Published:Updated:

அறத்தோடு ஆட்சி செய்யுங்கள்!

அறத்தோடு ஆட்சி செய்யுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அறத்தோடு ஆட்சி செய்யுங்கள்!

அறத்தோடு ஆட்சி செய்யுங்கள்!

மிழக அரசின் போக்கு கவலையளிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை பெறுகிறார்கள். `வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கிக் குவித்தார்’ என, உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட  பிறகும், `ஜெயலலிதாவின் ஆட்சி இங்கு தொடர்ந்து நடைபெறுகிறது’ என, முதலமைச்சர் தொடங்கி அத்தனை அமைச்சர்களும் நாள் தவறாமல் சொல்லிவருகிறார்கள்.

இதில் அவர்களுக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால், தமிழக மக்களுக்கு இது பெருமைக்குரியதா? குற்றவாளிகள் `கெளரவிக்கப்படுவதில்' தமிழகம் முன்மாதிரியாகத் திகழ இடம் கொடுத்துவிடக் கூடாது.
 
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வீரமாகக் கிளம்பி டெல்லிக்குப் போன தமிழக முதலமைச்சர், நூறு விஷயங்களில் இதையும் ஒரு விஷயமாகப் பேசிவிட்டு, மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, அவர்கள் முன்வைத்த யோசனைகளுக்கும் திட்டங்களுக்கும் தலையாட்டிவிட்டு வந்திருக்கும் வேகத்தைப் பார்த்தால், `இது மடியில் கனம் இருக்கும் அரசோ?’ என்ற சந்தேகம் எழுகிறது.

ஒருபுறம் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை... இன்னொருபுறம் ஆளும் கட்சிக்குத் தலைமை ஏற்றிருக்கும்

அறத்தோடு ஆட்சி செய்யுங்கள்!

புதிய அதிகார மையம்,  நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தன்னை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் செய்யவேண்டிய நன்றிக்கடன், நிர்பந்தம் கொடுக்கும் மத்திய அரசு... என இப்படி நான்கு திசைகளில் இருந்தும் தமிழக அரசுக்கு வரும் அழுத்தங்களைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இந்தமாதிரி சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், `அ.தி.மு.க அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படாமல் தேக்க நிலையில் உள்ளன. பாலங்கள், சாலைகள், குடிநீர்த் திட்டங்கள், அரசு அலுவலகக் கட்டடங்கள் என அனைத்து வகைத் திட்டங்களும் நிதிப் பற்றாக்குறையால் ஒருபுறமும், ஊழல்களால் இன்னொருபுறமும் திணறிவருகின்றன. அரசின் திட்டங்களை நிறைவேற்ற கோரப்படும் ஒப்பந்தங்களில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை. இணையம் மூலம் போடப்படும் ஒப்பந்தங்களில்கூட புதுவகையான நிபந்தனைகளைப் புகுத்தி, புதிய சான்றிதழ் பதிவுசெய்ய வேண்டும் என்றெல்லாம் காரணம்காட்டி,
ஆளும் கட்சி தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒப்பந்தங்களை வழங்குகிறது' என்று கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

பொதுவாக எதிர்க்கட்சி என்றாலே, அரசைக் குற்றம் சாட்டுவது இயல்புதான். ஆனால், யார் விமர்சனம் செய்தாலும், அதில் உள்ள நியாயங்களை உணர்ந்துகொள்வதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு.

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை... உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் இணையம் மூலமான ஒப்பந்தங்கள் நூறு சதவிகித வெளிப்படைத்தன்மையோடு நடத்தப்பட வேண்டும்.

வாக்களித்த மக்களை ஏமாற்றாமல், இருக்கிற வரை சம்பாதிப்போம் என்று கருதாமல்,  இருக்கிற வரை மக்களுக்கு நல்லது செய்வோம் என்ற அறத்தோடு இந்த ஆட்சி செயல்படட்டும்.

அரசியல்வாதிகளே, அதிகார வர்க்கமே... ஒன்று கவனம் இருக்கட்டும். இது எல்லோருக்கும் பழகிய பழைய தமிழகம் இல்லை; போராடக் கற்றுக்கொண்டுவிட்ட புத்தம்புதுத் தமிழகம்!