Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 32

ஆண்பால் பெண்பால் அன்பால் - 32
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 32

#MakeNewBondsசுகிர்தராணி - படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 32

#MakeNewBondsசுகிர்தராணி - படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 32
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 32

ன்று அப்பாவின் முதல் இரவு. மிஸ்ஸியம்மாவுக்கு முதல் இரவு குறித்த கனவுகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இருபது கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மிதித்துச் சென்று ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு வரும் அப்பாவுக்கு, முதல் இரவு பற்றிய மிகை யதார்த்தக் கனவுகள் நிச்சயம் நிறையவே இருந்திருக்கும். அறைக்குள் நுழைந்ததும் அந்த அதிர்ச்சியை மிஸ்ஸியம்மா எதிர்பார்த் திருக்கவில்லை. ``எனக்கு எதுலயுமே விருப்பமில்லை. ஆறு மாசம் போகட்டும்'' என்றவாறு மண் சுவரின் ஓரமாகப் போய் ஒண்டிக்கொண்டார் மணப்பெண் மிஸ்ஸியம்மா. அதன் பிறகான அப்பாவின் வாழ்வு, பாய்- தலையணையுடன் திண்ணையில்தான். தினமும் விடிந்ததும் அவருக்கும் சேர்த்துச் சமைத்துவைத்துவிட்டு வேலைக்குச் செல்வது வாடிக்கையானது. 

ஆண்பால் பெண்பால் அன்பால் - 32

ஆறு மாதங்களும் முடிந்தன. மிஸ்ஸியம்மாவின் காதல் பற்றியும், ராணுவத்தில் பணிபுரியும் அவர் காதலன் விடுப்பில் வர இருப்பது பற்றியுமான ஊராரின் பேச்சு, வீட்டு மற்றும் உறவுக்காரப் பெண்களின் கோபத்தைத் தூண்டிப் புகையவைத்துக்கொண்டிருந்தது. ஆனால், அப்பாவும் தாத்தாவும் சித்தப்பாக்களும் அமைதி காத்து, பிறகு சரியான முடிவு எடுத்தார்கள். அன்பாலான உறவு, உயிர் உடல் இரண்டோடும் இணைந்து வாழ்வதுதான் வாழ்க்கை  என்று அப்பா அறிந்திருந்தார். திருமணத்தின்போது கொடுத்த சீர்வரிசை, பண்டம், பாத்திரம் எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக்கொண்டு அந்தப் பெண்ணைக் கொண்டுபோய் அவர் ஊரில் விட்டுவிட்டு வீடு திரும்பிய அப்பாவுக்குக் கிடைத்ததோ, ``பொண்டாட்டியை வெச்சு வாழத் தெரியாதவன், ரெண்டு அறை அறைஞ்சு அவளை வழிக்குக் கொண்டுவரத் தெரியாதவன் கையாலாகாதவன்'' என்ற திட்டுதான்.

எந்தவிதக் கேள்விகளுக்கும் சோதனை களுக்கும் உட்படுத்தாமல், காதலை மட்டுமே நம்பி மிஸ்ஸியம்மாவை மறுதிருமணம் செய்துகொண்டார் ராணுவத்திலிருந்து வந்த அவரது காதலன். மிஸ்ஸியம்மாவின் காதலருக்கும், அப்பாவுக்குக் கிடைத்த அதே பேச்சுகளும் பட்டங்களும் நிச்சயம் கிடைத்திருக்கும்.

அந்த நாள்களில் அந்த மனிதர்களுக்கு நடுவே ஆணாதிக்கம், பெண்ணியம், முற்போக்கு போன்ற எதுவும் செயல்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை. மூவருக்குள்ளும் ஓர் எளிய அறம் செயல்பட்டிருக்கிறது. அது அன்பெனும் அறம். அத்தகைய அறம்தான் இன்று வரை என்னையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.அதுவே என்னை எழுத  வைத்துக்கொண்டிருக்கிறது; சமூகத்துக்காகப் பேச வைத்துக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்பால் பெண்பால் அன்பால் - 32இந்த மூவரும்தான் என் வாழ்க்கையின் ஆகச்சிறந்த ஆளுமைகள். அந்த அப்பாதான் என் வாழ்க்கையின் முதல் ஆண். அவர் ஒன்றும் முற்போக்குவாதி அல்ல; ஆணாதிக்கவாதியும் அல்ல. அவர் அவராகவே இருந்தார். சாதிப் பிரச்னையின்போது ஊர் விலக்கம் செய்யப்பட, அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாதவர். இத்தனைக்கும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். நான் யாராக வளர வேண்டும் என்ற நெருப்பை அவரிடமிருந்துதான் பற்றிக் கொண்டேன்.

தற்காலத்தில் மேலே சொல்லப்பட்ட சம்பவம் நடந்திருந்தால், அது பாராட்டப்படும் வைரல் நிகழ்வாகவும், அந்த இரு ஆண்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களாகவும் இருந்திருப்பார்கள். சமகாலத்தில் இது ஓர் அரிதான சம்பவம். அத்தகைய ஆண், முன்னேறிய ஒரு சமூகத்தின் அடையாளமாக இன்று கருதப்படுகிறான். ஆனால், விதவைத் திருமணங்கள் மறுக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னரே, திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கு அவன் விரும்பியவனுடனான மறுதிருமணம் எப்படிச் சாத்தியமானது? அந்தக் காலகட்டத்தில்கூட இதுபோன்ற விஷயங்கள் அரிதானவை அல்ல. விதவை மணங்களும் மறுமணங்களும் ஆங்காங்கே நிறைய நடந்திருக்கின்றன. ஆனால், அவை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இடைநிலை சாதி மக்களிடையே மட்டும்தான் நடந்துகொண்டிருந்தன.

கணவன் மரித்தவுடன் தலையை மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை நிறச் சேலையைத் தரிப்பதும், வீட்டின் நல்ல காரியங்களிலிருந்துஒதுக்கிவைக்கப்படுவதுமான வழக்கங்கள் `மேல்சாதி' என்றழைக்கப்பட்ட மேல்தட்டு மக்களிடையேதான் அதிகம் விரவியிருந்தன. உழைக்கும் மக்களிடையே பெண்களைப் புனிதப்படுத்தித் தனிமைப்படுத்த வேண்டிய நோக்கமும் அவசியங்களும் எப்போதுமே இல்லை. அவை, மதத்தின் பேரால் திணிக்கப்பட்டே வளர்ச்சி அடைந்தன. அந்த வகையில் முன்காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள், சிந்தனையில் மேம்பட்ட முன்னேறிய சமூகமாகவே இருந்திருக்கிறார்கள். அடுத்த வேளை உணவுக்கு ஆண்-பெண் இருவருமாக உழைத்தால்தான் இயலும் என்ற நிலையில் உள்ள மக்களுக்கு, சடங்குகளும் சம்பிரதாயங்களும் முக்கியமாகத் தோன்றவில்லை.

அன்றும் சரி... இன்றும் சரி, என் அப்பாவைப் போலவும் மிஸ்ஸியம்மாவின் கணவரைப் போலவுமான புனித பிம்பங்களைக் கட்டுடைத்த, கட்டுடைக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாம், நம்மிடையே வாழும் அவர்களை எல்லாம் எளிதாகக் கடந்துவிட்டு, புராண-இதிகாசப் பாத்திரங்களையும், காப்பிய நாயகிகளையும் `கடவுள்கள்', `கற்புக்கரசிகள்' என்ற பெயரில் வழிபட்டும் கொண்டாடியும் வருகிறோம். மதத்தின் பெயரால் அவர்களையே நம் பிள்ளைகளுக்கும் உதாரணம் காட்டி பின்னோக்கி அழைத்துச் செல்கிறோம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 32

கறுப்பின மக்களுக்காகப் போராடி, சிறை சென்ற நெல்சன் மண்டேலா திரும்பி வந்தபோது, கொண்டாடப்பட்டு, அந்த நாட்டின் அதிபராக வெற்றி பெற்று, ஆட்சிசெய்து, ஒன்றுக்கு இரண்டு திருமணங்கள் புரிந்து மரித்தார். ஆனால், இரோம் ஷர்மிளா தன் 16 ஆண்டுகள் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்டு, தனக்கான ஒரு துணையைத் தேடிக்கொள்ள எத்தனிக்கும்போது கேலிக் கண்டனங்களுக்கு ஆளாகி, தேர்தலில் வெறும் 90 வாக்குகள் பெற்று, `இத்துடன் அரசியலைவிட்டே விலகுகிறேன்' என்ற நிலையை எதிர்கொள்கிறார். வாழ்வில் ஆண் - பெண் இருவரின் பங்கும், தேவைகளும், எண்ணங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவர்களின் உரிமைகள் ஒன்றாக இருக்க வேண்டும்; சமமாக இருக்க வேண்டும்.

ருநாள், புறத்திணைகள் குறித்த இலக்கண வகுப்பை நடத்திக் கொண்டிருந்தேன். `பாடாண்திணை என்பது, பாடப்படும் ஆண்மகனின் வீரம், புகழ், செல்வம், கொடை ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது' என்றேன். `பெண்ணின் வீரம், புகழ், செல்வம் இதெல்லாம் புகழ்ந்து சொல்ற மாதிரி பெண்ணுக்குத் திணை இல்லையா டீச்சர்?' என்று ஒரு மாணவி எழுந்து கேட்டபோது,

இருபத்து நான்காயிரம் நபிகளில்
ஒரு பெண் நபிகூட இல்லையே...
ஏன் வாப்பா?


என்னும் ஹெச்.ஜி.ரசூல் கவிதைதான் நினைவுக்கு வந்தது. `பெண்திணையை இனி நாம்தான் பாட வேண்டும். நமக்காக நாமே பாடிக்கொள்வோம்' என்று பதில் உரைத்தேன். தொல்காப்பியர் சுட்டும் எட்டுவகை மெய்ப்பாடுகள், ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானவை. அதில்கூட அழுகை, அச்சம் என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய மெய்ப்பாடுகளாக்கி, பெருமிதத்தையும் உவகையையும் தமதாக்கிக்கொண்ட ஆண்களின் குறுக்குசால் பற்றி என்ன சொல்ல?

துக்க நிகழ்வுகளின்போதுகூட ஆண்கள் இறுக்கமாக நிற்பது, தன்னைப் பெண்ணோடு ஒப்பிட்டுச் சொல்லிவிடுவார்களோ என்பதால்தான். ஆண் அழுதால் `பொம்பளை மாதிரி அழாதே. ஆம்பளை அழுதா அசிங்கம்!' என்பது போன்ற சொல்லாடல்கள் வெகு இயல்பாக உலா வரும். ஆண்-பெண் பால் பாகுபாட்டால் இயல்பாக உடலின்கண் தோன்றும் உணர்வுகளைக்கூட அடக்கிக்கொள்ள வேண்டியிருப்பதுதான் எவ்வளவு பெரிய வன்முறை!

பள்ளிக்கூடங்களில் ஆண்-பெண் சமத்துவத்தைப் பாடத்திட்டத்தின், இன்னபிற செயல்பாடுகளின் வாயிலாகக் கற்பிக்கவேண்டிய அரசாங்கம், அதற்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் படித்தது அரசு இருபாலர் பள்ளி. வகுப்பறையில் தரையில்தான் அமர்வோம். பையன்கள் அரைக்கால்சட்டைதான் அணிந்திருப் பார்கள். ஒருவரது தொடை இன்னொருவர் மீது பட நெருக்கியடித்துத்தான் அமர்ந் திருப்போம். அப்படி மாணவர்களோடு இயல்பாகப் பேசி, பழகி, விளையாடி அந்தப் பருவத்தைக் கழித்ததால்தான், பொதுவெளியில் ஆண்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதலும் பயிற்சியும் கிடைத்தன; ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை அழகாகவும் பிரித்தெடுத்துச் செல்ல முடிந்தது.

ஆனால், இன்று அரசுப் பள்ளிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பள்ளிகள். இருபாலர் பள்ளி என்றால், முதல் இரண்டு பிரிவுகள் மாணவிகளுக்கு. பிந்தைய பிரிவுகள் மாணவர்களுக்கு. பாலினத்தை இப்படி காரணம் காட்டி பள்ளிகளில் ஆண்-பெண்ணைப் பிரித்துவைப்பதை அரசு கச்சிதமாகச் செய்துவருகிறது. ஆண்களிடம் பெண்கள் பேசவும் பழகவும் தடை சொல்லும் சமூகத்தின் ஊதுகுழலாகப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சமுதாயத்தின் வருங்கால அங்கத்தினர்களைத் தனித்தனியே பிரித்துவைத்து, ஆண், பெண்ணைப் பற்றியும் பெண், ஆணைப் பற்றியும் புரிந்துகொண்டு பால்பேதம் மறுக்கக்கூடிய சிறந்த அங்கத்தினர்களாக வாழ்வதை அரசு தடுக்கிறது.

பெண் குழுவுக்குக் காலம்காலமாகக் கற்பிக்கப்பட்ட பண்புகளையும், ஆண் குழுவுக்குச் சொல்லப்பட்ட பண்புகளையும் அந்தந்தக் குழுவுக்குள்ளேயே பாதுகாத்து, மாற்றுச் சிந்தனையை வளரவிடாமல் செய்யும் மோசமான செயல்பாடு இது. மாற்றுச்சிந்தனை ஏற்படாத வரை பெண் குழு பெண்ணடிமைத்தனத்திலும், ஆண் குழு ஆணாதிக்கத்திலும் இருக்கத்தான் செய்யும். அப்படியெனில், கல்வியின் வேலைதான் என்ன? கற்பதன் விளைவுதான் என்ன? பண்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதுதானே! இந்த அரசாங்கமும், அதன் கல்விக்கொள்கைகளும், கல்விமுறையும் அதற்கு எதிரான நிலையைக் கொண்டிருக்கின்றன என்ற முடிவுக்குத்தானே வரவேண்டியுள்ளது.

இந்த அரசு, கடந்த சில ஆண்டுகளாகச் சத்தமில்லாமல் இன்னொன்றையும் செய்து வருகிறது. பதவி உயர்வோ, பணி நியமனமோ, தலைமையாசிரியர் நியமனமோ, ஆண்கள் பள்ளிக்கு ஆண்கள், பெண்கள் பள்ளிக்குப் பெண்கள் என்றே நியமனம் செய்கிறது. மாணவர் களுக்கு, ஆண்-பெண் இரண்டு ஆசிரியர்களின் ஆளுமையும், பண்புகளும், திறமைகளும் தேவை. தங்களின் எதிர்காலக் குறிக்கோள் குறித்த முடிவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஆளுமை, பாதிப்பை ஏற்படுத்தலாம். நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ, அது இங்கு தடைப் பட்டுப்போகிறது. உளவியல்படி மாணவர்களை ஈர்ப்பவர்கள் எதிர் பாலின ஆசிரியர்களே! அதற்கும் இங்கு வாய்ப்பு இல்லை.

இத்தகைய பள்ளிச் சூழலிலிருந்து பொதுக் கல்லூரிக்குச் செல்லும் மாணவனுக்கு, பெண்கள் புதிராகத் தோன்றுகிறார்கள். பெண்களை எதிர்கொள்ளும் பழக்கம் இல்லை. எனவேதான் பாலியல் சீண்டல், பாலியல் வன்முறை, ஆசிட் வீச்சு போன்ற குற்றங்கள் பெருகுகின்றன. மாணவர்களை இப்படிக் குற்றவாளிகளாக்கும் கல்வித்திட்டத்தைப் பற்றியோ, அரசுச் செயல் பாடுகளைப் பற்றியோ கேள்விக்கு உட்படுத்தாமல், `ஆணும் பெண்ணும் சமம்', `பெண்ணுக்கு எல்லாம் கிடைத்துவிட்டன' என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? குறைந்தபட்சம் இவற்றை எல்லாம் சிந்தித்தாவது பார்த்திருக்கிறோமா?

டந்த (மார்ச்-8) பெண்கள் தினத்தன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் அணிவகுப்புப் பற்றிய செய்தியைக் காண நேரிட்டது. உலகத்திலேயே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இந்திய நாட்டில்தான் அதிகம். இந்தியாவில் ஆசிட் வீச்சுக்கு ஆளான ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒருதலை காதலால் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள்  முதலாவதாகவும், கணவன்மார்களால் ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்கள் அடுத்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஓர் ஆண் தன் காதலைத் தெரிவித்தவுடன் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், மறுத்தால் ஆசிட் வீசுவது, கத்தியால் குத்துவது, கொலைசெய்வது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதும் அப்பட்டமான ஆணாதிக்கச் சிந்தனை; சக மனுஷியை மனுஷியாக மதிக்க இயலாத பண்புத் துறப்பு.

`என் தாய், எனக்குப் பிசைந்து பிசைந்து சோறு ஊட்டினாள். என் மனைவி, எனக்குத் தலை கோதிவிட்டாள். என் தோழி, எனக்கு தோசை சுட்டுக் கொடுத்தாள்' எனப் பெண்களைக் கருணையின் வடிவாக, அன்பின் திருவாக, இரக்கத்தின் கடலாக உருவேற்றி உருவேற்றி நெஞ்சுருகச்செய்து பொறிக்குள் அடைத்துவிடும் ஆண்கள், என்றாவது ஆணாதிக்கத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்களா? பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் பொறுப்பேற்றிருக்கிறார்களா? குறைந்தபட்சம் குற்ற உணர்வாவது அடைந்திருக்கிறார்களா? இல்லை... நாம்தான் காரணம் என்ற விஷயமாவது அவர்களுக்குத் தெரியுமா? இவற்றையெல்லாம் வெளிப்படையாகப் பேசி பெண்களின் கோபத்தை ஆண்கள் எதிர்கொள்ள வேண்டும். அதைவிடுத்து இவற்றையெல்லாம் மறைத்து, அன்பால் அவர்களை நெக்குருகச்செய்து, பெண்களுக்கான பழைய சமூக வரையறைக் குள்ளேயே அவர்களை அழுத்திவைத்திருப்பது எளிய நோய்க்கூறு. ஓர் ஆண் மீதான தவறுகள் பற்றிப் பேசப்படும்போது, அவனுடைய பணி, சூழல், வயது எனப் பல்வேறு காரணங்கள் ஆராயப்படும். அதே ஒரு பெண் என்றால், முதலில் கேள்விக்கு உட்படுத்தப்படுவது அவள் உடல். கேலிக்குள்ளாக்கப் படுவது அவளின் ஒழுக்கம்.

சர்வதேச அளவில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாடும் பெண்களானாலும், உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படத்தில் நடிப்பவரானாலும், நிலத்தில் நாற்று நடும், களை பிடுங்கும், கட்டட வேலைகள் செய்யும் எனப் பெரும்பாலான துறைகளில் ஈடுபடும் பெண்களின் பணிகள் ஆண்களுக்கு இணையான அதே பணியாக இருந்தாலும், ஊதியம் எப்போதும் ஆண்களைவிடக் குறைவாகவே இருக்கிறது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் ஒரே மாதிரிதான். அதில் பாகுபாடு இல்லை. ஆனால், இங்கு இருக்கும் தலையாயச் சிக்கல், பெண்கள் மேலதிகாரிகளாக இருந்தால், ஆண்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெரும்பாலான அரசியல் இயக்கங்களில்கூட, பெண்கள் இரண்டாம் பாலினமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்; மூன்றாம்கட்டத் தலைவர் களாகத்தான் பின்வரிசையில் அமரவைக்கப் படுகிறார்கள்.

பொதுத்தளத்தில் இயங்கக்கூடிய பெண்களுக்கு மட்டும் இங்கு என்ன மரியாதை தரப்படுகிறது? ஒழுக்கம் கெட்டவர்களாக, வீட்டுக்கு அடங்காத வர்களாக அடையாளப்படுத்தப் படுகிறார்கள். அரசியல் போன்ற தளங்களில் பெண்களின் குறைவான பங்கெடுப்பும் தயக்கத்துக்கும் காரணம், பெண்கள் மீது வைக்கப்படும் கீழ்த்தரமான மதிப்பீடுகளே! இலக்கியச் சூழல் இதைவிட மோசம். பெண் விடுதலை, பெண்ணுரிமை குறித்துப் பேசும் எழுத்துகள், கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகின்றன. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் உடல்மொழி, உடல் அரசியல் பேசிய பெண் கவிஞர்கள், சக ஆண் எழுத்தாளர்களின் எதிர்ப்புக்கும் வன்முறைக்கும் ஆளானார்கள்.  

ஆண்பால் பெண்பால் அன்பால் - 32

கவிஞர் அப்துல் ரகுமான், `பெண் கவிஞர்களைக் கூட்டத்தில் பார்த்தால் அறையலாம்!' என்றார். பாடலாசிரியர் சினேகன் `பெண் கவிஞர்களை, மவுன்ட் ரோடில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தணும்' என்று வெளிப்படையாகவே பேசினார். சுஜாதா,  `2005-ம் ஆண்டின் அதிர்ச்சிக் கவிஞர்' என ஆனந்த விகடன் கட்டுரையின் மூலம் எனக்கு பட்டமளித்தார். ஓர் ஆண், பெண்ணை வர்ணித்து எழுதினால்... அது கம்பரசம், காதல் இலக்கியம் என வகைப்படுத்தப் படுகின்றன. ஆனால், ஒரு பெண், பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வலியை, உணர்வை அரசியல்மயப்படுத்தி எழுதினால், அது அதிர்ச்சி தரக்கூடியதாகிறது.பெண்கள் எழுத வருவதே அரசியல்தான். அந்த அரசியலையே கேள்விக்குறியாக்கும் ஆண்களின் மன அழுக்கை என்னவென்று சொல்வது?

மெதுவாகச் செயல்பட்டதாலேயே வங்கிப் பெண் ஊழியரை கீரை ஆயப் போகச் சொன்ன ஜெயமோகன், ‘ஆண்டாள், அவ்வைக்குப் பிறகு, தமிழில் சிறந்த பெண் எழுத்துகளே இல்லை’ என்றார். ஒரு பெண்ணின் உடல்நலக் குறைபாட்டைக்கூட புரிந்துகொள்ள இயலாத வருக்கு, பல நூற்றாண்டு ஆண் எழுத்துகளோடு சில தசம ஆண்டு பெண் எழுத்தை ஒப்பீடு செய்வதே அபத்தம் என்பது மட்டும் புரிந்துவிடுமா என்ன? இந்த வன்மத்தின் தொடர்ச்சியாகவே `சண்டைக்கோழி' திரைப்படத்தில், `யாரு... குட்டி ரேவதியா? அவளும் அவ மூஞ்சியும். கொஞ்சம்கூட வெக்கமே இல்லாம துப்பட்டா போடாமச் சுத்திட்டிருப்பாளே அவதானே?' என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் அளவுக்குத் தொடர்ந்தது. இத்தனைக்கும் அந்தப் பெயரில் திரைப்படத்தில் பாத்திரம் எதுவும் இல்லை. வசனம் ஒன்றை மட்டுமே வைத்து சக எழுத்தாளரான குட்டி ரேவதி இழிவுபடுத்தப்பட்டார். அதற்காக போராட்டம் நடத்திய நான் உள்ளிட்ட பெண்களை, கவிஞர் மனுஷ்ய புத்திரன் நடத்தும் இலக்கிய இதழில் ஆபாசமாக எழுதியிருந்தது ஆணாதிக்கத்தின் உச்சம்.

`ஆண்கள் எழுத வருவது, மக்களுக்காகவும் சமூக மாற்றத்துக்காகவும். ஆனால், பெண்கள் எழுத வருவது, பாலியல் போதாமைக்காக' - இதை உதிர்த்தவர்கள் பொதுத்தளத்தில் இயங்கும் முற்போக்கு முகம்கொண்ட ஆண்கள்தான். அதே காலகட்டத்தில் பெண்ணிய எழுத்துக்களுக்கான தேவையை உணர்ந்து வரவேற்பு அளிக்கும் விதமாக சில சக ஆண் படைப்பாளிகள் செயல்பட்டதையும் இங்கே குறிப்பிடவேண்டியது முக்கியம். பெண் படைப்பாளிகள் மீதான வன்முறையைக் கண்டித்து கண்டனக் கூட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் புரிதலும் அன்பும்தான் தொடர்ந்து செயல்பட துணை புரிந்தன.

சமீபத்தில், ஓடும் காரில் நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இதற்காக மூலையில் சுருண்டுவிடாமல், மிகத் துணிச்சலுடன் தெளிவாகப் புகார் அளித்து, குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட்டார்கள். தற்போது நவீன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்வைக் குறித்து சமூக வலைதளங்களில் `பாவம் நவீன்' எனக் கிண்டலடிக்கப்படுகிறது. `பருத்தி வீரன்' திரைப்படத்தில் கிணற்றில் வீழ்ந்த நாள் முதல், தன்னைத் தொட்டுக் காப்பாற்றியவனே கணவனாக வரவேண்டும் என்று முத்தழகு நினைப்பதும், தன்னுடல் பல ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளானபோது தன்னைக் காணாப் பிணமாக்கும்படி முத்தழகு கெஞ்சுவதும் `கற்பு' என்னும் கருத்தாக்கத்தை வலுப்படுத்து வதற்காகத்தான். பெண், ஆணின் உடைமை எனும் ஆணாதிக்கச் சிந்தனையிலேயே வளர்த்தெடுக்கப்படும் பெண்களும், கற்பு, புனிதம் ஆகியவற்றை அணிகலன்களாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகவேதான், கற்பு உடல் சம்பந்தப்பட்டது அல்ல; மனம் சம்பந்தப்பட்டது என்பதை உணர்ந்து, தன் அடுத்த பணியைத் தொடரும் பாவனாவும் நவீனும் கேலிப்பேச்சுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
 
மக்களிடையே உயர்வு தாழ்வை ஏற்படுத்தும் பிறப்பைப்போல, பால் வேறுபாடு ஆண்களை உயர்ந்தவர்களாவும் பெண்களைத் தாழ்ந்தவர் களாகவும் ஆக்குகிறது. குடும்பம், பணியிடம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என எல்லா தளங்களிலும் பாலின வேறுபாடு நீக்கமற நிறைந்திருக்கிறது. அதுதான் பெண்ணை ஆணுக்கு அடுத்து இரண்டாம் நிலையில் நிறுத்துகிறது. பெண்கள் மீது நடத்தப்படும் அத்தனை ஒடுக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் அதுவே காரணமாக அமைகிறது. `ஆண்மை என்னும் கருத்தாக்கம் அழிய வேண்டும்' என்றார் பெரியார். என்னைப் பொறுத்தவரை கற்பு, கருணை, தாய்மை, மென்மை போன்ற பண்புகளால் கட்டமைக்கப்பட்ட பெண்மை எனும் கருத்துருவாக்கமும் அழிய வேண்டும். அதுதான் மானுட விடுதலைக்கும், மேம்பட்ட நாகரிகச் சமூகத்தை அடையவும், பாலினச் சமத்துவத்தைத் தோற்றுவிக்கவும் வழிசெய்யும்.

ஆண்-பெண் அன்பால் மட்டும் இதைச் சாதிக்க முடியும் என்பது, கையுள் ஒடுங்கிய மின்மினியைப்போல. ஆண்கள் பெண்களிடத்தில் காட்டக்கூடிய அன்பு, நிபந்தனை அன்பாகவும் அடிமைப்படுத்தும் அன்பாகவுமே இருக்கிறது. அன்பு, ஓர் அடிமைச் சிறை. இந்த அன்புதான் பெண்களை அடிமையாக்கும் அஸ்திரமாகவும் தந்திரமாகவும் பயன்படுகிறது. பெண்களை, தேவதைகளாக்க வேண்டாம்; மனுஷியாக இருக்கவிட்டாலே போதும். இதை ஆண்கள் மட்டுமல்ல... பெண்களும் புரிந்துகொண்டு செயல்பட்டால், நிச்சயம் உன்னதமான சமத்துவச் சமூகம் சாத்தியம்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

கைம்மாறு

நீ எனக்கு விஷத்தைக் கொடுத்தாய்
நான் உனக்கு எதைத் திருப்பித் தருவது?
நான் உனக்கு
என் காதல்வெளியைத் தருகிறேன்
அதன் கடைசித் துளி வரைக்கும்.

 - தஸ்லீமா நஸ்ரின்.

(தமிழில்: யமுனா ராஜேந்திரன்)

மீன்காரி

காட்டுக் குதிரையெனப் பறப்பாள்
தினமும் முப்பது மைல்களாவது
தலைச்சுமையுடன்
மழை வெயிலில்
சிதறாப் பனைபோல
மீன் விற்றுத் திரும்புகையில்
கூடையில் சிரித்துக்கொண்டிருக்கும்
ஒரு மொந்தை கள்
ஆனாலும்
சுளகில் மறைந்திருக்கும்
ஒரு கொடுவாக்கத்தி.

 - மாலதி மைத்ரி

கள்களுக்குச் சுதந்திரம் கற்பிக்கும் ஆண்கள், மனைவிக்கு அதைச் செய்ய விரும்புவதில்லை. ஏன் தெரியுமா? நேரத்துக்கு பசியாற்றவும் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளவும், வீட்டைப் பராமரிக்கவும், இன்னும் இன்னும் சேவைகள் செய்ய ஆண்களுக்குக் கூலி இல்லாத அடிமைகள் வாழ்நாள் முழுவதும் தேவையாக இருக்கிறார்கள். கருணையே வடிவான தாயாகவும், காலடியில் கிடைக்கும் மனைவியாகவும் பெண்கள் தயார் செய்யப்படுவது அதற்காகத்தான். தாலி கட்டிய ஒரே காரணத்துக்காக தன் கனவுகளைச் சுருக்கிக்கொள்ளும் மனைவிகள் மனதில் விடுதலை உணர்வை விதைக்க எந்த ஆணுக்காவது துணிவு இருக்குமா? இருந்திருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது.

- ‘ஜாதியற்றவளின் குரல்’ 

நூலிலிருந்து ஜெயராணி