Published:Updated:

செஞ்சுரி சுப்புடு!

வெ.நீலகண்டன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

பிரீமியம் ஸ்டோரி

லை, இசை விமர்சகர்களில் சுப்புடு அளவுக்கு எதிர்ப்பைச் சந்தித்தாரும் இல்லை; அன்பைப் பெற்றாரும் இல்லை. யார், எவர் என்ற பாகுபாடு பார்க்காமல், பாரம்பர்ய இசைக்கும் நடனத்துக்கும் சிறுதுளி பங்கம் நிகழ்வதாக  உணர்ந்தாலும் பிய்த்து தொங்கப்போட்டுவிடுவார். பாடுவதற்கு முன் அவரைச் சந்தித்து, மாலை அணிவித்து ஆசிபெற்று மேடையேறுபவர்களும் உண்டு. சுப்புடு நிகழ்ச்சிக்கே வரக் கூடாது என அரங்குக்கு முன்பு ஆள்போட்டு வேவு பார்த்த கலைஞர்களும் உண்டு. விமர்சனச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த சுப்புடுவுக்கு இது 100-வது ஆண்டு!

செஞ்சுரி சுப்புடு!

சுப்புடு தனக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டது எழுத்தாளர் கல்கியை. ஆனாலும், அவருக்கே உரித்தான பகடியும், மிக நுணுக்கமான விவரணைகளும், அசைக்க முடியாத நம்பிக்கையோடு அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் பெரும் தனித்தன்மையை உருவாக்கிவிட்டன. ஓர் இசை விமர்சகராக, யாரையும் அவர் எதிரியாகக் கருதியதில்லை; நண்பராகவும் எண்ணியதில்லை. `பாலமுரளிகிருஷ்ணா பரீட்சார்த்தமாக உருவாக் கிய புதிய ராகங்களில் எவ்வித டெப்த்தும் இல்லை. இது தேவையற்ற வேலை’ என எழுதினார். பாலமுரளிக்குக் கடுங்கோபம். ஆனால், ஒருகட்டத்தில் சுப்புடுவின் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு, அவரின் நெருங்கிய நண்பரானார்.

வாரத்துக்கு நான்கு மிரட்டல் கடிதங்கள் வரும்.  `ஏன்... மத்தவாளை ஹர்ட் பண்ற மாதிரி எழுதுறேள். கொஞ்சம் மென்மையாதான் எழுதுங்களேன்...' என மனைவி சந்திரா சொல்வதைப் புன்னகையோடு வாங்கி,
காதில் போட்டுக்கொள்வார். ஆனால், பேனா வளையாது. எடுத்ததுமே ஈட்டிதான். சென்னை மியூஸிக் அகாடமி பற்றி, `அக்ரஹாரமா, மியூஸிக் அகாடமியா?' என தலைப்புவைத்து ஒரு கட்டுரை எழுதப்போக, `சுப்புடுவுக்கு இங்கே அனுமதியில்லை' என அகாடமி வாசலில் போர்டே வைத்துவிட்டார்கள். வெளியே, சுப்புடுவுக்கு அவருடைய ரசிகர்கள் வரவேற்பு போஸ்டர் ஒட்டியது வேறு கதை.

சுப்புடுவை நிராகரிக்க முடியாததற்குக் காரணம், அவரின் புலமை. அவர் முறைப்படி இசை கற்றவர் அல்ல. ஆனால், இசையைப் பற்றி அவர் அறியாதது எதுவும் இல்லை. சுப்புடுவின் சகோதரிகள் ராஜலட்சுமியும் பட்டம்மாளும் பாடகிகள். ரங்கூனில் கிருஷ்ணமூர்த்தி பாகவதரிடம் இரண்டு பேரும் பாட்டுக் கற்றுக்கொள்ளும்போது, சுப்புடுவுக்கு 10 வயது. அருகில் அமர்ந்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பார். ராஜலட்சுமி சற்றுப் பிழை செய்தாலும், ராஜி தாளம் இழுக்குது' எனச் சொல்லிச் சரி செய்வாராம். அந்த அளவுக்குப் பிறவி ஞானம்.

பாடி வெங்கட்ராம சுப்பிரமணியன்... இதுதான் சுப்புடுவின் முழுப்பெயர். அவரின் பூர்வீகம், அம்பத்தூர் அருகிலிருக்கும் பாடி. தாத்தா காலத்திலேயே பர்மாவில் செட்டிலாகிவிட்டது சுப்புடுவின் குடும்பம். அப்பா வெங்கட்ராம அய்யர் பிராஞ்ச் கிளார்க்காக பர்மா அரசாங்கத்தில் வேலை செய்தார். தமிழிசை மீது தீராத பற்றுக்கொண்டவர். சுப்புடுவின் அம்மா பெயர் சரஸ்வதி. சுப்புடுவோடு சேர்த்து ஏழு பிள்ளைகள்.

27.3.1917-ல் சென்னை மண்ணடியில் பிறந்தார் சுப்புடு. படித்தது வளர்ந்தது எல்லாம் ரங்கூனில்தான்.

சுப்புடுவைக் கலை, இசை விமர்சகராகத்தான் பலர் அறிந்திருக்கிறார்கள். தேர்ந்த பலகுரல் கலைஞர் அவர். நாடக நடிகர், இயக்குநர். சௌத் இந்தியன் தியேட்டர் என்ற நாடகக் குழுவையும் நடத்திவந்தார். வானொலி நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

சுப்புடு எழுதிய முதல் விமர்சனம் `கல்கி’ இதழில் வெளியாகியது. ஆனால், அவருடைய பெயர் இடம்பெறவில்லை. தமிழகத்திலிருந்து ரங்கூனுக்கு வந்திருந்த ஓர் இசைக்குழுவைப் பற்றிய விமர்சனம் அது. பெயர் இடம்பெறாததைச் சொல்லி சகோதரர்கள் கேலிபேச, `நான் எழுதிய விமர்சனத்தை `கல்கி’ ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் நான் எழுதியது சரிதான். தொடர்ந்து எழுதுவேன்' எனக் கூறி, அடுத்தடுத்து எழுதி அனுப்ப, மூன்றாவது முறை `சுப்புடு’ எனப் பெயர் இடம்பெற்றது. அதன் பிறகு, அந்தப் பெயர் ஓர் அடையாளமாகவே மாறிவிட்டது.

1980-ம் ஆண்டிலிருந்து, தொடர்ந்து டிசம்பர் சீஸனுக்கு சென்னை வந்துவிடுவார் சுப்புடு. மூன்று வேளைக் கச்சேரிகளில் ஒன்றையும் தவறவிட மாட்டார். சிறப்போ இழப்போ... வர்ணம் தொடங்கி மங்களம் வரைக்கும் முழுமையாகக் கேட்பார். கையில் ஒரு பேப்பர், பேனா இருக்காது... கண்களை மூடிக்கொண்டு லயித்துக் கேட்பார். அப்படியே மனதில் பதிந்துபோகும். எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டு, இரவு 10 மணிக்கு அறைக்குத் திரும்புவார். அரை மணி நேரம் ஓய்வு.

பிறகு, படுத்துக்கொண்டே தன் உதவியாளர் சுப்பிரமணியனிடம் டிக்டேட் பண்ணத் தொடங்கிவிடுவார். 12 மணிக்கு விமர்சனக் கட்டுரை தயாராகி,  பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றுவிடும். அவருடைய விமர்சனத்துக்குப் பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு பத்திரிகைகள் காத்திருந்த காலம் உண்டு.

சுப்புடுவின் கடைசி சகோதரர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி. தூர்தர்ஷனில் டைரக்டர் ஜெனரலாக இருந்தவர். இப்போது வயது 95. `மிகுந்த நகைச்சுவை உணர்வுகொண்டவர் சுப்புடு. அதனால், அவரைச் சுற்றி எப்போதும் 10 பேர் இருப்பார்கள். `பைத்தியத்தைச் சுற்றிப் பத்துப் பேரு இருக்கிற மாதிரி என்னைச் சுத்தியும் 10 பேர் இருக்காங்க' எனச் சிரிப்பார் சுப்புடு.  கேன்டீன், பூங்கா என எங்கே போனாலும் பலருக்கு மத்தியில்தான் அவர் இருப்பார்.

சிறு வயதிலேயே அவருக்கு இசைப்புலமை இருந்தது. எந்தச் சமரசத்துக்கும் ஆட்படாமல் ஒரு சவால் மிகுந்த மனிதனாகவே கடைசிக்காலம் வரை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார் சுப்புடு.

எங்கள் குடும்பத்தில் பலரும் பல பெரிய அரசுப் பணிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனாலும், எங்களுக்குத் தனி அடையாளம் ஏதுமில்லை. `சுப்புடு குடும்பம்' என்பதே எங்களுக்குமான அடையாளம்’ எனப் பெருமிதமாகச் சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி. 

தவறுகளைக் கடுமையாகச் சுட்டிக்காட்டும் வேகம், நல்லவற்றைப் பாராட்டுவதிலும் இருக்கும். அதுதான் சுப்புடுவின் நேர்மை. மதியக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, உன்னிகிருஷ்ணன், விஜய் சிவா மற்றும் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் போன்ற பலரையும் அந்தத் தருணத்திலேயே அடையாளம் கண்டு, `இவர்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது' என எழுதினார். இன்று அவர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள்.

`நான் விமர்சனம் எழுதிய பிறகு, பாட்டு ஞாபகம் வரக் கூடாது; என் விமர்சனம்தான் ஞாபகம் வர வேண்டும்' என்பதுதான் சுப்புடுவின் பாலிசி. இறுதி வரை தனக்குச் சரி எனப் பட்டதை விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் எழுதினார். எழுதியது தவறு எனச் சுட்டிக்காட்டினால், அதை ஏற்றுக்கொள்ளவும் அவர் தயங்கியதில்லை.

உடல் நலம் குன்றி டெல்லியில் இருந்தார் சுப்புடு. அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் போய் சந்தித்து நலம் விசாரித்தார். `நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்டார் அப்துல்கலாம். `நான் இறந்த பிறகு, உங்கள் மொகல் தோட்டத்தில் இருந்து ஒரு மஞ்சள் ரோஜாவைக் கொண்டுவந்து என் உடல் மீது வையுங்கள் போதும்...' எனச் சிரித்தார் சுப்புடு. 90-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சுப்புடு, அதற்கு அடுத்த இரண்டாவது நாளில், அதாவது 29.3.2007 அன்று மாலை 7 மணிக்குக் காலமானார். நள்ளிரவு 12:30 மணிக்கு மொகல் தோட்டத்தில் பறிக்கப்பட்ட மஞ்சள் ரோஜாக் கொத்தை சுப்புடுவின் உடல் மேல் வைத்து அஞ்சலி செலுத்தினார் அப்துல்கலாம்.

சுப்புடுவின் எழுத்து பலருக்கு வெளிச்சம் தந்திருக்கிறது. பலரைச் செதுக்கியிருக்கிறது. அவர் பாராட்டிய, அடையாளம் காட்டிய பலர் இன்று உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால், சுப்புடுவின் நூற்றாண்டு பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. குறைந்தபட்சம் ஓர் அரங்க நிகழ்வைக்கூட முன்னெடுக்கவில்லை. அவரின் குடும்பத்தினரே வரும் மே 12-ம் தேதி டெல்லியில் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  காலம் முழுவதும் கைநோக எழுதிக் கலைகாத்த, கலைஞர்களைச் செப்பனிட்ட ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயர் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு