மார்ச் 30, ஒரு மகிழ்ச்சித் திருநாள். அன்றுதான் மகத்தான மனிதர்களுக்கு மகுடம் சூட்டும் `விகடன் நம்பிக்கை விருதுகள்' விழா நடந்தது. 2016-ம் ஆண்டின் டாப் 10 மனிதர்கள், டாப் 10 இளைஞர்கள் மற்றும் இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளுமைகள், ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள்... என அத்தனை பேரையும் இணைத்து அசத்தல் விழாவை நடத்தியது ஆனந்த விகடன்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், திரைப் பிரபலங்கள், அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்... என ஒட்டுமொத்தத் தமிழகத்தின் அத்தனை துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்ட பிரமாண்ட விழா அது. பொதுவாக, ஒரு நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு என்றால், 7 மணிக்குத்தான் பிரபலங்களும் பார்வையாளர்களும் வருவது வழக்கம். ஆனால், இந்த விழாவுக்கு மரபை உடைத்து, 6 மணிக்கே அரங்கம் நிறைந்தது.

மரபும் நவீனமும் இணையும் அழகியப் புள்ளியாக அமைந்திருந்தது விழா மேடை. ஓலைச்சுவடிகளும் யாழ் உள்ளிட்ட இசைக் கருவிகளும்கொண்ட மேடையின் வடிவமைப்பில் இடது பக்கத்தில் நீல நிறத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார் அய்யனார். வலது பக்கத்தில் எல்லோரையும் இன்புறச் செய்வதற்காகச் சிரித்த முகத்துடன் நின்றிருந்தார் விகடன் தாத்தா.

விழாவின் தொடக்கமே விகடனின் வரலாற்றைப் பேசியது. தோன்றிய காலத்திலிருந்து 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் கடந்துவந்த பாதை, சந்தித்த சவால்கள், சமூகத்தில் உருவாக்கிய தாக்கங்கள், விகடனில் ஏற்பட்ட மாற்றங்கள், விகடனின் பக்கங்களில் பங்கேற்ற படைப்பாளிகள் எனச் சில நிமிடங்களில் அழகாக விவரித்தது அந்த வீடியோ.

எப்போதுமே இலக்கியத்துக்கு முதல் இடம் கொடுப்பதுதானே விகடனின் வழக்கம்! இந்த விழாவிலும் முதலில் விகடன் இலக்கிய விருதுகள்தான். தொகுப்பாளர் ராஜ்மோகன் தனக்கே உரிய நக்கல் மொழியில் அரங்கைக் கலகலப்பூட்டினார் என்றால், அடர்த்தியான வார்த்தைகளால் அழகு சேர்த்தார் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்.

சிறந்த சிறார் இதழாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட `தும்பி’ சிறுவர் மாத இதழை வெளியிட்டுவரும் `குக்கூ’ சிவராஜ் மற்றும் அழகேஸ்வரி இருவரும் யூமாவாசுகியிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டனர். ``ஜவ்வாது மலையடிவாரத்திலிருந்து வந்திருக்கிறோம். நெல்லிவாசல் மலைக்கிராமத்துக்கு ஒருமுறை வெளிநாட்டைச் சேர்ந்த பறவைகள் ஆய்வாளர் வந்தார். அப்போது, இருவாச்சிப் பறவை அழிந்துவிட்டதாகக் கூறினார். ஆனால், எங்கள் மலைக்கிராம சிறுவன் சில சத்தங்களை எழுப்பி இருவாச்சிப் பறவைகள் உலகில் தமது உயிர்ப்பை நீட்டித்துக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையை உணரவைத்தான். எங்களுக்கு, விமானப் பயணத்துக்கு புக் செய்யத் தெரியாது; கணிப்பொறி தெரியாது. ஆனால், காட்டுடன் ரத்தமும் சதையுமான உறவைக்கொண்டிருக்கிறோம். எங்கள் சிறுவர்கள் ஆன்மாவில் காடு கலந்துள்ளது. இந்த விருதை வண்ணதாசனுக்குச் சமர்ப்பிக்கிறேன்'' என்று சிவராஜ், உணர்ச்சிவசப்பட்டுப் பேசப் பேச, அரங்கமெங்கும் அடர்ந்த வனத்தின் பச்சை வாசனை!

சிறந்த சிற்றிதழாகத் தேர்வுசெய்யப்பட்ட `காடு' இதழுக்காக சண்முகானந்தம், சூழலியலாளர்கள் நக்கீரன் மற்றும் நித்யானந்த் ஜெயராமனிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

``வைல்டு லைஃப் போட்டோகிராஃபி என்பது ஆங்கிலேயருக்கு மட்டும் உரித்தானது அல்ல, நம்மாலும் இயலும். ஒடுக்கப்பட்ட பின்தங்கிய பகுதியான வடசென்னை வாசியாலும் சாதிக்க முடியும். நீண்ட பயணத்தின் மூலம் பல பறவைகளை என்னால் படம்பிடிக்க முடிந்தது. பள்ளிக் குழந்தைகளுக்கு காடு, பூச்சிகள் குறித்து படம் எடுக்கச் சொல்லித்தருகிறேன். அதைத் தொடர்வேன். இந்த விருது எனக்கு அதற்கான ஊக்கத்தைக் கொடுக்கிறது'' என்றார்.

``தற்காலத் தமிழக அரசியல் சூழல் பற்றி குழந்தைகளுக்கான சிறார் நாடகம் ஏதேனும் நிகழ்த்தும் திட்டம் உள்ளதா?'' என்று நாடகக் கலைஞர் வேலு சரவணனிடம் தமிழச்சி தங்கபாண்டியன் கொக்கிபோட, ஒரு கணம் திகைத்த சரவணன், “எங்க அக்கா, அதுக்கு ஸ்க்ரிப்ட் எழுதித் தந்தா நிச்சயமா செய்வேன்!” என்றார். அசராத தமிழச்சி ``ஸ்க்ரிப்டின் தொடக்கம் கூவத்தூரில் இருந்துதான்!'' என்று சொல்ல, அரங்கமே சிரித்தது. வேலு சரவணனும் கவிஞர் சுகிர்தராணியும்தான் சிறந்த சிறுவர் இலக்கியத்துக்கான விகடன் நம்பிக்கை விருதை `மாயக்கண்ணாடி’ புத்தகம் எழுதிய உதயசங்கருக்கு வழங்கினார்கள். ``எட்டாம் வகுப்பில் ஆனந்த விகடன் படிக்கத் தொடங்கிய பிறகுதான் எழுத்தாளராகும் எண்ணமே வந்தது” என்றார் உதயசங்கர் உற்சாகமாக.

சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான விருது பேராசிரியர் ராமாநுஜத்தின், ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ புத்தகத்துக்குத் தரப்பட்டது. ராமாநுஜத்தின் சார்பில் பதிப்பாளர் `புலம்' லோகநாதன், தமிழின் முக்கியமான எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மற்றும் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஆகியோரிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சிறுவர் இலக்கிய விருதை, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கருக்கு வேலு சரவணன் வழங்கினார். ``இடிதெய்வத்தின் பரிசு' புத்தகத்துக்கான இந்த விருது குறித்துப் பேசிய ஜெயந்தி சங்கர், ``கண்டங்கள், நாடு, நிலம் இவற்றுக்கு அப்பாற்பட்டவன் மனிதன் என்பதில் நம்பிக்கைகொண்டிருப்பவள் நான். குறிப்பாக குழந்தைகள், மொழிக்கு அப்பாற்பட்ட மனம்கொண்ட குட்டி மாந்தர்கள் எனலாம். சீனக் கலாசாரம், இலக்கியம் மீது எனக்கு நாட்டம் அதிகம். சீன வீட்டுச் சமையலறையில் நமது அய்யனார்போல சிறு தெய்வங்கள் வீற்றிருக்கின்றன. ஆக, இந்தியப் பண்பாட்டுக்கும் சீனப் பண்பாட்டுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு'' என்று தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

சிறந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்புக்கான விருதை `இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு' நூலுக்காக எழுத்தாளர் பூரணச்சந்திரன் பெற்றுக்கொண்டார். விருதை வழங்கியவர்கள் எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா. `` `இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு' நூலுக்காக விகடன் விருது அறிவிக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் கழித்துதான், நான் எழுதிய ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 2011-ம் ஆண்டில் `வரவர ராவின் சிறைப்பட்ட கற்பனை ' நூலுக்காக இதே விகடன் விருதை வாங்கினேன். இப்போது எனக்குக் கிடைத்திருப்பது இரண்டாவது விகடன் விருது. இந்த விருதின் மூலம் முதியவரான என்னை, நம்பிக்கை இளைஞனாக மாற்றிவிட்டது விகடன்'' என்றார் வேடிக்கையாக!

சிறந்த வெளியீட்டு நூலுக்கான விருதைக் கவிஞர் கடற்கரய்க்கு வழங்கியவர்கள் எழுத்தாளர் சு.வெங்கடேசன் மற்றும் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

``என் சொந்த ஊர் விருத்தாசலத்திலிருந்து சென்னை வர ஆறு மணி நேரம் ஆச்சு. ஆனா, சென்னையிலிருந்து இந்த மேடைக்கு வர 17 வருடங்கள் ஆகிடுச்சு. விகடன் எனக்குத் தந்தது விருது அல்ல... கௌரவம்; மகிழ்ச்சி. நான் `குமுதம்' இதழில் பணிபுரிந்தாலும் அண்ணா சொன்னதைப்போல், இந்த மாற்றான் தோட்டது மல்லிகைக்கு விருது கொடுத்து விகடன் கௌரவித்துள்ளது'’ என்றார்.

விருதுகள் வழங்கும் நிகழ்வுக்குச் சற்று இளைப்பாறலாகத் திண்டுக்கல் சக்தி கலைக்குழுவின் பறையிசை அரங்கத்தை அதிரவைத்தது. நம் நரம்புகள் வரை ஊடுருவி, எழுந்து ஆட்டம் போடவைக்கும் ஒரே உன்னத இசைக்கருவி பறைதானே! அரங்கத்தில் இருந்த குழந்தைகளும்கூட பறை இசைக்கு ஆடத் தொடங்கினார்கள்.

``எத்தனை இசை இருந்தாலும், பறை இசை மட்டுமே கோடி இதயங்களைத் தட்டி எழுப்பும். பறை எங்களுடைய போர்வாள். பறை எழும். உணர்வும் மானமும் ரோஷமும் உள்ள யாரும் பறையை வாசிக்கலாம்'' என்று உணர்ச்சியின் உச்சத்தில் நின்று தமிழச்சி சொல்ல, ஆரவாரத்துடன் ஆமோதித்தார் ராஜ்மோகன். அதோடு மட்டும் அல்லாமல் கீழே நாற்காலிகளில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரையா இருவரையும் மேடைக்கு அழைத்தார்.

``இந்தப் பறையை நீங்க வாசிக்கணும்'' என்று தொகுப்பாளர்கள் சொல்ல, ஐஸ்வர்யா மட்டும் ராஜ்மோகன் காதில் ஏதோ சொன்னார். உடனே அவரோ, ``ஐந்நூறு ரூபாய் தருகிறேன் எனக்கு வாசிக்கத் தெரியாது' என்கிறார் என்று ஐஸ்வர்யாவைப் போட்டுக்கொடுக்க, சிரித்தபடியே பறையைக் கையில் பிடித்தார் ஐஸ்வர்யா. ``அடிச்சா திருப்பி அடிக்கணும் அதான் பறை'’ என்று அழகாய் விளக்கினார் தமிழச்சி. சக்தி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரா, ஐஸ்வர்யாவுக்குப் பறை இசைக்கப் பழக்கினார். ஆனால், அருகில் நின்றிருந்த பூஜா தேவரையாவுக்கோ எந்தப் பயிற்சியும் தேவைப்படவில்லை. அட்டகாசமாகப் பறையை இசைத்து அசத்தினார்.

இசைக்குப் பிறகு மீண்டும் விருதுகள். மொழிபெயர்ப்புக் கவிதை நூலுக்கான விருதை `துயிலின் இரு நிலங்கள்' புத்தகத்துக்காக சண்முகத்துக்கு கவிஞர்கள் சுகுமாரனும் லீனா மணிமேகலையும் வழங்கினர்.

``நான் எப்போதும் தோன்றுவதை மொழி பெயர்ப்பேன். தமிழ் மரபை மீட்டெடுக்கிற சொற்களைப் பயன்படுத்துவதில் கவனமாக இருப்பேன்'' என்ற சண்முகம், தன் கவிதை ஆக்கத்துக்கு ஊக்கம் தந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சிறந்த கவிதை நூலுக்கான விருதை `கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்' நூலுக்காகக் கவிஞர் வெய்யில் பெற்றுக்கொண்டார். விருதை வழங்கியது மூத்தக் கவிஞர் விக்கிரமாதித்யனும் மூத்த கவிஞருக்கு இளைய கவிஞரான யவனிகா ஸ்ரீராமும். அழைக்கும்போதே `பிதாமகர் விக்கிரமாதித்யன் அண்ணாச்சி, மகர் யவனிகா ஸ்ரீராம்' என்று வர்ணித்தார் தமிழச்சி. வழக்கமான சம்பிரதாயங்கள் இன்றி, ஒரு கையை இடுப்பில் ஊன்றியபடி, இன்னொரு கையை வெய்யிலின் தோளில் போட்டபடி விருது வழங்கினார் விக்கிரமாதித்யன்.

``ஒருகாலத்தில் பேருந்தில் என் பக்கத்தில் உட்காரவே யோசிப்பார்கள். அந்தக் காலத்தில் இருந்து வளர்ந்து, இன்று விகடன் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி. இந்த வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் என்று நான் பட்டியல் போட்டால் பெயர்கள் நீளும்'' என்றார் வெய்யில்.

சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விருதை ஜார்ஜ் சாமுவேலுவுக்கு கவிஞர் கல்யாண்ஜி, இயக்குநர் சந்திரா மற்றும் மனோகர் ஆகியோர் வழங்கினார். இந்த விகடன் விருது எனக்கு இன்னும் அதிக பொறுப்புணர்ச்சியைத் தருகிறது. தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப் பாளர்களுக்கு இதைச் சமர்ப்பிக்கிறேன்’' என்றார் ஜார்ஜ் சாமுவேல்.

2016-ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதைப் பெற்ற எழுத்தாளர் இமையம், ``நான் கதை எழுதுவது இல்லை. குறிப்பிட்ட நிலம், களம், மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற வாழ்வியலை, சொற்களுக்குள் சேமித்துவைக்கிற ஆவணப் பதிவாளனே நான்’' என்றார். அவருக்கு எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பெருமாள் முருகன் மற்றும் ஜி.நெல்சன் ஆகியோர் விருது வழங்கினார்கள்.

சிறந்த மொழிபெயர்ப்பு நாவலான `ஊதா நிறச் செம்பருத்தி'க்காக எழுத்தாளர் பிரேமுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் விருதை வழங்கினார். ``இந்த நூலின் அடியோட்டமாக இருக்கும் கறுப்பினப் பெண்ணியத்தை வாசித்தால் அதில் தலித் பெண்ணியத்தையும் உணரலாம்’' என்றார் முத்தாய்ப்பாக.

சிறந்த நாவலுக்கான விருதை `சூல்' நாவலுக்காக எழுத்தாளர் சோ.தர்மன் பெற்றுக்கொண்டார். வழங்கியவர்கள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் ஓவியர் மணியன் செல்வம். ``இந்திய விடுதலையின்போது 39,631 கண்மாய்கள் இருந்தன. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு அவற்றைக் காக்கத் தவறிவிட்டோம். எல்லா நீர்நிலைகளும் வணிக வளாகங்களாக, நீதிமன்றங்களாக, பேருந்துநிலையங்களாக மாற்றப்பட்டுவிட்டன. பாட்டன் பூட்டன் கால விவசாயிகளுடைய நுண்ணறிவை நம் அரசாங்கம் பெறத் தவறிடுச்சு. முல்லைப் பெரியாறு அணையை பென்னி குக் கட்டிமுடித்து, ஓராண்டுக்குப் பின்னர் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் குற்றங்கள் பாதியாகக் குறைந்திருந்தன. இது வரலாறு. இதை உணராமல் போலீஸ், நீதிமன்றம் என வேறு வழிகளைத் தேடுகிறோம். எல்லாவற்றுக்கும் உள்ள சமூகப் பின்னணி பற்றிய நுண்ணறிவைத் தேட அரசு தவறிவருகிறது. இந்த முரண்பாடு குறித்தே எனது நாவல்'’ என்றார் ஆழமாகவும் அடர்த்தியாகவும். விருதை வழங்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனோ, ``தமிழ் சிறுகதை உருவாகி நூறாண்டு ஆகிவிட்டது. ஆனால், நம் தமிழர்களின் வாழ்க்கை பத்து சதவிகிதம்கூட தமிழ் இலக்கியத்தில் பதிவாகவில்லை. நாம் நமது கதையை மீட்க வேண்டும்; வாசிக்க வேண்டும், வாசிப்பைப் பகிர வேண்டும்'' என்றதும், அரங்கம் கைத்தட்டி `ஆம்' என்றது.

இலக்கிய விருதுகளுக்குப் பிறகு, இளைஞர்களுக் கான விருது. 2016-ம் ஆண்டில் நம்பிக்கையூட்டும் நல்ல விதைகளாக விகடனால் அடையாளம் காணப்பட்ட டாப் 10 இளைஞர்களுக்கான விருது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ராஜ்மோகனோடு இணைந்துகொண்டவர் தொகுப்பாளினி நட்சத்திரா.

முதலில் மல்லிகாவுக்கு விகடன் நம்பிக்கை விருதை அளித்தவர்கள் நடிகை பூஜா தேவரையாவும் இயக்குநர் சுசீந்திரனும். பிரபலங்களின் மத்தியில் சாமானியர்களையும் நம்பிக்கையாக அடையாளம் காணத் தவறிவிடவில்லை விகடன். அந்த வகையில், நீலகிரி மலையின் காட்டுப் பகுதியில் வசித்தபடி தனது சமூக மக்களுக்காகப் போராடும் மல்லிகா சிறந்த நம்பிக்கை மனுஷிக்கான விருதைப் பெற மேடையேறிய போது அரங்கமே ஒருமுறை நிமிர்ந்து அமர்ந்தது. “நான் படிக்கவில்லை. ஆனால், போராடுகிறேன்!” என்று ரத்தினச் சுருக்கமாக இயல்பான மக்கள் மொழியில் பேசினார் சந்திரா.

அடுத்த டாப்-10 இளைஞர் விருதை சரண்யா- பூபாலனுக்குத் தமிழிசை சௌந்தரராஜனும் எழுத்தாளர் பாலகுமாரனும் வழங்கினார்கள். முதுமையின் காரணமாகத் தள்ளாடிய பாலகுமாரனைத் தோள் பிடித்து தமிழிசை அழைத்து வந்தார். விருதுபெற்ற பெண் கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்து, ``உள்ளே இருக்கும் குழந்தை அம்மாவின் விருதை வேடிக்கை பார்க்கிறார்'' என்றார் தமிழிசை அன்போடு.

மாற்று சினிமாவுக்கான முன்முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவரும் தமிழ் ஸ்டூடியோ அருணுக்கு டாப் 10 இளைஞர் விருதை வழங்கியவர் `கிடாரி' பட இயக்குநர் பிரசாத் முருகேசன். வளரும் எழுத்தாளர் சரவணன் சந்திரனுக்கு டாப் 10 இளைஞர் விருதை வழங்கியவர்கள் எழுத்தாளர்கள் சாரு நிவேதிதாவும் பாஸ்கர் சக்தியும். இயற்கை ஆர்வலர் செந்தமிழனுக்கு நடிகர் குருசோமசுந்தரத்துடன் இணைந்து விருதை வழங்கியவர் அசாமைச் சேர்ந்த `மரம் மனிதர்' ஜாதவ் பாயங். ``மேரா நாம் ஜாதவ்'' என்று ஆரம்பித்தவர், ``தனியாளா நின்று 1,500 ஏக்கர் காடுகளை உருவாக்கியிருக்கேன். 2030-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை அதிகரிக்கும்போது இன்னும் மோசமான மாற்றங்கள் ஏற்படும். அதற்கு எதிராக இப்போது இருந்து நம் குழந்தைகளுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்றார். அரங்கமும் தன் கைத்தட்டல்கள் மூலம் அதை வழிமொழிந்தது.

பாடகர் பிரதீப் குமாருக்கு டாப் 10 இளைஞர் விருதை வழங்கியவர்கள் இயக்குநர் ராஜுமுருகனும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும். அருணகிரிநாதரின் `முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர...' என பிரதீப் பெருங்குரல் எடுத்துப்பாட அரங்கம் அமைதியானது.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு டாப் 10 இளைஞர் விருதை இயக்குநர் பாண்டிராஜ் வழங்கினார். ``உனக்கு அவார்ட்ஸ் சீக்கிரம் அமையாதுனு என் அம்மா சொல்வாங்க. `காக்கா முட்டை', `தர்மதுரை' படங்களுக்குப் பெரிய அளவில் விருதுகளை அம்மா எதிர்பார்த்தாங்க. ஆனா, எல்லாவற்றுக்கும் சேர்த்து, விகடன் பெரிய விருதை அளித்துள்ளது. என்னை `நம்பிக்கை மனிதர்’னு விகடன் சொல்லியிருக்கு. அந்த நம்பிக்கையைத் தக்கவைக்க சரியான படங்களில் நடிக்கணும்'' என்ற ஐஸ்வர்யாவின் குரலில் உற்சாகமும் நெகிழ்ச்சியும் சரிவிகிதத்தில். ஆதாரமான அம்மாவையும் மேடைக்கு அழைத்துத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். டாப் 10 இளைஞர், சிறந்த விளையாட்டு வீராங்கனை, சிறந்த பயிற்சியாளர் என்ற மூன்று விருதுகளையும் தனக்கும் தன் மகள் சூர்யாவுக்கும் சேர்த்து வாங்கினார் லோகநாதன். விருதுகளை வழங்கியவர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன்.

டாப் 10 இளைஞர்கள் விருதைத் தொடர்ந்து, டாப் 10 மனிதர்கள் விருதுகள். மகத்தான பணிகளைச் செய்த மரியாதைக்குரிய மனிதர்களுக்கான விருதுகள்.

இயற்கைச் செயற்பாட்டாளர்களான ரெஜி ஜார்ஜ் - லலிதா ஜார்ஜ் ஆகியோருக்கான டாப் 10 மனிதர்கள் விருதை வழங்கியவர்கள் மக்கள் மருத்துவர் கு.சிவராமனும் நடிப்பைத் தாண்டியும் இயற்கையின் மீது நேசம்கொண்ட கலைஞர் பிரகாஷ்ராஜும். ``மண்ணை நேசிக்கும் இவர்கள் இயற்கையைப் போன்றவர்கள். இயற்கைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது'' என்றார் பிரகாஷ்ராஜ். ``காந்தி உப்பு சத்தியாகிரகம் தொடங்கினார்.

நாம் உணவு சத்தியாகிரகம் தொடங்குகிறோம்'' என்று சூழலின் அவலத்தை உணர்த்தி எச்சரித்த மருத்துவர் கு.சிவராமன், ``இது தமிழ் உள்ளங்களுக்கு நம்பிக்கை தரும் விழா’' என்றார் அழுத்தமாக.
சமூக அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து களமாடிவரும் முகிலனுக்கு முதுபெரும் இடதுசாரித் தோழர் நல்லகண்ணுவும் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களும் விருது வழங்குகிறார்கள் என்றதுமே, அரங்கம் அதிர விசில் பறந்தது. விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய முகிலன், ``ஆனந்த விகடனை வெறுமனே பத்திரிகையாக மட்டும் பார்க்கவில்லை. விகடனை நாங்கள் மக்கள் இயக்கமாகவே பார்க்கிறோம். மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம், கூடங்குளம் போராட்டம் போன்றவை குறித்து விகடன் எழுதிய பிறகுதான் அது மக்கள் கவனம் பெற்று எழுச்சி அதிகரித்தது. மண்ணையும் இயற்கை வாழ்வாதாரங்களையும் அழிப்பவர்களை எதிர்த்துப் போராடுவோம்'' என்று முகிலன் சூளுரைத்தபோது அரங்கமெங்கும் பற்றிக்கொண்டது ஆவேசம்.

இ.மயூரநாதனுக்கு விருதை வழங்கினார் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். ``தமிழ் விக்கிப்பீடியா மூலம் சுமார் ஒரு லட்சம் கட்டுரைகள் பங்களிப்பு செய்துள்ளோம். இவை அனைத்தும் 16-90 வயது வரையுள்ள ஆர்வலர்களைக்கொண்டு உருவாக்கப்பட்டவை. விகடன் விருதை எனக்கான கௌரவமாகப் பார்க்காமல் அவர்களுக்கும் உரியதாகப் பார்க்கிறேன்'' என்றார் இ.மயூரநாதன்.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பேசும்போது, ``தமிழ் விக்கிப்பீடியாவில் 91,624 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்திய மொழிகளில் இது இரண்டாவது இடம். முதல் இடத்தில் இந்தி உள்ளது. நாம் அவர்களைவிட 15 ஆயிரம் கட்டுரைகள் குறைவாக ஏற்றியுள்ளோம். நமது பள்ளிக்கல்வித் துறை இந்தப் பற்றாக்குறையை இட்டு நிரப்பும். நமது ஆய்வாளர்கள் இதற்கு உதவுவார்கள்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் மொழிந்தார்.
விஞ்ஞானி சிவனுக்கான டாப் 10 மனிதர் விருதை மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார். ``மெஷின், ராக்கெட், சயின்ஸோட போராடிட்டிருக்கிற எங்களுக்கு இந்த விருது எல்லாம் புதுசு’' என்று வார்த்தைகளில் மகிழ்ச்சியை நிரப்பி விருதைப் பெற்றுக்கொண்டார் சிவன்.

டாப் 10 மனிதருக்கான விகடன் விருதை, தன் இரு மகன்களுடன் வந்து பெற்றுக்கொண்டார் கார்ட்டூனிஸ்ட் ஹாசிப்கான். விருதை வழங்கியவர் ஓவியத்தின் மீது தீராக் காதல்கொண்ட நடிகர் சிவகுமார். ``ஹாசிப்கான் உருவாக்கிய கார்ட்டூன்களில் ஆகச்சிறந்த இரண்டு கார்ட்டூன்கள் இந்த இருவரும்'' என்று தொகுப்பாளர் ராஜ்மோகன் வர்ணிக்க, அரங்கில் சிரிப்பொலி. ஹாசிப்கானை வாழ்த்திய சிவகுமார் ``நான் ஹாசிப்கான் கார்ட்டூன்களுக்கு ரசிகன்'' என்றதோடு ஜல்லிக்கட்டுக்கான போராட்டம், சசிபெருமாள் மரணம், மன்மோகன் சிங் ஆட்சி, விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மோடி என்று வெவ்வெறு காலச் சூழல்களில் ஹாசிப்கான் வரைந்த கார்ட்டூன்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக டாப் 10 மனிதர் விருதை வென்றவர் கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆஸ்திரேலியா தொடர் முடித்து சென்னை வர தாமதமானதால் அஸ்வினுக்குப் பதிலாக அவரது அம்மா சித்ராவும் அஸ்வினின் மகள் அகிராவும் வந்து சிவகுமாரிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டனர். அஸ்வின் குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டபோது, `அப்பாவைப் பாருடா...' என அவரின் பாட்டி கொஞ்சியதும், மகள் ஸ்க்ரீனைப் பார்த்தபடியே இருந்ததும் கவிதைக் கணம். ``ஐசிசி, பிசிசிஐ என அஸ்வின் எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து வரும் விருது என்றால், அது பெரும் மகிழ்ச்சி'’ என்றார் அஸ்வினின் அம்மா.

கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கான டாப் 10 மனிதர் விருதை வழங்கியவர் தி.மு.க-வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான துரைமுருகன். ``மகிழ்ச்சி, கௌரவம், அங்கீகாரம், ஊக்கம் என என் எழுத்துக்கு, என் போராட்டங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைப் பார்க்கிறேன். சினிமாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சமூகத்தில் எழுத்தாளர்களுக்கு இவ்வளவு பெரிய அரங்கு ஏற்படுத்திய விகடனுக்கு நன்றி. சர்வதேசரீதியிலான தமிழ் இலக்கிய விருது விழா ஒன்றை விகடன் நடத்த வேண்டும்'' என்ற ஒரு வேண்டுகோளையும் விழா மேடையில் முன்வைத்தார் மனுஷ்ய புத்திரன்.

சமூக அவலங்களைப் படங்களின் மூலம் விசாரணை செய்யும் இயக்குநர் வெற்றி மாறனுக்கு டாப் 10 மனிதர் விருதை வழங்கியவர்கள் நீதியரசர் சந்துருவும் அற்புதம் அம்மாளும். ``அற்புதம் அம்மாள் மூலம் விருது பெற்றதில் பெருமை. ஏனெனில், இவங்க ரியல் லைஃப் ஹீரோ. மகனை மீட்க அவர்கள் செய்துவரும் போராட்டம் அளப்பரியது. சீக்கிரம் வெற்றி பெறுவார்கள்'' என்றார் வெற்றி மாறன்.

டாப் 10 மனிதர், சிறந்த விளையாட்டு வீரர் என்ற இரண்டு விருதுகளையும் மாரியப்பன் சார்பாக அவரின் அம்மா, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். மாரியப்பன் பெயர் அறிவிக்கப்பட்ட உடனே கைத்தட்டல்கள் அடங்க வெகுநேரம் ஆனது. ``சாருங்களுக்கு வணக்கம்.

சைக்கிள்ல காய்கறி வித்துக்கிட்டிருந்தேன். கூலி வேலை. மூணு பசங்க, ஒரு பொண்ணு. ஒரு விபத்துல என் பையனுக்குக் கால் போச்சு. அவங்க அப்பாவும் போய்ட்டாரு. ஒருகட்டத்துல `டேய் மாரி, நாம எப்படிடா பொழைக்கிறது? பேசாம நாம செத்துடலாம்டா'னு அழுதேன். `அம்மா, நான் உனக்குப் பாதுகாப்பா இருப்பேன்; சாதிப்பேன்'னு சொன்னான். சொன்னபடியே செஞ்சான்'' என்றார் கண்கள் பனிக்க. அந்த ஈரம் கலந்த காற்று அங்கிருந்த அனைவரையும் நனைத்தது. மாஃபா பாண்டியராஜன், ``எனக்குத் தெரிந்து ஜெயலலிதா எழுதிய கடைசி ஸ்டேட்மென்ட் இவருக்காகத்தான் இருக்கும். `விதியை மாற்றி எழுதிய உன்னதமான தாவல்' என்று எழுதினார். மாரியப்பனைவிட நீங்க சாதிச்சது பெரிய விஷயம். 30 ரூபா சம்பாதிச்சு, வந்து மாரியப்பன் கனவுக்கு வடிவம் தந்தவர் நீங்கள்தான்’' என மாரியப்பன் தாயாரை வாழ்த்த அரங்கில் கைத்தட்டல் அதிர்ந்து அடங்கியது.

சிறந்த பண்பலைத் தொகுப்பாளருக் கான விருதை ஹலோ எஃப்.எம் சுரேஷும் தொகுப்பாளினிக் கான விருதை பிக் எஃப்.எம் மிருதுளாவும் `நியூஸ் 18' தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரனிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

சிறந்த பண்பலைக்கான விருதை ரேடியோ சிட்டிக்கு வழங்க, `பிரியமானவள்' நெடுந்தொடர் குடும்பம் மேடையேற, ரேடியோ சிட்டி குடும்பம் அதைப் பெற்றுக்கொள்ள விழா மேடை முழுக்க நிறைந்தது.

சிறந்த நெடுந்தொடருக்கான விருதை `தெய்வமகள்' குழுவுக்கு வழங்கினார் இயக்குநர் பாண்டிராஜ். ``உங்களால பல குடும்பத்தில் பிரச்னை வருது. சத்யாபோல வருமா, என்று எல்லோரும் சொல்றாங்க’' என்று வாணி போஜனிடம் தொகுப்பாளர் நட்சத்திராவும் ராஜ்மோகனும் ஒரு பக்கம் கலாய்க்க, இன்னொரு பக்கம் ஒரு ஜாலி வீடியோ ஒளிபரப்பானது. அதில் பாலிவுட் நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷன், சல்மான் கான் தொடங்கி ஒபாமா வரை வாணி போஜனைப் புகழ்வதுபோல டப் செய்யப்பட்ட வீடியோக்கள். வெட்கத்தில் முகம் சிவந்தார் வாணி.

``ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்களில் யார்கூட நடிக்க ஆசை?’’ என்றபோது, ``ரஜினி சாருக்கு மனைவியா, ரெண்டு குழந்தைங்களுக்கு அம்மாவா நடிக்கணும் என்றார்'' வாணி, மாய நதி வயலின்போல.
சிறந்த தொலைக்காட்சிக்கான விருதை சன் மியூசிக் குழுவினருக்கு நடிகர் பார்த்திபன் வழங்கினார். சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை `ஒரு வார்த்தை ஒரு லட்சம்' குழுவினருக்கு வழங்கியவர்கள் கவிஞர் அறிவுமதியும் எழுத்தாளர் பவா செல்லதுரையும். சிறந்த தொகுப்பாளினி விருதை ஜாக்குலினுக்கு வழங்கியவர் நக்கீரன் கோபால். ``லட்சுமி மேனன் எப்பவுமே ப்ளஸ் டூ படிக்கிறதா சொல்லிக்குவாங்க. அதுமாதிரி ஜாக்குலின் எப்பவும் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறாங்க'' என்று கலாய்த்தார் தொகுப்பாளர் ராஜ்மோகன்.

சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் விருதை ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வனுக்கு நக்கீரன் கோபால் வழங்கினார். ``விகடனில் சேர வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. ஆனால், காட்சி ஊடகப் பணிக்குப் போய்விட்டேன். மக்கள் பிரச்னைகளைத் தைரியமாகப் பேசக் கற்றுத்தந்தது விகடன்தான். `அன்பின் நெறியாளர்' என்று விருது குறித்த குறிப்பில் அடைமொழி கொடுத்துள்ளனர். இந்த வார்த்தைகள் ஓராயிரம் விருதுகளுக்குச் சமம்'' என்றார். அதோடு ``நான் பெரிதும் மதிக்கும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த விருதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்’’ என்றவர், விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், ஜூனியர் விகடன் ஆசிரியர் ப.திருமாவேலன், நியூஸ் 18 முதன்மை ஆசிரியர் குணசேகரன், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஆகியோரை மேடைக்கு அழைத்தார். களத்தில் போட்டிபோட்டாலும் மேடையில் ஒன்றாகக் காட்சிதந்த ஊடக ஆளுமைகள் முன்மாதிரி இதழியலாளர்களாகக் காட்சி தந்தனர்.

விருது நிகழ்வுகளுக்கு இடையே அந்தோணிதாஸின் இசை நிகழ்ச்சி, புதுகை பூபாளம் கலைக் குழுவினரின் நையாண்டி நிகழ்ச்சி, இனியா, ரம்யா நம்பீசன் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் களைகட்டின.

மேடையில் விருதைப் பெற்றுவிட்டு கீழே இறங்கிய ஆர்.ஜே.மிருதுளாவின் விருதுக் கோப்பையை ஒரு குட்டிக் குழந்தை பிடுங்கிக்கொண்டு ஓடியது. ``பாப்பா ப்ளீஸ் கொடுடா'' என்று மிருதுளா கெஞ்ச, குழந்தை பிடிவாதமாக விருதுக் கோப்பையைப் பற்றிக்கொள்ள, அந்த இடமே கவிதையாகக் காட்சி தந்தது. அந்தக் குழந்தைக்கு இப்போதே விகடன் விருது மீது அத்தனை ஆர்வமோ!