Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

ஆண்பால் பெண்பால் அன்பால் - 22
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

#MakeNewBondsகுட்டிரேவதி, படங்கள்: அருண் டைட்டன்

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

ன் அம்மா தங்கலெட்சுமி இன்றும் சொல்வார், அவர் அப்பாதான் அம்மாவின் கண்களைக் குருடாக்கியது என்று. தனக்கு எழுத, படிக்கத் தெரியாததைத்தான் அம்மா அடிக்கடி இப்படி வேதனையுடன் சொல்வார். பெண்பிள்ளைகள் படிக்கவேண்டியது அவசியம் இல்லை எனக் காரணம் சொல்லி, அம்மாவை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து விட்டதற்காக, தன் எழுபது வயதிலும் அம்மா தொடர்ந்து வருத்தப்படுவார். அம்மாவின் கோபம், எப்போதும் இப்படித்தான். பதில் தேவைப்படாத ஒரு சுடுசொல்லில் முடிந்துவிடும்.

என் வீட்டிலோ, என் கல்வியின் மீதும் பிற செயல்பாடுகள் மீதும் பெற்றோரின் முழுக் கவனமும் அக்கறையும் ஈடுஇணையற்ற அன்பும் இருந்தன. தென்மாவட்டத்தின் ஏதோ ஒரு சிற்றூரில் இருந்து பிழைப்புக்காக ஊர் ஊராக நகர்ந்து திருச்சி வந்து சேர்ந்து, தன் குறைந்த பள்ளிக்கல்வியை வைத்து வேலை தேடி, பிந்தைய வயதில் திருமணம் செய்து, மெள்ள மெள்ள தன் கனவுகளின் சிறகை உழைப்பினாலும் பெருமுயற்சிகளினாலும் விரித்துக்கொண்டவர், என் தந்தை சுயம்புலிங்கம்.
 
வாழ்வியல் போராட்டத்தில், என் வயதில் இருந்தும் அனுபவத்தில் இருந்தும் அந்தத் தொலைதூரக் (எழுபதுகளின்) காலகட்டத்தைப் பார்க்கும்போது, குறுகிய காலத்தில் வலுவாகப் போராடி எங்கள் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தியவர் என் தந்தை. தனக்குக் கிடைக்காத கல்வியும், பொருளாதார வசதியும், உலக நடவடிக்கையும் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தவர். அதை நோக்கி எங்களை ஊக்கப்படுத்தியவர். குழந்தைகளில் பெண் ஆண் வித்தியாசம் பாராட்டியது இல்லை. உண்மையில், எனக்கு வீட்டில் செல்வாக்கு அதிகம். முதல் பெண். தந்தையின் தனிமையான இளமைப் பருவத்தின் முற்றிய எல்லையில் என் அம்மாவும் பிறகு நானும் வந்து சேரக்கிடைத்திட, அப்பா தன் வாழ்வின் பெரும்பேறாக ஒவ்வொரு நாளும் கொண்டாடினார்.

எங்களுக்கு, அளவிலா மரியாதை இருந்தது; விடுதலை உணர்வு இருந்தது; முடிவெடுக்கும் உரிமை இருந்தது; தேர்ந்தெடுக்கும் ஆற்றல் இருந்தது. வீட்டில் வெளிச்சமும் காற்றும் சுவர்களை மீறியிருந்தன. தன் பள்ளிப்பருவத்தில் கிடைக்காது தவறவிட்ட புத்தகங்களை எல்லாம் பழைய புத்தகக் கடைகளில் தேடிக் கண்டடைந்து நான் வாசிக்கக் கொண்டு-வருவார் அப்பா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

அம்மா எப்போதும் சொல்வதுதான்... `பொம்பளைப்புள்ளைக்கு எதுக்கு கதைப் புத்தகங்கள்?'. என்னைப் போன்ற தோழிகள் எல்லாம் கதைப் புத்தகங்களைப் பாடப் புத்தகங்களுக்கு இடையே மறைத்துவைத்துப் படித்த காலகட்டத்தில் என் அலமாரிகள், கவிதை நூல்களாலும் நாவல்களாலும் நிரம்பி வழியும். சரியான பருவத்தில் புத்தகங்களைத் தொடாத பெண்கள், வாழ்வில் ஒருபோதும் இந்தப் பரந்த பூமியைத் தொடும் சிறகுகளைப் பெறுவதே இல்லை என்பது என் நம்பிக்கை. அதுபோன்றுதான் பயணங்களும்.

பயணங்கள், சிறகுகளை மட்டும் அன்று... ஆயிரம் ஆயிரம் புதிய கண்கள் முளைக்கும் வாய்ப்புகளைக் கொடுக்கின்றன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் அப்பாவுடன் சேர்ந்து பயணிக்கக் கிடைத்த அனுபவங்கள்தாம், இன்று நான் பல நாடுகளுக்குச் செல்லும்போது புதிய உலகைக் காணும் கண்கள் வளரக் காரணமாக இருக்கின்றன.

கல்லூரிப் படிப்புக்கு நான் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவுக்கு வரவே, எனக்கும் என் தந்தைக்கும் இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. ஒழுங்கின் ஓட்டத்தில் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கைப் பயணம் நின்றுபோனது போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டு வர, அப்பா உள்ளுக்குள் பதறினாலும் எனக்காகப் பொறுத்துக்கொண்டார்.

நான் கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டு, சித்த மருத்துவம் படிக்க வேண்டும் என முடிவெடுத்து, அதற்காகத் தீவிரமாகச் செயல்பட்டு, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். சித்த மருத்துவப் படிப்பு, தமிழகத்தின் எல்லாவிதமான சமூக அடித்தளங்களோடும் எனக்கு வேர்கள் முளைக்கத் தூண்டுதலாக இருந்தது. சமூகத்தின் சொற்களை எல்லாம் நான் அங்குதான், அந்தப் பழம்பெரும் மண்ணில்தான் கண்டெடுத்தேன்.

சித்த மருத்துவ அறிவை, அவ்வளவு தீவிரமாக நுகர்ந்தேன்; பேதலிப்புடன் கற்றுக்கொண்டேன். ஆளுமையான பேராசிரியர்கள், திருநெல்வேலியின் திடமானப் பண்பாட்டுச் சூழல் எல்லாம், தமிழ்ச் சொற்கள் மீதும் இலக்கியங்கள் மீதும் தீவிர ஆட்சியை நிகழ்த்தின. பள்ளிப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கியிருந்தாலும், திருநெல்வேலியில் ஓர் இலக்கியக் கூட்டத்தில் வைத்து கவிஞர் தேவதேவனின் கவிதைகளை அறிந்த பிறகுதான் நான் கவிஞர் ஆனேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

என் இரண்டாவது கவிதை நூலுக்கு, `முலைகள்' எனப் பெயரிட்டேன். மருத்துவராகிய எனக்கு, அது உடல் உறுப்பு பற்றிய, எங்களின் உரையாடலில் மருத்துவவெளியில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சொல். அதுமட்டும் அன்று, தமிழ்மொழியின் நீண்டநெடிய மரபில் இது எல்லாம் அவ்வளவு கவனம் சிதைக்கும் சொல் அல்ல. என்றாலும், இன்று பொதுவெளியில் `பிதாமகர்கள்' என அறியப்படும் ஒவ்வோர் எழுத்தாளரும், அந்த நூலைக் காரணமாக்கி, தன் ஆபாச மனதை வெளிப்படுத்திக்கொண்டனர். இதில் ஒருவர்கூட மிஞ்சவில்லை. இன்று நின்று திரும்பிப் பார்க்கும்போது, காலம் தாண்டியும் சென்னையின் தெருவிளக்குகள்போல் அனைத்துச் சம்பவங்களும் அதே தகிப்புடன் தெரிகின்றன.

தமிழ்நவீனக் கவிதை, பெண்கள் வழியே தன்னைப் புதுப்பித்துக்கொண்ட அந்தத் தொடக்க நாள்களை, ஊடகங்களும் ஆண் சிந்தனையாளர்களும் ஏன் பெண் முற்போக்குவாதிகள்கூட கையாள முடியாமல் திணறினர். எல்லா வார, தினப் பத்திரிகைகளின் ஆசிரியர்களும், தன் முதிர்ச்சியற்ற விடலை மனதை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இந்தப் பத்து ஆண்டுகளில், இதே ஊடகங்கள் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டியதை, சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் முகங்களை மாற்றிக்கொள்ளவேண்டியது இருந்தாலும், அன்று அவர்கள் நடந்துகொண்டதன் விளைவுகளைக் கொஞ்சமும் பொருட்படுத்த வில்லை. அதன் தொடக்கக்கால பிற்போக்குத்தனத்தால், சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறைகளால், அடுத்த தலைமுறை பெண்கள் எழுத வருவது குறித்த தயக்கத்தை, மனத்தடையை, எச்சரிக்கையை வலிமையாக என் வழியே ஊடகங்கள் முன்வைத்தன.

ஒருநாள் அதிகாலை, வீட்டில் இருந்து தெருவில் இறங்கும்போது, திடீரென என் எதிரே முறைத்து நின்ற எனக்கு எதிரான சுவரொட்டிகள், இந்தச் சமூகத்துக்கு பெண் எழுத்து என்பது எத்தகைய அச்சுறுத்தலானது என்பதை உணர்த்தின. `முலைகள்' என்ற சொல், இந்தச் சமூகத்தின் எந்த முகமூடியைக் கிழித்து எல்லோரின் முகங்களையும் அம்பலமாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

அன்று அந்தப் பத்திரிகைகள், தன் நிலைப்பாட்டை முற்போக்கான திசையில் முன்வைத்திருக்குமானால், பெண் எழுத்தின் வலிமையை அன்றே பாராட்டி இருக்குமானால், இன்று தமிழகப் பெண் எழுத்தின் வளர்ச்சியும் எழுச்சியும் பெரிய அளவில் திசைமாறியிருக்கும்; பெண்கள் பற்றிய நம் சிந்தனை இன்னும் வெகுவாக மாறியிருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஆபாச எழுத்துகள், படங்கள் அடங்கிய கடிதங்கள் வீட்டுக்கு வந்துகொண்டே இருந்தன. சில கடிதங்கள் பெயர்களுடன் வரும். சில, புனைபெயர்களுடன் வரும். இன்னும் சில, மொட்டைக்கடிதங்களாக வரும். முதுகில் உச்சி வெயிலின் எரிச்சல்போல் கரைந்த நாள்களும் உண்டு.

பெண் குழந்தை இல்லாத தகப்பனால், இந்தச் சமூகத்தின் எந்தப் பெண் குறித்தும் முழுமையான ஓர் அக்கறைகொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தது அப்போதுதான்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, சந்தர்ப்பங்கள் தனக்கு அமையாதவரை ஆண்கள் தங்களை நல்லவர்களாகவே காட்டிக்கொள்கின்றனர். பெண்கள் தம் பாலியல் உரிமைப் போராட்டத்தில், பாலியல் உரிமையை மட்டுமே முதன்மை யானதாக்கி, உடன் செயல்படும் பெண்களை நசுக்கவும் தயாராக இருக்கின்றனர். இரண்டு வகையான போக்குகளுமே, சாதி மத சமூகத்தின் கசடுகள்தாம். குறிப்பிட்ட ஒரு செயலுக்கான எதிர்வினை, விமர்சனம், எதிர்ப்பு, மறுப்பு என்ற நாகரிகமான பல தடங்களைக் கடந்து, இன்று `வன்மம்' என்ற அநாகரிக வளர்ச்சியை எட்டியிருக்கிறோம்.

அதை வன்மம் 1, 2, 3… என இலக்கங்களால் பெயரிட்டு அழைக்கும் அளவுக்கு ஊடகவெளியிலும், சமூக வலைதளங்களிலும், மூன்றாம் நபர் நுழைய முடியாத அந்தரங்கவெளியிலும் முகமூடிகள் இன்றி அலைகின்றன. வெவ்வேறு தருணங்களில் இந்த வன்மத்தைக் கண்ணுக்கு எதிரே நான் கண்டு உணர்ந்திருக்கிறேன். சமூகக் கள அறிவு மட்டுமே, ஒரு பெண்ணாக இந்தச் சமூகத்தில் நீங்கள் இருத்தப் படுகிறீர்கள் என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்டும். அது, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி. ஒடுக்கப்பட்ட சாதி, மத பின்புலத்தில் இருந்துவரும் ஒவ்வோர் ஆணுக்கும்கூட அது ஒவ்வொரு மாதிரி.

என் பதின்பருவம் மிகவும் உற்சாகமானதாக இருந்தது. ஹார்மோன்களின் கொந்தளிப்பையும் பாய்ச்சலையும் நேர்செய்யும் திசைகளை நோக்கி, தம் படைப்பாற்றலைக் கண்டறியும் அற்புதமான பயணத்தைத் தனிமனிதராக நிகழ்த்தத் தொடங்கினேன். கவிதைதான் சரியான மடைமாற்றாக இருந்தது. `முலைகள்' என்பது, பொதுவெளியிலும், எல்லோரின் மனவெளியிலும் பெண்களின் உடல் எப்படி நுகர்வுக்கான ஒரு பண்டமாகவோ, திரைப் படைப்புகளில் இடம்பெறும் மலிவான காட்சியாகவோ, தனிமனித உளவியலில் எத்தகைய வலுவான அரசியல் மாற்றங்களைச் செலுத்தும் ஒரு குறியீடாகவோ இருந்திருக்கிறது என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடு. தனிமனிதர் மனதிலும் அந்தச் சொல் இறங்கி வேலைசெய்யத் தொடங்கியது. அதைத்தான், தன் மன அவதூறுகளுக்கும், காழ்ப்புஉணர்வுகளுக்கும், வெறுப்புகளுக்குமான வெளியாக மாற்றிக்கொண்டனர். அந்த ஒரே நூல் வெளியீடு, இந்த உலகத்தின் முன் தனியே என்னை மேடையில் நிறுத்தியது. இந்த உலகத்தின் முன், பல முறைகள் பலவிதமான கேள்விகளால் நேரிலும் மறைமுகமாகவும் நான் சவால் விடப்பட்டிருக்கிறேன். பதினைந்து ஆண்டு தொடர் பயணத்தில், இந்தச் சவால்கள் `பெர்சனலாக' என்னைத் தாக்கினாலும், அவற்றின் விளைவுகளை நான் ஒருபோதும் தனிப்பட்டதாக எடுத்துக்கொண்டது இல்லை. எந்த ஒரு பெண் எழுத வந்திருந்தாலும், தன் உடலின் சுயமரியாதை உரிமையை முன்வைத்திருந்தாலும் இந்தச் சமூகம் இப்படித்தான் கொடூரமாக நடந்துகொண்டிருக்கும் என்பதை என் வயது ஏற, ஏற துல்லியமாகப் புரிந்துகொண்டேன்.

என் திருமண வாழ்வு குறித்த அத்தனை முடிவுகளும் என் அம்மாவை வெகுவாகக் கலங்கச் செய்தன. திருமணம் செய்யாமல் நண்பருடன் இணைந்து வாழ்வது என்பது, அதிலும் மிகவும் குறுகிய வட்டம்கொண்ட சாதிய வாழ்முறைகளில் இருந்து வந்திருந்த என் அம்மாவுக்கு அதிர்ச்சியாகவும் பொறுத்துக்கொள்ள முடியாததாகவும் இருந்தது. என் அம்மாவைச் சமாதானப்படுத்த மிகவும் போராடினேன். எழுதிய நூலின் முதல் பிரதியை என் அம்மாவிடம் சென்று கொடுக்கையில் என் முகத்தில் விட்டெறிந்திருக்கிறார். `எழுதி என்ன கிழித்தாய்?' என்று, என் சொந்த வாழ்வின் மீது இருந்த கோபத்தை எல்லாம் அந்த நூலாக என் மீது வீசியெறிந்திருக்கிறார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

என்னிடம் முகம்கொடுத்துகூடப் பேசவில்லை. என் அப்பாவின் வாஞ்சையில் திளைத்த என் அம்மா, தன் கணவரை இழந்த இந்தப் பத்து ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டார். தொடக்கங்களில், வாழ்க்கைத் துணையை இழந்தது பாதுகாப்பின்மையை அவருக்குத் தந்துகொண்டே இருந்தது. தன் மகள்களையும் மகன்களையும் அனுசரித்து வாழ வேண்டுமே என்ற கட்டாய உணர்வை வலிந்து ஏற்படுத்திக் கொண்டிருந்தார். நாள்கள் செல்லச் செல்ல, அம்மா தன்னுடைய சுயத்தையும் அதற்கான தேவைகளையும்கூடக் கண்டறிந்துகொள்கிறார் என்பதை உணர முடிகிறது. என் திருமண வாழ்வின் மீது மட்டுமே அக்கறைகொண்டிருந்த அம்மா, `இன்னிக்கு என்ன வேலை செய்யப்போறே? எப்ப உன் பட வேலை தொடங்குது? இந்த வருடமும் புத்தகம் எழுதுறதுதானே?' என, என் வாழ்வை முன்சென்று காண்பவராகவும், தினமும் என் அன்றாட வாழ்க்கையை முடுக்கிவிடுபவராகவும் மாறிப்போய் இருக்கிறார்.

என் நோக்கங்களையும் இலக்குகளையும் தன் இதயத்தில் சுமந்து, தெரியும் என் ஆளுமையைச் செம்மைப்படுத்தும் ஒரு பெண்ணாக, ஒரு கதாநாயகியாக என் அம்மா மாறிப்போய் இருக்கிறார் என்பதை கண்கள் கசிய உணர்கிறேன். மனம் என்பதை ஒரே சமயத்தில் அம்பாகவும் வில்லாகவும் மாற்றும் வித்தையையும் தீவிரத்தையும் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை எந்த அம்மாவும் தன் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்தது இல்லை என்றாலும், தன் மகளை அதே பாழுங்கிணற்றில் தள்ளும் தன் லட்சியத்தை மாற்றிக்கொண்டதும் இல்லை. பொது சமூகப் பெருமிதங்களையும் அவமானங்களையும் பொருட்படுத்துவதைத்தான் முதன்மையாகக்கொண்டிருக்கின்றனரே தவிர, தன் மகளின் நல்வாழ்வு குறித்து கூடுதலாக ஒரு கணம் சிந்திப்பதைக்கூட, துன்பம் அனுபவித்த பெண்கள் யோசித்துப்பார்க்கத் தயாராக இல்லை. இன்று வரை, தமிழ் சினிமா பெண்களுக்கு லட்சியபூர்வமான, காவியத்தன்மையான ஒரு காதலைத்தான் தம் `ரியாலிஸ்ட்டிக்' கதைகளிலும் பாடல்களிலும் கற்பித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த வாழ்க்கையில், அத்தகைய காதல்கள் எவ்வளவு போலியானவை, முரண்பாடானவை, வன்முறைகள் நிறைந்தவை என்பதை வாழ்ந்துகொண்டிருக்கும் விபரீதங்கள் வழியேதான் உணர்ந்துகொள்ள முடியும்.

 என் தங்கை கோபிகா, திருமண வாழ்த்துச் சுவரொட்டிகளைப் பார்க்கும்போது எல்லாம் வேதனையாகவும் வேடிக்கையாகவும் சொல்வார், `இதோ, இன்னொரு ஜோடி பலி ஆடு ஆகிறது' என்று.

இந்த நவீன வாழ்வின் ஒட்டுமொத்த வன்முறையும் வன்மமும் பெண்கள் மீதுதான் இறக்கப்படுகின்றன. சமூகம் அனுபவிக்கும் அத்தனை உளவியல் குமைச்சல்களும், பெண் உடல்கள் மீதுதான் வன்புணர்வாக வெளிப்படுகின்றன. அந்த இடத்தில்தான், `பெண்ணுரிமை' நாம் பேசவேண்டிய விஷயமாக மாறுகிறது. என்னதான், நாம் இந்த நாட்டை வளர்ச்சியுற்ற நாடாகப் பார்த்தாலும், அதை முற்போக்குச் சிந்தனையற்ற நாடாகப் பார்க்க முடியாது. எந்தத் தெருவில் சென்றாலும், எந்த அரங்கில் என்றாலும் இங்கே பெண்கள் உடல் உறுத்தப் பார்க்கப்படும் ஓர் அற்பமான செயல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது.

வேலை தேடி சென்னைக்கு நகர்ந்து வந்ததுதான் என் வாழ்க்கையின் முக்கியமான திருப்பம் என நினைக்கிறேன். இங்கே ஒருநாள்கூட இன்னொரு நாள் போல் இல்லை;ஒரு மரணம்கூட இன்னொரு மரணத்தின் துயரைத் துடைத்துவிடுவது இல்லை. எனக்கு மட்டும் அல்ல, மற்ற நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்து தொழில் அல்லது வாழ்வியல் நிமித்தமாக சென்னைக்கு நகர்ந்த என்னைப் போன்ற மற்ற பெண்களின் வாழ்வியலையும் பார்த்திருக்கிறேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

திருச்சியில் பிறந்து, படித்து, திருநெல்வேலியில் கல்லூரிப் படிப்பு முடித்து, தொழிலுக்காக சென்னைக்கு நகர்ந்ததும், சென்னை கட்டாயம் சில சிறகுகளைக் கொடுக்கும். சென்னை என்றதும் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது நான் தொடர்ந்து இங்கே பங்கெடுத்துக்கொள்ளும் கண்டுணரும் போராட்டங்கள்தான்.

ஈழவிடுதலைப் போராட்டம், மரண தண்டனைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான பெண்கள் போராட்டம், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரிய மாணவர்கள் எழுச்சி... என, தமிழகத்தின் முழுப் பண்பாட்டு உணர்வையும், ஒருமை உணர்வையும் இந்தப் போராட்டங்கள்தான் கற்றுக்கொடுத்தன.

எந்த அளவுக்கு சர்வதேசச் சிந்தனைகளையும் முற்போக்கு விஷயங்களையும் நான் உள்வாங்கிக்கொள்கிறேனோ, அந்த அளவுக்கு அவற்றை என் தாயகத்தின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும் மாற்றவும் நாம் ஈடுபட இந்தப் போராட்டக் களங்களும் அந்தக் காலகட்டங்களும் தான் சிறந்த பாடங்களாக இருந்திருக்கின்றன.

பெண் - ஆண் வேறுபாடுகளைக் களையும் இடத்தில் இந்தப் போராட்டங்கள் எல்லாமே வீறுகொள்கின்றன என்பது என் நம்பிக்கை. மானுட உரிமைகள் பேசும் எந்தப் போராட்டக் களத்திலும், பெண் - ஆண் வேறுபாடு என்பது சாத்தியமே இல்லை. கைகுலுக்குவதும், போராட்டத்தின் வெற்றிமுனையில் அதிலும் பேரறிவாளன் மீதான தூக்குத் தண்டனை ரத்து அறிவிப்பில் கண்களில் நீர்ப்பெருக்குடன் பெண்களும் ஆண்களும் ஒன்றிணைந்து நின்ற காட்சி, தோழமையின் உச்சம்; சகோதரத்துவத்தின் சாட்சி.

பெரியார், அம்பேத்கர் இன்னபிற தலைவர்களை முன்வைத்துப் பேசும் ஆண்கள்கூட, தம் வாழ்வில் காதல், குடும்பம், தன் மகள் திருமணம் என வரும்போது கோழையாக முடிவெடுப்பதைப் பார்க்கிறேன். முற்போக்குக் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் நண்பர்கள், பக்கவாட்டுப் பார்வைகளால் பெண் உடல் அமைப்புகளை அளந்துகொண்டே பெண்ணுரிமையைப் பற்றி பேசுவது எவ்வளவு எதிரானது!

`சாதி மறுப்பை' ஓங்கிப் பேசும் போராளிகள்கூட, தன் தனிப்பட்ட வாழ்வு என வரும்போது, சாதியச் சிந்தனைகளோடு இயங்குவதால்தான், இன்றும் நாம் `சாதி மறுப்பு' சார்ந்து நம் சமூக, குடும்ப எல்லைகளை விரிக்க முடியாது திணறுகிறோம். நம் முன்னே ஆணவக்கொலைகள் சாதி வேறுபாடு இல்லாமல் எல்லா சாதிகளிலும் தொடர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம். பெற்றோரே தம் மகள், மகனைக் கொல்வதை வைத்தே, இந்தியா எந்த மாதிரியான காட்டுமிராண்டித்தனமான தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும். தொடங்கிய இடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறோம்.

நிறைய ஆண் கவிஞர்களின் காதல்கள், சாலையில், அடுத்த வீட்டுப் பெண்களிடம் தாம் கொண்ட காதல் சபலத்தைத்தான் `காதல்' எனச் சொல்லி, சாகித்ய அகாடமி விருதுகளைத் தட்டிச்செல்கின்றன. இதுவரை, இந்த நாட்டின்பால், இந்த நாட்டின் அடிமைச் சிந்தனையை ஒழிப்பது குறித்த விடுதலை உணர்வின்பால் நின்று மாண்புடன் இயங்கிய எழுத்தாளர்கள் எத்தனை பேர்?

பல விவாத உரையாடல்களில், பெண் உரிமை கேட்டு வாதிட்ட பெண்களுடனேயே நான் மோதவேண்டியிருக்கிறது. தொடர்ந்து ஆண்களை மட்டுமே பெண்களுக்கு எதிராகச் சித்திரித்துவிட்டு, தங்கள் மதம், சாதி, பார்ப்பனீயப் பெருமைகளைக் கட்டிக்காக்கும் பெண்களிடம் அந்த ஆண்களை பெண்களுக்கு எதிரானவர்களாக ஆட்டுவிப்பது, இந்த மதங்களும் சாதிகளும்தான் என்பதை விளக்கும்போது, அந்த உயர்ந்த படிகளில் இருக்கும் பெண்கள், அவர்கள் அனுபவிக்கும் சலுகைகளை, பெருமிதங்களை இழக்கத் தயாராக இல்லை. அவர்களும் அந்த அடிமை வடிவங்களுக்குப் பலி ஆடுகளாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறார்கள் என்றும் தோன்றியது.

சாதியைக் காரணம்காட்டி, பெண்களைப் பிரித்துவைக்கும் மனோபாவமும் அதிகாரமும் சுலபமாக ஆண்களை எதிரிகளாக்கிவிடுகின்றன என்றால், சாதி ஆணவக்கொலைகளில் கொல்லப்படும் ஒடுக்கப்பட்ட ஆண்களை எப்படி எதிரியாகக்கொள்வது? பெற்றோரே தம் மக்களைக் கொல்வதை என்னவென்று சொல்வது?

என் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரை ஒரு பிரபலமாக மட்டுமே புகழ்வது என்று இல்லாமல், அவருடன் பணியாற்றுதல் என்பதே என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது. அவரை தற்செயலாகத்தான் சந்தித்தேன். அதுவரை ஒரு நேர்க்கோட்டில் சென்றுகொண்டிருந்த என்னை, யானைப்பசிக்கு வெறும் சோளப்பொரியை மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்த இந்த வாழ்வை, ரஹ்மான் மாற்றிப்போட்டார்.

சந்திக்கும் ஆண்களின் கண்களில் எல்லாம் வன்மத்தையும் வெறுப்பையும் எதிர்கொண்டு கொந்தளிப்புக்கு ஆளான என் மனம், ரஹ்மானுடன் வேலைசெய்யும் நாள்களில் வெகுவாக மாறிப்போனது. படைப்பாற்றலின் என் அதிகபட்ச சாத்தியங்களைக் கண்டறியும் சவால்களை அவர் தந்தார்.

ஆண்களின் பலதரப்பட்ட எல்லா இழிசெயல்கள், நடவடிக்கைகளையும் தினம் தினம் அறிந்து மனம் புகைந்துபோகும் எனக்கு, இத்தகைய ஆண்களுக்கு எதிரான ஓர் ஆண் என்றால், அது அவரைப்போல்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றியது.

அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய பிறகு, என் உலகம் சர்வதேச வானம் உடையதாக விரிந்துவிட்டது. இரவு பகல் என்ற கால வேறுபாடும், பெண் ஆண் என்ற வேறுபாடும் முற்றிலுமாக அழிந்துவிட்டன. கலை என்பதன் எல்லைகளை விரித்துக்கொண்டேபோகும் தீவிரப் பணியில் என்னை ஈடுபடுத்தியவர், ரஹ்மான். அப்படியான ஓர் ஆணை, இந்த உலகின் ஒவ்வொரு பெண்ணுமே சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்.

சிறந்த ஆண் என்றால், சந்தேகம் இல்லாமல் ஒழுக்கமான ஆண்தான். எந்த இடத்திலும் யாருக்காகவும் தன் நடவடிக்கைகளைக் காட்டிக்கொள்ளாது, மாற்றிக்கொள்ளாது இருக்கும் ஆண். எவ்வளவோ நபர்களை இலக்கியத்திலும் சினிமாவிலும் தினம் தினம் எதிர்கொண்டிருக்கிறேன். பாலியல் கொந்தளிப்போ, சங்கடங்களோ, தயக்கங்களோ இல்லாது பெண் - ஆண் என்ற வரையறையில் ஒரு மன சமநிலையை நான் உணர்ந்துவிட்டேன்.

எந்த ஒரு பெண்ணுக்கும் இறுதியான, உறுதியான துணை என யாரும் இருக்கப்போவது இல்லை என்பதை, எல்லா பெண்களும் கண்டறிய வேண்டியிருக்கிறது. தன் இதயத்தின் உள்நோக்கங்களையும் எந்தச் சமூகத்தடையும் இல்லாமல் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது. தன் லட்சியங்களை எவரின் முன் அனுமதியும் இன்றி செயல்படுத்தவேண்டியிருக்கிறது. தன் பாலியல் ஆற்றலையும்  அதற்குத்  தகுதியான உறவுகளையும்கூட எந்தத் தயக்கமும் இல்லாமல் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. ஒரு பெண், தன் வாழ்வுரிமையைத் தேடி நடத்தும் போராட்டம், இன்னொரு பெண்ணுக்குப் பொருத்தமானதாக இருப்பது இல்லை. ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ள, மற்றவர் துன்புறுத்தாத வாழ்வுக்காக தன்னைத்தானே பெரிய அளவில் தயார்செய்துகொள்ள வேண்டியுள்ளது.

என் சமீப நாள்களை, `சஹானா' என்கிற பதினைந்து வயதுப் பெண் பீடித்துக் கொண்டிருக்கிறாள். தான் எழுதிக்கொண்டிருக்கும் கவிதைகளை எல்லாம் தினமும் ஒன்றிரண்டாக எனக்கு வாசித்துக்காட்டுகிறாள். போன் வழியே கேட்கும் அவள் குரலால், என் கற்பனையில் நட்சத்திரங்கள் நிறைந்த வானம், பறவைகள் கடக்கும் மேகம், மனித மனங்கள் இல்லா தனிமைக் கரைகள், மலைகள் நிமிர்ந்த நிலக் காட்சிகள் போன்றவை கண்முன் விரிகின்றன. தன் மனக்கொந்தளிப்பை, அன்றாட வாழ்க்கை இந்தப் பெண்கள் மீது திணிக்கும் சலிப்பையும் அலட்சியத்தையும் புறக்கணிப்பையும் அச்சுறுத்தலையும் வெல்வதற்கான ஓர் ஆயுதமாக, தன் கவிதையை வைத்துத் தன்னைத்தானே கொண்டாடிக்கொள்கிறாள்.

அந்தக் கவிதைகளில், எதிர்மறையைச் சுட்டிக்காட்டும் அவசரம் என்றோ, இழிநிலையைச் சொல்லிவிடும் அவசியம் என்றோ எதுவும் இல்லை. நன்னம்பிக்கைகளை நோக்கி ஒவ்வோர் அடியாக வைத்துவிடுவோம் என்ற சிறிய முயற்சியோ அல்லது ஓர் அடியாவது முன்னோக்கி வைப்போம் என்ற குழந்தைத்தன்மையின் அற்புதமோதான் நிரம்பியிருக்கிறது. இப்போது ஒன்றாக வாசியுங்கள், சஹானாவின் கவிதைகளை.

மனிதர்களில் பல வகை உண்டு. இருட்டில் இருந்து இருட்டை நோக்கிச் செல்பவர்கள். இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கிச் செல்பவர்கள். வெளிச்சத்தில் இருந்து இருட்டை நோக்கிச் செல்பவர்கள். வெளிச்சத்தில் இருந்து வெளிச்சத்தை நோக்கிச் செல்பவர்கள்.

இவற்றில் நாம் யார்?

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

லாஸ்யா உலகம் சுகிக்கத்
தொட்டிலில் தூங்குகிறாள்
அவள் முகத்தில் பஞ்சு மேகத்தின்
பிரதிபலிப்பு
பூம்பஞ்சு போன்ற பிஞ்சுப்பாதங்கள்
இதுவரை தரை தொடாத சித்திரப் பாதங்கள்
விளைந்த நெல் போன்ற நகங்கள்
பூவில் இருந்து உறிஞ்ச முடியாத
மஞ்சள் தேன் உடல்
அவள் இப்போது
ஒரு மழைக்காட்டில்
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறாள்
இமைச்சிப்பி திறக்கட்டுமே
முத்துக்கண்கள் ஒளிரட்டுமே என
அவள் விழிப்புக்காகக்
காத்திருக்கிறேன்.

- சஹானா

ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

ன்று அவள் என்னோடு விளையாடிக்கொண்டிருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
இரவு வானில் நட்சத்திரங்கள் பூக்கத் தொடங்கின
மேகங்களின் ஊஞ்சலில் வெகுநேரம் ஆடினோம்
இன்று அவள் இருந்த இடத்தைப் பார்க்கச் சென்றேன்
அவளைப் போன்ற ஒரு பூனை
என்னைப் பார்த்துச் சொல்கிறது
அவள் எங்கு இருக்கிறாளோ?

- சஹானா

ஆண்பால் பெண்பால் அன்பால் - 22

`முதுமக்கள் தாழி' என எதைச் சொல்வது?
நிறையப் பிணங்கள் புதையுண்டிருக்கும்
பூமியே ஒரு முதுமக்கள் தாழி.
நட்சத்திரங்கள், மெழுகுவத்திகளாகச் சுடர்கின்றன.

- சஹானா