Published:Updated:

“பெண்களால் இயங்குகிறது என் உலகம்!”

“பெண்களால் இயங்குகிறது என் உலகம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பெண்களால் இயங்குகிறது என் உலகம்!”

“பெண்களால் இயங்குகிறது என் உலகம்!”

“பெண்களால் இயங்குகிறது என் உலகம்!”

`உலகம், பெண்களால் இயங்குகிறது!' என ஒரு கவிதை உண்டு. அதுதான் சத்தியம்.பெண்களின் மலர் சிரிப்பும், கனிவான பேச்சும், தாயன்பும், அழுகையைச் சுமக்கும் இதயமும், அரவணைப்பும், தீர்க்கதரிசனமும், தெளிவான திட்டமிடலும், பொய்க் கோபமும், பாசக் கொஞ்சலும், சுவாசக்காற்றும்தான் உலகத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

அம்மா ராஜேஸ்வரி - என் உலகத்தின் முதல் மனுஷி.

நாங்கள் மிடில் க்ளாஸ் குடும்பம். ஆனால், ஒரு ராஜகுமாரனைப்போல என்னைப் பராமரிப்பாள். `கென்னி...' என அம்மாவின் குரல் கேட்ட மறுவிநாடி, `மம்மீ...' என ஓடுவேன். என்னை எதற்காகவும் ஏங்கவிட்டதில்லை அம்மா. என்ன கேட்டாலும் தருவாள். எனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

உலகத்தில் எதெல்லாம் பெஸ்ட்டோ, அதெல்லாம் எனக்குக் கிடைக்க வேண்டும் எனத் துடிப்பாள். உணவு, உடை, கல்வி எனப் பார்த்துப் பார்த்துச் செய்வாள். ஊட்டியில் மான்ட் ஃபோர்ட் பள்ளிக்கு, குட்டிப்பையனான என்னைப் படிக்க அனுப்பிய அம்மா, வருமானம் போதவில்லை என்ற நிலையில் எங்களுக்காக வெளிநாடு போய் வேலை பார்த்தவள். ஹாஸ்டலில்தான் தங்கிப் படித்தேன்.

விடுமுறையில் என்னைப் பார்க்க அம்மா வருவாள். தகவல் தெரிந்து ஓடோடிச் செல்வேன். தூரத்தில் ஒரு பைன் மரத்தடியில், வானத்திலிருந்து இறங்கிய தேவதைபோல அம்மா நின்றிருக்கும் கோலம், அப்படியே கலையாத ஒரு சித்திரமாக இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது.

`கென்னி, ராஜா, டார்லிங், செல்லம்...' என என்னைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வழிய முத்தமிடுவாள். காற்றில் ஊஞ்சலாட்டுவாள். பெட்டி நிறையப் பரிசுகள் தருவாள். ச்சோ ஸ்வீட் அம்மா!

அனிதா - என் தங்கை. `கென்னி அண்ணா... கென்னி அண்ணா..!' என, என்னையே சுற்றிச் சுற்றி வருவாள். என்னோடு விளையாடுவாள். எங்கே வெளியே போனாலும் என் விரல்களைப் பற்றிக்கொண்டு வந்த குட்டி சிண்ட்ரெல்லா. ஜுரத்தில் நான் படுத்திருந்தால், `நான் உனக்காக ப்ரே பண்ணட்டுமாண்ணா?' என, கடவுளிடம் கெஞ்சிய குட்டிப் பெண்.

என் பொருளை யாராவது தொட்டால், `ம்... இது எங்க அண்ணாவுது!' எனப் பத்திரப்படுத்திய அன்புத் தங்கச்சி. ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் இரண்டு குட்டிப் பையன்கள் வருவார்களே, அவர்கள் என் தங்கை அனிதாவின் வாரிசுகள்.

“பெண்களால் இயங்குகிறது என் உலகம்!”

