Published:Updated:

இவங்க பேசினாலே வைரல்தான்!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

‘‘ஆரம்பத்தில் பண்ணின இன்ஃபர்மேட்டிவ் வீடியோக்கள் எதுவும் வொர்க்அவுட் ஆகலை.

பிறகு, நாம அனுபவிக்கும் விஷயங்களையே காமெடியா பண்ணுவோம்னு, திருச்சி டு சென்னை பஸ் டிராவல் கஷ்டங்களைச் சொன்னோம். அதுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்’’- வெற்றிக்கதை சொல்கிறார்கள் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ யூடியூப் சேனலின் கோபி-சுதாகர். இருவரும் திருச்சியில் ஒன்றாக இன்ஜினீயரிங் படித்தவர்கள். 

இவங்க பேசினாலே வைரல்தான்!

‘‘2011-ம் ஆண்டிலிருந்து வீடியோ பண்றோம். நானும் சாராவும் சேர்ந்து ஆரம்பிச்ச சேனல்தான் `டெம்பிள் மங்கீஸ்'. பலரும் பேசப் பயந்த விஷயங்களை தில்லா பேசுவது எங்க ஸ்பெஷல்’’ என்கிற விஜய் வரதராஜ், இப்போது சினிமாவிலும் பிஸி. கலாய் காமெடிதான் `கோயில் குரங்குகள்' அணியினரின் சிறப்பு.

‘‘அரசியல் விமர்சனம், சினிமா விமர்சனம், மெசேஜ் சொல்லல்னு கலந்துகட்டி பண்ணக்கூடிய சேனல்.

35 பேர் வொர்க் பண்ணக்கூடிய பெரிய டீம் பாஸ். ஒரே நேரத்துல நாலு சேனல் ரன் பண்ணிட்டிருக்கோம்’’ என்னும் ‘ஸ்மைல் சேட்டை’ விக்னேஷின் `பீப் ஷோ' வைரல் ஹிட்.

‘‘டிவியில் நிகழ்ச்சி பண்ணிட்டிருக்கிறதைப் பார்த்துட்டு, விகடன்ல இருந்து கூப்பிட்டாங்க. `அர்த்தமில்லாத விஷயங்களை விமர்சனம் பண்றதைவிட, நடக்கும் சீரியஸான விஷயங்களை நகைச்சுவையா சொன்னால், அதோட வீச்சு அதிகமா இருக்குமே'னு தோணுச்சு. அப்படித்தான் எனக்கு யூடியூப் அறிமுகம்’’ -  ‘அது இது எது?’ மூலம் பிரபலமான ஜெயச்சந்திரன், இப்போது விகடன் டிவி யூடியூப் சேனலின் பவர் பெர்ஃபாமர்.

இன்றைய யூடியூப் ஸ்டார்களில் இவர்கள் ஐவரும் முக்கியமான நம்பிக்கை நட்சத்திரங்கள். பணமதிப்பு இழப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் தற்கொலை... என கவுன்சிலர் தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி வரை அத்தனை பேரையும் கலாய்த்துக் கலகலக்க வைக்கும் வீடியோ வெடிகள். இவர்கள் ஐவரையும் ஒரே இடத்தில் கூட்டினோம்.

‘‘ஒரு கன்டென்ட் எப்படி இருக்கணும்?’ - இது ஐவருக்குமான கேள்வி.


‘`நல்ல கன்டென்ட்டை நாம தேடிப் போகவேண்டியதே இல்லை. பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன்னு... நாம அனுபவிச்சதை எடுத்தாலே சூப்பர் ஹிட் ஆகும். மத்தவங்க கனெக்ட் பண்ணிக்கிறதுக்கும் வசதியா
இருக்கும். அப்படித்தான் நாங்க பஸ் ஸ்டாண்டு பரிதாபங்கள் பண்ணினோம்’’ என்கிறார் சுதாகர். ‘‘இதை வெறுமனே சீனா எடுத்துவெச்சா மட்டுமே யாரும் பார்க்க மாட்டாங்க. அவங்களைப் பார்க்கவைக்க ஒரு வைரல் விஷயம் வேணும். அதுக்குத்தான் அரசியல் கட்சி தலைவர்கள் அதைப் பற்றிப் பேசியிருந்தா எப்படியிருக்கும் என்ற கான்செப்ட்’’ என்கிறார் கோபி.

‘‘ஆனால், சினிமாவை மட்டும் அளவுக்கு அதிகமா கலாய்க்கிற மாதிரி தெரியுதே?’’ என்றால் முதல் ஆளாகப் பேசுகிறார் விஜய் வரதராஜ்.

``நீங்க ஒரு சின்ன விஷயத்தை சிம்பு வாய்ஸ்ல சொன்னீங்கன்னா, அதை அஞ்சாயிரம் பேர் பார்ப்பாங்கன்னா, உங்க வாய்ஸ்ல சொன்னீங் கன்னா, அஞ்சு பேர் பார்க்கிறதே பெரிய விஷயம். அதுதான் வித்தியாசம்’’ என்கிறார்.

‘‘ `ரோஸ்ட்'. ஒரு பிரபலத்தின் சம்மதத்துடன் அவரைக் கலாய்க்கும் நிகழ்ச்சி. இது ஃபாரின்ல பிரபலம். எங்களின் முதல் `ரோஸ்ட்' வெங்கட் பிரபு. உண்மையிலேயே தானா முன்வந்து தன்னைக் கலாய்க்கக் கழுத்தை நீட்டியவர். அதுக்குப் பிறகு, ‘ஆக்சுவலா உங்களை நாங்க கலாய்க்கிறதா நினைப்பீங்க. ஆனா, ரோஸ்ட் பண்ணினா உங்க இமேஜ்தான் ஏறும். நீங்க ரொம்ப எளிமையானவர்னு ஆடியன்ஸ் புரிஞ்சுப்பாங்க’னு என்னென்னவோ சொல்றோம். என்ன சொன்னாலும் அந்த நிகழ்ச்சிக்கு யாரும் வர மாட்டேங்குறாங்க’’ என்கிறார் விக்னேஷ்

‘‘ஆனா, இந்தியில் நிறைய சேனல்கள்ல `ரோஸ்ட்'டுக்குக் கூப்பிட்டுவெச்சு கண்ட மேனிக்குப் பேசிப்பாங்க. அந்த மெச்சூரிட்டி அவங்களுக்கு இருக்கு’’ என்று கோபி சொன்னதும், ‘‘தமிழ் சினிமாவில் இருப்பவர்களுக்கு மெச்சூரிட்டி இல்லை. `மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி விளாசல்’’ என்று அவரைச் சிக்கவைக்கிறார் விக்னேஷ்.

‘‘பிரபலங்களிடம் உங்க ஷோவுக்கு என்ன ரெஸ்பான்ஸ்?’’ என்றதும் ஆளாளுக்குச் சிரிக்கிறார்கள்.

‘‘பார்த்துட்டாங்க... கோபமாகிட்டாங்க’னு சொல்வாங்க. ஆனா, எந்த போன்காலும் வந்ததில்லை. அவங்களுக்கு என்னன்னா, ‘அவன் சும்மா கிரீன்மேட்ல பேசி யூடியூப்ல வீடியோ போடுறான். இவன்கிட்ட பேசினா நமக்குக் கம்மி’ என்ற விஷயத்தில்தான் தப்பிக்கிறோம்’’ என்றார் விஜய்.

‘‘இப்ப நீங்க படங்கள்ல நடிச்சுட்டு இருக்கீங்க. உங்களால் கலாய்க்கப்பட்ட பிரபலங்கள் பார்த்தா என்ன பண்ணுவீங்க?’’ என்று விஜய்யிடம் கேட்கிறார் விக்னேஷ்.

‘‘ `யாராவது ஷூட்டிங்ல கண்டுபிடிச்சுத் துரத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னா என்ன பண்றது?'ங்கிற பயம் உண்டுதான். அதுக்காக சினிமா ஆள்களைப் புகழ முடியாதே. அப்படியும் சினிமா ஆள்களைப் புகழ்ந்து பேசினா, கீழே கமென்ட்ல அழகழகான கெட்டவார்த்தைகள்ல திட்டுவாங்க. காலையில் எந்திரிச்சதும் அந்த கமென்ட்கள்லதான் கண் விழிக்கணும்'' என்ற விஜய்யைத் தொடர்கிறார் கோபி. ‘‘ஆமாம் இப்படியான ஹீட்பேக்கா வரும் ஃபீட்பேக் எங்களுக்கும் உண்டு. ‘திருவாரூர், தஞ்சாவூர் பக்கம் வந்து பாருடா’ம்பாங்க பாஸ்’’ என்றார்.

இவங்க பேசினாலே வைரல்தான்!

‘‘ஆனா, நிறைய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸும் உண்டு. உண்மையில் அதுதான் நிறைய. சமீபத்தில் துபாய்ல கார் ஓட்டிட்டிருக்கும் ஒரு தமிழர் செல்ஃபி வீடியோ எடுத்து அனுப்பியிருந்தார். ஊரைவிட்டு வெளியே இருப்பதால் நைட் தூக்கம் வராது. பைத்தியம் பிடிச்சுடும். அப்ப `உங்க வீடியோஸ்தான் எங்க மருந்து. ஏதோ நம்ம ஊர் கல்யாணத்துக்கோ திருவிழாவுக்கோ வந்த மாதிரி ஃபீல் ஆகும்'னு சொன்னார். அவ்வளவு டச்சிங்கா இருந்துச்சு’’ என்கிறார் கோபி.

‘‘சாலையோரத்துல வாழ்றவங்களோட கஷ்டம் பற்றி ஒரு வீடியோ. பிச்சையெடுக்கிற ஒருத்தர், ‘ஒரு கடை போட்டுத் தந்தா பார்த்துப்பேன்’னு சொன்னார். அந்த வீடியோவைப் பார்த்துட்டு வசூலான தொகை மட்டுமே ஒன்றரை லட்சம். அவருக்கு இப்ப சென்னையில் கடை போட்டு தரலாம்னு இருக்கோம்’' என்று நல்ல விஷயங்கள் சொல்கிறார் விக்னேஷ்.

‘‘எல்லோருக்கும் அடுத்த இலக்கு சினிமாதானே?’’ என்றால் கோரஸாக ஆமோதிக்கிறார்கள்.

‘‘ஆமாம். வெறும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டா மட்டும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவா இருக்கோம். எனக்கும் சுதாகருக்கும் சினிமா ஆர்வம், ஆசை உண்டு’’ என்ற கோபியைத் தொடர்கிறார் விஜய் வரதராஜ்.
‘‘சினிமா டைரக்‌ஷன்தான் விருப்பம். இப்ப விஷாலுடன் ‘இரும்புத்திரை’யில் அவருக்கு ஃப்ரெண்ட். ‘நெஞ்சமெல்லாம் காதல்’ படத்தில் அசோக்செல்வனின் ஃப்ரெண்ட். ஆனா, ‘டெம்பிள் மங்கி மூவி’னு ஒரு படம் பண்ணணும். அதுக்கு நான் டைரக்டர். என் டீம் மெம்பர்ஸ், நடிகர்கள்னு ஒரு கனவுப் படம் இருக்கு’’ என்று மகிழ்ச்சியைப் பகிர்கிறார் விஜய்.

‘‘டீம்ல இருக்கிற பலருக்கும் சினிமா ஆர்வம்தான். ஹிப்ஹாப் தமிழா ஆதி, தன் ‘மீசையை முறுக்கு’ படத்துல எனக்குப் பெரிய ரோல் தந்திருக்கார். எனக்கு மட்டுமில்லாம இன்டர்நெட்ல இருக்கிற நிறைய முகங்களை அதுல நீங்க பார்க்கலாம். ஆமாம், 18 பேர்களை அறிமுகப்படுத்துறார். அதுல 10 பேர் யூடியூப் ஸ்டார்ஸ். ‘டெம்பிள் மங்கீஸ்’க்கு இருக்கும் அதே கனவு ‘ஸ்மைல் சேட்டை’க்கும் உண்டு. இந்த வருஷத்துக்குள்ள ஒரு படத்துக்குப் பூஜை போட்டுடணும்னு கதைகள் பண்ணிட்டு இருக்கோம்’’ இது விக்னேஷ்.

‘‘சின்ன படங்கள், சின்ன பெரிய படங்கள்னு படங்கள்ல நடிச்சிட்டுத்தான் இருக்கேன். ‘அப்பத்தாவை ஆட்டையப் போட்டுட்டாங்க’னு ஒரு படம். அதோட ரிலீஸுக்காகத்தான் காத்திருக்கேன். சமீபத்தில் காலமான சந்திரஹாசன் சார், அந்தப் படத்தில் நடிச்சிருக்கார். டப்பிங்கில் பார்த்துட்டு, ‘அந்தத் தம்பி நல்லா பண்ணியிருக்கார்’னு சொல்லியிருக்கார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு’’ என்று மகிழ்கிறார் ஜெயச்சந்திரன்.

‘‘ஆக, சினிமாவில் யாராவது சான்ஸ் கொடுக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா எங்களை அணுகவும்’’ என்கிற கோபிக்கு விழுகின்றன ஏகோபித்த லைக்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு