Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40

ம.செந்தமிழன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40

ம.செந்தமிழன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40

`இயற்கைக்குத் திரும்புதல்', `மரபுக்குத் திரும்புதல்' ஆகிய வாசகங்கள் இப்போது முக்கியத்துவம் பெற்றுவிட்டன. நவீன சமூகக் கட்டமைப்பின் தொல்லைகளில் இருந்து தப்பிச்செல்ல முயற்சிப் போருக்கான அடைக்கலம், ‘திரும்புதல்’ என்னும் சிந்தனை. இதுவரை நாம் வந்த வழி, தீவினைகளை நம் மீது சுமத்துவதாக இருப்பதால், திரும்பிச் செல்வோம் என்ற எண்ணம் ஓங்கிவருகிறது. இவ்வாறு திரும்பிச் செல்வோர் எல்லோரும் பழைமைவாதிகள் என்ற குற்றச்சாட்டு வீசப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

தமிழகச் சூழலில், மரபுகளைப் பற்றிய எல்லா உரையாடல்களும் ‘பழைமைவாதம்’ என்ற அழுத்தமான முத்திரைக்குள் அடக்கப்படுகின்றன. குறிப்பாக, இறைக்கொள்கைகளையும் இயற்கையியலையும் இணைத்துச் செயல்படுவோர் மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இறை, இயற்கை ஆகிய இரு கருத்துகளையும் நமது சமூகம் ஒருகாலத்திலும் விட்டுக்கொடுத்தது இல்லை. `இறையும் இயற்கையும் ஒன்றுதான்’ என்ற புரிதல்கொண்டோர் நம்மிடையே அதிகம்.

நவீன அறிவியலின் மூலவர்களில் ஒருவரான ஐன்ஸ்டீனிடம், ‘நீங்கள் நாத்திகரா?’ எனக் கேட்கப்பட்டபோது, `நான் நாத்திகன் அல்ல’ என்றார். இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், தனது இறைக்கொள்கையைப் பற்றிய விளக்கங்களையும் அவர் தெள்ளத் தெளிவாகப் பதிவுசெய்தார். அவற்றில் மிகப் பரவலாக அறியப்பட்ட விளக்கம் இது...

‘எவ்வளவுதான் உயர்தரமான சிந்தனைகளுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும், மனித மனத்தினால் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஒரு குட்டிக்கதை சொல்கிறேன் கேளுங்கள். ஒரு சின்னஞ்சிறு குழந்தை, மாபெரும் நூலகத்துக்குள் நுழைகிறது. அந்த நூலகத்தின் சுவர்களையும் மேற்கூரையையும் முட்டும் அளவுக்கு, ஏராளமான புத்தகங்கள் உள்ளன. பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் அவை. அந்தப் புத்தகங்கள் எல்லாம் ஏதோ ஒரு மர்மமான முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மர்மத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தக் குழந்தைக்கு, அந்தப் புத்தகங்களின் மொழியும் புரியவில்லை, அதன் வரிசை முறையும் புரியவில்லை. இந்தக் குழந்தை அந்தப் புத்தக வரிசை, அவற்றின் உள்ளடக்கங்கள் ஆகியவை பற்றி தனக்குத் தெரிந்தவகையில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறது. உண்மையில் அந்தக் குழந்தையால், எதையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், மெல்லிய சிறு சந்தேகங்களைத்தான் தனக்குள் எழுப்பிக்கொள்கிறது. கடவுள் குறித்த மனிதர்களின் புரிதல் இதுதான் என்பது என் கருத்து. கடவுள் கொள்கையைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தமான தத்துவத்தை முன்வைத்தவர் ஸ்பினோசா (Spinoza) என்னும் நவீனச் சிந்தனையாளர்.’

ஸ்பினோசா, 17-ம் நூற்றாண்டில் நெதர்லாந்தில் வாழ்ந்த சிந்தனையாளர். அவரது இறைக்கொள்கை யின் சுருக்கம் இது...

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`பிரபஞ்சத்தில் உள்ள எல்லாம் ஒன்றிலிருந்து தோன்றியவைதான். அந்த ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. அந்த ஒன்று, தன்னைத்தானே விரித்துக்கொள்கிறது. அந்த ஒன்றுதான் அனைத்துப் பொருள்களுமாக உள்ளது. அந்த ஒன்றில் யாவும் அடக்கம். எல்லா உயிர்களும் பொருள்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவைதான். இங்கே எதுவும் தனித்து இயங்குவதில்லை. இந்த அண்டத்தின் எல்லா இயக்கங்களும் தெளிவான திட்டத்துடன், விதிகளுடன் இயங்குகின்றன. மூலப் பரம்பொருள் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டது. அந்த மூலத்தை எவரும் தோற்றுவிக்கவில்லை. மூலப் பரம்பொருள் கால எல்லைக்கு அப்பாற்பட்டது. அந்த மூலப் பரம்பொருள்தான் கடவுள் அல்லது இயற்கை.’

ஸ்பினோசா தனது நூலில் `கடவுள் அல்லது இயற்கை’ என்ற சொல்லை ஒரே பொருளில் பயன்படுத்தினார். அதாவது, கடவுள் என்றாலும் இயற்கை என்றாலும் ஒன்றுதான் என்பது அவர் கருத்து. லத்தீன் மொழியில் இந்த வாசகத்தை, Deus Sive Natura என அவர் எழுதினார். இந்தக் கருத்தை ஐன்ஸ்டீன் தனது மனப்பூர்வ ஒப்புதலுடன் பல்வேறு இடங்களில் பதிவுசெய்தார்.

நாத்திகக் கருத்தாளர்கள் பலர், ஐன்ஸ்டீனைத் தமது கொள்கைக்கு ஆதரவானவர் எனப் பரப்புரை செய்தனர். அவர்களது செயலைக் கண்டித்த ஐன்ஸ்டீன் சற்றே எரிச்சலுடன் உதிர்த்த சொற்கள் இவை...

‘நான் நாத்திகன் அல்ல. கடவுள் இல்லை எனக் கூறும் மக்கள் இப்போதும் இருக்கிறார்கள். அந்த நாத்திகர்கள் எல்லோரும் தங்களது கருத்துகளுக்கு ஆதரவாக என்னை இணைத்துப் பேசுகின்றனர். இதைக் கண்டால் எனக்குக் கோபம் வருகிறது.’

ஐன்ஸ்டீன், ஸ்பினோசா ஆகியோர் கடவுள் என்ற பேரில் சித்திரிக்கப்படும் ‘மனித உருவ’ வடிவங்களை எதிர்த்தனர். ஆனால், உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, எல்லா உருவங்களாகவும் இருக்கும் பேராற்றலை அவர்கள் ‘கடவுள் அல்லது இயற்கை’ என்று குறிப்பிட்டனர். அந்தக் கடவுளின் முன் எளிமையுடனும் பணிவுடனும் நடந்துகொண்டனர்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40

`ஒரு பொருள் எப்படி இருக்கிறது என்பதை அறிவியல் விளக்கலாம். ஆனால், அந்தப் பொருள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவியலால் கூற முடியாது’ என்றார் ஐன்ஸ்டீன்.

நவீன அறிவியலின் வழியாகவே மனித வாழ்வியலை வார்த்தெடுக்க முற்பட்ட பகுத்தறிவாளர்களை அவர் கடுமையான சொற்களால் சாடினார். இயற்கை வாழ்வியல் அல்லது மரபு வாழ்வியல் ஆகிய கருத்துகளுடன் இறைக்கொள்கையும் இணைந்தே இருக்கும் என்பதுதான் உண்மை.

`இயற்கையை மனிதனால் வெல்ல முடியும். இயற்கையைவிட மனிதன் மேலானவன்’ என்ற முழக்கங்களை எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக் கலாம். இயற்கை வேறு, மனிதன் வேறு என்ற அரைகுறைப் புரிதல்கொண்டவர்களால்தான் இவ்வாறு சிந்திக்க முடியும். இயற்கை என்னும் பேருடலில் மனிதர்கள் சின்னஞ்சிறிய அதற்கும் சிறிய நுண்ணுயிரிகள். நவீனச் சிந்தனைகள் அனைத்தும், மனிதர்களின் மேலாதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கின்றன. `மலைகளை வெட்டி விற்பனைசெய்வது குற்றமல்ல. ஆறுகளைச் சுரண்டுவது தவறல்ல. காடுகளை அழிப்பது பாவமல்ல. ஏனெனில், அவை அனைத்தும் மனிதர்களின் பயன்பாட்டுக்கானவை மட்டுமே’ என்பது அவர்களது நம்பிக்கை.

பூமி எங்கும் நிகழும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் போராட்டங்களில், பழங்குடி மக்கள் முன்னிலையில் இருப்பதற்கான காரணம் இதுதான். பழங்குடிச் சமூகங்கள் அனைத்தும், ஆழ்ந்த இறைப்பற்றுமிக்கவை. அவர்களைப் பொறுத்தவரை இறை என்றால், தனித்து இயங்கும் மனித உருவ வடிவமல்ல. மரம், மலை, ஆறு, அருவி, பறவைகள் போன்ற இயற்கை அங்கங்கள் யாவும் இறைவடிவங்கள்தான். அதனால்தான், ஒரு மலையில் வெடி வைக்கப்பட்டால், அறிவுச் சமூகம் வேடிக்கை பார்க்கிறது; பழங்குடிச் சமூகம் எதிர்த்து நிற்கிறது.

`எல்லாம் நீதான். எல்லா பொருள்களுக்குள்ளும் இருக்கும் உட்பொருளும் நீதான். நீ ஓரிடத்தில் தங்குவதும் இல்லை. உன்னிடத்தில் நிலையாகத் தங்கும் பொருளும் ஏதுமில்லை. எல்லா பிறவிகளும் நீதான். உன்னை நீயே பிறப்பித்துக் கொண்டதால், உன்னைப் படைத்தோர் எவரும் இல்லை’ - என்பது நமது சங்க இலக்கியமான பரிபாடல் (மாயோன் வாழ்த்து – 3 ) பதிவுசெய்த இறைக்கொள்கை.

`அண்டத்தின் எல்லா பொருள்களும் நீதான். இயற்கையின் வடிவங்களும் நீதான், உட்பொருள்களும் நீதான்’ என இறையைப் போற்றும் பாடல் இது. இறை, இயற்கை ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பொருத்தி வழிபடும் பக்குவம் நம் மரபில் ஆதி முதல் இன்றுவரை நீடிக்கிறது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40

இயற்கை என்பது மரம், செடி, கொடி, ஆறு எனக் கண்களுக்குத் தெரியும் அழகிய காட்சிப்பொருள்கள் அல்ல. அண்டத்தில் உள்ள யாவும் இயற்கைதான்; அண்டமே இயற்கைதான். மனிதர்களும் இயற்கையின் உட்பொருள்கள்தான்.

இயற்கை அழிந்தால் மனிதர்களும் அழியத்தான் வேண்டும் என்ற மிக எளிய புரிதல்கூட பெரும்பாலான நவீனர்களுக்கு இல்லை. `எதையும் புனிதப்படுத்தாதீர்கள்’ என்பது அவர்களுக்குப் பிடித்தமான வாசகம். ஆனால், மரபுவழிச் சிந்தனையில் ஊறிக்கிடக்கும் மனிதர்களுக்கு, அவர்கள் வளர்க்கும் மாடும் மரமும்கூட புனிதமானவைதான். மனிதர்களின் ஆழ்மனதிலிருந்து வெளிப்படும் பண்பு இது. இந்தப் பண்புதான் இறுதிக்கும் இறுதியாக மனிதர்களைக் காக்கும் அரண். ஏனெனில், மாடுகளும் மரங்களும் இல்லாத நிலப்பரப்பில் மனிதர்களால் நல்ல காற்றைச் சுவாசிக்கவும், நல்ல உணவை உண்ணவும் முடியாது. இயற்கையின் பிணைப்பிலிருந்து ஓர் உயிரினத்தை அகற்ற முயற்சிப்பது தற்கொலைக்குச் சமமானது.

நேற்று வரைக்கும் பறவைகள் அமர்ந்து இசை பாடிய மரம் ஒன்று, இன்று கண்ணெதிரே வெட்டி எறியப்பட்டால், அதைக் கண்டு துடிப்பதும் வருந்துவதும், மனிதர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு. அந்தத் தவிப்புதான் மனிதர்களுக்கும் மரத்துக்குமான பிணைப்பு. மரத்தின் வேரைத் தோண்டி எடுக்கும் இயந்திரத்துக்கும், இந்தக் காட்சியை வேடிக்கை பார்க்கும் மனிதருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும் அல்லவா? வேர்களை வெட்டுவதற்காக இயந்திரம் வருந்தாது; மனிதர்கள் கலங்க வேண்டும். இதுதான் அன்பு. எல்லா உயிர்களின் மீதும் அன்புசெலுத்தும் வகையில்தான் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.

சக உயிர்களைப் பாதுகாத்தல், தேவைகளுக்காக அந்த உயிர்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகிய இரட்டைத்தன்மைகளும் நமது மரபில் எப்போதும் கலந்திருப்பவை.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற மந்திரத்தை ஆசான் திருவள்ளுவர் இயற்றினார். மரங்களை நமது தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அதேவேளை, மரங்களின் எண்ணிக்கையும் வகைகளும் குறையாமல் / சிதையாமல் பாதுகாக்க வேண்டும். இதுதான் ‘ஓம்புதல்’ எனும் சொல்லுக்கான பொருள்.

நவீனப் பகுத்தறிவின் பேரால், சக உயிர்களின் மீதான அக்கறையை இழப்பது ஆபத்தானது. சுரங்கம் தோண்டும்போது, நிலத்துக்கு வலிக்காது. ஆனால், அந்தச் சுரங்கங்களால் உருவாகும் வறட்சி மற்றும் நிலநடுக்கங்களால் மனிதர்களுக்கு வலிக்கும். காடுகளை அழிக்கும்போது, மரங்களுக்குத் துன்பம் இல்லை. ஆனால், அந்தக் காடுகள் தந்த காற்றையும் நீரையும் இழப்பதால் மனிதர்கள் துன்பப்படுவார்கள். மலைகளை வெட்டி விற்பனை செய்யும்போது பாறைகள் கண்ணீர் சிந்துவதில்லை. அந்த மலைகள் இல்லாததால் உருவாகும் வெப்பத்தாலும் வெள்ளத்தாலும் மனிதர்கள் கண்ணீர்விட்டுக் கதற வேண்டியிருக்கும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40

பூமியின் உயிரினங்களைத் தாவரம், சங்கமம் என்ற இருவகைகளில் பகுத்துப் பதிவு செய்தார் ஆசான் மாணிக்கவாசகர். தாவர வகைகள் – தாமாக ஓரிடத்திலிருந்து நகராதவை. நகர்ந்து சென்றுகொண்டிருக்கும் உயிரினங்கள் – சங்கம வகைகள். இவற்றில் முதல் வகையான தாவர வகை உயிர்களுக்கு வலி, துன்பம் ஆகிய உணர்ச்சிகள் இல்லை. சங்கம உயிர்களுக்கு இவை இரண்டும் உண்டு. இவற்றிலும், மனிதர்களுக்கு ஆறாம் அறிவாகிய மனம் இருப்பதால், வலியும் துன்பமும் அதிகமாக உண்டு. மற்ற உயிரினங்களைக் காட்டிலும் பிரபஞ்சத்தையும் அதன் இயக்க விதிகளையும் மனிதர்களால் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும். எந்த மனிதர்களுக்கு அதிக அறிவு வழங்கப்பட்டதோ, அதே மனிதர்களுக்கு அதிக வலியும் துன்பமும் வழங்கப்பட்டுள்ளன.

`உங்களைவிட குறைந்த அறிவுகொண்ட உயிரினங்களைத் துன்புறுத்தினால், அவற்றின் வலிகளையும் துன்பங்களையும் சேர்த்து நீங்கள் அனுபவிக்க வேண்டும்’ என்ற மறைமுக விதி இது என்பது என் புரிதல்.

இறை நம்பிக்கையின் பேரால், காடுகளை அழிப்போரும் உண்டு. நாத்திக அடையாளங்களோடு ஆறுகளைக் காப்போரும் உண்டு. அறிவுபூர்வமான கொள்கைகளைக் காட்டிலும் உணர்வுகளின் உறைவிடமான மனம் வலிமையானது.

இயற்கை வாழ்வியலுக்குத் திரும்புவோர் மண்ணையும் மண்புழுக்களையும் முத்தமிடுகிறார்கள். பட்டாம்பூச்சிகளைக் கண்டால், குழந்தைகளைப்போல சிலிர்க்கிறார்கள். காடுகளில் மான்குட்டிபோல திரிய விரும்புகிறார்கள். இந்த மனம்தான் இயற்கை வளங்களை மீட்டுத் தரும்.

அறிவியல், சமயம் ஆகிய இரண்டும் இணைந்தே உருவானவை என மரபுக் கொள்கையாளர்கள் கூறும்போதெல்லாம், கேலி செய்வது தமிழகப் பகுத்தறிவாளர்களின் வழக்கம். ‘சமயக் கொள்கை இல்லாத அறிவியல், ஊனமானது. அறிவியல் கொள்கை இல்லாத சமயம் குருடானது’ என்பது ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற வாசகம்.

மரபு வாழ்வியலுக்குத் திரும்பும் வழியில் நவீனப் பகுத்தறிவுவாதத்தின் கேலிகளையும் பழிச் சொற்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். `முட்டாள்’, ‘அரைவேக்காடு’ போன்ற பட்டங்கள் உங்களுக்கும் சூட்டப்படலாம். அவை அனைத்தையும் ஒரு புன்னகையால் ஒதுக்கிவிட்டு வாருங்கள். நமது வாழ்க்கையையும் பூமியின் கட்டமைப்பையும் பாதுகாப்போம். நம்மால் இவற்றைச் செய்ய முடியும். ஏனெனில், நாமும் இறையின் துகள்களே.

-முற்றும்