
``ஆழமான கடலில் அமைதியாக நீந்திக்கொண்டிருக்கிறேன். தலையை நிமிர்த்தி மேலே பார்க்கிறேன், மாலை நேர சூரிய வெளிச்சம் தண்ணீரின் மேல் பகுதியில் தெரிகிறது. தனியாக இருக்கிறேன். வண்ண மீன்கள், ஆமைகள் எல்லாம் என்னைக் கடந்து போகின்றன. நானும் அவற்றுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன்...' இது நான் அடிக்கடி காணும் கனவு. ஆனால், எனக்கு நீச்சல் தெரியாது. உயரம், ஆழம் என்றால் ரொம்பவே பயம். இதுவரை வீட்டில் உள்ள தண்ணீர்த் தொட்டியில்கூட இறங்கியது கிடையாது. ஆனால், எனக்கு இந்தப் பயத்தைப் போக்க வேண்டும். என் கனவு, நனவாக வேண்டும். என் கனவை, என் ஆசையை விகடன் நிறைவேற்றுமா?' என, aasai@vikatan.com இன்பாக்ஸுக்குள் வந்து விழுந்தது பூரணியின் குட்டிச் சுட்டி ஆசை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பூரணி, கோவையைச் சேர்ந்தவர். ஜி.ஆர்.டி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமேற்படிப்பு படிக்கிறார். பூரணியின் கனவை நனவாக்க, உடனடியாகக் களத்தில் இறங்கினோம். புதுச்சேரியில் இருக்கும் `டெம்ப்பிள் அட்வென்சர்ஸ்' நிறுவனர் அரவிந்த், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். கோவையில் இருந்த பூரணியை, புதுச்சேரிக்கு வரவழைத்தோம். முதல் நாள் முழுவதும், ஆழ்கடலில் செய்யப்படும் ஸ்கூபா டைவிங் பயற்சி பூரணிக்குக் கொடுக்கப்பட்டது. ட்ரெய்னிங் சென்டரின் வாசலில் பெரிய தண்ணீர்த் தொட்டி இருந்தது. அதை பதைபதைப்புடன் பார்த்தபடியே உள்ளே நுழைந்தார் பூரணி.
ஆழ்கடல் உலகம் என்பது என்ன, ஆழ்கடலில் நீந்தத் தேவையான விஷயங்கள் எவை என்பன போன்ற விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. உற்சாகமாகக் கலந்துகொண்டு, பல கேள்விகளையும் கேட்டுக்கொண்டிருந்தார்.
``ண்ணா... எனக்கு பைக் ரேஸ்னா ரொம்பப் பிடிக்கும். அதுக்காக நிறைய கஷ்டப்பட்டு ஸ்பான்சர்ஸ் பிடிச்சு, இன்னிக்கு தேசிய அளவுல ஜெயிச்சிருக்கேன். லைஃப்ல எதுக்குமே பெருசா பயப்பட மாட்டேன். ஆனால், தண்ணியைப் பார்த்தால் மட்டும் எனக்கு பயம். அதை நிச்சயம் பிரேக் பண்ணிடுவேன்னு நம்பிக்கை இருக்கு'' என்று சொன்னவரின் நம்பிக்கை, பயிற்சிக்காகத் தண்ணீர்த் தொட்டியில் இறங்கப்போகிறார் என்றதும், கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது.
ஸ்கூபா டைவிங் செய்வதற்கான உடைகள், ஆக்ஸிஜன் மாஸ்க் என அனைத்தையும் மாட்டிக் கொண்டு, அந்த ஐந்து அடி தண்ணீர்த் தொட்டியில் இறக்கியதும் பதறிவிட்டார். ஒருசில நிமிடங்களிலேயே ``என்னை மேலே ஏத்திவிட்ருங்க. விகடனுக்கு ரொம்ப ஸாரி. என்னால் நிச்சயம் இதைப் பண்ண முடியாது. முடியவே முடியாது'' எனக் கலங்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவரைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தினார்கள். பயிற்சியாளர் அரவிந்த், அவருக்கு நம்பிக்கையூட்டும்விதமாக இமயமலை உச்சியில் நடுங்கும் குளிரில், முகத்தில் வெடிப்புகளுடன் ரோடு போடும் வேலையில் ஈடுபட்டிருந்த 14 வயது சிறுவனின் கதை ஒன்றைச் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாகத் தைரியம்கொள்ள ஆரம்பித்தார் பூரணி.
``ஒண்ணும் பிரச்னை இல்லை. டைவிங் டெக்னிக்ஸ் பற்றி ஓரளவுக்குப் புரிஞ்சுக்கிட்டாங்க. பயம் மட்டும் கொஞ்சம் இருக்கு. பரவாயில்லை, நாளைக்குக் காலையில் கடலுக்குப் போயிடலாம்'' என்றார் அரவிந்த். பெரும் பயத்தோடும் படபடப்போடும் இரவு தூங்கச் சென்றார் பூரணி.

அடுத்த நாள் காலை 6 மணி. கடல் பயணத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின. தேவையான அனைத்து உபகரணங்களும் வண்டியில் ஏற்றப்பட்டன. அன்று பூரணியோடு மேலும் சிலரும் டைவிங்குக்கு வந்திருந்தனர். அனைவரும் அந்தக் கறுப்பு நிற ஜிப்ஸியில் ஏறினார்கள். வண்டி, துறைமுகத்தை நோக்கிக் கிளம்பியது.
`ஜேம்ஸ் பாண்ட்' என்ற படகு, துறைமுகத்தில் தயாராக இருந்தது. படகில் சில நிமிடங்களிலேயே அனைத்துப் பொருட்களும் ஏற்றப்பட்டன. கடலுக்குள் பயணம் தொடங்கியது. கழிமுகத்தைக் கடந்து கடலுக்குள் சென்றதும், அலைகளின் ஆர்ப்பரிப்பில் படகு சில அடிகள் உயர்ந்தும் தாழ்ந்தும் சென்றது. அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, ஓர் இடத்தில் நங்கூரம் பாய்ச்சப்பட்டது.
``பூரணி... ஆர் யூ ரெடி? உங்க பொசிஷனுக்கு வாங்க. ரெண்டு கால்களையும் தூக்கி அப்படியே பின்னாடி சாய்ந்தா மாதிரி கடல்ல டைவ் அடிக்கணும் ஓ.கே?'' என்று அரவிந்த் சொன்னதும், வலது கையின் மூன்று விரல்களை உயர்த்தி `சூப்பர்' என்பதுபோல் சைகை காட்டினார் பூரணி. ஸ்கூபா மொழியில் அதுதான் `ஓ.கே'. விரல்களை மடித்து கட்டைவிரலை மட்டும் தூக்கினால், ஸ்கூபா மொழியில் கடலுக்கு மேலே போக வேண்டும் என அர்த்தமாகிவிடும். இந்த மொழிகளின் பயிற்சியும் அவருக்கு முந்தைய நாள் கொடுக்கப்பட்டிருந்தது.

கொஞ்சம் தயங்கியபடி, சில பெருமூச்சுகள் வாங்கியபடியே படகில் இருந்து கடலில் குதித்தார் பூரணி. குதித்த சில நொடிகள் திணறிப்போனார். அதற்குள் அரவிந்த் அவரைப் பிடித்து, கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினார். அவரின் கையைப் பிடித்தபடியே கடலுக்குள் மெதுவாக மூழ்க ஆரம்பித்தார் பூரணி. இனி, வார்த்தைகளுக்கும் சத்தங்களுக்கும் இடம் இல்லை. பார்வை மட்டுமே.
தலையைத் திருப்பாமல் நேராகப் பார்த்துக்கொண்டிருந்த பூரணியை, அவரின் வலதுபக்கம் பார்க்கச் சொன்னார் அரவிந்த். மஞ்சள் நிறக் கோடுகள்கொண்ட மீன்கள் கூட்டமாக வருவதைக் கண்டு உற்சாகமாகிவிட்டார். தன் மகிழ்ச்சியின் அறிகுறியாக, தலையை ஆட்டினார். கிட்டத்தட்ட 40 அடி ஆழம். அங்கு செயற்கையாக அமைக்கப்படிருந்த ஒரு திட்டின் மேல், ஓர் ஆச்சர்ய சம்பவம் நடந்தது.
உடைந்திருந்த தன் சங்கில் இருந்து ஒரு நண்டு அதன் அருகே இருந்த மற்றொரு சங்குக்குள் ஒரு நொடியில் உள்நுழைந்தது. நண்டு, தன் வீட்டை மாற்றிக்கொள்வதாகச் சொன்னார் அரவிந்த். அது அவ்வளவு எளிதில் காணக்கிடைக்காத அரிய காட்சி. இதுபோன்ற பல காட்சிகளைக் கடந்துபோகும்போது, அரவிந்த்தை அழைத்து தன் இடதுபக்கம் நோக்கி கை காட்டினார் பூரணி. அங்கு பெரிய அளவிலான ஓர் ஆமை, கிழிந்த வலை ஒன்றில் மாட்டிக்கொண்டு தத்தளித்தது. பூரணியின் கையை விடுத்து, அதைக் காப்பாற்ற அரவிந்த் நகர்ந்தார். நடுக்கடலில் எவருடைய பிடிப்பும் இல்லாமல், தான் தனியாக மிதந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவர் முதலில் உணரவில்லை. உணர்ந்ததும் கொஞ்சம் பதற்றமானார். அரவிந்த் அந்த ஆமையை விடுவித்ததும், அத்தனை மகிழ்ச்சியோடு வேகமாக நீந்திப்போனது. இதன் பிறகு, பல இடங்களில் தனியாகவே கடலில் நகரத் தொடங்கிவிட்டார் பூரணி.
மெதுவாக மேலே வர ஆரம்பித்தார்கள். தன்னைக் கடக்கும் மீன்களுக்கு கீழே தெரியும் நண்டுகளுக்கு, சில செடிகளுக்கு என எல்லாவற்றுக்கும் கைகளை ஆட்டி `பை... பை' சொன்னபடியே மேலே வரத் தொடங்கினார். ஓர் இடத்தில் அரவிந்த் மேல் நோக்கி கை காட்ட, பூரணி தலையை நிமிர்த்திப் பார்த்தார். தெளிவான தண்ணீருக்குள் சூரிய வெளிச்சம் பட்டுக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே, அதை நோக்கி வேகமாக மேலே வரத் தொடங்கினார். இறுதியில் கடலின் மேல்மட்டத்துக்கு வந்து தலையை வெளியே நீட்டினார். அந்த நீல வண்ண இருட்டு, நிசப்தம் எல்லாம் முடிந்து காற்றின் சத்தம் கேட்டது. சூரிய ஒளி முகத்தில் பளீரென அறைந்தது.
சில நிமிடங்கள் கடல் மட்டத்தில் மிதந்துவிட்டு பெருமகிழ்ச்சியோடு படகுக்குள் ஏறினார் பூரணி. கடலுக்குள் 40 நிமிடங்களைச் செலவிட்டிருந்தார் பூரணி.
``ஐயோ! சத்தியமா என்னால் நம்பவே முடியலை. நானா இதைச் செஞ்சேன்? நன்றி விகடன்... ரொம்ப ரொம்ப நன்றி. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. அவ்வளவு சந்தோஷமா இருக்கேன். இது என்னோட எத்தனை வருஷக் கனவு தெரியுமா? செம சந்தோஷமா இருக்கு'' என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் பூரணி.
`ஜேம்ஸ் பாண்ட்', கரையை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது. கடலுக்குப் பிரியாவிடை கொடுத்தார் பூரணி.

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி...
ஆசை
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com