Published:Updated:

“ரஜினி, கமலுக்கு இனி நான் தேவை இல்லை!’’ - கே.பாலசந்தருடன் ஒரு ஸ்பெஷல் சந்திப்பு #பொக்கிஷ பகிர்வு

“போட்டி இல்லைன்னா, வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. ரஜினியும் கமலும் என் பக்கத்தில் இருக்கும்போது, எனக்குனு ஒரு அடையாளத்தோடு கம்பீரமா உட்கார விரும்புறேன்.

பிரீமியம் ஸ்டோரி

“உங்களுக்கு 75 வயசா... நம்பவே முடியலை. 25 வயசுப் பையன்போல இருக்கீங்க” என்றால், ``பொய்... பொய் சொல்றீங்க” - எனப் பகபகவென மனம்விட்டுச் சிரிக்கிறார் கே.பாலசந்தர். “வாழ்க்கையில் இப்படி எவ்வளவோ பொய்களை தினம் தினம் சந்திக்கிறோம். அப்படி அழகான ஒரு ‘பொய்’ பற்றிதான் இப்போ படம் எடுக்கிறேன்” என்கிறார் தன் கண்ணாடியைச் சரிசெய்தபடி.

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

ஏன் எல்லோரும் பொய்யை வெறுக்கிறாங்கனு தெரியலை. நம் எல்லோரின் வாழ்க்கையிலும் நாம் சந்திக்கிற நிஜம் ‘பொய்’.

அதில் பல வகைகள் இருக்கு. ஜாலி பொய், கேலி பொய், வாழவைக்கிற பொய், சாகடிக்கிற பொய், ஆறுதலான பொய், காயப்படுத்துற பொய்... இப்படிச் சொல்லிட்டே போகலாம். இன்னும் சொல்லணும்னா, உண்மையின் வசீகரமே பொய்யில்தான் அடங்கியிருக்கு. ‘பொய்மையும் வாய்மையிடத்து’னு வள்ளுவர் சொன்னாரே, இது அப்படி ஒரு பொய்!”

“ரஜினி, கமலுக்கு இனி நான் தேவை இல்லை!’’ - கே.பாலசந்தருடன் ஒரு ஸ்பெஷல் சந்திப்பு

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

“இந்தப் படத்தில் நீங்களும் நடிக்கிறீங்களாமே?”

“எல்லா டைரக்டருக்குள்ளும் ஒரு நடிகன் எப்பவும் இருப்பான். அவங்க மனசில் இருப்பதைத்தானே, நடிகர்கள் வழியா வெளிப்படுத்துறாங்க. நான் மேடை நாடகங்கள் போட்ட சமயத்தில் நிறைய நடிச்சிருக்கேன். நடிகனா என் மீது கவனம் சேரும்போது, மற்ற கேரக்டர்களின் மீது கொஞ்சம் கவனம் குறையும். அந்தச் சுயநலம் என்னை உறுத்தியதால்தான், சினிமாவில் கேமராவுக்குப் பின்னாடியே நின்னுட்டேன். ‘பொய்’ படத்தில், நான் செய்தால்தான் பொருத்தமா இருக்கும்னு சொல்ற மாதிரி ஒரு கேரக்டர் சிக்குச்சு. செய்திருக்கேன். நடிகன் பாலசந்தரை டைரக்டர் கே.பி. சும்மா விட்டுடலை. விரட்டி விரட்டி வேலை வாங்கியிருக்கார்!”

“நாலு தலைமுறைகளைத் தாண்டியும் எப்படி அசராம போட்டிபோடுறீங்க?”

“போட்டி இல்லைன்னா, வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. ரஜினியும் கமலும் என் பக்கத்தில் இருக்கும்போது, எனக்குனு ஒரு அடையாளத்தோடு கம்பீரமா உட்கார விரும்புறேன். ரஜினியையும் கமலையும் இவர்தான் அறிமுகப்படுத்தினவர் என்ற பழைய பெருமை மட்டுமே எனக்குப் போதாது.

தவிர, வயசாகிடுச்சுனு நினைக்க நேரம் இல்லாத அளவு வேலை பண்ணிட்டே இருந்தால், முதுமை நம் பக்கமே வராது. தலை நரைக்கிறது நம்ம கையில் இல்லை. ஆனால், மனசில் நரை விழுந்துடாமப் பார்த்துக்கிறது நம் கையில்தானே இருக்கு.

அதனால்தான் நாகேஷ், கமல், ரஜினி, பிரகாஷ்ராஜ் கடந்து, இதோ உதய்கிரண் மாதிரி ஒரு புதுப் பையனுடனும் ஜாலியா வேலை பார்க்க முடியுது. நாம பண்ணாத படமா, எடுக்காத சீன்களானு லேசா ஒரு மிதப்பு வந்துட்டா, போச்சு! எல்லா எனர்ஜியும் கிரியேட்டிவிட்டியும் காணாமப்போயிடும்.”

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

“கறுப்பு - வெள்ளை பாலசந்தர், கலர் பாலசந்தர், சின்னத்திரை பாலசந்தர்... யார் பெஸ்ட்?”

“எனக்கு கறுப்பு வெள்ளைதான் பெஸ்ட். ஒரு சின்ன ஆஸ்பத்திரியை மட்டும் வெச்சுக்கிட்டு ‘நீர்க்குமிழி’னு ஒரு படம் எடுத்தபோது கிடைத்த கலை அனுபவம், இந்த கிராஃபிக்ஸ் யுகத்தில் கிடைப்பது இல்லை. இந்த இரண்டு காலங்களையும் அனுபவிச்சு, ரசிச்சு ஒப்பிடுகிற வாய்ப்பு கிடைச்சவங்களுக்குத்தான் நான் சொல்றது புரியும். உணர்வுகளுக்குச் சாயம் பூசுவதில் எனக்கு சம்மதம் இல்லை. ஆனால், அப்படி ஒரு காலகட்டம் தவிர்க்க முடியாமல் வந்தால், அதையும் ஏத்துக்கிறேன். ‘ஐயோ... இப்படி ஆகிப்போச்சே’னு ஒதுங்கி நின்னு புலம்பவேண்டியது இல்லை.

அதேபோல, சினிமாவில் பெரிய ஆளா இருந்துட்டு டிவி-க்கு வர்றோமேனு கூச்சப்படவும் இல்லை. தினமும் மக்களை அவங்க வீட்டுக்குள்ளேயே போய்ச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சா, அது பெரிய சந்தோஷம்தான். சொல்லப்போனால், சினிமாவில் கிடைப்பதைவிட சின்னத்திரையில் நிறையச் சுதந்திரம் இருக்கு.

பொதுவானது ஒண்ணுதான்... நான் எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும், அதில் என் அடையாளம் இருக்கணும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கமல் - ரஜினி ரெண்டு பேருமே உங்க சிஷ்யர்கள். அவர்களை டைரக்ட் செய்து ரொம்ப வருஷங்கள் ஆகுதே?”

“நானும் ரஜினியும் இணைந்து செய்த கடைசிப் படம் ‘தில்லுமுல்லு’. ‘உன்னால் முடியும் தம்பி’தான் கமலுக்கு நான் பண்ணின கடைசிப் படம். அவங்களோடு கைகோத்து வேலை பார்க்க முடிகிற காலம் வரைக்கும் டைரக்ட் பண்ணினேன். இப்போ, இந்தியாவே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு வளர்ந்துட்ட அந்த ரெண்டு நடிகர்களை வைத்து டைரக்ட் பண்றது அவ்வளவு சுலபம் இல்லை.

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

பழைய ரஜினி, கமல் மாதிரி அவங்களும் இருக்க முடியாது. என்னாலேயும் நடத்த முடியாது. ரஜினியை முதல் சீனில் காட்டும்போது, அங்கேயே ஒரு ஃபைட் வைக்கணும். நடிப்பில் எங்கேயோ போயிட்டிருக்கிற கமலை, என் டேஸ்ட்டுக்கு நடிக்கக் கட்டாயப்படுத்த முடியாது. அது தேவையும் இல்லை. எல்லாத்தையும் தாண்டி ‘இமேஜ்’னு ஒண்ணு இருக்கே. அதுக்குப் படம் பண்ண என்னால் முடியாது. இப்ப இருக்கிற ரஜினி, கமலுக்கு பாலசந்தர் தேவை இல்லை. அதனால் அவங்க வளர்ச்சியை தூரமா இருந்து பார்த்துச் சந்தோஷப்படுறதுதான் எனக்கு அழகு.”

“குருகுலம் மாதிரி இப்பவும் கடுமையா நடந்துக்கறீங்களா?”

“பெர்ஃபெக்‌ஷன் வரணும்னு நினைக்கிறது தப்பு இல்லையே. என் படத்தில் வேலைபார்க்கிற கலைஞர்கள் ஒவ்வொருத்தரும் பேர்சொல்ற மாதிரி பெரிய ஆளா வரணும். அதுக்கு என்ன ‘அவுட்புட்’ தேவையோ, அதை வாங்காம விட மாட்டேன். என்னை அப்படி ஏத்துக்கிட்ட பல பேர் இப்ப பெரிய ஸ்டார்களா இருக்காங்க. அது போதும் எனக்கு.

வேலை நேரத்தில் துல்லியமான ரிசல்ட்டை எதிர்பார்த்து நடந்துக்கிற மனிதன், எல்லா நேரங்கள்லயும் அப்படியே இருக்க மாட்டான். ஆனால், ஓவரா மரியாதை தந்து என்னைத் தனிமைப்படுத்துறாங்க. ‘மூணு மணி நேரம் ஆனாலும் நின்னுக்கிட்டேதான் பேசுவேன். உங்க முன்னால உட்கார மாட்டேன்’னு பிடிவாதம் பண்ணினா, நான் என்ன பண்ண முடியும்? என்கிட்ட எல்லாரும் சகஜமாப் பேசணும், என்னோட நிறைகுறைகளைச் சொல்லணும்னு நான் எதிர்பார்க்கிறேன். அதை யாரும் புரிஞ்சுக்கிற மாதிரி தெரியலை. அசிஸ்டன்ட் டைரக்டர்கள் முதல் சூப்பர் ஸ்டார் வரை அந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான் நடந்துக்கிறாங்க.”

“உறவுகளுக்குள் இருக்கிற பாலியல் சிக்கல்களைப் பற்றி உங்க படங்கள் அதிகமாகப் பேசக் காரணம் என்ன?”

“பாரதியார், ‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’னு சொல்வாரே... அதுதான் என் கதைகள். யாரும் பேசப் பயப்படுகிற கதைகளை நான் தைரியமாகப் படமாக்கியிருக்கேன். ஏதோ ஒரு சின்ன சம்பவம், ஒரு தவறான ஆசை, ஒரு விபத்து ஒருத்தனோட வாழ்க்கையையே மொத்தமாப் புரட்டிப்போட்டுடும். ஒரு வாலிபன் ஒரு பெண்ணைப் பார்த்ததும் பிடிச்சுப்போய் லவ் பண்றான். ஆனால், அவள் அவனைவிட வயதில் மூத்தவள்னு தெரியாது. பர்த் டேட் கேட்டுக்கிட்டா காதல் வரும்? ஆணாதிக்கம் இருக்கிற ஒரு சமூகத்தில் கல்யாணம் பண்ணிக்காம ஒருத்தி குழந்தை பெத்துக்கிறாள்னு ஒரு விஷயம் யோசிப்பேன். கல்யாணமாகிப் பிரிஞ்ச கணவன், தன் மனைவிக்கு தானே வேறு ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுக்கிறான்னு ஒரு கதை பண்ணினேன். ஆனால், எது செய்தாலும் அதைச் சொல்லும் விதத்தில் வரம்பு மீற மாட்டேன். ‘மரோசரித்திரா’வும் அப்படித்தான், ‘மன்மத லீலை’யும் அப்படித்தான்.”

“உங்களால் சினிமாவுக்குள் வந்த பிரகாஷ்ராஜ், பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை சினிமாவுக்குள் அழைத்துவருவது பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“சந்தோஷமா இருக்கு. பிரகாஷுடைய தேடல் பெருசு. எதையும் வித்தியாசமாப் பண்ணணும்னு நினைக்கிறவன். பாசத்தைக் காட்டுறதைக்கூட, படமாக் குடுத்துட்டான்... டைரக்ட் பண்ணித் தரச் சொல்லி!

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

‘பாலசந்தர் வீட்டுக்கு கூர்க்காவா நிக்கச் சொன்னாலும் நான் நிப்பேன். அதை என்னைத் தவிர, வேறு யாரும் சிறப்பாச் செஞ்சுட முடியாதுனு சவாலாத் தெரிஞ்சாதான் என்னை அவர் கூப்பிடுவார்’னு சொன்னவன் பிரகாஷ்ராஜ். அவனை மாதிரி சிஷ்யர்கள் எனக்குக் கிடைச்சிருக்கிறது எனக்குப் பெருமை!”

“கூட்டிக்கழிச்சுப் பார்த்தா, நிறைவான வாழ்க்கை வாழ்ந்த திருப்தி இருக்கா?”

“நான் ஓடிக்கிட்டே இருக்க ஆசைப்படுபவன். ஒருவேளை எனக்கு சினிமாவில் வேலை இல்லைன்னா, மறுபடி ஸ்டேஜ் டிராமா பண்ணத் தயாராகிடுவேன். கூட்டிக் கழிச்சுப் பார்க்கிற அளவுக்கு நேரத்தை எப்பவுமே நான் மிச்சம் வெச்சுக்கிறது கிடையாது. எல்லாத்துக்கும் மேலே கடவுள் இருக்கார்!”

சொல்லிவிட்டு, ‘சரிதானே’ என்பதாகச் சிரிக்கிறார் கே.பி!

- த.செ.ஞானவேல்,

படங்கள்: கே.ராஜசேகரன், எஸ்.பி.மோகன்

- 13.11.05 இதழில் இருந்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு