Published:Updated:

எரிச்சலூட்டும் எரிபொருள் விலையேற்றம்!

எரிச்சலூட்டும் எரிபொருள் விலையேற்றம்!
பிரீமியம் ஸ்டோரி
News
எரிச்சலூட்டும் எரிபொருள் விலையேற்றம்!

அதிஷா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ல் விளக்குவது, குளிப்பது, காதலிக்கு குட்மார்னிங் மெசேஜ் அனுப்புவது... இவற்றைப்போலவே தினமும் அரசின் முட்டாள்தனமான முடிவுகளுக்கு எதிராக போராடுவதும் நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. போன வாரம்தான் சமையல் எரிவாயுவின் விலையைத் தாறுமாறாக ஏற்றி அதிர்ச்சி கொடுத்தது மத்திய அரசு. இந்த வாரம் மாநில அரசின் பங்காக பெட்ரோல், டீசல் விலையை ஏராளமாக, தாராளமாக உயர்த்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ரொம்பவே ஜாலியாகப் பொருளாதாரச் சுதந்திரம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு, இன்னும் ஓர் சுமையைப் பரிசளித்திருக்கின்றன நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மத்திய - மாநில அரசுகள்.

எரிச்சலூட்டும் எரிபொருள் விலையேற்றம்!

பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியை அதிகமாக்கி, மாற்றி அமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 ரூபாயை எட்டியிருக்கிறது. டீசல் விலை 64 ரூபாயைத் தாண்டியிருக்கிறது. ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவுள்ள நிலையில், இந்த விலையேற்றம் அவசியமற்றது என்பது தெரிந்திருந்தும், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது நேரடியாக மக்களின் வாழ்வாதார விஷயங்களைப் பாதிக்கும். சிறு மற்றும் குறுந்தொழில்களை முடக்கும். உற்பத்திசார்ந்த தொழில்நிறுவனங்களின் செலவுகளை அதிகரிக்கும். அதுவும்கூட தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கும். அத்தியாவசியப் பொருள்கள் மீதான அவசியமற்ற விலைவாசி உயர்வையும் குழப்பங்களையும் உருவாக்கும். இவையெல்லாம் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கிற முதல்வருக்குத் தெரியாதா, பிறகு ஏன் இந்த விலையேற்றம்?

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 86 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. `அரசின் மானியம் வேண்டாம்’ எனத் திருப்பிக் கொடுத்தவர்களுக்கும், ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் என்ற கோட்டாவைத் தாண்டியவர்களுக்கும், மத்திய அரசு இந்த அரிய பரிசை வழங்கியுள்ளது. சென்ற மாதம் வரை 651 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த சிலிண்டரின் விலை, இப்போது 737.50 ரூபாய். இத்தகைய விலையேற்றம், இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. ஒருபக்கம் தாறுமாறாக ஏறும் பெட்ரோல் விலை. இன்னொரு பக்கம் சமையல் எரிவாயு விலை உயர்வு என ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு, குறுகிய காலத்தில் ஏராளமாக வாரிவழங்கியுள்ளன மத்திய மாநில அரசுகள்.

`மீட்பர் மோடி வந்துவிட்டார். பெட்ரோல் டீசல் விலைகளெல்லாம் குறையப்போகிறது’ என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பா.ஜ.க கூவிக்கூவி வாக்கு சேகரித்தது, இந்த விலையேற்றத்தில் நம் நினைவுக்கு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எப்போதெல்லாம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதோ, அப்போதெல்லாம் கையில் கேனோடு தீக்குளிப்போம் எனக் களமிறங்கிய பா.ஜ.க-வினரின் முகங்கள், மனதில் வந்துபோகின்றன. ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியே தலைமையேற்று நடத்திய விரல் புரட்சிகளைத்தான் மறக்க முடியுமா?

ஆனால், இன்று அதே மோடிதான் ஆட்சியில் இருக்கிறார். கிட்டத்தட்ட பதவிக்காலத்தில் பாதியை முடித்துவிட்டார் . ஆனால் பாருங்கள்... வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு பெட்ரோல் விற்றுக்கொண்டிருக்கிறார். ஓட்டுக்காகப் போராடியவர் இப்போது ஓசையே இல்லாமல் விலையேற்றத்தில் பங்கெடுக்கிறார்.

ஒருபக்கம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னொரு பக்கம் நம் அரசுகள் எரிபொருளின் விலையைத் தாறுமாறாக உயர்த்திக்கொண்டே செல்கின்றன. அது எப்படி என்று நாம் கேட்பதில்லை? இந்த விலையேற்றம் எத்தனை அநீதியானதோ, அதே அளவுக்கு இன்று வரை நாம் பெட்ரோலுக்காகவும் டீசலுக்காகவும் சமையல் எரிவாயுக்காகவும் செலவழித்துக்கொண்டிருக்கிற தொகையும் அநீதியானதே.

அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிப்பு, ஐரோப்பியப் பகுதிகளில், சீனா, பிரேசில் சந்தைகளில் தேவை குறைந்திருப்பது என, பல்வேறு காரணிகளால் சென்ற மாதம் கச்சா எண்ணெயின் விலை மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. பேரல் 106 டாலர் அளவுக்கு விற்ற கச்சா எண்ணெய் 50 சதவிகிதம் சரிந்து பேரல் 53.33 டாலருக்கு விற்கப்படுகிறது. இவ்வளவு குறைந்திருக்கும்போது, நம் பெட்ரோல் பங்குகளில் எவ்வளவு குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்கப்பட வேண்டும். ஆனால், கொஞ்சம்கூட விலை குறையவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெயருக்கு இரண்டு ரூபாய், அரை ரூபாய், முப்பது காசு எனக் குறைத்துக்கொண்டிருந்தது மத்திய அரசு.

இந்தியா தன் எரிபொருள் தேவையில் 80 சதவிகித அளவுக்கு வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. அப்படிப் பார்த்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், நம்முடைய பெட்ரோல் விலையும் குறையத்தானே வேண்டும். அவ்வளவு குறைய  தேவையில்லை. குறைந்தபட்சம் பத்து, இருபது சதவிகிதமாவது குறைய வேண்டாமா? ஆனால், நாமோ சர்வதேசச் சந்தையில் எவ்வளவு விலை குறைந்தாலும், இரண்டு மடங்கு விலை கூடுதலாகக் கொடுக்கிறோம்.

கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ச்சியாக கலால் வரி மற்றும் வாட் வரிகளை உயர்த்திவருகின்றன. தங்களுடைய வருவாயை உயர்த்திக்கொள்ள பெட்ரோல் டீசல் விலைகளை, எப்போதும் அதிகமாகவே வைத்திருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை சரியச் சரிய, கடந்த மூன்று மாதங்களில் பெட்ரோல் மீதான கலால்வரி 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது; டீசல் மீதான வரி 140 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்தான் ஏற்கெனவே பெட்ரோலுக்கு 27 சதவிகிதம், டீசலுக்கு 21.4 சதவிகிதம் என மிக அதிக வாட் வரி வசூலித்த தமிழக அரசு, இப்போது அந்த அளவை இன்னும் கூட்டியிருக்கிறது. பெட்ரோலுக்கு
34 சதவிகிதமாகவும், டீசலுக்கு 25 சதவிகிதமாகவும் உயர்த்தியிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறையக் குறைய ஆயில் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான தொகையையும் ஓ.எம்.சி எனப்படும் எண்ணெய்ச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் அதிகப்படுத்துகின்றன. இன்றைய தேதியில் உத்தேசமாக பெட்ரோல் விலை 30 ரூபாய் என்றால், இந்தத் தொகையோடு இன்னொரு 30 ரூபாயை, ஓ.என்.ஜி.சி மாதிரியான மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எரிச்சலூட்டும் எரிபொருள் விலையேற்றம்!

உண்மையில் நாம் போடுகிற பெட்ரோல் அல்லது டீசல் விலையைவிடவும் அதிக தொகையை வரியாக அரசுக்குச் செலுத்திக்கொண்டிருக்கிறோம். பெட்ரோல் போடும்போது 57சதவிகிதம் வரியாகவும், டீசல் போடும்போது 55 சதவிகிதம் வரியாகவும் அரசுக்குத் தாரைவார்க்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கலால் வரி அளவை உயர்த்தாமல் இருந்திருந்தாலே, இன்று டீசல் 32 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கும். ஆனால், கச்சா எண்ணெய் விலை சரியச் சரிய அரசு தொடர்ச்சியான வரிவிதிப்பின் வழி எரிபொருள் விலை வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான் இப்போது தமிழக அரசும் நாங்க மட்டும் சும்மாவா என்று வாட்வரியை உயர்த்தி, விலையைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது.

``நுகர்வைக் குறைப்பதன் வழி சுற்றுச்சூழலைக் காக்கிறோம். அதற்காகத்தான் இப்படி விலையை ஒரே அளவில் வைத்திருக்கிறோம்'' என்றே கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு கூறிவருகிறது.  ஆனால், கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்திக்கும்போது இப்படி வரிகளைத் தாறுமாறாக உயர்த்தி விலைவீழ்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவருவது ஆபத்தானது என்று அஞ்சுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள். ஏனென்றால், நாளைக்கே கச்சா எண்ணெய் விலை பழையபடி 80 டாலருக்கு அதிகமாகச் சென்றால், அரசு கலால் வரியை, வாட் வரியை எல்லாம் குறைக்குமா என்பதுதான் அவர்களுடைய ஒரே கேள்வியாக இருக்கிறது. அப்படிக் குறைக்க முடியாமல் போனால், பெட்ரோல், டீசல் விலை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். அதனால் உண்டாகும் விலைவாசி உயர்வையும் மக்கள்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த ஜனவரி மாதம் மெக்ஸிகோவில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. 

`el Gasolinazo’ என்ற அந்தப் போராட்டம் அங்கே ஆளும் அரசையே உலுக்கியெடுத்துக்கொண்டி ருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி, அரசுக்கு எதிராக மல்லுக்கட்டுகிறார்கள். அவர்கள் போராடுவது ஒரே ஒரு விஷயத்துக்காக மட்டும்தான். அது பெட்ரோல், டீசலின் விலை உயர்வுக்கு எதிராக...

ஜனவரி மாதம் மெக்ஸிகோவை ஆளும் அரசு 20 சதவிகித அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவித்தது. ஆனால், இதைத் தாங்கிக்கொள்ள முடியாத மக்கள் உடனடியாகப் போராட்டத்தைத் தொடங்கினர்.

`எல் காஸோலினாஸோ' என்ற இந்த மக்கள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம்பெற்றது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் மீண்டும் உயர்த்துவதாக இருந்த பெட்ரோல் விலை உயர்வை அரசு நிறுத்திவைத்தது.
 
ஆனால், மொத்தமாக பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். `எங்களிடம் கார் இருப்பதால் அல்ல இந்தப் போராட்டம். பெட்ரோல் விலை அதிகரித்தால் ரொட்டிகள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக்குமான செலவுகளும் அதிகரிக்கும். இது எங்கள் வாழ்வுக்கான போராட்டம்’ என்று அவர்கள் முழங்குகிறார்கள். கூடவே அரசின் மீதான மற்ற அதிருப்திகளையும் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த எல் காஸோலினாஸோ போராட்டம் ஆட்சியையே கவிழ்த்துவிடும் என்று ஆளும் அரசு அஞ்சுகிறது. `வாக்களிக்கும்போது இதை மறக்க மாட்டோம்' என்ற கோஷங்கள் மெக்ஸிகோ முழுக்க ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

மத்திய - மாநில அரசுகள் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும்போதும் நாம் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்துபோகப் பழகிவிட்டோம். அதுதான் அவர்களை இத்தகைய மோசமான முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இதுதான். தட்டாமல் எந்தக் கதவுகளும் திறப்பதில்லை. தட்டினாலும் திறக்காத `மக்கள் விரோத அரசு’களின் கதவுகளை உடைக்கத்தான் வேண்டும். இங்கேயும் `எல் காஸோலினாஸோ'வுக்கான தேவை இருக்கிறது. இல்லையென்றால் இன்னும்கூட இந்த அரசுகள் கூட்டணி போட்டு நம்மை வரிவிதிப்பின் பெயரால் கொள்ளையடிக்கும்!