தீர்ப்பு நாள் வந்துவிட்டது!

நீதி நின்று கொல்லும்!

`சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள்' என பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா மரணமடைந்ததால் அவரை வழக்கிலிருந்து விடுவித்துள்ள உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது. முதலமைச்சர் கனவில் இருந்த சசிகலா `10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவே முடியாது' எனத் தீர்ப்பளித்து, அவரின் எல்லா கனவுகளுக்கும் கல்லறை கட்டியிருக்கிறது. `தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்' என்று அரசியல்வாதிகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பவாதத்துக்கும் பயன்படுத்திய வார்த்தைகள் இப்போது உண்மையிலேயே அர்த்தம் பெற்றிருக்கின்றன. ஜெயலலிதா மரணமடைந்ததாலேயே அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே தவிர, அவர் குற்றம் இழைக்காதவர் என்பதால் அல்ல. ஓர் அரசியல் தலைவரின் மரணத்தோடு அவரது அரசியல் தவறுகளும் முறைகேடுகளும் மறைந்துபோய்விடாது. `ஒரு ரூபாய்தான் சம்பளம்' என்று ஜெயலலிதா அறிவித்த ஆட்சிக்காலத்தில்தான் இந்த அநீதியான சொத்துக்குவிப்பு நடந்தது என்பதை மறக்கவும் முடியாது... மன்னிக்கவும் கூடாது.

ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா வழங்கிய தீர்ப்பை, விகடன் தலையங்கம் வரவேற்று எழுதியிருந்தது. குன்ஹா வழங்கிய தீர்ப்பு, நீதியை அடிப்படையாகக்கொண்டது என்று மனச்சாட்சியுள்ள அனைவரும் அப்போது வாழ்த்தி வரவேற்றார்கள். ஆனால், `வருமானத்துக்கு அதிகமாக 10 சதவிகிதம் வரை சொத்து சேர்க்கலாம்' என்று குமாரசாமி வழங்கிய `நவீன' தீர்ப்போ நீதியில் நம்பிக்கையுள்ள அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
ஆனால், நீதியின் வெற்றியைத் தள்ளிப்போடலாமே தவிர, தடுக்க முடியாது என்பதைத்தான் இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்திருக்கிறது. சட்டத்தின் உன்னதத்தை நிரூபிக்கும் தீர்ப்பை வழங்கியதற்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய், குன்ஹா ஆகியோர் உதாரணம் என்றால், சட்டத்தின் களங்கத்துக்குக் குமாரசாமியின் தீர்ப்பைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

`ஊழலை அளவின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. ஊழல்தான் ஒழுங்கீனத்தின் தாய். அது சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது, தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது, மனசாட்சியைக் கொல்கிறது, மனித நாகரிகத்தையே குலைக்கிறது. ஆளும் தன்மையின் உள்ளீடுகளையே அழிக்கிறது' என்று நிரஞ்சன் ஹிமாச்சல் சஷத்தல் வழக்கில் 2003-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை குன்ஹாவும் தன் தீர்ப்பில் மேற்கோள்காட்டியிருந்தார். இதுதான் நீதியின் சாராம்சம்; அறத்தின் அடிப்படை. அரசு அலுவலகத்தின் கடைநிலை ஊழியர் தொடங்கி தமிழக முதல்வர் வரை அனைவரும் சட்டத்தின் முன் சமம்; குற்றம் இழைத்தால் அனைவரும் குற்றவாளிகள்தான் என்பதை ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் சொல்கின்றன இந்த வரிகள்.

சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்துள்ளதால் இதை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில், 1991-1996 காலகட்டத்தில் அவர்கள் கட்சியும் அவர்கள் தலைவியான ஜெயலலிதாவும் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற ஊழல் முறைகேடுகளுக்கு எதிரான தீர்ப்புதான் இது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

அரசியல்வாதிகளின் ஊழல் பணம் என்பது சாதாரணக் குடிமக்களின் வியர்வையையும் ரத்தத்தையும் திருடிச் சம்பாதித்த பணம். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இந்தத் தீர்ப்பு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இந்தத் தீர்ப்பு ஊழல் அரசியலின் மேல் விழுந்த மரண அடி; தன் கையில் வாக்குச்சீட்டைத் தவிர வேறெதுவும் இல்லாத சாமானிய மக்களுக்கோ இதயம் இனிக்கும் இமாலய வெற்றி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு