Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 23

ஆண்பால் பெண்பால் அன்பால் - 23
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 23

#MakeNewBondsசரவணன் சந்திரன் - படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 23

#MakeNewBondsசரவணன் சந்திரன் - படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 23
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 23

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?'- விடைகளை நோக்கிய விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தமது வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 23

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். பெண் என்றால், எங்களைப் பொறுத்தவரை முகம் மட்டும்தான். முகத்தைத்தான் உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு அலைவோம். வேறு வகையிலான கிரிமினல் வேலைகளை எல்லாம், அப்போது யோசித்துக்கூடப் பார்த்ததில்லை. இப்போதுள்ள கிராமத்துத் தம்பிகளுக்கு சத்தியமாக சர்ட்டிஃபிகேட் தர மாட்டேன். மொபைலும் கையுமாகப் படம்பிடித்து அலைவதைத்தான் நிறையப் பார்க்கிறோமே!

வட்ட முகங்கள் சிரித்தாலே, அன்றிரவு சித்ரா பௌர்ணமிக் கொண்டாட்டம்தான். இதற்கு நேர் எதிரான, ரம்மியமற்ற சித்திரங்களும் காணக் கிடைக்கும். அக்காக்களை வீதியில் இழுத்துப்போட்டு அடிப்பார்கள் அண்ணன்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு பள்ளியே விரட்டி விரட்டிக் காதலித்த தங்கமலர் அக்காவை, அவருடைய வீட்டுக்காரர் நடுரோட்டில் விரட்டி விரட்டி அடித்தார்.  அந்த அக்காவை, எனக்குத் தெரிந்த சீனியர் அண்ணன் ஒருவர் ஃபுரூட்டி எல்லாம் வாங்கிக் கொடுத்துக் காதலித்துக் கொண்டிருந்தார். குத்துக்கல் ஒன்றில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த அந்த அக்கா, `கட்டினவ மேல கை நீட்டக் கூடாது பார்த்துக்க...” என்றது, அச்சாணியாக மனதில் நின்றுவிட்டது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 23ஊரில் நான் பார்த்த பெண்கள் எல்லோரும் கிட்டத்தட்ட அடிவாங்கிக்கொண்டே இருந்தார்கள். அண்ணன் ஒருவர், நண்பர்களிடம் பந்தயம் கட்டிவிட்டு வீட்டுக்குப் போய் அடிப்பார். எப்படி அடக்கி ஆள்வது என, சின்னப்பயல்களான எங்களுக்கு வகுப்பு எடுப்பார். `அக்குருவம் பிடிச்சவங்க. அவங்க சொல்றதை எல்லாம் கேக்கக் கூடாது சாமி’ என பசுபதி அத்தை வேப்பிலை அடிக்கும். `அத்தைகள் வளர்த்த பையன்கள் தப்பு செய்ய மாட்டார்கள்' என்பது கிராமத்துப் பொதுமொழி.
என் பால்யம் முழுக்கவே இதுமாதிரி வட்ட முகங்களும், அடிவாங்கும் தங்கமலர் அக்காக்களும், நல்லது சொல்லி அரவணைக்கும் அத்தைகளும் இருந்தார்கள்.

காமாட்சி அக்கா, தீப்பெட்டி கட்டு ஒட்டிச் சேர்த்துவைத்த பணத்தை, அந்த அண்ணன் எடுத்துப்போய்க் குடித்தார். அந்த அக்காவின் ஓலம், இப்போதும் காதுகளில் கேட்கிறது. அந்த அண்ணன் துளிகூடத் துயரப்படவில்லை. எப்படி அந்தப் பணத்தைத் திருடினேன் எனச் சிரித்துக்கொண்டே விவரித்தார். `கல்லூரிக்குப் போகிறேன்' என அந்த அண்ணனிடம் சொன்னபோது, `வாய்ப்புக் கிடைச்சா விட்டுறாத. பெரிய இடமா பார்த்து கரெக்ட் பண்ணி, காரியத்தை முடிச்சிரு' என்று சொல்லி வழியனுப்பிவைத்தார். வெகுமதியான புத்திமதியாம்.

சென்னை கிறித்துவக் கல்லூரி. கிராமத்தான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டே அலைவோம். நேராகப் போய்ப் பேசத் தைரியம் இல்லாததால், விதவிதமாக உற்றுப் பார்ப்போம். இந்தக் காலகட்டத்தில் முகத்தில் இருந்து உடலுக்கு நகர்ந்துவிட்டோம். ஒரு தடவை சீனியர் அக்கா, `அவளைப் பிடிச்சிருக்குன்னா போய்ச் சொல்ல வேண்டியதுதானே? ஏன் உத்து உத்துப் பார்க்குறீங்க?' என நண்பன் ஒருவனை நிறுத்தி அறிவுரை சொன்னார்.
உற்றுப் பார்ப்பதே தப்பு என்பது அப்போதுதான் தெரிந்தது. ஒரு தப்பைத் தப்பு எனப் புரிந்து கடப்பதற்கே கல்லூரி வரை வரவேண்டியிருந்தது.

அந்தக் கல்லூரி, பெண்கள் குறித்த வேறு வகையான திறப்புகளைத் தந்தது. ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து வகுப்புகளைக் கவனிக்க முடியும் என்பது விசித்திரமாக இருந்தது. `கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ போன்ற விளம்பரங்கள் அப்போது வந்திருந்தால், கொண்டாடித் தீர்த்திருப்போம். பார்த்தவுடன் காதலைச் சொல்லிவிடு என்ற வம்சாவளியில் வந்தவர்கள் என்பதால், சகட்டுமேனிக்குக் காதலைச் சொல்லத்தான் பழகியிருந்தோம். பெண்களின் முகங்களுக்குள்ளும் உடல்களுக்குள்ளும் மட்டுமே எக்ஸ்ரே கதிர்களைப் பாய்ச்சிக்கொண்டிருந்தோம்.

விஸ்பர் அல்ட்ராவை, கூச்சம் இல்லாமல் போய் இன்னமும் கடையில் வாங்க முடியவில்லை. அந்த வேலைகளை எல்லாம் எங்கள் ஊரில் பையன்களுக்குக் கொடுப்பது பெரும்பாவமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. அம்மாக்கள்கூட சொந்தச் சோகங்களைச் சொல்லியிருக்கிறார்களே தவிர, உரையாடியது இல்லை.

உரையாடல் எவ்வளவு அவசியம் என்பதை, சென்னை வாழ்க்கை உணர்த்தியது. தொலைக்காட்சி ஒன்றில் நேரெதிரான தன்மைகள்கொண்ட இரண்டு நிகழ்ச்சிகள் செய்தேன். ஒரு நிகழ்ச்சி பெருமிதத்தையும், இன்னொன்று குற்றவுணர்வையும் ஒருசேரத் தந்தன. ஆனால், அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் வாழ்க்கையைக் கற்பித்தன. அவற்றில் நேரெதிரான பெண்களின் பிம்பங்கள் கிடைத்தன. தமிழ் நிலத்தில் உள்ள வெவ்வேறு குணாதிசயங்கள்கொண்ட பெண்களையும் அவர்களோடு இருக்கும் ஆண்களையும் சந்தித்தேன். முகங்களைத் தாண்டி, உடல்களைத் தாண்டி, மனங்களுக்குள் ஊடுருவும் வித்தை அப்போதுதான் கைவரப்பெற்றது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 23

`ஒரு தாயின் சபதம்' என்ற நிகழ்ச்சியின் வழியாக 100 பெண்களைச் சந்தித்தேன். ராக்கு என்கிற ஓர் அம்மா, லாரி டயர்களுக்குப் பஞ்சர் போட்டு பிள்ளைகளைப் படிக்கவைத்தார். இன்னோர் அம்மா, பாட்டு க்ளாஸ் நடத்தி பிள்ளைகளை அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உட்காரவைத்தார். ராக்குவும் பாட்டு க்ளாஸ் அம்மாவும் மனதளவில் வேறு வேறு நபர்கள் அல்ல.

பெரியகுளம் பக்கத்தில் இருந்து வந்த அம்மா ஒருவர், தன்னுடைய ஆரம்ப காலத்தில் பிச்சை எடுத்துதான் பிள்ளைகளுக்குச் சாப்பாடு வாங்கித் தந்திருக்கிறார். கோயில் அன்னதானங்களில் போய் வரிசையில் நிற்பாராம். அதை அவர் சிரித்துக்கொண்டே சொன்னதுதான் மனசைப் பிசைந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்திய பிறகுதான் அம்மாக்கள் படும் துயரங்கள் எல்லாம் உறைக்க ஆரம்பித்தன. கூடவே, ஆண்கள் இல்லாமலும் அம்மாக்களின் வண்டி ஓடும் என்ற நிதர்சனமும் உறைத்தது.

அந்த அம்மாக்களில் ஒருவருக்குக்கூட, கணவர் தவிர்த்த பிற தொடர்புகள் இல்லை. ஓர் அம்மா, `வைராக்கியம் என்பது ஆண்களைவிட பெண்களுக்கு ஜாஸ்தி’ எனச் சொன்னார். உண்மை ஒரு பக்கம் இப்படி இருக்கத்தான் செய்கிறது. பச்சைக் கண்ணாடி போட்டிருப்பதால், பசுமையான காட்சிகள் தெரிகின்றன.

இப்போது இன்னொரு கண்ணாடியைப் போட்டுக் கொள்ளலாம். அதற்கு நேரெதிர் சித்திரமும் இருக்கிறது. அதைப் போட்டு மூடிவைக்க பெரிய அண்டா மூடி உலகத்தில் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை.

அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தலைமை ஆசிரியராக இருந்த தன் கணவரைக் கள்ளக்காதலுக்காகக் கொன்றார். இன்னொரு பெண் கள்ளக் காதலுக்காக, கணவர் படுத்திருந்தபோது தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்றார். எல்லா மட்டங்களிலும் இதுபோல கொலைகள் நடக்கின்றன. வட இந்தியாவில் ஒரு பெண் தொழிலதிபர் இதுமாதிரியான கொலையில் ஈடுபட்ட செய்தியையும் அறிந்திருப்பீர் கள்தானே? கள்ளக்காதலிகளுக்காக கணவர்களும் மனைவிமார்களைக் கொலைசெய்தார்கள். தராசில் எந்தப் பக்கத்தில் முள் அதிகமாகச் சாய்கிறது எனத் துல்லியமாகச் சொல்லவே முடியாது. இதிலாவது கள்ளக்காதல் என்ற வஸ்து இருக்கிறது.

ஆனால், இன்னபிற காரணங்களுக்காகவும் கொல்ல ஆரம்பித்தார்கள். இந்தக் கொலைகளின் வழியாக விசித்திரமான மனங்களையும், ஆண் - பெண் உறவில் இருக்கும் சிக்கல்களையும், குடும்பம் என்ற அமைப்பின் போதாமைகளையும் தெளிவாக உணர முடிந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஆண்-பெண் உறவில் முளைத்திருக்கும் புதிய பெரும் சிக்கல்களை அடையாளம் காண முடிந்தது. இவற்றில் யார் தவறு செய்தார் என்ற ஆராய்ச்சிகளை எல்லாம் தாண்டி, தமிழ்ப் பாரம்பர்யம் குறித்தெல்லாம் பேசும் வேளையில், இதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.

தாலியைக் கழற்றிக் கணவரின் முகத்தில் வீசிவிட்டு, `கழுத்துல கிடக்கிற வரைக்கும்தான் அது தாலி. தரையில் கிடந்தால் அது கயிறு’ என்று, அடிவயிற்றிலிருந்து கோபத்தோடு கத்திய பெண்களை எனக்குத் தெரியும். அடிவாங்கும் அக்காக்கள் இல்லை அவர்கள். பதிலுக்குத் திருப்பித்தருவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டவர்கள்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 23

ஆனால் `சண்டை சச்சரவுகள், அறுத்துவிடுதல் என்பனவற்றைத் தாண்டி, இரு தரப்புக்காரர்களும் ஏன் கொலை செய்யும் அளவுக்குப் போகிறார்கள்?' என்ற கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள். கடந்த வருடம் மட்டும் காதலை மறுத்த காரணத்துக்காக நான்கு பெண்கள் கொல்லப்பட்டனர். சிற்றூர் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொன்றார் ஒருவர். என்ன காரணம்? சேர்ந்து வாழ மறுத்துவிட்ட மனைவி, அவருக்கு விவகாரத்தும் கொடுக்காமல் அவரின் வாழ்க்கையைப் பாழ்பண்ணிக் கொண்டிருந்தார். ‘நீ சாகிற வரை இன்னொரு கல்யாணம் முடிக்க முடியாது’ என சபதமும் போட்டிருந்தாராம். இன்னொரு நபர் தூக்கில் தொங்கி உயிரைவிட்டார். என்ன காரணம் என விசாரித்தபோது, அவரின் மனைவிக்கு அவரைப் பிடிக்கவில்லையாம். தினமும் சோறு போடும்போது தட்டைத் தரையில் வைத்து காலால் தள்ளிவிடுவாராம்.

ஒன்று, கொலை செய்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் கொலைக்கு நிகரான காரியங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதில் ஆண்பால் பெண்பால் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், உச்சகட்டக் கொதிநிலையில் குடும்பம் என்ற அமைப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நேர்மறையான (Positive) மனநிலையில் இருக்கும்போது எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எதிர்மறையான (Negative) மனநிலையில் உள்ளபோது உறவுகளிடம் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது.

அன்பை விதைக்கும் கதைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு போவ தில்லை வரலாறு. வெறுப்பைக் கக்கும் கதைகளையும் சொல்வதுதான் ஆவணம்.

ஓர் உறவில் உள்ளே நுழைவதற்கான வழிகள் எவ்வளவு எளிமையாக இருக்கின்றனவோ, அதேபோல வெளியேறுவதற்கான வழிகளும் எளிமையானவையாக இருக்க வேண்டும். வெளியே போக நினைத்த ஓர் இளைஞனை, அவனுடைய அலுவலகத்தில் விரட்டி விரட்டி அவமானப் படுத்தினார் இளம்பெண் ஒருவர். அந்தப் பையன் துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டான். இதுகூட ஆசிட் அடிப்பதற்குச் சமம்தான். இந்த அமைப்பில் ஒருமுறை மாட்டிக் கொண்டால், பிறகு வெளியேறவே முடியாது என்பது மாதிரிதான் ஒரு நிலைமை இருக்கிறது. கொலைகள் என்பவை எல்லாம் சிறிய சதவிகிதம்தான்.

தற்கொலைகள் என்ற ஒரு விஷயத்தையே எடுத்துக்கொள்வோம்.குற்ற ஆவணக் கணக்கீட்டின்படி, இந்தியா முழுவதிலும் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 1,31,000. இதில் 32 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள், குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டவர்கள். நோய், பொருள் இழப்பு, போதை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் மக்கள் தற்கொலையில் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆனால், அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் குடும்பப் பிரச்னை என வரையறுக்கிறது இந்தப் புள்ளிவிவரம். குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டதில் 30-ல் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 30,659 பேர். இதில் 11,723 பேர் பெண்கள். தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்கள் 16,122 பேர். இதிலும் 30 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டவர்கள்.

குடும்பப் பிரச்னை என்றால் என்னவெல்லாம் இருக்கலாம் என நீங்களே யோசித்து, மனசாட்சியோடு பட்டியலிடுங்கள். இந்தப் புள்ளிவிவரங்களை உற்றுப்பார்க்கையில், குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்வதில், பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்ற உண்மையும் பளிச்செனத் துலங்குகிறது. இதைப் பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் ஆண் - பெண் உறவில் உள்ள மகத்துவங்கள் பற்றிப் பேசுகிறோம். அதேசமயம் இதே பிரச்னைகளால் வருடாவருடம் கொத்துக்கொத்தாக மனிதர்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். என்ன பிரச்னை? உரையாடல் நின்றுபோய்விட்டது. தங்கமலர் அக்காக்களும் பசுபதி அத்தைகளும் இருபது வருடங்கள் கழிந்த பிறகும் அதே மாதிரிதான் இருக்கிறார்கள். இன்னும் அவர்களின் வாழ்க்கை ஓர் அங்குலம்கூட மேல்நோக்கி நகரவில்லை. இப்போது திருப்பி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது மட்டுமே ஒரே ஆறுதல் வளர்ச்சி. மற்றபடி தமிழ்ச் சமூகம் இன்னமும் தன்னோடு வாழும் இணையர்களிடம் உரையாடலைத் தொடங்கவே இல்லை என்பதுதான் நிஜம்.

கோவையில் வழக்குரைஞர் நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, பெண் ஒருவர் விவாகரத்துக்காக வந்தார். அவர் ஒரே வரியில் காரணத்தைச் சொல்லி முடித்துவிட்டார். `காதலிக்கும்போது மணிக்கணக்கா பேசுவான். இப்போ பேசுறதே இல்ல’.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 23

இந்த மாற்றம் எப்படி நடக்கிறது, பரஸ்பரக் காதலை எந்த இடத்தில் தொலைக்கிறார்கள், விட்டுவிலகும் இடத்தில்கூட தொட்டுத் தொடரவேண்டிய கட்டாயத்துடன் வாழ்க்கை நகர்த்தவேண்டிய நிர்பந்தம் ஏன் வருகிறது, இந்த நிர்பந்தம் `கொலை' என்ற எல்லைக்கு ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது போன்ற கேள்விகளுக்கான உண்மையான பதில்களைக் கண்டடையவேண்டிய தேவையில் இருக்கிறோம். அதைப் பற்றி விளக்கிச் சொல்வதற்கு நான் மனநல மருத்துவர் கிடையாது என்பதால், தாவிச் செல்கிறேன்.

ஒரு வரியில் சொல்வதென்றால், உரையாடலை நிறுத்தும் இடத்தில், கலகங்கள் தொடங்கிவிடும்; காதல்கள் தொலைந்துவிடும். மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட மாடு போலவே உறவுகள் குடும்பம் என்ற அமைப்பில் இருந்தால் என்ன செய்வது? குடும்பம் என்ற அமைப்பு எந்த அளவுக்குப் பலம் வாய்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சில நேரங்களில் துயரமானதாகவும் இருக்கிறது. ஆண் - பெண் உறவைக் கெடுப்பதில் குடும்பங்களுக்கே மிக முக்கியமான பங்கு இருக்கிறது.

இப்படித்தான் குடும்பம் என்ற அமைப்பு, ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போடுகிறது. சில நேரங்களில் ஸ்டவ்வை வெடிக்கவும் வைத்துவிடுகிறது. தற்கொலைகளுக்கும் தள்ளுகிறது. திருமணம் என்பதே இரண்டு வீட்டாரும் சேர்ந்து நடத்தும் போர்போல் ஆகிவிட்டதே. முதலிரவு எனச் சொல்லப்படும் ஒன்றில் கதவைத் தட்டி, மகனை வெளியே இழுக்கும் அம்மாக்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். சீரியல்கள்போலவே நிஜ வாழ்விலும் மாமியாரும் மருமகளும் ஏற்ற இறக்கங்களோடு பேசுகிறார்கள். கற்கக் கூடாததை எல்லாம் கற்றுக்கொண்டுவிட்டார்கள். கற்றபின் அதற்குத் தக நிற்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். மருமகள் குளிக்கும்போது எட்டிப்பார்க்கும் மாமனார்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

உண்மையில் வெளிப்படையான ஓர் உரையாடலை நிகழ்த்த வேண்டிய நேரம் இது. பொத்திப் பொத்திவைத்தாலும் பன்றிக்குட்டிகள் வெளியே வந்துவிடும். `அவ உள்ளங்கை சொரசொரப்பா இருக்கு’ - விவகாரத்துக்கு ஒரு பையன் சொன்ன காரணம். இதைப்போலத்தான் ஆண் - பெண் உறவில் இன்னமும் நாம் முதல் சில அடுக்குகளையே தாண்டவில்லை. நகர வாழ்க்கைக்கு வந்த பிறகும் பெண்களை எப்படிக் கையாள்வது என்றுதான் சொல்லிக்கொடுத்திருந்தார்களே தவிர, அவர்களோடு வாழ்வது எப்படி எனச் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை.

அதை வாழ்ந்துதான் பார்க்க வேண்டும் என்று விட்டுவிட முடியாது அல்லவா? ஆண்-பெண் உறவில் புதிய புதிய சிக்கல்கள் புறப்பட்டுவிட்டன. அவற்றை எல்லாம் வெளிப்படையாகத் திறந்த மனதுடன் உரையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவை அத்தனையையும் கற்றுத்தந்தது இந்தச் சமூகம்தான் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். கள்ளக்காதலுக்காகக் கணவரைக் கொலைசெய்த அந்த மனைவியிடம் ஒருமுறை கேட்டேன்...

`ஏன் அவரைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்தீர்கள்?’

`அவர் என்னிடம் பேசுவதே கிடையாது’ என்றார்.

`உடன் வாழ்பவர்களுடன் உரையாடலை நிறுத்தாதே' என எனக்கு வாழ்க்கை கற்றுத் தந்திருக்கிறது. பாரசீக ரோஜாக் களை ஏந்திக்கொண்டுதான் காதல் வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். ஆனால், குறுக்கே போவதற்கே பிறந்த பூனைகளைப்போல நுணுக்கமான சங்கடங்கள் கடந்துபோகின்றன.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

பொசல்

- கவிதா சொர்ணவல்லி

பெண்ணின் அந்தரங்கமான உலகை, சமகாலத்தில் யாரும் கவிதாவைப் போல எழுதியதில்லை. தன்னுடைய கதைகளின் வழியே பெண்ணுலகின் ஆழமான ஆசைகளை,  தேவைகளை, கோபங்களை காத்திரமான மொழியில் தன் சிறுகதைகளின் வழியே உரையாடுகிறார் நூலாசிரியர்.

இரண்டாம் லெப்ரினன்ட்

- அகரமுதல்வன்

முள்ளிவாய்க்கால் துயரத்தை அடுத்து நடந்த நிகழ்வுகளை, ஓர் இளைஞனின் பார்வையில் பதிவுசெய்த சிறுகதைத் தொகுப்பு. போர்ச்சூழலில் இளம் மனம் படும் துயரங்களை விவரித்த வகையில் மிகச் சிறந்த சமூக ஆவணம்.

சுமையா

- கனவுப்ரியன்


தூ
த்துக்குடியில் இருந்து கிளம்பி துபாய் போன இளைஞனின் கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு. உலகம் முழுக்கச் சுற்றிப் பெற்ற அனுபவங்களை, தமிழ் நிலத்துக்குக் கொண்டுவரும் சீரிய முயற்சி. எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் வகையில் கவனம் கொள்ளத்தக்க சிறுகதைத் தொகுப்பு.

இருமுனை

- தூயன்

கிராமம் சார்ந்த இளைஞன் ஒருவனின் பார்வையில், இந்தச் சமூகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக அமைந்த சிறுகதைத் தொகுப்பு. நுண்கலைகளின் பாரம்பர்யம் இன்றைய இளைஞர் சமூகத்தையும் தொட்டுத் தொடர்கிறது என்பதை உறுதிசெய்யும் தொகுப்பு.

ஊருக்குச் செல்லும் வழி

- கார்த்திக் புகழேந்தி


கான்கிரீட் காடுகளில் வாழ்ந்தாலும், தொப்புள்கொடி உறவாக இன்னமும் கிராமம் சார்ந்த வாழ்வைக் கக்கத்தில் இடுக்கியபடி ஓடும் இளைஞர்களின் மனப்பதிவு. கட்டுரைத் தொகுப்பு என்றபோதிலும் கதைகளை வைத்தே வாழ்க்கையை நகர்த்திய விதத்தில் கவனம்கொள்ள வேண்டிய படைப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism