Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப் கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப் கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39

பூமியில் வாழும் எல்லா உயிர்களின் கூட்டுச் சேர்க்கைதான் மனித இனம் என்பது, நமது மரபு சார்ந்த பரிணாமக்கொள்கை. ஓரறிவு உயிராகிய ஒரு செல் உயிரினத்தில் தொடங்கி ஐந்தறிவு உயிர்கள் வரையிலான பயணம்தான் மனித இனத்தின் வரலாறு. ஐந்தறிவுடன் ஆறாம் அறிவாகிய மனம் இணைவது மனிதப் பிறவியின் சிறப்பு. தொல்காப்பியம், மிகத் தெளிவாக இந்தப் பரிணாமக்கொள்கையைப் பதிவுசெய்துள்ளது.

`ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே’
என்பது அந்தப் பாடல்.


`தொட்டு அறியும் உயிரினங்கள், தொட்டும் சுவைத்து அறியும் உயிரினங்கள், இவை இரண்டுடனும் சுவாசிக்கும் அறிவுகொண்ட உயிரினங்கள், இவற்றோடு பார்க்கும் திறன்கொண்ட உயிரினங்கள், இவற்றோடு கேட்டறியும் உயிரினங்கள், இவை ஐந்துடனும் மனம் எனும் ஆறாம் அறிவுகொண்ட உயிரினம் தோன்றியது’ என்பது இந்தப் பாடலின் சுருக்கமான விளக்கம்.

மனிதர்களாகிய நாம் ஓரறிவுகொண்ட ஒரு செல் உயிரினமாக இருந்துவிட்டு, அடுத்தடுத்த அறிவுகளைப் பெற்று ஆறாம் அறிவாகிய மனம் அடைந்த இந்தப் பிறவிக்கு வந்துள்ளோம். இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உரைக்கப்பட்ட நம் மரபு சார்ந்த பரிணாமக்கொள்கை.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில்,  மனிதர்களாகிய நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒரு சூழலை உங்கள் முன் வைக்கிறேன்.

ஏதோ ஓர் உணவுப்பொருள் உங்கள் முன்னால் உள்ளது. அதை உண்ணுவதா... வேண்டாமா என முடிவெடுக்க வேண்டும். அந்தப் பொருளின் குணங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பொருளைத் தொட்டுப்பார்த்தல்தான் முதல் வழி. அந்தப் பொருள் குளிர்ச்சியானதா, சூடானதா, மித வெப்பமானதா என்பதைத் தொட்டு அறியலாம். மேலும், அந்தப் பொருள் கடினமானதா... மென்மையானதா என்பதையும் அறிந்துகொள்ளலாம். இன்னும் பல செய்திகளை, தொடுதல் வழியாகப் புரிந்துகொள்ள முடியும். இதுதான் முதல் அறிவான உற்று அறிதல்.

ஒரு பொருளைத் தொட்டுப்பார்க்கையில், அதிகக் குளிர்ச்சியாகவோ அதிகச் சூடாகவோ இருந்தால், அது இயல்புக்கு மீறிய நிலையில் உள்ளது எனப் பொருள்.

உற்று அறியும் தொடு உணர்வு நமக்கு வழங்கப்பட்டதன் நோக்கம், இயல்பை மீறிய பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். பனிக்கூழ் (ஐஸ்க்ரீம்) வகைகள், நமது உடலின் இயல்புக்கு மாறானவை. அந்தப் பொருள்களின் மிகையான குளிர்ச்சியே இந்தச் செய்தியை நமக்கு எடுத்துரைக்கிறது. குளிர்சாதனப் பெட்டியில் (Refrigerator) வைத்துப் பராமரிக்கப்படும் எல்லா பொருள்களும் இயல்புக்கு மாறான குளிர்ச்சியைக் கொண்டவைதான். மிக அதிகமான சூட்டுடன் பரிமாறப்படும் உணவுகளும் இவ்வாறானவையே.

குளிர்ச்சி, சூடு ஆகியவை மிகையாக இருந்தால், எப்படிக் கண்டறிவது எனச் சிந்திக்கவே வேண்டாம். தொட்டுப்பார்க்கையில் பொறுக்க முடியாத நிலையில் உள்ளவை எல்லாம் மிகையான பருவநிலைகொண்டவைதான். இந்தப் பொருள்கள் இயல்பான நிலைக்குத் திரும்பும் வரை பொறுத்திருப்பது நல்லது. மிகையான குளிர்ச்சிப் பொருள்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும். பனிக்கூழ் போன்ற செயற்கைக் குளிர்ச்சிப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், முதல் அறிவான தொடு அறிவால் பொறுக்கவியலாத எதையும் உடலுக்குள் திணிப்பது அறிவை அவமதிக்கும் செயல்.

மிகைக் குளிர்ச்சிப் பொருள்களான பனிக்கூழ் உள்ளிட்டவற்றால் உருவாகியுள்ள நோய்களின் பட்டியல் மிகவும் நீளமானது. குறிப்பாக, நுரையீரலில் `கோழை' எனும் சளிக்கழிவு அப்பிக்கொண்டிருப்பதற்கு பனிக்கூழ் உணவுகளே முதன்மைக் காரணம்.

நம் மரபில், குளிர்ச்சி தரும் பொருள்கள் ஏராளமாக உள்ளன. கரும்புச்சாறு, இளநீர், நுங்கு, பதநீர், தயிர், மோர், கூழ் வகைகள் (முதல் நாள் இரவு காய்ச்சப்பட்ட கூழ்) போன்றவற்றைப் பருகுங்கள். இவை அனைத்தும் நமது சூழலில் விளையும் பொருள்களால் ஆனவை. இவற்றைத் தொடும்போது சுகமான குளிர்ச்சியை உணர முடிகிறது. இயல்புக்கு மாறான மிகைக் குளிர்ச்சியை இந்தப் பொருள்கள் வெளிப்படுத்துவதில்லை. இவற்றை உணவாகக் கொள்ளும்போது துன்பங்கள் இருப்பதில்லை.
செயற்கையான வழிகளில் குளிரூட்டப்பட்ட, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களே உடலைக் கெடுக்கின்றன. இந்தத் தகவலை அறிந்துகொள்ள பக்கம் பக்கமாக ஆய்வறிக்கைகளைப் படிக்கத் தேவையில்லை. உடல் கூறும் அறிவுரைகளைக் கேட்டாலே போதும். இவ்வாறான பொருள்களைத் தொடும்போதே, ‘இது செயற்கையான குளிர்ச்சியைத் தக்கவைத்துள்ளது’ என்பதை நாம் உணரலாம்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவுகள் கெடுவதில்லை என்ற நம்பிக்கை இப்போது உள்ளது. இது மிக வேடிக்கையான நம்பிக்கை. உணவு கெடுவது என்றால் என்ன? உணவில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி, உணவின் திடத்தன்மையைச் சிதைக்கத் தொடங்கினால் அந்த உணவு `கெட்டுப்போன உணவு’ எனக் கூறுகிறோம். நாம் உண்ணவேண்டிய உணவை, நுண்ணுயிரிகள் உண்ணத் தொடங்கினால், அது உணவு கெடும் நிலை. இவ்வாறு நிகழ்வதற்கு, இயல்புக்கு மாறான பருவநிலை வேண்டும். அதிகமான சூடு, அதிகமான குளிர்ச்சி ஆகிய இரண்டு எதிர்முனைகளும் நீடிக்கும் வரை, நுண்ணுயிரிகளால் உணவைச் சிதைக்க முடிவதில்லை. எப்போது இந்தத் தீவிரமான பருவநிலை தணிந்து, இயல்பான நிலை உருவாகிறதோ, அப்போது நுண்ணுயிரிகள் தோன்றி, உணவைச் சிதைக்கின்றன.

ஓர் உணவுப்பொருளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பொருளின் மீது மிகையான குளிர்ச்சி பரவுகிறது. அந்த உணவில் உள்ள நுண்ணுயிரிகள் அந்தக் குளிர்ச்சியைத் தாளாமல் செத்துப்போகின்றன. தீவிரக் குளிர்ச்சி மாறும் வரை அந்த உணவுப்பொருள் நுண்ணுயிரிகளின் பிணங்களைச் சுமந்துகொண்டுள்ளது. சில நாள்கள் கழித்து அந்த உணவை வெளியே எடுத்த பிறகு, குளிர்ச்சி தணிந்ததும் மேலும் பல வகை நுண்ணுயிரிகள் அந்த உணவுப்பொருளின் மீது தோன்றுகின்றன. இப்போது உருவாகும் நுண்ணுயிரிகள், உணவை மட்டுமல்ல... உணவில் செத்துக்கிடக்கும் நுண்ணுயிரிகளின் உடல்களைச் சிதைக்கும் வகையிலும் உருவாகின்றன. அதாவது, இப்போது அந்த உணவின் மீது மிக அதிகமான நுண்ணுயிரிகள் பெருகத் தொடங்குகின்றன.

இதை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள், மிக முக்கியமான தகவல் ஒன்றைப் புறக்கணிக்கிறார்கள். `எதை உனது முதல் அறிவு ஒப்புக்கொள்கிறதோ, அதை மட்டும் உனது இரண்டாம் அறிவுக்குக் கடத்து’ என்பது அந்தத் தகவல். அதாவது, தொடு உணர்வு ஒப்புக்கொண்ட உணவைத்தான், நாக்குக்கு அனுப்ப வேண்டும்.

மிகைக் குளிர்ச்சியில் வைக்கப்பட்டு பிறகு குளிர்ச்சி நீக்கப்பட்ட உணவுகள், முதல் அறிவான தொடு உணர்வை ஏமாற்றிவிடுகின்றன. குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் காய்கறிகளின் தோல் பகுதி விரைத்துக் காணப்படுவதைப் பாருங்கள். அவற்றை வெளியே எடுத்த சில நொடிகளில் அந்தத் தோல் பகுதி சுருங்கத் தொடங்கும். இந்த நேரெதிர் நிலைமை உருவாகும்போது, அந்த உணவின் இயல்புத்தன்மைகளும் கெடுகின்றன.

பனிமலைகளில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துபோன விலங்குகளின் பிணங்கள் கிடக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துபோன பனிக்காட்டு மான் ஒன்று அப்படியே விரைத்துக்கிடக்கிறது. உடல் சிதையாமல் இருக்கிறது என்பதால், அந்த மானை உணவாக உட்கொள்ள முடியுமா?

உணவு கெடுவது என்றால், முதல் நிலை நுண்ணுயிரிகள் உண்ணத்தக்க நல்ல நிலையில் உணவு உள்ளது எனப் பொருள். இந்த உணவைக் குளிர்ச்சியில் வைத்தால், முதல் நிலை நுண்ணுயிரிகள் செத்துப்போகும். அடுத்தடுத்த நிலை உயிரிகள் அந்த உணவில் உருவாகும். ஆகவே, எந்த உணவு கெட்டுப்போகும் தன்மையுடன் வைக்கப்பட்டுள்ளதோ, அந்த உணவு நல்ல உணவு.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39

அன்று பறித்த காய்கறிகளை உண்ணுவதற்கும், அதே காய்கறிகளை அடுத்த நாள் உண்பதற்குமே நிறைய மாறுபாடுகள் உண்டு. காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட மரக்கறி உணவுகள், ஓரிரு நாள்களில் இயல்பு கெடுகின்றன. புலால் உணவுகளோ, நிமிடக்கணக்கில் இயல்பு கெடுகின்றன.

ஒரு கத்திரிக்காயைத் தொடும்போதே அதன் இயல்பான வெப்பநிலையை உணர முடியும். லேசாக அழுத்தும்போதே அதன் திடத்தன்மையை அறிந்துகொள்ள முடியும். கடினமாக இருந்தால் முற்றிய காய், மென்மையாக இருந்தால் பிஞ்சு காய் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நீர்த்தன்மை வற்றிப்போயிருந்தால் நாள்பட்ட காய். நீர்த்தன்மை மிக அதிகமாக இருந்தால் அழுகும் நிலையில் உள்ள காய் என்றெல்லாம் உணர முடிகிறது.

இப்போதுள்ள சூழலில் மரக்கறி உணவுகளைவிட இறைச்சி, மீன் உள்ளிட்ட புலால் உணவுகளின் நிலைமையோ, மிக மோசமாக உள்ளது. குறிப்பாக, மாநகரங்களில் விற்பனை செய்யப்படும் ஆடு, கோழி, மீன் இறைச்சிகளில் பெரும்பாலானவை, குளிர்சாதனப் பெட்டியில் நாள்கணக்கில் வைக்கப்படுபவையே. புலால் உணவுகளின் மீது மிக அதிகமான நுண்ணுயிரிகள் செயல்படுவது இயற்கை விதி. ஆடு, கோழி, மீன் ஆகியவற்றை வெட்டும்போது வெளியாகும் ரத்தம் காயும் முன், அவற்றைத் துண்டுகளாகக் கூறுபோட்டு சமையலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ரத்தம் உறைந்து வண்ணம் மாறத் தொடங்கினால், கிருமிகளின் எண்ணிக்கையும் வகையினமும் மாறிவிட்டது எனப் பொருள்.

இவ்வாறான புலால் பொருள்களின் மீது மிதமான சூடு இருப்பதை நாம் உணரலாம். எந்த இறைச்சி சில்லிட்டுள்ளதோ, அது உண்ணத் தகுதியற்றது. இறைச்சி வகைகளைச் சமைக்க நேரமாகும் என்றால், மிதமான வெயிலில் உலர்த்துவது கிராமப்புறங்களில் இருக்கும் வழக்கம். இவ்வாறு இளம் சூடான வெப்பத்தில் உலர்த்தும்போது, இறைச்சியின் நீர்த்தன்மை சற்றே குறைந்து நுண்ணுயிரிகளின் பெருக்கம் தற்காலிகமாகத் தடைபடும்.

கடைகளில் உள்ள இறைச்சியின் மீது நீர் தெளிப்பது, ஒரு பெரும்பணியாகவே உள்ளது. இறைச்சியின் எடையைச் செயற்கையாகக் கூட்டுவதற்கு இது உதவும். ஏனெனில், புதிய இறைச்சியின் மீது நீர் தெளித்தால், அதன் தசைகள் நீரை உறிஞ்சிக்கொள்ளும். மாநகரங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட இறைச்சித் துண்டுகள் விரைத்து, வெளுத்து, நீரையும் உறிஞ்ச முடியாத நிலையில் தொங்கிக்கொண்டுள்ளன.

எந்த வகை இறைச்சியானாலும் அதைத் தொடும்போது, மிகைக் குளிர்ச்சி இருக்கக் கூடாது; அதிக நீர்த்தன்மை இருக்கக் கூடாது. விரைத்துப்போயிருத்தல், மிகவும் இலகுவாக இருத்தல் ஆகிய இரண்டுமே இயல்புக்கு மாறானவை. இளம் சூடும், நீரின் குளிர்ச்சியும் கலந்த நிலையில் இருக்க வேண்டும்.

எப்போதும் வெப்பத்தில் வைக்கப்படும் உணவுகளும் இவ்வாறானவைதான். வெப்பம், குளிர்ச்சி ஆகிய இரண்டும் இயல்பை மீறினால் உடலைக் கெடுக்கும். எது இயல்பானது என்பதை, தொடு உணர்வு ஒரு நொடியில் நமக்கு உணர்த்திவிடும்.
எந்த உறவாக இருந்தாலும் தொட்டு அணைக்கும்போது கிடைக்கும் இன்பத்தை அளவிட முடியாது அல்லவா!

தொட்டு உணர்தல் நம் முதல் அறிவு என்பதால், அதற்கு வலிமை அதிகம்.

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39