Published:Updated:

இங்கு உயிர் விற்பனை!

இங்கு உயிர் விற்பனை!
பிரீமியம் ஸ்டோரி
News
இங்கு உயிர் விற்பனை!

ஆர்.வைதேகி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

இங்கு உயிர் விற்பனை!

ருமுட்டை தானம். இதில் மட்டும்தான் தானம் இன்னமும் மிச்சம் இருக்கிறது. குழந்தையின்மைப் பிரச்னையின் சிக்கலைச் சற்றே குறைத்த நவீன சிகிச்சை முறை... இன்று முழுக்கவே வணிகமயமாகிவிட்ட, பணம் கொட்டும் வைரல் பிசினஸ். எங்கெல்லாம் பணம் அதிகமாகப் புழங்குகிறதோ, அங்கெல்லாம் இடைத்தரகர்கள் தோன்றுவார்கள்; சமூகக் குற்றங்களும் அதிகரிக்கும். அதற்கு, கருமுட்டை தானமும் விதிவிலக்கு அல்ல.

``என் கணவர், போன வருஷம் விபத்துல இறந்துட்டார். ரெண்டு பெண் குழந்தைங்களை வெச்சுக்கிட்டுப் பிழைக்க வழி தெரியாம கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தேன். எங்க ஏரியாவுல ரத்தப் பரிசோதனைக்கூடம் வெச்சிருக்கிற ஒரு பெண், `ஆஸ்பத்திரிக்கு வா. டாக்டர் டெஸ்ட் பண்ணுவாங்க. உனக்கு ஒரு கோளாறும் இல்லைன்னா பத்து நாளைக்கு ஊசி போடுவாங்க. அது சத்து ஊசி மாதிரிதான். அரை நாள் மட்டும் ஆஸ்பத்திரியில இருந்தா போதும். வீட்டுக்கு வரும்போது 10,000 ரூபா தருவாங்க'னு ஆசை காட்டினாங்க. `மூணு மாசத்துக்கு ஒருமுறை போனாலே உன் குடும்பக் கஷ்டத்தைச் சமாளிக்கலாம்'னு அவங்க சொன்னதை நம்பிப் போனேன். முதல்முறை போகும்போது `கருமுட்டை எடுப்பாங்க’ன்னுலாம் சொல்லலை. கையில காசு கொடுத்தப்போதான் சொன்னாங்க. கொஞ்சம் பயமும் பயங்கர வலியும் இருந்தது. ஆனா, காசைப் பார்த்ததும் அதெல்லாம் காணாமப்போயிடுச்சு. ஒரு வருஷமா கொடுத்திட்டிருக்கேன்'' என்கிறார் அனுசுயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

கருமுட்டை தானம் கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன்னர், இவரது எடை 51 கிலோ. இன்று 72 கிலோ. உபயம், அளவுக்கு அதிகமாகப் போடப்பட்ட ஹார்மோன் ஊசிகள். இப்படி அளவுக்கு அதிகமாகக் கருமுட்டை தானம் செய்வது மிகவும் ஆபத்து என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

``வாழ்நாளில் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே கருமுட்டை தானம் செய்யலாம். அடிக்கடி தானம் செய்பவர்களுக்கு முட்டையின் இருப்பு அளவு குறைவாக இருக்கும். அடிக்கடி தானம் செய்தால், அவர்களது ஆரோக்கியம் பாதிப்பதோடு பக்கவிளைவுகளையும் உருவாக்கும்'' என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலாராஜ்.

இங்கு உயிர் விற்பனை!இடைத்தரகர்களின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு, கருமுட்டை தானத்துக்கும் வாடகைத் தாயாக இருக்கவும் அதன் ஆபத்துகள் தெரியாமல் பல ஏழைப்பெண்கள் ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணிடம் பேசினோம்.

``எனக்கு 39 வயசு. நாலு பிள்ளைங்க. ஆஸ்பத்திரியில ஆயா வேலைபார்க்கிற ஒரு பெண் எங்க ஏரியாவுல குடி இருக்காங்க. `கருமுட்டை தானம் கொடுத்தீங்கன்னா 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்'னு சொன்னாங்க. அவங்க சொன்னதைக் கேட்டு நிறைய பெண்கள் கருமுட்டை தானம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு கடன் பிரச்னை இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டு, அதே ஆயா என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனாங்க. `கருமுட்டை கொடுத்தா 15 ஆயிரம் ரூபாய். ஆனா, நீ வாடகைத் தாயா இருந்தா ரெண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். உன் கடனெல்லாம் தீர்ந்துடும்’னு சொன்னாங்க. ஆஸ்பத்திரியில என்னை டெஸ்ட் பண்ணிட்டு, `உனக்குச் சின்ன வயசு. நீ கருமுட்டை கொடுக்கிறதுக்குப் பதில் வாடகைத் தாயா இரு'னு சொன்னாங்க. வீட்டுக்காரருக்கு விருப்பமில்லை. அப்புறம் குடும்ப நிலைமையை யோசிச்சு சமாதானமாகிக் கையெழுத்துப் போட்டார்.

ஒரு ஹாஸ்டல்ல என்னைத் தங்கவெச்சுப் பார்த்துக்கிட்டாங்க. வாடகைத் தாயா இருந்தப்ப `குழந்தையை சிசேரியன் பண்ணித்தான் எடுப்போம்'னு சொன்னாங்க. பிறந்தது பொண்ணா, பையனான்னுகூட தெரியாது. கண் முழிச்சுப் பார்த்தப்ப குழந்தை இல்லை. இன்னமும் பதினொண்ணாவது மாசம் நாலாம் தேதி வந்தா, அந்தக் குழந்தை நல்லா இருக்கணும்னு கோயிலுக்குப் போய் வேண்டிக்கிட்டு பிறந்த நாள் கொண்டாடிட்டிருக்கோம்'' என்றார் கண்களில் நீர் பெருக.

ரத்த தானத்துக்கு இருக்கும் விழிப்புஉணர்வு, கருமுட்டை தானத்துக்கு இல்லை என்பது பரிதாபமான உண்மை. பெண்களின் நலன் காக்கத் தனித் துறையே வைத்திருக்கும் மத்திய அரசு, இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவதுதான் அதிர்ச்சி. பல வருடங்களாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஐ.சி.எம்.ஆரின் (இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்) நடைமுறைகளே இதற்குச் சாட்சி.

இங்கு உயிர் விற்பனை!

கருமுட்டை தானம் குறித்து, சட்டம் என்ன சொல்கிறது? வழக்குரைஞர் அஜிதாவிடம் பேசினோம்.

``வாடகைத் தாய் முறையை வணிகமாக்குவதைத் தவறு என்கிறது சட்டம். அதில் வெளிநாட்டவர்கள் வாடகைத் தாயைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள விதிமுறைகள், ஏழைப்பெண்களை ஏமாற்றாமல் இருப்பதற்கான உட்கூறுகள் போன்றவை குறிப்பிடப்​பட்டிருக்கின்றன. அவை எதுவுமே கருமுட்டை தானத்தைப் பற்றியோ, தானம் செய்கிறவர்களைப் பற்றியோ பேசுவதில்லை.

தானம் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையே, குழந்தை பெற்ற பிறகு எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்பதுதான் அடிப்படை ஒப்பந்தம்.

செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சைகளில் எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை, எந்த மருத்துவமனையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. இது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் வருவதில்லை. செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை வழங்கும் பெரும்பாலான மருத்துவமனைகளில், கருமுட்டை சேகரிப்பு வங்கிகள் இருக்கின்றன.

ஒரு பெண்ணுக்குக் கருமுட்டை உற்பத்தியைத் தூண்ட ஹார்மோன் ஊசிகள் போடும்போது, அவை ஒன்றுக்கு மேலான முட்டைகளை உருவாக்கும். கருவாக ஒரு முட்டை போதும். உபரியான முட்டைகளை எடுத்து வைத்துக்கொள்ளும் மருத்துவ மனைகளும் உண்டு'' என்கிறார்.

வழக்குரைஞர் அஜிதாவின் கூற்றை ஆமோதிக்கும் மருத்துவர் மாலாராஜ், அது குறித்து மேலும் விளக்கினார்.

``குழந்தை உருவாக ஒரு முட்டை மட்டுமே தேவை. ஆனால், அதற்கு ஒரு முட்டையை மட்டுமே நம்ப முடியாது. முட்டைகள் நிறைய இருந்தால்தான் சில கருக்களாவது கிடைக்கும். ஏனென்றால், எல்லா கருக்களுமே ஆரோக்கியமாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று கருக்கள் வரை கருப்பையினுள் வைக்கப்படும். பத்து கருக்களாவது கிடைத்தால்தான் அவற்றிலிருந்து ஆரோக்கியமான இரண்டோ, மூன்றோ தேர்ந்தெடுக்க முடியும். குறைந்தது பத்து முட்டைகளாவது வந்தால்தான், அவற்றிலிருந்து தரமான எட்டு கருக்களாவது உருவாக்க முடியும். அவற்றில் அதிகபட்சமாக மூன்று கருக்களைக் கருப்பையில் வைத்துவிட்டு, மீதம் உள்ளவற்றை உறைநிலையில் வைத்துவிடு​வோம்.

ஒருவேளை இந்தச் சிகிச்சையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் குழந்தை கிடைக்கவில்லை என்றால், அடுத்த முறை அதே கருவை உபயோகித்துக்கொள்ள முடியும். அந்த முறையிலேயே குழந்தை கிடைத்துவிட்டால், மிச்சம் இருக்கும் கருவுக்கு, தானம் பெற்ற பெண் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும். அந்தக் கருவை உறையவைக்க மருத்துவமனைக்கு வருடம்தோறும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவார்கள்.

கருவைத் தூக்கிப்போடவோ, அழிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. `உங்களுக்கு இத்தனை கருக்கள் இருக்கின்றன. என்ன செய்யப் போகிறீர்கள்?’ என அவர்களிடமே கேட்போம். சிலர் தனக்கு வேண்டாம், தானம் செய்துவிடுங்கள் என்று சொன்னால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு அவற்றை உபயோகிப்போம். அப்படிச் சொல்லாமல், தனது அடுத்த குழந்தைக்கு அதை உபயோகப்படுத்தச் சொன்னால், இருபது வருடங்களுக்குக்கூட கருவை உறைநிலையில் பாதுகாத்துவைக்க முடியும்.''

இங்கு உயிர் விற்பனை!

சரி... கருமுட்டை தானம் குறித்து அரசும் அக்கறை செலுத்தவில்லை. அதையே சாதகமாக்கிக்கொண்டு கருவாக்க, மருத்துவ​மனைகளும் இதை வியாபாரமாக்கிவிட்டன. இதற்கு என்னதான் தீர்வு?

``கருமுட்டை தானம் கொடுக்கத் தயாராக இருக்கும் பெண்களின் பட்டியல், அநேகமாக எல்லா கருத்தரிப்பு மருத்துவமனைகளிலும் இருக்கிறது. அதில் 18, 19 வயதுப் பெண்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள பெண்களும் அதிகம் இருப்பது தெரியும். இதை அரசு கண்காணிக்க வேண்டும்.

நகரத்தின் பெரிய கருத்தரிப்பு மையங்களாக விளம்பரப்படுத்திக்கொள்ளும் மருத்துவமனை களின் உள்ளே, என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை.

`தானம் கொடுப்பவர்களுக்கு, பணம் கொடுக்கப்பட மாட்டாது' என்ற நிலையைக் கொண்டுவரலாம். நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படும்போதுதான் இதில் போட்டியும் சுரண்டலும் துஷ்பிரயோகமும் ஏமாற்றுதலும் இருக்காது.
உறவினர்கள் மூலம் பெறப்படும் உறுப்பு தானத்துக்கே பல அடுக்கு நடை​முறைகளைக் கடக்கவேண்டியிருக்கிறது. உறவினர் அல்லாது தெரிந்தவர்கள் மூலம் பெறப்படும்போது பணம் எதுவும் பெறப்படவில்லை எனக் கடுமையான சட்டங்கள் இருப்பதுபோல, கருமுட்டை தானத்துக்கும் விற்பனையையும் கள்ளச் சந்தையையும் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்'' என்கிறார் வழக்குரைஞர் அஜிதா.

மருத்துவமனைகள், குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் என்ற பெயரில் ஒரு பக்கம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்​கின்றன. இன்னொரு பக்கம், பணத்தாசை காட்டி அப்பாவிகளைக் கருமுட்டை தான வலைக்குள் வீழ்த்த ஆரம்பித்துள்ளன. எங்கெல்லாம் ஏராளமான பணம் புழங்க ஆரம்பிக்கிறதோ, அங்கெல்லாம் திருட்டுத்தனமும் ஊழல்களும் கருணையற்ற மனோபாவமும் அதிகரிக்கும். அந்தப் பேராசை, தனிமனித உயிரிழப்புகளைக்கூட கண்டுகொள்ளாது. மளமளவென வளர்ந்துவரும் இந்தச் சிகிச்சை முறையை, உடனடியாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டு முறைப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அதை, காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்!

உயிர் பறிபோகும் அபாயம்!

இங்கு உயிர் விற்பனை!


``கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டுவதற்காகக் கொடுக்கப்படும் கொனடோட்ரோஃபின் ஹார்மோன் அளவு கொஞ்சம் அதிகமானாலும், உயிரே பறிபோகும் அபாயம் இருக்கிறது’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ப்ரியா.

``கொனடோட்ரோஃபின் ஹார்மோன் என்பது, முட்டையின் வளர்ச்சிக்கு ஏற்ப 150 மி.லி முதல் அதிகபட்சமாக 300 மி.லி வரை கொடுக்கப்படும். ஐ.யு.ஐ சிகிச்சையில் எத்தனை முட்டைகள் வந்தாலும், அவற்றின் வளர்ச்சி 18 மி.மீ இருக்கிறதா என்பதே முக்கியமாகப் பார்க்கப்படும்.

அதே ஐ.வி.எஃப் சிகிச்சையில் நிறைய முட்டைகள் தேவைப்படும். இந்தச் சிகிச்சையில் முட்டைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் அதிக அளவில் கொன​டோட்ரோஃபின் கொடுக்கப்படும். அப்படிக் கொடுக்கும்போது ஸ்கேன் செய்து ஹார்மோன் அளவுகளைச் சரிபார்க்க வேண்டும். ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருந்தாலோ, நிறைய முட்டைகள் இருந்தாலோ, அதற்கு முன்னர் `ஓ.ஹெச்.எஸ்' எனப்படும் ஓவேரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் (OHS)பிரச்னை வந்திருந்தாலோ... ஹார்மோன் கொடுப்பதைப் பற்றி மருத்துவர் யோசிப்பார்.

இங்கு உயிர் விற்பனை!

18 மி.மீ அளவுக்கு வளர்ந்ததும் அந்த முட்டை உடைய வேண்டும். அதற்காக ஹெச்.சி.ஜி ஹார்மோன் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் முட்டை உடைந்து உள்ளிருந்து திரவம் வெளியே வரும். அதைத்தான் `கருமுட்டை வெளிப்படுதல்' (ஓவுலேஷன்) என்கிறோம். பெண்களுக்கு மாதம்தோறும் நடக்கும் செயல் இது. ஓ.ஹெச்.எஸ் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தால், ஹெச்.சி.ஜி-யை நிறுத்த வேண்டும். ஓ.ஹெச்.எஸ் வந்துவிட்டால் கடுமையான வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டு மரணம்கூட நிகழலாம்.

இதில் இளம் வயதுப் பெண்களுக்கு ரிஸ்க் அதிகம். திருமணம் ஆகாத பெண்கள், கருமுட்டை தானம் செய்வதைத் தவிர்ப்பதே பாதுகாப்பு. திருமணம் ஆன இளம் பெண்கள் கருமுட்டை தானம் செய்யும்போது அவர்களுக்கு தினசரி சோதனைகள் செய்யப்படுகின்றனவா, ஹார்மோன் அளவு கண்காணிக்கப்​படுகிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்'' என எச்சரிக்கிறார் மகப்பேறு மருத்துவர் ப்ரியா.

ஷாக் டேட்டா

* இடைத்தரகர்களாக இருப்பவர்களில் பலர், இதற்கு முன்பு கருமுட்டை தானம் செய்தவர்களே. இவர்களை `இடைத்தரகர்கள்' என்று அழைப்பதைவிடவும் `ஆள்பிடிப்பவர்கள்' என்று அழைப்பதே பொருந்தும். இவர்கள் மூலம் கருமுட்டை தானம் செய்பவர்களுக்கு 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கிடைக்கிறது.

* `கருமுட்டை தானம் செய்யத் தயாராகும் பெண், 21 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்’ என்கிறது ஐ.சி.எம்.ஆர் கைடுலைன். ஆனால், 30 வயதுக்குள் உள்ள பெண்களைத்தான் வலைவீசித் தேடிப் பிடிக்​கிறார்கள் தரகர்கள். ஆனால், இளவயதுப் பெண்​களுக்குத்​தான் ஓவேரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் (கர்ப்பப்பையில் வீக்கமும் வலியும் அதிகமாவது) பிரச்னையின் தீவிரம் அதிகம். இது மூளைச் செயலிழப்பு முதல் நுரையீரல் செயலிழப்பு வரை உண்டாக்கி, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது.

* தரகர்களாகச் செயல்படும் பெண்கள், பெரும்பாலும் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். பெண்கள் அதிகம் புழங்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், குடிசைப் பகுதிகளில் வாழும் பெண்கள், ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் போன்றோரே இவர்களது இலக்கு.

* திருமணம் ஆனவர்கள் மட்டுமே கருமுட்டை தானம் செய்யத் தகுதியானவர்கள். ஆனால், தரகர்களின் வலையில் சிக்குபவர்களில் கல்லூரிப் பெண்களும் அடக்கம். பாக்கெட் மணிக்காக கருமுட்டை தானம் செய்ய முன்வரும் கல்லூரிப் பெண்களின் எண்ணிக்கையில், மும்பைக்கு அடுத்த இடம் சென்னைக்கு.

* பணத்துக்கு ஆசைப்பட்டு, குழந்தை இல்லாத பெண்களும் கருமுட்டை தானம் செய்கிறார்கள். முட்டை இருப்பு என்பது, ஒரு பெண் கருவாக உருவாகும்போதே தீர்மானிக்கப்படுவது. தனக்கு மிஞ்சியே தானம் என்ற உண்மை புரியாமல் தொடர்ந்து கருமுட்டைகளைக் காசாக்கிக்கொண்டிருந்தால், முட்டையின் இருப்பு மொத்தமாகக் காலியாகி, பின்னாளில் அவர்களுக்கே முட்டை தானம் தேவைப்படலாம்.

* திருமணமாகி, குழந்தை பெற்ற இளம் பெண்களுக்குக் கிராக்கி அதிகம். காரணம், அவர்களுக்குக் கருமுட்டை நிச்சயம் இருக்கும் என்பதற்கான உத்த​ரவாதம்தான்.

* ஹார்மோன் மருந்தின் தூண்டுதலால், 8 முதல் 12 முட்டைகள் வரை பல்கிப்பெருகும். சிலருக்கு, அது 18 வரை இருக்கலாம். அரிதாக, 20 முட்டைகள் வரைகூட எடுப்பது உண்டு. எத்தனை முட்டைகள் எடுக்கப்படுகின்றன, அவற்றில் எத்தனை கருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எந்தக் கணக்கும் கண்காணிப்பும் கிடையாது. எனவே, உபரி முட்டைகள் அத்தனையும் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன.

* அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், ஒரு பெண்ணுக்கு 20-க்கும் மேலான முட்டைகள் உருவானது தெரிந்தாலோ, ஹார்மோன் அளவு அதிகமாக இருப்பது தெரிந்தாலோ, அவர்கள் உடனடியாக அடுத்த மாதமே கருமுட்டை தானம் செய்யக் கூடாது என மருத்துவத் துறை எச்சரிக்கிறது. ஆனால், நம் ஊரைப் பொறுத்தவரை அப்படி ஒரு பெண் எச்சரிக்கப்பட்டால், இன்னொரு மருத்துவமனை அடுத்த மாதமே அவரிடம் இருந்து முட்டைகளை உறிஞ்சி எடுக்கத் தயாராகிறது.

* தாங்கள் விரும்பும் நிறத்தில், உயரத்தில் குழந்தை பெற விரும்பும் தம்பதியர், தங்களது தேவைகளைக் குறிப்பிட்டு, அதற்கு ஏற்ற டோனர்களைத் தேடுவதும் நடக்கிறது. அதேபோல வெளிநாடுவாழ் மக்களுக்கும், இந்தியாவிலிருந்து கருமுட்டை விற்பனை அமோகமாக நடக்கிறது.

* அம்மா அல்லது அப்பாவின் சாயல் கொஞ்சமாவது வேண்டும் என்பதால், அப்படிப்பட்ட சாயலில் உள்ள டோனர் பெண்களைத் தேடும் வேலையும் நடக்கிறது. இதற்காக தானம் கொடுக்கும் பெண்களின் புகைப்படங்கள், தானம் பெறுகிறவர்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாகக் காட்டப்படுகிறது.