Published:Updated:

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!
கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

பு.விவேக் அனந்த்

பிரீமியம் ஸ்டோரி

தோனி கேப்டன் இல்லை; கோலி  ஃபிட்டாக இல்லை; சுழற்பந்து சூப்பர் ஸ்டார் அஸ்வின் அணியில் இல்லை... என மந்தமாகத் தொடங்கிய ஐ.பி.எல்., இப்போது வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. கோலி மீண்டும் விளையாட வந்துவிட்டார். கம்பீர் வெளுத்துக்கட்டுகிறார், பண்ட், சஞ்சு சாம்ஸன்... போன்ற இளம்வீரர்கள் அதிரடிக்கிறார்கள் என்பதுதான் பரபரபுக்குக் காரணம்.

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

கோலி ரிட்டர்ன்ஸ்

கடந்த ஐ.பி.எல்-லில் கோலியின் விளாசலை டிவி-யில் பார்த்தவர் களுக்கே மூச்சிரைத்தது. ஒரே சீஸனில் 973 ரன்கள். நான்கு சதங்கள், ஏழு அரைச் சதங்கள் எனத்  தெறிக்கவிட்டார். ஆனால், காயம் காரணமாக இந்த ஆண்டு முதல் மூன்று போட்டிகளில் கோலி ஆடவில்லை. `நூறு சதவிகிதம் ஃபிட்டாக இருந்தால் மட்டுமே விளையாடுவேன்’ என்பதை பாலிஸியாக வைத்திருக்கும் கோலி, இப்போது ஃபுல் ஃபார்முடன் திரும்பியிருக்கிறார். முதல் போட்டியில் அரைச் சதத்துடன் ஆரம்பித்திருக்கும் கோலியின் ராஜ்ஜியம் தொடரும்.

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

பாவம் புனே

`தோனியை கேப்டன்ஷிப்பில் இருந்து நீக்கியது சரியான முடிவு. ஸ்மித் செம கேப்டன்' என ஸ்டேட்டஸ் தட்டிக்கொண்டிருந்த புனே அணியின் உரிமையாளர்கள் கோயங்கா பிரதர்ஸ், இப்போது அரண்டுபோயிருக்கிறார்கள். முதல் போட்டியில் மட்டுமே வெற்றி. அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்தோல்விகள் எனப் படுத்தப்படுக்கையாகிவிட்டது புனே அணி. இதில் உச்சகட்டம் பென் ஸ்டோக்ஸ்தான்.

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

இந்த ஆண்டின் உச்சப்பட்சத் தொகையாக  14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர் பென் ஸ்டோக்ஸ். ஆனால், அவரே புனே அணியின் தோல்விக்கு முதல் காரணம். ஸ்டோக்ஸின் பந்துகளைத் துவைத்து எடுக்கிறார்கள் எதிர் அணி பேட்ஸ்மேன்கள். ஸ்டோக்ஸ் நான்கு ஓவர்கள் போட்டால் எதிர் அணிக்கு 40 ரன்கள் நிச்சயம் என மீம்ஸ்கள் பறக்கின்றன.  ஆனால், அவர் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வருவார் எனச் சமாளிக்கிறது புனே அணி நிர்வாகம்.

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

பட்டையைக் கிளப்பும் பாண்டியா பிரதர்ஸ்

பாண்டியா சகோதரர்கள்தான் இந்த ஆண்டின் அதிரடி பிரதர்ஸ்.  ஹர்திக் பாண்டியா- க்ரூனால் பாண்டியா இருவருமே மும்பை அணிக்காக விலையாடுகிறார்கள். இருவரும் ஆல் ரவுண்டர்ஸ்.  ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சாளர். க்ரூனால் பாண்டியா சுழற்பந்து மன்னன். மும்பை அணியில் ரோஹித் ஷர்மா, பட்லர், பொல்லார்டு போன்ற பெருந்தலைகள் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்ட போட்டிகளில் எல்லாம், `நாங்க இருக்கோம்' எனப் பொறுப்புகளை எடுத்துப்போட்டுச் செய்தது இந்த பிரதர் கூட்டணிதான்.

இதுவரை மூன்று போட்டிகளில் டிவில்லி யர்ஸுக்குப் பந்து வீசியிருக்கிறார் க்ரூனால் பாண்டியா. மலிங்கா, பும்ரா பந்துகளைச் சிதறாமல் சிக்ஸர் விளாசும் ஏபிடி, க்ரூனாலிடம் மட்டுமே மூன்று முறையும் அவுட் ஆகியிருக்கிறார். `டிவில்லியர்ஸ் போன்ற ஆள்களுக்குப் பந்து வீசும்போது, இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற மனநிலையுடன்தான் வீசுவேன். பௌண்டரிகளோ, சிக்ஸரோ விளாசப்பட்டால் டென்ஷன் ஆக மாட்டேன். முழு உத்வேகத்துடன் சரியான பந்துகளை வீசுவேன். அதற்குக் கிடைத்த பரிசுகள்தான் இவை' என்பது க்ரூனாலின் சிம்பிள் பதில்.

கிறிஸ் லின்

பெங்களூருக்கு கிறிஸ் கெய்ல் என்றால், எங்களுக்கு கிறிஸ் லின் எனக் கெத்துகாட்டியது கொல்கத்தா. அதற்கு ஏற்றாற்போலவே முதல் மேட்சில் 41 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் லின். இதில் எட்டு மெகா சிக்ஸர்கள். ஆனால், கிரிக்கெட் வாழ்க்கையில் துரதிர்ஷ்ட அரக்கனால் தொடர்ந்து துன்புறத்தப் பட்ட லின், இந்த முறையும் அவுட். காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் லின் விளையாடுவது சந்தேகம்.

 27  வயது  வீரரான கிறிஸ் லின் ஆஸ்திரேலியாவுக்காக இதுவரை ஒரேஒரு ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி-20 மேட்ச்களில் மட்டுமே ஆடியிருக்கிறார். 2011-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்-லில் இருக்கிறார். ஆனால், அவரை ஏலத்தில் எடுக்கும் அணிகள் எதுவுமே, ஆட்டத்தில் சேர்க்காது. இந்த விதியை மீறி 2014-ம் ஆண்டு சீஸனில் கொல்கத்தா அணிக்காக முதல் போட்டியில் ஆடி, `மேன் ஆஃப் தி மேட்ச்’ வென்றார் லின். ஆனால், அதன்பிறகு காயம் காரணமாக அந்த சீஸன் முழுக்க விளை யாடவில்லை. அதேபோல் இந்த முறையும் இரண்டு போட்டிகளோடு மூட்டைக் கட்டியிருக்கிறார் லின்.  `கிரிக்கெட் கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?' என ட்விட்டரில் புலம்பியிருக்கிறார் லின்.

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

ப்ரீத்தி  ஹேப்பி  அண்ணாச்சி

`பஞ்சாபுடன் ஆடினால் இரண்டு புள்ளிகள் நிச்சயம்' எனப் பரிகாசிக்கப்பட்ட பஞ்சாப் அணி, இந்த சீஸனில் எதிர் அணிகளை விரட்டியடிக்கிறது. எல்லாம் கிளென் மேக்ஸ்வெல் கேப்டனான மாயம்தான். களத்தில் கூல் கேப்டனாக இருக்கிறார் என்பதால், பஞ்சாப் வீரர்களுக்கும் மேக்ஸியைப் பிடித்துவிட்டது. ஆனால், ஷேவாக் ரசிகர்களோ, `கேப்டனாக இருக்கும் வரை தடுமாறிய ஷேவாக், பயிற்சியாளர் ஆனதும் சக்ஸஸ் சீக்ரெட்டைப் பிடித்துவிட்டார்’ என உற்சாகமாகிறார்கள். மொத்தத்தில் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி செம ஹேப்பி.

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

பாவம் ஸ்டெய்ன்

உலகின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னுக்கு, இந்த சீஸனில் எந்த அணியிலும் இடம் இல்லை. `கடந்த ஒன்பது வருடங்களில் முதன்முறையாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெட்டியாக உட்கார்ந்திருக்கிறேன். வியர்வை நனைய அங்கே விளையாடிக்கொண்டிருக்க வேண்டியவன் நான்' என ஃபீல் பண்ணுகிறார் ஸ்டெயின்.

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

தோனி தொடர்வாரா?

மிகமிக மோசமான ஃபார்மில் இருக்கிறார் முன்னாள் கேப்டன் தோனி. அவருடைய அதிரடி ஆட்டம் என்னாச்சு, ஹெலிகாப்டர் ஷாட்லாம் எங்கே போச்சு... எனக் கண்களைக்  கசக்குகிறார்கள் ரசிகர்கள். இதே ஆட்டத்தை தோனி தொடர்ந்தால், அணியிலிருந்து நீக்கும் முடிவில் இருக்கிறது புனே நிர்வாகம்.

 நடராஜனுக்கு வாய்ப்பு?

பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்குச் சரியான வாய்ப்பு அமையாததால், முழுத் திறமையை நிரூபிக்க முடியாத சோகத்தில் இருக்கிறார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயரெடுத்த யார்க்கர் மன்னனுக்கு இன்னும் கடைசி ஓவர் கொடுக்கப்படவே இல்லை. முதல் போட்டியில் மூன்று ஓவர்களும், இரண்டாவது போட்டியில் ஒரு ஓவரும் மட்டுமே வீசினார் நடராஜன். மூன்றாவது போட்டியில் அணியிலேயே அவர் இல்லை.

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

கலக்கும் தாஹிர்

உலகின் நம்பர் ஒன் 20-20 பெளலரான இம்ரான் தாஹீரை, இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியுமே எடுக்கவில்லை.இதனால் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியிருந்தார் தாஹீர். கடைசி நேரத்தில் புனே அணி மிச்சேல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரராகத்தான் இவரை எடுத்தது. ஆனால், இப்போது புனே அணியின் டாப் பெளலர் தாஹிர்தான். அவரின் கூக்ளியைச் சமாளிக்க முடியாமல் வரிசையாகப் பெவிலியன் நோக்கித் திரும்பிகிறார்கள் பேட்ஸ்மேன்கள்.

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

ரிஷப் பன்ட்

இந்திய அணியில் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் தோனியின் இடத்தை நிரப்பப்போகும், விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். 19 வயதுதான். ஆனால், அனுபவமிக்க பெளலர்களே இவரிடம் உதை வாங்குவார்கள். ஏற்கெனவே, ரஞ்சியில் காட்டடி அடித்திருந்த பன்ட், ஐ.பி.எல் தொடருக்காக டெல்லி அணியில் ஆட ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், முதல் போட்டி தொடங்குவற்கு முந்தைய நாள், அப்பா ராஜேந்திர பன்ட் மாரடைப்பால் மரணமடைய தளர்ந்துபோனார் ரிஷப் பன்ட். அப்பாவின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கி 36 பந்துகளில் மூன்று பௌண்டரி, நான்கு சிக்ஸர் விளாசி 57 ரன் அடித்தார். பாராட்டுகள் குவிந்தாலும், தந்தை இறந்த சோகத்தில் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை பன்ட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு