Published:Updated:

ஆசை - உயிரோவியம்

ஆசை - உயிரோவியம்
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - உயிரோவியம்

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்

ஆசை - உயிரோவியம்

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
ஆசை - உயிரோவியம்
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - உயிரோவியம்
ஆசை - உயிரோவியம்

`இறவா வரம் என்பது சாத்தியமில்லை; அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால், தேர்ந்த ஓர் ஓவியத்தில் நம்மைப் பார்த்துக்கொண்டால், அது இறவாமைக்குச் சமம்தானே. ஓவியர் டிராட்ஸ்கி மருது என்னை ஓவியமாக வரைந்து கொடுத்தால் மிக்க மகிழ்வேன்’ - மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சாம் ஜார்ஜ் அனுப்பிய மின்னஞ்சல் இது.

``எப்போ வேணும்னாலும் வாங்க” என டிராட்ஸ்கி மருது சந்தோஷமாகச் சம்மதித்தார்.

கதவில், ‘டிராட்ஸ்கி மருது’ என்ற பெயர்ப்பட்டையே கலைநயத்துடன் இருந்தது. அழைப்பு மணியை அடித்ததும், கதவைத் திறந்து நிறைந்த புன்னகையோடு வரவேற்றார் மருது.

அமெரிக்கன் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக மருது கலந்துகொண்ட நிகழ்வை சாம் ஜார்ஜ் சொன்னதும், ``அடடே... ஞாபகம் வந்துடுச்சு” என்று, வந்த வேலையை மறந்து இருவரும் உரையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

``எனக்கு ஓவியர்கள் மேல பொறாமை உண்டு. அதுவும் உங்க மேல அதிகமான பொறாமை. நானும் அதே மாதிரி கோடுதான் போடுறேன். ஆனா, நீங்க போடுற கோடுகளில் என்னமோ இருக்கு. எந்த வயசுல வரைய ஆரம்பிச்சீங்க?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சாம் ஜார்ஜ்தான் உரையாடலை ஆரம்பித்தார்.


``சின்ன வயசுலேயே வரைய ஆரம்பிச்சுட்டேன். எட்டாவது படிக்கிறப்ப சுவர் ஓவியங்கள் வரைவேன். எங்க மாமா அரசியலில் இருந்தார். தோளில் தூக்கிவெச்சுக்கிட்டு அரசியல் கூட்டங்களுக்கு என்னைக் கூட்டிட்டுப் போவார். ஒருமுறை நிலக்கோட்டையில் 20-க்கு 15 அடி அளவு சுவர்ல ஓவியம் வரைஞ்சேன். அந்த அனுபவம்தான் இப்போ வரைக்கும் ஸ்பேஸை ஹேண்டில் பண்றதுக்கு எனக்கு ரொம்ப உதவியா இருக்கு.”

`ஸ்பேஸை ஹேண்டில் பண்றது’ எனச் சொன்னதும் புரியாமல் பார்த்தார் சாம் ஜார்ஜ்.

``ஒரு படத்தை, ஒரு ஏ-4 பேப்பரில் வரையலாம். சற்றுப் பெரிய பேப்பர்னாகூட ஓகே. ஆனா, இன்னும் பெரிய பேப்பர், இன்னும் பெரிய இடம்னு பார்த்தா, பலருக்குப் பிரமிப்பாகிடும். இவ்ளோ பெரிய இடத்துல எங்கே கை வரணும், எங்கே கால் வரணும், எங்கே காது வரணும்னு மனசு யோசிக்க ஆரம்பிச்சுடும். எனக்கு அந்தப் பயம் இல்லாததுக்கு, சின்ன வயசுல இருந்து வரைவதும் ஒரு காரணம்” என்று பேசிக்கொண்டே கண்களால் சாம் ஜார்ஜை அளவெடுத்தார் மருது.

``அவ்ளோ சின்ன வயசுலேருந்து வரையறீங்கன்னா நிறைய பேர் பாராட்டி யிருப்பாங்களே?” - இது சாம் ஜார்ஜ்.

ஆசை - உயிரோவியம்

``ஆமா... ஒருமுறை மதுரை தமுக்கம் மைதானத்துக்கு அண்ணா வர்றார். ரெண்டு பக்கங்களிலும் நான் வரைஞ்ச ஓவியங்களை வெச்சிருந்தாங்க. அந்த ஓவியங்கள் வரைஞ்சிருந்த வழியாத்தான் அவர் வந்தார். அப்ப எனக்கு அவ்ளோ பெருமையா இருந்தது.”

இருவருக்குமே சொந்த ஊர் மதுரை என்பதால், பேச்சு மதுரை பற்றியே சுற்றிவந்தது.

``ஸ்கூல்ல படிச்சது பாதின்னா, ரீகல் தியேட்டரில் படிச்சது மீதி” என்று மருது சொன்னதும், ``வாவ்... ரீகல் தியேட்டர். இப்ப வரைக்கும் அந்த டிசிப்ளின் எங்கேயும் இல்லை'' என்றார் சாம் ஜார்ஜ்.

``நிறைய ஆங்கிலப் படங்கள்தான் ஓட்டுவாங்க. இத்தனையாவது வரிசை சேர்ல, இவர்தான்னு ஆள்களை அடையாளம் சொல்ற அளவுக்குப் பலர் தொடர்ந்து வருவாங்க. ஜட்கா வண்டி ஓட்டுறவரா இருப்பார். ஆனா, `ஸ்வார்டு இன் த ஸ்டோன்' படத்தைப் பிரிச்சுமேய்வார்.

எம்.ஜி.எம் வாரம், டைரக்டர்கள் வாரம்னு ரீகல் தியேட்டர்தான் எங்களுக்கு ஸ்கூல். பல படங்களைப் பார்த்தா புரியாது. ஆனா, அவை நமக்கான படங்கள்னு தெரிஞ்சுக்கிட்டு, அவற்றைப் பற்றிப் படிப்பேன்” எனப் பழைய நினைவுகளில் மூழ்கிய மருது, கேன்வாஸ் பேப்பரை எடுத்து வந்தார். பேனாக்களில் ஒவ்வொன்றாகப் பார்த்து, தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டார்.

எதிரில் இருக்கும் இடத்தில் சாம் ஜார்ஜை உட்காரச் சொன்னவர், எல்லா கோணங்களிலும் நின்று அவரைக் கண்களால் மேய்ந்தார். `லைட்டிங் சரியா விழல' எனச் சொல்லிக்கொண்டே லைட்டைக் கொஞ்சம் நகர்த்திவைத்தார். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நான் விழிப்பதைப் பார்த்ததும் சிரித்தார்.

ஆசை - உயிரோவியம்

``உடம்புல லைட் எங்கே பட்டு, எங்கே நிழல் விழுதுனு பார்க்கணும். அது சரியில்லைன்னா, வரையறதுல திருப்தி கிடைக்காது” என்றவர், லைட்டை வலதுபுறம் எடுத்து வைத்தார்.

இத்தனை நேரம் பேசிக்கொண்டே, சாம் ஜார்ஜை எந்தக் கோணத்தில் எப்படி வரைவது என்ற மனப் பிம்பத்தை உருவாக்கிக் கொண்டார். அதற்குத் தகுந்தாற்போல் வரைய வேண்டியவரையும் இருத்திக்கொண்டார் என்பது எல்லோருக்கும் புரிந்தது.

டெக்னிக்கலாக ஆப்பிள் பென்சில் வைத்துக்கொண்டு, ஐபேடில் வரைந்து காண்பித்தார். ``இந்தக் கால ஓவியங்கள் எல்லாம் இனி கணினியில்தான்’’ எனச் சொன்னபோது,

``இதுதான் எதிர்காலம்னு பல வருஷங்களுக்கு முன்னாடியே நான் சொல்லிட்டேன். சென்சிட்டிவ் டேப்லெட் வந்ததுல இருந்து இப்ப வரைக்கும் வரைவதற்கு எல்லாத்தையும் உபயோகிச்சிருக்கேன். க்ரியேட்டிவிட்டிக்கு எல்லை இல்லை. அதனால் எப்படி வேணும்னாலும் விளையாடலாம்” என்றவர், ஓர் ஓவியத்தை லேயர் லேயராகப் பிரிப்பதைக் காண்பித்தார்.

 ``சரி ஆரம்பிக்கலாம்’' என்றவர், சாம் ஜார்ஜுக்கு எதிரில் டீபாயை நகர்த்திப்போட்டு அதன் மேல் உட்கார்ந்தார். கேன்வாஸ் பேப்பரில், பேனாவை வைக்க ஆரம்பித்தவரின் கைகள் நிற்கவே இல்லை. பேனாவிலிருந்த கறுப்பு மை, கடகடவெனக் கோடுகளாக பேப்பரை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சாம் ஜார்ஜின் கண்ணாடி, சட்டையின் சுருக்கங்கள், தாடையில் இருந்த சின்ன வெட்டு... என ஒவ்வொன்றும் காகிதத்தில் டீட்டெய்லாக விழுந்துகொண்டிருந்தது. அவர் கை வைத்திருந்த கட்டில், இடதுபுறம் இருந்த தலையணைகள் எல்லாம் வேறு வேறு வடிவத்தில் படத்தில் உருமாறிக்கொண்டிருந்தன. 15 நிமிடங்கள்கூட இருக்காது.

``இந்தாங்க’' என்று எழுந்தார் மருது. கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் ஓவியத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார் சாம் ஜார்ஜ். பிறகு, மருதுவை நிமிர்ந்து பார்த்தார்; மீண்டும் ஓவியத்தைப் பார்த்தார். பேச்சற்று இருந்தவரிடம், ``லைட்டிங் எனக்குத் திருப்தியா இல்லை. மறுபடி உட்காருங்க’’ என்றவர், இன்னொரு பேப்பரை எடுத்தார். மீண்டும் வரைய ஆரம்பித்தார். மின்னல் வேகம். முகத்தை மட்டும் வரைந்து கொடுத்தார். வாங்கிப் பார்த்த சாம் ஜார்ஜ், ``இது மேஜிக்தான் சார். இவ்ளோ வேகமாவா?!” என்று பிரமித்துப்போனார்.

ஆசை - உயிரோவியம்

விடைபெறும் முன்னர், சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று வந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் ஓவியர் மருது.

``பிரான்ஸில் ஓவியர்கள் மீது அபார மரியாதை வெச்சிருக்காங்க. பிகாஸோ இருந்த இடத்துக்குப் போனேன். பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாமே காமிக்ஸ்தான். விளம்பரங்கள் உருவாக்கத்தில்கூட ஓவியர்கள்தான் இருக்காங்க” என்றவர், ``இனிமேல் எல்லா பகிர்தல்களும் படம் மூலமாத்தான் நடக்கும். இப்பவே, வாட்ஸ்அப்ல ‘எங்கே இருக்க?’னு கேட்டா, செல்ஃபிதான் பதிலா வருது. மீம்ஸ்ங்கிறதும் அப்படித்தானே. பல வார்த்தைகளில் எழுதவேண்டியதை மீம் போட்டுச் சொல்லிடுறாங்களே” என்றார்.

``ஒரு ஓவியம்தான் கேட்டு வந்தேன். ரெண்டு வரைஞ்சு கொடுத்துட்டீங்க. அதைவிட, இங்கே இருந்த இந்த நேரத்தை மறக்க முடியாது. நீங்க பகிர்ந்துகிட்ட விஷயங்களும் அப்படி. கோடுதான்... ஆனா, உங்க பேனாவிலிருந்து வர்றப்ப, வேற வடிவம் எடுக்குது. உங்க மேல பொறாமை அதிகமாகிட்டேபோகுது” என்றார் சாம் ஜார்ஜ்.

``எப்ப சென்னை வந்தாலும் வீட்டுக்கு வாங்க” என்று அதே புன்னகையுடன் அனுப்பிவைத்தார் மருது. தன் உருவத்துக்கு உயிர் கிடைத்த மகிழ்வுடன் புறப்பட்டார் சாம் ஜார்ஜ்!

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...

ஆசை - உயிரோவியம்

ஆசை
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism