Published:Updated:

ஆசை - கனவு... காடு... கதைகள்!

ஆசை - கனவு... காடு... கதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - கனவு... காடு... கதைகள்!

இரா.கலைச்செல்வன் - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

ஆசை - கனவு... காடு... கதைகள்!

இரா.கலைச்செல்வன் - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

Published:Updated:
ஆசை - கனவு... காடு... கதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - கனவு... காடு... கதைகள்!
ஆசை - கனவு... காடு... கதைகள்!

`என் பெயர் மைதிலி. கோவையில் ஃபேஷன் டிசைனிங் படிச்சு முடிச்சுட்டு குன்னத்தூரில் ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலைபார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு பஸ்ஸில் போகும்போது என்கூட ஒரு அண்ணா வருவார். அவருக்குச் சொந்த ஊர் தருமபுரி பக்கமுள்ள ஒரு மலைக் கிராமம். அவங்க ஊரைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் நிறையச் சொல்வார். அதைப் பற்றிப் பேசும்போது ஒருவித ஏக்கத்தோடே பேசுவார். என்னையும் அந்த மலைக் கிராமத்துக்குக் கூட்டிட்டுப் போறதா சொன்னார். திடீர்னு கொஞ்ச நாளா அவரைப் பார்க்க முடியலை. அவர் என்ன ஆனார், எங்கே போனார்னு யாருக்கும் எதுவுமே தெரியலை. ஆனா, பழங்குடியினத்தைச் சேர்ந்த அவர் சொன்ன கதைகள் எல்லாமே, என் மனசுக்குள்ளே பல கற்பனைகளைக் கிளறிவிட்டிருக்கு. இயற்கையோடு இணைந்து வாழுற ஒரு பழங்குடிக் கிராமத்துக்குப் போய், அவங்களோடு ஒருநாள் முழுக்கச் செலவழிக்கணும். விகடன் என் ஆசையை நிறைவேற்றும்னு நம்புறேன்' - குன்னத்தூரைச் சேர்ந்த மைதிலியிடம் இருந்து வந்தது `ஆசை' மெயில்.

ஆசை - கனவு... காடு... கதைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செலிபிரிட்டிகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசைகளுக்கு மத்தியில் பழங்குடியினரைச் சந்திக்க வேண்டும் என்ற மைதிலியின் ஆசை கவனத்தை ஈர்த்தது. உடனடியாக அவரது  ஆசையை நிறைவேற்ற சத்தியமங்கலம் வனப் பகுதியில் இருக்கும் `சோளகனை' மலைக் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தோம். கரடுமுரடான பாதைகள் நிறைந்த காட்டுப் பயணத்துக்கு ஏற்றபடி தயாராக வந்திருந்தார் மைதிலி. கோவையில் இருந்து தொடங்கியது பயணம். காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகம். அந்தியூரைத் தாண்டி போய்க்கொண்டிருந்த போது, மலையடிவாரத்தில் ஒரே ஒரு சிறிய மளிகைக் கடை மட்டுமே இருந்தது.

“சார்... மலையில கடைங்க எதுவும் இருக்காது. பொருட்களை இங்கேயே வாங்கிக்கலாம். அரிசி அதிகம் சமைக்க மாட்டாங்க . ராகி களிதான் முக்கியமான உணவு. அதனால், ராகி மாவு வாங்கிக்கலாம்'' என்றார், நமது மலைக் கிராம பயணத்துக்கு ஏற்பாடு செய்த  நடராஜன்.  மளிகைப் பொருட்களை வாங்கும்போதே, ``அங்கே நிறையக் குழந்தைங்க இருப்பாங்கதானே? அவங்களுக்குக் கொஞ்சம் பிஸ்கட், சாக்லேட்ஸ் வாங்கிக்கிறேன்” என தன் பையை நிரப்பிக்கொண்டார் மைதிலி.

தனது நீண்ட நாள் கனவு நிறைவேறும் உற்சாகத்தில் இருந்த மைதிலி, எக்கச்சக்கக் கேள்விகள் கேட்டபடியே வந்தார்.

``பழங்குடியினர் டிரெஸ் எல்லாம் எப்படியிருக்கும், பழக்கவழக்கங்கள் வித்தியாசமா இருக்கும்ல, இந்தப் பழங்குடியினரின் வரலாறு என்ன?’’ எனப் பல கேள்விகளை நடராஜனிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டார் மைதிலி. நாம் சென்ற கார் மலையின் உச்சியைத் தொட, வெயிலின் தாக்கம் நன்றாகவே குறைந்திருந்தது.


மலை உச்சியில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழையத் தொடங்கினோம். வறண்டு போயிருந்த சிற்றோடையை ஒட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர் இரு பெண்கள். அதில் ஒரு பெண்ணின் கையில் வித்தியாசமான வடிவில் ஒரு கட்டை இருந்தது. மூங்கில் முறம், கூடை போன்ற பொருள்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அவற்றைப் பார்த்ததுமே ஆர்வமாகி காரைவிட்டுக் கீழே இறங்கினார் மைதிலி.

தன்னை அவர்களிடம் மைதிலி அறிமுகப்படுத்திக்கொள்ள, அந்த மலைவாழ்ப் பெண்கள் தங்களை, ``ஜெயம்மா, பொம்மிம்மா’’ என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

``எங்க ஊர்ல நல்ல மழை பெஞ்சு, தண்ணி நிறைஞ்சு, பசி பட்டினி இல்லாம இருக்கணும்னு சாமிகிட்ட வேண்டிப்போம். அதேசமயம் பூதம், பிசாசுங்க எங்க ஊருக்குள்ள வந்துடக் கூடாதுன்னு சாப்பாடு ஆக்கி, இது மாதிரியான மூங்கில் கூடைகள்ல கொண்டுவந்து ஊருக்கு வெளியில வெச்சுடுவோம். நிச்சயம் நல்லது நடக்கும்...” என்று பொம்மிம்மா சொல்ல ``சூப்பர்ல’' என ஆச்சர்யப்பட்டார் மைதிலி.

இருட்டிவிட்டது. காட்டுப் பாதையில் இன்னும் மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். நேரம் கடந்தால் காட்டுவிலங்குகளிடம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருந்ததால், வேகவேகமாக நடந்தோம். வழியில் பழங்குடியின மக்கள் தண்ணீர் பிடிக்கும் ஒரு சுனையைக் காட்டினார் நடராஜன். அதில் இறங்கி தண்ணீர் குடித்த மைதிலி, அதன் சுவையையும் குளிர்ச்சியையும் சிலாகித்தார். சுனையில் நீர் பிடிக்க வந்திருந்த ஒரு பெண்ணுக்குக் குடத்தை நிரப்பிக் கொடுத்துவிட்டு, அவரோடு பேச்சுக் கொடுத்தபடியே காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தோம்.

ஆசை - கனவு... காடு... கதைகள்!
ஆசை - கனவு... காடு... கதைகள்!

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர நடைக்குப் பிறகு, சோளகனை உச்சியை வந்தடைந்தோம். மைதிலியை கால்மரி என்பவரின் வீட்டில்  தங்கவைக்க ஏற்பாடுசெய்திருந்தார் நடராஜன்.  கால்மரியின் மனைவி கெம்பொன்னி. இருவரும் வீட்டுக்கு வெளியே வந்து நின்று இருகரம் கூப்பி வரவேற்று அழைத்துச் சென்றனர். கூரை வேயப்பட்டிருந்த அழகான மண் வீடு. சிவா, வேல், சின்ன புட்டன் என மூன்று பிள்ளைகள். அவர்கள் பேசும் மொழியின் பெயர் ஊராளி. ஆரம்பத்தில், அவர்கள் பேசுவதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் சிறிது நேரத்திலேயே சகஜமாகிவிட்டார் மைதிலி.

பசியிலிருந்த மைதிலிக்குச் சுடச்சுட ராகி களி தயாரானது. கண்கள் எரிய விறகு அடுப்புக்கு எதிரே உட்கார்ந்து சமையலைப் பார்த்துக்கொண்டிருந்தார் மைதிலி. களியை அள்ளிப்போடும் கரண்டியாக ஒரு கொட்டாங்குச்சியும், களியை உருண்டை பிடிக்க தேக்கால் செய்யப்பட்டிருந்த ஓர் உபகரணத்தையும் வைத்தி ருந்தார் கெம்பொன்னி. அது இரண்டு தலைமுறைகளைக் கடந்து, தன் கைக்கு வந்திருப்பதாகச் சொன்னார்.

வீட்டின் பின்புறம் பயிரிடப்பட்டிருந்த அவரைச் செடியிலிருந்து அவரையைப் பிடுங்கிக் குழம்பு வைத்தார். வீட்டுக்கு வெளியே இருந்த இடத்தில் பாய் விரித்து, அதில் மைதிலியை உட்காரவைத்து உணவு பரிமாறப்பட்டது.

``நான் ஆனந்த விகடன் `ஆசை’ பகுதிக்கு எழுதும்போது என்ன கனவுகளோடு எழுதினேனோ, அதை எல்லாம் தாண்டிப் பல சம்பவங்கள் நடக்குது. ஓர் அடர்ந்த காட்டுக்குள், நிலா வெளிச்சத்துல இந்த அழகான மக்களோடு உட்கார்ந்து சாப்பிடும்போது என் மகிழ்ச்சியை எப்படிச் சொல்றதுன்னே தெரியல...'' என்று நெகிழ்ந்தார் மைதிலி.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் தங்கள் இரவு உணவை முடித்துவிட்டு, கால்மரியின் வீட்டுக்கு முன் வந்து அமர்ந்தனர். சோளகனை கிராமத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சோளகர் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆசை - கனவு... காடு... கதைகள்!

``ஒரு காலத்தில் வேட்டைச் சமூகமா இருந்தவங்க நாங்க. அப்புறம் காலப்போக்குல எல்லாம் மாறிடுச்சு. காட்டை நம்பித்தான் எங்க வாழ்க்கையே. மரத்தை வெட்டுறதா இருந்தாகூட அது பழைய மரமா, வெட்டினா அங்கே வேறு மரம் வளருமாங்கிறதைப் பார்த்துட்டுத்தான் வெட்டுவோம். காடுதான் எங்கள் உயிர்...” என மாதேஷ் சொல்லும்போதே ஒரு பூனை குறுக்கே பாய்ந்தோட அலறினார் மைதிலி. ``என்ன... பூனைக்கே பயப்படுறீங்க. புலி, யானை, காட்டெருமை, சிறுத்தை எல்லாம் சர்வசாதாரணமா இங்கே வந்துட்டுப்போகும்...” எனக் குமரன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் பயந்துபோனார்.

வீரப்பன் இருந்தப்போ காடு எப்படி இருந்தது, அந்தச் சமயங்களில் காவல் துறையினரால் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள்... என நள்ளிரவு வரை அந்த மக்களோடு பேசிக் கொண்டிருந்தார் மைதிலி.

அதிகக் குளிர் எடுக்கத் தொடங்கியிருந்தது. கதகதப்பாக இருந்த அந்தக் குடிசைக்குள் சென்று உறங்கினார் மைதிலி. நள்ளிரவில் தங்களின் பூமியில் காட்டுப் பன்றி வந்துவிட, அதை விரட்ட கால்மரி தனியாளாகக் கிளம்பிப் போனார். தூக்கக் கலக்கத்திலும் அங்கு நடந்த விஷயங்களை மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார் மைதிலி.

காலையில் சூடான கருப்பட்டி தேநீரோடு போய், மைதிலியை எழுப்பினார் கெம்பொன்னி.

“என்ன சத்தம் அது?” எனக் கேட்டபடியே குடிசையைவிட்டு வெளியே வந்தார் மைதிலி. அந்தக் குளிர் நேரக் காலையிலேயே குளித்து முடித்து, நெற்றியில் பட்டை, கையில் காப்பு, விரலில் மோதிரம் சகிதமாக ஒரு பழைய ஆர்மோனியப் பெட்டியை வாசித்தபடி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார் மாது என்கிற ஊர்ப்பெரியவர்.

``அருவக் கொடிகள் பறக்க,

பருவக் கதைகள் வீச,

துரியோதன மன்னா வந்தாய் நீயே 

கார்மேகம் போலவே...
” என்று உணர்ச்சிப் பெருக்கில் அவர் பாடுவதை ஊர் மக்கள் ரசிக்கின்றனர்.

 ``சீக்கிரமே கிளம்பலாம்... இன்னிக்கு மழை வந்தாலும் வரலாம்னு சொல்றாங்க. அதுக்குள்ளே காட்டைவிட்டுக் கிளம்பிடணும்...” என்று நடராஜன் சொன்னார். கொஞ்ச நேரத்திலேயே கருமேகங்கள் சூழ ஆரம்பித்துவிட்டன. ஊர் மக்களிடம் விடைபெற்று மலையைவிட்டு இறங்குவதற்கும் மழைத் தூறத் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. கார் ஜன்னலில் வழியும் நீர்த்தாரைகள் வழியே சோளகனையைப் பார்த்து ரசித்துக்கொண்டே வந்தார் மைதிலி!

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...
ஆசை
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism