Published:Updated:

ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!

ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!
பிரீமியம் ஸ்டோரி
ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!

ஜெயராணி - படங்கள்: எம்.விஜயகுமார், வீ.சதீஷ்குமார்

ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!

ஜெயராணி - படங்கள்: எம்.விஜயகுமார், வீ.சதீஷ்குமார்

Published:Updated:
ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!
பிரீமியம் ஸ்டோரி
ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!

வர்கள் முதலில் கல்வியில் கைவைத்தார்கள். நாம் தடுக்கவில்லை; அதன் பிறகு தனியார் பள்ளிகளே தரமானவை என நம்பத் தொடங்கினோம். அவர்கள் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றினார்கள்; நிரந்தரம் இல்லை என்றாலும், நிறைய சம்பளம் கிடைக்கிறதே என நிம்மதி அடைந்தோம். அவர்கள் மருத்துவத் துறைக்குள் நுழைந்தனர்; சுகாதாரம் சுகமான அனுபவமாக மாறிவிட்டதாகச் சிலாகித்தோம்.

ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!

அவர்கள் நமது நிலங்களைக் கைப்பற்றினார்கள்; வளங்களைச் சூறையாடினார்கள்; அதுதானே வளர்ச்சி என வேடிக்கை பார்த்தோம். கூடங்குளம், நியூட்ரினோ போன்ற ஆபத்தான திட்டங்களை நம் தலையில் கட்டினார்கள்; அதுதானே முன்னேற்றம் என வாதிட்டோம். அவர்கள் நெடுஞ்சாலை நெடுக நின்றுகொண்டு பணம் வசூலித்தனர்;  `என் நாட்டில் நான் பயணிக்க எதற்குக் காசு கொடுக்க வேண்டும்?’ என நாம் கேட்கவே இல்லை. அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை எத்தனை முறை உயர்த்தினாலும் அது லாரி டிரைவர்களின் பிரச்னை என்பதாக நினைத்துக்கொண்டோம். அவர்கள் சிலிண்டருக்கான விலையை உயர்த்திவிட்டு, அந்தப் பணத்தை `உங்கள் அக்கவுன்ட்டில் போடுவோம்’ என்றார்கள். பலருக்கு அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது; சிலருக்கு எப்போதாவது சாத்தியப்பட்டிருக்கும்.

ஆதார் எண் என்ற ஒன்று, நமது ஒட்டுமொத்த இயக்கத்தையும் முடக்கவும் தீர்மானிக்கவும் போகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் ஆரம்பத்திலேயே கதறினார்கள். இவர்களுக்கு வேறு வேலையே இல்லை எனத் திரும்பிக் கொண்டோம்; அவர்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் எனச் சொல்லி வங்கிகளுக்கும் ஏ.டி.எம்-களுக்குமாக அலைக்கழித்தபோதும், நம் பணத்தை நாம் எடுக்க முடியாமல் அல்லாடிய போதும், கறுப்புப் பணம் ஒழியவே இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டபோதும், வங்கியில் பணத்தை வைப்பதற்கும், ஏ.டி.எம்-மில் பணத்தை எடுப்பதற்கும், புதிதுபுதிதாகக் கட்டுப்பாடுகள் வந்துகொண்டே இருக்கிறபோதும், அந்த உச்சகட்டத் துன்புறுத்தல்களைச் சகித்துக் கொண்டே இருக்கிறோம்.

கடைசியாக, அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக நகர்ந்து நமது உணவுத் தட்டைப் பறிக்க வந்திருக்கிறார்கள். நமது அடுப்பங்கரைக்குள் அடாவடியாக நுழைந்திருக்கிறார்கள். இதுவரை நடந்த எந்த அநீதியையுமே தடுக்க முடியாத நம்மால், இழப்பதற்கு எதுவும் இல்லாத நம்முடைய கடைசிச் சொட்டு உதிரத்தையும் உறிஞ்சும் இந்த அநீதியை மட்டும் தடுத்துவிட முடியுமா என்ன?

இங்கே `அவர்கள்’ என்பது மக்கள் நலனுக்கு எதிராகவே சிந்திக்கும் அரசையும் அவர்களை இயக்கும் பன்னாட்டு நிறுவனங்களையும் குறிக்கிறது. இங்கே `நாம்’ என்பது நேரடியாகப் பொதுமக்களாகிய நம்மைத்தான் குறிக்கிறது.

`யார் செத்தால் எனக்கு என்ன?’ என்று இருப்பதெல்லாம் மக்களாகிய நம்முடைய பழைய ஸ்டைல். புதியது எதுவெனில், `நான் செத்தால் உனக்கு என்ன?’ என்று இருப்பது. `உன்னை நோக்கித்தான் அந்த ஆபத்து வந்துகொண்டிருக் கிறது’ என்று கத்துபவர்களையும், `உன் தலையில்தான் அந்த இடி இறங்கப்போகிறது’ என எச்சரிப்பவர்களையும் தேசவிரோதியாகப் பார்க்கப் பழகிவிட்டோம்.

அதனால் என்ன என்று அலட்சியமாகவும், அப்படி எல்லாம் இருக்காது என்ற சமாளிப்பு களாலும், எல்லாம் நன்மைக்கே என அறிவின்மை யாலும், பிரச்னைகளைப் புறந்தள்ளிவிடுவதில் இந்திய மக்களாகிய நம்மை மிஞ்ச ஆளே இல்லை என அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் துணிந்து எல்லா அநீதிகளையும் நிகழ்த்துகின்றனர். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் மிக நல்லவர்களாக நம்மை நாம் அமைதி காத்துக்கொண்டே இருக்கிற வரை, எந்த அடிகளுக்கும் முடிவே இருக்கப் போவதில்லை.  

நம்புங்கள்... இந்தியா அடிப்படையில் ஏழைகளின் நாடு. `மக்கள்தொகையில் சுமார் 30 சதவிகிதம் பேர் மாதம் 1,000 ரூபாய்க்கும் குறைவாகச் சம்பாதிக் கிறவர்கள். 30 கோடி பேருக்கும் அதிகமானோர் நாள் ஒன்றுக்கு 25 ரூபாய்கூட சம்பாதிப்பதில்லை’ என அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பலரின் கைகளிலும் செல்போன் இருப்பதைவைத்து இந்தியாவைப் பணக்காரர்களின் நாடு என நாம் புரிந்துகொள்ளக் கூடாது. அரசு எதை மலிவாகக் கொடுக்கிறதோ, எதைப் பரவலாகக் கிடைக்கச் செய்கிறதோ அதை வாங்கி வைத்துக்கொள்வது மக்களின் வழக்கம்... அது மதுவாக இருந்தாலும் செல்போனாக இருந்தாலும். இங்கே மலிவு விலையில் செல்போனும் இலவசமாக இணைய வசதியும் கிடைக்கிறது. அதனால் ஏறக்குறைய அது எல்லோர் கைகளிலும் காணக் கிடைக்கிறது.  இதைவைத்து மக்கள்  நிறைய சம்பாதிக்கிறார்கள் என்றோ, மூன்று வேளைகளும் நல்ல உணவு உண்கிறார்கள் என முடிவுசெய்தால், அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.

வளரும் நாடு, வல்லரசுக் கனவு என்ற மாயைகளை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு நாம் உண்மையைப் பேச வேண்டும். பட்டினிச் சாவுகளும் பசித்திருக்கும் வயிறுகளும் நிறைந்திருக்கும்போது, இந்தியா ஒருபோதும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாது.

1965-ம் ஆண்டில் தேசிய உணவுக்கொள்கையில் ஒரு கூறாக, அனைவருக்குமான பொது விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வறுமையில் வாடும் மக்களுக்கு உணவுக்கான உத்தரவாதம் கிடைத்தது. `நாடு முழுவதிலும் இருந்து உணவு தானியங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவதிலும் `தகுதி வாய்ந்த’ ஏழைகளுக்கு அதைக் கொண்டுசேர்ப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றன’ என்று அப்போதைய மத்திய அரசு கருதியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!

இந்தக் கருத்து வளர்ந்து அதன் அடிப்படையில் 90-களின் இறுதியில்  ஏழைகள் அனைவருக்குமானதாக இருந்த பொது விநியோக முறையை (யுனிவர்சல் பப்ளிக் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம்) ‘நல்ல’ ஏழைகளுக்கானதாக மடைமாற்றும் வகையில் `டார்கெட்டட் பப்ளிக் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம்’ உருவாக்கப்பட்டது. அதன்படி ஏழைகள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்றும் மேல் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஏழைகளை ஒழிக்கும் நோக்கத்தோடு 90-களில் ஊன்றப்பட்ட அந்த விஷ விதை, கால்நூற்றாண்டு காலத்தில் ஆட்சியில் அமர்ந்த கூட்டணி மற்றும் பெரும்பான்மை அரசுகளால் கிடுகிடுவென வளர்க்கப்பட்டு, இன்று உணவு மானியத்தையே முற்றிலுமாக அழித்தொழிக்கும் அவலத்தை எட்டியிருக்கிறது. ரேஷன் கடைகளில் பொருளற்று மக்கள் அல்லாடுவதை, அரசு மக்கள் மீது தொடுக்கும் உணவுப் பறிப்புப் போரின் இறுதிக்கட்டமாகக் கருதலாம்.

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசியும் கோதுமையும் கிடைக்கச் செய்தது. மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட பொருள்களை மானியத்துக்கு அதிகமான / சந்தைக்குச் சற்று குறைவான விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு, பட்டினிச்சாவுகளும் சத்துக்குறைபாடும் அதிகரித்தன. மாதம்தோறும் ஆயிரக்கணக்கானக் குழந்தைகள் உயிரிழக்கும் கொடுமை நடந்தது. பல லட்சம் குழந்தைகள் அரைப்பட்டினியில் கிடந்து நோஞ்சானாகின. இதற்குப் பிறகு, சர்வதேச அளவில் பட்டினி நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறியது. மக்கள் நலனில் அக்கறைகொண்ட அரசாக இருந்திருந்தால், தான் எடுத்த முடிவு தவறானது என அப்போதே திருத்திக் கொண்டிருக்கும்.  ஆனால், நாம்தான் அந்த நல்வாய்ப்பைப் பெற்றவர்கள் இல்லையே!  

கண்களைச் சுருக்கிக்கொள்வதால் பார்க்கும் பொருளின் அளவு சிறியதாகிவிடாது அல்லவா!  ஏழைகளைக் குறுகிய பார்வையோடு அணுகி, எண்ணிக்கையைக் குறைத்துவிட முற்பட்டது மத்திய அரசு. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வறுமைக்கோட்டுக்கான அளவுகோல் 20 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு அது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. உச்ச நீதிமன்றம் இந்த அளவீட்டை ஏற்க மறுத்தவுடன், அது 25 ரூபாயாகி, பின்னர் 27 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போதைய பா.ஜ.க அரசு கிராமப் பகுதியில் ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்கும் மேல், நகர்ப்புறத்தில் 47 ரூபாய்க்கும்மேல் சம்பாதிப்பவர்களை வறுமைக் கோட்டைக் கடந்தவர்களாக நிர்ணயித்துள்ளது. 27 ரூபாயாக இருந்தாலும், 47 ரூபாயாக ஆக்கப் பட்டாலும், இரண்டு அரசுகளின் நோக்கமும் ஏழைகளை அழித்தொழிக்கும் ஒற்றை லட்சியம்தான் என்பதை, நடக்கும் கொடூரங்கள் உணர்த்துகின்றன.

காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், நாடு முழுவதும் சுமார் 11 கோடி பேராக இருந்த குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கும் சதியைக்கொண்டிருந்தது. ஏழைகளை கிராமம் - நகரம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் / மேல் எனப் பிரித்ததும் போதாமல், முன்னுரிமை அளிக்கத்தக்கவர்கள், பொதுவானவர்கள் என ஏகப்பட்ட பிரிவினைகளைக் கொண்டு வதைத்தது. இந்தச் சட்டத்தை நாடு முழுவதும் எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்திய நிலையில், நலத்திட்டங் களுக்கு பெயர்போன தமிழ்நாடும் கேரளாவும் மட்டும் பொது விநியோக முறையைப் பழைய வழக்கப்படியே தொடர்ந்தன.

வெளிச்சந்தையில் உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன்,  கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து சிறப்புப் பொது விநியோகத் திட்டமும் தமிழகத்தில் அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தின்படி துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு ஆகியவை கிலோ 30 ரூபாய், பாமாயில் 25 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகின்றன.  விலைவாசி உயர்வது அன்றாட அவலமாகிவிட்ட இந்த நாள்களில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துவரும் இந்தத் திட்டத்தை அழித்தொழிக்கும் முனைப்போடு மத்திய பா.ஜ.க அரசு செயல்படுகிறது. உச்ச நீதிமன்றத்தால் பாராட்டப்பட்ட தமிழ்நாட்டின் பொது விநியோக முறையைச் சீர்குலைத்துவிட இன்றைய / முந்தைய மத்திய அரசுகள் எவ்வளவோ முயன்றபோதும், கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதற்கு வழிவிடவில்லை. முழு முற்றிலும் மக்கள் விரோதமான அந்தச் சதிக்குத் துணை போவதில் அவர்களுக்கு நிறைய தயக்கங்கள் இருந்தன. உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு தி.மு.க-வால் இரண்டு ரூபாய்க்கும், பின்னர் ஒரு ரூபாய்க்கும் கொடுக்கப்பட்ட அரிசியை ஜெயலலிதா விலையற்றதாக வழங்கினார். மாத வருமானம் 5,000-க்கும் மேல் இருப்பவர்கள் ரேஷன் அட்டையில் ஹெச் முத்திரையைப் பதித்துக்கொண்டு கெளரவ அட்டைதாரராகி விலகி நிற்க வேண்டும் என கெடுபிடி செய்த நிலையில்,  2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைத் தழுவ, அதை வாபஸ் வாங்கினார் ஜெயலலிதா. இப்படியான சஞ்சலங்களும் மத்திய அரசின் நெருக்கடிகளும் இருந்தாலும், பொது விநியோக முறையில் அதிரடியாகவோ நேரடியாகவோ கைவைக்க இருவருமே துணியவில்லை.

ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழ்நாட்டின் பொது விநியோக முறைக்கு எதிராக இருப்பதைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா அதை நடைமுறைப்படுத்த, தான் உயிரோடு இருந்தவரை மறுத்துவந்தார்.  இந்தச் சட்டத்தால், தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய அரிசியின் அளவிலிருந்து ஒரு லட்சம் டன் குறைக்கப்பட்டுவிடும் என்றும், அதன்படி கூடுதலாக 3,000 கோடி ரூபாய் சுமையைச் சுமக்கவேண்டிவரும் போன்ற உண்மைகளைச் சுட்டிக்காட்டி அவர் எதிர்த்தார். ஜெயலலிதாவின் இந்த எதிர்ப்பை கருணாநிதி வரவேற்று அறிக்கைவிட்டதும் நடந்தது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நவம்பர் மாதம், அவரது பெயரிடப்படாமல் தமிழக அரசின் பெயரில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் தெரிவிக்கும் அறிக்கை வெளியானது. அதன்படி தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் ஒதுக்கீடு செய்யப்படும் மொத்த அரிசியில் 1.26 லட்சம் டன் அரிசியை ஒரு கிலோ ரூ.8.30-க்குப் பதிலாக, சந்தை விலையில் ரூ.22.53-க்கு மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கப்போகிறது. இதன் மூலமாக கடுமையான நிதிச் சுமையை தமிழகம் எதிர்கொள்ளப்போகிறது. 

சரி, மத்திய அரசு ஏன் இவ்வளவு மூர்க்கத்தோடு மக்களை வதைக்க வேண்டும் என்ற கேள்விக்கான அடிஆழத்தில் புதைந்துக் கிடக்கிறது அப்பட்டமான ஒரு கயமைத்தனம். உலக வர்த்தக நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு மே மாதம், ரேஷன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டதன் விளைவே, நாம் இன்று அனுபவிக்கும் துயரங்களுக்கான அடிப்படை. இந்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த அறிக்கை ஒன்றில் உலக வங்கி, `பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் மலிந்துகிடப்பதாக இந்திய அரசும் பொருளாதார நிபுணர்களும் கருதுகின்றனர். இதைக் களையெடுக்கக் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்குப் பதிலாகப் பணத்தைக் கொடுத்து, வெளிச்சந்தையில் பொருள்களை வாங்கிக்கொள்ளும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதற்காக, உணவுக் கொள்முதலில்  தனியாரை அனுமதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது. அதைத் தொடர்ந்துதான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் பொருள்களுக்குப் பதிலாகப் பணப் பரிமாற்றம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன் விளைவாகவே ரேஷன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் கையெழுத்து. இதோ ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அல்லாடுவது என்பது இத்தனை பெரிய கயமைத்தனத்தின் தொடர்ச்சிதான்.

மக்கள் விரோத மனப்பான்மையையும் தமிழக எதிர்ப்புக் கருத்தியலையும் கூர்தீட்டிக் கொண்டு பொது விநியோகத் திட்டத்தைக் கூறுபோடும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது பா.ஜ.க அரசு. ஆதார் அட்டை இல்லாமல் இங்கே அணுவும் அசையாது என்ற நிலையை உருவாக்கியதன் காரணம், மக்கள் பலன்பெறும் மானியங்கள் அனைத்தையும் வெட்டுவதற்குத் தான். சமையல் எரிவாயு விஷயத்தில் நாம் நன்றாகவே அனுபவப்பட்டோம். ஆதார் எண் கேட்டார்கள், வங்கிக்கணக்கு கேட்டார்கள், `அதில் மானியத்தொகையைப் போடுவோம்’ என்றார்கள். ஆனால், கீழ்நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பரவலாக உயர்த்தப்பட்ட விலையிலேயே சிலிண்டர்களை வாங்குகிறார்கள். அவர்கள் வங்கிக்கணக்குக்கு மானியத்தொகை வந்தபாடில்லை. இதே சதியைத்தான் மண்ணெண்ணெய்க்கும் செய்தார்கள். முதல் கட்டமாக ஒன்பது மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, மண்ணெண்ணெய் ரேஷனில் கிடைக்காது. வெளிச்சந்தையில் வாங்கினால், அதற்கான பணம் வங்கியில் செலுத்தப்படும். மின்சாரத்துக்கும் எரிவாயுக்கும் மண்ணெண்ணெயை மட்டுமே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் இருளிலும் பசியிலும் தள்ளப்பட்டுள்ளன. மண்ணெண்ணெய்யில் எரிந்த அடுப்புகள் மீண்டும் விறகுக்குத் திரும்பியிருக்கின்றன. இதுதான் மேக் இன் இந்தியா வளர்ச்சியா? 

ரேஷன் கடைகளில் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி விரட்டோ விரட்டென விரட்ட, மக்கள் வரிசையில் காத்துக்கிடந்து அதைச் செய்கின்றனர். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் ரேஷன் பொருள்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், வெயிலில் பல மணி நேரம் உழன்று கொண்டிருப்போரில் பலருக்கும் தெரியாது, அவர்கள் பொருள்களுக்குப் பதிலாக நேரடிப் பணப்பட்டு வாடாவுக்கு ஒப்புதல் அளிக்கின்றனர் என்பது. மத்திய அரசின் இந்தச் சூழ்ச்சியை மே-17 இயக்கம் மாதிரியான அமைப்புகள் அம்பலப்படுத்தியபோதும், மக்களிடம் அது பரவலாகக் கொண்டுசேர்க்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் படிவங்கள் வாயிலாக, டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்ஃபர் எனப்படும் நேரடிப் பணப்பட்டுவாடாவுக்கு மக்கள் ஒப்புதல் அளிக்கின்றனர். அப்படி ஒப்புக்கொண்டவர்கள் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்க முடியாது. மாறாக, ரேஷன் கடைகளில் வாங்கக்கூடிய பொருள் களுக்கான மானியத்தொகையை வங்கிக்கணக்கில் அரசு செலுத்திவிடும்(!). நாம் வெளிச்சந்தையில் அசல் விலைக்குப் பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும். இந்தச்் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தத்தான் இத்தனை பாடுகளும். ரேஷன் பொருள்களுக்கு டெண்டர் விடவில்லை, ரேஷன் கடைகளில் பொருள்கள் இல்லை, ரேஷன் ஊழியர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை, ரேஷன் கடைகளுக்கான மானியத்தொகையையும் தரவில்லை என எல்லா குளறுபடிகளுக்கும் ஒரே நோக்கம்தான். அது ரேஷன் கடைகளை இழுத்துமூடுவது, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாசல் திறப்பது. கேஷ்லெஸ் டிரான்ஸாக்‌ஷன் எல்லாம் அதற்காகத்தான்.

ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா!

மேல் வர்க்கம்/முன்னேறிய சாதியினர் பற்றி கவலை இல்லை. சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட்டான நடுத்தரவர்க்கம்/இடைநிலைச் சாதியினர் எவ்வாறேனும் தட்டுத்தடுமாறி இதற்குப் பழகிவிடுவர். ஆனால், ஏழைகள்/ஒடுக்கப்பட்டோர், அதற்கும் கீழானவர்கள்? அவர்களுக்கு எல்லாம் இந்த நாட்டில் இடமே இல்லையா? ரேஷன் கடைகள் பெருமளவில் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களான தலித்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரைப் பட்டினியில் சாகாமல் காத்துவந்திருக்கிறது. அந்தச் சமூக நீதியைத் துடைத்து அழிப்பதுதான் வளர்ச்சியா? ஏற்கெனவே அடித்தட்டு மக்களின் குரல் முற்றிலுமாக நசுக்கப்பட்டிருக்கிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில்கூட அவர்கள் பட்டபாடுகள் வெளியுலகத்துக்குச் சொல்லப்படவில்லை. எந்த ஊடகமும் அடித்தட்டு மக்கள் வாழ்வில் அரசு உருவாக்கிய அந்தப் பேரிடர் குறித்துப் பேசவில்லை.  அவ்வாறே ரேஷன் கடைகள் மூடப்படுதலும் நடந்துமுடியும். சமூகப் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையில் உழல்பவர்களின் பட்டினிச்சாவு குறித்தோ, சத்துக்குறைபாடு குறித்தோ எங்கேயும் பதிவுகள் வராது. இந்தப் பரபரப்பு, ஊடகங்கள் தமது கேமராக்களை எடுத்துக்கொண்டு மக்களிடம் போகாமல், ஸ்டூடியோவுக்குள் விவாதப் புரட்சி நடத்துவதோடு எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.   

ஏழைகள் நிறைந்த நாட்டை, பசியற்றதாக வைக்க ஓர் அரசு எதையும் செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் அதன் பிறகு உருவாக்கப்பட்ட கொள்கைகளும், இயற்றப்பட்ட சட்டங்களும் ஏழ்மையை ஒழிக்காமல், ஏழைகளை ஒழிக்கத் துடிக்கின்றன. ஓர் அரசு தன் சொந்தக் குடிமக்களுக்கு எதிராக இவ்வளவு மோசமாகச் செயல்படும் பேரவலம் உலகில் வேறு எங்கேனும் நடக்குமா? பிழைப்புத் தேடி வந்தவர்களும், அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோரும் அனுபவிக்கக்கூடிய நெருக்கடியை இந்திய அடித்தட்டு மக்கள் தம் சொந்த நாட்டில் எதிர்கொள்கிறார்கள்.

மக்களிடமிருந்து அவர்களின் நல்வாழ்க்கைக்கான எல்லாமே பறிக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் குடிமக்களாக இருந்து அனுபவிக்க வேண்டிய எல்லா நலன்களுமே நசுக்கப்படுகின்றன. அப்படி எனில், தனிநபர்களின் வாழ்க்கையில் அரசுக்கு என்னதான் பங்கு? தனிநபர் எல்லா சுமைகளையும் தானே சுமந்துகொள்ள வேண்டும் எனில், இது ஒரு சமூகமாகவோ, தேசமாகவோ எவ்வாறு ஆக முடியும்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் `இந்திய மக்களாகிய நாங்கள்' (we the people of India) என்று அம்பேத்கர் எழுதியபோது, அதன் மீது விவாதம் எழுந்தது. `இந்தியக் குடிமக்களாகிய நாங்கள்' (we the citizen of India) என அதை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்குப் பதில் உரைத்த அம்பேத்கர், `இந்தியா இன்னும் ஒரு தேசமாகவில்லை. அது தேசமாக வேண்டிய நாடு. அதனால் குடிமக்கள் என குறிப்பிட முடியாது’ என்றார்.

70 ஆண்டுகால சுதந்திர இந்தியா, இன்னும் ஒரு தேசமாகவில்லை. தேசபக்தி என எவ்வளவு பிதற்றினாலும் தனது மக்களைக் குடிமக்களாக அங்கீகரித்து அவர்களைக் காப்பாற்றியாகவேண்டிய பொறுப்பை அது கையில் எடுக்கவில்லை. அடித்தட்டு மக்களை அழித்தொழிக்கும் இத்தகைய அட்டூழியங்கள் அனைத்தும் அதை ஆணித்தரமாக நிருபிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism