Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37

ம.செந்தமிழன் - படங்கள்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37

ம.செந்தமிழன் - படங்கள்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37

திர்ப்பாற்றல் எனும் சொல், இப்போது அச்சமூட்டும் வகையிலும் வணிக நோக்குடனும் புழங்கப்படுகிறது. எதிர்ப்பாற்றலை முன்வைத்து செய்யப்படும் விளம்பரங்கள், மருத்துவ அறிவிப்புகள் யாவும் ஏதோ சில நிறுவனங்களின் பிடிக்குள் சமூகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மருந்துகள் வழியாக எதிர்ப்பாற்றலை வளர்த்தெடுக்க முடியும் என்பதை சமகாலத் தலைமுறை நம்பத் தொடங்கிவிட்டது. பூமியில் மனிதர்களைத் தவிர வேறெந்த உயிரினத்துக்கும் மருத்துவம் தேவைப்படுவதில்லை. மருத்துவம் இல்லாமல் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கைதான் பூமியில் அதிகம்.

இரண்டு வகை உயிரினங்களுக்கு மருத்துவம் தேவைப்படுகிறது. ஒன்று, மனித இனம். மற்றொன்று, மனிதர்கள் வளர்க்கும் விலங்கினம். மனிதர்களோடு எந்த வகையிலும் சேராமல் வாழும் உயிரினங்களுக்கு மருத்துவமே தேவைப்படுவதில்லை. விலங்குக்காட்சிச் சாலைகளில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளைக் காட்டிலும் காடுகளில் உள்ளவை வலிமையுடன் இருக்கின்றன.

நாட்டு மாடுகள், இப்போதும் திமிலும் திமிரும் கொண்டுதான் திரிகின்றன. பண்ணைகளில் வளர்க்கப்படும் சீமை மாடுகளோ, எதிர்ப்பாற்றலுக்கான மருந்துகளையும் ஊசிகளையும் சார்ந்தே வாழ்கின்றன. நோய் எதிர்ப்பாற்றல் என்பது, இயற்கையாக உடலில் ஊற்றெடுக்கும் கொடை. எல்லா உடல்களுக்கும் எதிர்ப்பாற்றல் உண்டு. விதிவிலக்காக சிலரின் உடல்களில் எதிர்ப்பாற்றல் குறைவது உண்டு. எதிர்ப்பாற்றல் குறைபாடு என்பது, மனிதகுலம் முழுமைக்குமான குறைபாடோ, நோயோ அல்ல.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கையான உணவு, நீர், சூழல் ஆகிய மூன்றும் கிடைக்கும்போது, எதிர்ப்பாற்றலும் கிடைக்கும். இந்த மூன்றும் சீரழிந்த நிலையில் உள்ள சமூகங்களில் எதிர்ப்பாற்றல் குறையத்தான் செய்யும். கிருமிகள் எனப்படும் நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்து தப்புவது சாத்தியமற்றது. ஏனெனில், அவை நமது சூழலில் இரண்டறக் கலந்துள்ளன. காற்றில், நீரில், நிலத்தில் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகிக்கொண்டே இருக்கின்றன. நுண்ணுயிரிகள் மட்டும் நம் மீது தாக்குதல் நடத்த முடிவெடுத்துவிட்டால், ஒரே நிமிடத்தில் மனிதகுலம் அழிந்தேபோகும். நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் வலிமையும் நம்மைக் காட்டிலும் மிக மிக அதிகம். இயற்கையில் அவ்வாறு நிகழ்வதில்லை. உணவு, நீர், சூழல் ஆகியவை கெட்டுப்போன நிலையில் மனிதர்களைச் சுற்றியுள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரிக்கிறது. உணவு, நீர், சூழல் கெடும்போதே மனிதர்களின் எதிர்ப்பாற்றலும் கெடுகிறது.

இவ்வாறான நிலையில், நமது மறுவினை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு அழுத்தமான கருத்துகள் உண்டு. முதலில் நமது உணவையும் நீரையும் சீரமைக்க வேண்டும். உணவுப் பழக்கங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். மரபு வழிப்பட்ட உணவுகளை நோக்கித் திரும்புவது நமக்கு முன் உள்ள மிக எளிமையான வழி. நீர்நிலைகளைப் பராமரித்தல், மழைநீரைக் குடிநீராக்குதல் அல்லது கிடைக்கும் நீரை சத்துநீராக மாற்றிக்கொள்ளுதல் ஆகிய வழிமுறைகளைக் கையாளலாம். இவை எல்லாம் நம்மால் செய்ய முடிந்த செயல்கள். சூழலை மாற்றுவதுதான் நாம் இணைந்து செய்யவேண்டிய பெரும்பணி. அதற்குச் செல்லும் முன், உணவும் நீரும் மீட்கப்பட வேண்டும்.

எதிர்ப்பாற்றலுக்கென்றே உள்ள சுவை, கசப்பு. அறுசுவைகளில் ஒன்றான கசப்புச் சுவையை நமது இளைய தலைமுறை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதே காலகட்டத்தில்தான் எதிர்ப்பாற்றல் குறைபாடும் உயர்ந்துள்ளது. இரண்டுக்கும் நேரடியான உறவு உண்டு. உடலின் எதிர்ப்பாற்றலை உடனடியாகத் தூண்டவேண்டும் எனில், இரு சுவைகளை உள்ளே அனுப்பலாம். முதலாவது, கசப்பு. இரண்டாவது, உறைப்பு (காரம்). தேள், பூரான் போன்ற நச்சுப் பூச்சிகள் கடித்துவிட்டால் மிளகு, வெற்றிலை கொடுப்பது நமது வழக்கம். இவை இரண்டும் உறைப்பானவை. உறைப்பு, வெப்பத்தின் வெளிப்பாடு என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37

மிளகும் வெற்றிலையும் உடலுக்குள் நுழையும்போது, வெப்பம் பரவுவதை நம்மால் உணர முடியும். இந்த வெப்பம்தான் நஞ்சு அகற்றும் எதிர்ப்பாற்றல். கடும் நஞ்சுகளுக்கான முதன்மை மூலிகையாக, சிறியாநங்கையை நாம் பயன்படுத்துகிறோம். இது, கடுமையான கசப்புச் சுவைகொண்ட தாவரம்.

வேம்பின் கசப்பு, நமது மரபின் அங்கமாக மாறியுள்ளது. வேப்பிலைச் சாற்றை மாதம் ஒரு முறை அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறை புகட்டும் வழக்கம் நம்மிடையே இருந்தது. சிலர் வேப்பெண்ணெயைப் புகட்டுவார்கள். இந்த வழக்கங்களின் பின்னால் உள்ள மருத்துவம், நமக்கான பாதுகாப்புக் கவசமாக இருந்தது. வேப்பங்குச்சியால் பல் துலக்கும் வழக்கம், பற்களுக்கானது மட்டும் அல்ல, ஒட்டுமொத்த உடலுக்குமான நன்மைகளைத் தரவல்லது. கசப்புச் சுவை, வெப்பத்தைத் தூண்டவல்லது. எதிர்ப்பாற்றலுக்கான பூதமாக வெப்பத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். உறைப்புச் சுவை, வெப்பத்தைத் தனக்குள் பொதித்துள்ளது. கசப்பு, வெப்பத்தைத் தூண்டுகிறது.

பாகற்காயை நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் பருகினால் பித்தம் வெளியேறும். இது, நம் வீட்டு மருத்துவக் குறிப்புகளில் ஒன்று. நீண்ட காலமாகச் சேகரமான பித்தம் நஞ்சுதான். பாகற்காயின் கசப்பு உடலுக்குள் சென்றதும், உடலின் வெப்பம் தூண்டப்பட்டு பித்தமாகிய நஞ்சு வெளியேறுகிறது. சிலருக்கு வாந்தியாகவும், சிலருக்கு செரிமானக் கழிவுகளாகவும் வெளியேறுகிறது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37

`குறிஞ்சான் கீரை' என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீரிழிவு நோய்க்கான மருந்தாக இந்தக் கீரை முன்வைக்கப்படுகிறது. நீரிழிவு என்பது, நோய் அல்ல... தற்காலிகச் சீர்கேடு என்பது என் கருத்து. ஆனால், குறிஞ்சான் கீரையை அவ்வப்போது உணவில் இணைத்துக்கொண்டால், மிகச்சிறந்த எதிர்ப்பாற்றலைப் பெறலாம். சிறுகுறிஞ்சான் எனும் அந்தக் கொடி வகை, நமது கிராமங்களில் இப்போதும் மண்டிக்கிடக்கிறது. முருங்கைக் கீரையுடன் சிறிது அளவு சிறுகுறிஞ்சான் கீரையைச் சேர்த்து, கூட்டு சமைத்து உண்ணலாம். முருங்கைக்கீரையும் காயும்கூட ஓரளவுக்குக் கசப்புச் சுவைகொண்டவைதான். நம் உடலுக்குத் தேவையான எதிர்ப்பாற்றலை வாரி வழங்கும் தாவரம் முருங்கை.

பீர்க்கன்காய், பாகற்காய், முருங்கைக்காய், புடலங்காய் ஆகியவை கசப்புச் சுவை கலந்த காய்கள். பீர்க்கன்காயின் தோலைச் சீவி, உளுந்தை வறுத்துச் சேர்த்துத் துவையல் அரைத்து உண்பது நல்ல மருந்துணவாக அமையும். மெல்லிய கசப்பை உள்ளடக்கிய பிரண்டைத் துவையல் மிகச் சிறந்த மரபுக்கொடை. வயிற்றின் பல்வேறு சிக்கல்களைச் சீர்செய்வதில் பிரண்டையின் செயல்பாடு நிகரற்றது. நீண்ட கால மூட்டுவலிகளையும் பிரண்டைத் துவையல் நீக்க உதவுகிறது. கறிவேப்பிலைத் துவையலும் கசப்புதான். இந்த மூன்று துவையல்களையும் அவ்வப்போது உணவாகக்கொண்டால் எதிர்ப்பாற்றல் பெருகும்.

நம் முன்னோர் பயன்படுத்திய எண்ணெய் வகைகளிலும் சுவைகளுக்கு முக்கிய இடம் உண்டு. நல்லெண்ணெய், கசப்புச் சுவையைக் கூடுதலாகக்கொண்டது. இலுப்பை எண்ணெய், இனிப்பும் கசப்பும் கலந்த சுவையுடையது. நல்லெண்ணெயை மிகுதியாகவும், இலுப்பை எண்ணெயைக் குறைவாகவும் பயன்படுத்திப் பலகாரம் சமைக்கும் வழக்கம் நமது கிராமங்களில் இருந்தது. தின்பண்டம் என்றாலே இனிப்பு அல்லது உறைப்பு என்ற புரிதல் இப்போது வந்துவிட்டது. தின்பண்டங்களுக்கும் கசப்புச் சுவைக்குமான நீண்ட கால உறவை நமது சமகாலச் சமூகம் இழந்துவிட்டது. இதன் விளைவாக, சிறுவர்களின் தின்பண்டங்களில் பெரும்பான்மையானவை, இனிப்புச் சுவை மிகுந்தவையாக மாறிவிட்டன. இந்த இனிப்புப் பண்டங்களும் இயற்கையான பொருள்களிலிருந்து `சமைக்கப்படுபவை’ அல்ல. வேதிப்பொருள்களைக்கொண்டு ‘உற்பத்தி’ செய்யப்படும் பண்டங்கள் அவை.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37

சிறுவர்களின் உணவுப் பழக்கங்களில், கசப்புக்கே இடமில்லை எனும் அளவுக்கு நிலைமை சிக்கலாக உள்ளது. கசப்புச் சுவைகொண்ட காய்கறிகள், கீரைகள், தின்பண்டங்களைச் சிறுவர்களுக்கு உண்ணக் கொடுத்துப் பழக்குங்கள். உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் சில சங்கடங்கள் இருந்தாலும், இந்தப் பழக்கத்தை அவர்களுக்குப் பொறுமையாக அறிமுகம் செய்தாக வேண்டும். ஏனெனில், இப்போதைய தலைமுறையிடம் எதிர்ப்பாற்றல் குறைந்துள்ளது. காய்ச்சல், தலைவலி, சளி ஆகிய எளிய உடல் தொல்லைகளைக்கூடப் பொறுத்துக்கொள்ள இயலாதவர்கள் அதிகரித்துவிட்டனர்.

வலிகளைப் பொறுத்துக்கொள்வதற்கும் எதிர்ப்பாற்றலுக்கும் நெருக்கமான உறவு உண்டு. உறைப்பு, கசப்பு ஆகிய இரு சுவைகளை அன்றாடம் உணவில் பயன்படுத்துவோர் எதிர்ப்பாற்றலைத் தமக்குள் சேமிக்கும் கொள்கலன்களாக வாழ முடியும். இந்தச் சுவைகள், இயற்கை உணவுகளிலிருந்து கிடைக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

அறுசுவைகள், ஐம்பூதங்கள் என்ற இரு கருத்துகளையும் நன்றாகப் புரிந்துகொண்டு உணவுக்கொள்கை வகுத்தவர்களின் பிள்ளைகள் நாம். ஒவ்வொரு சுவைக்கும் ஐம்பூத உறவு உண்டு. நமது மரபில் கடைப்பிடிக்கப்பட்ட எல்லா உணவுகளுக்கும் மருத்துவக் குணங்கள் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக இந்த உன்னதங்கள் இழிவு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டன. இதன் விளைவாகத்தான், நமது சமூகம் உணவு மற்றும் மருந்து வணிகத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கிறது. மருந்துகள் இல்லாமல் வாழ வேண்டும் என விரும்புவோர் அனைவரும், உணவுகளின் இயல்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37

நம் முன்னோர்கள், உணவுக்கொள்கைகளைப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கவில்லை. ஆனால், தங்களின் மூத்த தலைமுறையினரின் கொள்கைகள் மீது தங்களுக்கு இருந்த நம்பிக்கையினால் அவற்றைப் பின்பற்றினார்கள். இந்த நம்பிக்கை மனிதகுலத்துக்குத் தேவையான இயல்பு. குறிப்பாக, பூமியின் எல்லா தொல்குடிகளும் தமது உணவுப் பழக்கங்களை எளிதில் விட்டுத்தருவதில்லை. அந்தப் பிடிவாதம்தான் அவர்களைக் காப்பாற்றும் எதிர்ப்பாற்றல். இவ்வளவு உடல்நோய்களுக்கிடையிலும் பெருநிறுவன மருத்துவச் சதிகளுக்கிடையிலும் நம்மால் ‘உணவே மருந்து’ என முழங்க முடிகிறது என்றால், நமது மரபின் மீதுள்ள அந்தப் பிடிவாதம்தான் காரணம். இது நமக்குத் தேவையான பண்பு. இதை விட்டுத்தரக் கூடாது.

புதிய உணவுகளை முற்றிலும் ஒதுக்குவது மரபுச் சிந்தனைகளுக்கு எதிரானது. எந்தப் பொருள் புதிதாக வந்தாலும் அதன் இயல்புகளைப் புரிந்துகொண்டு ஏற்கலாம் அல்லது எதிர்க்கலாம்.

இயல்புகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறது அல்லவா...

1. நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுகளை / உணவுப் பொருள்களைத் தவிர்த்தல்.

2.
அழுகும் பொருள்களை இறக்குமதி செய்து உண்பதைத் தவிர்த்தல் / குறைத்தல். (ஆப்பிள் போன்றவை)

3. இயற்கை வழி வேளாண் உணவுகளுக்கு முன்னுரிமை அளித்தல்.

4. மரபுவழியிலான சமையல் முறைகளை விட்டுக்கொடுக்காதிருத்தல். குறிப்பாக, எந்தவிதச் சுவையூட்டிகளையும், மணமூட்டிகளையும், நிறமூட்டிகளையும் உணவில் பயன்படுத்தாதிருத்தல்.

5.
அயல்வகை உணவுப் பயிர்களாக இருந்தாலும், அவை நமது நிலங்களில் இயற்கையாக விளைந்தால் ஏற்றுக்கொள்ளுதல். ஆனாலும், நமது நாட்டு உணவுகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்தல்.
இந்த ஐந்து கொள்கைகளையும் கடைப்பிடித்தால், நமது உணவே மருந்தாக அமையும். இப்போதைய சிறுவர்களுக்கும் இனி பிறக்கும் குழந்தைகளுக்கும் நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியக் கடமை, ‘நீண்ட ஆயுளுடன் நலமாக – எந்த மருத்துவ நிறுவனங்களையும் சார்ந்திராமல் வாழும்’ வழிமுறையைக் கற்றுத்தருவதுதான் என நினைக்கிறேன். அவர்களுக்கு என நாம் சேர்த்துவைக்கும் சிறந்த செல்வம் இதுதான்.

- திரும்புவோம்...