பேபி ஜான்சன் - என் பள்ளியில் ஓர் ஆசிரியை. அம்மாவுக்கு அடுத்து நான் ரசித்த பெண். நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம். யாரோ ஒரு பையன் என்னை அடித்தான். பதிலுக்கு அவனை நான் அடிக்கும்போது பார்த்துவிட்டார் பேபி. `யூ பேட் பாய்!' என, சன்னமான குரலில் திட்டினார். `நோ மிஸ்... ஐ யம் எ குட் பாய்!' எனச் சொல்லத் துடித்தேன். வார்த்தை வராமல், கண்ணீர்தான் வழிந்தது. மனம் பொறுக்கவில்லை. எப்படியாவது அவரிடம் நல்லபெயர் வாங்கிவிட வேண்டும் என்று, தினமும் அவர் எதிர்ப்படும்போதெல்லாம் நான்கைந்து `குட்மார்னிங் மிஸ்' சொல்வேன்.

எந்நேரமும் மனதுக்குள் ஏதோ ஒரு மியூஸிக் ஓட, முகத்தில் ஒரு தேஜஸ் ஒளிர உலா வருவார் டீச்சர். பிறகு, அவர் மனதில் மெள்ள இடம்பிடித்தேன். அவர் என்னை எப்போதாவது கடக்கும்போது, செல்லமாக என் தலையைக் கலைப்பார். பரவசமாக நிற்பேன். `பெரியவன் ஆனதும், பேபி மிஸ்ஸைக் கல்யாணம் பண்ணணும்' என அப்போதே விரும்பினேன். ஆனால், யாரோ ஒருவரை அவர் கல்யாணம் செய்துகொண்டு வந்து நின்றபோது, அதிர்ச்சியாகிவிட்டேன்.

`எனக்காக வெயிட் பண்ணாம, நீங்க இன்னொரு ஆளை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கலாம்?' எனக் கேட்டுவிடலாமா என்கிற அளவுக்குக் கோபம். வாழ்வில் வானவில்களாக வந்து போகும் பட்டாம்பூச்சிப் பெண்களின் முதல் வரிசையில், நம் எல்லோருக்கும் அப்படி ஒரு ப்ரியமான டீச்சர் இருப்பார்தானே... எனக்கு பேபி!

ரேகா
- நான் காதல்வயப்பட்ட முதல் ஏஞ்சல்.

பெரிய கண்ணாடி, ரகளையான கூந்தல், பற்களுக்கு க்ளிப்ஸ் வேறு போட்டிருப்பாள்.

அது என்னவோ தெரியாது, அவளை அவ்வளவு பிடிக்கும். திடீரென ஒருநாள், கண்ணாடியைக் காணோம். க்ளிப்ஸ் இல்லை. கிராப் வெட்டிக்கொண்டு செம ஸ்டைலாக வந்து நின்றாள். குபுக்கென காதல் பொங்கிவிட்டது.

ரேகாவுக்கு ஆசை ஆசையாக ஒரு கடிதம் எழுதினேன். முதல் காதல் கடிதம்.

குளிர் கொஞ்சும் ஒரு மாலை நேரத்தில் ரேகாவின் முன் போய் நின்றேன்.

ஒரு மேகம்போல என்னைக் கடந்தவள், ஒரு கணம் நின்று `என்ன?' என்பதுபோல் பார்த்தாள். இதயம் படபடக்க, கடிதம் நீட்டினேன். வாசித்த வேகத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டாள். ``நோ... நோ இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. ஐ வான்ட் டு ஸ்டடி!'' என்று போயே போனாள். காதலித்தால் படிப்பு வராதா அல்லது என் மேல் காதலே வரவில்லையா?

ரேகா இப்போது எங்கே இருக்கிறாள், தெரியாது! ஆனால், `ஐ லவ் யூ ரேகா!' என நான் கை நடுங்க எழுதிய அந்த முதல் கடிதம் இன்னும் இருக்கிறது என் பழைய பெட்டிக்குள்.

“பெண்களால் இயங்குகிறது என் உலகம்!”

பிஜுவை நான் சந்தித்தது, பிரிட்டிஷ் கவுன்சிலில்.

சென்னையில் லயோலாவில் படிக்க வந்த பிறகு, நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிரிட்டிஷ் கவுன்சிலுக்காக அப்படி ஒரு நாடகத்தில் நடிக்கப் போயிருந்தபோது என் முதல் ஹீரோயினாக வந்தவர் பிஜு, `ஹாய் ஐ யம் கென்னி' எனப் பேச ஆரம்பித்தேன். அடுத்த மூன்றாவது நிமிடம், அவர் போலீஸ் டி.ஜி.பி மோகன்தாஸின் மகள் எனத் தெரிய வர, அவசரமாக விலகி அமர்ந்தேன். பிஜி சிரித்தார். ஒரு நட்பு வளர்ந்தது. பிஜுவின் சகோதரி பீனா அறிமுகமானார். அப்படியே அவர்களின் தோழிகளும் எனக்குத் தோழிகளாக, நட்புவட்டம் வளர்ந்தது. பிஜு, என் முதல் ஹீரோயின்.

எதிர்பாராமல் நடப்பதற்குப் பெயர்தானே விபத்து! எனக்கோ எழுந்து நடக்கவே முடியாமல் செய்தது ஒரு விபத்து.

ஒரு நாடகத்தை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பும்போது, நள்ளிரவு நேரத்தில் சைதாப்பேட்டை பாலத்தின் அருகே மிக மோசமாக ஒரு விபத்தில் சிக்கினேன். வலது கால் எலும்புகள் நொறுங்கின.

அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவர் நம்பிக்கை இல்லாமல், உதடுகளைப் பிதுக்கிவிட்டார். ``காலை வெட்டினால்தான் ஆளைக் காப்பாற்ற முடியும்'' என்றார். அதுவரை சாதாரணமாக இருந்த அம்மா, அன்றுதான் வானத்துக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்தாள்.

இரவோடு இரவாக, விஜயா மருத்துவ​மனையில் என்னைச் சேர்த்தாள். நினைவு, தப்பித் தப்பி வரும். எப்போது கண் விழித்தாலும் வாசற்கதவு அருகே அசையாமல் நின்றிருப்பாள்.

என் சிகிச்சைக்காக எங்கே பணம் புரட்டினார்; அப்பாவை, தம்பியை, தங்கையை எப்படிக் கவனித்தார்; வேலைக்கு எப்படிப் போய் வந்தார். எதுவுமே எனக்குத் தெரியாது. இரவும் பகலும் எனக்காகவே இருந்தார் அம்மா. எனக்கு, சத்து வேண்டும் என எல்லா வேளைகளிலும் சிக்கன் சமைத்துத் தருவார். என் தலை கோதியபடியே விழித்திருப்பார். ``இன்னும் ஒரே மாசம். நீ மெரினா பீச்ல ஜாலியா ஓடலாம்!'' என்று நம்பிக்கை தருவார்.

விஜயா மருத்துவமனை நர்ஸ்கள் - என்னைத் தங்கள் அண்ணனாக, தம்பியாக, நண்பனாக குழந்தையாகப் பார்த்துக்கொண்ட தாய்கள். எனக்கெனச் சாப்பாடு எடுத்து வருவார்கள். ஏதேதோ கோயில் பிரசாதங்கள் தருவார்கள். தலைமாட்டில் அமர்ந்து பைபிள் வாசிப்பார்கள். குளிப்பாட்டுவார்கள். நகம் வெட்டிவிடுவார்கள். தங்களின் துயரங்களை, சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். என் அறை முழுக்க அவர்கள் தந்த கிரீட்டிங் கார்டுகளை ஒட்டிவைத்திருப்பேன். எனக்கு இன்னொரு முறை உயிர் தந்த தேவதைகள்.

“பெண்களால் இயங்குகிறது என் உலகம்!”

ஷைலா - என் காதல் மனைவி.

`விக்ரமின் மனைவி' என அவள் அறிமுகமானதைவிட, நான் `ஷைலாவின் கணவன்' என அறிமுகமான இடங்கள்... என்னை உலுக்கியெடுத்த உருக்கமான கணங்கள்.

என் வாழ்வின் வரம்... என் உயிரின் உரம். எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதைவிட, எனக்கு எது நல்லது எனப் பார்த்துப் பார்த்துச் செய்பவள்.

இத்தனை வெற்றிகளுக்குப் பிறகும், பணம், புகழ் பார்த்த பிறகும் இன்னமும் நாங்கள் மிகச் சாதாரணமான எளிமையான வாழ்வு வாழ ஒரே காரணம், ஷைலா.

நான் எந்த அடையாளமும் இல்லாமல், சாதாரணமாக இருந்தபோது, என்னை எனக்காக மட்டுமே நேசித்தவள்.

என் எல்லா துயரங்களையும் பார்த்த சாட்சி. என் தாய்க்குப் பிறகு என்னைச் சுமந்த தோள்கள்.

சிறகடிக்க வானம் கிடைக்காமல், என் நெஞ்சுக்கூட்டுக்குள்ளேயே கனவுப் பறவைகள் தவித்துக் கிடந்தபோது, என் கண்ணீர் இரவுகளை உலர்த்திய தென்றல் ஷைலா. ஆசீர்வாதம் என்பது, நல்ல உறவுகள் அமைவதுதான்.

எங்கள் வீட்டு வாசலில், யாரோ பாவப்பட்ட ஒரு பெண் தன் கண்களைக் கசக்கிக்கொண்டு நிற்பாள். பக்கத்தில் இறுக்கமாக ஓர் ஆள் தலை குனிந்து நிற்பார். ஷைலா, இருவருக்கும் காபி தருவாள்; சாப்பாடு போடுவாள்; அவர்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்வாள். திடீரென மூவரும் சிரிப்பார்கள். `என்னப்பா, சுபம் போட்டாச்சா?' என எட்டிப்பார்த்துக் கேட்பேன். சிரிப்பாள். நான்கைந்து நாள்களுக்குப் பிறகு, அதே கணவன் - மனைவி இருவரும் ஒரு புது சைக்கிளுடன் வாசலில் வந்து நிற்பார்கள். மாங்காடு கோயில் பிரசாதத்துடன்.

இப்படி யார் யாரோ என்னைப் பார்த்து, ``அம்மா புண்ணியத்தில் நாங்க நல்லா இருக்கோம்'' என கைகூப்பும்போது, `ஷைலாவின் கணவனாக' சிலிர்த்து நிற்பேன்.

எவ்வளவோ பேருக்கு உதவிகள் செய்வாள். அதில் பாதி எனக்கே தெரியாது. ஏழை மாணவர்களுக்கு ஸ்கூல் ஃபீஸ், நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான செலவுகள் என ஏதாவது செய்துகொண்டே இருப்பாள்.

நான் யாருக்குப் பரிசு தருவதாக இருந்தாலும், அது பெரும்பாலும் வாசனைத் திரவியமாக இருக்கும். ஆனால் ஷைலாவோ, அவர்களுக்கு எது பிடிக்கும், என்ன தேவை என்பதைத் தெரிந்து செய்வாள். நான் ஷைலாவிடம் கற்ற பாடங்களில் ஒன்று இது.

சிரமம், சிக்கல், துயரம் என யார் வந்து நின்றாலும், ஷைலா அவர்களுக்காகப் பேசுவாள்; ஆறுதல் சொல்வாள்; ஆதரவு தருவாள். மனநோயாளிகள், போதைக்கு அடிமையானவர்கள் என எத்தனையோ பேரை `கவுன்சலிங்' மூலம் நல்வழிப்படுத்துபவள்.

இப்போதும் ஷைலா சர்வசாதாரணமாக ஆட்டோவில் போய் வருவாள். குழந்தைகளை அழைத்துக்கொண்டு நடந்தே ஷாப்பிங் போவாள். பல வருடங்களாக பழைய ஷூ ஒன்றை அணிந்து வாக்கிங் போகிறாளே என, சமீபத்தில் நான் வெளிநாடு போய்த் திரும்பியபோது, புது ஷூ ஒன்றை வாங்கி வந்தேன். ஆசையாக வாங்கியவள், அதே வேகத்தில் `வேண்டாம்' என வைத்துவிட்டாள். `இது ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே... எனக்கு வேணாம்!' என்றாள். அந்த எளிமைதான் ஷைலாவின் அழகும் அடையாளமும்.

மாலா - என் சிநேகிதி.

இந்த உலகத்தின் சூப்பர் மேன் யார் எனக் கேளுங்கள், என் பெயரைத்தான் சொல்வாள். எம்.ஜி.ஆரைவிட பெரிய ஆளாகத்தான் என்னைப் பார்ப்பாள். வரிசையாக ஒரு படமும் ஓடாத காலத்திலும், ``நீ சூப்பரா பண்ணியிருந்தே. ஆனா, அந்த டைரக்டர்தான் சொதப்பிட்டான்... ச்சே!' என, எங்கேயும் எப்போதும் என்னை விட்டுத்தர மாட்டாள். எனக்கு குளூகோஸ், ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்ப்ளான் என எல்லாமே மாலாதான்.

டயானா
- என் வாழ்நாளில் நான் ஒருபோதும் சந்தித்திடாத, இனி எப்போதும் சந்திக்க இயலாத பேரெழில் பெண். இந்த உலகத்தின் கேமராக்கள் அதிகம் கண்விழித்தது அவர் முகத்தில்தான். அவரைச் சாகடித்ததும் அதே கேமராக்கள்தான்.

“பெண்களால் இயங்குகிறது என் உலகம்!”

எங்கேயோ பிறந்த பெண்ணை, இங்கிலாந்து தேசத்தின் இளவரசியாக்கியது ஒரு காதல். ஏதோ ஓர் இரவில் அவர் உயிர் குடித்தது இன்னொரு காதல். எல்லா தேவதைக் கதைகளும் `அதன் பிறகு அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்' என்றே முடியும். அப்படி நான் மிகவும் நேசித்து வாசித்த கதைகளில், என்னைப் பாதித்த, அவலமாக முடிந்துபோன துயரக் கதை... டயானா.

அவரைக் காதலித்து மணந்து, பிறகு ஒருநாள் பிரிந்தும்போன இளவரசர் சார்லஸ், சென்ற வாரம் தன் இன்னொரு காதலியை இத்தனை வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்ட தகவல் பார்த்தேன். அங்கேயும் ஒரு பெண்.

மேரியம்மா - எங்கள் வீட்டைப் பராமரிப்பவர். சுத்தம், விசுவாசம், உழைப்பு என, தமிழின் எல்லா நல்லா வார்த்தைகளுக்கும் ஓர் உதாரணமாக மேரியம்மாவைச் சொல்லலாம். ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில், `மேரிம்மா... என் பாஸ்போர்ட் எங்கே?' எனக் கத்துவேன். அடுத்த விநாடியே பாஸ்போர்ட்டுடன் எதிரில் நிற்பார். `அன்னிக்கு இங்கே எங்கேயோ ஒரு பேப்பர் வெச்சிருந்தேன். காணோம்' என்றால், பாதுகாப்பாக பீரோவுக்குள் வைத்திருந்ததை எடுத்து தருவார்.

நாங்கள் பொருளாதாரச் சிரமத்திலிருந்த காலத்தில், பல மாதங்கள் மேரியம்மாவுக்குச் சம்பளம்கூடத் தந்ததில்லை. ஒருபோதும் அவர் அதைக் கேட்டதுமில்லை. அதையெல்லாம்விட, ஒருநாள் வீட்டில் நயா பைசா இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் நானும் ஷைலாவும் உட்கார்ந்திருந்தோம். விறுவிறுவென வெளியே போன மேரியம்மா, பத்தே நிமிடங்களில் ஓட்டமும் நடையுமாகத் திரும்பி வந்தார். தன் வீட்டு உண்டியலில் இருந்து அவர் 500 ரூபாய் பணம் கொண்டுவந்து கொடுத்தபோது, நாங்கள் நெகிழ்ந்து நின்றதை இன்னும் மறக்க முடியாது. ஆனால், `அது ஒரு விஷயமே அல்ல!' என்பதுபோல, மறுவிநாடியே அவர் வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். அதுதான் மேரியம்மா. இப்போது மேரியம்மாவுக்காக ஒரு வீடு கட்டித் தர வேண்டும் என ஷைலா இடம் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

சமீபத்தில் என்னை உலுக்கியது, பார்வையற்ற தன் குழந்தைகளுக்கு தன் விழிகள் தர விரும்பி, தற்கொலை செய்துகொண்ட ஒரு தாய் பற்றிய செய்தி. ஏழ்மையோ, அறியாமையோ இல்லை இன்னும் வேறென்ன காரணமோ, அத்தனையும் மீறி நம் முகத்தில் அறைவது... தாய்மை. இல்லாதவர்கள் வீட்டில் ஈரச்சேலையை இறுக்கிக் கட்டிக்கொண்டு, தன் உணவையும் பிள்ளைகளுக்குத் தந்துவிடும் தாய்களை நான் அறிவேன். இதோ, உயிரையே ஒரு தாய் தந்துவிட்டாள். ஒரு வரிச் செய்தியாக நாம் அதைக் கடந்துபோய்விடலாம். ஆனால், அந்தச் செய்தியின் பின்னால் இருக்கும் ஓர் ஏழைத் தாயின் பெரும் சோகத்தை, பேரன்பை யார் அறிவார்?

அக்‌ஷிதா - என் குட்டிப் பெண்.

ஷைலா என் உயிர் சுமப்பதை, பக்கத்தில் இருந்து பார்த்த ஒவ்வொரு கணமும், ஓர் அழகான கனவுபோலிருக்கிறது. `அது ஆண் குழந்தையாக இருக்காதா!' என ஏங்கியவன் நான். ஆமாம், என் பையனும் நானும் எப்படியெல்லாம் விளையாடுவோம் என்பது வரை கற்பனை செய்து வைத்திருந்தேன்.

பிரசவ தினம். `கங்கிராஜுலேஷன்ஸ். இட்ஸ் எ ஸ்வீட் லிட்டில் ஏஞ்சல்!' எனத் தகவல் சொன்னதும், சின்ன ஏமாற்றத்துடன்தான் உள்ளே போனேன். இப்போது நினைத்தால், அதற்காக வெட்கப்படுகிறேன். காரணம், அக்‌ஷிதாவின் முதல் தரிசனம்.

உள்ளங்கைக்குள் உறங்கவைக்கலாம். அவ்வளவு சிறிய உயிராக இருந்தாள். ஒரு கரம் குவித்து அள்ளியதும், ஒரு தீபம்போல ஒளிர்ந்தாள். பஞ்சு மேனி, பிஞ்சு விரல்கள், சின்ன விழிகள், மெலிதான உதடுகள், அழுகைச் சங்கீதம்... என ஓர் உயிரோவியத்தை ஏந்தி நின்றேன்.

இந்தப் பிரபஞ்சம் எனக்கு அளித்த மிகச் சிறந்த பரிசு... அக்‌ஷிதா!

அவளின் அன்பில், என் தாயைத் தரிசிப்பேன். இத்தனை சின்ன வயதில் அவள் கடைப்பிடிக்கும் ஒழுங்கில், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில், என் மனைவியைப் பார்ப்பேன். என் விரல் பற்றி அவள் வீதியில் இறங்கும்போது, என் சகோதரியை நினைவுபடுத்துவாள். ``வாட்ப்பா, இந்த ஷர்ட் உனக்கு நல்லாவே இல்லை'' என்று அவள் என்னைச் செல்லமாகத் திருத்தும்போது, என் சிநேகிதிகளில் ஒருத்தியாக மலர்வாள். ``அச்சச்சோ... இந்த நாய்க்குட்டி மழையில நனைஞ்சிருச்சே... ப்ப்பாவம்!'' என்று ஒரு டவலுடன் அதைக் கையில் அள்ளும்போது... தெய்வங்களையும்.

இப்போது சொல்லுங்கள்... உலகம் இயங்குவது எதனால்?

- ரா.கண்ணன்

படங்கள்: கே.ராஜசேகரன்

17-4-2005, 24-4-2005 தேதிகளிட்ட இதழ்களிலிருந்து...