Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 27

ஆண்பால் பெண்பால் அன்பால் - 27
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 27

#MakeNewBondsஇயக்குநர் நவீன் - படங்கள்: அருண்டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 27

#MakeNewBondsஇயக்குநர் நவீன் - படங்கள்: அருண்டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 27
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 27
ஆண்பால் பெண்பால் அன்பால் - 27

பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?

பல முறை, பல தருணங்களில், பல்வேறு காலகட்டங்களில், வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் இந்தக் கேள்வி எனக்குள் எழுந்தவண்ணம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பதில்களின் சாரமும் அர்த்தமும் மாறியிருக்கின்றனவே தவிர, பதில் ஒன்றுதான்.

பெண்கள் இல்லாத உலகம், வாழத் தகுதியற்றது. என் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் பெண்களே நிறைந்திருக்கிறார்கள். அம்மா, அக்கா, பாட்டி, சகோதரிகள், சித்திகள், அத்தைகள், தோழிகள், காதலிகள், மனைவி, மகள் எனக் கணக்கிட முடியாத அளவிலான பெண்களை, இந்த மூவருக்குள் அடக்கலாம்... அம்மா, மனைவி சிந்து, மகள் சிவீன்.

ஆண் பெண் உறவு குறித்த என் கருத்துகளையும் பார்வையையும், மூன்று காலங்களிலிருந்து எடுத்துக்கொள்கிறேன். இறந்தகாலத்தில், நான் பார்த்து வியந்த என் தாய் தந்தையின் உறவு. நிகழ்காலத்தில், எனக்கும் என் மனைவிக்குமான உறவு. எதிர்காலத்தில், என் மகளுக்கான உறவுகள் எப்படி இருக்கும் என்ற என் எண்ணமும் விருப்பமும்.

இறந்தகாலத்தில், என் தாய் தந்தையின் உறவுக்கும் அந்தக் காலகட்டத்திலிருந்த பொதுவான ஆண் பெண் உறவுக்கும் இடையில் இருந்த வேறுபாடுகளின் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடமே, நிகழ்காலத்தில் எனக்கும் என் மனைவிக்குமான உறவைத் தீர்மானிக்கிறது. என்னுடைய இந்த இறந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான வேறுபாடுகளே, என் மகளின் எதிர்கால உறவுகளுக்கான விருப்பத்தை விதைக்கின்றன.

இந்த உலகின் மிகச்சிறந்த காதலர்கள், எனக்குத் தெரிந்து என் பெற்றோர்தான். கட்டுக்கோப்பான ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் கோஷா பர்தா முறையில் வளர்ந்த என் அம்மா, திருமணத்துக்குப் பிறகுதான் முதன்முதலாக வெளியுலத்தைப் பார்த்தார். அவர் தியேட்டருக்குச் சென்று சினிமா பார்த்ததுகூட, என் அப்பாவைத் திருமணம் செய்த பிறகுதான்.

சக நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது அவர்களின் அப்பாக்கள் வீட்டில் இருந்தால், அந்த வீடு

ஆண்பால் பெண்பால் அன்பால் - 27

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முழுக்க அச்சமும் அமைதியும் சூழ்ந்திருக்கும். அந்தச் சிறு வயதில் எனக்கு அது சற்று விநோதமாகவே தோன்றியது. காரணம், என் வீட்டுச் சூழல் வேறு. அப்பா ஒரு நண்பனாகவே இருந்தார். அவர் இருக்கும்போது வீடு அவ்வளவு கலகலப்பாக இருக்கும். அம்மா அப்பா இருவரும் சண்டைபோட்டு நான் பார்த்ததே இல்லை. அம்மா சமைத்துக் கொண்டிருக்கும்போது, பின்னால் இருந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார். திருமண நாளில் விடியற்காலையில் சர்ப்ரைஸாகப் பரிசுகள் கொடுப்பார். வேலைக்குச் செல்லும் போது அம்மாவுக்கு முத்தம் கொடுக்காமல் சென்றதே கிடையாது. இப்படி எங்கள் வீடு என் பெற்றோரின் காதலால் எந்நேரமும் நிரம்பி வழியும். மிகச்சிறந்த ஒரு கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது என் பெற்றோர்தான்.

திருமணமான பத்தாவது வருடத்தில், அப்பாவுக்கு மூளையில் கட்டி உருவாகி அறுவைசிகிச்சை நடந்தது. ரேடியோதெரப்பி கொடுத்ததால் அப்பாவின் இடதுபக்கம் முழுதாகச் செயலற்றுப்போனது.

அப்பா அசைவின்றி இரண்டு வருடங்கள் படுக்கையில் இருந்தபோது, அம்மா அவரைக் கவனித்துகொண்ட விதத்தை என்னால் மறக்கவே முடியாது. விவரம் அறியாத வயதில் பார்த்த அந்தக் காட்சிகளுக்கு அர்த்தம் இன்றே புரிகிறது. காலையில் அப்பாவைக் கழிவறையில் அமர்த்தி, அவருக்குச் சவரம் செய்து, உணவும் மருந்தும் கொடுத்து, குளிப்பாட்டி, தன் தோள்களில் தாங்கி அவருக்கு நடைப்பயிற்சி கொடுத்து, சமைத்து, துணிகளைத் துவைத்து, எங்களையும் கவனித்துக்கொண்டு இரவு தூங்கப்போக 11 மணி ஆகிவிடும்.

அப்பா உறங்கிய பிறகு, அவருக்குத் தெரியாமல் அம்மா அழுது ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வதை, பல நாள் நான் பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கு முன்னால் அம்மா ஒரு நாளும் அழுததுமில்லை; அம்மாவிடம் அப்பா தன் உடல்வலிகளைச் சொல்லிப் புலம்பியதுமில்லை. ஒருவரின் சோகம் மற்றவரைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக, இருவரும் ஒரு புன்னகையுடனேயே இருப்பர்.

TNPL காகித ஆலை காலனியில்தான் நாங்கள் அப்போது வசித்தோம். ஆண்கள் வேலைக்குச் சென்ற பிறகு, பெண்கள் ஏதாவது ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து கலகலவெனப் பேசிக்கொண்டிருப்பர். அவர்களுக்கான ஒரே பொழுதுபோக்கு அதுதான். ஆனால், அப்பாவின் உடல்நிலை சரியில்லாமல்போன பிறகு, அம்மா இந்த அமர்வுகளைப் புறக்கணித்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அப்பா அடிக்கடி அம்மாவிடம் ‘ஹிதா, கீழே போயி கொஞ்ச நேரம் அவங்களோடு உட்கார்ந்து பேசிட்டு வாடா... வீட்டுக்குள்ளேயே இருக்காதடா’ எனக் கெஞ்சுவார்.

ஆனால் அம்மா, அப்பாவை ஒரு நொடியும் ஒரு கணமும் பிரிந்ததே இல்லை... அப்பா, எங்களையெல்லாம் நிரந்தரமாகவிட்டுப் பிரிந்து சென்ற அந்த இறுதி நாள் வரை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 27

அந்த இரண்டு வருடங்கள், அம்மாவிடம் ஒரு சதவிகிதம்கூடச் சலிப்பையோ சோர்வையோ நான் பார்த்ததேயில்லை. எனக்கு விவரம் தெரிந்த பிறகுதான் அம்மாவின் தியாகத்தை உணர முடிந்தது. ஆனால், அவரைப் பொறுத்தவரையில் அது தியாகம் அல்ல; அத்தனை அன்பு, அத்தனை காதல் அப்பா மீது. காரணம், ஒரு கூண்டுக்கிளியாக இருந்த அம்மாவுக்குச் சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் காண்பித்தவர் அப்பா.

`மூடர்கூடம்' திரைப்படத்தில் `ஃபர்சானா...' பாடலில், பர்தா அணிந்த காதலிக்கு வெளியுலகத்தைக் காட்டுகிறான் காதலன் என்ற கான்செப்ட்கூட என் பெற்றோர் வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொண்டதுதான். திருமணம் எனும் சடங்கு, ஒரு பெண்ணை ஆணாதிக்கத் துக்குள் கட்டிப்போடலாம். ஆனால், அந்த ஆண் ஒருநாள் தன் அதிகாரங்களை இழந்து நிற்கும்போது, முன்பு தனக்குக் கிடைத்த பழைய மரியாதைகளையும் பணிவிடைகளையும் நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. அதிகாரத்தினால் பணிவிடைகளைப் பெற முடியும்; அன்பினால் மட்டுமே கவனிப்பைப் பெற முடியும் என்பதை, என் பெற்றோரைப் பார்த்துக் கற்றுக்கொண்டவன் நான்.

தன் 33-வது வயதில் அப்பா காலமானார். அவர் இறப்பதற்கு முன் அம்மாவிடம் கேட்டுக்கொண்டது ஒன்று மட்டும்தான். ‘ஹிதா, நான் செத்துப் போனதுக்குப் பிறகு, கம்பெனியிலிருந்து காசு வரும். நீ எது பண்றியோ இல்லையோ, நம்ம குழந்தைங்களை மட்டும் நல்ல ஸ்கூல்ல படிக்கவெச்சுடு’ எனக் கூறிச் சென்றுவிட்டார். அந்த ஒரு வாக்குறுதியைக் காப்பதற்கு, அம்மா பட்ட கஷ்டங்களையும் எதிர்கொண்ட போராட்டங்களையும் என்னால் மறக்கவே முடியாது. காதல், ஒரு பெண்ணுக்குள் எவ்வளவு வைராக்கியத்தையும் போர்க்குணத்தையும் உருவாக்கும் என்பதை எண்ணி மலைக்கிறேன்.

850 ரூபாய் பென்ஷன். அதுவரை அப்பா துணையின்றி வீட்டு வாசலைக்கூடத் தாண்டாத என் அம்மா, எங்களை அழைத்துக் கொண்டு வேலாயுதம்பாளையத்தில் தீப்பெட்டி சைஸ் மாதிரி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, நாங்கள் ஏற்கெனவே படித்த TNPL மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எங்களைச் சேர்த்துப் படிக்கவைத்தார்.

அம்மா, இரவுபகலாக பீடி சுற்றுவார். கம்பெனியிலிருந்து வந்த இழப்பீட்டுத் தொகையை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் எனப் போட்டுவைத்தும், மாதாமாதம் சீட்டுப்பணம் கட்டியும் குடும்பத்தை நடத்தி வந்தார். தந்தை இல்லாத குறை தெரியாமல் எங்களை வளர்க்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார். அம்மா, எங்களுக்காக உயிரோடு இருந்தார்; உழைத்துக்கொட்டினார் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாமே தவிர, வாழ்ந்தார் என்பது நிச்சயமாக உண்மை அல்ல. என்னையும் என் அக்காவையும் நல்ல ஒரு நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது மட்டும்தான் அம்மாவின் ஒரே இலக்காக இருந்தது.

அந்த லட்சியத்தை அடைந்த பிறகு, அவருக்கு வாழ்க்கையில் பற்றற்றுப்போனது. பார்கின்சன்ஸ் அவரைப் பற்றிக்கொண்டது. அதிகபட்சமான மன அழுத்தம் காரணமாக வரும் நோய் அது. இன்று நானும் அக்காவும் நல்ல ஒரு நிலையில் இருக்கிறோம். ஆனால், நடுக்கத்துடன் செயலற்று அமர்ந்திருக்கும் அம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் எங்களுக்குள் ஒரு குற்ற உணர்வு உறுத்துகிறது. எங்களுக்காகவே தனியொரு பெண்ணாக இந்தச் சமூகத்தில் போராடி, உழைத்து, அத்தனை மன உளைச்சல் களுக்கும் ஆளாகி, தன் வலிகளைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, தனியாகவே அழுது எங்களுக்காகத் தன்னையே உருக்கிக்கொண்டார். அடிக்கடி அம்மாவைப் பற்றிப் பேசி அழுதுகொள்வோம். வாழ்ந்தால் அம்மா அப்பாபோல வாழ வேண்டும் என நெகிழ்வோம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 27

`ஒரு பெண்ணால் என்ன செய்துவிட முடியும்?' என, ஆண் சமூகம் மிக அலட்சியமாகச் சொல்லிவிடுகிறது. ஆனால், என் வாழ்க்கையில் நான் பல பெண்களிடம் பார்த்த மன உறுதியும் தைரியமும் ஆண்களிடம் பார்த்ததில்லை. வாழ்க்கையில் நம்பிக்கையும் வைராக்கியமும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதையும், போராடுவதே வெற்றிதான் என்பதையும் உணர்த்தியவர் என் அம்மா.

தாய்க்குப் பின் தாரம் என்பர். எனக்கு, தாயைப்போலவே ஒரு தாரம் அமைந்திருக் கிறாள். என் தாயைவிட மனவலிமையும் உடல்வலிமையும் கொண்டவள் சிந்து. `மூடர்கூடம்' காட்சிகளுக்குரிய படப்பிடிப்பு முடிந்து, ஊட்டியில் ஒரு பாடலைப் படம்பிடிக்க வேண்டும். ஹைதராபாத் முஸ்லிம் பெண்போல ஒரு பெண் வேண்டும் என்ற கனவு மட்டும் பெரிதாக இருந்தது. `படப் பிடிப்புக்கே காசு இல்லை. இதில் நடிகைக்கு எங்கே கொடுப்பது?' எனும் நிலை. நண்பன் ராஜாஜி மூலம் ஹைதராபாத்தில் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த சிந்துவிடம் நிலைமையை எடுத்துச் சொன்னோம். `ஓகே' என, தனியொரு பெண்ணாக எங்களுடன் படப்பிடிப்புக்கு வந்தார். 15 பேர்கொண்ட எங்கள் குழுவுடன் ஒற்றைப் பெண்ணாக ஒரே வீட்டில் தங்கினார். அது, சிந்து எங்கள் மீதும் தன் மீதும் வைத்திருந்த நம்பிக்கை.

என்னை வியப்பில் ஆழ்த்தினாள். இவள்தான் என் மனைவி என அப்போதே முடிவுசெய்தேன். மூன்றாவது நாள் ஷூட்டிங் முடிந்த பிறகு, `உங்களுக்குச் சம்மதம் என்றால், நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்றேன். இரண்டு நாள்கள் கழித்து `எங்கள் வீட்டில் சம்மதித்தால் கல்யாணம் செய்துகொள்ளலாம்’ என்றார். படப்பிடிப்பு முடிந்து, அவர் வீட்டில் பேசினேன். என் நல்ல நேரம் என் மாமனார், பகுத்தறிவாளர்; சாதிமத நம்பிக்கையற்றவர். ஆனால், அவரின் சொந்தங்கள் எதிர்த்தனர்.

சிந்துவின் அந்தத் தைரியம் எனக்குப் பிடித்திருந்தது. உயரமான மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் நான்கு பைகளைச் சுமந்து நடந்தார். எங்களுக்கே மூச்சு வாங்கியது. ஆனால், சிந்து சோர்வடையவில்லை. சாதிமத, கடவுள் நம்பிக்கையற்ற ஒரு பெண். நாத்திகம் பேசும் பெண்களை அதற்கு முன் நான் அதிகமாகப் பார்த்ததேயில்லை. `வயலில் களை பிடுங்கி அறுவடை செய்தவள், கராத்தே மற்றும் நீச்சல் பயிற்சி பெற்றவள். என்னை வியப்பில் ஆழ்த்தினாள். இவர் இணையராக வந்தால், வாழ்க்கை இனிமையாகும்' என எண்ணினேன். புற அழகைப் பார்த்து வந்த காதல் அல்ல இது. ஒரே மாதிரியான சிந்தனைகளால் உருவான காதல்.

திருமணத்துக்குப் பல மாதங்கள் முன்பே சேர்ந்து வாழத் தொடங்கினோம். `மூடர்கூடம்' படம் முடிந்தும் வெளியாவதற்கு ஒரு வருடம் ஆனது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிந்துவின் துணையே எனக்குப் பக்கபலமாக இருந்தது. தயாரிப்புக் கணக்குவழக்குகளைப் பார்த்துக் கொண்டாள். என்னைத் துவண்டுபோகாமல் வைத்திருந்தாள். பல மாதங்கள் கழித்து இரு வீட்டார் சம்மதத்துடன் சடங்குகள் இன்றி, தாலி இன்றி எங்கள் பதிவுத் திருமணம் நடந்தது.

தயாரிப்பாளராக இருப்பதால், பல சமயங்களில் வங்கிக் கணக்குகள் பாதாளம் தொட்டு நிற்கும். நான் பதற்றமடைந்த சமயங்களில்கூட சிந்து கண்களில் பதற்றம் இருக்காது. சர்வசாதாரணமாக இருப்பாள். இனி எங்கிருந்தும் பணம் வர வாய்ப்பில்லை எனும் சமயத்தில், எனக்கே சொல்லாமல் தன் நகைகளை வங்கியில் அடகுவைத்து, படப்பிடிப்பு நடத்துவதற்குப் பணம் அனுப்பிவைப்பாள். `இந்த மாதம் ரேஷன் அரிசி தின்றால் போதும்' எனக் கட்டளையிடுவாள். எனக்கு, கோட்டாவில்தான் சிகரெட் கொடுப்பாள். `இனி அடகுவைக்க நகைகூட இல்லையே, என்ன செய்வது?' என நான் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும்போது, என்னைக் கட்டிப்பிடித்து என் தலைகோதி ‘எத்தனையோ பிரச்னைகளைச் சமாளிச்சுட்ட... இதைச் சமாளிக்க முடியாதாப்பா?’ என நம்பிக்கை தருவாள்.

நான் எதையும் சாதிப்பவன் என்று அவள் நம்புவதால் அப்படிச் சொல்கிறாளா... இல்லை அவள் அப்படிச் சொல்வதால்தான் நான் சாதிக்கிறேனா என்பதுகூட எனக்கு இன்னமும் புலப்படவில்லை. எந்தத் தருணத்திலும் அவள் எக்ஸைட்டாகி நான் பார்த்ததில்லை. எனக்கு விருதுகள், பாராட்டுகள், வெற்றிகள் கிடைக்கும் போதும் சாதாரணமாக இருப்பாள். தொலைக்காட்சியில் என் நேர்காணல்களைப் பார்க்க மாட்டாள். அதேபோல் எனக்குப் பிரச்னைகள் வரும்போதும் கலங்க மாட்டாள். எல்லா சமயங்களிலும் அதே சிறு புன்னகைதான். பதற்றப்படுவது என்பது சிந்துவுக்குப் பழக்கப்படாத ஒரு விஷயம்.

தந்தை இறந்த பிறகு, ஒருநாள் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் அம்மா தலையில் தோட்டத்திலிருந்து பறித்த ஒரு ரோஜாவை வைத்தேன். பூக்களை மிகவும் விரும்பும் என் அம்மா, என்னைத் திட்டினார். என் சொந்தங்களும் `அது தப்பு' என என்னை அதட்டினர். அதற்குப் பிறகு, அது பழக்கமாகிவிட்டது. பகுத்தறிவு பேச ஆரம்பித்த காலத்தில்கூட நான் என் அம்மாவுக்குப் பூச்சூடி பார்க்க நினைத்ததில்லை.

என் திருமணத்துக்குப் பிறகு, சிந்து என் அம்மா தலையில் மல்லிகைப்பூச் சூட முற்பட்டாள். அம்மா மறுத்தார். `நானும் பலமுறை சொல்லிவிட்டேன். அம்மா கேட்பதில்லை’ என்றேன். ‘சொல்லக் கூடாது நவீன். செய்யணும்’ எனச் சொல்லி, அம்மா தலையில் பூ வைத்துவிட்டாள் சிந்து. இருபது ஆண்டுகள் கழித்து அம்மா கூந்தலில் பூ. கண்களில் நீர். ஒரு மகனாக நான் செய்ய மறந்ததைச் செய்தது என் மனைவிதான். எனக்கு ஒரு தாயாகவும் என் அன்னைக்கு ஒரு மகளாகவும் என் அக்காவுக்கு ஒரு சகோதரியாகவும் இருக்கிறாள் சிந்து. என் அக்காவுக்கு, பாஷாவை இணையராகத் தேர்வுசெய்ததும், எனக்குச் சிந்துவை இணையராகத் தேர்வுசெய்ததும்தான் நான் வாழ்க்கையில் செய்த பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

ஏனென்றால், வாழ்க்கை என்பது தனிநபர் சார்ந்தது அல்ல; நட்பும் சமூகமும் சார்ந்தது; குடும்பம் சார்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கடைசி வரை கைகோத்துப் பயணிக்கவிருக்கும் இணையைச் சார்ந்தது.

அம்மாவின் காலத்தில் அவருக்குக் கிடைத்த வாழ்க்கையைச் செம்மையாக வாழ்ந்தார். அம்மாவுக்கு ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற சொற்கள் இருப்பது கூடத் தெரியாது. ஆனால், சிந்துவிடம் ஆணாதிக்கம் செல்லாது. ஏதேனும் கோபத்தில் என் கை ஓங்கினால், அதற்கு முன்பே அவள் கை என் கன்னத்தைப் பதம்பார்த்துவிடும். கை ஓங்கியதற்குத்தான் நான் வெட்கப்பட வேண்டுமே தவிர, அறை வாங்கியதற்கு அல்ல என்பதை உணர்ந்தவனாகவே இருக்கிறேன். என்னதான் பகுத்தறிவு பேசினாலும் இந்தச் சமூகம் எனக்குள் திணித்துள்ள ஆணாதிக்கச் சுவடுகள் என்னுள் இன்னமும் சற்று மிச்சம் இருப்பதாகவே உணர்கிறேன்.

என் வாழ்க்கை எனும் புத்தகம், அம்மா, மனைவி, மகள் என்ற இந்த மூன்று அத்தியாயங் களுக்குள் அடங்கி, முழுமை பெறுகிறது என்றே கருதுகிறேன். இதில் என் மகள் சிவீன் அத்தியாயம் இப்போதுதான் தொடங்குகிறது.

சிவீன் வாழவிருக்கும் எதிர்காலம், இந்த ஆதிக்கச் சிந்தனைகள் மறைந்துபோன, மறந்துபோன ஒன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எண்ணங்களை எண்ணியபடியே வெளிப்படுத்தும் சுதந்திரம், அவள் உரிமையாக வேண்டும். ‘என் மனைவிக்கு அனைத்துச் சுதந்திரங் களையும் நான் அளித்துள்ளேன்’ எனச் சொல்லும் போலி முற்போக்காளர்களற்றச் சமூகத்தில் அவள் வாழ வேண்டும். தன் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு, சமூகத்தின் பொதுப்புத்திக்கு ஏற்ப அல்லாமல், தன் சுயசிந்தனையில் முடிவெடுக்கும் தன்மை அவளுக்கு வாய்க்க வேண்டும். என் தாயின் தைரியமும் மனைவியின் பகுத்தறிவும் கொண்டவளாக அவள் வாழ வேண்டும் என விரும்புகிறேன்.

ஆண் பெண் உறவுகளில் பெரும்பாலும் சிக்கலாக வந்து நிற்பது, ஈகோ. தந்தையை மரியாதையாக `வாங்க... போங்க...' என்றும், தாயை `வா... போ...' என்றும் அழைத்துப் பழக்கப்பட்ட இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் வளரும் நம் ஆண்களிடம், அது சற்று அதிகமாகவே காணப்படுகிறது. முற்போக்குச் சிந்தனைகள் வளரும் இந்தக் காலத்தில், இந்த ஆதிக்கத்தை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு இந்த உறவுகளுக்குள் கட்டுண்டிருப்பது கடினமாகிறது. `அது சரி!' என ஒப்புக்கொண்டு வாழும் பெண்களுக்கு, தங்களை அறியாமல் உள்ளூர ஒரு சலிப்பும் வெறுமையும் தோன்றுகின்றன.

திரைப்படங்களின் புனைவுகளில் நாயகன் இரண்டு பெண்களைக் காதலிப்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அதே மனம் நாயகி இரண்டு ஆண்களைக் காதலிப்பதை ஏற்றுக்கொள்ளாது. காதலுக்கே இந்த நிலைதான் என்றால், காமம் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன? ஆயிரம் பெண்களுடன் கற்பனையில் கலவிகொள்ளும் ஆண்கள், தனக்கென வரும் பெண் அத்தனை ஆண்டுகளும் தன்னுடைய ஹார்மோன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு தனக்காகக் காத்திருந்து, தன்னை மட்டுமே அவள் கற்பனையில் வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட அபத்தம் ஒன்று உண்டா?

ஆண் பெண் இருவரும் ஒரே ‘உயிரி’தான். இருவருக்குள்ளும் ஒரே மாதிரியான உயிரியல் தேவைகள்தான் இருக்கின்றன. அதுதான் நிதர்சனம். அதை ஏற்கும் மனம் இருந்தால் மட்டும்தான், உண்மையான அன்பு எந்த உறவிலும் சாத்தியம்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

அருந்ததிராய்

நு
ணுக்கமான சமூக அரசியல் அறிவும், அதை எவருக்கும் அஞ்சாமல் தன் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தும் அருந்ததிராயின் துணிவும் வியக்கத்தக்கது. இவர் எழுதிய `அல்ஜீப்ரா ஆஃப் இன்ஃபினட் ஜஸ்டிஸ்’ எனும் கட்டுரைத் தொகுப்பு, மிகவும் முக்கியமானது. என் மாற்றுச்சிந்தனைக்கான கதவுகளைத் திறந்துவைத்த ஒன்று .

தோழர் திவ்யபாரதி

வணப்பட இயக்குநர்; சமூக ஆர்வலர். எல்லாவற்றுக்கும் மேலாக இளம் போராளி. சமூகம்குறித்த தெளிவான அறிவு என்பதே அரிதான ஒன்றாக இருக்கும் இந்தக் காலத்தில், உண்மையான சமூக அறிவும் அக்கறையும்கொண்டவர். சமரசமின்றிக் களம் இறங்கிப் போராடும் இவரின் போர்க்குணம், எல்லா பெண்களிடமும் இருக்கவேண்டிய ஒன்று. இவர் இயக்கிய `கக்கூஸ்' என்ற ஆவணப்படம் முக்கியமானது; அனைவரும் பார்க்கவேண்டியது.

சாரா

‘சி
ல்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தின் தங்கை கதாபாத்திரம். எட்டு வயதுச் சிறுமி. ஒரே அறைக்குள் குடும்பமாக வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு, குடும்பக் கஷ்டம் தெரியாமல்போக வாய்ப்பே இல்லை. தன் ஷூ தொலைந்துபோன செய்தி, தந்தைக்கு எவ்வளவு சிரமம் தரும் என உணர்ந்து, தன் அண்ணனுடன் சேர்ந்து அதைத் தேடி எடுக்கப் போராடும் சிறுமியை மறக்கவே முடியாது. இந்த அண்ணன் தங்கை கதாபாத்திரங்களைப் பார்க்கும்போது என்னையும் அக்காவையும் நினைத்துக்கொள்வேன்.

ஜெனிஃபர் பார்க்கர்

சிட்னி ஷெல்டன் எழுதிய ‘ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ்’ நாவலின் நாயகி. ஒரு கிராமத்திலிருந்து சட்டம் படித்து, போதிய பணமின்றி நகரத்துக்கு வந்து, பலரால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, பிறகு இந்த உலகை தனியே எதிர்த்துப் போராடி வெற்றி காணும் வக்கீல் கதாபாத்திரம், என்னை மிகவும் கவர்ந்தது. எந்தக் கணத்திலும் போராட்டக் குணத்தை இழந்திடாத பெண்ணுக்கான அடையாளம்தான் ஜெனிஃபர்.

ஆப்பக்காரப் பாட்டி

வுந்தப்பாடி மேட்டுத் தெருவில், எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒற்றைக் கிழவி. நான் சிறுவனாக இருந்தபோது எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். 90 வயதுகூட அவரை முடக்கவில்லை. மகள்கள், பேரக்குழந்தைகள் உண்டு. அவருக்கோ, `அவர்களைச் சார்ந்து வாழ மாட்டேன்' எனும் வைராக்கியம். பீடி சுற்றிச் சம்பாதித்து, அமுத்து பைப்பில் தண்ணீர்க்குடம் நிரப்பி வந்து, துணிகளைத் துவைத்து என, தன் உழைப்பிலேயே வாழும் தனித்துவமான பாட்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism