Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 21

#MakeNewBondsபாஸ்கர் சக்தி - படங்கள்: அருண் டைட்டன்

பிரீமியம் ஸ்டோரி

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 21

நாம் ஒரு சிசுவாக அழுதபடி பூமியில் வந்து விழும்போது முகம் பார்த்துச் சிரிப்பவள் பெண். சடலமாகக் கிடக்கும்போது அழுபவளும் அவள்தான். ஜனனத்தைத் தருபவளும், வாழும் வரை நம்மைத் தாங்குபவளும், நமக்கு என அழுபவளும் பெண்தான். ஆனால், வாழ்கிற காலம் முழுக்க நம்மால் சுரண்டப்படுபவளும் சிறுமைப் படுத்தப்படுபவளும் அவளே. இது பற்றிய சுரணையே ஆணுக்கு இல்லை என்பதுதான் கசக்கும் உண்மை.

என் மனதில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியவர் என் பெரியம்மா பாப்பம்மாள்.சிறுவயதிலேயே

ஆண்பால் பெண்பால் அன்பால் - 21

விதவையானவர். உடல் மனவளர்ச்சிக் குன்றிய ஒருவர் எனக்கு அண்ணன்  முறை. அந்த அண்ணனை 20 ஆண்டுகள் பெரியம்மாதான் தூக்கிச் சுமந்தார். பேசாத அந்த அண்ணன் விதவிதமாகச் சத்தமிடுவார். ஒவ்வொரு சத்தத்துக்குமான அர்த்தத்தை பெரியம்மா அறிவார். `பசிக்குதுனு சொல்றான்’, `ஆய் வருதுனு சொல்றான்’ என அவரது தேவைகளைப் புரிந்துகொண்டு ஒவ்வொன்றையும் செய்தார். அந்த அண்ணன் இறந்து பல ஆண்டுகள் கழித்து பெரியம்மாவிடம், ``எதுக்கும்மா அந்த அண்ணனை அப்படிப் பாத்துக்கிட்டே? அவர் ஒண்ணும் நீ பெத்தபுள்ள இல்லையே...” எனச் சும்மாதான் கேட்டேன். பெரியம்மாவின் கண்கள் கலங்கிவிட்டன.

``என்னடா இப்படிக் கேட்டுட்டே. எம்புட்டுக் கூட்டத்திலேயும் அவன் என்னைக் கண்டுபிடிச்சுடுவான். அவனுக்குப் பேச்சு வரலைனு எல்லாரும் சொல்வாங்க. ஆனா, அவனும் நானும் பேசிக்கிட்டுத்தான்டா இருந்தோம். நீ ஆம்பளைப் பய உனக்கு விளங்காது. இதே நீ பொம்பளையா இருந்தா உனக்குப் புரியும்.”

நான் ஆடிப்போய்விட்டேன். `நிபந்தனையற்ற அன்பு' என, புத்தகங்களில்தான் படித்திருக்கிறேன். புலன்கள் பழுதான அரைகுறையான ஒரு ஜீவனிடம் அன்பு செலுத்தவும் அன்பைப் பரிமாறவும், ஒரு பெண்ணால்தான் முடியும் என அந்தக் கணத்தில் எனக்குத் தோன்றியது. ஆணாகிய எனக்கு அதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் அறிவுகூட இல்லை என உணர்ந்தேன்.

ஊரில் ஒரு பெண், வயலில் நடவு முடித்துவிட்டு, கடையில் போய் குருணை வாங்கிவந்து, வீட்டில் சோறு பொங்கி, தோட்டத்தில் பறித்துவந்திருந்த கீரையைக் கடைந்து, தன் ஐந்து வயதுப் பையனுக்கு ஊட்டிவிட்டு, பத்து வயது மகளையும் சாப்பிடவைத்து, `தம்பியைப் பாத்துக்க’ எனச் சொல்லி, கையில் இருந்த பணத்தையும் அவளிடம் `வெச்சுக்கடி’ எனக் கொடுத்துவிட்டு, நேராக ஊர்க் கிணற்றில் வந்து குதித்துச் செத்துப்போனாள். ஊரே ஓடி கயிற்றுக்கட்டிலை இறக்கித் தூக்கிப்போட்டு அழுதது. போய்ப் பார்த்துவிட்டு வந்த பெரியம்மா, அடுத்த நாள் அதைப் பற்றி மற்றொரு பெண்ணிடம் பேசிக்கொண்டி ருந்ததைக் கேட்டேன்.

``போறேன்னவ அப்படியே ஆத்தோட போகாம புள்ளைக பசியாத்திட்டுல போயிருக்கா!”

பெரியம்மாவிடம் பேசிய கிழவி சொன்னது,

``போனவ புள்ளைகளையும் கொண்டு போயிருக்கலாம். அதுங்களை விட்டுட்டுப் போலாமா?”

பெரியம்மா சொன்னது, ``அது எப்படி? பெத்ததுக உசுரை அவளே எடுப்பாளா? அந்தப் புள்ளைக பொழைச்சுக்கிடும். அந்த எடுபட்ட நாய்தான் (கணவன்) கிடந்து சீப்படுவான் பாத்துக்க. ஆம்பளை செத்தா, பொம்பளை சமாளிச்சு, புள்ளைங்களைக் கரைசேத்துருவா. நீ வேணா எழுதிவெச்சுக்க அவளைப் படுத்தினபாட்டுக்கு அவன் அனுபவிப்பான்.”

தொடர்ந்த உரையாடல்களின் வழியே என்னைச் சுற்றியிருந்த அத்தனைப் பெண்களையும் மனுஷியாக உணரச்செய்தவர் என் பெரியம்மா.

நான் இளங்கலை படித்தது, ஒரு சிறிய டவுனில் உள்ள கோ-எட் கல்லூரியில். ஆனால், பெண்களுடன் பேச அனுமதி இல்லை. எனது புரொஃபசர் மோகனசுந்தரத்திடம் இது பற்றி கேட்டபோது அவர் சொன்னார்... `எனக்கும் இது பிடிக்கலை. ஆனா, யோசிச்சுப்பார். நம்ம ஊர்ல இப்பத்தான் பொம்பளைப் புள்ளைகளைப் படிக்கவே அனுப்புறாங்க. நம்ம பயலுகளைப் பற்றித்தான் நல்லா தெரியுமே. ரெண்டு நாள் பேசவிட்டா மூணாவது நாளு லெட்டர் குடுத்துருவான். அதோட அந்தப் புள்ளையை படிப்பை நிறுத்திக் கல்யாணம் கட்டிவெச்சுருவாங்க. விடுங்கடா... அதுக படிக்கட்டும். நீங்க அவங்கக்கூடப் பேசறதைவிட, அவங்க படிக்கிறதுதான் முக்கியம்.’’

கிராமத்தில் இருந்து வரும் இளைஞர்களை, நகரத்தின் நவீனப் பெண் நிச்சயம் சலனப்படுத்துவாள்.அருகே கடந்து செல்லும்போது கமழும் ஆங்கிலம் கலந்த பெர்ஃப்யூம், ஊரில் இருந்து வந்திருக்கும் பையனைத் தொந்தரவு செய்யாமல் இருக்காது. அப்பிராணிச் சுடிதார்களை மட்டுமே ஊரில்  பார்த்துவந்த பசங்களுக்கு, சென்னை மால்களில் கிடைக்கும் காட்சிகள் முதலில் தருவது அதிர்ச்சி; பதற்றம். அதைத் தொடர்வது ஏக்கம்; இயலாமை. அதன் பிறகு பொறாமை. எப்போதும் உடன் இருக்கும் தான் `ஆண்' என்ற எண்ணம். இவை எல்லாம் கலவையாகச் சேர்ந்து அவனைப் பாதிக்கும். அந்தப் பெண்கள் எல்லோரும் திமிரானவர்கள் என்றெல்லாம் கற்பனை பிறக்கும். அவனுக்குள் பெண் பற்றிய ஒரு தெளிவு இல்லாவிட்டால், பெரிய சிக்கல்தான். கிராமத்தில் இருந்து படிக்கவந்த புதிதில், நானும் இதை உணர்ந்திருக்கிறேன். ஒரு பஸ் பயணம் இதை மாற்றியது.

அது ஒரு பகல் நேரப் பயணம். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு.பஸ் நிறுத்தத்தில் ஜீன்ஸும் பனியனும் அணிந்த நல்ல நிறத்தில் மிக மாடர்ன் பெண். என் ஜன்னலுக்குக் கீழே வழி அனுப்ப வந்த அவள் போன்ற இன்னொரு தேவதையுடன் இங்கிலீஷிலும் வேறு ஏதோ ஒரு புரியாத பாஷையிலும் பேசிக்கொண்டி ருந்தாள். பஸ் நகரும்போது உள்ளே ஏறினாள். என் ஜன்னலோர ஸீட்டுக்கு முன்னால் இருக்கும் ஜன்னலோர ஸீட்டில் அமர்ந்தாள். பஸ்ஸில் `சின்னக்கவுண்டர்' படம் வெகுசுமாரான பிரின்ட் போட்டு செய்த சோதனை எல்லாம் உறைக்கவில்லை.

 அவள் எப்போதாவது பின்னால் திரும்பும், மேலே வைத்திருக்கும் பையை எழுந்து எடுக்கும் அந்த நொடிகள் மிக அற்புதமாக இருந்தன. அப்போது இன்று இருக்கும் அகலமான நாற்கரச் சாலை இல்லை. பஸ் மிக மெதுவாகச் சென்று ஒரு மோட்டலில் நின்றது. உண்ணவே கூடாது என்று எண்ணவைக்கும் கடை. பாத்ரூம் போய் வரும்போது, அந்தப் பெண் பாவம்... நல்ல பசி போல. கேரட் நிறத்தில் அங்கு விற்ற பஜ்ஜியை வாங்கிச் சாப்பிட்டாள். எனக்கு இந்தச் சமுதாயத்தின் மீது சினம் பொங்கியது. அவள் சாப்பிடத் தகுந்த உணவா அது? அவள் போன்ற ஒருத்தி இந்த மோட்டலில் இறங்கி இங்கு இருக்கும் பாத்ரூமுக்குப் போய், இந்த க்ரூட் ஆயில் பஜ்ஜியைத் தின்ன நேர்ந்துவிட்டதே என உள்ளுக்குள் கொந்தளித்தேன். பிறகு, டீ எனச் சொல்லப்பட்ட திரவத்தைக் குடித்தேன். மறுபடி பயணம் தொடங்கியது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 21

சட்டென ஒரு தருணத்தில் என் மீது ஈரம் பட, என்ன என்று பார்த்தால், முன் ஸீட் தேவதை வாந்தி எடுக்கத் தொடங்கிவிட்டாள். சட்டென பஸ்ஸை நிறுத்தச் சத்தமிட, பஸ் நின்றதும் அவள் வேகமாகக் கீழே இறங்கி ஓட, நான் வேகமாக இறங்கி அந்தப் பெண் அருகே சென்றேன். தின்ற பஜ்ஜிகள் திரவமாக வெளியேறின. அப்போது தண்ணீர் பாட்டில் கலாசாரம் பரவி இருக்கவில்லை. எனவே, டிரைவரிடம் தண்ணீர் கேட்டு, அவர் அழுக்கான பாட்டிலில் கொடுத்த தண்ணீரை அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். முகம் கழுவிக்கொண்டு பலவீனமாக பஸ்ஸில் ஏறினாள். `ஸீட்டுக்குக் கீழே க்ளீன் பண்ணிரும்மா...’ என இரக்கம் இல்லாத கண்டக்டர் சொல்ல, அவள் தள்ளாடியபடி எழுந்துபோய் கொஞ்சம் மண் அள்ளிவந்து அதில் போட்டாள்.

அவள் ஸீட்டின் கீழே அசிங்கமாக இருக்க, என் பக்கத்து ஸீட்டில் அமர்ந்தாள். கண்களை மூடிக்கொண்டாள்... பாவமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் மறுபடி ஓங்கரித்தாள். பயணத்தின்போது மாத்திரைகள் வைத்திருக்கும் பழக்கம் எனக்கு உண்டு. வாந்திக்கான மாத்திரை இருக்கிறதா எனத் தேடி எடுத்து, அவளிடம் `மாத்திரை இருக்கு சாப்பிடுறீங்களா?’ எனக் கேட்டேன். சந்தேகமாகப் பார்த்துவிட்டு மாத்திரையை வாங்கி விழுங்கினாள். ஒரு வழியாக திருச்சி வந்து இறங்கினோம். நான் தேனி செல்லும் பஸ்ஸுக்காக அமர்ந்திருக்கையில், அவள் மிகவும் பலவீனமாக அருகே இருந்த பெஞ்சில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். கிட்டே போய் `நீங்க எங்க போகணும்?’ எனக் கேட்டேன். `மதுரைக்கு. இங்கே என் அத்தை வர்றேன்னு சொல்லியிருக்காங்க’ எனச் சொல்லிவிட்டுக் காத்திருந்தாள். அந்த அத்தை வெகுநேரமாகியும் வரவில்லை. நான் எனக்கான பஸ்களைத் தவறவிட்டபடி இருந்தேன்.

அவள் நடுவில் என்னைப் பார்த்துக் குழப்பத்துடன், `நீங்க ஏன் இங்கேயே இருக்கீங்க?’ என்றாள். அதில் ஓர் அச்ச உணர்வு இருந்தது. எனக்கு அந்தச் சூழல் ரொம்ப அபத்தமாக இருந்தது. அடுத்த பஸ்ஸில் போய்விடலாம் எனத் தீர்மானிக்கும்போது, அவளுடைய அத்தை வந்துவிட்டாள். பதற்றத்துடன் `என்னாச்சு?’ என்று கேட்டாள். `ஃபுட் பாய்சன் ஆகிடுச்சு’ என நான் அநாவசியமாக இடைமறித்துச் சொல்ல, அத்தை சந்தேகக் கோபத்துடன் என்னைப் பார்த்து அவளிடம் ஏதோ கேட்க, அவள் புரியாத பாஷையில் பதில் சொன்னாள். அது சௌராஷ்டிரப் பாஷை என ஊகித்தேன். `சரி... சரி... வா’ என அத்தை அவளைக் கூட்டிக்கொண்டு மதுரை பஸ்ஸில் ஏறிக்கொண்டாள். அந்தப் பெண் ஜன்னலில் எனக்கு டாட்டா காட்டுவாள் என்ற எதிர்பார்ப்புடன் நான் பார்த்திருக்க, அவள் உணர்ச்சியற்ற ஒரு வெற்றுப் பார்வை பார்த்தபடி போய்விட்டாள். அவ்வளவுதான் முடிந்தது.
 
அவளைப் பற்றி முதலில் இருந்த பிம்பம் முழுவதும் கலைந்தவனாக, நான் பஸ்ஸில் ஏறினேன். அவள் ஒன்றும் தேவதை அல்ல... பெண். அவளுக்கும் உபாதைகள் உண்டு. அவளுக்குப் பிடித்த உடையை அணிந்து  அவள் பாட்டுக்குப் போகிறாள். கூட பஸ்ஸில் ஏறிய ஒரே தற்செயலில் நான் ஏதேதோ எண்ணங்களையும் கற்பனைகளையும் மனதில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். அதில் விளையும் சந்தோஷம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் அனைத்துக்கும் நான் மட்டுமே காரணம் என்ற உண்மை விளங்கியது. ஏழெட்டு பஸ்களைத் தவறவிட்டு நள்ளிரவில் மெயின் ரோட்டில் இறங்கி, நாய்கள் குரைக்க நடந்துபோனதுதான் மிச்சம். இந்த ஞானத்தின் தொடக்கம் அந்த ஆரஞ்சு கலர் பஜ்ஜிதான்.

பெண்கள் குறித்த என் பார்வையை மேலும் துல்லியமாக்கிய பெண் ஒருத்தி எனக்கு தோழி ஆனார். ஆனால், ஒரே ஒருமுறைதான் அவரைப் பார்த்திருக்கிறேன். 2000-களின் தொடக்கம். இணையம் அப்போதுதான் பரவலாகிக் கொண்டிருந்தது. நான் இரவுகளில் அமர்ந்து இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தேன். யாஹூ மெசஞ்சரில் சாட் செய்வது வழக்கம். கௌதமி என்ற பெயரில் ஒருவர் உரையாட வந்தார். நான் எழுத்தாளர் என்றதும், என்னுடன் தொடர்ந்து உரையாட ஆரம்பித்தார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 21

பத்து மணிக்கு ஆரம்பித்த உரையாடல் இரண்டு மணி நேரம் நீண்டது. பின் அடுத்தடுத்த தினங்களில் எங்கள் உரையாடல்கள் தொடர்ந்தன. புத்தர் பற்றியும், ஓஷோ பற்றியும் தத்துவங்கள் குறித்தும் அதிகம் பேசுவார். ரூமியின் கவிதைகளை அடிக்கடி குறிப்பிடுவார்.

 நிறைய வாசிக்கிற பெண். சொந்த ஊர் விஜயவாடா அருகே உள்ள ஒரு சிறிய ஊர். அமெரிக்காவில் சில காலம் வேலை செய்துவிட்டுத் தற்போது ஊருக்குத் திரும்பிவிட்டதாகவும் சொன்னார். வெகுசீக்கிரத்திலேயே எங்களுக்கு இடையே ஒரு நல்ல நட்பு உருவாகிவிட்டது. அநேகமாக தினமும் சாட்டிங்கில் உரையாடிக்கொள்வது வழக்கம். கௌதமிக்கு தமிழ் தெரியாது. எனக்கு தெலுங்கு தெரியாது. ஆங்கிலத்தில்தான் உரையாடல். கௌதமி என்னை `சக்தி' என்றுதான் அழைப்பார். ஒருநாள் உரையாடலின்போது முதன்முதலில், `நான் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்து வந்து பேசினேன் தெரியுமா?’ என்றார். நான் `ஏன்?’ எனக் கேட்க `உங்கள் பெயர் பாஸ்கர் என இருந்ததால்’ என்றார். எனக்குப் புரிந்துவிட்டது (நான் இரண்டாவது பாஸ்கர் என்று). `என்னாச்சு?’ எனக் கேட்டேன்.. சிறிது தயக்கத்துக்குப் பிறகு சொன்னார்... `உங்களிடம் பேசத் தொடங்கிய அன்று கடுமையான டிப்ரெஷன். ஏதேனும் தவறான முடிவை மேற்கொள்ளும் அளவுக்குப் பாதிக்கப்பட்ட ஒரு மனநிலை. வலிமிகுந்த ஓர் உறவின் விலகல் என்னை மோசமாகப் பாதித்திருந்த தருணம். அந்த மனநிலையில் இருந்து நான் மெதுவாக வெளியேறி வந்துகொண்டிருக்கிறேன். காரணம், நீங்கள்தான்.உங்களிடம் பேசப் பேச மனம் இலகுவாகிறது’ என தனது சோகங்களையும் பிரச்னைகளையும் கொட்டித்தீர்த்தார். அன்று அவர் விடைபெறும்போது அதிகாலை நான்கு மணி.

அதன் பிறகு கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாக நாங்கள் உரையாடினோம். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல் எல்லா நேரங்களிலும் சரியாகவே இருக்கும் வாய்ப்பு குறைவு. எங்கள் இடையேயும் அப்படி நிகழ்ந்திருக்கிறது. எங்கேனும் ஓரிடத்தில் அபஸ்வரம் தட்டினாலோ, ஒரு வார்த்தை தவறாகப் போனாலோ அதைத் திருத்தும் ஒரு சரியான பெண்ணாக கௌதமி இருந்தார். நான் சில நேரங்களில் எரிச்சல் அடைவேன். ஓர் ஆணாக நான் அடையும் எரிச்சலின் முட்டாள் தனத்தையும் அதில் உள்ள அபத்தத்தையும் முகத்தில் அடித்த மாதிரி சொல்வார். காதல் பற்றியும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவு பற்றியும் ஒருமுறை பேச்சு வந்தது. அப்போது கௌதமி சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது… `ஆணுக்கு எல்லாமே அந்த நேரத்து அட்வெஞ்சர்தான். ஆனால், பெண் எப்போதும் எமோஷனலி கமிட்டட். ஓர் உறவின் முறிவு ஆணுக்கு ஏற்படுத்தும் வலியைவிட பெண்ணுக்குத் தரும் வலி ஆயிரம் மடங்கு அதிகம். பெண், அந்த வலியை ஓர் எறும்பு கடித்ததுபோல் வெளிப்படுத்துவாள். ஆனால் ஆண், உலகமே இடிந்ததுபோல் சீன் போடுவான்.’

   சாட்டிங்கிலேயே பேசிக்கொண்டிருந்தோமே தவிர, கௌதமியின் முகம் எனக்குத் தெரியாது.என் போட்டோவை ஒருமுறை கௌதமி கேட்டதால் அனுப்பிவைத்தேன் (அதைப் பார்த்த பிறகும் கௌதமி என்னுடன் நட்பைத் தொடர்ந்தார்). ஆனால், நான் கௌதமியின் போட்டோவைக் கேட்கக் கூடாது என இருந்தேன். பல மாதங்கள் கழித்து நான் கேட்காமலேயே, திருப்பதியில் தன் பெற்றோருடன் எடுத்த ஒரு அவுட் ஆஃப் ஃபோக்கஸ் போட்டோவை அனுப்பினார். (இதை எல்லாம் வைத்துதான் பெண்களைப் புரிந்துகொள்ள முடியாது என ஆண்கள் சொல்கிறார்கள்போல). இப்படி எங்கள் உரையாடல்கள் போய்க்கொண்டிருந்த சமயம், இடையில் ஒருமுறை சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் ஏதோ ஒரு புள்ளியில் சண்டையாக மாறிவிட்டது. காதல் பற்றிய சாதாரண உரையாடலாகத்தான் அது ஆரம்பித்தது. ஆனால், விவாதப்போக்கில் அது இருவரது ஈகோவையும் சீண்டிவிட்டது. அது அவ்வளவு பெரிய விலகலாக மாறும் என இருவருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஆகிவிட்டது. விடியற்காலம் நான்கு மணி அளவில் `இதோடு நம் பழக்கம் ஓவர். உனக்கும் எனக்கும் இடையே எந்த நட்பும் இல்லை’ எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் கௌதமி.

அதன் பிறகு ஓர் ஆண்டுகாலம். எந்தச் சத்தமும் இல்லை. நான் என் வேலைகளில் மூழ்கிக்கிடந்தேன். ஒருநாள், `என்னை அதற்குள் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். நான் ஆந்திராவில் இருக்கும் ஓர் எளிய கிராமத்துப் பெண்’ என ஒரு மெயில் வந்தது. `திருப்பதியில் அவுட் ஆஃப் ஃபோக்கஸில் இருக்கும் பெண்ணை நினைவிருக்கிறது’ என பதில் போட்டேன். இரண்டு ஸ்மைலிகளுடன் விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் பேச ஆரம்பித்தோம். அப்போது கௌதமி, வீட்டில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும், தான் திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனும் முடிவில் இருப்பதாகவும் பேச, நான் அது தேவை இல்லை என்று அவரிடம் சொன்னேன். தனது காரணங்களை அவர் சொல்ல, நான் அவை பலவீனமான கற்பிதங்கள் என  வாதாடினேன். இது குறித்து சில நாட்கள் எங்கள் உரையாடல் போனது. நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள் ஆகியிருந்தோம். அவரவர் சங்கடங்களையும் சந்தோஷங்களையும் எந்தச் சிக்கலும் இன்றி பகிர்கிற, விவாதிக்கிற இரண்டு நண்பர்களாக மாறியிருந்தோம். ஆண் பெண் வித்தியாசத்தை ஏதோ ஒரு புள்ளியில் கடந்துவிட்டிருந்தோம்

இது நான்கு ஆண்டுகாலக் கதை. நாங்கள் சந்திக்கவே இல்லை. ஒருமுறை அது பற்றி பேச்சு வந்தபோது, `அது பற்றி நாம் திட்டமிட வேண்டாம். நடந்தால் தானாக நடக்கட்டும்’ என்று சொல்லி, அதற்கு சப்போர்ட்டாக ஏதோ ஒரு தத்துவத்தைச் சொன்னார் கௌதமி. இதன் இடையில் இரண்டொரு முறை போனில் பேசிக்கொண்டோம். அதன் பிறகு 2009-ம் ஆண்டில் ஒருநாள் சிறிய இடைவெளிக்குப் பிறகு, `சக்தி, நான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன். இத்தனாம் தேதி கல்யாணம்’ என மெயில் வந்தது. தேதியைப் பார்த்தேன். நான்கு நாட்கள் கழித்து திருமணம்.

விஜயவாடாவில் ஒரு ஹோட்டலில் திருமணம். கூட்டத்தில் நடந்துவந்த என்னைப் பார்த்து மேடையில் இருந்த கௌதமியின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி; சிரிப்பு. மணப்பெண் அலங்காரத்துடன் வேகமாக வந்து அருகே நின்று தெலுங்கில் `வாங்க சக்தி...’ எனச் சொல்லி  கைகளைப் பற்றி சிரித்தார். கௌதமியின் அப்பா அருகே வர அவரிடம் கௌதமி தெலுங்கில் ஏதோ சொல்ல, அவர் என்னைத் தோளோடு அணைத்துக்கொண்டார். `உங்களைப் பற்றி இவ சொல்லிக்கிட்டே இருப்பா. இவ `கல்யாணமே வேணாம்’னு சொல்லிட்டிருந்தா. நீங்கதான் அவளை கன்வின்ஸ் பண்ணீங்கனு சொன்னா’ எனத் தழுதழுத்தக் குரலில் ஆங்கிலத்தில் சொன்னார். அதன் பிறகு கௌதமி தன் கணவருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். பின்னர் ஓர் ஓரமாக வந்து நின்று தனியே என்னிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். மணப்பெண் அலங்காரத்தோடு யாரோ ஒரு வெளிமாநில ஆளிடம் சிரித்து, மகிழ்ந்து பேசிக்கொண்டிருப்பதை அங்கு இருந்தவர்கள் அனைவரும் குழப்பத்துடன் உற்றுப்பார்ப்பதை உணர்ந்தேன்.

ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. கௌதமியை அதன் பிறகு சந்திக்கவில்லை. கௌதமிக்கு ஆறு வயதில் ஒரு பையன் இருக்கிறான். ஃபேஸ்புக்கில் கௌதமியும் நானும் எப்போதாவது நலம் விசாரித்துக்கொள்கிறோம். சென்னையில் வெள்ளம் வந்தபோது கௌதமி பதறிப்போய் `ஏதாவது உதவி வேணுமா?’ என மெயில் அனுப்பியிருந்தார். `என் மிக நெருக்கமான நண்பர் நீங்கள்தான் சக்தி’ என கௌதமி சொல்லும்போது ஓர் ஆணுக்கான பெரிய அங்கீகாரம் அதுதான் எனத் தோன்றியிருக்கிறது.   

உபதேசங்களும் அறிவுரைகளும் நமக்குக் கற்றுத்தருவதைவிடவும்  நம்மைச் சுற்றி இருப்பவர்கள்தான் நமக்குக் கற்பிக்கிறார்கள். உடலியல்ரீதியான வேறுபாடு ஒன்றைத் தவிர ஆணும் பெண்ணும் ஒன்றுதான். அறிவும் சிந்தனையும் வலியும் வேதனையும் இருவருக்கும் பொதுவானதுதான். இதை எனக்கு உணர்த்தியவர்கள், நான் சந்தித்த பெண்கள்தான். அவர்களே இதில் எனக்கு ஆசான்கள்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்... 

யாரைப் பற்றியும் பேச எனக்கு உரிமையில்லை
ஆனால், என்னைக் குறித்துப் பேச எல்லோருக்கும்
உரிமையிருப்பதாக அவன் சொன்னான்.
யார்? எப்போது? ஏன்?
நிர்ணயித்தார்கள் என்றேன்.
அது உனக்கு அநாவசியம் என்றான்.
எனக்கு மிகவும் அவசியமானதாக
என் உலகை உணர்ந்தேன்.
இவர்களின் செயல்கள் எனக்கு எரிச்சலூட்ட,
கேள்விகளற்று உறைந்துபோனேன்.

- சுகந்திசுப்ரமணியன்

ல்யாணமான பின்
ஆறு எதுவரை போகிறது
காட்டுங்கள் என்றேன் அவரிடம்.
ஐம்பது மைல் தள்ளிப்போய்
ஆறு போகுமிடத்தில்
ஓர் அணையைக் காட்டினார்.
இதுவரைக்கும்தான்
எனக்கும் தெரியும் என்றார்
ஆனாலும் ஆறு
போய்க்கொண்டிருந்தது.
ஏனோ சிரித்துக்கொண்டேன்.

- சுகந்திசுப்ரமணியன்

``பெண்ணுக்கு அன்பைப் புரிந்துகொள்ளத் தெரியாதா என்ன? ஆணைவிடவும் சூட்சுமமான அறிவை உடையவள் பெண். அவளுக்கு எல்லாம் புரியும். காரணக்காரியங்களோடுதான் அவள் உன்னை ஏற்பாள் அல்லது நிராகரிப்பாள். சமயங்களில் அவள் உன்னை நிராகரிக்கக்கூட அவளது மற்றோர் அன்புதான் காரணமாக இருக்கும். அது அவள் குடும்பத்தின் மீதோ இன்னோர் ஆணின் மீதோகூட இருக்கலாம். அதற்கான உரிமை அவளுக்கு நிச்சயம் உண்டு அல்லவா?''

- கௌதமி உரையாடல்களில் இருந்து...

`` `பொம்பளைங்க மோசம்... ஆம்பளைங்க பாவம்’ என சினிமாக்களில் புலம்புவது பசப்பல். அப்படி எல்லாம் சொல்ல, ஆணுக்கு எந்தத் தகுதியும் இல்லை. தன்னுடைய Comfort Zone-க்குப் பங்கம் வராமல்தான் ஆணானவன் அன்பைக் காட்டுவான். அசௌகரியம் நேர்ந்தால், ஆணின் அன்பு ஆவியாகிவிடும். அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தும் பொறுமைகூட இல்லாத ஆண்களுக்கு, பெண்களிடம் அன்பு குறித்து வகுப்பெடுக்க என்ன தகுதி இருக்கிறது?''

- கௌதமி உரையாடல்களில் இருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு