Published:Updated:

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ்! - 2

கார்க்கிபவா

பிரீமியம் ஸ்டோரி

ங்களுக்கு பாடல் கேட்கும் பழக்கம் உண்டா? திரையிசைப் பாடல்களில், பெண்களின் அழகை ஆராதிக்கும் பாடல்கள் பல. அவற்றில் தவறாமல் இடம்பெறும் ஒரு விஷயம் `தலைமுடி'.

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ்! - 2`கூந்தல் முடிகள் நெற்றிப்பரப்பில் கோலம் போடுதே அதுவா...’வில் தொடங்கி `கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ...’ வரை கூந்தலை அத்தனை பேர் வியந்திருக்கிறார்கள். போன தலைமுறை வரை, ஒரு பிள்ளையைப்போலத்தான் முடியைக் கவனமாக வளர்த்திருக்கிறார்கள்; சீயக்காய், செம்பருத்தி என வாரம்தோறும் `விருந்தே' படைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தத் தலைமுறை?

ஃபங்க் அந்தக் காலம். ஹிப்ஸ்டர் தாடிதான் இந்தக் காலம். தலைமுடியிலிருந்து அத்தனை ஃபேஷன் ஸ்டேட்மென்ட்களும் இறங்கி தாடிக்கு வந்துவிட்டன. காரணம், தலைமுடி `வீக்’ ஆனதுதான். ஸ்டைல் எல்லாம் இருக்கட்டும், எத்தனை பேருக்கு 30 வயதுக்குள்ளேயே முடி உதிர்கிறது; பொடுகு அரிக்கிறது! கிட்டத்தட்ட `முடி' என்ற விஷயத்துக்கு முடிவே கட்டுகிறது ஜென் Y மற்றும் ஜென் Z கூட்டம்.

வரலாற்று பட்டனை க்ளிக் செய்தால், முடி உதிர்தல் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் டவுன்லோடு ஆகின்றன. எகிப்து நாட்டு மக்கள், வழுக்கை விழுந்தால் பதறிவிடுவார்கள். அது கடவுளின் சாபத்தைக் குறிப்பது என நம்புகிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் வேறு கதை. அங்கே வழுக்கைத்தலை உள்ள ஒருவர், `அறிவாளி', `பணக்காரர்' என்பதாக எண்ணப்படுகிறது. ஒருகாலத்தில் திருமணம் ஆனவர்களுக்கு ஒரு ஹேர்ஸ்டைல், ஆகாதவர்களுக்கு ஒரு ஹேர்ஸ்டைல் என்பதுகூட இருந்தது. ஆனால், எல்லா காலங்களிலும் தலைமுடி என்பது ஒருவருடைய சுத்தத்துக்கான இண்டிகேட்டராகத்தான் பார்க்கப்படுகிறது. அது மட்டும் மாறவில்லை.

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ்! - 2

எந்தப் பயமும் இல்லாமல் கெத்தாக, ஸ்டைலாக சுற்றும் இளைஞனின் நம்பிக்கையை முதன்முதலில் அசைத்துப்பார்க்கும் விஷயம் `முடி உதிர்தல்'. ஆணோ பெண்ணோ... தன் அழகுக்கு முக்கியக் காரணமாக நினைக்கும் முதல் விஷயம் முடிதான். `ஹெல்மெட் போடுறதை விட்டதே இதனாலதான்ப்பா’ - முந்தைய வரியைப் படிக்கும்போதே வந்த பலரின் மைண்ட்வாய்ஸ் இதுதானே?

முடி உதிர்ந்த பிறகு வரும் பெர்சனல் கவலைகள் எல்லாம் சரிதான். இதனால், பொதுவெளியில் டேமேஜ் ஆகும் நமது இமேஜ் பற்றித் தெரியுமா? அலுவலக விஷயமாக ஒரு க்ளையன்ட்டைப் பார்க்கப்போகிறோம். அவரை அசரடிக்கிற மாதிரி அத்தனை டேட்டாக்களையும் ஐடியாக்களையும் உள்ளங்கை ரேகையோடு ஒட்டியிருப்போம். அவரைச் சந்திக்கும்போது, ஒரு `ஹலோ' சொல்லிவிட்டு ஆரம்பிப்போம் என நினைக்கும் அந்தக் கணம், குளத்தின் மீது படர்ந்த ஆகாயத்தாமரைகளைப்போல சட்டை மீது உதிர்ந்துகிடக்கும் முடிகள் மீது அவர் கண்கள் இயல்பாகவே திரும்பும். நம் முகத்தை முழுமையாக ஸ்கேன் செய்வதற்கு முன், அவரது மெமரியில் ஸ்டோர் ஆகும் டேட்டா கொட்டிக்கிடக்கும் முடியாகத்தான் இருக்கும்.

`இதை எல்லாமா பார்க்கணும்? நான் சொல்றதைவிடவும் நான் செய்றதை விடவும் இது முக்கியமா?’ என்ற கோபம் வரும். ஆனால், இதுவும் முக்கியம்தான். முடி உதிர்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது, நாம் ஆரோக்கியமாக இல்லை; சுத்தமாக இல்லை என்பதை உலகுக்குச் சொல்லும் ப்ளூ டிக்.

கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் `முடி உதிர்வது  தொடர்பான பிரச்னைகளுக்கு...' எனத் தனி வியாபார சாம்ராஜ்யமே இருக்கிறது. உலக அளவில் 22 ஆயிரம் கோடி ரூபாய் பிசினஸ் நடக்கும் துறை இது. அமெரிக்காவில், `ஹேர் லாஸ் அசோசியேஷன்’ என்ற ஓர் அமைப்பே இருக்கிறது. அது சொல்வது என்னவென்றால், மேலே சொன்ன பல ஆயிரம் கோடி ரூபாய் பிசினஸில் முன்வைக்கப்படும் தீர்வுகள் எதுவுமே முடி உதிர்தலை நிறுத்தாது என்பதுதான். ஏனெனில், அவர்கள் சொல்லும் எல்லா தீர்வுகளும் தலைக்கு மேலே மட்டுமே கவனிக்கின்றன. உண்மையான காரணம், நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கிறது.

சிலருக்கு, பரம்பரைப் பரம்பரையாகவே முடி உதிரலாம். காற்று மாசு காரணமாகவும் சிலருக்கு முடி உதிரும். ஆனால், பெரும்பாலானோருக்கும் முடி உதிரக் காரணம், சத்துகள் நிறைந்த உணவு உண்ணாதது; போதுமான தூக்கம் இல்லாதது; எப்போதும் மன அழுத்தத் திலேயே இருப்பது. இவற்றை சரிசெய்தால்தான், முடி உதிர்வதைத் தடுக்க முடியும்.

தினமும் 50 - 100 முடிகள் வரை உதிர்வது சாதாரணம். அதற்கும் அதிகமாக உதிர்ந்தால் உஷார் ஆகிவிட வேண்டும். முடி உதிர்தல் வில்லன் என்றால் தேங்காய் எண்ணெய் தான் ஹீரோ. தேங்காய் எண்ணெயுடன், அதில் பாதி அளவு எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து  20 நிமிடங்கள் ஊற விட்டு பின் குளிக்கவும். இதை வாரம் இருமுறை செய்யலாம்.

இது மருந்து. வரும் முன் காப்போம் இன்னும் சிறந்தது. தலைக்கு ஹீட்டர் போடுவது, க்ரீம் நிறைய தேய்ப்பது, சூடான இடத்தில் அதிக நேரம் வேலை செய்வது, தலையில் வியர்த்தால் உடனே தலைகுளிக்காமல் அப்படியே விடுவது போன்றவற்றை தவிர்ப்பது நலம். இஞ்சி, பூண்டு, பப்பாளி போன்றவை பொடுகு அதிகரிக்காமல் இருக்க உதவும் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் பொடுகு என்பது, இறந்த திசுக்கள். அவ்வளவுதான். நாம் நம்மை எந்த அளவுக்கு ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே பொடுகு அதிகமாகும். சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருக்கும் வெள்ளையை மட்டும்தான் உலகம் ரசிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

முடிக்கும் முக்கியத்துவம் கொடுங்க மக்களே!

- பெர்சனல் பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு