Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35

`உவர் நிலம்’ எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கு, `விளைச்சலுக்கு ஆகாத நிலம்' எனப் பொருள். உவர்ப்புச் சுவை உடைய நிலம், பயிர் முளைக்கத் தகுதியற்றது. ஏனெனில், உவர்ப்புச் சுவையில் உயிர்கள் வாழ இயலாது. இவ்வாறான நிலத்தில், வெண்மைப்படலம் படிந்திருக்கும்; புல்கூட செழிப்பாக வளராது. இந்த நிலத்தடி நீரும் உப்புச் சுவையுடன் இருக்கும். `இந்த நிலம் மீண்டும் வளமாகுமா?' என்ற கேள்விக்கு விடை தேடினால், ஓர் உண்மையைக் கண்டறியலாம்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35

உவர் நிலத்தில் மழை நீரைச் சேமித்தால், நிலம் வளம்பெறும். சிறு குட்டைகளை வெட்டி மழை நீரைத் தேக்கிவைத்து நிலத்தில் பாய்ச்சினால், உவர் நிலம் விரைவிலேயே பயிர் வளரும் நிலமாக மாறும். மழை நீருடன் மாட்டுச் சாணத்தைக் கரைத்தால் வளம் கூடும். இந்தச் சாணத்துடன் நாட்டுச் சர்க்கரை, அழுகிய பழங்கள் ஆகியவற்றை ஊறவைத்து நீருடன் சேர்த்துப் பாய்ச்சினால், இன்னும் விரைவாக வளம் திரும்பும்.

வானில் இருந்து இறங்கும் மழை நீர்தான் பூமிக்கான அமுதம். எல்லா உயிர்களும் மழை நீரின் வழியாகத்தான் இறங்கி வருகின்றன. ஐம்பூதத்தன்மையில் நீர் எனும் குணத்தை முழுமையாகக்கொண்டது மழை நீர் மட்டும்தான். நிலத்தடி நீர் இவ்வாறான சிறப்புமிக்கது அல்ல. அதில் உவர்ப்புச் சுவை கூடுதலாக இருக்கும். ஆழம் செல்லச் செல்ல, உவர்ப்பின் குணம் கூடும். ஆகவேதான், நிலத்தை வளப்படுத்த மழை நீர் மருந்தாகிறது.

சாணம் தனக்குள் கோடானுகோடி நுண்ணுயிர்களைத் தக்கவைக்கிறது. மழை நீருடன் சாணத்தைக் கரைத்தால், அந்த நுண்ணுயிர்க் கூட்டம் நிலத்தில் பாய்ந்து வாழத் தொடங்கும். அது வாழ்வதற்கான உயிர்ச்சூழலை மழை நீர் நிலத்தில் உருவாக்கும். மழை நீரின் ஒவ்வொரு துளியும் இந்த நிலத்தின் பாறைகளைக் காட்டிலும் ஆற்றல்மிக்கது. வளம் இழந்த நிலத்தின் துகள்களுக்குள் மழை நீர் நுழைந்து தனக்குள் இருக்கும் உயிராற்றலை வாரித்தருகிறது. சாணத்தின் நுண்ணுயிரிகள் நிலத்துக்கே உரித்தானவை. நிலத்தின் தாவரங்கள்தானே சாணமாக மாறியுள்ளன. அந்தச் சாணம், புல்பூண்டுகளுக்கான நுண்ணுயிரிகளைத்தானே வைத்திருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35

சர்க்கரை அல்லது பழங்களில் உள்ள இனிப்புச் சுவைதான், நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கான உணவு. எந்த அளவுக்கு உணவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு நுண்ணுயிரிகள் பெருகும். இந்தச் செயல்முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், எல்லா உவர் நிலங்களும் வளம் பெறும்.

இது, இயற்கையின் விதிகளுக்கு ஏற்ப நிலத்தை வளமாக்கும் முறை. இதே நிலத்தில் வேதி உரங்களைக் கொட்டி, சில ஆண்டுகளுக்கு மட்டும் விளைச்சல் எடுப்பது நவீனமுறை. நமது வழியில் கிடைக்கும் தீர்வு, நிரந்தரப் பலன் தரும். நவீனவழித் தீர்வு, தற்காலிகமான சுகம் தரும். பின்னர், ‘இனி எல்லாம் கடவுள் செயல்’ என மேலே கைகாட்டும்.

உவர்ப்புச் சுவை மிகுந்த உடல் அல்லது உப்புத்தன்மை அதிகமாகிவிட்ட உடல், இவ்வாறான உவர் நிலம் போன்றதுதான். இந்த நிலத்தில் வேதிமருந்துகளை மட்டுமே கொட்டிக்கொண்டிருந்தால், அதன் வளம் முழுமையாக மீட்சி அடையாது. மாறாக, காலப்போக்கில் உடலின் எதிர்ப்பாற்றல் குன்றும். உடலில் உவர்ப்புச் சுவை அதிகரித்திருந்தால், முதலில் உணவுப் பழக்கத்தில் அக்கறை வேண்டும். வேதிமருந்துகளைக்கொண்டு உப்புத்தன்மையைச் சமாளிக்கும் சிந்தனையில் இருந்து வெளியேற வேண்டும். திடீர் தாக்குதல் போன்ற நிகழ்வுகளுக்கு, இந்த மருந்துகளைத் தற்காலிகமாகக்கொள்வதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், இந்த மருந்துகள் வழியாகவே முழு நலம் பெற வேண்டும் என்று எண்ணினால், அதற்கான வாய்ப்பு இல்லை.

மரபு மருத்துவக் கொள்கைகளைப் புரிந்துகொண்டு கடைப்பிடிப்போருக்கு, இவ்வாறான திடீர் தாக்குதல்கள் வருவது இல்லை. அப்படியே வந்தாலும் அவர்களுக்கு எந்த வேதி மருந்தும் தேவை இல்லை. அவர்களது உடலில் இயற்கை ஆற்றல்களின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது. அது தன்னைத்தானே சீராக்கிக்கொள்ளும். அதற்குத் தேவையான ஒத்துழைப்புகளைச் செய்தால் போதும்.

உவர்ப்புச் சுவை அல்லது உப்பு மிகுந்த மனிதர்கள், படிப்படியாக வேதி மருந்துகளில் இருந்து வெளியேற வேண்டும். பசிக்கும்போது மட்டும் உணவு, தாகம் எடுத்தால் மட்டும் நீர் என்ற இயற்கைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்; இரவுகளில் விழிக்காமல் இளைப்பாற வேண்டும்.

இவ்வாறானவர்களுக்கு, கஞ்சி வகை உணவுகள் மிகவும் பொருத்தமானவை. காலைப் பசிக்குக் கஞ்சி எனும் வழக்கம், நல்ல மாற்றங்களைத் தரும். அரிசியைத் தவிர்த்து, சிறுதானியங்களில் கஞ்சி வைப்பது கூடுதல் நன்மையானது. வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றில் ஒரு நாளைக்கு ஒன்று என்ற வகையில் கஞ்சி அருந்தலாம். இவை அனைத்தும் ஐம்பூதங்களில் திடமான நிலத்தின் தன்மைக்கு நெருக்கமானவை. இந்த உணவுகளில் உள்ள திடத்தன்மைதான் உவர்ப்பு மிகுந்த உடலில் உறுதி தரும். ஆனால், இதே சிறுதானியங்களைக் கஞ்சியாக அல்லாமல் வேறு வகைகளில் உண்ணும்போது, செரிமானத்தில் கூடுதலான ஆற்றல் செலவாகும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35

சிறுதானியக் கஞ்சிகளுக்கு, துவையல் வகைகளைத் தொட்டுக்கொள்ளலாம். கறிவேப்பிலைத் துவையல், வறுத்த துவரம் பருப்பு துவையல் ஆகியன சிறந்தவை. கறிவேப்பிலையின் கசப்புச் சுவை, வெப்பத்தைத் தூண்டும். வறுக்கப்பட்ட துவரம் பருப்பில் காற்று குறைவாகவும், வெப்பமும் நிலமும் சீராகவும் இருக்கும். இதனால், உடலின் உள்ளே சில நல்ல மாற்றங்கள் நிகழும். ஒன்று, உடலுக்குள் சிறுதானியங்களின் செறிவான ஆற்றல் செல்கிறது (நிலம்). அடுத்ததாக, இந்தத் துவையல்களின் வழியாக இரு வகையான இயக்கச் சத்துகள் சீரான அளவில் கிடைக்கின்றன (வெப்பம், காற்று).

பகல் உணவு அரிசிச் சோறாக இருக்கலாம். அன்றாடம் ஒரே வகை அரிசி என இல்லாமல், பல வகையான மரபு அரிசி வகைகளை உணவில் சேர்ப்பது நல்லது. குழம்புக்குப் பதிலாக ஏதேனும் ரசம் ஊற்றிக்கொள்வது சிறப்பான முன்னேற்றம் அளிக்கும். குறைந்தது, பதினைந்து நாட்களுக்கு ஏதேனும் ரசம் வைத்து உண்ணலாம். வாழைப்பூக் கூட்டு நல்ல மருந்துணவு. மற்ற காய்களையும் கூட்டாகச் சேர்க்கலாம். எண்ணெயில் வறுத்தவை, பொரித்தவை போன்றவற்றைத் தவிர்ப்பது முக்கியமானது.

மாலை நேரத்தில் முருங்கைக்கீரை ஒரு பிடி, வாழைத்தண்டு ஒரு கை சேர்த்து ரசம் வைத்துப் பருகுவது நல்லது. இந்த ரசத்தைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மாலை வேளையில் பருகலாம். அடுத்த வாரம், முருங்கைக்கீரை ஒரு பிடி, வாழைப்பூ ஒரு கை சேர்த்து ரசம் வைத்துப் பருக வேண்டும்.

முருங்கைக்கீரையில் கசப்பு, துவர்ப்பு இவற்றுடன் சிறிது அளவு காரமும் இணைந்திருக்கும். காற்று, வெப்பம், நீர் ஆகிய மூன்று பூதங்களையும் முருங்கை இணைக்கும் விதம் மிக அற்புதமானது. ஆகவே, முருங்கைக் கீரை ரசம் ஈடுஇணையற்ற மருந்துணவு.

வாழை, ஒரு நீர்த் தாவரம். வாழையில் உள்ள நீரில் காரச் சுவை கலந்துள்ளது. காரம், வெப்பத்தின் வெளிப்பாடு. நீரும் வெப்பமும் இணைந்திருக்கும் எந்த உணவும் சிறப்பான உணவு என்பதை முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டிருந்தேன். வாழைத்தண்டின் நீர், உடலுக்குள் செல்லும்போது உடலின் உவர்ப்புத்தன்மை வெளியேறிவிடும்.

வாழைத்தண்டு சாறு, ஆற்றல் வாய்ந்த மருந்து. இதை அரைகுறையாகப் புரிந்துகொண்ட பலர், தம் போக்கில் வாழைத்தண்டு சாறைப் பருகுகின்றனர். இது மிகவும் தவறான செயல். தேவை இல்லாமல் அல்லது தேவைக்கு அதிகமாக வாழைத்தண்டு சாறு உடலுக்குள் சென்றால், உடலில் உள்ள உவர்ப்புத்தன்மையைக் கூடுதலாக வெளியேற்றிவிடும். இதன் விளைவாக, உடல் நடுக்கம், பதற்றம், சோர்வு போன்ற தொல்லைகள் ஏற்படும். இவ்வாறான சிக்கல்களைத் தவிர்க்கத்தான் முருங்கைக்கீரை - வாழைத்தண்டு ரசம் பருகும் முறையைப் பரிந்துரைக்கிறேன். இவ்வாறாக ரசம் வைத்துப் பருகினால், அதில் பாதி உணவு; மீதி மருந்து. இது சிக்கல் இல்லாத எளிமையான வாழ்க்கைமுறையாக மாறிவிடும்.
இரவு உணவில் ஆவியில் வெந்தவை (இட்லி, இடியாப்பம், புட்டு) இருந்தால் சிறப்பு. இவ்வாறான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்தால் நாளடைவில் உடலின் உவர்ப்புத்தன்மை குறையும். ரசம் வகைகளில் சேர்க்கப்படும் மிளகு, பூண்டு, சீரகம் ஆகியவை குறித்து ஏற்கெனவே விளக்கியுள்ளேன். இந்த மூன்றும் உடலில் சேரும்போது உவர்ப்பின் தீவிரம் படிப்படியாகக் குறையும்.

 உவர்ப்புச் சுவை மிகுந்த காரணத்தால் அதிக அளவு சிறுநீர்ப்போக்கு இருந்தால், ஆவாரைப்பூ தேநீர் பருகுவது நல்லது. இதைப் பற்றியும் துவர்ப்புச் சுவை குறித்த பகுதியில் கூறியிருந்தேன்.

உடலில் உருவாகும் எல்லா சிக்கல்களையும்விட, சிறுநீரகச் சிக்கலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். ஏனெனில், அது உவர்ப்பு எனும் வலிமையான சுவை தொடர்பானது. நீங்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள, ஒரு குறிப்பைத் தருகிறேன்.

உவர்ப்புச் சுவையில் மற்ற எல்லா சுவைகளும் உள்ளன. ஆகவே, உப்பு மிகுந்த உடல் மற்ற சுவைகளை நிராகரிக்கும். நாம் செய்யவேண்டியது எல்லாம், படிப்படியாக மற்ற சுவைகளை உணவாக உடலுக்குள் அனுப்புவதுதான். இந்தச் செயல்முறையைப் புரிந்துகொண்டால் போதும். இதற்கான உணவுப் பரிந்துரைகளைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35

சிறுநீரகக் கற்களால் அவ்வப்போது வலி வரும்போதே எச்சரிக்கையாகிவிட வேண்டும்.

ஒரு முறை வலி வந்தாலும் மேற்கண்ட மருந்துணவுகளைக் கடைப்பிடித்தால், சிறுநீரகக் கற்கள் இயற்கையான முறையில் சிறிது சிறிதாகக் கரைந்து வெளியேறும். `உடலில், உப்பு சேரவே கூடாது’ எனப் புரிந்துகொள்ளாதீர்கள். உப்பு இல்லாமல் உடம்பு இல்லை. உப்புத்தன்மை உடலில் சேர்ந்துபோகாத வகையில் வாழ்வியலை வகுத்துக்கொள்ள வேண்டும்.

வாழைச்சாறு, நச்சு நீக்கும் ஆற்றல்கொண்டது. `வாழைமரமே ஒரு நச்சு நீக்கிதான்’ என்று நான் வியப்பது உண்டு. கழுத்து மட்டும் வெளியே தெரியும்படி வாழை இலைக்குள் படுத்து, உடலைச் சுற்றி நார்கொண்டு கட்டிவிட வேண்டும். காலை இளவெயிலில் இவ்வாறு சில நிமிடங்கள் படுத்திருந்தால், உடல் முழுவதும் வியர்வையில் நனையும். வாழை இலையின் நீர்மம் வெளியேறி, உடலுக்குள் இருக்கும் நச்சு நீரை உறிஞ்சி எடுத்துவிடும். உடலின் உவர்ப்புத்தன்மையை வெளியேற்ற, இது சிறந்த முறை. இது `வாழை இலைக் குளியல்' எனப்படும். இந்தக் குளியலின்போது இயன்றவரை ஆடைகளைக் களைந்துவிடுவது நல்லது. பெண்கள் இதற்கான சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும் அல்லது சங்கடம் இல்லாத அளவில் ஆடை அணியலாம்.

பூமியின் பெரும்பங்கு கடல் நீர்தான். அந்தக் கடல் நீரில்தான் பூமியின் பெரும்பாலான உயிரினங்கள் வாழ்கின்றன. எந்த அளவுக்கு வேதிப்பொருட்களைத் தவிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு கடலும் நன்றாக இருக்கும்... உடலும் உற்சாகத்துடன் இருக்கும். மீறினால் இரண்டும் சீறும்.

- திரும்புவோம்...