பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மர்ம மன்னன்!

மர்ம மன்னன்!
பிரீமியம் ஸ்டோரி
News
மர்ம மன்னன்!

மருதன்

கேள்வி: வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், என்னென்ன சாப்பிடுவார்?

பதில்: கேக், கம்ப்யூட்டர், கட்டடம், கார் மற்றும் நாய்க்குட்டி.

`கிம் ஜோங் உன்னுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா?' 

மர்ம மன்னன்!

`ஆம், இருக்கிறது. ஒற்றை ஆட்சி கூடாது என்பதற்காக வலுவான ஓர் எதிர்க்கட்சியைத் தொடங்கி, அதன் தலைவராகத் தன்னையே அவர் நியமித்துக் கொண்டிருக்கிறார்.'

ஓர் அமெரிக்கர், இன்னொருவரிடம் கேட்கிறார். ‘நீங்கள் வடகொரிய உணவு வகைகளைச் சாப்பிட்டிருக்கிறீர்களா?’ `இல்லை' என்று பதில் வந்ததும் அவர் தொடர்கிறார், ‘கவலைப்படாதீர்கள். நீங்கள் மட்டுமல்ல, வட கொரியர்கள்கூட அவர்கள் நாட்டு உணவைச் சாப்பிட்டது இல்லை.’

வட கொரியா குறித்தும், அதன் தலைவர் கிம் ஜோங் உன் குறித்தும் ஆர்வம்கொண்டு தேடுபவர் களுக்கு இப்படிப்பட்ட தகவல்களே இணையத்தில் அதிகம் கிடைக்கின்றன. `கிம் போல் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்பவர்களுக்கு மரணதண்டனை உறுதி' என்கிறது ஒரு தளம். `கிம்மின் மனைவியை ஆறு மாதங்களாகக் காணவில்லை. பசியில் அவரையும் கிம் சாப்பிட்டுவிட்டார் என்பது உண்மையா?' எனக் கேள்வி எழுப்புகிறது சீன ஊடகம் ஒன்று. வட கொரியா மேற்கொண்டு வரும் அணு ஆயுதப் பரிசோதனைகள் குறித்து அச்சமூட்டும் தகவல்களைக் கொட்டிக் கொடுக்கிறது ஒரு தளம். இன்னொரு தளமோ, ‘கொரியாவில் தயாரிக்கப்படும் எதுவும் வேலை செய்யாது. அதனால், பயப்படாமல் போய்த் தூங்குங்கள்’ என்று அமைதிப் படுத்துகிறது.

சிக்கல் என்னவென்றால், இதில் எது உண்மை, எது ஜோக் என்பதைக் கண்டறிவது சுலபம் அல்ல. அணுஆயுதப் பரிசோதனை களை வட கொரியா ஐந்து முறை நிகழ்த்திவிட்டது உண்மை. ஆனால், இந்தப் பரிசோதனைகள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன எனத் தெரியாது. கிம்மின் மனைவி மட்டுமல்ல, கிம்மும் அடிக்கடி காணாமல் போய்விடக்கூடிய நபர்தான். திடீரென்று பல மாதங்களாக அவரைப் பற்றி ஒரு தகவலோ, அவருடைய படமோகூட வெளியே வராது. ஓர் அரசாங்க அறிவிப்புகூட இருக்காது.

உலகம் குழம்பித் தவித்துக்கொண்டி ருக்கும்போது வட கொரியா சில புகைப்படங்களை வெளியிடும். ராணுவத் தளவாடங்களுக்கு மத்தியில் கிம் ஒய்யாரமாகப் பெரிய கம்ப்யூட்டர் முன் நின்று சிரித்துக்கொண்டிருப்பார் அல்லது துருப்புகளைப் பார்வையிடுவார் அல்லது சமீபத்தில் வந்து சேர்ந்த ஒரு படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கிம் சிரித்தபடி நின்றுகொண்டிருப்பார். அவர் முதுகின் மீது வயதான ஒரு ராணுவ வீரர் தொற்றிக் கொண்டிருப்பார். உடனே அமெரிக்க ஊடகம் சுறுசுறுப்பாக ஆராய ஆரம்பித்துவிடும்.

கிம் ஜோங் உன் பற்றி மட்டும் ஏன் இத்தனை வதந்திகள், குழப்பங்கள், சிக்கல்கள்? அவரைப் பற்றியும் அவர் ஆண்டுவரும் நாட்டைப் பற்றியும் எதையும் உறுதியாக நம்மால் தெரிந்துகொள்ள முடியாமலிருப்பது ஏன்? கிம் எப்படிப்பட்டவர்? அவர் நல்லவரா, கெட்டவரா? அவருடைய கனவு என்ன? அவருடைய செயல்திட்டம் என்ன? அவருடைய நண்பர்கள் யார், எதிரிகள் யார்? நீண்ட காலமாகவே கடும் பஞ்சத்தில் அந்த நாட்டு மக்கள் தவித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? இந்தக் கேள்விகள் எதற்கும் உறுதியான விடைகள் இல்லை. ஏனென்றால், கிம் ஒரு நிரந்தரப் புதிர். வட கொரியா ஓர் இருண்ட நாடு. வெறுமனே ஓர் உவமைக்காகச் சொல்லப்பட்டதல்ல இது. செயற்கைக்கோள் உதவியுடன் இரவு நேரத்தில்கூட வட கொரியாவை ஒருவர் தெளிவாகக் கண்டு பிடித்துவிட முடியும். `வண்ண வண்ண நியான் விளக்குகளால் ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஜொலித்துக் கொண்டிருக்கும்போது வட கொரியாவின் நிலப்பரப்பு மட்டும் முழுக்க அட்டைக்கரியாக இருண்டுகிடப்பதை ஒருவர் காண முடியும். பிரகாசமாக எரியும் ஒரே ஒரு தெருவிளக்கைக்கூட நீங்கள் அங்கே பார்க்க முடியாது' என்கிறார்கள் அங்கே சென்று திரும்பியவர்கள். சூரியன் விடைபெற்றுச் சென்றதும் அங்கே இருள் நிரந்தரமாகக் குடிகொண்டுவிடும். மறுநாள் விடிந்தால்தான் வெளிச்சம். அது வரை இருள் மட்டுமே துணை.

வட கொரிய மக்கள் சந்திக்கும் எண்ணற்றப் பிரச்னைகளுள் முதன்மையானது அங்கு நிலவிவரும் கடும் மின்சாரத் தட்டுப்பாடு. பொழுது சாய்வதற்குள் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிவிடுவது வட கொரிய மக்களுக்குப் பழகிவிட்டது. `குடியிருப்புப் பகுதிகள் மட்டுமல்ல, அரசுப் பணியிடங்கள், வணிகப் பகுதிகள், வீதிகள் என எங்கும் இருள் நிறைந்துகிடப்பதைக் காணலாம்' என்கின்றன சமகால வட கொரியா குறித்து வெளிவந்திருக்கும் சில புதிய நூல்கள். `எங்களுக்கு மின்சாரத் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். அதற்குக் காரணம், அமெரிக்கா எங்கள் மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடை' என்கிறது வட கொரியா. `தினம் தினம் அணு ஆயுதப் பரிசோதனை செய்துகொண்டிருந்தால், தடை விதிக்காமல் வேடிக்கையா பார்த்துக் கொண்டு நிற்பார்கள்?' என்று திருப்பிக் கேட்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவைச் சீண்டிக்கொண்டே இருப்பது, கிம்முக்குப் பிடித்த பொழுதுபோக்கு. சென்ற ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அணு ஆயுதப் பரிசோதனையை வட கொரியா நிகழ்த்தியபோது, அமெரிக்கா மட்டுமல்ல உலகமே அச்சத்துடன் திரும்பிப் பார்த்தது.

எப்படியாவது அணு ஆயுதப் பரிசோதனையில் வெற்றிபெற வேண்டும் என்று தீராத துடிப்புடன் இருக்கிறார் கிம். அதற்கான காரணம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். கிம்மின் தந்தை கிம் ஜோங் இல், வட கொரியாவின் பலமிக்கத் தலைவராக இருந்ததுடன், அந்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அதிபராகவும் நீடித்தார். டிசம்பர் 2011-ம் ஆண்டில் அவர் இறந்ததைத் தொடர்ந்து, கிம் ஜோங் உன் பொறுப்பை ஏற்றார். கிம் ஜோங் இல் உயிருடன் இருந்தபோதே தன் மகனைத் தயார்செய்ய ஆரம்பித்துவிட்டார் என்றாலும், தனித்துவமிக்க எந்தத் திறனையும் கிம் ஜோங் உன் வளர்த்துக்கொள்ளவில்லை. தந்தை வகித்த பதவியும், தந்தை பெற்றிருந்த அதிகாரமும் கைகூடிவிட்டன என்றாலும், அப்பாவிடம் இருந்த மிடுக்கும் கவர்ச்சியும் தன்னிடம் இல்லை என்பதையும், இதை வட கொரியாவும் உலகமும் உணர்ந்திருக்கின்றன என்பதையும் கிம் அறிவார். எனவே, தன்னுடைய தனிப்பட்ட சாதனை என்று சொல்லிக்கொள்ளும் படியாக ஏதேனும் ஒன்றை உடனடியாகச் செய்துகாட்ட அவர் விரும்புகிறார். அப்படி அவர் தேர்ந்தெடுத்திருப்பதுதான் அணு ஆயுதம். வட கொரியாவை எப்படியாவது ஓர் ஆணு ஆயுத நாடாக மாற்றிவிட்டால், அது நிச்சயம் அவர் சாதனையாகவே பார்க்கப்படும். 

மர்ம மன்னன்!

மற்றபடி சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அவர் அஞ்சுவதாகத் தெரியவில்லை. அப்படி அஞ்சுபவராக இருந்திருந்தால், உலகையே பதைபதைக்கவைக்கும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருப்பாரா? சில உதாரணங்கள். தன்னுடைய மாமாவும் அப்பாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவரும், செல்வாக்குமிக்க அரசுப் பதவியை வகித்தவருமான சாங் சோங் தாயெக் என்பவருக்கு, டிசம்பர் 2013-ம் ஆண்டில் மரண தண்டனை விதித்தார் கிம். `அவர் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டார்' எனக் காரணம் சொல்லப்பட்டது. ஊழலில் திளைத்தார் என்பது அவர் மீதான இன்னொரு குற்றச்சாட்டு. மற்றபடி, குறிப்பாக அவர் இழைத்த தவறு என்ன என்பது இன்று வரை தெளிவாகச் சொல்லவில்லை. `தேவையற்றக் குப்பை என்பதால், அகற்றினேன்' என்று ஒருமுறை உரையாற்றும்போது குறிப்பிட்டார் கிம்.

கிம்மால் அகற்றப்பட்ட இன்னொரு ‘குப்பை’ கிங் ஜோங் நாம். இவர் கிம்மின் அரை சகோதரர். அதாவது, கிம்மின் தந்தை கிம் ஜோங் இல்லின் வேறொரு மனைவிக்குப் பிறந்த முதல் மகன். அந்த வகையில் அதிகாரத்துக்கான நேரடிப் போட்டியாக வந்திருக்கவேண்டியவர். ஆனால், கிங் ஜோங் நாம் தன் தந்தையுடன் முன்னரே சண்டையிட்டுப் பிரிந்து சென்றுவிட்டவர் என்பதால், கிம் பதவிக்கு வந்ததை அவர் எதிர்க்கவில்லை. கிட்டத்தட்ட வாழ்நாள் முழுக்க தலைமறைவாகவே இருந்திருக்கிறார் கிங் ஜோங் நாம். வட கொரியாவைவிட்டு வெளியேறி ஜெனிவாவில் படித்தார். அவ்வப்போது தன் சகோதரன் கிம்மைப் பற்றி காரசாரமாக அறிக்கைகள் வெளியிட்டதைத் தவிர, மேலதிகம் எதுவும் அவர் செய்ததாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து கிங் ஜோங் நாம் கொல்லப்பட்டார். கொலைகூட அல்ல, கொல்லப்பட்டவிதம்தான் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாலிவுட் படங்களில் வருவதுபோல் இரண்டு பெண்களை வைத்து நூதனமான முறையில் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. `வி.எக்ஸ்' எனப்படும் உயிர்கொல்லி வாயு, கிங் ஜோங்கின் முகத்தில் வீசப்பட்டிருக்கிறது. நொடியில் சுருண்டு விழுந்து அவர் இறந்துவிட்டார். `இது ஒரு ரியாலிட்டி ஷோ' எனச் சொல்லி, அந்த ரசாயனத்தை அந்தப் பெண்களிடம் கொடுத்து அனுப்பி கிங் ஜோங்கின் முகத்தில் வீசச் செய்திருக்கிறார்கள். நாம் ஒருவரைக் கொல்லப் போகிறோம் என்று தெரியாமலேயே கிங்கைக் கொன்றுவிட்டு திரும்பியிருக்கிறார்கள் அந்த இருவரும். இது, கிம் ஜோங் உன்னின் ஏற்பாடு எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கிம் இதற்கெல்லாம் தயங்காதவர் என்று அமெரிக்காவுக்குத் தெரியும். ஆனாலும், அமெரிக்கா அதிர்ந்ததுக்குக் காரணம், தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதத்தை கிம் பாவித்தது தான். அப்படியானால், அணு ஆயுதத்தோடு சேர்த்து நவீன ரசாயன ஆயுதத்தையும் கிம் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறாரா என்பதுதான்.

வட கொரியாவின் பிரதான எதிரி நாடுகள் மூன்று. முதலாவது, அமெரிக்காவின் ராணுவ ஆதரவுடன் இயங்கிவரும் தென் கொரியா. இரண்டாவது, வட கொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ள அமெரிக்கா. மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து வட கொரியாவை எதிர்க்கும் அண்டைநாடான ஜப்பான். இந்த மூன்று நாடுகளுமே கிம்மை ஒரு புதிராகவே பார்க்கின்றன. இந்த மூன்றும் போதாதென, சீனாவுடனும் நேரடி மோதல்களில் இறங்கிவிட்டார் கிம்.

ஒரே சமயத்தில் அச்சுறுத்தலாகவும் புதிராகவும் வேடிக்கையான மனிதராகவும் கிம் காட்சியளிப்பது, சிக்கலை அதிகப்படுத்தவே செய்கிறது. இவருடைய எதிரிகள் அனைவரும் ஒன்றுபோல் குழம்பிப்போய் நின்று கொண்டிருக் கின்றனர். இவரை என்னதான் செய்வது? சத்தியமாக ஒருவருக்கும் தெரிய வில்லை. கிம் ஜோங் உன் பற்றி வெளிவரும் அடுத்த ஜோக்குக்காக அல்லது அவரிடமிருந்து வரும் அடுத்த தாக்குதலுக்காக அவர்கள் கைகட்டிக் காத்திருக்கிறார்கள். எது ஜோக், எது சீரியஸ் என்பதைக்கூட கிம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதுதான் இருப்பதிலேயே பெரும் சோகம்!