Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 29

ஆண்பால் பெண்பால் அன்பால் - 29
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 29

கவிதா பாரதி - படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 29

பெண் என்பவள் குருட்டு ஆண்தனத்தால் தொட்டுணர முடியாத ஓர் அற்புத யானை. கண்டுணர முடியாத பேரொளி. `யாதுமாகி நின்றாய் காளீ...’ எனப் பாடினான் பெண்மையின் பிரமாண்டம் உணர்ந்த பாரதி. 'பெண்ணின் பெருந்தக்க யாவுள' என்னும் குறளின் வரியைப் பெண்ணின் முக்கியத்துவத்தின் சாட்சியாக்குகிறான் வள்ளுவன். ஆனால், இன்றையத் தமிழ்ச் சூழல் அவளை அப்படி வைத்திருக்கவில்லை. ஆண்களுக்கு நிகராக எல்லா இடங்களையும் பெண்கள் அடைந்தே இருக்கிறார்கள். ஆண்களும் அதை ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்... கயமை தோய்ந்த எள்ளலோடு; `இது நான் உனக்கு அளித்த கொடை’ என்ற ஆண் ஆணவத்தோடு.  

வறண்ட கிராமத்தின் வறிய குடும்பம் ஒன்றின் மூத்த மகன் நான். எனக்குப் பிறகு ஒரு தங்கை என மிகச் சிறிய குடும்பம். நம் கிராமங்களில், பெரும்பாலான குடும்பங்களில் இருக்கிற பொதுவான வறுமையைத் தாண்டி பெருந்துயர் என்று எதுவும் எங்கள் குடும்பத்தில் இல்லை.

அந்த வயதில் இயல்பாகக் கிடைத்திருக்க வேண்டிய பெண் அன்பு எனக்குக் கிடைக்கவே இல்லை

ஆண்பால் பெண்பால் அன்பால் - 29

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்பதுதான், இப்போதும் என் ஏக்கமாக இருக்கிறது. காரணம்... அம்மா கண்டிப்பானவர். சிறு தவறுகளுக்கும் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவர். தாய்வழி, தந்தைவழிப் பாட்டிகளையும் நான் நினைவு தெரியும் முன்னரே இழந்திருந்தேன். அக்கா இல்லாததால் அந்த அன்பும் நான் அறியாதது. தங்கையின் அன்பை உணரும் பக்குவம் எல்லாம் அப்போது எனக்கு இருக்கவில்லை.

என் வலிகளைக் கேட்கிற காதுகளையோ, வருடிக் கொடுக்கிற கரங்களையோ  உரிய காலத்தில் நான் உணரவே இல்லை.

துடைக்கக் கரமற்று உறைந்துபோன ஒரு கண்ணீர்த் துளியாகத்தான் என் பால்யம் நினைவடுக்குகளில் நிலைத்திருக்கிறது.  இதனாலேயே நான் தாழ்வுமனப்பான்மை கொண்டவனாகவும், எல்லோரிடமிருந்தும் ஒதுங்கிச்செல்பவனாகவுமே வளர்ந்தேன். அதனால் நான் எளிதில் காதல்வயப்படுபவனாகவும், அதனினும் எளிதாக அதில் தோல்வியுறுபவனாகவும் இருந்தேன். இவை இரண்டுமே சம்பந்தப்பட்ட பெண்களுக்குத் தெரியாமலே நிகழ்ந்தன.

என் வயசுப் பையன்கள் ஒரு சைக்கிளைத் தங்கள் லட்சியமாகக்கொண்டிருந்தபோது, எனக்கு மட்டுமேயான ஒரு பெண் அன்பை நான் லட்சியமாகக்கொண்டிருந்தேன். சற்றேறக்குறைய `வெண்ணிற இரவுகள்’ நாவலில் வரும் கனவுலகவாசி நான். பெண் என்பவள் எட்டாத அற்புதமாகவும், பெண்ணின் அன்பு என்பது தீராத ஏக்கமுமாகவே எனக்கு வெகுகாலம் இருந்தது.

உங்கள் வாழ்வின் மறக்க முடியாத பட்டியலில் உங்கள் நண்பனின் காதலிக்கும் இடம் இருக்கும். ஏனெனில், பெரும்பாலும் உங்களை அவர்கள் அண்ணா என்றே அழைத்திருப்பார்கள். ஆனால், ஜான்சி இப்படி என்னை அறிந்திருக்கவில்லை.சரவணன் அவளைக் காதலிக்க நான்தான் கவிதை எழுதிக்கொடுத்தேன் என்பதுகூட அவளுக்கு அப்போது தெரியாது.

மழைக்கால சந்திப்பொன்று
நமக்கிடையே நிகழாதா
என்ற ஏக்கம்
உனக்கில்லையா ஜான்சி?

ஆண்பால் பெண்பால் அன்பால் - 29

இப்படியாக அந்தக் கவிதை தொடங்கும். சரவணன் எனது நண்பன். இதைத் தொடர்ந்தும் பல கவிதைகளை சரவணன் கேட்க எழுதிக் கொடுத்தேன். மனதின் பரிமாற்றத்துக்கு கவிதைகள் தேவைப்படாத ஒரு பருவத்துக்கு அந்தக் காதல் கடந்துபோனது.

பொதுவாக காதலில் கவிதையின் பங்கு நடை வண்டியைப் போன்றதுதான். தட்டுத்தடுமாறும் தொடக்க நாள்களுக்குப் பிறகு, அங்கு கவிதை அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது. கவிதையைத் தொடர்ந்து அந்தக் காதலிலும் என் உதவி அவசியம் இல்லாமல்போனது. மிக நீண்ட ஆண்டுகள் சரவணன் - ஜான்சி காதல் தொடர்ந்தது. எனது நட்பு வட்டத்தில் அதுதான் முதல் காதல் என்பதால், அதன் வெற்றிக்கு நானும் நண்பர்களும் பிரார்த்தனைகளோடு காத்திருந்தோம்.

இந்தக் காதல், ஜான்சியின் வீட்டாருக்குத் தெரிந்தது. அவர்கள் சரவணனைத் தங்கள் வருங்கால மருமகனாகவே ஏற்றுக்கொண்டார்கள்.  இருவரும் ஒரே சாதியினராக இருந்தாலும், ஜான்சியின் உறவினர்கள் இதை ஒப்புக்கொள்ள வில்லை. காரணம் விநோதமானது.

சரவணன் குடும்பம் ஒரு சிற்றுண்டி விடுதியை ஆரம்பித்து நல்ல நிலைமைக்கு வளர்ந்துகொண்டிருந் தார்கள். ஆனால், ஜான்சியின் தாய்வழியில் எல்லோரும் பாரம்பர்யமான பணக்காரர்கள். எனினும் ஜான்சி குடும்பம் நடுத்தரவர்க்கமாகத்தான் இருந்தது. அவர்களைவிட வசதியாக இருந்தாலும் பின்புலப் பெருமைகள் எதுவுமில்லாத சரவணனுக்கு ஜான்சியை மணம் முடிப்பதை ஜான்சியின் உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு ஜான்சியின் பெற்றோரும் உடன்பட வேண்டியதாயிற்று.

ஜான்சியைப் பிரித்து வேறு ஓர் ஊரில் அடைத்துவைத்தனர். அவள் கல்லூரிக்குச் செல்வதும் தடுக்கப்பட்டது. அது செல்போன்கள் இல்லாத காலம். எனினும், அவர்களுக்குள் ரகசியமாகக் கடிதப் போக்குவரத்துத் தொடர்ந்தது. ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் ஜான்சியை மீட்டு சரவணனுக்கு மணம் முடித்துவைக்க முன்வந்தார்.

அதற்கான சூழலுக்காகக் காத்திருந்தோம். ஜான்சியின் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் தொடங்கின. தேர்வுகளை எழுத அவளுக்கு அனுமதி கிடைத்தது.

உறவினர்கள் காரில் ஜான்சியை அழைத்துவந்து கல்லூரியில் விட்டுவிட்டு தேர்வு முடியும் வரை இருந்து அழைத்துச் சென்றனர். கடிதம் மூலமாகவே திருமணம் குறித்த திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன்படி இறுதித் தேர்வு எழுத வரும் ஜான்சி, தேர்வு எழுதும் அறைக்குள் செல்லாமல் கல்லூரியின் பின்புற வாசல் வழியாக வெளியே வர வேண்டும். அங்கு ஒரு காரில் அவளை அழைத்துச் சென்று ஒரு கோயிலில் திருமணத்தை நடத்திவிடுவது என்பது திட்டம்.

இதற்கு ஜான்சி விதித்த ஒரே நிபந்தனை... `என் கல்யாணத்துல நூறு பேராவது இருக்கணும். உரிய முறைப்படி கல்யாணம் நடக்கணும்.’

அளவு ஜாக்கெட் ரகசியமாகப் பெறப்பட்டது. பட்டுப்புடவை, தாலி எல்லாம் வாங்கப்பட்டன. கல்லூரித் தேர்வின் கடைசி நாள். சமையல்காரர்கள் வரவழைக்கப்பட்டார்கள். உணவு தயாரானது. அந்த மலைக்கோயிலில் நூற்றுக்கும் மேல் நண்பர்கள். தவில், நாதஸ்வரம் என எல்லாமே ஜான்சியின் வரவுக்காகப் படி நோக்கிப் பார்த்திருந்தோம்.

கல்லூரியில் பின்வாசலில் கல்யாண வாகனம் காத்திருந்தது. ஆனால், ஜான்சி மட்டும் வரவே இல்லை.

ஆண்டுகள் பல கடந்த பின்பு, அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றில் அவளை மீண்டும் பார்த்தேன். அது ஜான்சிதான் என்று முதலில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

என் பேரைச் சொல்லி ``நீங்கள்தானே?’’ என்றாள்.

``ஆமாம்’’ என்றேன்.

`` `மழைக்கால சந்திப்பொன்று நமக்கிடையே நிகழாதா என்ற ஏக்கம்  உனக்கில்லையா ஜான்சி...’ இந்தக் கவிதை நீங்க எழுதினதுதானே?'' என்று கேட்டாள்.

எனக்குப் பதற்றமாகிவிட்டது.

``நீங்கள் ஜான்சியா?'' என்றேன். அவள் தலையாட்டினாள்.

``நீங்க அந்தக் கவிதையை இன்னும் ஞாபகத்தில் வெச்சிருக்கீங்க. உங்க சரவணன் செத்துப்போயிட்டான் தெரியுமா?'' என்று கேட்டேன். அவள் முகம் மாறத் தொடங்கியது.

அவள் இதழோரத்தில் கசந்த புன்னகை ஒன்று கண்ணீர்த்துளிபோல் துளிர்த்தது. ``ஏன் அதோட நிறுத்திட்டீங்க. நீங்களும் சொல்லுங்களேன்... `நீதான் கொன்னுட்டே’னு”.  அந்தக் கணத்துக்கான பதில் என்னிடம் இல்லை.

``அவனைக் கொன்றது நீங்க எல்லாரும்தான்...'' என்று ஜான்சி குரலுயர்த்தினாள். நான் அதிர்ச்சியோடு பார்த்தேன்.

``அவன் கல்யாணம் பண்ணிக்காம கடைசி வரைக்கும் என்னையே நெனைச்சு உருகி உருகியே செத்துப்போனான். அதானே...’' - நான் சொற்களை இழந்து நின்றேன். அவள் தொடர்ந்தாள்.

``காதலிக்கும்போது நீங்க எல்லாரும் சேர்ந்து ஆரவாரத்தோட அவனை உற்சாகப்படுத்தினீங்க. அதுக்குப் பிறகு வாழ்க்கையைத் தேடிப்போகும் போது அவனைக் கையைப் பிடிச்சுக் கூட்டிப்போகலையே. தோற்றுப் போன மைதானத்துல அப்படியே விட்டுட்டுப்போயிட் டீங்களே...’'

ஜான்சியின் சொற்கள் மனதை கிழிக்கத் தொடங்கியிருந்தன. கண்ணீர் உகுத்து கலங்கிநின்ற ஜான்சியின் கண்களில் சொற்களற்ற துயரம். தழுதழுத்த குரலில் உடைந்த ஒரு குடுவையைப்போல மாறிப்போயிருந்த ஜான்சியை நான் இன்று சந்தித்திருக்க வேண்டுமா? காலம் மழையின் அடர்த்தியோடு இறுகிவிட்டதைப்போலிருந்தது.

ஜான்சி மீண்டும் பேசத் தொடங்கினாள்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 29

``கடைசிப் பரீட்சைக்காக எப்பவும்போல கார்ல ஏறினேன். கார் காலேஜுக்குப் போகலை. ஒரு கோயிலுக்குப் போச்சு. பொண்டாட்டி செத்துப்போன சொந்தக்காரர் ஒருத்தருக்கு என்னை ரெண்டாம் தாரமா கட்டிவெச்சுட்டாங்க. அவருக்கு ஒரு குழந்தை. நாலு வயசு, முதல் நாளே என்னை `அம்மா’னு சொன்னா. அப்பலருந்து நான் அம்மாவாயிட்டேன்.

நான் நல்லவளா... கெட்டவளானு எல்லாம் தெரியாது. ஒண்ணே ஒண்ணு மட்டும் தெரியும். இன்னும் எத்தனை வருஷமானாலும் பொம்பளைங்களோட பிரசவ வலியும், அவ மனசோட வலியும் உங்களுக்கு எல்லாம் புரியாது'' - ஜான்சி போய்விட்டாள். அந்த வார்த்தைகள் இன்னும் என்னோடு இருக்கின்றன.

காதல் நாம் நினைத்துப்பார்க்க முடியாத பரந்த ஒரு விளையாட்டு மைதானம். ஆட்டத்தின் முடிவை விளையாட்டு வீரனுக்கு உரிய பக்குவத்தோடுதான் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திச்சென்றாள் ஜான்சி. தோல்வியுற்றக் காதலுக்கு பெண்ணைத் தூற்றுவதும், விலகிப்போகிற பெண்ணைக் கொல்வதும், அமிலம் வீசுவதும் சமூகத்தின் பொதுப்புத்தி. பெண்ணின் பிரசவ வலியும் மனதின் வலியும் உணருகிற ஆணுக்காக இங்கே ஒவ்வொரு பெண்ணும் கண்ணீர் உகுத்துக் காத்திருக்கிறாள். அந்த வலிகளை உணர்ந்த ஒரு காதலன் எந்நாளும் மரணத்தின், கொலையின் பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவன் விளையாட்டு வீரனின் லாகவத்தோடு வெற்றி-தோல்விகளைக் கடந்து செல்கிறான். எல்லா காதலன்களுக்கும் விளையாட்டு வீரனின் மனோபாவம் வாய்க்கட்டும்.

சின்ன வயதில், பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே உறவுக்கார அக்கா ஒருத்திக்குப் பேய் பிடித்திருந்தது. பேய் ஓட்டும் இடத்துக்கு என்னையும் அழைத்துச் சென்றிருந்தனர்.

நள்ளிரவு... ஊரைவிட்டு ஒதுக்குப்புறமான ஒரு தோட்டம். அதன் நடுவே சிறு கூரை வீடு. ஏழெட்டுப் பெண்கள், அவர்கள் அனைவரும் பேய்ப் பிடித்தவர்கள். பேய் ஓட்டுபவரும் பெண். இந்த நேரத்தில் அந்த வீட்டின் ஆண்கள் அனைவரும் வெளியேறிவிடுவர். வயதின் காரணமாக பெண் குழந்தைகள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவது போல், நான் ஆணாக இருந்தாலும் சிறுவன் என்பதால், அந்தப் பேய் ஓட்டும் நிகழ்வை வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட்டேன். அச்சமூட்டும் அந்த இரவில் வந்திறங்கியவை அனைத்தும் பெண் பேய்களே.

பிடிப்பவளாகவும் பிடிக்கப்பட்டவர்களாகவும் அவற்றை ஓட்டுபவராகவும் பெண்களே இருந்தனர். பெரும்பாலும் எல்லா பேய்களுக்கும் நிறைவேறாத ஆசைகள் இருந்தன. அவை சுருட்டுப் பிடிப்பது, சாராயம் குடிப்பது என மிகச் சாதாரணமான ஆண்களின் செயல்பாடுகளே. சில பேய்களுக்கு மட்டும் தங்கள் சாவுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கும் வெறி இருந்தது. பல வாரங்கள் நடைபெறும் பிரம்படிகளுக்குப் பிறகே பேய்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு இறங்கிவரும்.

பேய்ப் பிடித்த பெண்ணை ஒரு குறிப்பிட்ட மரத்தடிக்கு அழைத்துச் சென்று, அவள் முடி ஓர் ஆணியில் முடிந்து மரத்தில் அடிக்கப்படும். பிறகு அந்த முடியைக் கத்தரித்துவிட்டால், முடிகள் பறக்கும். அந்த ஆணிக்குள் பேய் சிறைப்பட்டுவிடும். அந்த மரத்தில் நூற்றுக்கணக்கான ஆணிகள், நூற்றுக்கணக்கான பெண் பேய்களைச் சிறைப்படுத்தியிருந்தன.

இன்று அந்தத் தோட்டமும் இல்லை; பேய் ஓட்டிய அந்த அத்தையும் இல்லை; அந்த மரமும் இல்லை. `அந்தப் பேய்கள் எல்லாம் எப்படி மொத்தமாக வெளியேறின?’ என்ற கேள்வி எப்போதும் எனக்குள் எழுந்தபடியே இருக்கும்.

வெளியே சொல்லயியலாத மன அழுத்தம், உறவுச்சிக்கல், பாலியல் பிரச்னைகள் இவை எல்லாம்தான் அன்றைய பெண்களை பேயாக உருவெடுத்துத் தாக்கின என்பதே என் புரிதல்.

பேய் ஓட்டுவது என்பது அந்தக் காலத்துக்கான மூர்க்கமான, முட்டாள்தனமான கவுன்சிலிங்காக இருந்திருக்கலாம். ஏதோ ஒருவகையில் அந்தப் பெண்களை இந்தப் பேய்ப்பிடித்தல் மனவியல் சிக்கல்களிலிருந்து விடுவித்திருக்கலாம். இப்போதும் அந்தச் சிக்கல்கள் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், இன்றைய பெண்களின் மனக்கோளாறுகள் பேயாக மாறுவதில்லை. அது அவர்களுக்கு தேவையுமில்லை. அவர்கள் தங்களுடைய கோபங்களை நேரடியாக வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்களுடைய மனக்குறைகளைத் தாங்களாகவே போக்கிக்கொள்ள முனைகிறார்கள். அவர்களுக்கான கவுன்சிலிங்கை அவர்களே தங்களுக்கு வழங்குகிறார்கள். அதுதான் அவர்களை எத்தகைய காதல் தோல்வியிலிருந்தும் வாழ்வின் வீழ்ச்சியிலிருந்தும் அடக்குமுறைகளில் இருந்தும் மீட்கிறது. சொல்லப்போனால் இன்றைய தேதியில் விரட்டப்பட வேண்டிய பேய்கள் எல்லாம் வாழ்வது, கத்தியும் ஆசிட் பாட்டிலுமாகத் திரியும் ஆண்களின் உடல்களில்தான்.

அதிகாரத்தில் அமர்ந்து தன் செயல்பாடுகளால் `A1’ ஆக மாறியவரை இரும்புப் பெண்மணி என்கிறோம். தம் மக்களின் விடுதலைக்காக, ஆபரணங்களைப்போல குண்டுகளை அணிந்து எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழித்தவர்கள் தமிழீழத்துப் பெண்கள். கழுத்தில் நஞ்சுக்குப்பியும்  கைகளில்  துவக்குமாக போர்முனைகளில் நின்று சமர் ஆடிய அவர்களையும், தங்களுக்குப் பிறகான தலைமுறையினரின் வசந்த வாழ்வுக்காகப் புலியானவர்களையும் பலியானவர்களையும் என்ன பெயரால் அழைப்பது?

1984, ஜனவரி 9. தமிழ் மாணவர்கள் மீதான இலங்கைக் கல்வித் துறையின் பாரபட்சத்தைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் உண்ணாநோன்பு மேற்கொண்டனர். அதில் நான்கு பேர் பெண்கள். மூன்று நாள்களைக் கடந்தும் அந்தப் போராட்டம் தொடர்ந்தது. `உங்களுக்காக நாங்கள் குரல்கொடுக்கிறோம். நீங்கள் உங்கள் உயிரைக் கொடுத்துவிடாதீர்கள். போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று புலிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும், மாணவர்கள் மறுத்துவிட்டனர். காவல் துறையும் ராணுவமும் இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தன.

உண்ணாவிரதத்தின் ஆறாவது நாள் மாணவர்கள் மிகவும் சோர்ந்துபோயிருந்தனர். ஒன்று... அவர்கள் பட்டினியால் சாக நேரும் அல்லது அரசுத் தரப்பால் ஆபத்து நேரும் எனும் சூழல். அவர்களின் உயிரைக் காக்கும் பொருட்டு இயக்கம் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. ஒரு படகு மூலம் அவர்களை சென்னைக்குக் கொண்டுவந்து திருவான்மியூரில் இருந்த பாலசிங்கம் - அடேல் தம்பதியினர் வீட்டில் தங்க வைத்தனர்.

அந்த மாணவிகளின் பெயர் – ஜெயா, வினோஜா, மதிவதனி, லலிதா. சென்னையில் அவர்கள் தங்கியிருந்த நேரத்தில் ஹோலிப்பண்டிகை வருகிறது. அருகில் இருந்தவர்களைப் பார்த்து அந்த மாணவர்களும் வண்ணப்பொடிகளைத் தூவி விளையாடினர். அப்போது அங்கு வந்த புலிகள் தலைவர் பிரபாகரன் மீதும் மதிவதனி வண்ணப் பொடிகளைத் தூவினார். `இது நமது பண்டிகை இல்லையே...’ என்று பிரபாகரன் கோபப்பட்டார். ஆனால், இதன் மூலம்தான் மதிவதனி பிரபாகரனைக் காதலிப்பதை பாலசிங்கம் கண்டுபிடித்தார்.

உண்ணாவிரதத்தில் சாகாமல் காப்பாற்றப்பட்ட அதே மதிவதனிதான், 2009-ம் ஆண்டு மே மாதம் வரை, ஒவ்வொரு கணமும் மரணம் துரத்தத் துரத்தப் போராடி பிரபாகரனோடு வாழ்ந்தார்.

வண்ணப்பொடி தூவித் தொடங்கிய அவர் வாழ்வில், அதிகம் பார்த்த வண்ணம் ரத்தச் சிவப்புதான். பாலசிங்கத்தின் மனைவி அடேலும் மதிவதனியைப் போன்றவரே. இங்கிலாந்தில் பிறந்த அடேல் பல காலம் ஈழப் போர்க்களத்தில்தான் இருந்தார். அடேல்தான் புலிகளின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தினார்.

பெண் புலிகளுக்கும் தலைமைக்குமான தொடர்பாளர்களாக மதிவதனியும் அடேலும் திகழ்ந்தனர். பால் வேற்றுமையற்ற தலைமை எனும் புலிகளின் செயல்திட்டத்தைச் செயல் படுத்திய திலும், பெண்களுக்கான தனிப் படையணியை உருவாக்கியதிலும் இந்த இருவரின் பங்கும் முக்கியமானது. செஞ்சோலை சிறுவர் பள்ளியை நிர்வகிப்பதில் மதிவதனி பெரும் பங்காற்றினார்.

உலகம் எங்கும் நடந்த உரிமைக்கான போராட்டங்களில் இப்படியான பெண்களின்  பங்கு பதிவுபெறாத வரலாறாகவே இருக்கிறது. மதிவதனியையும்  அடேலையும்  தனிமனுஷியாகப் பார்க்கவில்லை. களத்தில் போராடும் பெண்களின் பிரதிநிதியாகவே பார்க்கிறேன். கணவனோடு இலங்கைக் காடுகளில் அலைந்துதிரிந்த சீதை காவியத் தலைவியானார். அதே ஈழத்து மண்ணில் அதே காடுகளுக்குள் அதைவிடவும் அதிக காலம்  வாழ்ந்து, அந்த மண்ணிலேயே பிள்ளைகளைப் பெற்று அதே மண்ணுக்காக அவர்களை வாரிக்கொடுத்த மதிவதனி, நம் பாட்டுடைத் தலைவி இல்லையா?

போராட்டங்கள்தான் பாலின வேறுபாடுகளைக் களைகிற முதல் இடமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆண்களைவிடவும் போராட்டக்களங்களில் பெண்கள் அதிக ஈடுபாட்டோடு செயல்படுவதையும், உணர்வு பூர்வமாக முழங்குவதை எதிர்த்து நிற்பதையும் கண்டு சிலிர்த்திருக்கிறேன். இதைத்தான் மெரினா போராளிகள் நமக்கு உணர்த்தினர். காவல் துறையினர் மாணவர்களை அடித்து, விரட்டி, கடலோரம் கொண்டுபோய் நிறுத்தியபோது, காப்பாற்ற வந்த மீனவர்களில் சரி பாதிக்குமேல் பெண்கள்தான்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரணதண்டனையை ரத்து செய்யக்கோரி கோயம்பேட்டில் நடந்த கல்லூரி மாணவர்களின் போராட்டக் களத்துக்கு டிராட்ஸ்கி மருதுவும் நானும் போயிருந்தோம். மகனுக்கான போராட்டத்திலும் மக்களுக்கான போராட்டத்திலும் ஓயாமல் முன்நடக்கும் தாய்த் தமிழச்சி அற்புதம் அம்மாவைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு பெண்கள் குழு ஒன்று உணர்ச்சிகரமாகப் பாடிக்கொண்டிருந்தது. அந்தக் குரலில் எழுந்த கோபக்கனல் கேட்கிற யாரையும் சுட்டெரித்துவிடுகிற காட்டுத்தீயாக இருந்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி அடுத்த நாள் தன்னுடைய கோரிக்கைக்கு என தன்னையே எரித்துக்கொண்டு மாண்டுபோனாள். அவளுக்கு ஒரு பெயர் இருந்தது... செங்கொடி.போராட்டக் களங்களில் நான் காண்கிற ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு செங்கொடியைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவருடைய குரலிலும் செங்கொடியின் உணர்வைக் கேட்டிருக்கிறேன். ஆண் அடிமைத் தனத்துக்கு எதிராக பல ஆயிரம் ஆண்டுகளாகப் போராடுகிற மானுட உயிர் இல்லையா பெண்?

இப்போதும் சிவப்பு, கறுப்பு, நீலக் கட்சிகளின் கூட்டங்களில் பறையடித்துப் பாடுகிற, ஊர்வலங்களில் கோஷமிடுகிற, மனித விரோதங்களுக்கு எதிராக முழக்கமிடுகிற, எந்த வகையிலாவது மக்களுக்கான களப்பணியிலிருக்கிற நம் தோழியரைப் பார்க்கும்போது,  எனக்கு நினைவில் எழுகிற வரி ஆதவன் தீட்சண்யாவி னுடையது. அது... `மீசை என்பது வெறும் மயிர்’.

என் மனைவியின் பிரசவ அறையில் இருந்து கையில் பூப்பொதியாக குழந்தையை ஏந்திவந்த செவிலியரிடம் `என்ன குழந்தை?’ என்று கேட்டேன். அவர் பதில் சொல்லத் தயங்கினார். `பெண் குழந்தை என்றால் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி’ என்றேன். முகம் மலர்ந்து `பெண்தான்’ என்று பிரகாசித்த அந்தச் செவிலியின் ஒளிபூத்த தடயமாக இருந்த என் குழந்தை நிலாவுக்கு இன்று ஒன்பது வயது. அவள் வளர்பிறை.

இருசக்கரமோ, நான்கு சக்கரமோ... வாகனம் ஓட்டிச்செல்லும்போது நிதானமாகச் செல்கிறேன். சென்னை வாகன நெரிசலில் சாலை கடக்கத் தயங்கி நிற்கும் பள்ளிக்குழந்தைகள் செல்ல வழிவிட்டு வாகனத்தை நிறுத்திக்கொள்கிறேன். அவர்கள் மறுபுறத்தை அடையும்வரை பதற்றமாக இருக்கிறது. பின்னால் நிற்கும் வாகனங்களின் ஒலிப்பான்களையும், வசைச் சொற்களையும் பொருட்படுத்தாமல் அந்தக் குழந்தைகள் சாலையைக் கடந்து சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே வாகனத்தை எடுக்கிறேன். இதில் பெருந்தன்மை ஏதுமில்லை.

இதேநேரம், திருவனந்தபுரத்தின் ஏதேனும் ஒரு சாலையைக் கடக்கத் தயங்கும் என் மகளை, இதேபோல் பத்திரமாக அனுப்பிவைக்கும் ஒரு வாகன ஓட்டிக்குச் செய்யும் பதில் மரியாதையாகவே இதை  நான் கருதுகிறேன்.

பக்கத்துவீட்டுக்காரனும் பள்ளி ஆசிரியரும்கூட சிறுமலர்களைச் சிதைக்கும் இந்தச் சமூகத்தில்,  மானுடத்தின் ஒரு துளிர்ப்பு இந்த உலகில் பட்டுப்போகாது மிஞ்சியிருக்கும் என்பது உறுதி.நீளும் வன்மங்களைச் சுட்டெரிக்கும் வல்லமை நெருப்புக்கு இல்லையே தவிர, ஒப்பற்ற அன்புக்கு உண்டு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது அப்படி ஒரு மானுடத்தை உருவாக்குவதில் அதிகாரத்துக்கு எதிரான அரசியலை நோக்கி, தாய்மை நிறைந்த பெண்கள் முன்வருவார்கள். மெரினா கடற்கரையில் செல்போன் வெளிச்சத்தைத் தீபங்களாக்கி இருள் எரித்ததுபோல.
 
- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

உன்னினத்தை அழிக்கவே
அவர்கள்
அம்புகளுடன் காத்திருக்கிறார்கள்.
என் ஆசைக்கிளியே...
நீ நீண்டகாலம் என்னோடு இருக்க வேண்டும்
உனக்கான சுதந்திரக் காலம் வரும் வரை
செம்மணியின் ஓலத்தை
உலகெல்லாம் எடுத்துச் சொல்ல
என்னோடு இரு கிளியே
இந்தக் கூண்டின் மடியில்
விடுதலைப் பாடல் ஒலிக்கும் வரை
நீ என்னோடு இரு.

- தயாமதி

ஒரு சொல்
ஒரேயொரு சொல்
கதைப்பதற்கும் வழியின்றி
புதைக்கப்பட்ட
அத்தனை மனிதருக்குமாய்
அடிவயிற்றிலிருந்து எழும்
என் கதறல்
செம்மணி வெளி கடந்து
பிரபஞ்சமெங்கும் பரவும்
நட்சத்திரங்களை உலுக்கும்
புயலின் திசையை மாற்றும்
எரிமலையின் குமுறலையும்
பூகம்ப அதிர்வையும்
புதைக்கச் சொன்னவர்
வீட்டு முற்றத்துக்கு வரவழைக்கும்
கடைசி மூச்சை
அவர் விடும் கணத்திலும்
காதுக்குள் இரையும்.

- மலைமகள்

நாளையும் நான் வாழ வேண்டும்
கண்ணுறக்கம் தவிர்த்த நடுநிசி
எல்லை வேலியில்
நெருப்பேந்துகிறது என்னிதயம்
ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான
என் காவலிருப்பு
நாளையும் நான் வாழ வேண்டும்
எனதிழப்பின்
நிரப்ப முடியா இடைவெளி புகுந்து
பகை வரலாம்
புதிதாய் ஒரு புலி
விரைந்து வரும் வரை
இரட்டிப்பு விழிப்போடு காத்திருக்கும்
என் தோழியின் காவலுக்கு
என்னிழப்பு காரணமாயிருக்கக் கூடாது
நாளையும் நான் வாழ வேண்டும்.

- அம்புலி

“எழுதுங்களேன்
நான் எழுதாது செல்லும்
என் கவிதையை எழுதுங்களேன்
ஏராளம் எண்ணங்களை எழுத
எழுந்து வர முடியவில்லை
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர என்னால் முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.”

1991-ம் ஆண்டு ஆனையிறவுச் சமரின்போது இந்தக் கவிதையை எழுதியவர் கேப்டன் வானதி. இந்தச் சமரில் வானதி வீரச்சாவு அடைந்தார்.

ஏறிமிதிக்கும் கால்களை உதறி
நான் எழுவேன்
வல்லவன்தான் வாழ்வானெனில்
நானும் வல்லமை பெறுவேன்
என்னவர்களை அடைவேன்
என் இறைமைகளுக்காய்
ஊழியென எழுவேன்.

- ஆதிலட்சுமி

போராளி நாதினி 2000-ம் ஆண்டு ஆனையிறவு மீட்கப்பட்ட பின்னர் தனது முதலாவது கவிதையை எழுதினார்

“எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன் எனும்
உன் கவிதை
எழுதப்பட்டுவிட்டது.
உப்பு வெளியில்
உருகிய உங்கள்
உடல்கள் மீது
எமது வீரர்கள்
எழுதாத உன் கவிதையை
எழுதி முடித்தனர்.”

இந்தப் பகுதி கவிதைகள் அனைத்தும், ஈழப் பெண் போராளிகள் களத்திலிருந்து எழுதியவை.