Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 26

ஆண்பால் பெண்பால் அன்பால் - 26
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 26

#MakeNewBondsகவிதா முரளிதரன் - படங்கள்: அருண்டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 26

#MakeNewBondsகவிதா முரளிதரன் - படங்கள்: அருண்டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 26
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 26
ஆண்பால் பெண்பால் அன்பால் - 26

சிரித்தால் கண்கள் ஒளிரும் ஹரிணியோடு நான் எப்போதும் நெருக்கமாகப் பழகியதில்லை. இருந்தும் ஹரிணியை மறக்கவே முடியாது. பள்ளியில் நான் பார்த்து வியந்தவள். பள்ளியில் நடைபெறும் கலாசார விழாக்களில் அவள் நட்சத்திரமாக மிளிர்வாள். படிப்பிலும் அப்படியே. அந்தப் பள்ளியிலிருந்து எவராவது பின்னாளில் பிரகாசிப்பார்கள் என்றால், அது ஹரிணியாகத்தான் இருக்கும் என உறுதியாக நம்பினேன்.

கால ஓட்டங்களில் வெவ்வேறான பாதைகளுக்குள் நுழைந்து, கிட்டத்தட்ட காணாமல்போன பள்ளித் தோழிகளில் கொஞ்சம் பேர் முகநூல் வழியே இணைந்து, சில வருடங்களுக்கு முன்பு சந்தித்தோம்.

மிக இனிமையான அந்தச் சந்திப்பில், சந்தியாதான் ஹரிணியை நினைவூட்டினாள்.

“ஞாபகம் இருக்கா உனக்கு?” என்றாள்.

``நிறைய பேரை நினைவில்லை. ஆனால், ஹரிணியை மறக்க முடியுமா? எப்படி இருக்கிறாள்?'' என்று கேட்டபோது, சந்தியா சொன்ன பதில் என்னை நிலைகுலையவைத்தது. ``திருமணமாகி வெளிநாட்டில் வசித்துவந்த ஹரிணி, எந்தக் காரணமும் இல்லாமல் ஒருநாள் இறந்துவிட்டாள். சோபாவில் உட்கார்ந்த நிலையில் இறந்திருக்கிறாள். அவளது அப்பா அம்மாவுக்கு அவளின் மரணம் குறித்து சந்தேகம் இருக்கிறது. ஆனால், ஆதாரம் இல்லை” என்று சந்தியா சொன்னாள். ஹரிணியின் கண் ஒளிரும் புன்னகையும் முகம் அறியாத அவளது பெற்றோரின் துயரமும் சில நாள்களுக்கு என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன.

வெவ்வேறான ஆர்வங்களும் ரசனைகளும் கொண்டவளாகத்தான் ஹரிணியை நினைவு வைத்திருக்கிறேன். எதைத் தேடித் தோற்றுப் போயிருப்பாள்? இறக்கும் தறுவாயில், அவளது தோல்வியாக அல்லது வெற்றியாக எதை நினைத்திருப்பாள்?

`ஒருநாள் உன்னைப்போல் ஒரு கவிஞனைத் திருமணம் செய்வேன். பிறகு, வேறொரு நாளில் தற்கொலை செய்துகொள்வேன்' என நண்பனிடம் சொன்ன சில்வியா பிளாத், பின்னர் அதேபோல செய்துகொண்டது... அவளது தோல்வியா, வெற்றியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்பால் பெண்பால் அன்பால் - 26

ஒரு நபரின் ஆளுமையைச் செழுமைப்படுத்தவோ சிதைக்கவோ செய்யும் வல்லமை, கூடவே பயணிக்கும் இன்னொரு நபருக்கு நிச்சயம் உண்டு. சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் அதிகம் உலா வந்த வீடியோ அது.

இன்று அமெரிக்கச் சமூகமும் ஊடகங்களும் ஒருமித்த குரலில் மிஷேலையும் ஒபாமாவையும் சிறந்த தம்பதியாகக் கொண்டாடி மகிழ்கிறது. ``ஜனநாயகமான குடும்பங்கள் இருந்தால்தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும். மிஷேல், மிக வலிமையான முறையில் வரலாற்றை மாற்றியிருக்கிறார்; ஓர் உதாரணமாக இருந்து மாற்றியிருக்கிறார்” என்கிறார் அமெரிக்காவின் முக்கியமான பெண்ணியவாதி க்ளோரியா ஸ்டெயினம்.

அப்படியோர் உதாரணமாக மாறுவதற்கு முன்பு, கடுமையான நெருக்கடிகளையும் எதிர்ப்புகளையும் மிஷேல் சந்திக்கவேண்டியிருந்தது. மிஷேல், அவரது கணவரின் வாய் துர்நாற்றம் பற்றி மிக இயல்பாகப் பேசினாலும், உலகின் மிக வலிமையான மனிதரான அமெரிக்க அதிபரை பொதுவில் விட்டுக்கொடுப்பதாக வசை பாடுபவர்களாகத்தான் அமெரிக்கச் சமூகம் இருந்தது. உண்மையில், அமெரிக்கச் சமூகமாக இருந்தாலும் இந்தியச் சமூகமாக இருந்தாலும் அதுதான் எவ்வளவு இறுக்கமாக, புரிதலற்று கிடக்கிறது!

கணவன், மனைவியோடு உரையாடுவதைக்கூட `பொண்டாட்டிதாசனாக' சுருக்கிக் கிண்டல் செய்யும் சமூகம். அம்மாவுக்கு மூன்று தோசை போதும். அப்பாவுக்குக் கூடுதலாக ஒன்று வேண்டும். பெண் குழந்தை கூடுதலாக ஒரு தோசை கேட்டால் `பூசை' என்று சிறுவர் பாடலிலும் ஆண்களுக்கான அதிகாரங்களைக் கொஞ்சம் கூடுதலாக வரையறுத்துக் கொடுக்கும் இந்தச் சமூகம். அந்த அதிகாரத்தைப் பெண்கள் மீது அவர்கள் வன்முறையாகச் செலுத்தும்போது மட்டும் காட்டும் கோபத்தை எப்படி நியாயமான கோபமாக எடுத்துக்கொள்ள முடியும்?

உறவுகளில் சமத்துவமற்ற தன்மைதான் பல அடிப்படைப் பிரச்னைகளுக்குக் காரணம்.

ஒரு பெண், எப்போதும் அவளைச் சுற்றியிருக்கும் ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டும் என்றுதான் இப்போதும் இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறது. அதை மீறித் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்போது, அவள் ஒரு தவறு இழைக்கும் வாய்ப்புக்காக வன்மத்தோடு காத்துக்கொண்டிருக்கிறது. அவள் அப்படி ஏதாவது ஒரு தவறு இழைத்துவிட்டால், பெண்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது எனத் தட்டிவைக்கிறது. அப்படித் தட்ட முடியாத இடங்களில், அவள் மீது வழக்கமான பாலியல் வசவுகளை அள்ளி எறிகிறது.

நான் பார்த்து வியக்கும் பத்திரிகையாளர்களுள் முக்கியமானவர் ரானா அயூப். தெஹல்காவில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது மாற்று அடையாளம் புனைந்து, அந்த அடையாளத்தோடு எட்டு மாதங்கள் குஜராத்தில் தங்கி இருந்து, அங்கு நடந்த போலி என்கவுன்ட்டர்கள் குறித்த உண்மையை வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர். அவர் சேகரித்த மிக வலுவான ஆதாரங்களை ஒருகட்டத்துக்கு மேல் தெஹல்காவில் எழுத முடியவில்லை. அதைப் புத்தகமாகக் கொண்டுவரலாம் என்றால், அதற்கும் யாரும் முன்வராத நிலையில் புத்தகத்தை அவரே பதிப்பித்தார்.

கடந்த வருடம் சென்னையில் அதன் தமிழ்ப் பதிப்பு வெளியிட்டபோது ரானாவைச் சந்தித்து உரையாடினேன். மறுக்க முடியாத ஆதாரங்களை முன்வைக்கும் அவரை, எதிரிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் தெரியுமா?

அவர் முஸ்லிம் என்பதும், பெண் என்பதுமே அவர்களுடைய எதிர்ப்பின் சாரமாக இருக்கின்றன. அவர் முன்வைக்கும் எந்த ஓர் ஆதாரத்தையும் கணக்கில் எடுக்காத அவர்கள், ரானா உடுத்தும் உடைகளையும் அவரது நண்பர்களையும் வைத்து எதிர்க்கிறார்கள். ட்விட்டரில் ரானாவின் பக்கத்தில் அவர் எதையாவது பதிவேற்றினால், அதன் கீழ் அவரைக் கொச்சையாகப் பேசும் நூறு பதில்களை இப்போதும் பார்க்கலாம். அவற்றை எல்லாம் கண்டும்காணாமல் கடந்து, தனது பணியைத் தொடர்ந்து செய்யும் முயற்சியில் மட்டுமே ரானா இருக்கிறார்.

“எனக்கும் மன உளைச்சல்கள் ஏற்படும்.

ஒருகட்டத்தில் மனநல மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்தப் பணியை நான் செய்தாக வேண்டும்” என்று ரானா சொன்னார். சுதந்திரமாக இயங்க விரும்பும் ஒரு பெண்ணுக்கு, சமூகம் தரும் பரிசு இதுதான்.

ரானா அயூப் மட்டுமல்ல, சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் விதிகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனது பாதையைத் தானே தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும், சமூகம் இதை ஒரு தண்டனையாகவே அளிக்கிறது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 26

சோனி சோரி, நினைவிருக்கிறதா? மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என, சத்தீஸ்கரில் 2011-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு, சிறையில் வைத்து பாலியல் கொடுமைப்படுத்தப் பட்டவர்.

அவர் மீது சுமத்தப்பட்ட பல குற்றங்களிலிருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது. அவர் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறை, அவரை ஒடுக்கும் என்றே அதிகாரவர்க்கம் நினைத்திருக்கும். ஆனால், சிறையிலிருந்து வெளியே வந்தவர் முன்பைவிடவும் கூடுதல் வீரியத்தோடு பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தார் சோனி சோரி.

20 வயதுதான் குர்மெஹர் கவுர். இந்துத்வ மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யை எதிர்த்த பிறகு, அவர் கொல்லப்படுவார் என்றும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவார் என்றும் சமூக வலைதளங்களில் மிரட்டப்படுகிறார். அந்த மிரட்டல்கள் பற்றி வாய் திறக்காத சில பிரபலங்கள் கவுரின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ``இனி இதைப் பற்றிப் பேசப்போவதில்லை'' என்று சொல்லி, மௌனமாகிவிட்டார் கவுர். ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் 20 வயதுடைய பெண்ணை மௌனமாக்குவது, இந்தச் சமூகத்தில் எவ்வளவு எளிது?

இப்படி, குடும்பம் தொடங்கி எல்லா சமூகச் சாதனங்களிலும் சமத்துவமற்ற நிலையைக் கண்டும்காணாமல் கடக்கும், சமயங்களில் அங்கீகரிக்கும் நாம்தான், என்றாவது எந்தப் பெண் மீதாவது வன்முறை நிகழ்ந்தால், அறச்சீற்றம் கொள்கிறோம். நோய்க்கூறுகளை அகற்றாமல், நோய்க்கு மட்டுமே சிகிச்சை கொடுத்து என்ன பயன்?

குடும்பம் என்ற அமைப்பு இப்போதும் மிக வலிமையாக இருக்கும் நிலையில், குடும்பங்களிலிருந்துதானே சிகிச்சையைத் தொடங்க வேண்டும்? `ஜனநாயகமான குடும்பங்கள் இருந்தால்தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும்' என்று க்ளோரியா ஸ்டெயினம் அதைத்தான் சொல்கிறார்.

ஆனால், கணவன்-மனைவி உறவுக்குள்ளேயே புழுக்கத்தை உருவாக்கும், வளர்க்கும் ஒரு சமூகமாகத்தான் இந்தியச் சமூகம் இருக்கிறது. இதை ஓரக்கண்ணால்கூடப் பார்க்காமல், வெகு எளிதாக மனைவியின் கோபங்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளை இன்னமும் வாட்ஸ்அப்பில் பரப்பிக்கொண்டிருக்கிறோம்.

இந்த உறவுப் புழுக்கத்தை உணர்ந்து அதற்கு இடம் தராதவர்களாக அல்லது அதைக் கடந்தவர்களாக இருக்கும் பல குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன்.

2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில்தான் கமலாம்மாவை முதன்முதலில் பார்த்தேன். அதற்கு முன்பு அவரைப் பற்றி மனதில் வழக்கமான ஒரு சித்திரம் இருந்தது. சுந்தர ராமசாமி போன்ற ஓர் எழுத்தாளுமையின் மனைவி என்ற அறிமுகம் மட்டுமே அந்த மனப்பதிவின் ஆதாரம். அநேகமாக சமையலறைக்குள் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்துகொண்டு, கொஞ்சம் குறைவான தன்னம்பிக்கையோடு வலம்வருவார் என்றுதான் நினைத்தேன். ஆனால், மிடுக்கோடும், ஒரு தலைமையாசிரியையின் கண்டிப்போடும் கனிவோடும் இருந்தார் கமலாம்மா. எழுத்து, சமையல், இசை, குழந்தைகளுக்கான கல்வி... என, அவரது ரசனைகள் வெவ்வேறாக இருந்தன.

அவர்களோடு இருந்த நாள்களில் சுந்தர ராமசாமியும் கமலாம்மாவும் நிறைய பேசிக்கொண்டதை, பேசிக்கொண்டே இருந்ததை பிரமிப்போடு பார்த்திருக்கிறேன். அந்த உறவு, அவ்வளவு காற்றோட்டமாக இருந்தது; அவ்வளவு பெரிய ஆசுவாசத்தை அளித்தது. யோசித்துப் பார்க்கும்போது, வாழ்க்கை நெடுகிலும் இது போன்றோரே என்னோடு இருந்திருக்கிறார்கள்.

`கல்வி, வேலை, திருமணம் போன்றவற்றில் நான் எடுத்த முடிவுகள் சரியா... தவறா?' என்ற குழப்பம் இருந்தபோதும், முடிவெடுக்கும் எனது சுதந்திரத்தை ஆதரிப்பவராகத்தான் என் அப்பா இருந்திருக்கிறார்.

ஊடகத் துறையில் நுழைந்து சில நாள்களிலேயே `உனக்கு ஒரு முத்தம் கொடுக்கலாமா?' எனக் கேட்டுத் துணுக்குறவைத்த நண்பர், திருமணம் ஆன ஓர் ஆண். அவரைப் பற்றி அழுதுகொண்டே புகார் அளித்தபோது `துப்பாக்கி முனையில்கூட உன்னை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது' என்று சிரித்துக்கொண்டே மனதில் தைரியத்தை விதைத்த பெரியப்பா டி.என்.கோபாலன் என்னை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்.

முதன்முதலில் பணிக்குச் சேர்ந்தபோது, அனுபவமின்மையைக் கணக்கில் எடுக்காமல் ஆர்வத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அரசியல் செய்திகளைச் சேகரிக்க அனுமதித்தவர் பாபு ஜெயகுமார். அதிலும், ஒரு பெரிய தவறைச் செய்தபோது `ஒரு பெண்ணிடம் இந்தப் பணியை ஒப்படைத்தது தவறு' என்ற வழக்கமான அணுகுமுறையை வெளிப்படுத்தாமல், திருத்திக்கொள்ளவும் மெருகேற்றிக்கொள்ளவும் அவர் வாய்ப்பு அளித்தார். அது மட்டும் கிடைத்திருக்காவிட்டால், இன்று ஊடகத் துறையில் காணாமல்போயிருப்பேன். அப்படியொரு மறுவாய்ப்பு கிடைக்காத எத்தனையோ பெண்களை நான் அறிவேன்.

அப்போது முதல் இன்று வரையில் நான் எழுதும் ஒவ்வோர் அரசியல் கட்டுரையையும் படித்துவிட்டு அதன் நுணுக்கங்களை விவாதித்துப் பாராட்டுபவர் பத்திரிகையாளர் மணி. `பெண்தானே!' என்ற எள்ளல் தொனியை, இவர்கள் யாரிடத்திலும் எப்போதும் பார்த்ததில்லை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 26

வேறொரு பணியிடத்தில் சக புகைப்படக் கலைஞனாக அறிமுகமானவன் பானு பிரகாஷ் சந்திரா. முதல் சந்திப்பில் சக பெண் ஊழியர் `அவனைப் பார்த்தா gay மாதிரி இல்ல' என்று சொன்னபோது சிரித்துவைத்தேன். அதைக் கவனித்த இன்னொரு நண்பர், `எப்படிச் சிரிக்கலாம்?' என உலுக்கியெடுத்து `மரியாதையா போய் மன்னிப்புக் கேளு' எனச் சொன்னதன் பேரில் பானுவைத் தேடிப் போய் மன்னிப்புக் கேட்டதுதான் அவனுடனான முதல் உரையாடல். ``நான் gay இல்லை. அப்படியே இருந்தாலும், நீ ஸாரி சொல்ற அளவுக்கு அது வருத்தப்படுற விஷயமும் இல்லை” என்று அவன் சொன்னது வாழ்நாளுக்கான பாடம்.

பறவையைப் போன்றவன் பானு. ஹிமாலயா, கோவா, நேபாளம், இலங்கை எனத் திரிந்துகொண்டிருப்பவன். பணி நிமித்தமும், தேடல் நிமித்தமும், அவனது பயணங்களும் எனது வாழ்க்கைமுறையும் சேர்ந்து எங்களது உரையாடல்களைச் சுருக்கியிருக்கின்றன. ஆனால், எந்த நிர்பந்தமும் எதிர்பார்ப்பும் இல்லாத, எந்தத் தீர்ப்பும் முன்முடிவும் வழங்காத ஆசுவாசமான ஒரு நட்பு, தொலைபேசி அழைப்பின் தூரத்திலேயே இருக்கிறது என்பது வாழ்வின் எவ்வளவு மகத்தான பரிசு. அன்பைவிடவும் மரியாதை மிகும் அபூர்வமான நட்பு அது. ``போலீஸ்னாலும் நீ முதல்ல ஒரு பொம்பள” என மட்டம் தட்டும் ஹீரோயிசங்கள் கொண்டாடப்படும் ஒரு சமூகத்தில் ஒரு பெண்ணை மரியாதைக்குரியவளாக அணுகும் நட்பு அபூர்வமானதாகத்தானே இருக்க முடியும்?

`இந்த அமைப்பில் ஏன் பெண்களே இல்லை?' என்ற கேள்விக்கான பதிலாகத்தான் பூவுலகின் நண்பர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வெகுஜன அமைப்புகளில்கூட பெண்கள் செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை போன்ற நுட்பமான வரையறைகள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் நிலையில், பூவுலகின் நண்பர்கள் வெளிப்படுத்தும் ஜனநாயகத்தன்மையும் அரசியல் நட்பும் அசாதாரணமானவை.

இதுபோன்ற நட்புகள்தான், எனது அரசியலைச் செழுமைப்படுத்துகின்றன; எனது பெண்ணியத்தையும் சுயத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றன; பெண்ணியம், வெறுப்புஉணர்வை விதைப்பது அல்ல என்கிற ஆழமான புரிதலோடு செயல்படுகின்றன. அவற்றுடன் முரண்படவும், சண்டைபோடவும், நாள்கணக்கில் பேசாமல் இருக்கவும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், நான் பெண் என்பதோ, அவர்கள் ஆண்கள் என்பதோ எப்போதும் ஒரு காரணமாக இருந்ததில்லை.

`இந்த உலகின் மீதும் மனிதத்தின் மீதுமிருக்கும் பற்று காரணமாகவே போராளியாக இருக்கிறேன்' என சே குவேரா சொன்னதுபோலத்தான், பெண்ணியம் என்பது ஆண்களற்ற உலகத்தைக் கோருவது அல்ல; சமத்துவமான உலகத்துக்கான மிக நியாயமான விருப்பம். `ஒரு பெண்ணியவாதியோடு எப்படிக் குடும்பம் நடத்துகிறாய்?' என்று முரளியைக் கிண்டல் செய்யும் நண்பர்கள் பலரும் நெருங்கி வந்து பார்க்கும்போது, எங்கள் வீடு இருவருக்குமான வீடாக இருப்பதைப் பார்த்து மகிழவே செய்கிறார்கள். இருவருக்கும் வெவ்வேறான ரசனைகள் என்ற போதும், அது இருவருக்குமான வீடு, இருவருக்குமான நூலகம், இருவருக்குமான சமையலறை.

முரளிக்கு காமிக்ஸ் என்றால் உயிர். எனக்குக் கவிதைகள். ``உன்னோட எல்லா காமிக்ஸையும் எடைக்குப் போடுறேன் பாரு” என்று நான் மிரட்டுவதும், ``அப்புறம் உன் கவிதைத் தொகுப்பை எல்லாம் குப்பையில் போட்டுடுவேன்” என்று முரளி பதிலுக்கு மிரட்டுவதும் சண்டைகளில் சகஜம். ஆனால், வீட்டுக்குள் வெள்ளம் வந்து நான் திகைத்து நின்ற நாளில், முரளிதான் அலமாரிகளின் அடிப்பகுதிகளில் இருந்த கவிதைத் தொகுப்புகளை எல்லாம் எடுத்து பரண்களில் போட்டுப் பாதுகாப்பாக வைத்தார். எடுத்து வைக்கவேண்டிய பல பொருள்களுக்கு இடையில் கவிதைத் தொகுப்புகளை முரளி கவனமாகப் பத்திரப்படுத்தியதை நண்பர்கள் சிலாகித்தார்கள். ஆனால், அது முரளியின் இயல்பென்று எனக்குத் தெரியும்.

`எட்டு மணியாகிடுச்சா, வீட்டுக்குப் போகணும்!' எனப் பதற்றப்படும் தோழிகளுக்கிடையில், சில நேரங்களில் இரவு 11 மணிக்கும் புற உலகின் நெருக்கடிகள் அழுத்த, வீடு மீளும்போது ஆறுதலான புன்னகையோடு காத்துக்கொண்டிருக்கும் சுடுசோறும் ரசமும் உருளைப் பொறியலும்தான் எனது வீட்டை ஒரு கூண்டாக மாற்றாமல் எனக்கான வீடாக வைத்திருக்கின்றன. நான் வாழும் எனது சமூகமும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு  பெண்ணியவாதியாக எனது எளிய எதிர்பார்ப்பு.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

மக்கென ஒரு சிறிய வீடு, அறைகலன்கள், நூலகம், நிதானமான வேலை, சேர்ந்து செய்யும் நடைப்பயிற்சி, அவ்வப்போது ஏதாவது நாடகம், மிகச் சில நண்பர்கள், அவர்களுடன் எப்போதாவது டின்னர், வருடத்துக்கு ஒரு விடுமுறை... என, நாம் இருவரும் வேலை பார்ப்போம். நமது வாழ்க்கை மிகச் சரியாக இருக்கும். உலகில் வேறு எந்தத் தம்பதிக்கும் இல்லாத வாய்ப்பு, நமக்குக் கிடைத்திருக்கிறது. கொஞ்சம் முயற்சி செய்தால், நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நாம் நிச்சயமாக இருப்போம்.

தோழனும் காதலனும்
ரோசா லக்ஸம்பர்க் கடிதங்கள்

ஷ்யப் புரட்சியைப் பற்றிய உனது கருத்து, எனக்கு அதிர்ச்சியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. ஒரு நபரையோ சில நபர்களையோ தண்டிக்கலாம், விமர்சிக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த இயக்கத்தையும் அப்படிச் செய்ய இயலாது. இது உன்னைக் காயப்படுத்தும், கோபப்படக்கூடச் செய்யும். ஆனால், நான் உண்மையைச் சொல்லவேண்டியிருக்கிறது. இது பற்றி யோசித்துப்பார். நான் உண்மையைத்தான் பேசுகிறேன் என்பதை, உன்னால் உணர்ந்துகொள்ள முடியும்.

நீ பல வருடங்களாகக் கொண்டிருக்கும் இந்த நிலைப்பாடு, உனது மதிப்பைக் குறைப்பதாகவே இருக்கிறது.

தோழனும் காதலனும்
ரோசா லக்ஸம்பர்க் கடிதங்கள்.

னக்கான கோட் ஒன்றை நீ இல்லாமல் நான் வாங்கக் கூடாது எனச் சொல்வதை, என்னால் ஏற்க முடியவில்லை. இதுபோன்ற விவகாரங்களில் நீ தலையிடுவதை, நான் விரும்பவில்லை. அரசியல் களத்தில் என்னால் சுதந்திரமாகச் செயல்பட முடியுமென்றால், அந்தச் சுதந்திரம் ஒரு கோட் வாங்கிக்கொள்ளவும் இருக்க வேண்டும்.

தோழனும் காதலனும்
ரோசா லக்ஸம்பர்க் கடிதங்கள்.

நான், மிகவும் கடினமாக நடந்துகொள்ளப்போகிறேன்; நமது உறவைப் பற்றி நிறைய யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் திரும்பியவுடன் உனது கையை மிக உறுதியாகப் பற்றி எடுத்துக்கொள்ளப் போகிறேன். கருணையில்லாமல் உன்னை அச்சுறுத்தப்போகிறேன். இந்த உறவு தொடர வேண்டுமென்றால், நீ கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டும்; கொஞ்சம் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்.

தோழனும் காதலனும்
ரோசா லக்ஸம்பர்க் கடிதங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism