Published:Updated:

ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

இரா.கலைச்செல்வன் - படங்கள்: பா.காளிமுத்து

ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

இரா.கலைச்செல்வன் - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!
ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

`குளிருச்சுன்னா கம்பளி, வியர்த்துச்சுன்னா ஏசின்னு ரொம்பவே சொகுசான வாழ்க்கை எனக்கு. ஆனா, சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் பனி, கரடுமுரடான பாதையில் பயணம்னு எதையுமே பொருட்படுத்தாம, இந்திய நாட்டைக் காப்பாற்ற தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் ராணுவ வீரர்கள், எப்படி உருவாகுறாங்க, அந்த மனஉறுதி அவங்களுக்கு எப்படி வந்தது, ஒவ்வொருத்தருக்கும் எப்படிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கப் படுதுங்கிறதை  எல்லாம் ஒரு நாள் நேர்ல பார்க்கணும்' - சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இன்ஜினீயரிங் படிக்கும் மாணவி சஞ்சனாவின் `தில்' ஆசை இது.

ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராணுவப் பயிற்சி முகாமுக்குள் அத்தனை எளிதில் நுழைந்துவிட முடியாது. பலகட்ட அனுமதிகள், விசாரிப்புகள் எனத் தொடர்ந்து ஒரு மாதக் காத்திருப்புக்குப் பிறகு, சஞ்சனாவின் ஆசையை நிறைவேற்ற சென்னை பரங்கிமலையில் இருக்கும் `ஆபீஸர்ஸ் டிரெய்னிங் அகாடமி'யில் இருந்து அனுமதிக் கடிதம் வந்தது. பெரிய பீரங்கியுடன் முதல் நுழைவாயில் நம்மை வரவேற்றது. காருக்கும், காரில் பயணித்த நமக்கும் கடுமையான பரிசோதனைகள். பரவசத்தோடும் ஒருவிதமான படபடப்போடும் பேச ஆரம்பித்தார் சஞ்சனா.

``சின்ன வயசுல ப்ளாக் கரன்ட், அப்புறம் பட்டர்ஸ்காட்ச், இப்போ சாக்லேட்... இப்படி ஐஸ்க்ரீம்லகூட எனக்குப் பிடிச்ச ஃபிளேவர்கள் மாறிட்டே இருக்கும். ஆனா, எப்பவுமே எனக்குள் மாறாத ஒரே விஷயம் `நான் ராணுவத்தில் சேரணும்கிற ஆசை’. ஆனா, எல்.கே.ஜி படிக்கும்போதே நான் கண்ணாடி போட்டுட்டேன். கண்களின் பவர் மைனஸ் 3. அதனால மிலிட்டரியில் சேர முடியாதுன்னு சொன்னாங்க. சரி... அந்த வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ்ந்து பார்த்திடணும்னு ஆசைப்பட்டுத்தான் விகடனுக்கு எழுதினேன். இது வெறுமனே ஆசை இல்லை... என் கனவு'' - சஞ்சனா சொல்லிக்கொண்டிருக்கும்போதே மூன்றாவது நுழைவாயிலைக் கடந்து, ராணுவ அதிகாரி சுஜித் அறைக்கு வந்தோம்.

ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

``வாங்க... வாங்க... வெல்கம். இந்தியாவிலேயே பெண்களுக்கு  ராணுவப் பயிற்சி அளிக்கும் அகாடமி சென்னை மட்டும்தான். சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க'' என ராணுவ உலகத்துக்குள் சஞ்சனாவை வரவேற்றார் மேஜர் சுஜித்.

இரண்டாம் உலகப்போர், இந்திய - சீனப் போர் தொடங்கி 1962-ம் ஆண்டு பரங்கிமலையில் அதிகாரிகளுக்கான இந்த ராணுவப் பயிற்சி மையம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது வரையிலான
ஓர் ஆவணப்படம் சஞ்சனாவுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதன் பிறகு, பச்சை நிற ஜிப்ஸியில் சிறு மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சஞ்சனா. சென்னையின் பரபரப்புகள் எதுவும் அண்டாமல் அடர்வனமாக இருந்தது அந்த மலை. அதன் மேலிருந்து பார்க்கும்போது, மொத்த அகாடமியும் கழுகுப் பார்வையில் தெரிந்தது.

ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

``மேஜர், கண்ணில் பவர் மைனஸ் 3 இருந்தால், ராணுவத்தில் சேர முடியாதா? எனக்கு ஆர்மியில் சேரணும்'' என்று சஞ்சனா கேட்க, ``அப்படியெல்லாம் இல்லை. பார்வைக்குறைபாடுதான் உங்கள் பலவீனம். ஆனால், அதைத் தாண்டி உங்களிடம் பல திறமைகள் இருக்கும். அது நம்ம இந்திய ராணுவத்துக்குப் பயன்படும். எதையுமே முயற்சிக்காமல் ஒதுங்காதீங்க. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ராணுவத்துக்கான பரீட்சை எழுதி முயற்சி பண்ணுங்க'' என்று மேஜர் சுஜித் சொல்ல உற்சாகமானார் சஞ்சனா.

பலதரப்பட்ட நிலப்பரப்புகளில், எந்த மாதிரியான வியூகங்களில் ராணுவ வீரர்கள் செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் தனிப்பிரிவுக்கு சஞ்சனா அழைத்துச் செல்லப்பட்டார். ஆற்றை ஒட்டிய பகுதிகள், பாலைவனம், காடு, மலை என ஒவ்வோர் இடத்திலும், ஒவ்வொருவிதமான வியூகங்களை அமைக்க வேண்டும் என்பதை மினியேச்சர்கள் வழியே அவருக்கு விளக்கினார் மேஜர் சிவா. அடுத்ததாக சஞ்சனாவை ராணுவப் பயிற்சி வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றார் மேஜர் சுஜித்.

ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

மாணவர்கள் சுற்றி அமர்ந்திருக்க, நடுவே யுத்தக்களம் மாதிரி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. எதிரிகளின் தாக்குதல்களுக்கு எந்த மாதிரியான வியூகங்களை அமைக்க வேண்டும்,  எதிர் தாக்குதல்களை எப்படி நடத்த வேண்டும் என்ற பாடம் நடந்து கொண்டிருந்தது. அரை மணி நேர உணவு இடைவேளைக்குப் பிறகு, படகு ஓட்டும் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சஞ்சனா.

``இனி நீங்கள் பார்க்கும் பயிற்சிகளில் நீங்களும் பங்கெடுக்கலாம். அதற்கான சிறப்பு அனுமதியை உங்களுக்காக `விகடன்’ வாங்கியிருக்கிறது. அதே சமயம் நீங்கள் கவனமாக இருக்கவேண்டியதும் அவசியம்’’ என்று மேஜர் சுஜித் சொல்ல, படகு ஓட்டும் பயிற்சிக்கு உற்சாகமாகத் தயாரானார் சஞ்சனா.

அவர் படகில் ஏறி சில அடிகள் பயணிக்க, அருகே வந்த மற்றொரு படகு பாறையில் மோதி நீரில் சாய்ந்தது. சில அடிகள் நீந்தி ஒருவழியாகக் கரையேறினார் அந்தப் படகில் வந்த ராணுவ வீரர். இதைப் பார்த்து சற்றே பதற்றமானார் சஞ்சனா. கரையேறியதும், ``ஐயோ... ஜஸ்ட் மிஸ். தவறி என்னோட படகு மோதியிருந்தா அவ்வளவுதான். எனக்கு நீச்சல் தெரியும். இருந்தாலும்... இது எத்தனை அடி?'' எனக் கேட்க, ``200 அடி’' என்ற சுஜித்தின் பதிலைக் கேட்டு ஷாக் ஆனார் சஞ்சனா.

ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. துப்பாக்கிச் சுடும் பயிற்சி. ``நானும் பயிற்சி எடுக்கலாமா?'' என சஞ்சனா கேட்க, அவரிடம் துப்பாக்கி அளிக்கப் பட்டது.

சுவரில், `கொல்வதற்காகச் சுடு' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. தன் கண்ணாடியைச் சரிசெய்தபடி சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வட்டங்கள் நிறைந்த அந்த இலக்கை நோக்கிச் சுட்டார். சரியாக இரண்டாவது சிறிய வட்டம்  துளைபட, அனைவருக்கும் ஆச்சர்யம்.

பலரின் பாராட்டுகளைத் தொடர்ந்து, அங்கு இருந்த இலகு ரகத் துப்பாக்கி ஒன்றைக் கழற்றி மாட்டும் பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டது.

இறுதியாக, பல தடைகளைக் கடக்கும் கடினமான பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சஞ்சனா. பல இடங்களில் தடுமாறினாலும், சில தடைகளைத் திறம்படத் தாண்டினார். பயிற்சி முடித்து வியர்வையில் நனைந்திருந்த ராணுவ வீராங்கனைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.

`` `பெரிய பெரிய மாற்றங்கள் எல்லாம் ரொம்ப சாதாரணமா நடக்கும்'ன்னு சொல்வாங்க. கிட்டத்தட்ட எனக்கும் அப்படித்தான் இருக்கு. என்னால செய்யவே முடியாதுன்னு நான் நினைச்ச விஷயங்களை எல்லாம் நிச்சயம் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை வந்திருக்கு. சின்ன வயசுல கார்ட்டூன்ல பார்ப்போமே, ஸ்பினாச்  சாப்பிட்டதும் பாப்பாயிக்கு ஒரு பலம் வரும்... அது மாதிரி இருக்கு இன்னிக்கு எனக்கு!'' - ராணுவப் பயிற்சி மையத்தில் இருந்து ஒரு ராணுவ வீராங்கனையின் கம்பீரத்தோடு புறப்பட்டார் சஞ்சனா!

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

ஆசை - ஒரு நாள் ஒரு கனவு!

அனுப்பவேண்டிய முகவரி...
ஆசை
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism