Published:Updated:

சொல்யோகி

சொல்யோகி
பிரீமியம் ஸ்டோரி
சொல்யோகி

ஜெயமோகன் - படம்: ப.சரவணகுமார்

சொல்யோகி

ஜெயமோகன் - படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
சொல்யோகி
பிரீமியம் ஸ்டோரி
சொல்யோகி

 1991-ம் ஆண்டில் அசோகமித்திரனுக்கு 60 வயது நிறைவடைந்தது. என் நண்பர் சுப்ரபாரதிமணியன், அன்று `கனவு’ என்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். நானும் அவரும் திருப்பத்தூரில் அருகருகே குடியிருந்தோம். `அசோகமித்திரனுக்கு ஒரு விமர்சன மலர் கொண்டுவரலாம்’ என நான் சொன்னேன். என் முயற்சியில் அந்த மலர் மறு ஆண்டு வெளிவந்தது.

அப்போது திருப்பத்தூர் அருகே ஒரு கல்லூரியின் தமிழ் விழாவுக்கு  அசோகமித்திரன் விமர்சன மலரின் சில பிரதிகளை எடுத்துச் சென்றிருந்தேன். அந்தத் தமிழ் விழாவுக்கு வந்தவர்கள், நடத்தியவர்கள் எவருக்கும் அசோகமித்திரன் என்றால் யார் என்றே தெரிந்திருக்கவில்லை. என்னுடைய உறவினரா எனப் பலர் கேட்டனர்..

இதுதான் அசோகமித்திரனுக்கு தமிழ்ச்சூழல் அளித்திருந்த இடம். 1985-ம் ஆண்டில் எனக்குப் பழக்கமான நண்பரான ஆராவமுதன் என்னும் இதழாளர், அசோகமித்திரனின் `வாழ்விலே ஒருமுறை’ என்னும் நூலை வாங்கி எனக்கு அளித்து வாசிக்கும்படிச் சொன்னார்.

சொல்யோகி

`நீ இதுவரை வாசித்த எந்தக் கதை மாதிரியும் இருக்காது. சொல்லப்போனால் கதையே இருக்காது. சுவாரஸ்யத்தைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்காதே. இது வாழ்க்கை. அவ்வளவுதான்’ என்றார்.
ஆனால், எனக்கு அன்று வரை, நான் தமிழில் வாசித்த எந்தப் புனைவிலக்கியமும் அளிக்காத பெரும் ஆர்வத்தை அந்தச் சிறுகதைகள் அளித்தன. இன்று 30 ஆண்டுகளுக்குப் பின்னர்கூட அந்தக் கதைகளை முழுமையாகவே நினைவுகூர்கிறேன்.

வெறிபிடித்து அசோகமித்திரனை வாசிக்க ஆரம்பித்தேன். அவருடைய நூல்கள் அன்று 500 பிரதிகள் அச்சிடப்பட்டு, 15 ஆண்டுகளில் 300 பிரதிகள்கூட விற்காமல் 5 ரூபாய்க்கு வாங்கக் கிடைத்தன. அந்த ஆவேசத்தில் நானும் ஆராவமுதனும் அசோகமித்திரனை அவருடைய வீட்டில் சென்று பார்த்தோம். பழைய ஓட்டு வீடு. அசோகமித்திரன் ஒரு துண்டை மட்டும் இடுப்பில் கட்டியவராக வந்து, எங்களை எதிர்கொண்டார். `வீட்டில் நிறைய மனுஷா… வேற எங்கேயாவது போய்ப் பேசலாமே...’ என்றார். அந்த வீட்டையே வாடகைக்கு விட்டுவிட்டு அதன் சிறுபகுதியில் குடியிருந்தார் எனத் தோன்றியது.

அருகே இருந்த நடேசன் பூங்கா சென்று அமர்ந்து பேசினோம். நான் இலக்கியம் வாசிப்பதை அவர் ஊக்கப்படுத்தவில்லை. `லௌகீகத்தைப் பாத்துக்கோ’ என்றார். நான் தொலைபேசி நிலையத்தில் வேலைபார்க்கிறேன் என்றபோது, `வேலையை விட்டுடாதே’ என்று அறிவுரை சொன்னார். `போறச்சே... நர்மதா பதிப்பகம் போய் `இன்று' நாவல் ஒரு காப்பி வாங்கிட்டுப்போங்கோ. யாருமே வாங்கிற தில்லைன்னு ராமலிங்கம் வருத்தப்பட்டார்’ என்றார்

அன்று முதல் அவருக்கு அணுக்கமானவனாக இருந்தேன். கடிதங்கள் எழுதியிருக்கிறேன். என் கொந்தளிப்புகளை, தேடல்களை எழுதியிருக்கிறேன். கார்டில் நுணுக்கி எழுதி பதில் போடுவார். சிலமுறை மட்டும்  இன்லேண்டில் எழுதியிருக்கிறார். அவருடைய எழுத்தில் அவர்கொண்டிருந்த மத நம்பிக்கை வெளிப்படாது. மெல்லிய கிண்டலால் அது அடிபட்டுப்போயிருக்கும். ஆனால், என் மனச்சோர்வின்போது எனக்கு எழுதிய கடிதங்களில், ஆஞ்சநேயரை வழிபடும்படி எழுதியிருக்கிறார்.

அவர் இசை பற்றி எழுதியதில்லை. ஆனால், முறையாக இசை கற்றிருக்கிறார். `பாடகராக வேண்டும்’ என்ற ஆசை இருந்தது எனச் சொன்னார். தொன்மையான வரலாற்றை அவர் எழுதியதில்லை. ஆனால், அவருக்கு வரலாற்றை வாசிப்பதில் பெரும் மோகம் இருந்தது. அவர் மிகமிக எளிய அன்றாட உலகை எழுதியவர். ஆனால், விரும்பி வாசித்த படைப்பாளிகள் அலெக்ஸாண்டர் டூமா போன்ற சாகச எழுத்தாளர்கள். சினிமா மீது ஒரு தனி மோகம் இருந்தது. குறிப்பாகச் சாகசப்படங்களில். எர்ரால் ஃப்ளின் போடும் கத்திச்சண்டை பற்றிச் சொன்னால் அவர் முகம் மலரும். உணவில் ஈடுபாடே இல்லாதவர். ஆனால், கடுங்கசப்புக் காபி மேல் பெரிய ஆர்வம் உண்டு.

எனக்குத் திருமணமானபோது அருண்மொழியை அழைத்துக்கொண்டு வாழ்த்துபெறச் சென்றேன். `வா... உனக்கு நல்ல காபி வாங்கித் தர்றேன்’ என ஒரு ராயர் கபேக்கு அழைத்துச்சென்றார். அருண்மொழியுடன் எப்போதும் அவருக்கு ஓர் அணுக்கம் இருந்தது. பார்த்த முதல் கணத்திலேயே, `எப்படி இருக்கே கொழந்தை?’ எனத் தோளை அணைத்துக் கொண்டார்.

அசோகமித்திரன் கதைகள் சென்னையையும் செகந்திராபாத்தையும் களமாக்கியவை. கீழ்நடுத்தர மக்களின் வாழ்க்கையை வாசகன் உணரும்படி குறிப்புணர்த்திச் சொல்பவை. உணர்ச்சிவேகமும் சீற்றமும் கொண்ட கதைகளும் உண்டு. ஆன்மிகமான சிடுக்குகளும் தத்துவக் கேள்விகளும் கொண்ட படைப்புகளும் உண்டு.

இந்த  30 ஆண்டுகளில் அசோகமித்திரனைப் பற்றி திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறேன்.

50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை என்னால் நினைவுகூரமுடிகிறது. அவரை அடுத்த  தலைமுறைக்குக்  கொண்டுசென்று சேர்த்ததில் எனக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு. அது என் கடமை. அத்தகைய ஒரு தொடர்ச்சி வழியாகவே இலக்கிய இயக்கம் முன்நகர்கிறது என நினைக்கிறேன்.

என் நோக்கில் பாரதிக்குப் பிறகு, உருவான நவீன தமிழிலக்கியத்தில் மேதை என ஐயம் இல்லாமல் சொல்லத்தக்கப் படைப்பாளிகள் இருவரே. ஒருவர் புதுமைப்பித்தன்; இன்னொருவர் அசோகமித்திரன். பெரும்பாலான தமிழ்ப் படைப்பாளிகள் ராக்கெட்போல. தங்கள் ஆரம்ப விசையால் மேலெழுவார்கள். ஒரு 10 ஆண்டுக்காலம் எழுதிவிட்டு அப்படியே கீழிறங்கிவிடுவார்கள். மிகச் சிலருக்கே அடுத்த கட்டம் என ஒன்று இருக்கும். ஆனால் 50 ஆண்டுகளாக எப்போதுமே தீவிரமான படைப்பூக்க நிலையிலேயே அசோகமித்திரன் இருந்திருக்கிறார்.

தமிழ்ப் படைப்பாளிகள் மிக எளிமையான உலகியல் செயல்பாடுகளுக்காக எழுத்தை நிறுத்திவிட்டிருக்கிறார்கள். வீடு கட்டுவதற்காக, வேலை உயர்வுக்குப் படிப்பதற்காக, தொழிலுக்காக. அசோகமித்திரன் முழுமையாகவே தன் வாழ்க்கையை எழுத்துக்கு என அளித்தவர். இத்தனைக்கும் நவீன எழுத்தாளர்களில் அவர் அளவுக்குக் கடின வாழ்க்கையை அடைந்தவர் எவரும் இல்லை.

திரைப்படத் தயாரிப்பு உதவியாளராக இளமையில் இருந்தவர், அந்த வேலையை விட்டபின்னர் நிலையான வருமானம் இல்லாதவராகவே கடைசி வரை வாழ்ந்தார். மிகச் சாதாரணமான வேலைகளைச் செய்திருக்கிறார். நான் பார்க்கும்போதுகூட பழைய துருப்பிடித்த சைக்கிளில்தான் சென்னையில் அலைந்துகொண்டிருந்தார்.  `யாரும் ஒண்ணும் பண்ணலை. சரி, எனக்கு கேட்கவும் தெரியலை’ என்று என்னிடம் ஒருமுறை சொன்னார்.

அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறலும் பலவீனமும் இருந்தன. அதைப் பற்றி நான் ஒரு பேட்டியில் கேட்டேன். `என்ன உடம்புக்கு?’ என்றதற்கு, `சாப்பிட வேண்டிய வயசுலே சாப்பிடலை... அதான்’ என்றார்.  அமர்ந்து எழுத இடம் இல்லாமல் பூங்காவில் வெயில் வருவதற்கு முன்பு அமர்ந்து எழுதினார். எழுதத் தாளில்லாமல் அச்சகத்தில் வெட்டிக்கழித்திட்ட நியூஸ் பிரின்ட்களை வாங்கிவந்து பயன்படுத்தினார். பல கதைகளை பென்சிலால் எழுதியிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அன்றைய நிலையில் சிறந்த கல்வி பெற்றவர். சிறந்த  ஆங்கிலத்தில்  எழுதும்  ஆற்றல்கொண்டவர். ஆங்கிலத்தில் எழுதியதனால்தான் கொஞ்சமேனும் வருமானம் வந்தது. ஆனால் அவர் உள்ளத்தின் மொழி தமிழ். இலக்கியம் அவருடைய யோகம். ஆகவே, பணமோ புகழோ இல்லாத நிலையில், எண்ணிச்சொல்லக்கூட வாசகர்கள் இல்லாதிருந்த சூழலில் எழுதிக்கொண்டே இருந்தார்.

நான் 1999-ம் ஆண்டில் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய `சொல்புதிது’ சிற்றிதழில் அவர் படத்தை அட்டையில் வெளியிட்டேன். அப்போதும் அதே கேள்வி சூழலில் இருந்து எழுந்தது . `யார் இவர், உங்க சொந்தமா? என்று.அந்த அட்டையை நான் சட்டமிட்டு என் வீட்டில் வைத்திருக்கிறேன். என் படிப்பறையில் இருக்கும் இரண்டு படங்களில் ஒன்று காந்தி; இன்னொன்று அசோகமித்திரன். இரு கர்மயோகிகள்.

ஒருவரை உலகமே கொண்டாடியது. இன்னொருவர் எவராலும் அறியப்படாது வாழ்ந்தார். ஆனால், இருவரும் தங்கள் செயலை யோகம் என இயற்றினர். இரு எல்லைகள், இரு மகத்தான முன்னுதாரணங்கள். இப்போதும் வீட்டுக்கு வருபவர்கள் கேட்பது உண்டு, `உங்க சொந்தமா?’ சிலர், `அப்பாவா சார்?’ என்பார்கள். `இல்லை... குரு’ என்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism