Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 30

#MakeNewBondsகே.வி.ஷைலஜா, படங்கள்: அருண் டைட்டன்

பிரீமியம் ஸ்டோரி

ப்போதெல்லாம் என்னிடம் ஒரு வொயர் பிரேக் சைக்கிள் இருக்கும். வானத்தின் எல்லையே அதன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 30

பிரேக்கில்தான் கட்டப்பட்டிருந்தது.

எம்.காம் முடித்துவிட்டு வந்தவுடனேயே திருவண்ணாமலையில் அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அளவிலான ஒரு பள்ளியில் நல்ல சம்பளத்துடன் கிடைத்த வேலையை, சைக்கிளில் சுற்றி அனுபவித்த நாள்கள் அவை.

பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஒரு மாலையில், காதல் வயப்பட்டிருந்த பவாவின் பிறந்தநாளுக்கு, சட்டை எடுத்துப் பரிசளிக்க முடிவெடுத்து, துணிக்கடைக்குப் போனேன். பவா எப்போதும் போடும் ரவுண்டு நெக் டிஷர்ட் வாங்குவதில் பிரச்னை இல்லை. ஆனால், பிடித்த நிறத்தில் ஒரு சட்டையைப் பரிசளிக்கவேண்டி, மிக அழகான ஒரு துணியைத் தேர்ந்தெடுத்தேன். `எவ்வளவு வேணும்மா?’ எனக் கடைக்காரர் அளவு பற்றி கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. `எவ்வளவு  துணி எடுக்கணும்?’ நமக்கு நீட்டு கைவெச்சு பிளவுஸ் தைக்கணும்னாலே ஒரு மீட்டர் தேவைப்படுதே... அப்படின்னா ஓர் ஆணுக்கு? லாங் ஹேண்டு, நீளம், அகலம் என யோசித்துவிட்டு மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தேன். 

‘ம்… மூன்றரை மீட்டர் குடுங்க.’

ஆண்பால் பெண்பால் அன்பால் - 30

‘எதுக்கும்மா, சட்டை தைக்கவா?’

 குழப்பத்துடன்... ‘ம்… பரவாயில்ல. பத்தலைன்னா நான் மறுபடியும் வந்து எடுத்துக்கிறேன்... இதே கலர் அப்ப கிடைக்கும்ல?’ - துணிக்கடையின்  ஆண்கள் பிரிவில்  இருந்த  எல்லோரும் சிரித்துவிட்டனர். பழக்கமே இல்லாத ஒரு பெண் முதல்முறையாகத் தன் காதலனுக்குத் துணி எடுக்க வந்திருக்கிறாள் என்று எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. `அய்யர் பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்க’னு தம்பி நா.முத்துக்குமாரும் அப்போது பாடல் எழுதியிருக்கவில்லை. ஆனால், அது எந்தக் காலத்திலும் அப்படித்தான் போலிருக்கிறது.

அப்பாவும் உடன்பிறந்த சகோதரர்களும் இல்லாமல் பெண்களால் சூழப்பட்ட என் வாழ்வில், இப்படியாகத்தான் ஓர் ஆண் பிரவேசிக்கிறார். எனில், அதற்கு முன்னர் எனக்கு ஆண்களே பரிச்சயம் கிடையாதா,  நண்பர்களே கிடையாதா, மனிதத்தின் சரிபாதியைத் தெரியாமலே வளர்ந்துவிட்டேனா?

`இளம் விதவைத் தாய் வளர்த்த பிள்ளைகள்...’ என யாரும் சொல்லிவிடக் கூடாது என என் மென்சிறகுகள் அவ்வப்போது வெட்டிவிடப்பட்டுக்கொண்டே இருந்தன. எனக்குள் இருந்து வெளிப்படத் துடித்திருந்தவை, உள்ளுக்குள்ளேயே முழுவதுமாக அமிழ்ந்துபோகப் பழக்கியிருந்தேன்.

ஆனாலும், அந்த வயது வரையிலும் இவற்றை எல்லாம் மீறி எனக்கு இருந்த நண்பன் விஷ்ணு. என் உறவுக்காரப் பையனும்கூட. விஷ்ணு கேரளாவிலும் நான் திருவண்ணாமலையிலும் வளர்ந்தோம். ஆனால் விடுமுறை தினங்கள், எங்களைப் பகிர்ந்துகொள்ள போதுமானதாக இருந்தன. கோலம் போடுவதில் ஆரம்பித்து, பாண்டி விளையாடி, மலைமேல் ஏறி, காட்டுப்பூக்கள் பறித்து, பனிக்குள் நுழைந்து, தின்பண்டங்களைப் பகிர்ந்து, ஃபெயிலான மார்க்குக்காகப் பயந்து, அதைப் பற்றிப் பேசி, கொஞ்சம் வளர்ந்த பின் கவிதை பகிர்ந்து,  கதை சொல்லி, மலையாளப் பாட்டுகள் பாடி, தமிழ்ப் பாடல்களை எனக்காகக் கற்றுக்கொண்டு தப்பும்தவறுமாகப் பாட முயற்சித்து... என என் பால்யங்களில் எந்தச் சிக்கல்களுமின்றி இணைக்கப்பட்டிருந்தது அவன் மனசு.

நண்பர்களோடு விஷ்ணு போன ஒரு கானகப் பயணத்தை, எனக்கு அப்படியே கடத்தவேண்டி 45 பக்கங்களுக்குப் பயணக் குறிப்பாக எழுதி அனுப்பியபோது,  நானும் மரச்செறிவிலிருந்து காட்டு யானைகளைப் பார்த்தேன்; பயந்தபடி சருகுகளின் மேல் கால் வைத்தேன்; குளிரில் நடுங்கி, ஊதி ஊதி கஞ்சி குடித்தேன்.

 படிப்பு முடிந்து விஷ்ணு திருவண்ணாமலைக்கே வந்தபோது, எங்கள் பச்சை மண் போன்ற நட்பின் குறுக்கே யாருமே தென்படவில்லை.

தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சிபோல, எங்கள் ப்ரியம் காதலாகிக் கசிந்துருகவில்லை. எப்படியாவது மனதைச் சொல்லிவிட வேண்டும் என்று தவிக்கவில்லை. அது  எப்போதும்போல காட்டுக்குழலாக நட்பை மட்டுமே இசைத்துக்கொண்டிருந்தது.

ஆனால், இதை அப்படியே புரிந்துகொள்ளும் சமூகம் இல்லையே. விஷ்ணு வீட்டில் `எப்போது அவளைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறாய்' என்பது எல்லோருடைய வீடுகளையும்போலவே தொடர் கேள்வியானது. அதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல நாங்கள் எங்கள் நட்பில் நிரந்தரப்பட்டிருந்தோம். அதெப்படி, ஓர் ஆணும் பெண்ணும் காதலின்றி இந்த வயது வரையிலும் இருக்க முடியும் என்பது அவர்களுக்கு இன்னமும் ஆச்சர்யமும் விடை தெரியாத கேள்வியுமாகவே இருந்தது. ஆண்பாலும் பெண்பாலும் காமமின்றி இணைந்து எவ்வளவு நாள்களும் இருக்க முடியும் என்பதை, இந்தக் கட்டுரையின் வழியாகவாவது அவர்கள் உணர்ந்தால் அடுத்த தலைமுறை, சொற்களின் காயமின்றி தப்பிக்கும்.

பவாவுடனான என் காதலைக்கூட நான் விஷ்ணுவுக்குத்தான் முதலில் சொல்லியிருந்தேன். இப்போதும் பவாவும் விஷ்ணுவும் நல்ல நண்பர்கள் என்பது பீலிகொண்டு வருடுவதுபோல எத்தனை ஆரோக்கியம்... அதுவும் ஒரு பெண் மனசுக்கு.

நான்கைந்து வருடங்களுக்கு முன்னர், தங்குவதற்கு அமைதியாக ஓர் இடம் வேண்டும் என்று எங்கள் நிலத்துக்கு வந்தவர் சௌக்கத். குரு நித்திய சைதன்ய யதியின் குருகுலத்தில் இருந்தவர். கண்கள் வழி மனநிலையை வாசிக்கத் தெரிந்த நண்பன். சௌக்கத், எங்களோடு இருந்தபோது நாங்கள் படைப்பு மனநிலையோடு இருந்தோம். எப்போதும் மாறி மாறி எழுதி அதை வாசித்து மொழிபெயர்த்து, மகன் வம்சி புகைப்படம் எடுத்து, அதுகுறித்துப் பேசுவது என அது மழைநாள்களை அனுபவிப்பது போன்ற ஒரு மனநிலை. தினம் தினம் சௌக்கத்தைத் தேடிவரும் நண்பர்களும் தேசாந்திரிகளும் அதிகம். அதில் கீதா காயத்ரி, ஜோசப் சேட்டன், நஜீப் குட்டிப்புறம், தஸ்லிமா... இன்னும் இன்னும் சில சூஃபிக்கள் என எங்கள் நிலத்து வீடே புதிய மனிதர்களால் பொலிவுற்றிருந்தது. சௌக்கத்தின் கைபிடித்து, கண்கள் மூடி பத்து நிமிடங்கள் உட்கார்ந்திருந்தாலே போதும்... வாழ்வின் பதற்றம் நீங்கி அமைதி ஏற்பட. சௌக்கத்... அப்படி ஒரு சுத்த ஆத்மா.

நான் எப்போதும் சௌக்கத்திடம், ‘நீங்கள் என் நண்பன் விஷ்ணுவைப்போலவே இருக்கிறீர்கள்’ எனச் சொல்வேன். கண்கள் மலர்ந்த சிரிப்புடன், ‘எந்நா குட்டிக்காலத்தெ சுகிர்த்தாயி என்னெக் கருதிக்கோ ஷைலா’ என்பார்.

நான்கைந்து முறை ஹிமாலயத்துக்குச் சென்று வந்திருந்தவர், அந்த அனுபவத்தை ‘ஹிமாலயம்’ என்ற ஒரு புத்தகமாக எழுதி, அது கேரள சாகித்ய அகாடமி விருது பெற்று, என் சகோதரி
கே.வி.ஜெயஸ்ரீயால் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஆறு மாதங்கள் எங்கள் நிலத்து வீட்டில் தங்கியவர் மீண்டும் ஹிமாலயம் செல்வதற்காகப் புறப்பட்டார். எத்தனை மாதங்கள் ஆகும் திரும்பி வர என்று தெரியாது. கையில் போன் இல்லை, லேப்டாப் இல்லை. மெயில் அனுப்ப முடியாது. அவரே எங்கிருந்தாவது எப்போதாவது தொடர்புகொள்வார்... அவ்வளவுதான். ஆனால், சௌக்கத்தின் இல்லாமையே தெரியாது. அவர் விட்டுச்சென்ற அனுபவங்களால் நிறைந்திருக்கும் எங்கள் நிலப்பரப்பு.

அதீத அன்பின் பாரமேறிய நாள் ஒன்றில் மிகுந்த காயப்பட்டிருந்தேன். அன்பு எப்போதும் புன்னகையையும் நிறைவையும் மட்டுமே தராது. அதுவும், நிறைவில் குறை தேடும் மனம் வாழ்வில் எப்போதாவது வாய்த்துவிட்டால், அது விஷக்கொடி போன்றது. துளிர்கள் முளைவிட்டு, படர்வதுபோலவே, மேலெழுந்து தான் படர்ந்த செடியை முற்றிலும் அழித்துவிடும். அப்படியான துளிர்கள் ஆன்மாவை அழுத்தின நாள்கள் ஒன்றில், இரவெல்லாம் வழிந்த கண்ணீர் வற்றியபோது, அதிகாலையில் எனக்கு ஒரு தொலைபேசி வந்தது.

‘ஷைலா, இது சௌக்கத்தானு…’

‘சௌக்கத் எங்கயிருந்து?’

‘ஹிமாலயம். அது போகட்டும். ஷைலா நேத்து ஏதோ மனசு வேதனைப்பட்டு அழுத மாதிரியே இருந்துச்சு. விடியட்டும்னு காத்திருந்தேன். என்ன ஆச்சு ஷைலா?’

மனசைப் படிக்கிற மனிதர்கள் எவ்வளவு அபூர்வம்.

மடைதிறந்து கொட்டியதுபோல மீண்டுமாக அழுதேன். அழுகையின் முடிவிலான உரையாடலில் தெளிவுற்றிருந்தேன். ஐப்பசி மாத அடைமழையைத் தாங்கி, எல்லாம் முடிந்த பின் சோர்வுற்றுக் கிடக்கும் எங்க ஊர் மலையைப்போல நானும் சாந்தமானேன்.

எனக்கு நிறைய நண்பர்களைக் கொண்டுவந்து சேர்த்ததில் பவாவுக்கே பங்கு உண்டு. அதற்கான நன்றிகள் எப்போதும் என் இதயத் தமனிகளில் நிறைந்திருக்கும். அதில் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். இயக்குநர் என்றா சொன்னேன்? இல்லை... தாய். தாய் என்றா சொன்னேன்? இல்லை... சகோதரன். சகோதரன் என்றா சொன்னேன்? இல்லை... ஆசான். ஆசான் என்றா சொன்னேன்? இல்லையில்லை, என் நண்பன்.

அன்று முதன்முதலாக மிஷ்கினைப் பார்க்கிறேன். வம்சி புக்ஸின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசவந்த மிஷ்கின், மதிய உணவுக்கு எங்கள் எல்லோரையும் அவரின் அலுவலகத்துக்குச் சாப்பிட அழைத்துப் போனார். சாப்பாடு என்பதே அவருக்குக் கொண்டாட்டம்தான். எத்தனை பேர் வந்தாலும் சலிக்காமல் கணக்குப் பார்க்காமல் மிக அதிகபட்ச ருசியுடன் உணவு தயாரிக்கச் சொல்லி, சாப்பிடும் அழகைப் பார்த்து ரசிப்பார்.

சென்னையில் மட்டும் அல்லாமல், மொத்தமாகவே தன் ஈதலைச் சுருக்கிவிட்ட மனிதர்களைப் பார்த்துப் பழகியிருந்த பலருக்கு, மிஷ்கின் ஓர் அதிசயம். உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்க வந்து திரும்பிப்போகும்  மனிதனுக்காகக்கூட, `டேய் சாப்பிட்டியாடா நீ? இல்லல்ல, ஏழுமலண்ணா இவனுக்குச் சாப்பாடு குடுங்க’ எனக் கசியும் தாய்மையைத் தரிசிக்க முடியும்.

அன்று நாங்கள் 30 பேருக்கும் அதிகம் இருந்தோம். சாப்பிட்டுவிட்டு அப்போது வெளிவந்திராத அவருடைய ‘நந்தலாலா’ படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. `நந்தலாலா' படமாக்கப்பட்ட விதமும் காட்சிகளாக அவை விரிந்து நமக்குப் பல செய்திகளைச் சொன்ன விதமும், இழந்துபோன என் மகனுக்கான ஏக்கமும் அவனுடைய தீராவாழ்க்கையுமாக, எனக்குள்ளே தகித்தெரியும் அக்னியாக வெவ்வேறு நினைவுகளைக் கிளறிவிட்டதும் மறக்கவே முடியாதது. படம் முடிந்து வெளியே வந்ததும் அன்றுதான் நான் பார்த்த அந்த சினிமாக்காரனைப் பக்கத்தில் கூப்பிட்டு நெற்றியில் முத்தமிட்டேன். உடல் குனிந்து தன்னை மிகவும் குறுக்கிக்கொண்டு `I am honoured... I am honoured' எனத் திரும்பத் திரும்பச் சொன்ன மிஷ்கின், எனக்கான நண்பனாக விஸ்வரூபம் எடுத்திருந்தார்.

அதற்குப் பிறகான பல நாள்களில் மிஷ்கின் நண்பர்களோடு எங்கள் நிலத்துக்கு வருவதும், திருவண்ணாமலையில் இருந்து எந்த யோசனையும் இல்லாமல் பட்டாளமாக நாங்கள் மிஷ்கின் வீட்டுக்குக் கிளம்பிப்போவதும் தொடர்கிறது. டிரைவர், அசிஸ்டென்ட் டைரக்டர்,  பவாவின் நண்பர்கள், ஷைலுவோட ஸ்டாஃப், குடும்ப ஆள்கள் என எந்தக் கோடுகளும் இன்றி அங்கே ஒரு வட்டம் இருக்கும்.

வட்டத்துக்குத்தானே முதலும் கடைசியும் இல்லை. எனக்குத் தெரிந்து எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குப் பிறகு, அப்படி மனிதர்களை அடுக்குகளின்றி பார்க்கத் தெரிந்த ஒரே ஆள் மிஷ்கின்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 30

பல இரவுகள் பல பகல்கள் தொடர்ந்து ஆறேழு மணி நேரம் எல்லாம் உட்கார்ந்து பேசியிருக்கிறோம். பேச்சின் முடிவில் எப்போதும் நானும் பவாவும் பொதுவாகச் சொல்லிக்கொள்வது உண்டு. `என்ன மனுஷம்பா இவன். அன்பால ததும்பவைக்கிறானே! அசல் கலைஞன். மனிதக் குரூரங்களையும் துரோகங்களையும் வாழ்வில் அனுபவித்திருந்தாலும், அதைத் தன்மேல் ஒரு நிழல் மாதிரிகூடப் படியவிடாமல் அன்பை மட்டுமே இசைத்து வாழக் கற்றுக்கொண்டி ருக்கிறானே’ என ஒவ்வொரு சந்திப்பிலும் ஆச்சர்யம் ஏற்படுத்தும் கலைஞன்.

மனிதர்களை உற்று உள்நோக்கிப் பார்த்துக் கணிப்பதில் மிஷ்கினுக்கு நிகரே இல்லை. திருவண்ணாமலைக்கு வந்திருந்த கேரளாவின் முக்கிய எழுத்தாளர் சிஹாபுதின், எங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு சுருமி (கண் மை) வாங்கிக்கொண்டு வந்து, அதை நூல்போல இருக்கும் கண்ணாடிக் குழலில் தொட்டு, குழந்தைகளுக்கு இட்டுவிட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த மிஷ்கினுக்கு அப்படி
ஒரு மனநிறைவு.

`மனசில் காமமில்லாத மனுஷனால்தான் ஷைலு கண்களுக்கு சுருமி வாங்கிட்டு வர முடியும். இல்லைன்னா லிப்ஸ்டிக் வாங்கிட்டு வந்திருப்பார். எனக்கு சிஹாபை ரொம்பப் பிடிச்சிருக்கு’ எனத் தன் பிரதிபிம்பமாக சிஹாபைப் பார்த்து நெகிழ்ந்தார்.  

ஆண் – பெண் – திருநங்கை என மனித மனசுகளைப் பிரித்து, சிதைத்து அதன் உள்ளிருக்கும் அழகுகளை எல்லாம் பார்க்கத் தவறிய நம்மை எப்போதும்,  ‘நான் திருநங்கையா பிறந்திருக்கணும்னு ஆசைப்படுறேன். இந்த வாழ்வின் பேதத்தை அப்படித்தான் நான் கடக்க முயற்சிக்கிறேன்’ எனத் சொல்லும் மிஷ்கினிடம் பால் பேதமே கிடையாது. அவருடைய எல்லா படங்களிலும் ஒரு திருநங்கை முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருப்பார்.

நட்டநடு வெயிலில் ஒத்தையாக நிற்கும் பனை மரத்தின் உச்சியில் தேங்கியிருக்கும் குளிர்ந்த பதநீர் போன்ற தெளிந்த அன்பை மிஷ்கினின் கைக்குலுக்கல்களில் உணர முடியுமானால் நீங்கள் பாக்கியவான்.

கல்பட்டா நாராயணன் எழுதிய ‘சுமித்ரா’ நாவலில் வரும் வரிகள் ஞாபக அடுக்குகளில் எப்போதும் எனக்குள் தேங்கி நிற்பவை.

`காமம் மனசைத் தீண்டியிராத மனிதரின் பக்கத்தில் உட்காரும்போதுள்ள எல்லையில்லாப் பாதுகாப்பைத் தன்னோடு பழகும்போது பெண்கள் உணர்ந்தார்கள்’  என்று தாசன் என்ற நண்பனைப் பற்றி சுமித்ரா நினைத்துக்கொள்வாள்.

நம்மைப் பார்த்து, பேசி, அறிந்து, புரிதலுக்கு உட்படும் நட்பே தடம் மாறிப் பயணிப்பது உண்டு. ஆனால், கேட்டு மட்டுமே நட்பில் என்னை நெக்குருகச் செய்தவர் சுகா. என் தோழன். இயக்குநர் பாலுமகேந்திராவுடனான கார் பயணங்களிலும் நேர்ப்பேச்சிலும், `என் மகள் ஷைலு, என் மகள் ஷைலு' எனப் பேசிப் பேசி என் மீதான ப்ரியம்மீதுர ஒருமுறை என்னைச் சந்தித்த தோழன். என் அப்பாவின் மகளை நான் பார்க்க வேண்டுமே எனக் கைப் புதைத்து அன்பைப் பெய்தவன். எத்தனை மனிதவெளிகள் இருந்தாலும் எனக்கான ஒரு சிரிப்பைக் கண்களிலும் உதட்டோரத்திலும் தேக்கிவைத்திருக்கும் சுகாவின் நட்புக்கு, அப்பாவுக்கு நன்றி.

அப்பாவின் மன, உடல் ஸ்பரிசமின்றி வளர்ந்தவள் நான். ஆனால், அதற்காக ஏங்கக்கூடத் தெரியாமல்தான் வாழ்வு என்னை வைத்திருந்தது. பல்கலைக்கழகப் படிப்புக்காக வெளியூரில் விடுதியில் தங்க நேரிட்டபோது அறைத்தோழி அப்பாவைப் பிரிந்துவந்த துக்கம் தாளாமல் அழுதபோது, என் 21-ம் வயதில் அப்பா வேண்டும் என்று பொம்மை தொலைத்த குழந்தை மாதிரி அழுதேன். வேண்டும் நேரத்தில் வேண்டியது கிடைக்காத துக்கம், அனுபவித்தால் மட்டுமே தெரியும். அது எல்லோருமே அனுபவிக்கும் ஒன்றுதான். ஆனால், அப்பாவின் இதம் கிடைக்காத துக்கத்தில் நான் வெந்துருகிப்போன நாள்களில், இன்னதென்று சொல்ல முடியாத பேரன்புடன், என்னை மகளாக ஸ்வீகாரம் எடுத்திருந்தார் இயக்குநர் பாலுமகேந்திரா என்கிற திரையுலக மேதை. எனக்குப் பெரிய அளவுக்கு சினிமா ரசனையோ அவரோடு உட்கார்ந்து பேசும் அளவுக்கு சினிமாவோ தெரியாது. அவருக்கு இணையான பேரன்பு என்னிடமும் உண்டு. அது எங்களை ஒன்றிணைத்தது.

‘யார் யாரோ என்னை அப்பா என்று கூப்பிடுவதைவிடவும், நீ கூப்பிட்டால் நான் சந்தோஷப்படுவேன்’ என பாலுமகேந்திரா சொல்வதற்காகத்தானோ என்னவோ, என் பிதுரார்ஜித தகப்பனை நான் இழந்தேன்.
எழுத்தின் வழி எனக்குக் கிடைத்த இன்னொரு தகப்பன் கே.எஸ்.சுப்ரமணியன். ஆசிய வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்; ஜெயகாந்தனின் அத்தனை புத்தகங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார். கொண்டாட்டங்களை மட்டுமே தன் சிறகுகளுக்குச் சொல்லித்தந்து பழக்கியிருப்பவர். என் முதல் மொழிபெயர்ப்பான ‘சிதம்பர நினைவுகள்’ படித்து மௌனித்த ஒரு நொடியில் எழுத்தாளர் திலகவதியிடம், ‘அந்தப் பொண்ணைப் பார்க்கும்போது எனக்கு என் சொந்த மகள் மாதிரி வாத்ஸல்யம் வந்துடுச்சு திலகவதி. அவ எழுத்து என்னை அப்படிப் பாதிச்சிடுச்சு’ என்ற கே.எஸ்., அப்பாவின் பிரியத்துக்கு நெகிழத்தான் முடிகிறது என்னால்.

இயற்கை வேளாண்மையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, `இனி ஒரு விவசாயியின் தற்கொலையைக்கூட அனுமதிக்க மாட்டேன்’ என தன் வாழ்வை இந்த மண்ணுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் என் நண்பர் வி.பி.ராஜ் எப்போதும் சொல்வார், `நண்பர்கள் வேற... தெரிஞ்சவங்க வேற மேடம்’ என்று. ஆமாம் நண்பர்களும் தெரிந்தவர்களும் வேறு வேறுதான். தெரிந்தவர்கள், புரிதலின் முற்றலில் நண்பர்களான ஆசுவாசத்தில் நாம் திளைத்திருக்கும்போது, அது புயலாக, அனலாக வீசக்கூடிய சாத்தியம் ஆண் பெண் நட்பில் அதிகம் உண்டு.

ஏதோ சிலரிடம் நட்பு மீறின மனச்சிந்தலும் சாத்தியமாகலாம். நிதானத்துடன் நாம் கடக்கவேண்டிய பல உறவுகளும் வாழ்வில்  குறுக்கிடலாம். அப்படியான தருணங்களில் இறுக்கி வைத்துப் பூட்டிக்கொண்ட பால்யங்கள் என்னை வழிநடத்துகின்றன. அதை நான் புன்முறுவலுடன் அனுமதிக்கிறேன்.

என் வயதில் பெண்ணுக்குக் கிடைக்க முடியாத ஒரு பொக்கிஷமாக அரசி கிடைத்திருக்கிறாள். பல ஆண்டுகாலமாக நீருக்கு அடியில் உராய்ந்து உராய்ந்து பளிங்கு மாதிரியான மனம் கொண்டு என்னைக் கண்டடைந்தவள். கோயம்புத்தூரில் ஓர் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக நவீன இலக்கியத்துடன் இயற்பியலையும் சொல்லிக் கொடுக்கிறாள்.

என்னுடைய `சிதம்பர நினைவுகள்’ புத்தகம் படித்து ஆறேழு வருடங்களாக என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து எனக்காக வாழ்பவள். அத்தனை வருடக் காத்திருப்புக்குப் பின்னர், என்னோடு பேசிய நாளை, ‘ஒரு தேவதை கண் திறந்து வாழ்த்திவிட்டுப் போன தினம் இன்று’ என ப்ரியத்தில் சாகடிக்கிறாள்.

படிப்பது முற்றிலும் விட்டுவிட்ட பல பெண்களிடையே படிப்பதைப் பேசும், சிலிர்க்கும் பெண் சிநேகம் அலாதியாக இருக்கிறது. பதின்வயதில் கிடைத்த ஆணின் நட்புபோல மனசு குதூகலம் அடைகிறது. அவளோடு பேசும் நிமிடங்களுக்காக மனம் காத்துக்கிடக்கிறது. அவளால் எழுதப்பட வார்த்தைகளைக்கொண்டு சேர்க்கச் சொல்லி எழுத்துகளை யாசிக்கிறது.

`வண்ணதாசனின் செல்வராஜாகவும், கலாப்ரியா வின் சசியாகவும், சுமித்ரா என்கிற எளிய பணிச்சியாக வாழ ஆசைப்படுபவளின் கீதாவாகவும் வாழ வாய்த்திருக்கும் இந்த ப்ரியம் எனும் பெருநினைவில் நிரந்தரித்திருக்கிறேன் ஷைலு. என் வசந்தகாலத்தின் ஒரு பகுதியை மீட்டெடுத்துத் தந்திருக்கிறீர்கள். இந்தப் பெயர் அறியா அன்பும், நட்பின் அடர்த்தியும், வாழ்நாள் புரிதலும்தான் காதல் எனில், இது என் ஆகச்சிறந்த  ஆதிக்காதலாக இருந்துவிட்டுப் போகட்டும்.’

இப்படி எழுதி வாழநினைக்கும் அரசியின் மனசு ஆணாக இருந்தால் என்ன... பெண்ணாக இருந்தால் என்ன? அது மனதைக் குளிர்விக்கிறது; தனிமையில் ரசித்துச் சிரிக்கவைக்கிறது; கனவுகளில் சஞ்சரிக்க வைக்கிறது. போதும், நிறைவாக இருக்கிறேன்... நட்புகளின் செட்டைக்குள் பத்திரமாக இருக்கிறேன்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 30

றவையும் பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள், எதையும் கலைத்துப்போட்டுவிடும். ஆனால், எப்போதும் நமக்கு நடுவே அன்பும் பரிவும் நிரந்தரம். எதிர்பார்ப்பும் அப்பழுக்கும் இல்லாத ஆண்-பெண் சிநேகிதத்தால்தான் இந்த உலகில் இன்னும் மழை பெய்து, ஈரம் எய்தி, இயற்கை பூக்கிறது!

ண்-பெண் தோழமை எவ்வளவு வைராக்கியமானது. ஒரு பெண்ணின் நட்புதான் ஆணுக்குப் பெருங்கொடை. எல்லா தோழிகளுக்கும் கொஞ்சம் அம்மா சாயல் இருக்கிறது. அவர்களின் ஒரே ஒரு குறுஞ்செய்தி நமது நாளையே மலர்த்திவிடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவோ நம்பிக்கைகளை அளித்துவிடுகிறது. கனவுகளைப் புதுப்பிக்கிறது. அவர்கள் உடன் இருந்தால், துயரங்கள் சிறியதாகி விடுகின்றன. உறவுகளாலும் பிரிவுகளாலும் மனதில் எரியும் காயங்களுக்கு, இந்த விரல்கள்தான் விசிறி வீசிவிடுகின்றன.

- ராஜு முருகன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 30

ட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம் இருக்கிறது.

பெயர் சொல்லிக் குறிப்பிட நமது மொழியில் அதற்கு ஒரு சொல் இல்லை அல்லது எனக்குத் தெரியவில்லை.

- கி.ராஜநாராயணன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 30

ன்னோட சிநேகிதி ஒருத்தி இருக்கா. அவளிடம் மட்டும்தான் நான் என்னை முழுசா பகிர்ந்துக்க முடிஞ்சது. நாலு வருஷம் கழிச்சுப் பார்த்தாலும், பார்த்த நிமிஷத்துல பழைய நட்பை அப்படியே புதுப்பிச்சுக்கிற அதிசயம் அது.

`நான் நேசிக்கிற நீ - நீ இல்லை. எனக்குள்ளே எங்கேயோ இருக்கிற வனத்துக்குள்ளே ஒரு காட்டுப் பூவா பூத்திருப்பியே... அந்த நீதான், நான் நேசிக்கிற நீ’னு சொல்வேன். சிரிச்சுக்குவா.

- பிரகாஷ்ராஜ்

ந்தப் பால்வீதியில் அவள் போய்க்கொண்டேயிருக்க, நானும் எதிர்பார்ப்புடன் பின்தொடர்கிறேன். திரும்பிப் பார்த்தாளா என்று தெரியாது. அவள் போவது தெரிகிறது. அவளுக்கும் நான் பின்தொடர்வது தெரிகிறது. திரும்பிப் பார்க்கக் காணோம். பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இருவருமே பால்வீதியில்தான் இருக்கிறோம்.
  

ஆண்பால் பெண்பால் அன்பால் - 30

ன்னுடைய படைப்பின் ஆதாரமென்பது சாமிகேசவனின் வீட்டில்தான் இருக்கிறது. அவனுடைய அக்கா என் மேல் பேரன்பு வைத்திருந்தார்கள். பெயர் தனலட்சுமி.

எதையும் பெறாத, கலையை மட்டுமே பெற்றுக்கொண்ட அபூர்வமான உறவு அது. எப்போதுமே எதையும் நான் கேட்டதுமில்லை. அவர்கள் தந்ததுமில்லை. ஆனால், அவர்களின் மரணம் என்னை வருத்திக்கொண்டேயிருக்கிறது.

தனலட்சுமிதான் எழுதுவது, நானல்ல. எப்போதுமே எழுதத் தூண்டுகிற இடத்திலிருந்து எழுதிக்கொண்டேயிருக்கிறது. என்னை விடவும் கௌரவமான, கெத்தான, திமிர்பிடித்த பெண் அது. என் எழுத்திலிருக்கிற அந்தத் திமிர், மொழித்திருகல் எல்லாம் என் கையில் இல்லை.

அது அவளுடையது. அவள்தான் என் எழுத்தைத் தீர்மானிக்கிறாள். அதற்குள்தான் நான் இருக்கிறேன்.

- கோணங்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு