Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 28

ஆண்பால் பெண்பால் அன்பால் - 28
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 28

#MakeNewBondsசந்திரா - படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 28

#MakeNewBondsசந்திரா - படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 28
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 28
ஆண்பால் பெண்பால் அன்பால் - 28

குடும்பத்தின் வறுமையான காலகட்டத்தில் என் அம்மாவின் கர்ப்பத்தில் உதித்த மூன்றாவது குழந்தை நான். `இருக்கிற பிள்ளைகளையே வளர்க்க வழியில்ல. இதுல  மூணாவது குழந்தை வேறா?' என, என்னைக் கருக்கலைப்பு செய்ய மதுரைக்குப் போயிருக்கிறது என் அம்மா. அப்போதெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாகச் செயல்பட்ட நேரம். கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு செய்ய விரும்புவர்களை அரசு புள்ளபுடுக்கியைப்போல பிடித்துக்கொண்டுபோய், இலவச மருத்துவ சிகிச்சையளித்து, ஊக்கத்தொகையும் அளிக்குமாம். `கொலுசைக் கொடுக்க மாட்டேன்’ என அக்கா அழ அழ அவற்றைக் கழட்டி விற்றுவிட்டு, வழிச்செலவுக்கு எடுத்துப்போய், மதுரை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறது.

அம்மாவின் உடல் மிகப் பலவீனமாக இருந்ததால் கருக்கலைப்பு செய்ய முடியாது என மருத்துவர் திருப்பி அனுப்பிவிட, பஸ் பயணத்தில் வழிநெடுக `இம்புட்டுக் கஷ்டத்தில இன்னொரு புள்ளையைப் பெத்து எப்படி வளர்க்கப்போறோமோ?' எனத் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, அம்மா அழுதுகொண்டே வந்ததாம். அப்படித் தப்பிப் பிறந்தவள்தான் நான். அதோடு முடியவில்லை. நான் பெண்ணாகப் பிறந்ததால், இன்னும் பெரிய கொலைவாள்கள் பச்சிளம் குழந்தையான என் முன்னே கிடந்திருக்கின்றன. 

`எப்படி ரெண்டு பொட்டப்பிள்ளைகளை வளர்த்து கட்டிக்குடுத்துக் கரைசேர்க்கிறது’ என, நான் பிறந்தபோது ஒப்புவைத்து அழுதிருக்கிறது என் அம்மா. அப்போது எங்கள் பக்கத்தில் பெண்சிசுக் கொலை எந்தக் கேள்வியும் இல்லாமல் நடக்குமாம். பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு யாரும் குற்றவுணர்வோ வருத்தமோ அடைய மாட்டார்களாம். தப்பிப் பிறந்த என்னைக் கொல்ல கள்ளிப்பாலில் இருந்து, தொண்டைக்குழியில் நெல் மணிகளைப்போட்டுக் கொல்வது போன்ற நிறைய கொலைத்திட்டங்களோடு சொந்தக்காரப் பெண்கள் அம்மாவைச் சமாதானப்படுத்தி, சம்மதம் கேட்டார்களாம்.

அம்மா உடல் பலவீனத்தால் மயங்கிக் கிடந்திருக்கிறது. அன்று இரவுக்குள் எப்படியும் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்பதை அறிந்த என் அப்பா, அந்தப் பெண்களோடு சண்டை போட்டு, `என் மகளை எப்படி வளர்க்கிறதுன்னு  எனக்குத் தெரியும். எல்லாரும் வெளியே போங்க’ எனத் துரத்திவிட்டு, என்னைத் தூக்கிக் கைகளில் வைத்துக்கொண்டாராம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 28

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்போதும் ஆண் - பெண் வித்தியாசம் இல்லாமல், எல்லோரோடும் விளையாடிக் கொண்டிருப்பேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கோயில்வளாகம் இருக்கிறது. அங்கே பத்து வயது வரையே பெண்பிள்ளைகள் விளையாட அனுமதி. அதற்குப் பிறகு, பெண்கள் அம்மாவின் கண்முன்னே வீட்டுவாசலில்தான் விளையாட முடியும். நான் அந்தக் கோயிலுக்குச் சென்று ஆண் பிள்ளைகளோடு சேர்ந்து குண்டு விளையாடுவது, மரத்தில் ஏறுவது, கிணற்றுச் சுவர்களில் காலைத் தொங்கப்போட்டு உட்காருவது, ராத்திரி நேரங்களில் வேட்டி, டியூப்லைட் வைத்து ஃபிலிம் சுருளில் சினிமா காட்டுவது என சாகசங்களில் ஈடுபட்டிருப்பேன்.

நான் அப்படி ஆண்களோடு விளையாடுவது அண்ணனுக்கு அவமானமாக இருக்கும். அவர் என்னை வீட்டுக்குப் போகச் சொல்வதைச் சட்டை பண்ண மாட்டேன். அண்ணன் கோபமாகி அடித்தால் நான் திருப்பி அடிப்பேன். பிறகு, வீட்டுக்குப் போய் அம்மாவை அழைத்துவரும். படுகோபத்தோடு வரும் அம்மா, `இனி ஆம்பளப்பையன்கூடச் சேர்ந்து விளையாடுவியா... விளையாடுவியா?’ எனச் சொல்லி அடி பின்னியெடுத்துவிடும். அந்த நாள்களில் எல்லாம் எப்போதும் அம்மாவிடம் சோளத்தட்டையால் அடி வாங்கிக்கொண்டிருந்தேன்.

அடங்காப்பிள்ளையாக அடிவாங்கிக் கொண்டிருந்தபோதுதான் அப்பா புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். சோவியத் ரஷ்யா என்ற ரஷ்ய லேண்ட்ஸ்கேப் துல்லியமாக இருக்கும் பளபளப்பான புத்தகத்தை வாங்கிவந்தார். அதை நான் ஆசையோடு தடவிப்பார்க்கும்போது, என்னை அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லி அப்பா கேட்டுக்கொண்டிருப்பார். அப்படித்தான் எனக்கு வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொண்டது. ரஷ்யப் புரட்சியும் ஸ்டெப்பி புல்வெளியும் பாப்லார் மரங்களும் பனிப்பொழிவும் என கற்பனையில் மிதந்தன. தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்களை வாசித்தேன். விளையாட முடியாமல் தனிமைப்பட்டிருந்த மனதை, அப்பா கொண்டுவந்த ரஷ்ய இலக்கியங்களில் தொலைத்தேன்.

கல்வியறிவில்லாத என் முதல் ஆசானான என் அப்பா, எனக்கு அறிமுகப்படுத்தியவை எல்லாம் மிக உயர்வானவை. சாமி படங்கள் இருக்க வேண்டிய சுவர்களில் எல்லாம் லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஸ்டாலின் படங்களை மாட்டி வைத்திருந்தவர்; அவர்களைச் சிறுவயதிலேயே தலைவர்களாக அறிஞர்களாக நான் ஏற்றுக் கொள்வதற்கு என்னை வழிநடத்தியவர். எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு சாதாரண கம்யூனிஸ்ட் தோழர் என் அப்பா. இன்று என் எல்லா முற்போக்கு அறிவுக்கும் சொந்தக்காரர். உலகப் போராட்டங்களை, சமத்துவப் புரட்சிகளை, தினமும் இரவில் கதைகளாகச் சொன்னவர். ஆனால், அவரால்கூட உயர்கல்வி கற்கும் என் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.

அம்மாவுக்குப் பெண் பிள்ளையை, கண்காணாத நகரில் படிக்கவைக்க சிறிதும் விருப்பம் இல்லை. பெண்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 28

பூப்படைந்த ஒன்றிரண்டு வருடங்களிலேயே திருமணம் செய்து தந்துவிட வேண்டும் என்ற, என் உறவினர்கள் மத்தியில், நான் பள்ளிக்கல்வியை முடித்ததே பெரிய விஷயம்தான். நான் ஒவ்வொரு வகுப்பிலிருந்து தேர்ச்சி அடைந்து அடுத்த வகுப்புக்குச் செல்லும்போதும், என் அம்மாவின் அண்ணன், தம்பி குடும்பத்துக்குக் கலக்கம் வந்துவிடும். `ஃபெயிலானால் தங்கள் மகன்களில் எவனோ ஒருவனுக்கு என்னைக் கட்டிவைத்து விடலாம்’ என்ற அவர்களின் நம்பிக்கையில் நான் ஒவ்வொரு வருடமும் மண்ணை அள்ளிப் போடுவேன். அதுவும் வகுப்பில் முதல் ஐந்து ரேங்க்களுக்குள் வாங்கும் மாணவி நான்.

நான் எப்போதும் உறவினர்கள் குழுமியிருக்கும் அந்தச் சூழலை வெறுத்தேன். ஆனால் தோழிகளை, பக்கத்து வீட்டுக்காரர்களை, எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எனக்காக வீட்டில் கூடும் அன்புகொண்ட மனிதர்களை மிகவும் நேசித்தேன். அந்த அன்பான உறவுகளை விடமுடியாமலும்… அதே சமயத்தில் இரண்டாவதாகப் பிறக்கும் பெண் குழந்தையைக் கொல்ல நினைத்த, விருப்பத்தை அறியாமல் திருமணத்துக்குள் அடைத்துவைக்கத் துடிக்கும் அந்த  உறவுகளை, எப்படியும்  விட்டுவிட வேண்டும் என்ற இருவகை உணர்வுகளால், எப்போதும் அலைக்கழிந்துகொண்டே இருப்பேன். 

நான் பிறந்த கூடலூர் மிக அழகான ஊர். மூன்று பக்கம் மலைகள் சூழ்ந்து கொஞ்சும் சுகந்தமான காற்றும் எப்போதும் வீசிக்கொண்டிருக்கும். அந்த ஊரில் வாழ்வதற்கு அந்த இயற்கை ஒன்றே போதுமானதாக இருந்தது. ஆனால், அப்பா எனக்குள் ஊட்டிய முற்போக்கு சுய சிந்தனை மனம் துளியும் அதை ஏற்கவில்லை. அந்த ஊரைவிட்டு வெளியேறி, ஏதோ ஒரு நகரத்தில் கல்லூரியில் படிப்பது, அதன் பிறகு, அதே நகரத்தில் வேலைபார்ப்பது என்ற கனவை எப்போதும் கண்டுகொண்டே இருப்பேன். எல்லா அப்பாவையும்போல தன் பிள்ளை டாக்டராக வேண்டும் என்ற கனவை, என் அப்பாவும் கண்டார்.

கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு டியூஷனுக்கும் அனுப்பினார். பள்ளி இறுதியாண்டில் எனக்கு மூளைக்காய்ச்சல் வந்து ஒரு மாதம் படுத்தப் படுக்கையாகிவிட்டதால் என்னால் படிப்பில் பூரண கவனம் செலுத்த முடியவில்லை. காலாண்டு அரையாண்டு தேர்வு முடிவுகளின் மூலம், நான் டாக்டருக்குப் படிக்கும் அளவிற்கு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று தெரிந்ததும், என் அப்பா நொடிந்துபோனார். என்னை ஏதோ ஒரு டிகிரி படிக்கவைத்தால் அதற்கு ஏற்றமாதிரி அதிகம் படித்த மாப்பிள்ளை பார்க்க வேண்டும். அதைவிட நிறைய வரதட்சணை கொடுக்க வேண்டும். இப்போது என்றால் இருக்கும் முப்பது பவுன் நகைகளைப் போட்டு திருமணம் செய்துவைத்து விடலாம் என்று அம்மா, அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டது.

திருமணம் என்ற வார்த்தை என்னைப் பயமுறுத்தி நடுங்கச்செய்தது. காரணம், அடி உதை தாங்காமல் கணவனின் கொடூர வன்முறையால் என் அப்பாவின் தங்கை தற்கொலை செய்து கொண்டார். அதோடு அழகம்மா என்ற எங்கள் அப்பாவின் அத்தையை, அவர் கணவனே கொடூரமாகக் கொலைசெய்த குடும்பப் பழங்கதை ஒன்றை சிறுவயதில் கேட்டு, திருமணம், கணவன் என்றாலே கொடூரமான ஒன்று என்று என் மனதில் ஆழப் பதிந்திருந்தது. அப்போதுதான் என் உறவுப் பெண் ஒருத்தி வேறு, வரதட்சணைக் கொடுமையால் திருமணமான ஆறு மாதங்களிலேயே விவாகரத்துச் செய்யப்பட்டிருந்தாள்.

குடும்பமும் சமூகமும் உந்தித்தள்ளும்போது, சமரசங்களோடு என் வாழ்வை ஏற்றுக்கொள்ளச் சொல்லிவிட்டார் அப்பா. ஆனாலும், படிக்க வேண்டும் என்ற என் பிடிவாதத்துக்கு ஒப்புக் கொண்ட தன் அக்கா மகனுக்கே, அப்பா என்னை திருமணம் செய்துவைத்தார். பதினெட்டு வயதில் நடந்த அந்தத் திருமணம் வேறு யாருக்கோ நடந்ததைப்போலத்தான் எனக்கு இருந்தது. ஒரு குழந்தை மனதுடன் விரிந்து பரந்த கனவுகளோடு இருக்கும் பெண்ணுக்கு, கணவனாக இருப்பது என்பது ஒரு சவாலான காரியம்தான். ஏனெனில், ஓர் ஆண் நம் சூழலில் வழக்கமான வாழ்வை, தனக்குச் சேவைசெய்யும் மனைவியை எதிர்பார்த்துதான் சமூகம்  அவனை வளர்த்துவைத்திருக்கும்.

ஆனால், கம்யூனிஸ்ட் அப்பாவுக்குப் பிறந்த காரணத்தினாலோ என்னவோ என் கணவர் வீ.கே.சுந்தருக்கு நான் அவ்வளவு அதிர்ச்சியாக இல்லை.  அவர் என் கனவுகளை வளர்த்தெடுத்தார். என் வாசிப்பை விஸ்தாரமாக்க உதவினார். நான் அவரிடம் நகைகளோ சேலைகளோ வாங்கித்தரச் சொல்லவில்லை. எப்போதும் புத்தகங்களே வேண்டுமெனக் கேட்பேன். அவர் எந்தக் கேள்வியும் கேட்காமல் வாங்கிக்கொடுத்தார். கல்லூரிப் படிப்பு, வேலை, சினிமா என என் எந்த விருப்பத்தையும் தடைசெய்யாத மனிதர். என் கணவரைச் சுற்றியிருந்த நண்பர்கள் அனைவரும் ஆண்கள் மீது நான் கொண்டிருந்த அச்சம் நிறைந்த சிந்தனைகளை முறியடித்தார்கள்.

பெண்களை அவர்களின் திறமையை மதித்தவிதமும் அதை உற்சாகப்படுத்தியவிதமும், ஆண் வேறு கிரகத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதை எனக்கு உணர்த்தியது. நான் முதன்முதலாகக் கதை எழுதியபோது என்னைப் பாராட்டி ஊக்கப்படுத்திய அத்தனைபேரும் ஆண்களே.

பாலியல் பேதமற்று எந்த விகல்பமும் இல்லாத ஆண் நட்பு மகத்தானது. சில சமயங்களில் பெண் தோழிகளைவிட, ஆண் நண்பர்கள் நம் மனதைப் புரிந்துகொண்டு வழிநடத்துவார்கள். தொழில் சார்ந்த போராட்டமான காலகட்டங்களில் கவிஞர் குமரகுருபரன் மாதிரியான ஒரு நண்பனின் ஆறுதல் வார்த்தைகள்தான், மன அழுத்தங்களிலிருந்து விடுபடச்செய்தது. தாமிரா, அஜயன்பாலா, ஆதிரன் போன்ற நண்பர்களிடம் பாலியல் பேதமின்றி வாழ்வின் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. பெண் நட்புகளிடம் பகிர்ந்துகொள்ளும் நம் சுகதுக்கங்களை, ஆண் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சமத்துவ உலகத்துக்கு வந்துசேர்ந்ததை நான் வாழ்ந்த சூழலிலிருந்து பார்த்தால், எட்டாவது அதிசயம் என்றே கருதுவேன்.

ஆண்களோடு சரிசமமாக இயங்க முடியும் என்ற மனம்தான் எத்தனை ஆறுதலானது; நம்பிக்கையானது. அதன் வலிமை கூடக்கூட இன்னும் கனவின் நெடுந்தூரங்களைச் சாத்தியமாக்க இதயம் யத்தனித்துக்கொண்டே இருக்கும். அப்படித்தான் சினிமா இயக்கும் ஆசையும் வந்தது. வேலைநிமித்தமாக பத்திரிகையாளராக, எழுத்தாளராக இருக்கும் வரை வரும் சிறு சிறு ஆண் அதிகாரப்போக்குகளை எளிதில் கடந்துவிட முடிந்தது. ஆனால், சினிமா மாதிரியான முழுக்க முழுக்க ஆண் உலகத்தில் மிக ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் காயப்பட்டு வெளியேறிவிட நேரிடும்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 28

நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஆண்கள்தான் என் மிகப்பெரிய ஆசான்களாகவும் தேவதைகளாகவும் இருந்திருக் கிறார்கள். இயக்குநர் அமீர் சாரிடம் உதவிஇயக்குநராகச் சேர்வதற்காகச் சென்றிருந்தேன்.

``நான் முதல்ல உங்ககிட்ட சினிமா பத்தி சில விஷயங்கள் சொல்றேன். அதுக்குப் பிறகும் உங்களுக்குச் சரின்னு பட்டுச்சுன்னா தாராளமா சினிமாக்குள்ள வாங்க” என்றார்.

அவர் சொன்னது இதுதான்… ``நீங்க இப்ப பத்திரிகையாளரா நல்ல வேலையில் இருக்கீங்க. நல்ல சம்பளம் வாங்குறீங்க. சினிமாவில முதல்ல உதவி இயக்குநர்களுக்குச் சரியான, தேவையான சம்பளம் கிடைக்காது. அப்புறம், அங்க திரும்புற பக்கம் எல்லாம் ஆண்கள்தான் இருப்பாங்க. அதுல உங்களைக் காயப்படுத்தக்கூடிய மனிதர்கள் நிறைய பேர் இருப்பாங்க. அவங்களைத் தெரிஞ்சு, தைரியமா எதிர்கொள்ளணும். அப்புறம் சினிமா இயக்கும் உங்க கனவு உடனே நடக்காது. உங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை. நினைத்த நேரத்தில் சினிமா இயக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஓர் ஆண் உதவி இயக்குநர் போராடி வாங்கும் படவாய்ப்பைவிட, நீங்க ஆயிரம் மடங்கு போராடிப் பெறணும்.

ஒரு நேர்மையான வாய்ப்பு என்பது சினிமாவில் பெண்களுக்குத் தங்களைப் போராடி நிரூபிப்பதன் மூலமாத்தான் கிடைக்கும்...” - இப்படியான முன்னறிவித்தலில் என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொண்டார் இயக்குநர் அமீர் சார்.

பத்திரிகையாளராக இருந்தபோது அங்கங்கு சந்திக்க நேரிடும் சிறுசிறு ஆண் அதிகாரப்போக்குகளை எளிதாக கடந்துவிட முடியும். ஏனெனில், அங்கு முற்போக்கான சூழல் இருக்கும். பெண்களை ,அவர்களின் வளர்ச்சியை ஓரளவுக்குப் புரிந்து கொள்வார்கள். சினிமா மாதிரியான ஆண் அதிகாரம் தீவிரமாக இயங்குகிற இடங்களில் அதைக் கவனமாகக் கடக்க வேண்டும். அமீர் சாரிடம் வேலைக்குச் சேர்ந்து `ராம்' திரைப்படப் படப்பிடிப்பில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தேன். சினிமா மீதான மோகமும் ஈர்ப்பும் எனக்கு அசாத்திய பலத்தைக் கொடுக்க, சோர்ந்துபோகாமல் ஓடி ஓடி வேலைபார்த்தேன்.

என் பரபரப்பு அங்கிருந்த மற்ற உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர் மற்றும் மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களையும் உறுத்த ஆரம்பித்ததில் ஆச்சர்யம் இல்லை. ஏனெனில், அது ஆண்களின் இடம் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. படப்பிடிப்பில் நான்காவது நாள் துணை இயக்குநர் என்னை அழைத்து, ``நீங்க மட்டும்தான் இங்க உதவி இயக்குநரா? சும்மா ஓடிக்கிட்டிருக்காதீங்க. நான் சொல்ற வேலையை மட்டும் செய்ங்க” என்றார்.

நான் அப்படியே குறுகிப்போய் ``சரிங்க சார்’' என்று அமைதியாக அவர் சொன்னதை மட்டும் செய்து கொண்டிருந்தேன். இரண்டு நாள்கள் நான் அமைதியாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த அமீர் சார் என்னை அழைத்து, ``என்னாச்சு ஏன் இப்படி அமைதியா நிற்குறீங்க. என்ன... எவனாவது வேலை செய்ய வேணாம்னு பயமுறுத்தினானா. ஆனா, அவன் யாருன்னுலாம் நான் கேட்க மாட்டேன். அவங்க அப்படித்தான் இருப்பாங்க. அதுக்காக நீங்க ஓடிப்போய்டுவீங்களா? இன்னும் முன்னைவிட அதிகமா வேலைசெய்யணும். சினிமாவில் அதுதான் ரொம்ப முக்கியம். விழிப்பா இருக்கணும். எவன் என்ன சொன்னாலும் காதுல வாங்கக் கூடாது. சரினு பட்டதை எவனுக்கும் பயப்படாம செஞ்சுட்டுப் போய்ட்டே இருங்க” - அந்தச் சூழலில் அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள், பெண் என்ற என் தாழ்வுணர்ச்சிகொண்ட மனதைத் தூக்கி எறியவைத்தது. சினிமா என் உலகம்தான் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. பெண் என்பதற்காக என் இயக்குநரால் ஒருநாளும் நான் ஒதுக்கப் படவில்லை. பின்தள்ளப்படவில்லை. மற்ற ஆண் உதவி இயக்குநர்களைவிட தைரியம் நிரம்பியவளாக என்னை மாற்றியது அவரது வார்த்தைகளே.

நூறு ஆண்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெண் தன் பாலியல் அடையாளத்தை உணராமல் இயங்குவது என்பது பறப்பதைப்போன்ற சுதந்திரமானது. நான் அந்தச் சுதந்திரத்தை உணர்ந்தேன். அது என் படைப்புத் திறமையை அதிகரித்தது. அதற்குப் பிறகுதான், நான் என் சினிமாவுக்கான பல கதைகளை எழுதத் தொடங்கினேன்.

ஒருமுறை படப்பிடிப்பு செட்டில் வேலை பார்த்த செட் அசிஸ்டன்ட் ஒருவருக்கும் எனக்கும் மிகப்பெரிய சண்டை. ஒழுங்காக வேலை செய்யாததால் அவர் படப்பிடிப்பிலிருந்து வெளியேறும் சூழ்நிலை. அவரிடம் இருந்த படப்பிடிப்பு செட் ப்ராப்பர்ட்டிகளை வாங்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. அதில் கன்டின்யுட்டி ப்ராப்பர்ட்டி ஒன்றை, அவர் `இல்லை’ என்று சொல்ல நான் வற்புறுத்திக் கேட்க, அவர் என்னை மிகக் கேவலமாகக் கெட்டவார்த்தைகளில் பேச ஆரம்பித்தார். நானும் பதிலுக்குத் திட்டி சண்டை போட்டேன். மேனேஜர் வந்து சண்டையை விலக்கி, அவரிடமிருந்து பிராப்பர்ட்டியை வாங்கிக் கொடுத்தார். இந்தச் சண்டையை அமீர் சார்  பார்த்தபடி அந்த இடத்தைக் கடந்துபோனார்.

``ஒருத்தன் என்கூட சண்டை போடுறான். எனக்கு நீங்க சப்போர்ட் பண்ணி அவனை என்னனு கேட்க மாட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டேன்.

``சந்திரா இந்த சினிமா நெடுக இன்னும் பல பேரோட நீங்க சண்டை போடணும். நீங்க விழுந்தா உங்களைத் தூக்கிவிட யாராவது வருவாங்கன்னு வாழ்க்கை முழுக்க நீங்க திரும்பிப் பார்த்துட்டே போக முடியாது. நீங்க விழுந்தா யாரும் தூக்கிவிட மாட்டாங்க. நீங்கதான் எழுந்து ஓடணும். நான் உங்களுக்கு அந்த மரத்தில் பழம் இருக்குன்னுதான் சொல்வேன். மரத்தில் ஏறி பழத்தை நீங்கதான் பறிக்கணும்” என்றார்.

என் இயக்குநருக்கும் எனக்குமான உறவு என்பது ஒரு கறாரான வாத்தியாருக்கும் மாணவிக்குமான உறவுதான். எங்கும் நெகிழ்வான அன்பு இருக்காது. ஆனால், உலகை எதிர்கொள்ள அத்தனை பயிற்சிகளையும் மறைமுகமாகக் கொடுப்பார். என் இயக்குநரிடம் தொடர்ந்து எந்த உரையாடலும் இருந்ததில்லை. அதேபோல் சினிமா பற்றி ஒருநாளும் அவர் பேசியதில்லை. ஆனால், கடுமையான நடவடிக்கையின் மூலம் ப்ராக்டிக்கலாக சினிமாவை கற்றுத்தந்தார். இன்றும் நான் முடிவெடுக்க முடியாத என் சிக்கலான பிரச்னைகளை, என் பெர்சனல் பிரச்னைகளையும்கூட அவரிடம்தான் எடுத்துச் செல்கிறேன். வாழ்வில் சோர்ந்துபோய் கனவிலிருந்து பின்வாங்கலாம் என்று நினைத்தபோது, உற்ற நண்பனைப்போல உதவிகள்செய்து உற்சாகப்படுத்தி ஓடவைத்த இன்னோர் ஆண், நான் வேலைபார்த்த இன்னொரு இயக்குநர் ராம்.

சினிமாவில் பெண் உதவி இயக்குநராக வேலை பார்ப்பது ஒரு சவால் என்றால், சினிமா இயக்குவது என்பது எட்டாக் கனியைப் பிடிப்பதுபோன்றது. என்னதான் சினிமாவில் அனுபவமும் திறமையும் இருந்தாலும், ஒரு பெண்ணை நம்பி அத்தனை பொருளாதாரத்தை முதலீடு செய்வதற்கு, தயாரிப்பாளர்கள் பல லட்சம் தடவை யோசனை செய்வார்கள்.

``கதை சிறப்பாத்தான் இருக்கு. குடும்பக் கதையாக இருந்தாலும் பரவாயில்லை. க்ரைம் ஆக் ஷன் கதையை ஒரு பொண்ணு டீல் செய்ய முடியுமா?” என்ற கேள்வியை எதிர்கொண்டும் விளக்கியும் சோர்ந்து போனேன். ஆனாலும், சவாலான இந்தக் கதையைத்தான் இயக்க வேண்டும் என்ற வீம்பும் வைராக்கியமும் வந்தன. தொடர்ந்த என் முயற்சியில் `ஒரு பெண் இதைச் செய்ய முடியுமா?’ என்று சந்தேகப்படாமல், என் திறமையை, என் கதையை நம்பித் தைரியமாக படம் இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த தயாரிப்பாளர் மதியழகன் என்ற ஓர் ஆண்தான்.

நம் முன்னேற்றத்தைப் பார்த்துப் பெரும் நேசத்தோடு புன்னகைசெய்ய இங்கு ஏராளமான ஆண்தேவதைகளும் உண்டு. ஆனால், பெண் உறுதியாக ஒன்றை நம்ப வேண்டும். எவ்வளவுதான் தன் திறமையை, ஆளுமையைப் பெண் நிருபித்தாலும், அவள் எப்போதும் தன்னிறைவு பெற்ற சுதந்திரத்தை இந்த உலகத்திலிருந்து ஒருநாளும் பெற்றுவிட முடியாது. காரணம், அவள் அறிவுக்கண் திறக்கத் திறக்கப் பூதாகரமாக வளர்கிறாள். இன்னும் இன்னும் சிறகுகளை விரித்து, விரித்துப் பறந்துகொண்டே இருக்கிறாள். காட்டாறைப்போல் யாரும் தீர்மானிக்க முடியாத இடங்களில் எல்லாம் பயணிக்கிறாள்.

பல நூற்றாண்டாகத் தேங்கிய, அடங்கிய வெள்ளம் அவள். அவை பீறிட்டுச் செல்லும்போது வீரியமாகப் பழைமைகளை உடைத்தெறிகிறாள். வழக்கத்தைக் கொன்றொழிக்கும் அவளின் புதிய பாதை, நெடும் பயணம் எப்போதும் ஆணுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். ஏனெனில், அவன் பழகிய ஒன்றை அவள் உடைக்கிறாள். இதுதான் திண்ணம் என்று அவன் நம்பிய ஒன்றை, அதன் கருத்தை உடைத்தெறிகிறாள். அவன் விரும்பிய அவனுக்குச் சாதகம் இல்லாத ஒன்றை மாற்றி, அவள் அதைப் புதிதாகச் செய்கிறாள். ஆரம்பத்தில் அதை மறுக்கும் அவன் மெதுவாகத்தான் புரிந்துகொண்டு வருவான். அவளின் கருத்துகளின் சாதக - பாதகங்களை அலசி ஏற்றுக்கொள்வான். ஆதுரமாக நேசத்தோடும் புரிந்துணர்வோடும் கைகளை நட்புணர்வோடும் பிடித்துக்கொள்வான்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

பெரும்பாலான பெண்களின் அறியாமையும் தனிமையும், தங்களால் உரையாட இயலவில்லை என்பதன் வெளிப்பாடுகளே. `பெண்கள் அறிவுஜீவிகளானால் தங்கள் உடல்களுக்குள் முடக்கப்படுகிறார்கள்; ஒடுக்கப்படுகிறார்கள். சில மேதைகள் சங்கிலித்தொடரான எதிர்வினைகளின் ஊடாக உடைத்து, அவை எதற்காக இருக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். ஆனால், பெரும்பாலான படைப்புத்திறன்மிக்கப் பெண்கள் தங்களது மிகச் சிறந்த படைப்புகளிலும்கூட பயன் இல்லை, குழப்பம் என்று முத்திரையிடப் பட்டுள்ளார்கள். வெர்ஜினியா வுல்ப் அவற்றை உடைப்பதற்கான சில வழிகளைக் கண்டார். ஆனால், அதற்காக அவர் பட்டப்பாடுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. வெடித்துக்கிளம்பிய வெகுசிலருள் ஜார்ஜ் எலியட் ஒருவர்.’

`பாலற்ற பெண்பால்’ புத்தகத்திலிருந்து - ஜெர்மெய்ன் கிரீர்

“ஒரு பெண்ணாக சினிமா துறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

``தொ
டக்கம் முதல் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செய்துகொண்டிருக்கிற துறை இது. ஒரு பெண்ணால் திறமையாகச் செயல்பட முடியும் என்பதைச் சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெண் இயக்குநர்கள் அதிகமாக உருவாக வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் மக்கள் தொகையில் பாதி... பெண்கள் தான். அவர்கள்தான் மனிதர்களையே பூமிக்குத் தருகிறார்கள். அவர்கள் இல்லாமல் எதுவுமே முழுமையாகாது. சினிமா துறைக்கு வருகிற பெண்கள், கடுமையான திரையுலகத்தின் விமர்சனங்களை எதிர்கொள்ள பழக வேண்டும்.மிகக் கடினமான வெளித்தோலைப் போத்திக் கொண்டால்தான் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியும். பெண் இயக்குநர்களை மறுப்பது என்பது பெண்களின் பார்வையையே மறுப்பதாகும்.’’

- பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் - மேதைகளின் குரல்கள்.

`பெண்ணியம் என்று தனியாக ஏன் சொல்ல வேண்டும்?’ எனச் சிலர் கேட்கிறார்கள். `மனித உரிமைகளில் நம்பிக்கைகொண்டவர்கள், அல்லது இதுபோன்ற வேறு பெயர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?’ ஏனென்றால், அது அவமதிப்பான பெயர் மாற்றம். பெண்ணியம், மனித உரிமையின் ஒரு பகுதி என்பது உண்மைதான். ஆனால், ‘மனித உரிமைகள்’ என்ற பொது அடையாளத்தைப் பயன்படுத்தும் போது பாலரசியலின் மிகக் குறிப்பான, தனித்த சிக்கல்களை அது இல்லாமலாக்கிவிடுகிறது. பெண்கள் என்ற உண்மையை மறந்துவிட்டுச் செல்வதற்கான ஒரு பாசாங்கான தந்திரமாகத்தான் அது இருக்கும். பாலரசியலின் வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பதை மறுப்பதற்குத்தான் அது உதவும். மனிதப் பிறவியாக இருப்பதன் துயரம் பற்றியது அல்ல இதன் அரசியல். ஒரு பெண் பிறவியாக இருப்பதின் துயரம்தான் இந்த அரசியலின் அடிப்படை. மனித சமூகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒன்றைக் கீழ்நிலைப்படுத்தி, அடக்கிவைத்திருப்பதுதான் உலகின் வரலாறு. இந்த வரலாற்று உண்மையை ஒப்புக்கொண்டால்தான் நாம் தீர்வுகளை நோக்கிச் செல்ல முடியும்!

-சிமாமந்தா எங்கோசி அடிச்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism