Published:Updated:

ஃபெடரர் 2.0

ஃபெடரர் 2.0
பிரீமியம் ஸ்டோரி
ஃபெடரர் 2.0

சார்லஸ்

ஃபெடரர் 2.0

சார்லஸ்

Published:Updated:
ஃபெடரர் 2.0
பிரீமியம் ஸ்டோரி
ஃபெடரர் 2.0

`பழைய வேகம் இல்லை. இவருடைய ஸ்டைல், ஆட்டம் எல்லாமே காலாவதியாகி விட்டன. ஃபிட்னஸ் இல்லை. இவர் ஏன் இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறார்?'

அத்தனை விமர்சனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய ஒப்பனில் விடை கொடுத்திருக்கிறார் ரோஜர் ஃபெடரர். அதுவும் சாதாரண வெற்றி அல்ல; பரம எதிரியான ரஃபேல் நடாலை வீழ்த்தி, 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் ரோஜர் ஃபெடரர். விளையாட்டு உலகம் இன்னும் 25 ஆண்டுகளுக்காவது நினைவுகூரப்போகும் பொன்னான தருணம் இது.

தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக முதல் இடத்தில் இருந்தவர் ஃபெடரர். 14 ஆண்டுகள், அவர் இல்லாமல் டாப் 10 பட்டியல் வெளிவந்தது இல்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடுமையான சரிவு. நான்கு முறை இறுதிப்போட்டியில் வீழ்ந்தார். கடந்த இரண்டு ஆண்டுகள், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு செம அடி.

ஃபெடரர் 2.0

புதிதாக டென்னிஸ் ஆட வந்தவர்களிடம் எல்லாம் தோல்வியடைந்து, பரிதாபகரமான நிலைக்குப் போனார் ஃபெடரர். இடையில் கால் முட்டியில் காயம். ரியோ ஒலிம்பிக், அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை. ஆறு மாதங்கள் ஓய்வு. டென்னிஸ் தரவரிசையில் முதன்முறையாக 17-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

டென்னிஸின் ஜாம்பவான், ஓப்பன் எராவின் பிதாமகன் எனக் கொண்டாடப்பட்ட ரோஜர் ஃபெடரரை, ஆட்டத்தை விட்டே துரத்தும் அளவுக்கு விமர்சனங்கள் எல்லா தளங்களிலும் பரவின. ஆனால், ஃபெடரர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

கிரிக்கெட்டில் 35 வயது என்பது சராசரியாக ஓய்வுபெறும் வயது என்றால், டென்னிஸில் 30 வயதிலேயே பலரும் ஓய்வுபெற்று விடுவார்கள். பீட் சாம்ப்ராஸ் 31 வயதில் ஓய்வுபெற்றவர். ஆனால் ஃபெடரர், 35 வயதிலும் இளம் வீரர்களுடன் மோதிகொண்டிருந்தார். ‘`நீங்கள் வாழ்க்கையில் மிகச் சிறப்பாக ஒரு விஷயத்தைச் செய்துகொண்டிருக்கும்போது அல்லது செய்வதாக நினைக்கும்போது, அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி என்னை நான் மிகச்சிறந்த டென்னிஸ் வீரனாக நினைக்கிறேன். வயதோ, ஆட்டமோ இதற்குத் தடையாக இருக்க முடியாது. நான் பெஸ்ட்டாக என்னை உணருகிறேன். அப்படி நினைக்கும் வரை விளையாடுவேன்’’ என்பதுதான் `ஓய்வுபெறலாமே?' என்ற டெம்ப்ளேட் கேள்விகள் துரத்தியபோதெல்லாம் ரோஜர் ஃபெடரர் சொன்னது. ஆமாம், 35 வயதில் அதுவும் ரஃபேல் நடாலைத் தோற்கடித்து ஒரு சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என உலகம் நம்பியதைவிட, தன்னை நம்பினார் ரோஜர் ஃபெடரர்.

காயத்தில் இருந்து மீண்டிருக்கும் ரோஜர் ஃபெடரரின் உடல் வலிமையைவிட, அவரது மனவலிமை பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்று ஆஸ்திரேலிய ஓப்பன் தொடங்குவதற்கு முன்னரே பேட்டியளித்தார் ஃபெடரரின் பயிற்சியாளர். `இது வழக்கமான பேட்டிதான்' என உதாசீனப் படுத்தினார்கள் டென்னிஸ் விமர்சகர்கள். ஆனால், மூன்றாவது சுற்றில் 10-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச், நான்காவது சுற்றுப்போட்டியில் 5-ம் நிலை வீரரான கிய் நிஷிகோரி, அரை இறுதிப்போட்டியில் 4-ம் நிலை வீரரான வாவ்ரிங்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தபோதுதான் ஃபெடரரின் கம்பேக்கைக் கண்டு அதிர்ந்தது டென்னிஸ் உலகம்.

ஆனால், இறுதிப்போட்டியில் ஃபெடரர் எதிர்கொள்ள இருப்பது ரஃபேல் நடால் என்றதும் மீண்டும் ஏளனப்பேச்சு. நடாலுடன் 34 போட்டிகளில் மோதி,  11 போட்டி களில் மட்டுமே ஃபெடரர் வெற்றிபெற்றிருக்கிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப் போட்டியில் கடைசியாக நடாலை, ஃபெடரர் தோற்கடித்தது 2007-ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில். சச்சினுக்கு 90 ரன்களைத் தாண்டினால் எப்படி ஒரு பதற்றம் வருமோ, அதுபோல ரோஜர் ஃபெடரருக்கு நடாலுடன் போட்டி என்றால் ஒரு நடுக்கம். அதனால்தான் இறுதிப்போட்டிகளில் நடாலை வெல்ல முடியாமல் வீழ்ந்தார் ஃபெடரர்.

இந்த முறையும் நடால் நிச்சயம் வெல்வார் என்றே எதிர்பார்ப்புடனேயே தொடங்கியது ஆஸ்திரேலிய ஓப்பன் இறுதிப்போட்டி. ஆனால், அனைத்துக் கணிப்புகளையும், அனைத்துப் புள்ளிவிவரங்களையும் பொய்யாக்கி வெற்றிபெற்றார் ஃபெடரர்.

நெட்டின் அருகிலேயே நின்று ஆடாமல் பேஸ்லைனில் நின்று, எழுந்துவந்த பந்துகளை முழு வேகத்துடன் திருப்பி அடித்தார் ஃபெடரர். கடைசி செட்டில் நடாலுக்குக் கொஞ்சம்கூட நேரம் கொடுக்காமல், டிஃபென்ஸிவ் ஆட்டம் ஆடாமல், பந்துகளை வந்த வேகத்தில் திருப்பி அடித்தார். இப்படி ஓர் ஆட்டத்தை நடாலே எதிர்பார்க்கவில்லை. ஐந்தாவது செட் வரை போராடிப்பார்த்தும் முடியாமல் ஃபெடரரிடம் வீழ்ந்தார் நடால்.

2000-ம் ஆண்டின் தொடக்கம். டென்னிஸின் முடிசூடா மன்னனாக உச்சத்தில் இருந்தார் பீட் சாம்ப்ராஸ். 14 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் சாம்பியன், 64 ஏ.டி.பி சாம்பியன்ஷிப் என கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலுமே மகுடம் சூட்டிக்கொண்டிருந்தார். சாம்ப்ராஸை வீழ்த்த இன்னொரு வீரர் வருவார் என, உலகம் அப்போது நினைத்துக்கூடப்பார்க்கவில்லை. 2001-ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் நான்காவது சுற்றுப்போட்டி. 30 வயதான சாம்ப்ராஸை எதிர்கொண்டார் 20 வயது ரோஜர் ஃபெடரர். பீட் சாம்ப்ராஸ் ஈஸியாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்தது. கடைசி வரை போராடியும் வெற்றிபெற முடியாமல் பொடியனான ஃபெடரரிடம் வீழ்ந்தார் சாம்ப்ராஸ். டென்னிஸில் அடுத்த தலைமுறை நாயகனாக உயர்ந்தார் ஃபெடரர்.

ஓய்வுபெறும்போது ‘`ஃபெடரர் போன்று என்னிடம் இளமையான கால்கள் இல்லை. என்னால் ஓட முடியவில்லை. வேகமாக ஆட முடியவில்லை. ஓய்வுபெறுகிறேன்’’ என்று கண்ணீரோடு பேட்டியளித்தார் சாம்ப்ராஸ். ஆனால், 35 வயதில் மீண்டு வந்திருக்கிறார் ரோஜர் ஃபெடரர்.

அந்த விடாமுயற்சிதான் ஃபெடரர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism