Published:Updated:

குடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா?

குடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா?
பிரீமியம் ஸ்டோரி
குடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா?

ம.கா.செந்தில்குமார்

குடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா?

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
குடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா?
பிரீமியம் ஸ்டோரி
குடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா?
குடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா?

‘‘நகரத்தில் திடீரென ஒரு கஷ்டம். நாம் அத்தனை பேரும் மூன்று மாதங்கள் கிராமத்தில் போய்த் தங்கவேண்டிய கட்டாயம். கிராமத்துக்குப் போனால் நம் மக்கள் நமக்கு நிச்சயம் சோறு போடுவார்கள். ஆனால் விவசாயி, ‘என்னால் வளைய முடியலை. இத்தனை வருஷங்களா நாங்க உங்களைப் பார்த்துக்கிட்டோம். ஒரு மூணு மாசம் நாங்க நகரத்துக்கு வர்றோம். எங்களைப் பார்த்துக்கங்க’ என்று சொன்னால், அவர்களை நம்மால் பார்த்துக்கொள்ள முடியுமா? `முடியாது' என்பதுதானே உண்மை. இது, நகரவாசிகளான நாம் எந்த அளவுக்கு ஆபத்தில் இருக்கிறோம் என்பதை யோசிக்கவேண்டிய தருணம்’’ - தன் ஆதங்கத்தைக் கொட்டுகிறார் பிரகாஷ்ராஜ்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வந்தவரிடம் பேசினேன். ‘‘நண்பா... தமிழக ராணுவ வீரன், கர்நாடக ராணுவ வீரன் என ராணுவ வீரனைப் பிரித்துப்பார்க்காதபோது விவசாயிகளை மட்டும் ஏன் தமிழ்நாட்டு விவசாயி, கர்நாடக விவசாயி எனப் பிரிக்கிறீர்கள்? அவர்கள் இந்திய விவசாயிகள். என் நண்பர்கள்’’ - இயற்கை விவசாயி பிரகாஷ்ராஜின் பேச்சில் அவ்வளவு அன்பு.

‘‘மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அருண் ஜெட்லியைப் பார்த்தது நம்பிக்கையைத் தந்ததா?’’


‘‘எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு அழுத்தத்தைத் தர வேண்டும். அவர்கள், ‘இன்னும் அழுத்தம் பெரிதாகுமா... பதில் சொல்லவேண்டிய சூழலுக்கு வந்து நிற்போமா?’ என்று காத்திருப்பார்கள். அழுத்தம் பெரிதாகவில்லை என்றால், அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்களுக்குப் பண்ண முடியாது என்பதும் இல்லை; பண்ணக் கூடாது என்பதும் இல்லை. ‘பண்ணினால் என்ன பயன்?’ என்று பார்ப்பார்கள்.’’

‘‘ ‘ஒட்டுமொத்தமாக விவசாயக் கடன்களை எப்படித் தள்ளுபடி செய்ய முடியும்?’ என்று மத்திய அரசு கேட்கிறதே?’’


‘‘கடைந்தெடுத்த பொய். கார்ப்பரேட் கம்பெனிகளின் வரிகளில் ஐந்து லட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி பண்ணுகிறார்கள். பல லட்சம் கோடி ரூபாயில் அவர்களுக்குக் கடன்களையும் வழங்குகிறார்கள். அதில்  20 சதவிகிதம் கொடுத்தாலே ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யலாம். அவர்களைப் பொறுத்தவரை விவசாயிகள் வாக்கு வங்கிகள். இன்று தமிழ்நாட்டில் மத்தியில் ஆளும் கட்சிக்கு வேலை இல்லை. அதனால் தமிழகம் அவர்களுக்குப் பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை. ஆனால், கர்நாடகாவில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சி. அதனால் கர்நாடகாவுக்கு எதிராக அவர்களால் போக முடியவில்லை. அப்படி என்றால், நீங்கள் ஆதாயத்தை மனதில் வைத்து அரசியல் செய்கிறீர்கள். உத்தரப்பிரதேசத் தேர்தலில் வெல்ல, ‘விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்கிறோம்’ என்று வாக்குறுதி கொடுக்க முடிந்த உங்களுக்கு, தமிழக விவசாயிகளைப் பற்றிய அக்கறை இல்லாதது ஏன்? 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். தன் குடிமகனைச் சாகக்கொடுத்துவிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பது தான் அரசுக்கு அழகா?’’

குடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘காவிரி விவகாரம், விவசாயிகளின் போராட்டம் இங்கு அனைத்தையும் சென்சேஷன் பண்ணுகிறார்களே?’’

‘‘என் பட புரமோஷனுக்காக ஒரு கன்னட டிவி சேனல் பேட்டிக்குப் போயிருந்தேன். திடீரென காவிரி விவகாரம் பற்றிக் கேட்டார்கள். ‘அதைப் பற்றி கேட்கவேண்டிய அவசியம் என்ன... ஏன் சென்சேஷன் பண்ணுகிறீர்கள்?’ என்று கோபப்பட்டு வெளியேறினேன். பிரச்னைக்குரிய அந்த விஷயத்தின் மீதான ஈடுபாட்டைவிட அவர்களுக்கு அன்றன்று பிழைப்பு நடக்கவேண்டியிருக்கிறது. ‘அவர்கள் இந்திய விவசாயிகள்’ என்று நான் சொன்னாலும் கர்நாடகாவில் அவர்களைத் தமிழக விவசாயிகளாகத்தான் பார்க்கிறார்கள். ‘ஏம்ப்பா நீ கர்நாடகாவுல பிறந்திருக்க? தமிழ்நாடு விவசாயி மட்டும்தான் உன் கண்ணுக்குத் தெரியுறானா... நாங்க தெரியலையா?’ என்று குதர்க்கமாகக் கேட்பார்கள். ஆனால், இதுபோன்ற குதர்க்க வாதிகளைக் கண்டு கோபப்படாமல், ஓடி ஒளியாமல் நின்று பதில் கொடுக்கவேண்டியுள்ளது. அதற்கு, பொறுமை தேவைப்படுகிறது. ஆமாம், அடுத்தவனின் அறியாமையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியதாக உள்ளது. ஆனால், என் கொள்கை, என் சிந்தனை சரியாக இருக்கின்றன. மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு உண்மையைப் பேச எதற்கு பயம்?’’

‘‘விவசாயத்தை, அடுத்த தலைமுறை இளைஞர்கள் கையில் எடுப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறதா?’’


‘‘அவர்கள்தானே 43 சதவிகிதம் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு நம்பிக்கை தருகிறார்கள். குறிப்பாக, தமிழக இளைஞர்கள் மிகச்சரியாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதையாவது செய்யும்போது அதைச் செய்யவிடாமல் அரசியல் தடுக்கிறது. அவர்களின் எண்ணங்களை அரசியல் உடைக்கிறது. இதற்காகத்தான் இளைஞர்களை நான் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறேன். அரசியல் என்றால் கார்ப்பரேட், எலெக்‌ஷன் என அனைத்து அரசியல்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்.’’

‘‘சினிமாவுக்கு வருவோம். தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. ஆனால், இந்தக் கலை ஒரு சிஸ்டத்துக்குள் இல்லாமல் தனித்தனி தீவாக நிற்கிறதே?’’

‘‘சினிமா துறையும் ஒரு விவசாயம்தான்.இங்கேயும் தவறான விவசாய முறைகள் உள்ளன. அதைச் சரிசெய்யத்தான் நடிகர் சங்கத்தில் தொடங்கி இப்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருகிறோம். 10 லட்சம் ரூபாயில் படம் எடுப்பவரும், 50 கோடி ரூபாயில் படம் எடுப்பவரும் முதலாளிகள்தானே! இருவரும் கனவு கண்டுதானே ஓர் அடையாளத்தைத் தேடி வந்திருக்கிறார்கள். பிறகு ஏன் பாரபட்சம்? நீங்கள் 50 கோடி ரூபாயில் படம் எடுக்கும் பெரிய நடிகர்களை வைத்துச் சூதாடுகிறீர்கள். ஆனால், 10 லட்சம் ரூபாயில் படம் எடுக்கும் ஒருவனையும் ஏன் சூதாடவைக்கிறீர்கள்? இது நியாயம் இல்லையே! இங்கு வரும் எல்லோருக்கும் எல்லாமும் தெரியாது. அவர்களை, தயாரிப்பாளர் சங்கம்தான் தாயைப் போல் அரவணைக்க வேண்டும். ஆனால், இன்று சங்கத்தில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தனித்து விடப்படுகிறான். அவனுக்குத் தகவல்கள் இல்லை. சரியான வழிகாட்டல் இல்லை. ‘உன் உணர்வு, துள்ளல் புரியுது. இந்த மாதிரி ஜானர் படம் எடுக்கும்போது இவ்வளவுதான் செலவாகும். சாட்டிலைட் ரைட்ஸில், எஃப்.எம்.எஸ் ரைட்ஸில் மாஃபியாக்கள் இருக்கிறார்கள். உன்னை ஏமாற்றுவார்கள். ஜாக்கிரதை’ என்று சொல்லி அவனை அரவணைக்க வேண்டும். நீங்கள் சங்கத்தில் பாருங்கள், அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் வாங்க வரிசையில் நிற்பதுபோல்தான் தயாரிப்பாளர்கள் நிற்கவைக்கப்படுகிறார்கள். அவர்களைக் கைநீட்டி பேசுகிறார்கள். அவர்களுக்கான மரியாதை அங்கு இல்லை. ஆமாம், அதை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். நான் நல்ல படங்கள் எடுத்திருக்கிறேன். அதை மக்களிடம் சரியான முறையில் சேர்க்க முடியாமல் தோற்றும் இருக்கிறேனே! நான் பட்ட துன்பம் இன்னொருவர் படவேண்டாம் என்ற நல்லெண்ணத்தில்தான் களத்தில் இறங்கியுள்ளோம்.’’

குடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா?

‘‘நீங்கள் அரசிடம் எதிர்பார்ப்பது என்ன? `வரிவிலக்குக்கு ஒரு கோடி ரூபாய் வரை லஞ்சம் கேட்டார்கள்' என்றீர்களே?’’

‘‘ஆமாம். அது உண்மைதான். தவிர, இத்தனை வருடங்களாக மாநில அரசு விருதுகள் கொடுக்கப் படவில்லை. அது அரசின் வேலை இல்லையா? எவ்வளவு பெரிய அரசியல் சிக்கலாகவும் இருக்கட்டும். கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டாமா? கலையை வளர்க்காத, கலைஞனை மதிக்காத சமூகம் முன்னேறாது. அதேபோல இத்தனை வருடங்களாக மானியம் கொடுக்கவில்லை. இவற்றைக் கேட்கும் வகையிலான வலுவான சங்கமாக இருக்க வேண்டாமா? ஏன் இத்தனை ஆண்டுகளாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கேட்கவில்லை?’’

‘‘ஜீ கன்னடம் டிவி சேனலில் சர்ப்ரைஸாக ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் உங்களைப் பற்றிப் பேசியபோது ஆனந்தத்தில் நீங்கள் கண்கள் கலங்கினீர்கள். அவருடன் எப்படி உங்களுக்கு நட்பு?’’


‘‘ஸ்பீல்பெர்க் ஓர் உலகக் கலைஞன். ஐந்து வருடங்களுக்கு முன்னர் மும்பையில் டினா அம்பானி நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அப்போது ஏற்பட்ட அறிமுகம் அதன் பிறகு அவர் என்னுடைய `காஞ்சிவரம்' படத்தைப் பார்த்திருக்கிறார். டிவி நிகழ்ச்சியில் அவர் என்னைப் பற்றி பேசும்போது, ‘மாபெரும் நடிகன்’ என்று சொல்ல வில்லை. ‘இந்த உலகலாவிய கலெக்ட்டிவ் ஆர்ட்டுக்கான உங்கள் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன்’ என்றார். எப்படிப்பட்ட கலைஞனிடமிருந்து எப்படியான வார்த்தைகள். ‘நீ நம் இனமடா. நாமெல்லாம் ஒண்ணுடா’ என்று சொல்லாமல் சொல்கிறார். ஆம், இதை நான் சினிமாவுக்கான பாராட்டாகவே பார்க்கிறேன். பல மொழி சினிமா அனுபவம், நாடகம், பயணம், பக்குவம், படித்த இலக்கியம், என்னை இயக்கிய மனிதர்கள்... இவை அனைத்தின் பிரதிநிதிதானே நான். இவை அனைத்தின் சாரம்தானே. அந்தக் கண்ணீர் சந்தோஷத்தின் உச்சம்.’’

‘‘படங்கள் பண்ணுவதைக் குறைத்துவிட்டீர்கள். ‘போதும்டா’ என்ற சலிப்பா?’’

‘`ஐம்பது வயதான ஒரு மரத்தைப் பாருங்கள். அதன் கம்பீரத்தை, அழகைப் பார்க்கையில் ‘இந்த மரத்துக்கு வயது ஐம்பதா, எழுவதா, நூறா?!’ என்ற சந்தேகம் வரும். அப்படி ஒரு மனிதனுக்கு
ஐம்பது வயதாகும்போது அவன் பேச்சிலும் நடத்தை யிலும் அது தெரியவேண்டும் இல்லையா? தவிர, நடிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லையே. இளைஞனாக இருக்கும்போது தொடுவானத்தைத் தொட வேண்டும் என்ற ஆசை இருக்கும். தொடுவானம் சென்றவனுக்கு இன்னொரு தொடுவானம் கண்ணுக்கு வரும். போகப்போக அவன் எங்கிருந்து கிளம்பினானோ, அதுவே ஒரு தொடுவானமாக வேண்டும். அதுதான் இயற்கை. பிரகாஷ்ராஜ் என்கிற நடிகன் பிறகு தயாரிப்பாளன், இயக்குநன், எழுத்தாளன், விவசாயி, ஓர் ஊரைத் தத்தெடுப்பவன் என வளர்பவன். தன் வாழ்க்கையில் அப்பனுக்கு மகனாக இருந்தவன் புருஷனாகி, அப்பனாகி ... இப்படிப் பல கோணங்களில் வளர்கிறான். படங்களைக் குறைத்துள்ளேன் என்றால், வேறு என்னென்ன விஷயங்கள் என் வாழ்க்கைக்குள் வந்திருக்கின்றன என்பதைப் பார்க்கவேண்டும். இனிமேலும் நான் சிறந்த நடிகன் என்று நிரூபிக்கவேண்டிய அவசியம் கிடையாது. இனியும் சம்பாதித்துக்கொண்டே இருக்கக் கூடாது. சொத்து மட்டுமல்ல வாழ்க்கை. அனுபவங்களைச் சம்பாதிக்க வேண்டும். இன்னமும் தீவிரமாக அடர்த்தியான வாழ்க்கையில் இருக்கிறேன். ஆம், மரம்போல் கிளைகள்விட்டு வளர்கிறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism