Published:Updated:

யாரால் இந்தத் துயரம்?

யாரால் இந்தத் துயரம்?
பிரீமியம் ஸ்டோரி
யாரால் இந்தத் துயரம்?

வெ.நீலகண்டன் - படங்கள்: எம்.விஜயகுமார், க.தனசேகரன்

யாரால் இந்தத் துயரம்?

வெ.நீலகண்டன் - படங்கள்: எம்.விஜயகுமார், க.தனசேகரன்

Published:Updated:
யாரால் இந்தத் துயரம்?
பிரீமியம் ஸ்டோரி
யாரால் இந்தத் துயரம்?
யாரால் இந்தத் துயரம்?

`நான் உழைப்பைத் தவிர வேறு எதையும் மதிக்கப்போவதில்லை. தொடர்ந்து முயற்சி செய்யவே விரும்புகிறேன். முயற்சியைக் கைவிட விரும்பவில்லை. கடின உழைப்பு என்னைக் கைவிடப்போவதில்லை' - டெல்லி, ஜவஹர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற்று, இரண்டாவது முறையாக நேர்முகத்தேர்வில் நிராகரிக்கப்பட்ட தருணத்தில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் முத்துகிருஷ்ணன் எழுதிய பதிவு இது.

ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தலித் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, மத்திய அரசின் தலித் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து சமூக ஊடகங்களில் வெளிப்படையாக எழுதியதோடு களத்திலும் இறங்கிப் போராடிய முத்துகிருஷ்ணன், டெல்லியில் நண்பர்களின் வீட்டில் கால்கள் தரைதட்ட தூக்கில் தொங்கியபடி உடலாக மீட்கப்பட்டிருக்கிறார். வரலாற்றின் மீது தீரா ஆர்வம்கொண்ட முத்துகிருஷ்ணன், இரண்டு எம்.ஏ., இரண்டு எம்.ஃபில், பி.எட் எனத் தொடர்ந்து படித்த படிப்பாளி. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறு படிக்க வேண்டும் என்ற இலக்கை, கடும் போராட்டத்தின் மூலம் தொட்டவர். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு இருந்தவரை காலம் பாதியில் பறித்துக்கொண்டது.

`கொலையா... தற்கொலையா?' என்ற மர்மம் ஒரு பக்கம் இருக்க, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் அடித்தட்டு மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளின் தீவிரம் அதிகரித்துக்கொண்டிருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது முத்துகிருஷ்ணனின் மரணம்.

சேலம் அரிசிப்பாளையம் பாவேந்தர் தெருவில், குறுகலான ஒரு சந்துக்குள் சிமென்ட் ஷீட் போத்தப்பட்ட ஒற்றை அறை வீடுதான் முத்துகிருஷ்ணன் குடும்பத்தின் ஒரே சொத்து. வீட்டின் மத்தியில் முத்துகிருஷ்ணனின் புகைப்படத்துக்குக் கீழே மெலிந்து எரிகிறது விளக்கு. இன்னும் தம் பிள்ளையின் மரணத்தைக் கிரகிக்க முடியாமல், ஒரு பக்கம் முடங்கிக்கிடக்கிறார் அம்மா அலமேலு.

``அவன் பெரிய புத்திசாலிய்யா... எப்பப் பார்த்தாலும் கையில் புத்தகத்தோடுதான் இருப்பான். `இருந்தா முத்துப்பய மாதிரி இருக்கணும்டா'ன்னு ஊரெல்லாம் பாராட்டும். சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். பத்தாவது, பன்னிரண்டாவதுனு எல்லாத்துலயும் முதல் மார்க். `இங்கேயே ஏதாச்சும் படிச்சுட்டு வேலையைப் பாருடா'ன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன். கேட்கலையேய்யா... எந்தப் பாவி செஞ்ச காரியமோ தெரியலையே... இப்படித் தூக்கிக் கொடுத்துட்டேனே...'' என்று குரல் கம்ம அழும் அலமேலுவை, மூத்தமகள் கலைவாணி தேற்றுகிறார். எல்லோருக்கும் அழுது அழுது குரல் தேய்ந்துவிட்டது. அப்பா ஜீவானந்தம், சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.

யாரால் இந்தத் துயரம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்துகிருஷ்ணனுக்கு மூன்று சகோதரிகள். மூத்தவர் கலைவாணிக்குத் திருமணம் முடிந்துவிட்டது. பி.எட் படித்திருக்கிறார். தங்கை ஜெயந்தி, நர்ஸிங் முடித்துவிட்டு ஒரு மருத்துவமனையில் வேலைசெய்கிறார். அடுத்த தங்கை சுபாவும் பட்டதாரிதான். அவரும் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்கிறார். ஜெயந்திக்கு அண்மையில்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. அடுத்த மாதம் நடக்க உள்ள திருமணத்துக்கு வருவதாகச் சொன்ன முத்துகிருஷ்ணன், அதற்கு முன்பாகவே வந்துவிட்டார், உயிரற்ற உடலாக.

கலைவாணி மட்டும்தான் பேசும் நிலையில் இருக்கிறார். “எங்க எல்லாருக்குமே அவன்தான் சார் நம்பிக்கை. இன்னும்கூட நம்ப முடியலை. அவன் டெல்லியில் படிச்சுக்கிட்டு இருக்கான்னுதான் நினைக்கத் தோணுது. `படிப்பு முடிஞ்சதும் ஒரு வேலைக்குப் போயிட்டு, அப்படியே சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குத் தயாராகலாம்னு யோசிக்கிறேன்'னு சொன்னான். எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிறவன், தற்கொலை முடிவுக்குப் போவானான்னு சந்தேகமா இருக்கு சார். அவனை எந்தச் சூழல்லயும் கஷ்டப்படவிடாமப் பார்த்துக்கிட்டோம். ஜெயந்தியும் சுபாவும் வாங்கிற சம்பளத்துல இருந்து ஒரு தொகையை அவனுக்கு அனுப்பிவைப்பாங்க.

யாரால் இந்தத் துயரம்?

அப்பாவுக்கு நிரந்தரமா எந்தத் தொழிலும் இல்லை. வீசிங் பிரச்னை இருக்கு. இப்போ ஒரு கம்பெனியில் செக்யூரிட்டியா வேலை செய்றார். அம்மா, சேலம் மார்க்கெட்ல மஞ்சள் பொறுக்கப் போகும். மூட்டைக்கு 15 ரூபாய் சம்பளம். அப்படி சம்பாரிச்சுதான் எங்களைப் படிக்கவெச்சுச்சு. சேலம் அரசுக் கல்லூரியில் எம்.ஏ வரைக்கும் படிச்சான். அதுக்கு அப்புறம் கோவையில் போய் பி.எட் பண்ணினான். `படிச்சது போதும்டா... பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணணும். வேலைக்குப் போடா'ன்னு அம்மா சொல்லுச்சு. `வெளியூர் போய் பெரிய காலேஜ்ல படிச்சாதாம்மா நம்மையெல்லாம் மதிப்பாங்க. தங்கச்சிங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கொடுக்க வேணாமா? டெல்லி போய்ப் படிக்கப்போறேன்... என்னைப் படிக்கவிடும்மா'ன்னு சொல்லிட்டு, புத்தகங்களோடவே இருந்தான். நிறைய படிப்பான். விவேகானந்தர்தான் அவனுக்கு ரோல்மாடல். வீடு முழுவதும் புத்தகம்தான். டெல்லியில் படிக்கப்போறேன்னு ரொம்ப நம்பிக்கையோட போனான். இப்படிப் பொணமா தூக்கிட்டு வருவாங்கன்னு நாங்க கற்பனைகூட செய்யலை சார்'' - அழுவதற்குக்கூட தெம்பு இல்லாமல் சோர்ந்துபோய் உட்காருகிறார் கலைவாணி.

முத்துகிருஷ்ணன், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், அம்பேத்கர் மாணவர் அமைப்பில் சேர்ந்து செயல்பட்டிருக்கிறார். ரோஹித் மரணத்துக்குப் பிறகு, பல போராட்டங்களில் முன் நின்றிருக்கிறார். துணைவேந்தராக இருந்த அப்பாராவை நேரடியாக எதிர்த்து சமூக ஊடகங்களில் கடுமையாக எழுதியிருக்கிறார். நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார். எந்தச் சூழலிலும் குடும்பத்துக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை முத்துகிருஷ்ணன். பகுதி நேரமாக ஓர் உணவகத்தில் சர்வர் வேலை செய்திருக்கிறார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, நண்பர்களே பெருமளவு அவருக்கு உதவியிருக்கிறார்கள்.

யாரால் இந்தத் துயரம்?

“எப்பவுமே கல்லூரியில் நடக்கிறதை வெளியே சொல்லவே மாட்டான். ஃப்ரெண்ட் மாதிரி இருப்பான் சார். கடந்த முறை வந்தப்போ, `ரொம்ப நெருக்கடி கொடுக்கிறாங்கப்பா'ன்னு சொன்னான். `நம்மை மாதிரி ஆள்களை அவ்வளவு எளிதா ஏத்துக்க மாட்டாங்கப்பா. கொஞ்சம் பொறுத்துப் படி'ன்னு சொன்னேன். `நான் பாத்துக்கிறேன்பா... படிப்பு முடியுற வரைக்கும் நீங்க வேலைக்குப் போங்க. அதுக்கு அப்புறம் நான் குடும்பத்தைப் பாத்துக்கிறேன்'னு சொல்லிட்டு ரயில் ஏறினான். `தங்கச்சி கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்துடுறேன். நிறைய நண்பர்களும் வருவாங்க'ன்னு சொன்னான்.

நல்லா கிட்டார் வாசிப்பான் சார். ரஜினியோட தீவிர ரசிகன். பேரைக்கூட ரஜினி க்ரிஷ்னு மாத்திவெச்சுக்கிட்டான். கடைசியா, ஹோலிப் பண்டிகை அன்னிக்கு ரெண்டு கொரியன்காரங்க கிட்டார் வாசிக்க இவனைக் கூட்டிக்கிட்டுப் போனதா சொல்றாங்க. அவங்க அறையில்தான் தூக்குப்போட்டுக்கிட்டு இறந்திருக்கான். போலீஸ் போய்ப் பார்த்தப்போ, கால் தரையில் பட்டுக்கிட்டிருந்திருக்கு. தூக்குப்போட்டு இறக்கிற ஒருத்தன் கால் எப்படி தரையில் படும்? அப்படிப் பட்டா அவன் எப்படிச் சாவான்? கடைசியா கூட்டிக்கிட்டுப் போன கொரியன்காரங்க யாருன்னு கேட்டத்துக்குக்கூட போலீஸ் பதில் சொல்லலை.

 அவன், தற்கொலை பண்ணிக்கிற ஆள் இல்லை சார். ஏதோ நெருக்கடி இருந்திருக்கணும். இறந்துட்டான்கிற தகவலைக்கூட கல்லூரி நிர்வாகம் எங்களுக்குச் சொல்லலை. அவனோட நண்பர்கள்தான் சொன்னாங்க. நானும் எங்க உறவுக்காரரும் டெல்லிக்கு ஓடினோம். ரெண்டு நாள், சின்னதா ஒரு விசாரணைகூட இல்லை. எஃப்.ஐ.ஆரும் போடலை. பல்கலைக்கழக நிர்வாகம் அதைவிட மோசம். ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரலை. `ஹோலிப் பண்டிகைக்காக அன்னிக்கு லீவ் விட்டிருந்தோம். என்ன நடந்துச்சுன்னு எங்களுக்குத் தெரியாது'ன்னு சொல்லிடுச்சு.

யாரால் இந்தத் துயரம்?

மாணவர்கள் எல்லாரும் வந்து சத்தம் போட்ட பிறகுதான் வழக்கே பதிவுபண்ணினாங்க. நான் சாப்பாட்டுக்கே சிரமப்படுற அடித்தட்டு மனுஷன். கேட்க நாதி இல்லை. எங்க குலத்துல பிறந்த புள்ளை, டெல்லிக்கு எல்லாம் போய்ப் படிக்கலாமா? அதை மத்தவங்கெல்லாம் எப்படி ஏத்துக்குவாங்க? அதான் ஏதோ பண்ணிட்டாங்க'' - குமுறி அழுகிறார் ஜீவானந்தம்.

முத்துகிருஷ்ணனின் நெருங்கிய தோழி, பிட்டு கார்த்திக். ஹரியானா அசோகா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறைப் பேராசிரியராக இருக்கிறார். மரணத்துக்கு முதல் நாள், முத்துகிருஷ்ணனைச் சந்தித்திருக்கிறார் பிட்டு.

“முத்துவை அவர் மரணத்துக்கு முதல் நாள் டெல்லியில் சந்திச்சேன். அவரோட கிட்டார் என்கிட்ட இருந்துச்சு. அதைக் கொண்டு போய்க் கொடுத்தேன். வழக்கம்போல அரசியல் பேசினார். உற்சாகமாகத்தான் இருந்தார். எந்த மாற்றத்தையும் நான் உணரலை. சிவில் சர்வீஸஸ் தேர்வுதான் அவரோட லட்சியமா இருந்துச்சு. அவரோட மரணம், நிறைய கேள்விகளை உருவாக்கியிருக்கு. நியாயமான, நேர்மையான ஒரு விசாரணை மூலம் இதற்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரணும். அதை நோக்கி எங்களோட அடுத்தகட்டப் போராட்டம் அமையும்'' என்கிறார் பிட்டு கார்த்திக்.

“உண்மையில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்

யாரால் இந்தத் துயரம்?

மட்டும் அல்ல... இந்தியாவில் இருக்கும் எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் முத்துகிருஷ்ணன் மாதிரி தலித் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வருவது எளிதல்ல. பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. சில பேராசிரியர்கள் அந்த அமைப்பைத் திட்டமிட்டு வளர்த்தெடுக்கிறார்கள். அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் முத்து கிருஷ்ணனின் மரணம். தலித் மாணவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் சிறுபான்மை மாணவர்கள் காணாமல்போவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. இதை தலித் பிரச்னையாகக் கருதாமல் ஒட்டுமொத்தத் தேசத்தின் பிரச்னையாகக் கருதினால் மட்டுமே அடுத்த மரணத்தைத் தடுக்க முடியும்'' என்கிறார் முத்துகிருஷ்ணனின் நண்பரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செயல்படும் பிர்ஸா-அம்பேத்கர்-பூலே மாணவர் சங்கத்தின் நிர்வாகியுமான விஜய் அமிர்தராஜ்.

முத்துகிருஷ்ணனின் உடலோடு டெல்லியில் இருந்து வந்திருந்தார் விஜய். இருவரும் இணைந்து பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். முத்துகிருஷ்ணனின் மரணம், விஜய்யை பெருமளவு பாதித்திருக்கிறது.
“ஆராய்ச்சிப் படிப்பில், மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்படுகிறது. நெறியாளர்களுக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகின்றன. தலித் மாணவர்களுக்கு எதிரான இந்தச் சூழ்ச்சிகளை நாங்கள் ஆர்டிஐ மூலம் அம்பலப்படுத்தி யிருக்கிறோம்.

2012-ம் ஆண்டில் குறிப்பிட்ட ஒரு துறையில் தலித் மாணவர்களின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் சராசரியாக 50-க்கு மேல் இருக்கின்றன. ஆனால், நேர்முகத்தேர்வில் 30-க்கு 15, 16 மதிப்பெண்தான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பலர் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் குறைவாகவும், நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் மாணவர் களின் சாதி தெரியாது. வெறும் அட்மிஷன் எண் அடிப்படையில்தான் திருத்துவார்கள். ஆனால், நேர்முகத்தேர்வைப் பொறுத்தவரை சாதிச் சான்றிதழ் உள்பட அனைத்தையும் வைத்துக் கொண்டுதான் நடக்கும். அதன்மூலம் அடையாளம் கண்டு மதிப்பெண்களைக் குறைத்து, கல்வி நிறுவனங்களுக்குள் நுழையவிடாமல் செய்கிறார்கள்.

பட்டியல் இன மாணவர்கள் மெரிட்டில் தேர்வாகி வந்தாலும், இட ஒதுக்கீட்டில்தான் சேர்க்கிறார்கள். இது வேறு எந்தச் சமூகத்துக்கும் நடப்பதில்லை. இதையெல்லாம் கடந்து வகுப்பறைக்கு வரும் மாணவனை, பல இன்னல்களுக்கு ஆளாக்குவார்கள். தாழ்வு மனப்பான்மையை அதிகரிப்பது, அசிங்கமாகப் பேசுவது, ஒதுக்கி வைப்பதெல்லாம் நடக்கும். இதை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. தலித் மாணவர்களுக்கு மட்டுமல்ல, பேராசிரியர்களுக்கும் இதுதான் நிலை. அம்பேத்கர் பற்றி ஆய்வு செய்தால் நிராகரிக்கிறார்கள். முத்துகிருஷ்ணன் இதையெல்லாம் கடந்துதான் வந்தார்.

கடும் சிரமத்துக்கு இடையில்தான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் முத்துகிருஷ்ணன். நேர்முகத் தேர்வில் தொடர்ந்து நிராகரிக்கப் பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகும் பல பிரச்னைகள். இரண்டு வருடங்களாக ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டுள்ளது. மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியனாக, நிர்வாகியாக, போராளியாக வந்து இறங்கியிருக்கவேண்டிய முத்துகிருஷ்ணன், இப்போது பிணமாக வந்திருக்கிறார். நேரடியாகச் செய்வது மட்டும் கொலையல்ல; தற்கொலை எண்ணத்தை நோக்கித் தள்ளுவதும் கொலைக்கு சமம்தான். பல்கலைக்கழகத்தின் மௌனம், டெல்லி காவல் துறையின் செயல்பாடுகள் எல்லாமே பின்னணியில் ஒரு மர்மம் இருப்பதையே காட்டுகின்றன. டெல்லியே ஸ்தம்பிக்கும் வகையில் மாபெரும் மாணவர் போராட்டம் ஒன்றை நடத்தி, மணிஷ்குமார், பால்முகுந்த் பாரதி, ரோஹித் வெமுலா, செந்தில்குமார், சரவணன், முத்துகிருஷ்ணன் எனத் தொடரும் மரணங்களுக்கு நியாயம் கேட்கப்போகிறோம்...'' என்கிறார் விஜய் அமிர்தராஜ்.

முத்துகிருஷ்ணனின் வீட்டுக்குள் அவரது உடலை வைக்க இடம் இல்லை. அதனால் சாலையோரத்தில் வைத்திருந்தார்கள். அஞ்சலி செலுத்த வந்த பெண்களில் பலர், ``நம்ம ஊருக்குள்ளயே ஒரு காலேஜ்ல படிச்சிருந்தா புள்ள உயிரோடயாவது இருந்திருக்குமேய்யா'' என்று ஆதங்கப்பட்டார்கள். இவர்கள் யாரும் இனி தங்கள் பிள்ளைகளை ஹைதராபாத்துக்கோ, டெல்லிக்கோ, ஐ.ஐ.டி-கோ, ஐ.ஐ.எம்-கோ அனுப்பப்போவதில்லை.

முத்துகிருஷ்ணனை மரணத்தை நோக்கித் தள்ளியவர்களின் நோக்கமும் இதுதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism