Published:Updated:

சசிகலாவைவிட வேறு யார்?

சசிகலாவைவிட வேறு யார்?
சசிகலாவைவிட வேறு யார்?

சசிகலாவைவிட வேறு யார்?

ஜெயலலிதாவின் நெற்றிப்பொட்டு, ஹேர்ஸ்டைல், ஆடை அணியும் பாங்கு... எனக் கொஞ்சம் கொஞ்சமாக ‘அம்மா’ அரிதாரம் பூசிக்கொண்டிருந்த ‘சின்னம்மா’வின் அடுத்த அவதாரம், `தமிழ்நாட்டு முதலமைச்சர்'.

‘தற்காலிக முதலமைச்சரைப் பார்த்திருக்கீங்க, நிரந்தர முதலமைச்சரைப் பார்த்திருக்கீங்க, நிரந்தர-தற்காலிக முதலமைச்சரைப் பார்த்திருக்கீங்களா... பார்த்திருக்கீங்களா?’ எனப் பணிவு பன்ச் பேசி, ஒதுங்கி ஓரமாக நிற்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

கவுன்சிலர் தேர்தலில்கூட போட்டியிடாத சசிகலா, மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ-க்களின் தலைவர் ஆகியிருக்கிறார். ‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான்’ எனச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட கட்சி எம்.எல்.ஏ-க்களின் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சசிகலா. அதுதானய்யா அ.தி.மு.க... இதுதானய்யா ஜனநாயகம்!

தமிழ்நாட்டின் மிகப்பெரியப் பிரச்னைகளில் ஒன்று, டாஸ்மாக் பிரச்னை. உடல் நோகச் சம்பாதித்த

சசிகலாவைவிட வேறு யார்?

தினக்கூலியை டாஸ்மாக்குக்குக் கப்பமாகக் கட்டிவிட்டு, போதையில் முடங்கிக்கிடக்கும் லட்சக்கணக்கான ஆண்கள், அவர்களை அண்டியிருக்கும் அவர்களது மனைவிகள், வயதான பெற்றோர்கள், குழந்தைகள்... என அத்தனை பேரின் அவலநிலையை, டாஸ்மாக்குக்குப் பெருவாரியாக சப்ளை செய்யும் மிடாஸ் உரிமையாளரான சசிகலாவைவிட நன்கு உணர்ந்தவர் வேறு யார் இருக்க முடியும்?

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அரசின் சொத்துகளை அதிகாரிகளோ, பிற அமைச்சர்களோ அடிமாட்டு விலைக்கு வாங்க நினைத்தால், எத்தகைய வழக்குகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை எடுத்துச்சொல்லி எச்சரிக்கைவிடுக்கும் தகுதி சசிகலாவுக்குத்தானே இருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பாக அந்நியச் செலாவணி சட்டத்தை வளைத்து வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்தால், அது சட்டரீதியாக எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லாம் அனுபவரீதியாக அறிந்தவர் ‘அடுத்த அம்மா’ சசிகலா.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தால், சொத்துக்குவிப்பு வழக்கு எப்படி எல்லாம் சுழன்றடிக்கும் என்பதை அனுபவரீதியாக அறிந்த சசிகலாவைவிட, வேறு யார் அதிகாரவர்க்கத்துக்குத் தெளிவாகப் புரியவைக்க முடியும்? தமிழ்நாட்டின் உரிமைகள் சிலவற்றை சட்டரீதியாக மீட்டுத் தந்தவர் ஜெயலலிதா என்றால், சட்டரீதியிலான சிக்கல்கள் எப்படி எல்லாம் வரும், அதை எப்படி எல்லாம் எதிர்கொள்ளலாம் என அறிந்தவர், புரிந்தவர், தெரிந்தவர், தெளிந்தவர் சசிகலா ஒருவரே.

‘நான் தனி ஆள் இல்லை; எனக்குப் பின்னால் ஒரு கும்பலே இருக்கு’ என தமிழ் சினிமாக்களில் நாயகர்கள் பேசும் பன்ச் டயலாக்குகளுக்குப் பொருத்தமானவர் நம் சின்னம்மாதான். அப்போலோ ரகசியங்களையே யாரும் அறியாமல் காப்பாற்றிய சசிகலா, ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்து அரசாங்க ரகசியங்களையும் காப்பாற்றுவார் அல்லவா!

யாரங்கே... இன்னும் சில மாதங்களில் தண்ணீர்ப் பஞ்சம், மின்தட்டுப்பாடு, தொழில்கள் முடக்கம், முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் அவலம் மூச்..! மணல் மாஃபியாக்கள், கான்ட்ராக்ட் கங்காணிகள், கார்ப்பரேட் கைமாறல்கள், விதவிதமான விதூஷகர்கள்... `சின்னம்மா ஸ்டிக்கர்' கொண்ட `மக்கள் நல'த் திட்டங்கள் என அடுத்தடுத்த அதிர்ச்சிகள் அரங்கேறும் நேரம் இது. வாக்காளப் பெருமக்களே... இதற்கு நாம் என்ன செய்யலாம்? இடைத்தேர்தல் இருக்கிறது, அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வருகிறது, தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் வருகிறது. இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டால்கூட, இருக்கவே இருக்கிறது 2021-ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல்.

செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

அடுத்த கட்டுரைக்கு