Published:Updated:

வேண்டும் வேண்டும் நீதிவிசாரணை வேண்டும்!

வேண்டும் வேண்டும் நீதிவிசாரணை வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
வேண்டும் வேண்டும் நீதிவிசாரணை வேண்டும்!

வேண்டும் வேண்டும் நீதிவிசாரணை வேண்டும்!

வேண்டும் வேண்டும் நீதிவிசாரணை வேண்டும்!

வேண்டும் வேண்டும் நீதிவிசாரணை வேண்டும்!

Published:Updated:
வேண்டும் வேண்டும் நீதிவிசாரணை வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
வேண்டும் வேண்டும் நீதிவிசாரணை வேண்டும்!

`தைப்புரட்சி' என்றும், `தமிழ் வசந்தம்' என்றும் அழைக்கப்பட்ட இளைஞர்கள் எழுச்சியின் மீது, ரத்த திருஷ்டிப்பொட்டாக அமைந்துவிட்டது கடைசி நாள் வன்முறையும் காவல் துறையின் ஒடுக்குமுறையும்.

மின்விளக்குகள் அணைக்கப்பட்ட நள்ளிரவில்கூட மாணவர்களுடன் தோளோடு தோள் நின்று மாணவிகளும் இளம்பெண்களும் கைபேசிகளையே தீப்பந்தங்களாக உயர்த்திப் பிடித்து உரிமைக்குரல் எழுப்பிய காட்சியைப் பார்த்த ஊடகங்கள், `சென்னையைப்போல் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் இந்தியாவிலேயே இல்லை' என வியந்து பாராட்டின.  போராட்டத்தில் சிறு வன்முறையும் இல்லாது அமைதிகாத்தத் தன்மையும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, குப்பைகளை அகற்றிய விதமும் ‘இந்தப் போராட்டம் சரியான திசையை நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது’ என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்தது.

வேண்டும் வேண்டும் நீதிவிசாரணை வேண்டும்!


இவை எல்லாம் ஆறு நாட்கள்தான். ‘உங்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. உடனடியாகக் கலைந்து செல்லுங்கள்’ என்ற போலீஸார், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லக் கேட்ட இரண்டு மணி நேரம் அவகாசத்தையும் அளிக்காமல், அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த ஆரம்பித்தனர். கடலுக்கு அருகில் சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார்கள் மாணவர்கள். ஐஸ்ஹவுஸ் தீயணைப்பு நிலையம் தீவைப்பு போன்ற சில சம்பவங்களைக் காரணம் காட்டி தடியடியில் இறங்கிய போலீஸ், மாணவர்களுக்கு உதவியதற்காக நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் என மீனவ மக்களையும் அடித்தட்டு மக்களையும் அடித்து நொறுக்கியது.

இளைஞர்களின் அறப்போராட்டத்தால் எந்தத் தமிழ்நாடு தலைநிமிர்ந்ததோ, அதே தமிழ்நாடு போலீஸ்காரர்களே தீவைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளைப் பார்த்து வெட்கித் தலைகுனிந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு காட்சி ஊடகத்தில் காவல் துறை அதிகாரிகள் பேட்டிகளாகக் குவித்துத்தள்ளி, விளக்கங்களை அளிக்கின்றனர். ‘போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகளும் தேச விரோதிகளும்தான் கலவரத்துக்குக் காரணம்’ என, தமிழ்நாடு முதலமைச்சரும் சில ஆதாரங்களைக் காட்டியுள்ளார்.

போராட்டத்தில் ஆறு நாட்களாக இல்லாத தேச விரோதிகளும் சமூக விரோதிகளும், ஏழாவது நாள் மட்டும் ஊடுருவியது எப்படி? முன்னரே ஊடுருவிவிட்டார்கள் என்றால், அதைத் தடுப்பதற்கு உளவுத் துறையும் காவல் துறையும் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என்றால், மெரினாவிலும் அலங்காநல்லூரிலும் போலீஸ் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு முன்னர் வரை வன்முறை வெடிக்கவில்லையே! மாணவர்களுக்கு உதவியதற்காக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது அராஜகம் இல்லையா? போலீஸ்காரர்களே ஆட்டோக்களுக்கும் குடிசைகளுக்கும் தீ வைப்பது, வாகனங்களை அடித்து நொறுக்குவது என்பதற்கு எல்லாம் சமாதானம் சொல்ல முடியும்? இன்று மொபைல் வீடியோவும் வாட்ஸ்அப்பும் வந்ததால், போலீஸே நடத்தும் வன்முறை அப்பட்டமாகப் பதிவாகி, அனைவருக்கும் சென்று சேர்கிறது. இவை இல்லாத காலங்களிலும் போலீஸ் இதைத்தான் செய்துகொண்டிருந்ததா என ஏராளமான கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக, அறப்போராட்டம் என்றாலும் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களுக்கான அச்சுறுத்தல்தானா இவை என்ற சந்தேகமும் நியாயமானதே.

காவல் துறையின் அத்துமீறல்கள் குறித்து, வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிடுவதோடு, காலதாமதம் ஏதுமின்றி அவரது அறிக்கையைப் பெற்று நடவடிக்கை எடுத்தால்தான் உண்மையான சமூக விரோதிகள் யார் என்பதை நாடு தெரிந்துகொள்ளும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism