப்படுத்துவதில், துவர்ப்புச் சுவை மருத்துவக் குணத்துடன் பணியாற்றுகிறது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பலர் அறிந்த பழக்கத்தில் இருந்து தொடங்குவோம். நீரிழிவுநோயின் தீவிரத்தைத் தணிப்பதற்காக, ஆவாரைப்பூ, நாவல் கொட்டை ஆகிய இரண்டையும் உட்கொள்ளும் வழக்கம் நமது மரபில் உள்ளது. இந்த இரண்டும், சிவப்பு வண்ணம்கொண்டவை; துவர்ப்புச் சுவை கலந்தவை.

வாழ்க்கைமுறையில் உள்ள சீர்கேடுகளைச் சரிசெய்யாவிட்டால், உடலின் ஐம்பூதச் சமநிலை பாதிக்கப்படும். காற்று, வெப்பம் ஆகியவை குறைந்த பிறகு, நீர்த்தன்மை அதிகரித்த உடல்கள் `நீரிழிவு' எனும் சிக்கலை உடலுக்குள் தக்கவைக்கின்றன. பொதுவான மந்தநிலையை, இவ்வாறான உடல்கொண்ட மனிதர்களிடம் காணலாம். விரைந்து செயலாற்ற இயலாமை, அதிகத் தூக்கம், பகலில் சோம்பல், பசியின்மை அல்லது குறைந்த பசி போன்றவை இவ்வாறானவர்களிடம் காணப்படும் பொதுவான அறிகுறிகள்.

துவர்ப்புச் சுவையில் உள்ள வெப்பமும் காற்றும் உடலுக்குள் செயலாற்றும்போது, இந்த நிலையில் நல்ல மாற்றம் உருவாகிறது. ஆவாரைப்பூ, நாவல் கொட்டை ஆகியவற்றைக் காய்ச்சி, சிறிதளவு நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துப் பருகும்போது, உடலில் நடக்கும் மாற்றங்களைக் கவனிப்போம்.

உடலின் வெப்பநிலையில் திடீர் உயர்வு உருவாகிறது. காற்றின் வேகமும் அளவும் அதிகரிக்கின்றன. இதனால், உடலில் தேக்கமடைந்துள்ள நீர்க்கழிவுகள் விரைவாக வெளியேறுகின்றன. ஐந்து முறை சிறுநீர் கழிக்கவேண்டிய நிலையில் உள்ளவர், ஒரே முறையில் தனது சிறுநீர்த் தேக்கத்தை வெளியேற்றுகிறார். உடலின் வெப்பநிலையில் நல்ல உயர்வுநிலை ஏற்பட்டதால், நீர் கட்டுப்படுகிறது. காற்றின் சுழற்சி வேகம் முன்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பதால், உடலின் உள்வெப்பம் விரைவில் குறையாமல் தக்கவைக்கப்படுகிறது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33

ஆவாரையும் நாவல்கொட்டையும் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் என்பது என் கருத்து அல்ல. `நீரிழிவு என்பது, நோய் அல்ல; உடலின் தற்காலிகச் சீர்கேடு' என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். துவர்ப்புச் சுவைகொண்ட இரு மருந்துணவுகளால் உடலின் நீர்த்தன்மையில் உருவாகும் மாற்றங்களை இங்கே விளக்குகிறேன். மருத்துவக் குறிப்புகளை மனப்பாடம் செய்யாமல், நமது மரபுக்கொள்கைகளின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் இவற்றைப் புரிந்துகொள்ளுங்கள்.

உடல் முழுவதும் ஓடும் ரத்தம் சீராக இருக்க வேண்டுமானால், உடலில் உள்ள காற்றின் அளவும் வேகமும் சரியாக இருக்க வேண்டும். காற்று மிகுந்த உடலில் ஓடும் ரத்தம் கொதிப்படைகிறது. இந்த நிலையை `ரத்தக்கொதிப்பு' என்பர். நவீன மருத்துவம் கூறும் ரத்த அழுத்தம் வேறு, நமது மரபில் உள்ள ரத்தக்கொதிப்பு வேறு. உடலுக்குள் சுழலும் காற்றின் வேகம் தணியவே இல்லையெனில், ரத்த நாளம் வெப்பமடைந்து ரத்தம் கொதிக்கும். நாளடைவில், இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிப்படையும் என்பது, நம் மரபு மருத்துவக் குறிப்பு.

காற்று சுழன்றுகொண்டே இருந்தால் வெப்பம் உருவாகும் என்பதை, பூமியில் காண முடிகிறது அல்லவா! கடும்கோடையில் மரங்கள்கூட அசையாத வகையில், காற்றின் வேகமும் அளவும் குறைவாக இருக்கின்றன. குறைந்த அளவு காற்று, குறிப்பிட்ட ஒரு பகுதியில் தேக்கமடைந்து அங்கேயே சுழல்கிறது. இதனால் அந்தப் பகுதி சூடாகிக்கொண்டே இருக்கிறது. வேறு பகுதியில் இருந்து காற்று வீசினால்தான், வெப்பம் தணிகிறது. கடற்காற்று, நிலப்பகுதியில் வீசினால்தான் இவ்வாறான வறண்ட நிலை மாறும். ஆக, ஒரு பகுதியில் உள்ள காற்று அங்கேயே சுழன்றால் வெப்பம் உருவாகும் என்பது இயற்கை விதி.

உடலுக்குள் மிக அதிகமானோரின் நோய்களுக்கு இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாகிறது. இரைப்பை, பெருங்குடல் ஆகிய இரு உறுப்புகளில் தேக்கமடைந்துள்ள காற்றுதான் பல நோய்களுக்கு மூலக்காரணம். பசிக்காமல் திணிக்கப்படும் உணவும், முறையற்ற உணவும், இயற்கைக்கு மாறான நேரங்களில் உண்ணப்படும் உணவும் வயிற்றில் காற்றை உயர்த்தும். இரைப்பை முதல் பெருங்குடல் வரையிலான மிக நீண்ட பகுதிகளில் இந்தக் காற்று சுழலும். பெருங்குடலில் சேகரமாகும் மலக்கழிவுகள் முறையாக வெளியேறாத நிலையில் அங்கே உருவாகும் காற்று, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மலக்காற்றின் வெப்பநிலை இயல்பாகவே கூடுதலாக இருக்கும். மலத்தேக்கத்தின் விளைவாக உருவாகும் காற்று பெருங்குடலுக்குள் சுழன்றால், அந்த வெப்பம் பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும்.

இவ்வாறான நிலைகளில், உடலில் உள்ள காற்றின் வேகத்தையும் அளவையும் குறைக்கும் வகையிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல், செரிமானக்கோளாறு  போன்றவற்றுக்கு, நல்ல உணவுப் பழக்கம் மிகச் சிறந்த தீர்வு தரும். இதை `ஏழு நாள் பத்தியம்' என அழைக்கலாம். பசிக்கும்போது கஞ்சி, ரசம், குழம்பு இல்லா உணவுகளை மட்டும் உண்பதுதான் இந்தப் பத்தியமுறை. அரிசி, சிறுதானியங்கள் என எவற்றிலும் கஞ்சி வைக்கலாம். கஞ்சியில் சீரகம், பூண்டு, மிளகு சேர்த்தல் நல்லது. கஞ்சிக்கு, பிரண்டைத் துவையல், கறிவேப்பிலைத் துவையல், காய்கறிக் கூட்டு ஆகியவை மிகச்சிறந்த துணை உணவுகள். ரசம் (சூப்) வகைகளைக் குழம்புக்குப் பதிலாக உணவில் சேர்ப்பது, பத்திய உணவின் மற்றொரு முறை.

மதிய உணவு நேரத்தில் கடுமையான பசி இருந்தால், கஞ்சி குடிப்பது போதாது. அப்போது சோறு, ரசம் ஆகியவற்றை உணவாக்கிக் கொள்ளலாம். அதாவது குழம்புக்குப் பதில், ஏதேனும் ஒரு ரசம் வைத்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை ரசம் மிக மிகச்சிறப்பு. உங்களுக்குப் பிடித்த காய்கறிகளிலும் ரசம் வைக்கலாம். புலால் உண்போர், ஆட்டிறைச்சி ரசம் உண்ணலாம்.

இரவுப் பசிக்கு, இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளை உண்பது நல்லது. இல்லையெனில், அரிசிச் சோறு உண்பதும் போதுமானது.

இந்தப் பத்தியத்தில், குழம்புகளைத் தவிர்க்கிறோம்; புளி, பருப்புகள், பிற மசாலாக்கள், அதிகப்படியான எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கிறோம். இவற்றைத் தவிர்த்தாலே, உடலின் ஐம்பூதச் செயல்பாடு சீராகிவிடும். இந்தப் பத்தியத்தை ஏழு நாட்கள் கடைப்பிடிக்கும்போது, பசி சீரடையும்; செரிமானம் மேம்படும்; வயிற்றில் சேகரமாகி இருந்த மலம், நீர், காற்று ஆகியவை வெளியேறும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33

உடலில் உள்ள காற்றின் சுழற்சி சீரடைய இந்தப் பத்தியம் உறுதுணையாக இருக்கும். பத்தியக் காலத்தில் நாம் தவிர்க்கும் பொருட்கள் தீமைகளை விரட்டும். உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருட்கள், நன்மைகளைப் பெருக்கும். குறிப்பாக, ரச வகை உணவுகள், மிளகு, சீரகம், பூண்டு போன்ற பொருட்களை உடலில் கூடுதலாக இணைக்கின்றன. ஐம்பூதச் சீர்நிலை உருவாவதில், இவை முக்கியப் பங்காற்றுகின்றன.

இவ்வாறான பத்தியக் காலத்தை, மாதம் ஏழு நாட்கள் என்ற வகையில் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். உடல் சீராகும் வரை இந்தப் பத்தியம் உதவியாக இருக்கும்.

பல் துலக்குவதற்கு நமது மரபில் கடைப்பிடிக்கப்படும் பொருட்களைப் பாருங்கள். ஆலங்குச்சி, வேலங்குச்சி, பூலாங்குச்சி, ஆவாரைக் குச்சி, வாத முடக்கிக்குச்சி (வாத நாராயணன்). இவற்றில் வேப்பங்குச்சியைத் தவிர, மற்ற அனைத்தும் துவர்ப்புச் சுவை உடையவை.

பல் துலக்கப் பயன்படும் பொடி வகைகளில் சிலவற்றைக் காண்போம். கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, செங்கல் பொடி, சாம்பல் பொடி. இவை அனைத்தும் துவர்ப்புச் சுவைகொண்டவை. நெல்லிக்கொட்டைகளைக் காயவைத்து அரைத்தால், அவை துவர்ப்பு கலந்த இனிப்புடன் இருக்கும்.

பல் துலக்கும்போது துவர்ப்புச் சுவை உடலுக்குள் செல்வது நல்லது. ஏனெனில், நமது உணவில் துவர்ப்புச் சுவைகொண்ட உணவுப் பொருட்களின் எண்ணிக்கை குறைவு. நீர்த்தன்மை மிகுந்திருக்கும் எல்லா இடங்களிலும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகமாக இருக்கும். வெப்பமும் காற்றும் துவர்ப்புச் சுவையின் இயல்பு என்பதால், நீரைக் கட்டுப்படுத்த அது சிறந்த சுவை. வாய் முதல் வயிறு வரையிலான நுண்ணுயிரிப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் `பல் துலக்குதல்' எனும் செயல்முறை. பற்களையும் ஈறுகளையும் வேதிப்பொருட்களைக்கொண்டு தேய்த்துவிட்டு, கண்ணாடியில் பற்களின் வெண்மையைப் பார்க்கும் வேடிக்கை அல்ல. ஆகவேதான் துவர்ப்புச் சுவைகொண்ட `ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற பழமொழியைப் பதிவுசெய்தது நம் மூத்த தலைமுறை.

பல்வலி அதிகமாக இருக்கும்போது, கொய்யா இலைகளைக் கொதிக்கவைத்து, அந்த நீரை வாயில் ஊற்றிக் கொப்புளித்தால், பல்வலி உடனடியாகக் குறையும். சிறுநீர்ச் சுருக்கு ஏற்பட்டு வலியால் அவதிப்படும்போது, கொட்டைப்பாக்குத் துகளை மென்றால், நீர்ச்சுருக்கு வலி தணியும்.

மாதவிலக்குப் போக்கின்போது தாங்க முடியாத வலி ஏற்படுவது உண்டு. அவ்வாறான சூழல்களில் மாதுளைப் பிஞ்சுகளை மென்று தின்றால், வலியின் தீவிரம் குறையும். பிஞ்சு மாதுளை, சிறந்த துவர்ப்புச் சுவையுடன் இருக்கும். நாட்டு மாதுளையின் பழுப்பு நிற மென் தோல் துவர்ப்பாக இருக்கும். கருப்பைச் சிக்கல்களுக்கு இது அருமருந்து. நவீனம் கண்டறிந்த சீமை மாதுளைகளில் இந்த மென் தோல் மிகக் குறைவாக உள்ளது.

இந்தத் தொல்லைகள் அனைத்தும், நீரின் தன்மையில் சீர்கேடு ஏற்படுவதால் வருபவை. துவர்ப்புச் சுவையுடைய பொருட்கள், இந்த வலிகளுக்கான சிறந்த மருந்துகளாக அமைகின்றன.

மலச்சிக்கல் அதிகமாக உள்ளவர்கள், கடுக்காய்த்தூளை இளஞ்சூடான நீரில் கலந்து இரவு பருகினால், காலையில் மலப்போக்கில் முன்னேற்றம் கிடைக்கும்.

வாழைப்பூவின் துவர்ப்பு மிகச் சிறப்பானது. வாரம் ஒருமுறை வாழைப்பூ கூட்டு உணவில் சேர்ப்பது, துவர்ப்பின் நலன்களை உடலுக்கு வரவேற்கும் பழக்கம்.

துவர்த்தல் என்றால், நீரை அகற்றுதல் என்று பொருள். இதுதான் ‘தலை துவட்டுதல்’ எனும் வழக்காக மருவியது. வெப்பமும் காற்றும்தானே நீரை அகற்றும்! ஐம்பூதக் கொள்கையும் தமிழும் பின்னிப்பிணைந்தவை.

நம் மொழியின் ஒரு சொல்லைக்கொண்டு ஓர் அகராதியே எழுதலாம்.

- திரும்புவோம்...