Published:Updated:

மக்களை விரட்டு!

மக்களை விரட்டு!
பிரீமியம் ஸ்டோரி
மக்களை விரட்டு!

அதிஷா - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார்

மக்களை விரட்டு!

அதிஷா - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார்

Published:Updated:
மக்களை விரட்டு!
பிரீமியம் ஸ்டோரி
மக்களை விரட்டு!
மக்களை விரட்டு!

“நடு மண்டையில அடி... காயம் ஆற ஆறு மாசம் ஆகும்.”

ஜனவரி - 24.

இடம்: நடுக்குப்பம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைரங்களை  வாரி  இறைத்ததுபோல காட்சி யளிக்கின்றன நடுக்குப்பத்தின் சாலைகள். அத்தனையும் காவல் துறை அடித்து உடைத்த வாகனங்களின் மிச்சசொச்ச கண்ணாடிச் சில்லுகள். அழுகிய மீன்களின் துர்நாற்றம், காற்றில் புரட்டியடிக்கிறது. மீன் சந்தை முற்றிலுமாகக் கருகி, சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது. எரிந்துபோன மீன்களை, காக்கைகளும் பூனைகளும் தின்றுகொண்டிருக்கின்றன. முற்றிலும் எரிக்கப்பட்ட வாகனங்கள் எலும்புக்கூடுகளாக நிற்கின்றன. 

`காவல் துறையினர் எந்த நேரத்தில் வீடுகளுக்குள் நுழைந்து, ஆண்களை அள்ளிச்சென்று அடித்து நொறுக்குவார்களோ!' என்ற அச்சத்தோடு நிற்கிறார்கள் பெண்கள். வீட்டு ஆண்கள் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாகிறார்கள். காவல் துறை வாகனம் ஒன்று, எல்லோரையும் பார்த்து முறைத்தபடி அந்தப் பகுதியில் மெதுவாக ரோந்து வருகிறது.

ஜனவரி 23-ம் தேதியை, நடுக்குப்பத்து மக்கள் இனி எப்போதும் மறக்க மாட்டார்கள். அது விட்டுச்சென்ற தடயங்கள் முழுமையாக அழிய, இன்னும் பல ஆண்டுகளாவது ஆகலாம். காவல் துறையின் லத்திகள் இந்த மக்களின் முதுகுகளில் எழுதிச் சென்றிருக்கும் அலங்கோலத் தழும்புகள் ஆயுசுக்கும் அழியாது.

மக்களை விரட்டு!

நடுக்குப்பம் மட்டும் அல்ல, மெரினா கடற்கரைக்கு அருகே உள்ள ரூதர்புரம், மாட்டாங்குப்பம், அயோத்தியா குப்பம், மீனாம்பாள்புரம், முனுசாமிநகர், அனுமந்தபுரம் என ஒவ்வொரு மீனவக் கிராமமும் காவல் துறையின் கடுமையான தாக்குதலுக்குள்ளானது. மீனவ ஆண்கள் குறிப்பாக, பள்ளி/கல்லூரிகளில் படிக்கும் பதின்பருவத்து இளைஞர்கள், அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள்; காரணங்கள் இன்றி `சமூக விரோதிகள்' என முத்திரை குத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஜாமீனில்கூட எடுக்க முடியாத ஏழை மீனவர்கள், நடுத்தெருவில் நிற்கிறார்கள். மீனவக் குடும்பங்களின் வாழ்வு, நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நிலை குலைந்துள்ளது. இந்த மக்கள் செய்த குற்றம் என்ன?

``தீவிரவாதிகளுக்கு உதவியது.''

`` `தீவிரவாதிகளுக்கா ஹெல்ப் பண்றே?'னு கேட்டுக் கேட்டுதான் அடிச்சாங்க'' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் இந்தப் பகுதி மீனவப் பெண்கள். காவல் துறையின் தேடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என எவருமே தப்பவில்லை. காவலர்கள் சூழ்ந்து,

கண்மண் தெரியாமல் தாக்கியிருக்கிறார்கள். அடித்துத் துவைத்து ஓய்ந்த பிறகு, உயிர் இருக்கிறதா... இல்லையா என்பதைக்கூடப் பார்க்காமல், வேட்டையாடப்பட்ட இறைச்சியைப் போல் அவர்களை இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.

காவல் துறையின் அடக்குமுறைகளைத் தட்டிக்கேட்கத் துணிந்த பெண்களுடைய மார்பிலும் முதுகிலும்கூட காவல் துறை காயங்களை உண்டாக்கத் தயங்கவில்லை. இதில் `தீவிரவாதிகள்' என காவல் துறை குறிப்பிடுவது, ஆறு நாட்கள் ஜல்லிக்கட்டுக்காக அறப்போரில் ஈடுபட்ட இளைஞர்களை.

``தலையெல்லாம் ரத்தம் வழியுது. `பாட்டி... பாட்டி...'னு ஒரு பையன் வீட்டுக்குள்ள உட்காந்துக்குறான். இருபது போலீஸ்காரங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு, அவனை இழுத்துப்போட்டு அடி அடினு அடிக்கிறாங்க. அவன் துள்ளித் துடிக்கிறான். நான் நடுவுல போய் `விடுங்கடா'னு தடுக்க, என்னையும் கால்லயே அடிச்சுட்டாங்க. அந்தப் பையனுக்கு நினைவு தப்பிருச்சு. அப்படியே சாக்குல போட்டு இழுத்துட்டுப் போனாங்க. என்ன ஆச்சுன்னே தெரியலை'' என்று நம்மிடம் பதற்றமாகப் பேசிய ஒரு பாட்டிக்கு, வயது 80-க்கு மேல். முட்டிக்குக் கீழ் அடித்த காயம், கண்ணிப்போய் அப்படியே இருந்தது. ஆனால், பாட்டியின் கவலை அடிபட்ட இளைஞனைப் பற்றியே!

அந்த நாளில் கறுப்புச்சட்டை அணிந்த எவரையுமே காவல் துறை லத்திகள் விட்டு வைக்கவில்லை. சொல்லப்போனால், மஃப்ட்டியில் இருந்த சக காவல் துறை அதிகாரியையே காவல்துறை அடித்திருக்கிறது என்பது பதிவான செய்தி. அதனால், வீட்டில் ஒளிந்து இருக்கும் இளைஞர்களுக்கு வேறு நிறச் சட்டைகளை அணிவித்து, தங்களுடைய மகன்கள், தம்பிகள், உறவினர்கள் என வெளியேற்றியுள்ளனர்; மருத்துவமனைக்கு அழைத்துப்போயிருக்கிறார்கள். இந்தப் பெண்களின் வீடுகளை நோக்கி வந்த இளைஞர்களில் பலரும் திருச்சி, கோவை போன்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள். திக்குதிசை தெரியாமல் திண்டாடியிருக்கிறார்கள். ஊர் போய்ச் சேர்ந்த பிறகு, குப்பத்துப் பெண்தெய்வங்களுக்கு அலைபேசியில் நன்றி சொல்லியிருக்கிறார்கள்.

மக்களை விரட்டு!

`மெரினா எழுச்சி... தைப்புரட்சி' என்றெல்லாம் நாம் மார்தட்டிக்கொள்ளும் இந்த அறப்போராட்டம், இந்த மக்களுடைய பங்களிப்புகள் இல்லாமல் முழுமை அடைந்திருக்காது. தன்னுடைய இடத்தில் தன்னுடைய குழந்தைகள் நடத்தும் ஒரு போராட்டமாகத்தான் அவர்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் தங்களால் இயன்ற உணவைச் சமைத்துக் கொடுத்திருக் கிறார்கள். அந்த உணவை, காவல் துறையும் பகிர்ந்துகொண்டது. நாள்கணக்கில் நடந்த போராட்டத்தில், கழிவறைகள் இல்லாத இடத்தில் மாணவிகளுக்கு தங்கள் வீட்டுக் கழிவறைகளைப் பயன்படுத்தக் கொடுத்ததும் இந்த மீனவப் பெண்கள்தான். நெருங்கிப் பழகினால் அடுத்த நொடியே பாசத்தை அள்ளிக்கொடுக்கும் அந்தப் பழக்கம்தான் ஜனவரி 23-ம் தேதி, அந்த மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது.

ஒரு பெண் போலீஸ், மீன் சந்தைக்குத் தீ வைத்துத் தொடங்கிவைக்க... சோடா பாட்டில்கள், கற்கள், பெட்ரோல் குண்டுகள் என, சமூக விரோதிகள் பயன்படுத்தும் அத்தனையையும் காவல் துறை கொண்டுவந்து மக்கள் மீது பிரயோகித்தது. இதற்கு எல்லாம் தொடக்கமாகச் சொல்லப்படுவது, ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் இருந்த வாகனங்கள் எரிப்புச் சம்பவம். இப்போது வரை அதைச் செய்தது யார் என்பதை காவல் துறை அறிவிக்கவில்லை. `எங்களிடம் ஆதாரம் இருக்கிறது' என்று மட்டுமே சொல்கிறார்கள். ஆனால், இதைக் காரணம் காட்டித்தான் இத்தனை அட்டூழியங்களையும் அரங்கேற்றியது காவல் துறை.

``ஏதோ பொடியை அள்ளி வந்து போடுறாங்க. அப்படியே குபுகுபுனு எரியுது'' என்கிறார்கள் மக்கள். `அது பாஸ்பரஸாக இருக்கலாம்' என சந்தேகிக்கிறது, அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவின் அறிக்கை. அருகில் இருக்கும் பறக்கும் ரயில் பாலத்தின் மீது இருந்து கற்களாலும் பாட்டில்களாலும் வீடுகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளது காவல் துறை. வீட்டுக்கதவைத் திறக்காதவர்களின் ஜன்னல் வழியே கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி வெளியே வரவழைத்து அடித்திருக்கிறார்கள். உள்ளே புகையில் மாட்டிக்கொண்டதால், நுரையீரல் பாதிப்புகளுக்கு உள்ளான முதியோர்கள், மருத்துவமனைகளில் கிடக்கிறார்கள்.

நடுக்குப்பம் பகுதியில் பால் வியாபாரம் செய்யும் ஒரு குடும்பத்தை அடித்துத் துவைத்திருக்கிறது போலீஸ். “மதியம் தூங்கிட்டிருந்தோம். திடீர்னு கதவை உடைச்சுக்கிட்டு இருபது போலீஸ்காரங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு, பிளாஸ்டிக் பைப்பால் அடிக்க ஆரம்பிச்சாங்க. ‘நடு மண்டையில் அடிங்கப்பா... அப்பத்தான் காயம் ஆற ஆறு மாசம் ஆகும்’னு சொல்லிக்கிட்டே அடிச்சாங்க. எல்லோருக்கும் மண்டை உடைஞ்சது. எனக்கு 18 தையல், என் மகன் பிரபாகரனுக்குப் பதினைஞ்சு தையல்'' என இன்னமும் பயம் விலகாமல் விவரிக்கிறார் கஜலட்சுமி.

மக்களை விரட்டு!

நடுக்குப்பம் மீன் மார்க்கெட்டில், சின்னதும் பெரியதுமாகக் கிட்டத்தட்ட 350 கடைகள். ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை முதலீடு. இதில் பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கத்துக்கும் கடல் புயலுக்கும் கணவனை இழந்த பெண்கள். ``எல்லாமே அஞ்சு வட்டிக்கு வாங்கிக் கொண்டாந்த மீனுங்க. அன்னிக்குக் காலையில எப்பவும்போல கடை போட்டு உக்காந்திருந்தோம். திடீர்னு எங்க இருந்தோ சுனாமி மாதிரி போலீஸ் வந்து கடை எல்லாத்தையும் அடிச்சு ஒடைக்க ஆரம்பிச்சுது. இதோ இந்த அக்காவோட பெட்டியில 10,000 ரூவாவுக்கு எறாலும் நண்டும் இருந்துச்சு. பெட்டியோடு தூக்கிட்டுப் போயிட்டாங்க'' என, காவல் துறையின் திருட்டுத்தனங்களைச் சொல்லச் சொல்ல, பெண்களுக்குக் கோபம் தலைக்கு ஏறுகிறது.

ஒட்டுமொத்தமாகக் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரைக்குமான மீன்களை அழித்திருக்கிறது காவல் துறை. வெட்டுக்கத்தி தொடங்கி ஐஸ்பெட்டிகள், தராசுகள், கூரைகள், பாத்திரங்கள் என சேதம் ஒரு கோடிக்கு மேல் இருக்கும் எனக் கணக்கு சொல்கிறார்கள் மீனவர்கள். ஆனால், இந்த மக்களுக்கு அவற்றை எல்லாம் மீறியும் ஒரு கோபம் மிச்சம் இருக்கிறது. அது, காரணம் இன்றி தங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்; தங்கள் மீது பிரயோகிக்கப்பட்ட மரியாதை அற்ற வசைகள். எதையும்விட தன்மானமும் சுயமரியாதையும் முக்கியம் என நினைக்கிறார்கள். ``இப்பயும் `வந்து எழுதிக்குடுங்க, எல்லா கலவரங்களுக்கும் நாங்கதான் காரணம்னு. என்ன நஷ்டமாச்சோ, அதைக் குடுத்துடுறோம்'னு டீல் பேசறாங்க. இவனுங்க எச்சக் காசு எவனுக்கு வோணும்?'' எனச் சீறுகிறார் நடுக்குப்பத்தில் மீன் விற்பனை செய்யும் பெண்.

அம்பேத்கர் பாலம் அருகே உள்ள ரூதர்புரத்து தலித் பெண்களிடம் மீண்டும் மீண்டும் ``தீக்குளிச்சு சாவுங்க'' எனத் திரும்பத் திரும்பச் சொல்லி அடித்திருக்கிறது காவல் துறை. சென்ற இடம் எல்லாம் நூற்றுக்கணக்கான வாகனங்களை, வாழ்வாதாரங்களை அழித்திருக்கிறார்கள். காவல் துறை விரும்பியது, இதைவிடவும் பெரிய கலவரத்தையா அல்லது அதன் வழியே மீனவர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் மெரினாவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துவதையா? ஏன் இவ்வளவு கண்மூடித்தனமான தாக்குதலை அப்பாவி மீனவர்கள் மீது நிகழ்த்த வேண்டும்? அரசுக்கு எதிராக யாரும் போராடிவிடக் கூடாது... மீறி போராடினாலும் யாரும் உதவிக்கு வரக் கூடாது என நினைக்கிறதா?

 நம்  மாடுகளைக் காப்பது எவ்வளவு முக்கியமானதோ, மனிதர்களைக் காப்பதும் அவ்வளவு முக்கியமானது. ஜல்லிக்கட்டுக்காகக் குரல்கொடுத்த இளைஞர்கள், இந்த மீனவ மக்களுக்கு எதிராக நடந்திருக்கும் மனித உரிமை மீறல்களுக்காகவும் அணிதிரள வேண்டும். இந்த மக்களுக்கான நீதி என்பது, அவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான நம்முடைய ஒருங்கிணைந்த குரல்களில் இருக்கிறது. இனியொரு முறை அவர்களைக் குரலற்றவர்கள் என நினைத்து அரசு அவர்கள் மீது பாயாத அளவுக்கு, நம் குரல்கள் ஒலிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism