Published:Updated:

ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!

ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!

இரா.கலைச்செல்வன் - படங்கள்: த.ஸ்ரீனிவாசன்

ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!

இரா.கலைச்செல்வன் - படங்கள்: த.ஸ்ரீனிவாசன்

Published:Updated:
ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!
ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!

`த்துக்குளியில் இருக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியை நான். வாய் பேச முடியாத, காது கேளாதோர் பள்ளிக்குச் சென்று, அவர்களுக்கு நான் ஒரு நாள் ஆசிரியையாக இருக்க வேண்டும்' என்றது ஆசிரியை அலமேலு மங்கையின் கடிதம். 

வானத்தை, மேகங்கள் மறைத்திருந்த காலை வேளை. பரபரப்பான சேலம் - கோவை நெடுஞ்சாலையில் இருந்து, அந்தக் கிராமத்து வழியில் கார் திரும்பியது. காய்ந்த புற்கள் நிறைந்த அந்த நிலத்தையொட்டிய சாலையில் ஆசிரியை அலமேலு மங்கையும் அவர் தோழி விஜயலட்சுமியும் காரில் ஏறிக்கொண்டனர். திருப்பூர் மாவட்டம் கோதபாளையத்தில் இருக்கும் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியை நோக்கிப் பயணப்பட்டோம். பள்ளி வளாகத்துக்குள் நுழைந்ததும், காற்றின் சத்தத்துக்கு மத்தியில் மயில்கள் அகவும் சத்தமும் கேட்டது.

``அழகழகான மயிலுங்க எத்தனை இருக்கு! இந்தக் குழந்தைகளால் இதை எல்லாம் பார்க்க மட்டும்தான் முடியும். சத்தத்தைக் கேட்க முடியாதுங்கிறதை என்னால் ஏத்துக்கவே முடியலை. இந்தக் கடவுள் ஏன்தான் இப்படிப் பண்றாரோ!'' - தன் உணர்வுகளை வார்த்தைகளாக ஆசிரியை அலமேலு சொல்லும்போதே பள்ளியின் வாசலுக்கு வந்துவிட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


வகுப்பறையின் ஜன்னல்கள் வழியே நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொண்டும், சைகையில் கிசுகிசுத்துக்கொண்டும் இருந்தனர் மாணவர்கள். பள்ளியின் உள்ளே அழைத்துச் சென்றார் பொறுப்பாளர் சித்ரா தேவி. பள்ளிக்கூடம் குறித்து ஆசிரியை அலமேலு மங்கைக்கு விவரித்தார். அலமேலுவும் அவரிடம் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

``எங்க ஸ்கூல்ல ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி ரங்கராஜன்னு ஒரு பையன் வந்து சேர்ந்தான். அவனுக்கு, காது கேட்காது; வாய் பேசவும் முடியாது. எனக்குத் தெரிஞ்ச வகையில் அவனுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தேன். கொஞ்சம் புரிஞ்சுப்பான். ஆனால், அவனுக்குள்ள அடக்கிவெச்ச நிறையக் கேள்விகள், உணர்வுகள் எல்லாம் இருக்கும். அதை என்கிட்ட சொல்லவும் முயற்சிப்பான். ஆனா, எனக்கு அது சரியா புரியாது. அப்படியே, ஏங்கிப்போயிடுவான். சுற்றி எல்லாரும் சாதாரண குழந்தைங்க, தான் மட்டும் இப்படி இருக்கோமேங்கிற உணர்வும் சேர்ந்து, கொஞ்ச நாள்லயே ஸ்கூலைவிட்டுப் போயிட்டான். என்னை ரொம்பவும் பாதிச்ச சம்பவம் அது. இப்போது, அடுத்த வருஷமும் அப்படி ஒரு பையன் என் வகுப்புக்கு வர இருக்கான். அவனுக்கு நான் ஒரு நல்ல ஆசிரியையா இருக்கணும்னு ஆசைப்படுறேன். அதை எப்படித் தொடங்குறதுன்னு தெரியாம இருந்தப்பதான் ஆனந்த விகடனுக்கு எழுதிப் போட்டேன். அவங்க இப்படி நேர்லயே வந்து என் ஆசையை நிறைவேற்றுவாங்கன்னு நினைச்சுக்கூட பார்க்கலை. எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு'' என்று சித்ரா தேவியிடம் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் அலமேலு.

`` பள்ளியை நீங்க முதல்ல சுற்றிப்பாருங்க. ஏதாவது ஒரு வகுப்புல உட்கார்ந்து எப்படிப் பாடம் நடத்துறாங்கன்னு கவனிங்க. உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். அப்புறமா எங்க ஆசிரியர் ஒருத்தர் உதவியோடு நீங்க பாடம் எடுக்கலாம்'' என்று அன்றைய நாளின் திட்டங்களைச் சொன்னார் சித்ரா தேவி.

ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!

முதல் தளம் நோக்கி படிகளில் ஏறினார் அலமேலு. எதிர்ப்பட்ட மாணவர்கள் சின்னச் சிரிப்புடன் இரு கரம் கூப்பி, ``அ...க்...கம்ம்...'' என்ற ஒலியை எழுப்பினார்கள். ஆறாம் வகுப்புக்குள் சென்று ஓர் ஓரமாக நின்றுகொண்டு, நடத்தப்படும் பாடங்களைக் கவனிக்கத் தொடங்கினார் அலுமேலு மங்கை. அங்கே நடந்துகொண்டிருந்தது தமிழ் வகுப்பு.

``இங்கே எல்லோருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கு. நம்ம லாரன்ஸ் நல்லா பாடுவானா?''

``இ... இ...'' என்று ஒலி எழுப்பி தலை அசைக்கிறார்கள்.

``அவன் நல்லா டான்ஸ் ஆடுவான். நம்ம ராகவி நல்லா வரைவா. ப்ரியா அழகா எழுதுவா. இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதனால, யாரையும் இகழக் கூடாது'' என்று சத்தமான வார்த்தைகளாலும் பலவித உடல் மொழிகளாலும் சொல்லிக்கொடுத்தார் ஆசிரியர் ரமேஷ்.

``மேடம், நீங்க கொஞ்சம் முன்னாடி வாங்க. நீங்க யாருன்னு சொல்லிடுறேன். இல்லைன்னா, பாடத்தையே கவனிக்க மாட்டாங்க. ஒரு சந்தேகம் வந்துட்டா, அது தெளிவாகிற வரைக்கும் இவங்க மனசுல எதுவுமே பதியாது'' என்று சொல்லி, அலமேலுவை அறிமுகப்படுத்திவைக்கிறார். பெரும் மகிழ்ச்சியோடு அலமேலுவைப் பார்க்கிறார்கள் மாணவர்கள். தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள்.

ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!

நெற்றியில் ஆள்காட்டி விரலைக்கொண்டு ஒரு கோடு போட்டு, கட்டை விரலை உயர்த்தி `என்ன?' என்பதுபோல் கேட்கிறார்கள். ``உங்கள் பெயர் என்ன?'' என்பது அதன் பொருள். அலமேலு சைகையில் எப்படி எல்லாமோ சொல்ல முயல, அவர்களுக்குப் புரியவில்லை. சாக்பீஸை எடுத்து போர்டில் எழுதினார். ஒவ்வோர் எழுத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். முடித்ததும், ``அ...உ...ம...'' என்பது போன்ற ஒலி எழுப்புகிறார்கள். அது அவர்கள் மொழியில் அலமேலுவின் பெயர்.

அது உண்டு உறைவிடப் பள்ளி என்பதால், எல்லா மாணவர்களுக்கும் சாப்பாடு அங்கேதான். தட்டில் உணவு பரிமாறப்படுகிறது. அலமேலுவும் அவர்களோடு ஒருவராக உட்கார்ந்துக் கொள்கிறார். சுருள் முடிகொண்ட அந்த ஏழாம் வகுப்பு மாணவி, முன்னால் வருகிறார். ``நம்மைப் பார்க்க வந்திருக்கும் இந்த ஆசிரியையும், அவர்களை அழைத்து வந்த ஆனந்த விகடனும் நலமாக இருக்க பிரார்த்திப்போம்'' என்று சொல்லவும், அனைவரும் கண்களை மூடி ``ஆ... கா... ஓ...'' என சத்தங்களை எழுப்புகிறார்கள். அங்கு வெளிப்பட்டது சத்தம் அல்ல... சங்கீதம். உணர்ச்சி பொங்க, கண்கள் கலங்க அவர்களோடு மதிய உணவைச் சாப்பிட்டார் அலமேலு. 

ஆறாம் வகுப்பு மாணவர்கள், அவருடன் நன்றாக ஒட்டிக்கொள்ளவே, அவர்களுக்கே பாடம் எடுப்பதாகச் சொன்னார் அலமேலு. அதுவரை, இவர் பாடம் எடுக்கப்போகிறார் என்பதை அறிந்திடாத மாணவர்கள் அனைவரிடத்திலும் செம உற்சாகம். முயல் - ஆமை கதையை, சிறு நாடகமாக நடத்திக்காட்டினார் ஆசிரியை அலமேலு. அந்தக் கதையை மிகவும் ரசித்துப் பார்த்தனர் மாணவர்கள். அங்கு உட்கார்ந்து இருந்த சேகர் எழுந்து, `நீங்க இந்த முயல்-ஆமை போட்டியை நேர்ல பார்த்திருக்கீங்களா? இதை எங்கே நடத்துறாங்க?' என சைகையில் கேள்வி கேட்க, அவனுக்கான பதிலை ஆசிரியர் ரமேஷ் விளக்கினார்.

பள்ளி நேரம் முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்தன. மாணவர்கள் அலமேலுவிடம் நிறையக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது, கூட்டத்தில் இருந்த மாணவி லட்சுமி எழுந்து, ``உங்கள் குடும்பத்துல எத்தனை பேர்? உங்க கணவர் என்ன செய்கிறார்?'' என்று கேட்டார். சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, ``என் கணவர் இறந்துவிட்டார். என் பொண்ணு 10-வது படிக்கிறா. வீட்டில் நானும் அவளும் மட்டும்தான்'' என்று சொல்ல, ஆசிரியர் ரமேஷின் சைகை மொழிபெயர்ப்பில் மாணவர்கள் அமைதியானார்கள். அந்த அமைதியை உடைக்கும் வகையில் லாரன்ஸ் என்கிற மாணவன் எழுந்து, ``கவலைப்படாதீங்க. இந்த உலகத்துல எல்லோருமே நல்லா இருப்பாங்க'' என்று அவனது மொழியில் சொல்ல, அவனை ஆசுவாசப்படுத்தி அமரவைக்கிறார் ரமேஷ்.

பள்ளி முடிந்து எல்லோரும் கிளம்பும் நேரம். ``குரூப் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார் அலமேலு. அனைவரையும் ஒன்றாக உட்காரவைத்தோம். `மணி' என்கிற நாயையையும் உடன் இணைத்துக் கொண்டார்கள் சில மாணவர்கள். குரூப் போட்டோ எடுத்து முடித்ததும், மாணவர்கள் சார்பில் முன்வந்த அபிநயா, `இந்த ஆசிரியை எங்கள் பள்ளிக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி. அவர் சொன்ன முயல் - ஆமை கதை, எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவருக்கும், அவரை இங்கு அழைத்து வந்த ஆனந்த விகடனுக்கும் நன்றி' என்று சைகையில் சொல்லி முடிக்க, எல்லா மாணவர்களும் அலமேலுவை நோக்கி சல்யூட் அடித்தார்கள்.

அளவற்ற அன்பைச் செலுத்திய மாணவர் களிடம் இருந்து பிரியா மனதோடு விடைபெற்ற அலமேலு, ``என் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கொடுத்த நாள் இது. எனக்குப் பேச வர மாட்டேங்குது. அழுகைதான் வருது'' என்று நெகிழ்ந்தார்.

காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, இருட்டில் மயில்கள் தெரியவில்லை. ஆனால்,  அவை அகவும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...

ஆசை - சத்தம் அல்ல சங்கீதம்!

ஆசை

ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism