Published:Updated:

“அன்று திருந்தினேன்... இன்று திருத்துகிறேன்!”

“அன்று திருந்தினேன்... இன்று திருத்துகிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“அன்று திருந்தினேன்... இன்று திருத்துகிறேன்!”

வெ.நீலகண்டன், படங்கள்: தி.குமரகுருபரன்

“அன்று திருந்தினேன்... இன்று திருத்துகிறேன்!”

வெ.நீலகண்டன், படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:
“அன்று திருந்தினேன்... இன்று திருத்துகிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“அன்று திருந்தினேன்... இன்று திருத்துகிறேன்!”

துரவாயல் ஏரிக்கரைப் பேருந்து நிறுத்தத்தையொட்டி உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கிறது எம்.எஸ் குடிபோதை மறுவாழ்வு மையம். கண்படும் இடங்களில் எல்லாம் நம்பிக்கையூட்டும் பொன்மொழிகள். சிகிச்சையில் இருக்கும் தங்கள் கணவனை, மகனை, தந்தையைக் காண, கலங்கிய விழிகளுடன் வெளியே காத்திருக்கிறார்கள் பலர்.

“அன்று திருந்தினேன்... இன்று திருத்துகிறேன்!”

உள்ளே ஒரு பெரும் கூட்டமே அமர்ந்திருக்கிறது. அவர்களின் முன்பு உரக்கப் பேசுகிறார் யூசுப்.

“நான் வெறும் யூசுப் இல்லை, `குடிகாரன்' யூசுப். என் பெயரை யார் கேட்டாலும் இப்படித்தான் சொல்வேன். குடிக்கிற எவனுமே தன்னைக் குடிகாரன்னு ஒப்புக்கவே மாட்டான். குடியை நிறுத்தணும்னா, முதல்ல அதை ஒப்புக்கிற மனநிலை நமக்கு வேணும். நானும் உங்களை மாதிரி இருந்தவன்தான். இருபது வருஷங்களுக்கு முன்னாடி இந்த யூசுப் பாய் தெருவுல நடந்தா, எல்லாரும் மிரண்டு ஓடுவாங்க. காரணம், பயம்; அருவருப்பு. இன்னிக்கு, நாலு பேர் கையெடுத்துக் கும்பிடுறாங்க. காரணம், குடியை விட்டதுதான். நானே மாறிட்டேன். நீங்க மாற முடியாதா?’’ - உணர்வுபூர்வமாகக் கேட்கிறார் யூசுப்.

இவரின் வாழ்க்கையை, 2003-ம் ஆண்டுக்கு முன்னர் பின்னர் என இரண்டாகப் பிரிக்கலாம்.

1990-களில் சென்னையின் பிரதான ரௌடிகள் பட்டியலில் இருந்தவர் யூசுப். மத்திய சென்னையை மையம் கொண்டிருந்த ராட்டினம் குமாரின் சீடராக, கத்தியும் ரத்தமுமாக வலம்வந்தவர். ஒரு பக்கம் போலீஸ் துப்பாக்கிகள் துரத்த, இன்னொரு பக்கம் ரௌடிகளின் அரிவாள்கள். அடிக்கடி சிறைக்குச் செல்வது வழக்கம். 21 வழக்குகள். அதில், மூன்று கொலை வழக்குகள். ஏழு முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர். மெள்ள மெள்ள மதுவுக்கு அடிமையானார். குடிப்பழக்கம், இவரை தெருவில் நிறுத்தியது. எதிரிகள், இவரைக் குதறி தெருவில் வீசினார்கள். மரணத்தின் விளிம்பில் மீட்கப்பட்டார். இருப்பினும் ஒரு கையில் பாதியும், ஒரு காலின் விரல்களும் சிதறிவிட்டன.

குடும்பத்தினர், குடிபோதை மறுவாழ்வு மையத்தில் இவரைச் சேர்த்து, மீட்டார்கள். குடியை மறக்கச் செய்ததோடு, யூசுப்பின் மனதுக்குள் உறங்கிக்கிடந்த மனிதத்தையும் துளிர்க்கச் செய்தது அந்த மையம்.

அந்த உந்துதலில் 2008-ம் ஆண்டு எம்.எஸ் குடிபோதை மறுவாழ்வு மையத்தைத் தொடங்கிய யூசுப், இதுவரை பல்லாயிரக்கணக்கான வர்களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார். இதில் பெரும்பாலானோர், இன்று மதுவற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள். சாலைகளில் குடித்துவிட்டு விழுந்துகிடப்பவர்களைத் தூக்கிவந்து சிகிச்சை அளிக்கிறார். குடி மற்றும் பிற போதைகளுக்கு அடிமையாகி, குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை போலீஸே யூசுப்பிடம் அழைத்துவருகிறது. அக்கறையும் அன்பும் காட்டி அவர்களை நல்வழிப்படுத்தி அனுப்புகிறார் யூசுப்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அன்று திருந்தினேன்... இன்று திருத்துகிறேன்!”

“சாதாரணமா ஹவுஸிங் போர்டு பிரச்னையில் ஆரம்பிச்சது. ரொம்ப தூரத்துக்குக் கொண்டுபோய் விட்டுடுச்சு. இதுக்கு நான் கொடுத்த விலை கொஞ்சநஞ்சம் இல்லை. என் உடம்பு முழுவதும் வெட்டுக்காயங்கள் இருக்கு. நான்னு நினைச்சு என் அண்ணனை வீடு புகுந்து வெட்டிக் கொன்னுட்டாங்க. இன்னொரு அண்ணனுக்கு ரெண்டு கைகளும் போயிடுச்சு. 24 மணி நேரமும் குடிதான். கை இருந்த காலத்துல அடிச்சுப் பிடுங்கிக் குடிச்சேன். கை போன பிறகு கடன் வாங்கினேன். கிட்டத்தட்ட பிச்சை எடுத்தேன். வாழ்க்கை அவ்வளவுதான்னு ஆகிருச்சு. அப்படி இருந்த என்னை, இப்படி ஒரு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினவங்க என் மனைவி ஜெயந்திதான். அவங்க படாத சிரமம் இல்லை. மிருகமா மாறி, அவங்களை உதைச்சிருக்கேன். அவங்க தலையைப் பார்த்தீங்கன்னா, தழும்புகளா இருக்கும். குடிச்ச பாட்டிலாலேயே அவங்க தலையில் அடிப்பேன். அவங்க முதுகுல மூணு நாலு முறை கத்தியால் குத்தியிருக்கேன். எல்லா துயரங்களையும் சகிச்சுக்கிட்டு என்கூடவே வந்தாங்க. இன்னிக்கு அவங்க நிற்கச் சொன்னா நிற்பேன்; உட்காரச் சொன்னா உட்காருவேன். என் வாழ்க்கை முழுவதையுமே அவங்ககிட்ட கொடுத்திட்டேன்''  என நெகிழ்கிறார் யூசுப்.

ஜெயந்தி, யூசுப் பாயின் வாழ்க்கையில் கலந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. 1999-ம் ஆண்டு நவம்பரில் சென்னை மத்தியச் சிறையில் ஏற்பட்ட பெரும் கலவரத்தின்போது, குண்டாஸில் சிறையில் இருந்தார் யூசுப். கலவரம் செய்த கைதிகளை அடக்குவதற்காக போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்த, இவரும் மற்றொரு சிறைவாசி சிந்தாதிரிப்பேட்டை கருணாவும் ஒரே இடத்தில் ஒளிந்து தப்பியிருக்கிறார்கள். ஆபத்தில் இணைந்த நட்பு, அதன் பிறகு வலுவானது. யூசுப்பை கருணாவுக்கு ரொம்பப் பிடித்துவிட, தன் அக்கா மகள் ஜெயந்தியை அவருக்கு மணம் செய்துகொடுக்க முடிவுசெய்தார். அதை யூசுப்பும் ஏற்க, சிறையிலேயே மனு போட்டு பெண் பார்க்கும் படலம் முடிந்தது. வெளியே வந்த பிறகு திருமணம்.

“அசந்தா என்னைக் காலிபண்ண நிறைய எதிரிகள். அவங்ககிட்ட இருந்து எல்லாம் தப்பிட்டேன். ஆனா, நெருக்கமா இருந்த நண்பன் ஒருத்தன் வளைச்சுப் பிடிச்சு வெட்டிட்டான். கை போன பிறகும் ஒரே கையோடு களத்துல நின்னேன். ஆனாலும் காலப்போக்குல எல்லாம் மாறிப்போச்சு. நமக்கான மரியாதை போயிடுச்சு. பயந்தவன் எல்லாம் எதிர்த்து விரட்ட ஆரம்பிச்சுட்டான். சாப்பாட்டுக்கே கஷ்டம். ஆனா, குடி மட்டும் நிரந்தரமா ஒட்டிக்கிச்சு. திருமணம் ஆன ஒரே வாரத்துல தாலி உள்பட  எல்லா நகைகளையும் வித்துட்டேன். ஒரு கட்டத்துல, தற்கொலை செஞ்சுக்கிற முடிவுக்கு வந்துட்டேன். அப்பவும் ஜெயந்திதான் நம்பிக்கை கொடுத்தாள்.

“அன்று திருந்தினேன்... இன்று திருத்துகிறேன்!”

செங்குன்றத்துல இருந்த போதை மறுவாழ்வு மையத்துல என்னைச் சேர்த்தாள் ஜெயந்தி.

45 நாட்கள் சிகிச்சை. தினமும் காலையில் வகுப்பு. மருந்து மாத்திரைகளைவிட, அந்த வகுப்புகள்தான் மனசை மாத்துச்சு. `இனிமே மதுவைத் தொட மாட்டேன்'னு உறுதி எடுத்துக்கிட்டு வெளியே வந்தேன். யாரும் என்னை நம்பலை. கிண்டல் பண்ணினாங்க. ஆனா, நான் மாறலை. 13 வருஷங்களா மதுவைத் தொடவே இல்லை.

குடிச்சுட்டு யாராவது ரோட்டுல விழுந்து கிடந்தா, தூக்கிட்டுப்போய் நான் சிகிச்சை எடுத்த மறுவாழ்வு மையத்துல சேர்த்துடுவேன். என்னை வெட்ட வந்து, என் அண்ணனை வெட்டிக் கொலை செஞ்சவனே மதுவுக்கு அடிமையாகிக் கிடந்தான். அவனையும் அழைச்சுட்டுப் போய் மறுவாழ்வு மையத்துல சேர்த்தேன். ஒரு கட்டத்துல நிறையப் பேர் என்னைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. அந்த மையத்துல இருந்த மருத்துவர், `ஏன் இவ்வளவு தூரம் கூட்டிக்கிட்டு வந்து சிரமப்படுற? நீயே ஒரு மையம் ஆரம்பி. நான் உதவிசெய்றேன்'னு சொன்னார். என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது அந்த வார்த்தைகள்தான். இதுவரைக்கும் நாம செஞ்ச எல்லா தவறுகளுக்கும் இது பிராயச்சித்தமா இருக்கும்னு தோணுச்சு. படபடனு வேலையை ஆரம்பிச்சுட்டேன். இதுவரைக்கும் சுமார் பத்தாயிரம் பேராவது சிகிச்சைக்கு வந்திருப்பாங்க. அதில் பலர்,   குடியை முழுமையா விட்டுட்டாங்கனு உறுதியா சொல்ல முடியும். போதையில் தொடர்ச்சியா குற்றச்செயல்ல ஈடுபடுறவங்களை காவல் துறையே இங்கே கொண்டுவந்து விடுறாங்க. அவங்க மேல தனிக்கவனம் செலுத்துவேன்.

குடியைவிட்டு நல்ல வாழ்க்கைக்குத் திரும்பின பிறகு, வரிசையா மூணு குழந்தைகள் பிறந்தாங்க. போதையில் இருந்து மீண்ட பிறகு, வாழ்க்கை நிறைவா இருக்கு.

தினமும் காலையில் 7 மணிக்கு இங்கே எல்லாரையும் உக்காரவெச்சுப் பேசுவேன். என் கதையைச் சொல்வேன். அதன் பிறகு, உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள் வருவாங்க. இந்த மையத்துல சிகிச்சைபெற்றுச் சென்ற 45 பேர், தமிழ்நாடு முழுவதும் இன்னிக்கு இதே சேவை மனநிலையோடு போதை மறுவாழ்வு இல்லங்கள் நடத்துறாங்க. ஒரு காலத்துல காவல் துறையைக் கண்டு ஓடி ஒளிஞ்சவன் நான். இந்த 13 வருஷங்கள்ல நூறுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் இந்த மையத்துல சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்காங்க. குற்றவாளியா எந்தச் சிறைக்குள் நுழைஞ்சேனோ, அதே சிறைக்குள் ஆலோசகரா மரியாதைக்குரிய மனிதனா இன்னிக்குப் போய் வர்றேன்'' - யூசுப்பின் வார்த்தைகளில் அவ்வளவு பெருமிதம்... பூரிப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism