பிரீமியம் ஸ்டோரி
முதல் நாள்...

வாட்ச் கட்டி பழக்கமில்லாத கரங்கள். சட்டைப் பையில் எப்போதும் இருக்கிற இரட்டைப் பேனாக்கள். ஒட்டவெட்டிய முடியில் சரிவிகிதமாகக் கறுப்பு - வெள்ளை. பள்ளி நாள்களில் பாஸ்கெட் பால் ஆடியதில் உரமேறிய உடம்பு. உள்ளங்கைகளை ஃபெவிகால் போட்டு ஒட்டியமாதிரி கை கூப்பியபடியே வளையவருகிற புதிய முதல்வர் பன்னீர்செல்வம்தான் இன்று மீடியாவுக்கு ஹாட் சமோசா!

“இதுதாங்க அம்மா ஸ்டைல்!” என்று வர்ணித்தார்கள் கட்சிப் பிரமுகர்கள். காரணம், முதல்வர் ரேஸில் இருந்த ஒரு டஜன் பெயர்களையும் ஓரங்கட்டிவிட்டு, தீர்மானமாகப் பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார் ஜெயலலிதா.

முதல் நாள்...

அமைச்சரவைப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்த பன்னீர்செல்வம் ஒரே நாளில் நம்பர் ஒன்!

க்ரீன்வேஸ் சாலையின் தென்பெண்ணை இல்லத்தில் குடியிருக்கிறார் பன்னீர்செல்வம்.இப்போது அது முதலமைச்சரின் இல்லம்.

தெரு முழுக்கக் குவிந்த மண்ணைக் கூட்டி அள்ளிச் சுத்தப்படுத்தும் பணிகள் நடக்க... சஃபாரி போலீஸ் பாதுகாப்பு. வீட்டின் முன்புறத்தில் சிவப்புச் சுழல்விளக்கு கார்களின் அணிவகுப்பு தந்த பீதியில், ஓரமாகப் போடப்பட்ட நாற்காலிகளில் பவ்வியமாக அமர்ந்திருந்தனர் ஊர்க்காரர்கள்.

‘`நேத்து நம்ம அமைச்சரைச் சந்திக்கப் போறோம்னுதான் கிளம்பினேன். ஆனா, இன்னிக்கு சி.எம்-மை ‘மீட்’ பண்றேன்.

முதல் நாள்...

அடடா... அவரோட நல்ல மனசுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும்ல...’’ என்றெல்லாம் அவர்கள் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

‘`சி.எம் போன் பேசுறார். சி.எம் டிரஸ் மாத்திட்டாராம்ப்பா...” என்றெல்லாம் குரல்கள். வீட்டுவாசலில் ஏ.கே-47 பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், முதலமைச்சரின் சொந்த ஊரான பெரியகுளம் பகுதியிலிருந்து பெட்டி, லுங்கி சகிதம் வந்திருந்தவர்கள் திடீர் கெடுபிடிகளைக் கண்டு மிரண்டு செய்வதறியாமல் காத்துக்கிடந்தனர்.

நேரம் ஆக ஆக போலீஸ் தலைகள் பெருக... மோப்பநாய், வெடிகுண்டு சோதனை என்று முதல்வர் இல்லம் மேலும் களைகட்டியது. கார், இன்ஜின் டயர்கள் உள்ளிட்ட பாகங்களை சோதிக்க... முதல்வர் இல்லத்துக்கான ‘கெட்டப்’ வந்துவிட்டது அந்த இடத்துக்கு!

சரியாக 9 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்தார் பன்னீர்செல்வம். வெளியே ஏராளமாகக் கூடியிருந்த கூட்டத்தைக் கொஞ்சம் ஆச்சர்யமாகப் பார்த்தவர், எல்லோருக்கும் ‘வணக்கம்’ சொல்லியபடி சிநேகமாகச் சிரித்துக் கைகுலுக்க ஆரம்பித்தார். நாமும் கைகொடுத்து வாழ்த்துக்களைச் சொன்னோம்.

‘`கோட்டைக்குத்தான் போறேன். என்ன ஏதுன்னு இனிமேதான் தெரியும்!” என்றபடி காரில் ஏறினார்.

‘டும்டும்டும்’ படத்தில் ஜோதிகாவின் அப்பாவாக வருகிற முரளி மாதிரியான முகவெட்டு முதல்வருக்கு. அரை செஞ்சுரி வயதுக்காரரான இவருக்கு, மாடுகள் என்றால் கொள்ளைப் பிரியமாம். ‘`ஊர்ல இவரோட மூணு அண்ணன்களும் பால்பண்ணை வெச்சிருக்காங்க. இங்கேகூட, வீட்டுத் தேவைக்கு மாடு வாங்கணும்னு சொல்லிட்டிருக்காருங்க’’ என்கிறார்கள் உறவினர்கள்.

முதல் நாள்...

“அண்ணன் ரொம்ப எளிமையானவருங்க. அதிகம் பேச மாட்டாரு. பெரியகுளம் பகுதியிலே சேர்மன் எலெக்‌ஷன்ல அ.தி.மு.க சார்பிலே சுத்துப்பட்டுல ஜெயிச்ச ஒரே ஆள் அண்ணன்தான். சின்னம்மாகிட்டே அன்பானவர். கோயில் பக்தி உண்டுங்க. ஆஞ்சநேயர்தான் இஷ்டதெய்வம். அடிக்கடி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் போயிட்டு வருவாருங்க. தனக்கு இப்படி ஒரு அந்தஸ்து கிடைக்கும்னு அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாருங்க. கவனிச்சுப் பார்த்தீங்கன்னா தெரியும். ‘முதலமைச்சர்’ங்கிற அங்கீகாரம் கிடைச்சப்பக்கூட துளியும் உணர்ச்சிவசப்படாம அடக்கமா நின்னாரே... அதாங்க அண்ணன்” என்று அப்பிராணியாகத் தகவல்களைச் சொன்னார் ஊர்க்காரர் ஒருவர்.

முதல் நாள்...

முதல்வர் கிளம்பிப்போனதில் பாதுகாப்புக் கெடுபிடிகள் சற்றே குறைந்திருக்க, வீட்டுக்குள் நுழைந்தோம். மிகப்பெரிய ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்கள் சுவரில் தொங்க, எதிர்ப்பட்ட முதல்வரின் மனைவி விஜயலட்சுமியிடம் பேசினோம். ‘`நேத்து டிவி-யில நியூஸ் பார்த்தப்போதான் எனக்கே தகவல் தெரிஞ்சது. அவருக்கு அம்மாவோட பாசமும் நம்பிக்கையும்தான் முக்கியம். அதை நல்லபடியாக் காப்பாத்தணும்...” என்றார்.

இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், பெரியவர் ரவி எம்.பி.ஏ-வும், அடுத்த மகன் பிரதீப் கம்ப்யூட்டர் கோர்ஸும் படிக்கிறார்கள். மகள் கவிதாவுக்குத் திருமணம் முடிந்து அண்மையில்தான் பன்னீர்செல்வத்தைத் தாத்தாவாக ஆக்கியிருக்கிறார்.

‘`பேத்தி பிறந்த நேரம்தான் எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர்னு ஓஹோனு வந்துட்டார் தாத்தா. மூணு மாசமான அந்தத் தங்கக்குட்டிக்கு இன்னமும் பேர் வைக்கலை. அம்மாதான் பேர் வைக்கணும்” என்றார் உறவுக்காரப் பெண்.

முதல் நாள்...

22-ம் தேதி காலை போயஸ் கார்டன் சென்று ஆசி வாங்கின கையோடு 11 மணிக்கு முதல்வராக தலைமைச் செயலகத்துக்கு வந்தார் பன்னீர்செல்வம். நின்று நிதானமாக ஆற அமர பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, மாடியில் முதல்வர் அறைக்குச் சென்றார். அங்கே ஜெயலலிதா அமர்ந்த நாற்காலிக்குப் பதிலாக புதிய நாற்காலி போடப்பட்டிருக்க, அதில் அமர்ந்தார். முதல் கோப்பாக பத்திரப் பதிவுத் துறை சார்ந்த உத்தரவில் கையெழுத்துப் போட்டார். பொன்னையன், தம்பிதுரை போன்ற சீனியர் அமைச்சர்கள் எல்லோரும் பின்னணியில் நிற்க, போஸ் கொடுத்து முடித்தவர், ‘`மேஜை மேல் பெரியார், அண்ணா படங்கள் இருக்கே. அம்மா படம் எங்கே?” என்று அதிகாரிகளிடம் கேட்டு ‘`படம் ரெடி பண்ணுங்க” என்றார் சன்னமான குரலில்.

நிருபர் கூட்டத்திலும் அவரது பணிவு அப்பட்டமாகத் தெரிந்தது. ‘`இப்போது நடப்பதே அம்மாவின் அரசுதான்’’ என்று சொன்ன பன்னீர்செல்வம், ‘`தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்களா?” என்ற கேள்விக்கு, ‘`பொறுப்புகளை உணர்ந்து அதற்குத் தக்கபடி முடிவெடுப்பேன்” என்று பளீரெனப் பதிலளித்தார்.

‘`ஆள் ரொம்ப அமைதியா இருக்கார். ஏதாவது செய்வார்னுதான் தோணுது. ஆனா செய்யவிடணும்” என்று ஒரு பேச்சு அதிகாரிகள் பக்கமிருந்து கேட்டது.

- எஸ்.பி.அண்ணாமலை, படங்கள்: சு.குமரேசன், ம.அமுதன் 30.09.2001 இதழிலிருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு